வியாழன், நவம்பர் 17, 2016

வா, காதல் செய்வோம்-2


வா, காதல் செய்வோம்-2

காட்சி-3 


ஆபிஸ் ரூம்

மனோ செல் போனில் பேசிக் கொண்டிருக்க, அவன் அமர்ந்திருந்த நாற்காலி அவன் அசைவுக்கு ஏற்ப ஆடி கொண்டிருந்தது. கதவை படீரென்று திறந்த படி  ஓடி வந்தான் அவன். அனுமதி இல்லாமல் வந்தது யாரென்று கோபத்துடன் நிமிர்ந்த மனோ நண்பன் பாபுவை பார்த்தவுடன் அமைதியானான். மறுபடியும் நாற்காலி ஆட ஆரம்பித்தது.  எப்போது இவன் பேசி முடிப்பான் என்று மனோவையும், அவ்வப்போது கதவையும் ஒரு சேர பதட்டத்துடன் பார்த்து கொண்டிருந்தான்  பாபு. இருபது வினாடிகள் கழிந்திருக்கும். 

மனோ செல் போனை காதிலிருந்து எடுத்தவுடனே 
"டேய் என்னை காப்பாத்துடா" என்றான். 

அப்போது கதவு மெதுவாக திறக்க   உள்ளே வந்தவன் சட்டையில் மேனேஜர் வெங்கட் என்ற எழுத்துக்கள் இருந்தன.

"என்ன சார் நீங்க பாட்டுக்கு இங்க வந்துட்டீங்க. அங்க வெளில ரகளை நடக்குது" 

மனோ கேள்விக்குறியாய் அவனை பார்த்தான். 

"சார். நம்ம ஆபிஸ்ல  வேலை பார்க்கிற பொண்ணுகிட்டே இவர் கொஞ்சம் ஏடா கூடமா பழகிட்டார். பிரச்னையாகிடிச்சு.  அவங்க பேமிலி வெளில கலாட்டா பண்ணிட்டிருக்காங்க" 

இவர்கள் இருவரின் பதட்டத்தை கவனித்த மனோ, சொன்னான். "இவனோட  வீட்டுக்கு போய் கலாட்டா பண்ண  வேண்டியது தானே. நம்ம ஆபிஸுக்கு ஏன் வராங்க "

"ஆபீஸ் ல பிரச்னை பண்ணா தானே பணம் தேத்த முடியும்" வெங்கட்.

"இந்த ஐடியா யாரு கொடுத்தா நீயா  "

"இல்ல சார்" அதிர்ச்சியாய் மறுத்தான்.

"இந்த மேட்டர் உனக்கு எப்ப தெரியும்

"ரெண்டு மூணு மாசமா தெரியும்"

"என் கிட்டே ஏன் சொல்லல"

"உங்க பிரண்டாச்சேனு....

இழுத்தது போதும். கூப்பிடு அவங்களை" 

"டேய் பிளீஸ் என்னை எப்படியாவது காப்பாத்திடுடா " நண்பன் 

"நீ சில்மிஷம் பண்றதுக்கு என் கம்பெனி தான் கிடைச்சுதா" மனோவின் குரல் உயர்ந்தது.

பிரபு தலை குனிய கதவு திறந்தது.
ஒரு வயதான பெண்மணி , அழுத படி ஒரு இளம்பெண், ஒரு கட்டுமஸ்தான ஆள். என்று ஒருவர் பின் ஒருவராக வந்தார்கள்.

"இவ்வளவு தானா இன்னும் இருக்காங்களா ?"

"இன்னும் நாலஞ்சு பேர் வெளில நிக்கிறாங்க" 

பிரபுவை பார்த்த மாத்திரத்தில்  அந்த ஆள் கத்த ஆரம்பித்தான்.

"பண்றதெல்லாம் பண்ணிட்டு இங்க வந்து ஒழிஞ்சுகிட்டியா"

"ஹலோ பார்த்து பேசுங்க"

"உன் மூஞ்சை பேக்காம பேசறேனேனு சந்தோசப்படு"


பிரபு  மனோவை பார்க்கிறான்.
"பொண்ணை வேலைக்கு அனுப்பறோமா. இல்லே உன்கூட சரசம் பணறதுக்கு அனுப்பறமோ" அப்பன் இல்லாத பொண்ணு எவன் கேட்கப் போறான்னு தானே.தட்டி கேட்க நான் இருக்கேண்டா" 

அந்த பெண் அழுது கொண்டே இருக்க  மனோ  கடுப்பாகி, " ப்ளீஸ் டோன்ட் க்ரை " என்றான்.

"வாழ்க்கையே போயிடிச்சே. எப்படி சார் அழுவாம இருக்கும்." அந்த அம்மா புடவை தலைப்பை பிடித்து கொண்டு  விம்ம ஆரம்பித்தார்.

லேப் டாப்பில்  டைப் பண்ணி கொண்டே மேனேஜரை பார்த்து  நீ பேசு என்பது போல்
சொடக்கு போட்டான்.

"இப்ப என்ன பண்ணலாம் சொல்லுங்க" வெங்கட் ஆரம்பித்தான்.

"இந்த பொண்ணை அவன் கல்யாணம் பண்ணிக்கணும்"

"எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு "

"ஆகிடுச்சுல்ல.  பின்ன ஏன் இந்த பொண்ணு பின்னாடி அலைஞ்சே " கட்டு மஸ்து எகிற ஆரம்பித்தான்.

மனோவை பிரபு  பார்க்க, 

"அங்க என்ன பார்வை. இத பாரு. இதுக்கு ஒரு முடிவு  கிடைக்கணும். இல்லேண்ணா  போலீஸ் இருக்கு கோர்ட் இருக்கு."

மனோ தன் மேஜை டிராயரை திறந்து நூறு ரூபாய் கட்டுகளாக ஐந்தை  எடுத்து டேபிளில் வைத்தான்.

கத்தி கொண்டிருந்த கட்டுமஸ்தான ஆள் 

 "ரூபாயை எடுத்து வச்சிட்டா சரியா போச்சா" 

இன்னொரு ஐந்து  கட்டுகளை மனோ எடுத்து வைத்தான். அவன் சுருதி இறங்குகிறது

"இல்லே நீங்க பணக்காரங்க. உங்களுக்கு இதெல்லாம் சாதாரணம். ஆனா எங்களை மாதிரி ஏழைகளுக்கு இதெல்லாம் ரணம் தானே இதெல்லாம் உங்களுக்கு எங்க தெரிய போகுது்" 

இன்னொரு சில 100 ரூபாய் கட்டுகள்.  டேபிளுக்கு வருகிறது 

"ஏன் நீங்க வாய் பேச மாட்டீங்களா" 

அந்த தாய் மனோவை பார்த்து கேட்கிறாள்.

"அதான் அவர் பணம் பேசிட்டிருக்கே"

"இங்க பாருங்க. உங்க  பொண்ணு இங்க வேலை பார்க்குது. இவரும் முதலாளியோட  நண்பர். அதனால  பிரச்னை முடிஞ்சா சரினு ஹெல்ப் பண்றார் . அவரை போய்....." என்று மேனேஜர் பேச ஆரம்பித்தான்.

"ஹூம். இதுக்கு கூட  நீங்க தான் பதில்
சொல்வீங்களா " 

"அவர் இப்படி கூவரதுக்கு   தான் சம்பளமே வாங்குறார். " கட்டுமஸ்து குரலில் கிண்டல்

இதை கேட்ட மனோ கோபத்துடன் நோட்டுக்களை எல்லாம் எடுத்து  உள்ளே வைக்க சொல்லி மேனேஜரிடம் கண் காட்டினான்.  அந்த கட்டுமஸ்து இப்போது கை நீட்டி தடுத்தான்.

"இருங்க. இப்ப என்ன. இந்த துட்டை எடுத்துட்டு உங்க பிரண்டை டிஸ்டர்ப் பண்ணாம இருக்கணும் அவ்வளவு தானே.  நான் பார்த்துக்கிறேன்"  என்ற படி பணத்தை வாரி கொண்டான்.

அந்த அம்மா "ஏண்டா டேய் உன்னை அழைச்சிட்டு வந்தது என் பொண்ணுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்னு" நீ என்னடான்னா அவளை விலை பேசறியே"


"அட. ஏதோ  தெரியாம பண்ணிட்டாரு. அதை போய் பெரிசு படுத்திட்டு. நீ கையெழுத்தை போட்டு கொடு. 

அனு மறுக்க ஆரம்பிக்க

 "இங்க பாரு. நீ உஷாரா இருந்திருக்கணும். இப்ப அழுது ஒரு பிரயோசனமுமில்லே" 

அனு அழுது கொண்டே மேனேஜர் கொடுத்த பேப்பர்களில் அவசரமாக கையெழுத்து போட ஆரம்பித்தாள்.

 "இனிமே இந்த பொண்ணு இருக்கிற பக்கம்  பார்வை வந்துச்சு. நாங்க திரும்பவும் வருவோம் " பாபுவை எச்சரித்த படி கட்டுமஸ்து கிளம்ப,  அம்மா தலையில் அடித்து கொண்டே வெளியேறினார். அந்த பெண் அனு மனோவை திரும்பி பார்த்த படியே செல்ல, மனோ நண்பனை பார்க்கிறான்.

"ஏண்டா. நீ சம்பாதிக்கிற காசுக்கு  இதெல்லாம் தேவை தானா "

"சாரிடா" 

"அதை வச்சிட்டு என்ன பண்றது. பணம் தானே பிரச்னையை தீர்த்துச்சு. 
 So,  பணம் இருந்தா விளையாடு.
இல்லேன்னா பொத்திகிட்டு  இருந்திடு"
மேனேஜரிடம் திரும்பி, 

 "நான் செய்ய வேண்டியதெல்லாம் இவன் பண்ணிட்டிருக்கான்யா. இந்த அமௌன்ட்ட  அவனுக்கு கடன் கொடுத்ததா எழுதி வைங்க."

வெங்கட்  தலையாட்ட பாபுவிடம் சொல்கிறான். 

" இனிமே மேயற வேலை எல்லாம் இங்க வேணாம். அப்புறம் உன்னை புடிச்சு கொடுத்து  நான்  நல்ல பிள்ளையாகிடுவேன்" என்ற படி  சோம்பல் முறிக்கிறான். 

அவன் ஒன்றும் சொல்லாமல் விருட்டென்று கிளம்பி வெளியில் செல்ல, "இனிமே இவன் இங்க வந்தான்னா த்ரூவா வாட்ச் பண்ணு." 

சரி சார்.

"ஆமா. அந்த பொண்ணு எப்படிய்யா?"

"நல்ல பொண்ணு சார். இவரால நம்ம கம்பெனி ஒரு  நல்ல ஸ்டாஃப்பை விடும்படி ஆகிடுச்சு.

"ரொம்ப பீல் பண்ணாதே . காசை விட்டெறிஞ்சா ஆயிரம் வேலையாள்."

"கம்பெனிக்கு சின்சியராவும் இருக்கணும்லே"   மனதுக்குள் சொல்லி கொள்கிறான் வெங்கட். 

அப்போது செல் போனில் வந்த மெசேஜ் படித்த மனோ,  "இன்றைய இரவை கொண்டாட அழைப்பு வந்தாச்சு. வாரே வா" விசிலடித்தான். 


"சார் நான் கூட இதை எப்படி சால்வ் பண்ண போறீங்களோனு பயந்துகிட்டிருந்தேன். ஈசியா  முடிச்சிட்டீங்க." வெங்கட் பாராட்டில் மயங்காமலே வார்த்தைக்கு தயங்காமலே சொன்னான்.

"பணம்யா பணம். அது இருந்தா  எதுவும் பண்ணலாம். எதையும் சரியாக்கலாம்."

"இவரு. இன்னும் சரியான ஆளை சந்திக்கல. சத்திக்கிறப்ப இருக்கு வேடிக்கை"  வெங்கட்  உள்ளுக்குள் முணுமுணுத்தான்.
   

காட்சி-4

"உங்க பணத்தால எதை வேண்ணா வாங்குங்க சார். ஆனா என்னை விலைக்கு  வாங்க முடியாது" தனக்கெதிரே நின்றிருந்தவர்களிடம் தீர்மானமாக சொல்லி கொண்டிருந்தாள் நந்தினி.


(அவளுக்கு எதிரில் இருந்தவர்கள் அப்படி எதை அவளிடம் விலை பேச முனைந்தார்கள்.அடுத்த வெள்ளி தெரிஞ்சிடும்.)

தொடரும்.

நன்றி ஓவியர் ஜெயராஜ்.

ஆர்.வி.சரவணன்.4 கருத்துகள்:

 1. பிளாஸ்பேக்கில் அவர்களோடு நானும் பயணிக்கிறேன்.... அடுத்த பகிர்வுக்கு வெயிட்டிங்க்...

  பதிலளிநீக்கு
 2. முக்கியமான கட்டத்தில்
  (பிரேக்) கட்டையைப்
  பே ாட்டுட்டீங் களே?

  பதிலளிநீக்கு
 3. வரும் வேடிக்கையை வாசிக்க ஆவலுடன் உள்ளேன்...

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்