திங்கள், ஆகஸ்ட் 20, 2018

மக்கள் தலைவன்
மக்கள் தலைவன் 

நந்தகுமார் தன் டூ வீலரை சர்வீஸுக்காக அந்த ஷோ ரூமுக்கு கொண்டு வந்த போது, ஷோ ரூம் வாசலின் முன்னே ஒரு அரசியல் கட்சியின் பொது கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. மேடை போடுவதற்கான ஏற்பாடுகளில் மூழ்கியிருந்தார்கள் தொண்டர்கள். ஷோ ரூம் வாசலை மறைத்து கொண்டு கம்புகள் நடப்பட்டிருந்தன. வண்டிகள் நிறுத்துமிடத்தில் பிளெக்ஸ் பேனர் ஒன்று கிடத்தப்பட்டிருந்தது.
எங்கே வண்டியை நிறுத்துவது என்று தெரியாமல் ஒரு கணம் தடுமாறிய நந்தகுமார், டூ வீலரில் இருந்த படியே ஷோ ரூம் வாசலில் நின்றிருந்த செக்யூரிட்டியிடம் எப்படி உள்ளே வருவது? என்பதை சைகையில் கேட்டான். கேட்ட மாத்திரத்தில் செக்யூரிட்டி "அவங்ககிட்டே கேட்டுடாதீங்க பிரச்னையாகிடும்" பயத்தை சைகையில் காட்டிய படியே அவனை நோக்கி ஓடி வர ஆரம்பித்தார்.
நந்தகுமார் அவரை சிரமப்படுத்த விரும்பாமல், அந்த தொண்டர்களிடம் பிளெக்ஸை எடுக்க சொல்லலாம் என்று வாய் திறக்கவும், அந்த பிளெக்ஸ் பேனரை ஒருவர் கீழே குனிந்து இழுக்கவும் சரியாக இருந்தது. அவனுக்கு வழி கிடைத்து விடவே, வண்டியை அதற்கான இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி இறங்கினான்.
உள்ளே சென்று ஆர்டர் எடுப்பவரிடம்,
"வண்டி இன்னிக்கு சாயந்தரமே
வேண்டும் " என்று கறார் காட்டினான்.
"சார் நீங்க தான் பார்க்கறீங்களே. இன்னிக்கு எங்க ஷோ ரூம் வாசல்ல கட்சி கூட்டம் நடக்க போகுது. அதனால நீங்க இன்னிக்கு வண்டி எடுக்கிறது கஷ்டம் தான். நாளைக்கு வந்து எடுத்துக்குங்களேன். " என்றார். சலிப்புடன் மனைவி வித்யாவுக்கு டூ வீலர் நாளைக்கு தான் கிடைக்குமாம் என்ற மெஸேஜ் அனுப்பினான்.
ஷோ ரூமை விட்டு வெளி வந்த போது எதிரே கட்டப்பட்டிருந்த அந்த பிளக்ஸ் பேனரில் அன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளப் போகும் கட்சி தலைவர் சிரித்த படி கும்பிட்டு கொண்டிருந்தார்.
அவரது பெயருக்கு முன்னே, மக்களின் இன்னல் தீர்க்க வரும் அருந்தலைவன் என்ற வார்த்தைகள் பெரிய எழுத்துக்களில் மிரட்டி கொண்டிருந்தது. நந்தகுமார் கேலியாய் புன்னகைத்தான்.
ஆர்.வி.சரவணன் 

நான் முகநூலில் எழுதிய இந்த கதை, பாக்யா வார இதழில் மக்கள் தலைவன்   
என்ற பெயரில்  வெளியானது. நண்பர் பாப்பனப்பட்டு வ.முருகன் அவர்களுக்கும்,  
வெளியிட்ட பாக்யா ஆசிரியர் குழுவிற்கும்  ஸ்பெஷல் நன்றி.

5 கருத்துகள்:

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்