சனி, ஏப்ரல் 19, 2014

இரண்டாம் உலகத்தில் விடியும் முன் வில்லாவில் சுட்ட கதை
இரண்டாம் உலகத்தில் விடியும் முன் வில்லாவில் சுட்ட கதை டீ கடையில் டீ சாப்பிட்டு விட்டு மீதி காசு வாங்கினேன் சில்லறை 
இல்லை என்று ஒரு சாக்லேட் தரப்பட்டது அது காபி ப்ளேவர் சாக்லேட் இதுக்கு காப்பியே  குடித்திருக்கலாம் போலிருக்கே

------

ரம்மி படம் முடிஞ்சு எழுந்திருக்கும் போது பக்கத்தில் இருந்தவர் 
தன் ப்ரெண்ட் கிட்டே சொன்னார் 
 "என்னடா 1987 வருஷத்தை விட்டு கதை வெளில வரவே இல்லே"

ஆம் , இன்னும் கொஞ்சம் திரைக்கதையிலும் காட்சி அமைப்புகளிலும் கவனம் செலுத்தியிருந்தால், "1987 வருஷத்தை விட்டு வரதுக்கே மனசே இல்லேடா" இப்படி சொல்லும் விதமாக படம் இருந்திருக்கும்.இருந்தாலும் 
படம் முடிந்து வந்த பின்பும் கூடை மேல கூடை வச்சி பாடல் மனதிற்குள் உட்கார்ந்து கொண்டு நகர மறுக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

------

டூ வீலர் வாங்கி ரெண்டு வருஷம் தான் ஆகியிருக்கு. அதுக்குள்ளே வண்டி வாங்கின இடத்திலருந்து போன் பண்ணி வண்டி exchange பண்ற ஐடியா இருக்குதா னு கேட்கிறாங்க. நல்லா இருக்கிற வண்டியை நான் ஏன் exchange பண்ணனும் னு குரல் உயர்த்தினேன்.போனை வச்சிட்டாங்க (விட்டால் வண்டி புதுசா வாங்கி வீட்டுக்கு போறதுக்குள்ளே exchange பண்ணிக்கரீங்களா னு கேட்டாலும் கேட்பாங்க போலிருக்கு)

------

சில நாட்களுக்கு பிறகு ஞாயிறு சென்னையில் வாசம். வெளியில் எங்கும் செல்லாமல், இளையராஜாவின் இசை வீடெங்கும் ததும்பி வழிய அதில் லயித்த படியே வீட்டை ஒழுங்குபடுத்தி சாதம்,சாம்பார்,அப்பளம்,கேரட் தயிர் பச்சடி என்று பேச்சிலர் சமையல் நிதானமாக சமைத்து முடித்திருக்கிறேன். தினந்தோறும் தொடரும் டென்சன் ஏதுமின்றி இப்படி எப்போதேனும் தனிமையில் இருப்பது, வெயிலில் அலைந்து திரிந்த பின் மர நிழலில் 
வந்து இளைப்பாறுவதற்கு ஒப்பானது. (தனிமையின் வசம்)

------

அப்பா மறைவுக்கு பின் அவருக்காக வாங்கிய மாத்திரைகள் இருந்தது. அதை திரும்ப கொண்டு போய் மருத்துவமனை மருந்தகத்தில் கொடுத்தேன். வேறு ஏதேனும் வேண்டுமா சார் என்றார்கள். வேண்டாங்க என்றவுடன் பணம் திருப்பி கொடுத்தார்கள் இன்னொரு மருந்தகத்தில் ஒரு மாத்திரை பட்டை திரும்ப கொடுத்த போது வாங்கி ரெண்டு மாசம் ஆகிடுச்சே அதனால் காசு தருவது கஷ்டம்.வேறு ஏதேனும் வாங்கி கொள்ளுங்கள் என்றார்கள். எனக்கு கோபம் வந்து விட்டது காசு தர முடியாது பொருளாக தான் தருவோம் என்று சொல்லுங்கள் அதை விட்டுட்டு ரெண்டு மாசம் ஆனதால் பொருளாக தான் தருவோம் என்று சால்ஜாப்பு சொல்ல வேண்டாம் என்றேன்.நாங்க என்ன சொல்றோம்னு புரிஞ்சிட்டு பேசுங்க என்றார்கள் எனக்கு புரியுது நான் சொல்றது தான் உங்களுக்கு புரியல. பொருளாக தான் வாங்கணும் என்றால், என்னை என்ன டாக்டரிடம் போய் ஏதேனும் மருந்து சீட்டு வாங்கி வர சொல்கிறீர்களா என்றேன். பதில் பேசாமல் பணம் திரும்ப கொடுத்து விட்டார்கள். 100 ரூபாய்.சிறிய தொகை தான். இருந்தும் அதையும் வியாபாரமாக்கி விட அவர்கள் முனையும் போது நான் அதை காசாக்கி விட முயற்சிக்க கூடாதா.

------

சமீபத்தில் ஒரு நாள் காலை சென்னையிலிருந்து கோவை எக்ஸ்பிரஸ்ஸில் 6.15 மணிக்கு கிளம்பி திருப்பூர் வந்து சொந்த வேலையை முடித்து கொண்டு, பின் மதியம் 3.30 மணிக்கு கிளம்பி கரூர், திருச்சி, தஞ்சாவூர், என்று ஒவ்வொரு பேருந்தாக மாறி கும்பகோணம் வந்து சேர்ந்த போது மணி 
இரவு 10.30. ஊர் ஊராக சுற்றி வர வேண்டும் என்று முன்பு நிறைய ஆசைப்பட்டதுண்டு. இப்ப இதற்கு தானே ஆசைபட்டாய் (சரவணா) என்று தொடர் பயணங்கள் என்னை டாப் கியர் ல கொண்டு போயிட்டிருக்கு 
இதுல பைனல் டச் என்னன்னா இன்னிக்கு சென்னை கிளம்பியாகணும்.
(என்னது மறுபடியும் முதல்லேருந்தா)

------

சென்னைக்கு வேலை தேடி வந்த புதுசு. சென்னையில் எந்த இடமும் தெரியாது.ஒரு நாள் அப்பாவுடன் எனது வேலை விசயமாக வெளியில் வந்திருந்தேன்.(அவர் பயங்கர ஸ்ட்ரிக்ட் அடிச்சார் என்றால் கண் மண் தெரியாமல் அடிப்பார்.எந்த இடம் என்றெல்லாம் பார்க்க மாட்டார்)
பாக்யாவின் தீவிர வாசகனான எனக்கு அந்த வார பாக்யா எப்படி சென்று வாங்குவது என்று தெரியாமல் தவித்தேன். அவர் ஒரு அலுவலகத்தில் என்னை அமர வைத்து விட்டு உள்ளே சென்று விட்டார். அந்த கொஞ்ச நேர இடைவெளியில் பக்கத்திலிருக்கும் கடைக்கு அவசரமாய் சென்று கடையில் அந்த வார பாக்யா வாங்கி எனது சட்டைக்குள் செருகி வைத்து கொண்டேன். வீட்டுக்கு வந்து தான் எடுத்தேன். அது வரை அவர் கண்ணில் தென்படாமல் சட்டைக்குள் வைத்திருந்த அந்த த்ரில்லிங் இன்னிக்கு நினைச்சாலும் சிலிர்ப்பா இருக்கு
------

நேற்று நான் புக் ஷாப் சென்றிருந்த போது , வார இதழ்கள் வாங்கிய ஒருவரிடம் "மீதம் சில்லறை இல்லை 5 ரூபாய் புக் ஒண்ணு எடுத்துக்குங்க" என்றார் கடைக்காரர்.முன்னாடி ஒரு ரூபாய் சில்லறை இல்லேன்னு சாக்லேட் கொடுத்துட்டு இருந்தாங்க. இப்ப 5 ரூபாய்க்கு புத்தகம் 
கொடுக்கிற அளவுக்கு முன்னேற்றம் . நாம் கொண்டு போகும் காசு மொத்தத்தையும் (சில்லறை இல்லை என்ற சாக்கு வைத்து கொண்டு)
வியாபாரம் ஆக்காமல் விட மாட்டாங்க போலிருக்கு.

-----

சில பாடல்கள் கேட்கும் போது காலசக்கரத்தில் ஏறி பள்ளி கல்லூரி காலத்துக்கே நம்மை அழைச்சிட்டு போன மாதிரி ஆகிடுது. உதாரணம் சொல்லணும்னா ராம்கி நிரோஷா நடித்த, ஆபாவாணனின் செந்தூர பூவே படத்தில் வரும் சின்ன கண்ணன் தோட்டத்து பூவாக ஒரு தேவதை வந்தது நேராக வெண்ணிற ரோஜா தன்னிறம் மாறி மாலை சூடுதோ.... (பாட்டு முடிஞ்ச பின்னாடி திரும்ப நிகழ்காலத்துக்கு வராம அடம் பிடிக்க வச்சிடுது)

------

படம் பார்க்க தியேட்டருக்கு சென்றேன். (அதாவது 7.30 மணி). டிக்கெட் கவுன்ட்டரில் "படம் போட்டு அரை மணி நேரமாச்சு சார் பரவாயில்லையா" என்றார்கள் "வெளியாகியிருக்கும் இரு படங்களில் எந்த படம் தாமதமாக சென்றாலும் புரிந்து கொண்டு பார்க்கும் படி இருக்கும்" என்று கேட்டேன்.
அதற்கு அவர் சொன்ன பதில் "நான் இந்த ரெண்டு படத்தையும் இன்னும் பார்க்கல சார்"  (ஸ்வீட்  கடையில் வேலை பார்த்துட்டே ஸ்வீட் சாப்பிடாமல் இருப்பது னு சொல்வாங்களே. அது தானா இது ) முகநூலில் நான் எழுதிய (அல்லது கிறுக்கிய) வற்றில் சில சுவாரஸ்யங்களை
 தான் இங்கே பதிவிட்டிருக்கிறேன். படிக்காதவர்களுக்காக.ஏற்கனவே 
படித்தவர்கள் பொறுத்து கொள்ளுங்கள். 

ஒரே வாரத்தில் நான் பார்த்த படங்களை பட்டியலிட்டதில் கிடைத்தது 
இந்த பதிவிற்கான தலைப்பு 


படம் : கங்கை கொண்ட சோழபுரத்தில் நம் பதிவுலக நண்பர்கள் 
உழவன் ராஜா,ராம்குமார்,வெற்றிவேல்,சீனு,கோவை ஆவி,
ஸ்கூல் பையன், ரூபக் ராம் 

FINAL PUNCH 

கஷ்டம் வரும் போது மட்டும் கடவுளை காண வருவதை போல், கும்பிட்ட படி 
வாக்கு வரம் வேண்டி வரும் பக்த வேட்பாளர்கள் முன் ஒரு நாள் உற்சவராய் 
மாறி நின்று கொண்டிருக்கிறோம் (விரும்பியோ விரும்பாமலோ ) 

ஆர்.வி.சரவணன் 


10 கருத்துகள்:

 1. முன்னாடியே படித்த போதும் ரசித்தேன்..

  பதிலளிநீக்கு
 2. முகநூலில் படித்தவை என்றாலும் அழகாகத் தொகுத்திருக்கிறீர்கள் அண்ணா...

  பதிலளிநீக்கு
 3. முகநூலை கோர்த்து போட்டு ஒரு பதிவு ரெடி பண்ணிட்டீங்க அண்ணே...இது நல்ல ஐடியாவா இருக்கே !

  பதிலளிநீக்கு
 4. சுவாராஸ்யமான பதிவு
  முதன் முறையாகப் படிக்கிற சுகம்
  இரண்டாம் முறை படிக்கையிலும் இருப்பது
  தங்கள் சொல்லும் திறத்தினால் என்றால்
  நிச்சயம் அது வெறும் புகழ்ச்சிக்கான வார்த்தை இல்லை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. சிலவற்றை முகப் புத்தகத்திலும் படித்தேன்.....

  தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 6. எங்கேயோ படிச்ச ஞாபகமா இருக்கேன்னு யோசிச்சப்போ முகநூலில் படித்தது நினைவுக்கு வந்தது! மீண்டும் இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 7. நன்றி கோவை ஆவி
  நன்றி நிஜாமுதீன்
  நன்றி தனபாலன்
  நன்றி குமார்
  நன்றி நாஞ்சில் மனோ சார்
  நன்றி ரமணி சார்
  நன்றி வெங்கட் நாகராஜ் சார்
  நன்றி சுரேஷ்
  நன்றி ஜெயக்குமார் சார்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்