திங்கள், ஆகஸ்ட் 20, 2018

மக்கள் தலைவன்




மக்கள் தலைவன் 

நந்தகுமார் தன் டூ வீலரை சர்வீஸுக்காக அந்த ஷோ ரூமுக்கு கொண்டு வந்த போது, ஷோ ரூம் வாசலின் முன்னே ஒரு அரசியல் கட்சியின் பொது கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. மேடை போடுவதற்கான ஏற்பாடுகளில் மூழ்கியிருந்தார்கள் தொண்டர்கள். ஷோ ரூம் வாசலை மறைத்து கொண்டு கம்புகள் நடப்பட்டிருந்தன. வண்டிகள் நிறுத்துமிடத்தில் பிளெக்ஸ் பேனர் ஒன்று கிடத்தப்பட்டிருந்தது.
எங்கே வண்டியை நிறுத்துவது என்று தெரியாமல் ஒரு கணம் தடுமாறிய நந்தகுமார், டூ வீலரில் இருந்த படியே ஷோ ரூம் வாசலில் நின்றிருந்த செக்யூரிட்டியிடம் எப்படி உள்ளே வருவது? என்பதை சைகையில் கேட்டான். கேட்ட மாத்திரத்தில் செக்யூரிட்டி "அவங்ககிட்டே கேட்டுடாதீங்க பிரச்னையாகிடும்" பயத்தை சைகையில் காட்டிய படியே அவனை நோக்கி ஓடி வர ஆரம்பித்தார்.
நந்தகுமார் அவரை சிரமப்படுத்த விரும்பாமல், அந்த தொண்டர்களிடம் பிளெக்ஸை எடுக்க சொல்லலாம் என்று வாய் திறக்கவும், அந்த பிளெக்ஸ் பேனரை ஒருவர் கீழே குனிந்து இழுக்கவும் சரியாக இருந்தது. அவனுக்கு வழி கிடைத்து விடவே, வண்டியை அதற்கான இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி இறங்கினான்.
உள்ளே சென்று ஆர்டர் எடுப்பவரிடம்,
"வண்டி இன்னிக்கு சாயந்தரமே
வேண்டும் " என்று கறார் காட்டினான்.
"சார் நீங்க தான் பார்க்கறீங்களே. இன்னிக்கு எங்க ஷோ ரூம் வாசல்ல கட்சி கூட்டம் நடக்க போகுது. அதனால நீங்க இன்னிக்கு வண்டி எடுக்கிறது கஷ்டம் தான். நாளைக்கு வந்து எடுத்துக்குங்களேன். " என்றார். சலிப்புடன் மனைவி வித்யாவுக்கு டூ வீலர் நாளைக்கு தான் கிடைக்குமாம் என்ற மெஸேஜ் அனுப்பினான்.
ஷோ ரூமை விட்டு வெளி வந்த போது எதிரே கட்டப்பட்டிருந்த அந்த பிளக்ஸ் பேனரில் அன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளப் போகும் கட்சி தலைவர் சிரித்த படி கும்பிட்டு கொண்டிருந்தார்.
அவரது பெயருக்கு முன்னே, மக்களின் இன்னல் தீர்க்க வரும் அருந்தலைவன் என்ற வார்த்தைகள் பெரிய எழுத்துக்களில் மிரட்டி கொண்டிருந்தது. நந்தகுமார் கேலியாய் புன்னகைத்தான்.
ஆர்.வி.சரவணன் 

நான் முகநூலில் எழுதிய இந்த கதை, பாக்யா வார இதழில் மக்கள் தலைவன்   
என்ற பெயரில்  வெளியானது. நண்பர் பாப்பனப்பட்டு வ.முருகன் அவர்களுக்கும்,  
வெளியிட்ட பாக்யா ஆசிரியர் குழுவிற்கும்  ஸ்பெஷல் நன்றி.

வெள்ளி, ஆகஸ்ட் 17, 2018

பாரு பாரு பட்டணம் பாரு





பாரு பாரு பட்டணம் பாரு 

இணையத்தில் பழைய தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட் பார்த்து கொண்டிருக்கையில் மோகனின் திரைப்படம் ஒன்று கண்ணில் தென்பட, இது ரிலீஸ் ஆனப்பவே பார்த்திருக்கோமேனு ஞாபகம் வந்தது. மேலும் இந்தப் படத்தின் கதை திரைக்கதை வசனம் கலைமணி. ஆகவே ஆர்வமாய் படம் பார்க்க ஆரம்பிச்சேன்.
முதல் காட்சி. ஒரு பார்க்கில் சிறுவர்கள் இருவர் நான் எம்ஜியார் நீ நம்பியார் என்று சொல்லி சண்டையிட்டு கொள்கிறார்கள். அவர்களை விலக்கி விடும் ரிக்‌ஷாக்காரர், எதிரே அமர்ந்து புத்தகம் படித்து கொண்டிருக்கும் மோகனை கவனிக்கிறார். (நமக்கும் அப்போது தான் நாயகனை அறிமுகம் செய்கிறார்கள்.) அவரிடம் சென்று கேட்கிறார். "ஏன்பா பசங்க அடிச்சுகிட்டிருக்காங்க. தடுக்கிறத விட்டுட்டு புஸ்தகம் படிச்சிட்டிருக்கே" அதற்கு மோகன் சொல்லும் பதிலிலேயே, இந்த கதை எந்த ஜானர் என்பதையும் மோகனின் கேரக்டரையும் சொல்லி விடுகிறார்கள்.
" என்னோட ராசிக்கு இன்னிக்கு யாரோட பிரச்னையிலும் நுழைய கூடாதாம். நுழைஞ்சா ஆபத்தாம். அதனால் தான் தடுக்கல" எஸ். எதுவாக இருந்தாலும் ஜோசியரிடம் ஆலோசனை பெற்று வாழ்ந்து வரும் கேரக்டர் அவர். வீட்டில் வறுமை இருக்கும் நிலையிலும் கூட, இண்டர்வியூவிற்கு சென்று முதலாளி ராசிக்கும் என் ராசிக்கும் ஒத்து வராது அதனால் வேலையில் சேர முடியாது என்று சொல்பவர்.
இப்படிப்பட்டவரை தான் ஜோசியத்தின் மேல் நம்பிக்கை கிடையாது என்றிருக்கும் பணக்கார வினுசக்ரவர்த்தியின் மகள் ரஞ்சனி காதலிக்கிறார். ஆனால் மோகன் "இன்னும் ரெண்டு வருஷத்துல நான் பணக்காரன் ஆகிடுவேன். நான் ராஜா ஆகிறப்ப எனக்கு ஒரு ராணி தான் வேண்டும். நீ எதற்கு " என்ற படி தட்டி கழிக்கிறார். அப்படி தட்டி கழிப்பவர் எப்படி ஆர்வமாகி ரஞ்சனியை கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார்?. எப்படி திருந்தினார் ? திருத்தியது யார் என்பதை ஜாலியாகவும் கொஞ்சமே கொஞ்சம் எமோசனலாகவும் ரசிக்கும் படி சொல்லியிக்கிறார்கள்.
படத்தில் வினு சக்ரவர்த்தி உடலெங்கும் சந்தனம் பூசிக் கொண்டு "எங்கப்பன் முருகன் கொடுத்த 18 ரூபாய் 10 பைசாவோட சென்னைக்கு வந்தேன" என்றபடி படம் முழுக்க அதகளம் செய்ய, ஜோசியக்காரராக வெண்ணிற ஆடை மூர்த்தி கலகலப்பு சேர்க்க, தங்கையாக குயிலி கலங்க வைக்கிறார்.
நன்றாக சென்று கொண்டிருக்கும் கதையில் மோகன் திருந்துவதற்காக வைக்கப்பட்டிருக்கும் கான்செப்ட் மட்டும் இடைச்செருகல் போல் இருந்து கொண்டு கதையோடு பொருந்த மறுக்கிறது. இளையராஜா இசையில் நேரந்தான் ஆகுது, யார் தூரிகை தந்த ஓவியம், தென்றல் வரும் பாடல்கள் உற்சாக ராகங்கள். இயக்கம் மனோபாலா. படம் வெளியான ஆண்டு 1986.
இந்தப் படத்துக்கு பாரு பாரு பட்டணம் பாருனு பேர் வச்சிருக்காங்க. பாரு பாரு ஜோசியம் பாருனு வச்சுருக்கலாமே.

ஆர்.வி.சரவணன்