புதன், அக்டோபர் 15, 2014

சில நொடி சிநேகம் - பல குறிப்புகள்

சில நொடி சிநேகம் - பல  குறிப்புகள்

எனக்கு பிடித்த வரிகளில் ஒன்று இருட்டு னு இருட்டு  புலம்பறதை விட உன்னால் முடிந்தால் ஒரு மெழுகுவர்த்தி ஏற்று. இதை எதுக்கு இங்கே  சொல்றேன் . குறும்படம் எடுக்கனும்னு ரெண்டு வருஷமா  சொல்லிட்டு இருந்தேன்.இப்படி சொல்லிட்டே இருப்பதை விட முயற்சி செய்யலாமே என்ற ஆர்வத்தில் நான் செய்திருக்கும் முயற்சி தான் இந்த சில நொடி சிநேகம் என்ற குறும்படம். 

எந்த ஒரு படபிடிப்பையும் நான் வேடிக்கை கூட பார்த்ததில்லை.( யாரு உன்னை பார்க்க வேணாம்னு சொன்னாங்க ) கடந்து சென்றிருக்கிறேன் .எந்த ஒரு குறும்பட ஷூட்டிங் கூட கலந்து கொள்ள முடியவில்லை என்ற நிலையில்  நம் நண்பர் துளசிதரன் தன் குறும்பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ள வைத்து  அசிஸ்டென்ட் டைரெக்டர் ஆக தன்னுடன் இணைத்து கொண்டார் .அப்போது நான்  அவரிடம் சொன்ன ஒரு கதையை  கேட்டவர், இதையே டெவலப் பண்ணுங்க சார் என்று சொன்னார் . அந்த கதை ஸ்கிரிப்ட் முடித்து நிமிர்ந்த போது படம் அரை மணி நேரம் வரை ஓடும் போல் தெரிந்தது. 

துளசிதரன், அரசன், கோவை ஆவி, கீதா ரங்கன்,  பாலகணேஷ், ஸ்கூல் பையன் படித்து விட்டு  திருப்தியுடன் தலையசைத்தனர். ஆனால் என் நண்பர் வினோ சரவணன் முதல் படமா இந்த சப்ஜெக்டை எடுத்துக்காதீங்க வேற சின்ன சப்ஜெக்ட் எதுனா பண்ணுங்க அப்புறமா இது பண்ணலாம் என்றார்.  இதே கருத்தை தான் நண்பர் கே.ஆர்.பி செந்தில் அவர்களும் சொன்னார். 

அந்த சப்ஜெக்ட் பண்ணியே ஆக வேண்டும் என்ற துடிப்பில் இருந்த நான் இதனால் தளர்ந்து போய் உள்ளே நம்பிக்கை வீழ்ந்து போய்  நிற்கையில்  என் பார்வையில் தெரிந்தது . ஒரு விஷயம். அரசன் கோவை ஆவி துளசிதரன் இவர்கள் மூவருடனும் ஒரு மாதமாக ஸ்கிரிப்ட் விசயமாக பேசி பேசி அவர்களுக்கு குறும்படம் மேல்மிக  பெரிய ஆர்வம்  வந்திருந்தது அதை சிதைக்க போகிறோமே  என்று நினைத்து ரொம்ப கவலைப்பட்டேன். கோவை ஆவி துளசிதரன் சென்னை வருவதற்காக டிரெயின் டிக்கெட் எல்லாம் ரிசர்வ் செய்திருந்தார்கள். எங்கள் வீட்டிலும் எதிர்பார்ப்பு இருந்தது. இப்படி ஒரு சூழ்நிலையில் ப்ரொஜெக்டை தள்ளி போடுவது எப்படி என்று கொஞ்சம் திணறினேன். நண்பர்கள் பரவாயில்ல சார்  டயம் எடுத்து பண்ணலாம் என்றே  சொன்னார்கள். என் அலுவலக நண்பர்கள் "விடாதே வேற சப்ஜெக்ட் உடனே எழுது  நீ படம் பண்ண நினைத்த தேதியில் ஷூட்டிங் பண்ணிடு . அப்புறம் பண்ணலாம் என்று நீ நினைத்து தள்ளி போட்டால்  இந்த ஆர்வம் குறைந்து விடும்" என்றார்கள்.  எனக்கும் அவர்களது கருத்து சரி என்றே பட்டது . விடாபிடியாக வேலையை ஆரம்பித்தேன். எனது ஒரு பக்க சிறுகதை ஒன்றை எடுத்து ஸ்கிரிப்ட் எழுதினேன். அது தான் சில நொடி சிநேகம் 
ஸ்கிரிப்ட் முடித்த பின் ஷட்டிங் எங்கு வைத்து கொள்வது என்ற அடுத்த கேள்வி எழுந்தது கே.ஆர்.பி.செந்தில்  செங்குன்றம் பஸ் ஸ்டான்ட் ல எடுத்துடுங்க என்றார். சரி என்று நானும் என் தம்பியும் அங்கு சென்ற போது அங்கிருந்த டிராபிக் எனை மிரள வைத்தது. இதில் எப்படி ஷூட்டிங் நடத்த முடியும் என்று அதிர்ச்சியானேன். அடுத்த அதிர்ச்சியாக அனுமதி கேட்டு  காவல் நிலையத்தை நாடிய போது 5 இடங்களில் பர்மிசன் வாங்க வேண்டும் வாங்கி வாருங்கள் என்றார்கள். அலுவலக வேலையில்  இருக்கும் நான் 5 அலுவலகங்களுக்கு சென்று அனுமதி வாங்க எது நேரம். எப்படி வாங்குவது என்று மலைப்பானேன். 

  ஒரு மரத்தின் நிழலில் நின்ற படி,  ச்சே என்று  சலித்து கொண்ட படி  குறும்பட ஆசை அவ்வளவு தானா என்ற விரக்தியாய்  இருந்த போது திடீரென்று ஒரு ஐடியா தோன்றியது. கதை நடைபெறும் களமான கும்பகோணத்தில் அதாவது என் ஊரிலேயே எடுத்தால்  என்ன என்று தோன்றியது.  உடனே என் முக நூல் நண்பர்  வேல் முருகவேல் அவர்களுக்கு போன் செய்தேன். அவர் ஸ்ரீதரன் என்ற நண்பரின் எண்ணை கொடுத்தார்.  அவரை தொடர்பு கொண்ட போது அவர் தான் ஊருக்கு செல்வதால் தனது நண்பர் கே.கே.எஸ் ராஜா வின் எண்  கொடுத்தார்.  அவர் அங்கே சினிமா படபிடிப்புக்கு ஏற்பாடு செய்து தந்து வருகிறார். தொடர்ந்த விரக்தியுடன் , நான் அவரை தொடர்பு கொண்ட போது அவர் "ஒண்ணும் பிரச்சனையில்ல நீங்க ஷூட்டிங் குக்கு தயாரா வந்துடுங்க" என்றார்.  

நண்பர்களிடம் சொல்லி சென்னை டிக்கெட் கான்ஸல் செய்து கும்பகோணதிற்கு   டிக்கெட் போட சொன்னேன் நானும் என் தம்பியும் ஒரு நாள் முன்னதாகவே ஊருக்கு சென்றோம்.கே.கே. எஸ் ராஜா அவர்களை சந்தித்தேன். அவர் நகராட்சியிடம் பணம் கட்டி  அனுமதி சீட்டு வாங்கி வைத்திருந்தார். சந்தோசமாய் அவருக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினோம்.

தொடர்ந்து படப்பிடிப்பை எங்கெங்கு வைத்து கொள்ளலாம் என்று சுற்றி பார்த்து இடங்களை  தேர்வு செய்து கொண்டோம். படத்திற்கு பேருந்து ஒன்று தேவைப்பட்டது .என் தம்பியின் நண்பர் அழைத்து சென்று தனியார்  பேருந்து முதலாளியிடம் அறிமுகபடுத்தினார். அவரிடம்  3 மணி நேரத்திற்கு  பேருந்து க்கு பேசி அட்வான்ஸ் கொடுத்தோம்.  அவர்  ஒரு அரை மணி நேரம் கூடுதலாக  ஆனாலும் பரவாயில்ல நிதானமா எடுங்க என்று சொன்னதுடன்   நீங்க நல்லா வரணும் வருவீங்க என்றும்  வாழ்த்தினார். அவரிடம் வியாபாரத்தை மீறிய ஒரு மனிதாபிமானம் குடி கொண்டிருந்தது அவருடன்  பேசிய போது தெரிந்தது . 

அங்கு நடந்த விசயங்களை எல்லாம் உடனுக்குடனே  நண்பர்கள் நால்வருக்கும் தொடர்ந்து ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்து கொண்டிருந்தேன். அவ்வபோது நான் சந்தோசத்தில் இது  நிஜம் தானா என்று என் கையை  மட்டும் தான் கிள்ளி  பார்க்கவில்லை. (அடுத்தவங்க கையை கிள்ளியிருக்க போறே ) இப்படியாக அன்றைய பொழுது ஏற்பாடுகளில் செல்ல மறுநாள் அதாவது அதிகாலை 2 மணிக்கு நான் விழித்து விட்டேன். என் செல் போனிலேயே ஸ்கிரிப்ட் ஓபன் செய்து  வைத்து கொண்டு படித்து  மனதிற்குள் குறிப்புகள் எடுத்து கொண்டேன். கொஞ்சம் பயமாக கூட இருந்தது.  (பள்ளி கல்லூரி பரீட்ச்சைக்கு கூட நீ எழுந்து படிக்காதவன்  என்பதை இங்கே  அவசியம் சொல்லிரு )  


பொழுது விடிந்தது. நானும் தம்பியும் கிளம்பி கும்பகோணம் பேருந்து நிலையம் வந்து நண்பர்கள் வருகைக்காக காத்திருந்தோம். என் மகன் ஹர்ஷவர்தன் அப்பா நான்  இன்னிக்கு ஸ்கூல் க்கு லீவ் போடறேன் ப்ளீஸ் என்று சொல்லி படப்பிடிப்புக்கு வருகிறேன் என்று சொன்னான்.  சரி என்று சொல்லி விட்டோம்  அவன் ஆர்வத்துடன் உருவாக்கிய போஸ்டர்கள் தான் இங்கே இருக்கிறது. 

காலையில் தான்  படம் எடுக்கும் விசயத்தை குறித்து முக நூலில் ஸ்டேடஸ் போட்டேன்.


இறை அருளின் துணையுடன், என் வாழ்க்கையின் பெருங் கனவொன்று நான் பிறந்து வளர்ந்த மண்ணிலே நனவாகும் நாள் இன்று.இந்த நாளுக்கு என்னை கொண்டு வந்ததில் என் குடும்பத்தினருடன், வலைப்பதிவு மற்றும் முக நூல் நண்பர்கள் தந்த ஊக்கத்திற்கும் மிக முக்கிய பங்கிருக்கிறது.உங்களின் வாழ்த்துக்களுடன் இனிதே தொடங்குகிறேன் இந்நாளை


துளசிதரன் அவரது மனைவி, அரசன், கோவை ஆவி, கீதா ரங்கன், ஒளிபதிவாளர்கள் ஜோன்ஸ் கார்த்திக் வந்திறங்கினார்கள். அவர்கள் மூவரையும் ஏற்கனவே வீட்டில் வசனங்கள் படித்து ரிகர்சல் பார்த்து விட்டு வாருங்கள் என்று சொல்லியிருந்தேன். இந்த பட விசயமாக செல் போனில் மட்டுமே நாங்கள் டிஸ்கசன் செய்திருந்தோம். நேரில் சந்தித்து கொள்ளாமலே.


எனவே ஹோட்டல் அறையில் ரிகர்சல் பார்த்து கொள்ளலாம் என்றிருந்த எங்களுக்கு  அவர்கள் வந்த பேருந்துகளின் தாமதத்தால் ரிகர்சல் பார்க்காமலே ஷூட்டிங் ஸ்பாட் செல்ல வேண்டி   வந்தது. நாளை இந்த கட்டுரையை முடித்து விடுவேன் (என்று நினைக்கிறேன்) அது வரை  இந்த படத்தின் நாயகர்களில் ஒருவருமான நண்பா கோவை ஆவி ரெடி செய்திருந்த  குறும்பட டீசர் பார்த்து விடுங்கள் 

ஆர்.வி.சரவணன் 

10 கருத்துகள்:

 1. படைப்புகள் உருவான விதம் பற்றிய குறிப்புகள்/விசுவல்களை படிப்பதும், பார்ப்பதும் சுவாரஸ்யமான விஷயம். அதிலும் தங்களைப்போன்று புதியதாய் களம் காணுபவர்கள் பகிரும் செய்திகள் இளம் படைப்பாளிகளுக்கு நிச்சயம் சில புரிதல்களை தரும். வாழ்த்துகள் சரவணன்.

  பதிலளிநீக்கு
 2. சார்! சூப்பர் சார்! அழகா எழுதியிருக்கீங்க சார்! பட்ட கஷ்டங்களை விளக்காமல் சொல்லியிருப்பது நல்லதுதான். எங்களுக்கும் நன்றாகவே தெரியுமே சார் ....எவ்வளவு தடங்கலகள், கஷ்டங்கள்....எல்லாம் மீறித்தானே இதை அடைந்துந்தது தாங்கள்!

  என்றாலும், யதார்த்தத்தில் உள்ள கஷ்டங்களைச் சொன்னால் நன்றாக இருக்குமோ..படம் எடுக்க நினைப்ப்வர்களுக்கு உதவியாக இருக்குமோ என்ற ஒரு நல்ல எண்ணத்திலதான் சார்!

  இனியும் வெற்றி காண்பீர்கள் சார்! காண்போம்!

  பதிலளிநீக்கு
 3. டீசர் ஏற்கெனவே பார்த்து விட்டேன். உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள். மென்மேலும் குறும்படங்கள் எடுக்கவும் எங்கள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. உங்களின் இந்த முயற்சி பெரும் வெற்றிப்பெற்று விரைவில் திரைப்பட இயக்குநராகவும் மிளிர வாழ்த்துக்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள் சரவணன் சார்.. உங்கள் விடா முயற்சியும் உழைப்பும் வெற்றியை நிச்சயம் ஈட்டித் தரும் என்பதில் ஐயாமில்லை. அந்த குறும்படத்தை நாங்கள் எப்போது காண்பது?

  பதிலளிநீக்கு
 6. இந்த அனுபவங்கள் சினிமா இயக்குனர் ஆவதற்கு உதவிகரமாய் இருக்கும் ,ஒரு குறும்படம் எடுக்க குறைந்த பட்சம் எவ்வளவு செலவாகும் போன்ற குறிப்புக்களையும் சொல்லலாமே சரவணன் ஜி ?
  கோவை ஆவியின் டீசரும் குறும்படத்தை காண ஆவலை தூண்டுகிறது .இருவருக்கும் வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 7. தங்கள் ஆர்வம் எப்படி எப்படிப் படிப்படியாக செயல்வடிவம் பெற்றது என்பதை சுவையுடன் தந்தீர்கள், சார்!
  டீசரும் அருமை!
  நாளையும் (அதாவது இன்றும்) அடுத்த பகுதி வருமில்ல?

  பதிலளிநீக்கு
 8. வாழ்த்துகள் அண்ணா...
  ஒரு பய்ணத்தை ஆரம்பித்து இருக்கிறீர்கள்... தொடரும் பயணம் வெற்றியோடு தொடரட்டும்...

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கள் நண்பரே
  உழைப்பிற்குத் தகுந்த பலன் நிச்சயம் கிட்டும்
  குறும்படத்தினைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பரே

  பதிலளிநீக்கு
 10. ஆவியின் தளத்தில் டீசர் பார்த்தேன். நன்றாக வந்திருக்கிறது.

  வெற்றி பெற வாழ்த்துகள் சரவணன்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்