செவ்வாய், செப்டம்பர் 25, 2018

பூவப் போல பெண் ஒருத்தி


பூவப் போல பெண் ஒருத்தி


அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான் என்றாலும் இருவரிடமும்  உற்சாகம் சுத்தமாக மிஸ்ஸிங். 


‘‘எப்ப வருவே?’’ 


‘‘வேலை இருக்குனு சொன்னா புரிஞ்சிக்க மாட்டியா?’’ 


‘‘என்னைச் சுத்திச் சுத்தி வந்தப்ப  அந்த வேலையெல்லாம் என்னப்பா பண்ணே?’’ 


‘‘மூட்டை கட்டி வச்சிருந்தேன். இப்பதான் பிரிச்சு வேலை பார்த்துட்டு இருக்கேன்!’’ 


‘‘உன்  லவ்வுக்கு ஓகே சொல்லாம அலைய விட்டிருக்கணும். அப்படிச் செய்யாதது என் தப்பு...’’


‘‘உனக்கு இப்ப என்ன வேணும்?’’


‘‘என்னை பெண்  பார்க்க வர்றாங்க. முடியாதுனு சொல்லி உன்னைக் கைகாட்டப் போறேன். அதனால வீட்டுக்கு வா!’’ 


‘‘வீட்ல சம்மதிக்கலைனா..?’’


‘‘வீட்டை  விட்டு வந்துடறேன். ஓட வேணாம். நிதானமா நடந்து போய் கல்யாணம் பண்ணிப்போம்!’’

‘‘என் வீட்ல கெடுபிடி ஜாஸ்தி...’’

‘‘அதைத்  தெரிஞ்சுகிட்டுதானே என்னை உராசிகிட்டு சுத்தினே..?’’


 ‘‘நான் என்ன பண்ணணும்?’’


‘‘இந்தக் கேள்விக்கு ஏற்கனவே பதில்  சொல்லிட்டேன்...’’


‘‘சரி... வந்து தொலைக்கிறேன்...’’ 

‘‘குட்...’’ நரேனின் பதிலுக்குக் காத்திராமல் செல்போனை கட் செய்தாள் இஷா.


நரேன் சிகரெட் புகையை வெளியேற்றுவது போல் பெரு  மூச்சை வெளியேற்றினான். இவளைத் தன் வாழ்க்கையிலிருந்து எலிமினேட் செய்ய வேண்டும். எப்படி? கலா மாதிரி இல்லாமல் நிறைய  வாயாடுகிறாள். இவளைச் சுற்றிச் சுற்றி வந்ததற்காக அடியாள் வைத்து தன்னையே அடித்துக் கொல்ல வேண்டும் போலிருந்தது. நரேனுக்கு மகாபலிபுரம் செல்லும் சாலையில் வரிசையாக நின்றிருக்கும் கட்டடங்களில் ஒன்றில் இருக்கும் பெரிய நிறுவனத்தில் வேலை.  ஒரு வருடத்துக்கு முன்பு வரை சராசரி பணியாளாக இருந்தான். திடீர் அதிர்ஷ்டம், இப்போது உயர் பொறுப்பில் இருக்கிறான். பணமிருப்பவனை நோக்கி பணம் வருவதுபோல் அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளில் ஒருவர் அவனை தன் வீட்டுக்கு அழைத்து, தன்  பெண்ணை அறிமுகப்படுத்தி, அவனை மாப்பிள்ளையாக்கிக் கொள்வதாகச் சொல்ல... அவனும் வானத்தில் பறக்கிறான். இந்த  உற்சாகத்துக்குக் குறுக்கே இப்போது இஷா.  
திடீரென்று வேகமாக வந்த லாரி நரேனின் பைக்கை உரச... தடுமாறி சுயநினைவுக்கு வந்தான்.  பேலன்ஸ் செய்ய ஓரத்திற்கு எடுத்தவன், அங்கிருந்த ஆட்டின் மீது மோதினான். அது தூக்கி எறியப்பட்டு ‘மே...’ எனக் கதறியது. 

‘‘என் மேல உள்ள கோபத்தை பைக்குல காட்டாத...’’ சீறிய இஷா இறங்கி, துடித்துக் கொண்டிருந்த ஆட்டின் அருகில் ஓடினாள்.


‘எப்படியும் பிரியாணி ஆகப் போற ஆடு... வா...’’


‘‘ஓருயிர் துடிச்சுட்டு இருக்கிறப்ப உன்னால எப்படி இப்படிப் பேச முடியுது..?’’ 


 ‘ஆட்டுக்கு சொந்தக்காரன் வந்து காசு கேட்பான்... அதான்...’’மனமில்லாமல் இஷா வந்து பைக்கில் ஏறினாள். 

‘‘நீ வண்டி ஓட்டறதைப்  பார்த்தா என்னைக் கொல்ல ப்ளான் செய்திருக்கிற மாதிரி தெரியுது...’’ ‘‘அவன் வரமாட்டான். வேற வேலை இருந்தா பார்...’’ செல்போனில்  தன் முகத்தை அப்படியும் இப்படியும் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டே இஷாவின் தோழி ரம்யா சொன்னாள்


.‘‘வருவான்டி.  வரலேன்னா அவன் வீட்டுக்கு போயிடுவேன்!’’

‘‘அவனை விட்டுடறது பெட்டர்னு தோண்றது. ஏன்னா ஷாப்பிங் மால்ல அவன்கூட நான்  பார்த்த பொண்ணு செமையா இருந்தா. பணக்காரக் களை. அவளை விட்டுட்டு உன்னைக் கல்யாணம் பண்ணிக்க அவன் என்ன முட்டாளா?’’

“நான்தான் முட்டாள். நீ இல்லனா எனக்கு வாழ்க்கையே இல்லனு சுத்திச் சுத்தி வந்தவனை நம்பினேன் பாரு... விட மாட்டேன். நரேன்  கூடத்தான் என் கல்யாணம்!’’ உறுதியாகச் சொன்னாள்.

“இவ்வளவு தீவிரமா இருக்கியே... ரெண்டு பேரும் எல்லை மீறிட்டீங்களா..?’’ 

‘‘நோ!’’
‘‘உன்னை நம்பறேன். ஆனா, அந்த  எண்ணத்தோடுதான் உன் பின்னால சுத்தியிருக்கான். நீ உஷாரா இருந்ததால இப்ப விலகறான். அவனைத் தூக்கிப் போட்டுட்டு அப்பா  அம்மா பார்க்கிற பையனைக் கட்டிக்க...’’
‘‘எப்படி முடியும்? மனசுல அவன் கூட வாழ்ந்துட்டு இருக்கேன்!’’ 

‘‘அப்படின்னா முதல்ல உன்  அப்பா அம்மா கிட்ட பர்மிஷன் வாங்கு...’’


வாங்க முயற்சி செய்தாள். அவள் வீட்டில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார்கள். அவளும் அதே  உயரம் குதித்தாள். குடும்பத்தினருடன் ஏற்பட்ட தர்க்கம் முடிவுக்கு வர சில நாட்கள் பிடித்தது. முடிவில் இஷாவுக்கு வெற்றி கிடைத்தது. மகிழ்ச்சியுடன் நரேனுக்கு போன் செய்தாள். ஸ்விட்ச் ஆஃப். அவன் அலுவலகத்துக்கு போன் செய்தாள். வெளியூர் போயிருப்பதாகச்  சொன்னார்கள். நம்மிடம் சொல்லாமலா..? ரம்யா சொன்னது நினைவுக்கு வந்தது. நிஜமாக இருக்குமோ..? தடுமாறினாள்.


பைக் அந்த மலையின் அடிவாரத்திலிருந்து மேல்நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது. இஷா தன் புருவத்தைச் சுருக்கினாள். 


‘‘சென்னைல  இல்லாத இடமா... பேச இங்க அழைச்சுட்டு வரே..?’’

 ‘‘மனசு விட்டுப் பேச இதுதான் தோதான இடம்...’’ வாய் விட்டுச் சொன்ன நரேன்,  ‘‘சொல் பேச்சு கேட்கலைன்னா உன்னை முடிக்கவும் இதுதான் சரியான இடம்...’’ என்றான் உள்ளுக்குள்.


அன்று காலை நரேன் அலுவலகம்  வந்தபோது, ரிசப்ஷனில் காத்திருந்த இஷாவைத்தான் முதலில் பார்த்தான். பதற்றத்துடன் அருகில் வந்தவன், ‘‘இங்க ஏன் வந்தே..?’’  என்றான். “செல்போனை ஏன் ஆஃப் பண்ணே?”

‘‘ஒர்க் ஆகலே!’’
 “பொய்! இதைப் பத்தி அப்புறம் பேசலாம். அப்பா அம்மா ஓகே  சொல்லிட்டாங்க. வா வீட்டுக்கு போகலாம்...’’
“பைத்தியமா நீ...” சீற நினைத்தவன் சுற்றும் முற்றும் பார்த்து அமைதியானான். ‘‘ஈவினிங்  பார்க்கிறேன்...’’

“முதல்ல செல்போனை ஆன் பண்ணு. இல்லைனா திரும்ப வருவேன்...’’ பதிலுக்குக் காத்திராமல் தன் ஹை ஹீல்ஸ் சப்தித்தபடி நடந்து  மறைந்தாள்.


நரேனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மென்மையாக இருந்தவளா இப்படிப் பேசுகிறாள்? தன் கேபின் வந்தடைந்தான். மாமனாராக  வரப்போகும் நல்லசிவம் இன்டர்காமில் அழைத்தார். ‘‘வாங்க... எம்டியை மீட் பண்ணலாம்...’’ சென்றான். எம்டி அறைக்குள் நுழைந்ததும்  அவருக்கு வணக்கம் சொன்னான். 


‘‘வாழ்த்துக்கள் நரேன். நல்லசிவம் சொன்னார். குட் செலக்‌ஷன்னு அவர்கிட்டே சொன்னேன்...’’


‘‘தேங்க்ஸ் சார்...’’ நெளிந்தான். ‘‘ஹனிமூன் எங்க..?’’‘‘லண்டன் சார். பொண்ணு விரும்பறா...’’ நல்லசிவம் புன்னகைத்தார்.‘‘நைஸ்...’’ எம்டி  புன்னகைத்தார்.

‘லண்டனா...’ வியந்தபடி அவர் அறையை விட்டு வெளியே வந்தபோது இஷாவிடம் இருந்து மெசேஜ் வந்தது. ‘3 மணிக்குப் பார்க்கலாமா..?’  பற்களைக் கடித்தான். பதில் அனுப்பாவிட்டால் நேரில் வருவாள். நல்லசிவம் அவளைப் பார்த்துவிட்டால் பிரச்னை. முடிவு கட்ட  வேண்டும்... அந்த அருவியின் அருகே பைக் நின்றது. இஷா இறங்கினாள். இருவரும் பாறைகளுக்கிடையே கால் வைத்து ஏறி சம தரைக்கு  வந்தார்கள். சூரியன் மேற்கே இருக்க... நீல வானத்தில் திட்டுத் திட்டாக பஞ்சு மேகங்கள் நகர்ந்தபடி இருந்தன. அங்கே சிறிய குளம்  ஒன்றிருந்தது. யாரோ புண்ணியவான் குளம் ஆழம் ஜாக்கிரதை என்று சாக்பீஸால் பாறையில் எழுதி வைத்திருந்தார். மேலிருந்து  பாறைகளுக்கிடையே வெளிப்பட்டு குளத்தில் விழுந்து கொண்டிருந்த தண்ணீர் குளத்திலிருந்து வெளிப்பட்டு அருவியாகக்  கீழே இறங்கி  கொண்டிருந்தது. 

‘‘இப்படி ஓரிடம் இருக்கறது உனக்கு எப்படித் தெரியும்..?’’

ரஞ்சனியுடன் வந்து ஜாலியாக இருந்தபோது... என்றா சொல்ல முடியும்? 
 ‘‘ஃபிரெண்ட் சொன்னான்...’’ முணுமுணுத்தான் நரேன். 

இஷா அந்தக் குளத்தை ஒட்டினாற் போலிருந்த பாறையில் அமர்ந்தாள்.  அருகிலிருந்த மரத்தின் இலைகள் அவள் மேல் உதிர்ந்தன. நரேன் அருகே அமர்ந்தான்.‘நம்மை விட்டு விலகச் சொல்லணும். மறுத்தா  குளத்துல தள்ளிட வேண்டியதுதான்...’ நரேனுக்குள் எண்ணங்கள் படையெடுத்தன.‘எப்படியாவது நரேனை கன்வின்ஸ் பண்ணி உடனே  கல்யாணம் பண்ணியாகணும்...’ இஷா முடிவுடன் அவனை ஏறிட்டாள். 


‘‘எங்க வீட்ல முடியாதுனு சொல்லிட்டாங்க இஷா...’’ நரேனே  பேச்சை ஆரம்பித்தான்.

‘‘அப்படித்தான் சொல்வாங்க... பின்னே பணக்காரப் பொண்ணு உனக்குக் கிடைச்சிருக்காளே!’’ நேரடியாக விஷயத்துக்கு வந்தாள். நரேன் அதிர்ந்தான். 

‘‘உளறாத...’’ 
 ‘‘உன்னை லவ் பண்றேன்னு நீ உளறினதை விடவா? இனி மறைச்சுப் பேசவேண்டாம். எனக்கு எல்லாம்  தெரியும்...’’ 
‘‘பிறகு என்ன... விலகிக்கோ...’’ நரேன் எழுந்து பின்னால் தூசியைத் தட்டினான்.
‘‘ஒருவேளை அவளை விட என்கிட்ட அதிகப்  பணமிருந்தா என்னைக் கட்டிப்ப இல்ல...’’திரும்பிப் பார்க்காமலே கையை மட்டும் ‘முடியாது’ என ஆட்டினான். அவன் தொடர்ந்து சென்று  கொண்டிருப்பதை இமைக்காமல் பார்த்தாள். 

‘‘மிஸ்டர் நல்லசிவம்கிட்ட நம்ம விஷயத்தைச் சொல்லப் போறேன்...’’சட்டெனத் திரும்பி  அவள் அருகில் வந்து அமர்ந்தான். 


‘‘இங்க பார். லவ் பண்றேன்னு உன்கூட சுத்தினேன். அவ்வளவுதான். வேற எந்தத் தப்பும்  நடக்கலையே..?’’


‘‘அதனால..?’’


‘‘வேற எவனையாவது கல்யாணம் பண்ணிக்கோ!’’


‘‘முடியாது...’’


‘‘ஓகே. நான்தான் வேணும்னா உன்னை கீப்பா வைச்சுக்கறேன்...’’ஒரு நொடி கூட இஷா தாமதிக்கவில்லை. அறைந்தாள்.நரேன் கோபத்தில் சுற்று முற்றும் திரும்பிப் பார்த்தான். குளம் ஆழம் ஜாக்கிரதை  என்ற எழுத்துக்கள் எதிரே பாறையில் எழுதப்பட்டிருந்தன. இப்படியே இவளைத் தள்ளிவிட்டால் என்ன... தள்ளி விட்டான் .இஷா இதை எதிர்பார்க்காமல்  தடுமாறினாலும் பாறைக்கு அருகிலிருந்த அந்த மரத்தை தன் ஒரு கையால் அணைத்து இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். இன்னொரு  கையை பாறையில் ஊன்றி எழ முயற்சித்தாள். நரேன் அவளது முதுகில் கைகளை வைத்துத்தள்ளினான். இஷா தன்னிரு கைகளாலும்  அந்த  மரத்தைக் கட்டி அணைத்தது போல் விடாமல் பற்றியிருந்ததால் அவனால் முடியவில்லை. மரத்தைப் பிடித்திருந்த அவளது  கையைச் சிரமப்பட்டு விடுவிக்க முயற்சித்தான். ஆனால், நரேன் கால் வைத்திருந்த பாறை வழுக்க ஆரம்பிக்கவே... அப்படியே சறுக்கி  தண்ணீரில் விழுந்தான். பிடித்துக் கொள்ள ஒன்றும் கிடைக்காமல் தடுமாறினான். அவன் முழுக்க தண்ணீரில் மூழ்கி மறைந்த பின்னும்  குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் இஷா.   ஆர்.வி.சரவணன் 


(எனது இந்த சிறுகதை குங்குமம் 31-08-2018 வார இதழில் வெளியானது. வெளியிட்ட குங்குமம் வார இதழுக்கும் குங்குமம் ஆசிரியர் அவர்களுக்கும் அன்பு மிக்க நன்றி.)

10 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நன்றி

   எழுத்துக்கள் இப்பொழுது சரி செய்திருக்கிறேன்

   நீக்கு
 2. வாழ்த்த்துகள்.

  எழுத்துகள் சில பெரிதாகவும் பெருமளவு சிறிதாகவும் மாறி மாறி வந்திருக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி

   எழுத்துக்கள் இப்பொழுது சரி செய்திருக்கிறேன்

   நீக்கு
 3. கதையை ரசித்தேன். வாழ்த்துகள். இன்னும் எழுத்துகள் சிறிதாகத்தான் தெரிகின்றன.

  பதிலளிநீக்கு
 4. நல்ல கதை. நல்லதொரு முடிவு தான்.

  எழுத்துகள் ரொம்பவே சின்னதாய்.... கடினமாக இருக்கும் படிக்க!

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்