செவ்வாய், ஜூன் 21, 2016

உறியடி






உறியடி 

ரீலீசாகும் வரை ஒரு படத்தை பற்றிய தகவல்கள் ஏதும் அறியாமலிருந்து , படம் வெளியான பின் அந்தப் படம் நல்லாருக்குப்பா என்கிற பாசிட்டிவ் ரிவ்யூக்கள் தொடர்ந்து வருகையில் எப்படியாவது இந்தப் படத்தை பார்த்துடணும் என்ற ஆர்வம் வருமே. அது சமீபத்தில் உறியடி திரைப்படம் மூலமாக நிகழ்ந்தது.

சென்ற வாரம் நான், அரசன், கோவை ஆவி மூவரும் சந்தித்த போது படம் பார்க்கலாமே என்றவுடன் எங்களது முதல் சாய்ஸ் இந்தப்படமாக தான் இருந்த்து. அடுத்த நிமிடமே எஸ்கேப்புக்கு எஸ்கேப் ஆகி விட்டோம்.

ஹீரோயின், காமெடி, கமர்சியல் விசயங்கள், இப்படி ஏதுமில்லாமல் சாதியால் பாதிக்கப்படும் கல்லூரி மாணவர்களை பற்றிய கதைக்களனை மையமாக கொண்டு புதுமுகங்களுடன் (ஓரிருவர் பழைய முகங்கள் ) இயக்குனர் விஜய் குமார் தந்திருக்கும் ஆக்‌ஷன் ஆச்சரியம். நால்வரில் ஒருவராக அவரே நடித்துமிருக்கிறார்.

கல்லூரி என்றால் அங்கே காதலும் உண்டு தானே. ஆரம்பத்தில் சக மாணவியுடன் காதல் என்பது கதைக்கு தேவையில்லாத ஒன்று என்று தோன்றினாலும் கதை நகர அந்த கேரக்டரும் ஒரு காரணம் என்பதால் அது அவசியமாகிறது.
அனாவசியம் என்றால் அது மாணவர்கள் அடிக்கடி குடிப்பதாக காட்டியிருப்பது. கொஞ்சம் அவர்கள் படிப்பதாகவும் காட்டியிருக்கலாம்.


படத்தின் மிக பெரிய பிளஸ் என்றால் அது இடைவேளையின் போது தாபாவில் நடைபெறும் சண்டை காட்சியும் ஹோட்டலில் நடைபெறும் சண்டை காட்சியும் தான். இந்த இரண்டு காட்சிகளும், அந்த காட்சிகளை நோக்கிய படத்தின் கதை நகர்வும் படத்தை அலேக்காக தூக்கி நிறுத்தி விடுகிறது. அந்த இரண்டு காட்சியிலும் நம்மை அரங்கத்திலிருத்து தூக்கி சென்று சம்பவ இடத்திலேயே நாற்காலி போட்டு அமர வைத்தது போல் ஏற்படும் ஓர் பிரமையை, படம் முடிந்து வெளியேறி வந்த பிறகும் தத் தகிட தத் தகிட என்று நமக்குள் தக்க வைத்திருப்பதன் மூலம் இயக்குனர் விஜய்குமார் சினிமாவிற்கான தன் வரவை அழகாக பதிவு செய்திருக்கிறார்.

ஆர்.வி.சரவணன் 

வியாழன், ஜூன் 09, 2016

இண்ட முள்ளு கதைகளின் அரசன்






இண்ட முள்ளு கதைகளின் அரசன்

அரசன்  எனது வலைபதிவின்  கருத்துரையில் தான் முதன் முறையாக  எனக்கு அறிமுகமானார். அவரது கரை சேரா அலை வலைத்தளம் சென்ற போது அவரது எழுத்துக்கள் எனக்கு பரிச்சயமாகின. அவரது ஊர் அரியலூர் என்று தெரிய வந்த பின் பக்கத்து ஊர்காரர்  என்ற உரிமை   அவரை  நட்பாகி கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கொள்ள வைத்தது. உடனே  அவருக்கு மின்னஞ்சல் அனுப்பி செல் நம்பர் வாங்கி பேசினேன். பழக ஆரம்பித்த பின்  தொடர்ந்த எங்கள் பேச்சுக்கள் எங்கு சுற்றினாலும்   அது வந்து நிற்கும் இடம்  புத்தகம் வெளியீடாக தான் இருந்தது. இருவரும் இணைந்தே புத்தகம் வெளியிடலாம் என்றெல்லாம் கூட பேசி வைத்து கொண்டோம். இருந்தும், இளமை எழுதும் கவிதை நீ....மூலமாக (அவரது அனுமதியுடன்)
 நான் முந்தி கொள்ளும்படி ஆகிற்று.  இருந்தும் அவர் இன்னும் புத்தகம் வெளியிடவில்லையே என்ற உறுத்தல் என்னுள் இருந்து கொண்டே தான் இருந்தது. அவரது புத்தக முயற்சியை  பற்றி அவ்வப்போது ஆவலோடு விசாரித்து கொண்டிருந்தேன். என் ஆவல் பூர்த்தியானது. இதோ இண்டமுள்ளு என்ற சிறுகதை தொகுப்பினை  தன் முதல் புத்தகமாக   வெளியிட்டிருக்கிறார் அரசன்.

 நண்பர் கருணாகரசு தன் அணிந்துரையில்,

எல்லா மனிதர்களாலும் தன்  பால்ய கால நினைவுகளை பதியம் போட்டு வைத்திருக்க இயலாது.  தன் மண் மீதும் மனிதர்கள் மீதும் தீராக் காதல் கொண்டவனுக்கே அது வாய்க்கின்றது. அரசனுக்கு அது வாய்த்திருக்கிறது.
அரசனை பற்றி  இப்படி குறிப்பிடுகிறார்.

சரி அரசன் தன்னுரையில் என்ன குறிப்பிடுகிறார் ?

மாநகர நெருக்கடியில் எத்தனை சுக துக்கங்களை அனுபவித்தாலும், அரைஞாண் கயிற்றில் அரைக்கால் சட்டையை இழுத்து மாட்டி கொண்டு நாசியை நெரிக்கும் வீதிப் புழுதியில் விளையாடிய கிராமத்து நினைவுகளில் இருந்து விடுபட முடிவதில்லை. 

 ஆம். தான் நேசிக்கும் மண்ணை, மனிதர்களை, அதன் நிகழ்வுகளை, 
உற்சாகங்களை, துக்கங்களை, கோப தாபங்களை அந்த மண் மணம் மாறாமலே  தன் எழுத்துக்களில் தந்திருக்கிறார்  அரசன்.

புத்தகத்தின் பெயர் இண்டமுள்ளு என்று அரசன் சொல்கையில் அதை பற்றி அவரிடம் கேட்ட போது, தான் படர்ந்திருக்கும் பரப்பை கடக்கும் எவரையும் கொத்தாக பிடித்திழுக்கும் இயல்பினை  கொண்டது என்றார். படித்து முடித்த போது  சில கதாபாத்திரங்களும்  சில நிகழ்வுகளும்  நம்மை இப்படி தான் பிடித்திழுத்து கொண்டது.

9 சிறுகதைகள் கொண்ட இந்த சிறுகதை தொகுப்பில்  என்னை கவர்ந்த சில கதாபாத்திரங்கள் பற்றி இங்கே பார்ப்போம். 

வெள்ளாம சிறுகதையில் வரும் பழனி என்ற பெரியவர் பையன் கடைசி காலத்தில் உட்கார வைத்து தனக்கு கஞ்சி ஊற்றாமல் போனாலும் வயல்வெளிக்கு தன்னுடன்  இருந்து ஒத்தாசை செய்யாவிடினும் அதை பற்றி கவலை கொள்ளாமல் உழைப்பவர்  வெள்ளாமையை வீடு கொண்டு வந்து நல்லபடியாக சேர்ப்பவர் தன் மனைவியிடம்,  "உன் புள்ளைக்கு அனுப்ப வேண்டிய நெல்லை அனுப்பிடு" என்று அவன் மேல் உள்ள பாசத்தை சொல்லாமல் சொல்கிறார். ஆனால் அந்த பையன் தகப்பனின் பாசத்தை புரிந்து கொண்டானா  எனில் இல்லை. அதை சிறுகதையின் இறுதியில் சில வரிகளில்  சொல்லி முடிக்கிறார் ஆசிரியர். அந்த யதார்த்தம் முள் தைத்த உணர்வை தருகிறது.

தாய் மடி என்ற கதையில் வரும் அஞ்சல. தன் மகளின் மேல் கொண்ட பாசத்தை, மகள் இல்லாத வலியை, தன் மகள் வயதிருக்கும் பெண்ணிடம் அன்பு பாராட்டி தன் வலியை போக்கி கொள்கிறார். தாய் தகப்பனை விட்டு புகுந்த வீடு வரும் பெண்களுக்கு இப்படி ஒரு அம்மா பக்கத்து வீட்டில் 
கிடைத்தால் எவ்வளவு நன்றாக  இருக்கும் என்ற ஆவலை இக்  கதாபாத்திரம் தூண்டும்.

நலுவன் சிறுகதையில் வரும் நலுவன் தான் வேலை பார்க்கும் முதலாளியிடம் எவ்வளவோ கடுஞ்சொல்லை வாங்கி கட்டி கொண்டாலும் கோபப்படாதவன் முதலாளியின்  சூதை அறிய நேர்கையில் தன்  மனைவியை காக்கும் பொருட்டு ஆத்திரம் கொள்ளுதல் சபாஷ் சொல்ல தோன்றும்.

கெடாவெட்டி கதையில் வரும் முத்தம்மா. தனக்கு பிடிக்காத கெடாவெட்டை புருஷன் செய்கிறாரே என்று வெறுப்பு கொண்டாலும் அதனால் தன் உடல் நிலை  பாதிக்கப்பட்டாலும் கூட கணவன் மீது நேசம் கொண்டவராகிறார்.கதையின் முடிவில் அந்த நேசத்தை நாம் அறிய தன்திருப்பார் ஆசிரியர்.

அடுத்து இந்த சிறுகதை தொகுப்பில் வரும், மண் மணம் மாறாத வரிகள் சிலவற்றை இங்கே தருகிறேன்.

"ஆழங் கொண்ட மட்டும் தன்னோட வேற எறக்கி உசுரு வாழுவது இந்த அருவம் புல்லு தான். எத்தினி தான் கொத்தி எடுத்தாலும் சின்ன துணுக்கு எங்கயாவது இருந்தா போதும் ரவ தூத்த விழுந்த ஒடனே மொளச்சி வந்து உசுர வாங்கும்."

 கரு கலைந்து போன பெண்ணை பற்றி சொல்லும் போது ஒடஞ்ச பலூனு மாதிரி இருந்துச்சு ஒடம்பு.


"செஞ்ச வேலைக்கு கறாரா கூலி வாங்குறதுல ஒம்போல கில்லாடி யாரு இருக்கா சொல்லு"

"இப்படி பேசி பேசியே எல்லாம் என் துணி மறப்புல சொகங்காணுங்கடி"


"நாத்தாங்காலிலையே  பயிர வச்சிருக்க முடியுமா ? அதப் புடுங்கி இன்னொரு வயலுல நடுறது இல்லையா ? அப்படித்தான் பொம்பளையா பொறந்த நாம வாங்கி வந்த வரம் அப்படி இதுக்கு போயி அழுதுகிட்டு இருக்கே"



"ரெண்டு எல மொளச்சி வந்தா மூணு எல கில்லி வுடுற ஊருல சும்மா இருக்க முடியுமா"


"வாழ்க்கைய அது போக்குல வுட்டம்னா இப்படித்தான்  அது பாட்டுக்கு போயி மீண்டு வர முடியாத சொழலுல  சிக்க வச்சிட்டு போயிடும்"


"புருஷன் சரியில்லைனா வரவன் போறவன புருஷனா ஆக்கிடுவியா ?"


"குந்தி தின்னா குன்றும் தரையாவுமுன்னு சொல்வாங்க"



"ரெண்டு மாகாணி உப்பெல்லாம் எங்கிட்டு பத்தும். உரிச்ச தோலுல உப்பை சதும்பர தடவலையின்னா நாளே நாளுல நஞ்சி வீணா போயிரும்."



இந்த சிறுகதைகளில் என்னை கவர்ந்த இன்னொரு அம்சம் என்னவெனில்,
வெள்ளாம, மாட்டுக்கு செல தள்ளியிருப்பது, கடாவெட்டு,காயடிப்பு, இவைகளை  பற்றிய விளக்கங்கள் சொல்லபட்டிருப்பது.  சில இடங்களில் வரும் ஆபாசமான சொற்களை தவிர்த்திருக்கலாம்.சாந்தி கதையில் ஒரு பெண் தன்  இஷ்டபடி வாழ நேர்கையில் காலம் கஷ்டபடுத்தி பார்க்கும் விதம் என்பதான கதையில் இது கொஞ்சம் அதிகமே.  அதே போல் சிறுகதையின் கட்டமைப்பை அனைத்து சிறுகதைகளிலும் கொண்டு வந்திருக்க வேண்டும். சில இடங்களில் கதை கட்டுக்கு வராமல் அலை பாய்வதை தவிர்க்க ஏதுவாக இருந்திருக்கும்.


இண்டமுள்ளு கதைகள் படித்து முடித்த பின்  நம் பால்ய காலத்து நினைவுகள் சிலவேனும் நம் மனத்திரைகளில் தோன்றி நிற்பதை தவிர்க்க முடியாது. இப்படி ஒரு கதாபாத்திரத்தை பார்த்திருக்கோமே இப்படி சம்பவத்தை கேள்விபட்டிருக்கோமே என்றெல்லாம் நமக்குள் தோன்றுவிப்பதே, இண்டமுள்ளு சிறுகதை தொகுப்பின் ஆசிரியர் அரசனின் வெற்றி. இப் புத்தக முயற்சிக்கு உறுதுணையாயிருந்த அனைவருக்கும் நன்றி. 

அரசனின்  புத்தக முயற்சிகள் தொடர வேண்டும்.அப் புத்தகங்கள்  வெற்றி எனும் கிரீடத்தை அவருக்கு சூட்ட வேண்டும் என்று உற்ற நண்பனாய் வாழ்த்தி  மகிழ்கிறேன்.

ஆர்.வி.சரவணன் 

புதன், மே 25, 2016

கவுண்டமணியின் ஒரு நேர் காணலில்....






கவுண்டமணியின்  ஒரு நேர் காணலில்....
(கற்பனையில தாங்க எழுதிருக்கேன்)

பிரபல தொலைகாட்சியில் இணையத்தில் எழுதுபவர்களை கவுண்டமணி இண்டர்வியூ செய்யும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று கொண்டிருக்கிறது.

கவுண்டமணி ஸ்டார்ட் மியூசிக் என்ற குரலுடன் உள்ளே நுழைய, சூரியன் பட பேக் கிரௌண்ட் மியூசிக் ஒலிக்க ஆரம்பிக்கிறது. ஏகப்பட்ட கர கோஷத்துடன் வந்து நாற்காலியில் அமர்பவர் கேமராவை பார்த்து 
"கும்பிடுறேனுங்க" என்று அவரது ஸ்டைலில் வணக்கம் வைக்கிறார் 




நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அவர் அருகே வந்து "சார் நீங்க கோட் சூட் போட்ருக்கீங்க 
இங்கிலீஷ் ல தான் சொல்லணும்  " என்கிறார்.

 "அப்ப பெர்முடாஸ் போட்டிருந்தால் எந்த மொழில  பேசச் சொல்வே நீ.
இல்லே புதுசா மொழி எதுனா என்னை கண்டு பிடிக்க சொல்வியா. பிஸியா இருக்கிற 

என்னை டார்ச்சர் பண்ணாதே கோ மேன் "என்று எகிறவும்  நிகழ்ச்சிஏற்பாட்டாளர் 
நகர்கிறார் 

நிகழ்ச்சி ஆரம்பமாகிறது


ஹாய், ஹாய் , பசியோட இருக்கிற புள்ளைங்களுக்கு சாப்பாடு கூட கொடுக்காம, புருஷன் எப்ப வீட்டுக்குள்ளே  வந்தார்னு கூட தெரியாம  டி வி பெட்டியே கதி னு உட்கார்ந்திருக்கிற தாய்குலங்களே அப்புறம்  பொண்டாட்டி கிட்டே போட வேண்டிய சண்டையை கூட நிப்பாட்டி வச்சிட்டு  ப்ரோக்ராம் பார்த்ததுக்கு அப்புறம் சண்டை போடலாம் னு காத்திட்டிருக்கிற தந்தைகுலங்களே. எல்லாருக்கும் நம்ம நிகழ்ச்சி சார்பா ஒரு வெல்கம் சொல்லிக்கிறேனுங்க.இம்மீடியட்டா  நிகழ்ச்சிக்கு போயிடறேன். இல்லேன்னா விளம்பரத்தை போட்டுடுவாங்கோ.இன்னிக்கு யாரோட பேச போறோம்னு பார்க்கலாமா கமான் பாய். வா வந்து உட்காரு.

என்று அவர் சைகை காண்பிக்க நான் அவர் எதிரே உள்ள இருக்கையில் அமர்கிறேன்






என்னை ஒரு முறை மேலிருந்து கீழ் வரை நக்கலாக பார்க்கிறார் கவுண்டமணி 

மணி : உன் பேரென்ன

நான் : ஆர்.வி. சரவணன்

மணி :உன்னோட ப்ளாக்  பேரு

நான் : குடந்தையூர்

மணி : பெயர் காரணம்

நான் : கும்பகோணத்தோட இன்னொரு பேரு குடந்தை.  அதுல ஊர்னு 
ஒரு வார்த்தையை சேர்த்து குடந்தையூர் னு ஆக்கிட்டேன்

மணி :இருக்கிற ஊர் பத்தாதுனு நீ வேற புதுசா உண்டாக்கிட்டியா 

நான் : கொஞ்சம் தனி தன்மையோட இருக்கட்டுமேனு தான் ....என்று இழுக்கிறேன் 

மணி : அப்ப நீ தனி தீவுல தான் இருந்திருக்கணும். பை த பை. நெட்ல 
எத்தனை வருசமா எழுதறே.

நான் : அஞ்சு  வருஷமா

கம்ப்யூட்டரை பார்த்து கொண்டே 

மணி : வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் னு கேப்சர் வோர்ட் உன் சைட் ல 
வச்சிருக்கியே. நீ  முதல்ல அதை பாலோ பண்றியா மேன்.


நான் : நம்மாலே யாருக்கும் கெடுதல் இல்லாமே நடந்துகிட்டாலே 
நன்மை பண்ண மாதிரி தானே 

மணி : ஓ இப்படி வேற ஒண்ணு இருக்கா.சரி இந்த குண்டூசி விக்கிறவன் புண்ணாக்கு விக்கிறவன் எல்லாம் தொழிலதிபர் னு சொல்றான்யா னு நான் ஒரு படத்துல வசனம் பேசுவேன். அதை இப்ப இங்க ஏன் சொல்றேன்னு உன்னாலே புரிஞ்சிக்க முடியுதா.

நான்  : எஸ் சார் . பேனா பிடிச்சவன் எல்லாம் எழுத்தாளர் ஆகிட முடியுமா னு
சொல்ல வரீங்க.

மணி : குட்யா  . கேட்ச் மை பாயிண்ட் . நான் சொன்னதுக்கு எதுனா நீ பீல் பண்றியா. 

நான் : நோ சார். யாருக்கு திறமை இருக்கோ அவங்க கண்டிப்பா மேல வருவாங்க 

மணி கம்ப்யூட்டரையும் என்னையும் மாறி மாறி பார்க்கிறார்.

நான் : என்ன சார் 

மணி மேலும் கீழும் என்னை பார்த்து விட்டு 

ரஜினி கூட பேசற மாதிரி எல்லாம் பதிவு எழுதிருக்கே .கனவு காணுங்கப்பா உங்களை வேணாம் னு நான் சொல்லல. ஆனா நாங்க எல்லாம் நம்பற மாதிரி கனவு காணுங்க.

நான் :  ஒரு ஆசை  தான் 

மணி :சரி நீ எது வரைக்கும் எழுதுலாம் னு பிளான் வச்சிருக்கே 
கூகுள்காரன் கழுத்தை பிடிச்சு தள்ளற வரைக்கும்னு சொல்லிடாதே 

நான் :படிக்கிறவங்க விரும்பற வரைக்கும் 

மணி : உன்னை நீ வா போ னு சொல்றேனே. இதை பத்தி எதுனா பீல் பண்றியா

நான் : உங்க ஸ்டைல் அதானே சார்.  சிங்கம் கர்ஜித்தால் தானே அழகு. 
சிணுங்கினால் அழகாவா இருக்கும் 

 மணி : வெரி குட்.  நீ என்னை தனியா வந்து  பாரு.

நான் : சார்  உங்க கூட  ஒரு செல்பி எடுத்துக்கணும் 

மணி : எதுக்கு பேஸ் புக்ல போட்டு லைக்ஸ் வாங்கறதுக்கா. இதெல்லாம் எனக்கு பிடிக்காது மேன். சரி உன் பியுச்சர் பிளான் என்ன 

 நான் :டைரக்டர் நாற்காலில உட்காரணும்

மணி : யோவ் ஒரு சேரை எடுத்து அதுல டைரக்டர் னு எழுதி ஒட்டிட்டு உட்காருய்யா. இதை எல்லாம் போய் பியுச்சர் பிளான் னு சொல்லிட்டு திரிஞ்சுகிட்டிருக்கே.

நான் : சார். நான் டைரெக்டர் ஆகணும்னு சொல்ல வந்தேன் 

மணி : ஓ அப்படியா . தமிழ்நாட்டு ரசிகர்களை கொடுமைபடுத்தணும்னு  முடிவு பண்ணிட்டே சரி. வாழ்த்துக்கள் 

என்றவர் என் கை பற்றி குலுக்கி 

நைஸ் மீட்டிங் சரவணன்.இது வரைக்கும் உங்க கிட்டே நான் கேள்வி கேட்டேன்.  என் கிட்டே நீங்க எதுனா கேள்வி கேட்க ஆசைபடறீங்களா

நான் : எஸ் சார் நீங்க ஒருத்தர்ட்ட கேட்ட கேள்விக்கு  பதில் வந்திருச்சானு தெரிஞ்சிக்க ஆசைபடறேன் 

 மணி : நான் யாருட்ட என்ன கேள்வி கேட்டேன் ?



 நான் : ஒரு பழம் இந்தாருக்கு இன்னொன்னு எங்கேனு செந்தில் கிட்டே கேட்டீங்களே பதில்                     கிடைச்சிருச்சா 


மணி : ம் பழனிக்கு போயிருக்கு. அது இந்நேரம் பஞ்சாமிர்தம் ஆகிருக்கும்

என்று சீரியசானவர் தன் உதவியாளரிடம் 

சும்மாருந்தவனை சொரிஞ்சு விட்டுட்டாண்டா. 


நீ செந்திலுக்கு உடனே போன போடு. இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகணும்

மணி போன் பேச முயற்சிக்கையில், எப்படியும் செந்தில் "அதாண்ணே இது" என்ற அதே பதிலை தான் சொல்ல போகிறார்.கவுண்டமணி இன்னும் டென்சன் ஆக போகிறார் என்பதால் நான் அங்கிருந்து வெளியேறுகிறேன்.

வலைச்சரத்தில் அக்டோபர் 2013 நான் ஆசிரியராக பொறுப்பேற்றிருந்த போது எழுதிய பதிவு. அதை கொஞ்சம் மாற்றங்களுடன் இங்கே எனது தளத்தில் வெளியிட்டுள்ளேன்.

இன்று பிறந்த நாள் காணும் கவுண்டமணி அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


ஆர்.வி.சரவணன் 

வெள்ளி, மே 20, 2016

வீடெங்கும் திண்ணை வைத்து ....







வீடெங்கும் திண்ணை வைத்து ....



நண்பர் துளசிதரன் ஒவ்வொரு வருடமும் மே மாதம்  ஒரு குறும்படம் எடுப்பது வழக்கம். அவருடன் நான் அறிமுகமாகிய இந்த மூன்று வருடங்களில் அவரது மூன்று படங்களின் படபிடிப்பில் பங்கு கொண்டு விட்டேன். ( பரோட்டா கார்த்திக், பொயட் த கிரேட், செயின்ட் த கிரேட் ) இதில் முன்றாவது குறும்படமான செயின்ட் த கிரேட் குறும்படத்தின் படப்பிடிப்பு சென்ற வாரம் பாலக்காட்டில், திருநல்லாயி என்ற இடத்தில் நடைபெற்றது. கோவை ஆவியும் நானும் சென்றிருந்தோம். இங்கே நான் குறிப்பிடபோவது படப்பிடிப்பை பற்றியோ குறும்படத்தை பற்றியோ அல்ல. படப்பிடிப்பு நடைபெற்ற ஒரு தெருவை  பற்றி தான் இந்த பதிவில் சொல்ல இருக்கிறேன்.காலையில் நாங்கள் சென்று இறங்கிய போது இது ஏதடா, எதாவது சினிமா செட் போட்ட இடத்திற்கு தான் வந்து விட்டோமா என்று தான்  ஒரு கணம் ஆச்சரியமாக இருந்தது. அப்படி எல்லாம் இல்லை எனும் போது என் ஆச்சரியம் பல மடங்கானது. காரணம் சொல்லாமல் நான் ஆச்சரியத்தை அடுக்கி கொண்டே சென்றால் நீங்கள் சலிப்படைய கூடும் . ஆகவே விசயத்துக்கு வருகிறேன். 

அந்த தெருவின் சிறப்பே, தெருவின் இரு புறமும் உள்ள வீடுகள் அனைத்துமே திண்ணை வைத்து கட்டபட்டிருந்த  ஓட்டு வீடுகள். மாடி வீடாக இருந்தால் கூட
திண்ணைக்கு மட்டுமாவது கட்டாயம் ஓடு போடப்பட்டிருக்கிறது. 
இதில் ஆச்சரியம் என்னவென்றால் வீடுகள் அனைத்தும் முன்னே பின்னே என்றில்லாமல் ஒரே சீராக வரிசையாய் கட்டப்பட்டிருப்பது தான்.(ஓரிரு வீடுகளில் அப்படி இருக்கலாம்)

அந்த தெருவை பார்க்கையில் படப்பிடிப்புக்காக போடப்பட்ட ஒரு செட் எப்படி இருக்குமோ அப்படி தான் இருந்தது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அங்கே தான் படப்பிடிப்பு என்றவுடன் எனக்கு குதுகலம் அதிகமானது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சில வீடுகளின் திண்ணையில் சென்று (வீட்டாரின் அனுமதி பெற்று) அமர்ந்தபடி படங்கள் எடுத்து கொண்டிருந்தேன். அந்த படங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு.


















அன்று முழுதும் சிறு வயது ஞாபகங்களின் கரம் பிடித்த படியே அலைந்து கொண்டிருந்தது மனசு. மாலை அங்கிருந்து கிளம்பிய போது, வர மறுத்து அடம் பிடித்த மனசை அதட்டி தான் அழைத்து வர வேண்டியதாயிற்று.

ஆர்.வி.சரவணன் 

திங்கள், மே 09, 2016

பாக்யா வார இதழில் திருமண ஒத்திகை



பாக்யா வார இதழில் திருமண ஒத்திகை 
(தொடர்கதை )

குமுதத்தில் வெளி வந்த மௌன கீதங்கள் திரைக்கதை தொடர்  படித்து, படம் பார்த்த பின் திரு. கே. பாக்யராஜ் அவர்களின்  ரசிகனானேன் என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அவரது படங்கள் வெளி வரும் நாளெல்லாம்  எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல் தான்.பாக்யா வார இதழை பாக்யராஜ்  துவங்குகையில், வருடம் ஒரு முறை படங்களின் மூலமாக உங்களை சந்தித்த நான் இனி வாரம் ஒரு முறை பாக்யா வார இதழ் மூலமாக உங்களை  சந்திக்க இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். 

பாக்யா வார இதழ் ஒவ்வொரு வாரம் வெளி வரும்போதும், அவரது படத்தை  எதிர்பார்க்கும் அதே குதூகலத்துடனே எதிர் கொண்டேன். தொடர்ந்து ஒரு வாசகனாய் மட்டுமே பாக்யாவை படித்து வந்த எனக்கு, இணையத்தில் எழுத ஆரம்பித்த பிறகு பாக்யாவில் என் படைப்பும் வெளியாக  வேண்டும் என்ற ஆசை துளிர் விட ஆரம்பித்தது. 

இப்படியான சூழலில் தான் முக நூல் நண்பர்  எஸ்.எஸ்.பூங்கதி்ர் மூலமாக பாக்யா வார இதழின் வாசகர் கமெண்ட் பகுதியில் முதன் முதலாக  எனது கமெண்ட் வெளியானது. சில வரிகளே தான் என்றாலும் அது எனக்கு கொடுத்த உற்சாகம் மிக பெரிது. அதற்கு பின்  பூங்கதிர் மூலமாக, பாக்யராஜ் அவர்களை சத்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.அந்த அனுபவங்களை பதிவாகவும் எழுதியிருக்கிறேன்.

இது நம்ம பாக்யராஜ்

பின் எனது இரு சிறுகதைகள் பாக்யாவில்  வெளியானது. அது  வெளியான  விதத்தை பற்றி குறிப்பிடும் எனது பதிவு.

எனது இளமை எழுதும் கவிதை நீ.... நாவல் வெளியீட்டுற்கு பின் அடுத்ததாக நான் எழுத ஆரம்பித்த திருமண ஒத்திகையை குடந்தையூர் தளத்தில் பாதி வரை எழுதி  நிறுத்தியவன் மீதமுள்ள அத்தியாயங்களை  எழுதி முடித்து, புத்தகமாக வெளியிட முடிவு செய்த போதே, இந்த புத்தகத்திற்கான அணிந்துரையை  பாக்யராஜ் அவர்களிடம் தான் கேட்டு பெற வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தேன். எவ்வளவு நாளானாலும் பரவாயில்லை என்ற உறுதியுடன்  அவரை சந்திப்பதற்காக  காத்திருந்தேன்.

இந்த சூழ்நிலையில், நண்பர் எஸ்கா மூலமாக நான் இணைந்த வாட்ஸ் அப் குழுமத்தில் நண்பர் பாப்பனப்பட்டு வ.முருகன் அவர்கள் பாக்யாவில் தொடர்கதை தேவை என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதைப் பார்த்து திருமண ஒத்திகை  கதையை பற்றி சொல்லி அனுப்பி வைத்திருந்தேன். சில நாட்களுக்கு பின் பாக்யாவிலிருந்து எனை வரச் சொல்லி பாக்யராஜ் உதவியாளர் மூர்த்தி நடராஜன் போன் செய்தார்.  ஆவலுடன் சென்றிருந்தேன். பாக்யராஜ் அவர்கள் கதையை கேட்டுவிட்டு சில கரெக்‌ஷனுடன் பாக்யாவில் தொடர்கதை வெளியிட ஒப்புதல் அளித்தார். 

பாக்யராஜ் அவர்களின. அணிந்துரையுடன் புத்தகமாக வெளியிட விரும்பியவனுக்கு,  பாக்யாவில் அது தொடர்கதையாகவே  வெளி வரும் வாய்ப்பையே  கடவுள் ஏற்படுத்தி தந்திருக்கிறார்.






இதோ திருமண ஒத்திகை தொடர்கதை இந்த வாரம் (மே 6-12) பாக்யா வார இதழில்  ஆரம்பமாகி விட்டது.



எத்தனையோ நாட்கள் நம் எழுத்துக்களும் பத்திரிகைகளில் வராதா என்று ஏங்கியிருக்கிறேன்.  ஆனால் அப்படி வராதது இப்படி ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைப்பதற்காக தான் எனும் போது மோதிரக்கையால் குட்டுப்பட்ட ஒரு சிஷ்யனின் உற்சாகத்தை உணர்கிறேன். 

இந்த இனிய  தருணத்தை எனக்களித்த ஆசிரியர்  பாக்யராஜ் அவர்களுக்கு 
என் இதயம் நிறைந்த நன்றி.

பாக்யா ஆசிரியர் குழு, தொடர்ந்து  ஊக்கமளித்து வரும்  நண்பர்கள் எஸ். எஸ் பூங்கதிர், பாப்பனப்பட்டு வ.முருகன், மூர்த்தி நடராஜன்,  அரசன், கோவை ஆவி, மனசு குமார், துளசிதரன், நிஜாமுதீன், எஸ்கா கார்த்திக், கீதா ரங்கன், மற்றும் வலைபதிவ நண்பர்கள், முக நூல் நண்பர்கள், வாட்ஸ்அப் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியும் அன்பும்.

இரண்டாவது அத்தியாயம் 




தொடர்கதையை படித்து நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.
என்றும் அன்புடன்

ஆர்.வி.சரவணன்.

செவ்வாய், ஏப்ரல் 26, 2016

பயணங்கள் முடிவதில்லை








பயணங்கள் முடிவதில்லை
 தொடர் பதிவு


நண்பர் மனசு குமார், அப்பப்ப என்னை தொடர் பதிவுல சிக்க வச்சிடறாரு . ஏன் இந்த கொலை வெறி னு கேட்கலாம்னு நினைச்சா, நாம மாட்டிவிட்டா ஏன் எதுக்கு என்று கேட்காமல் நாலு மாசம் ஆனாலும் எப்படியும் எழுதி முடிக்கும் என் அன்பு அண்ணன் குடந்தையூர் ஆர்.வி. சரவணன் அப்படின்னு ஒரு வார்த்தையை வேற போட்டு விட்டுட்டாரு.  கூடவே எனக்கு  பயணம் செய்ய ரொம்ப பிடிக்கும் என்பதையும் சொல்லியிருக்காரு. அது என்னவோ உண்மை தான். தொடர் பதிவை எழுத அழைத்தமைக்கு நன்றி குமார்.அவர் சொன்ன மாதிரி ஜனவரியில் எழுத சொன்னதை  இதோ இந்த மாசம் தான் என்னாலே எழுத முடிஞ்சிருக்குனா பார்த்துக்குங்க. 
பயணங்கள் முடிவதில்லை பற்றிய இந்த தொடர் பதிவில் கொஞ்சம் பயணிப்போமா 


மனசு குமார் அவர்களின் பதிவு இது 




1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?

நன்றாக நினைவிருக்கிறது. சென்னையில் ஒன்றாவது படித்து முடித்து குடும்பத்துடன்  விடுமுறைக்கு  கும்பகோணம்  பகல் நேர ரயிலில்  தான் வந்திருந்தேன். அது தான் எனக்கு தெரிந்த முதல் ரயில் பயணம். அந்த வயதில் ரயிலும் சரி ரயில் பயணமும் சரி மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. (இது எப்படி உனக்கு ஞாபகம் இருக்குனு நீங்க கேட்கலாம். அதற்கு காரணம் இருக்கு. ஒன்றாவது சென்னையில் படித்த நான் இரண்டாம் வகுப்பு முதல் கும்பகோணத்தில் தான் படிக்க ஆரம்பித்தேன்)



 2.மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது?

அலுவலக வேலையாக மத்திய பிரதேசம் இந்தோர் நகரத்திற்கு விமானத்தில் 3 வருடங்களுக்கு முன் சென்றிருந்தேன். அதில் என்ன சிறப்பிருக்கிறது எல்லாரும் தானே  செல்கிறார்கள் என்கிறீர்களா?. 36 மணி நேரத்தில்  நான்கு விமானங்களில் தொடர்ந்து பயணம். அதாவது சென்னை டு மும்பை, மும்பை டு இந்தோர்,  அங்கு வேலையை முடித்து விட்டு அன்று மாலையே இன்டோர் டு மும்பை, மும்பை  டு சென்னை என்று பயணித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகவும், முதல் விமான பயணம் என்பதால் மகிழ்ச்சியான ஒன்றாகவும் அமைந்தது. (இறக்கை முளைத்து பறந்தது போன்ற ஒரு உணர்வு )


3. எப்படி பயணிக்கப் பிடிக்கும்?

பேருந்தோ ரயிலோ ஆட்டோவோ எனக்கு ஜன்னல் ஓர இருக்கை தான் பிடிக்கும். கார் என்றால் முன் சீட். (டிரைவருக்கு பக்கத்து சீட் )


4.பயணத்தில் கேட்க விரும்பும் இசை?

 இளையராஜா, பாக்யராஜ், ரஜினிகாந்த் பாடல்கள் விரும்பி ரசிப்பேன்.
 (பேருந்தில் டிரைவர் வேறு பாட்டை போட்டுட்டா என்ன பண்ணுவீங்கனு கேட்கறீங்களா. விரும்பியது கிடைக்கலை என்றால் கிடைத்ததை விரும்ப வேண்டியது தான் )

5.விருப்பமான பயண நேரம்?

காலை 10 மணி முதல் ஒரு மணி வரையிலான பேருந்து பயணம். பேருந்தில் இரவு பயணத்தில் தூங்காமல் விழித்திருந்து ஒவ்வொரு ஊரையும் பார்த்த படி வருவது விருப்பமான ஒன்று. (ஆனால் பெரும்பாலும் தூக்கம் வந்து விடும்)

ரயிலில் சைடு லோயர் பர்த்  பிடித்தமான ஒன்று. அதில் இரவு பயணங்களில் படுத்திருந்த படி ஜன்னலோரத்தில் செல்லும் மரங்கள் மற்றும் நிலாவை ரசித்த படி இருப்பது பிடிக்கும் (ஆனால் அவ்வளவு சீக்கிரம் அந்த பர்த் கிடைத்து விடுவதில்லை.)

6. விருப்பமான பயணத்துணை?

இசை 

7. பயணத்தில் படிக்க விரும்பும் புத்தகம்?

பயண நேரத்தில் அவ்வளவாக படிப்பதில்லை. இயற்கையையும்  ஊர்களையும்  ரசிப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்துவேன். பயணங்களில் வரும் ஒவ்வொரு ஊரின் சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவேன். (உலகமே ஒரு புத்தகம் தானே)

8.  விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?

டூ வீலரில் மிதமான வேகத்தில் தொடர்ந்து ஓட்டி  கொண்டு செல்வது  பிடிக்கும் (எந்த ஒரு டிராபிக் இடைஞ்சலும் இல்லாமல் அப்படிங்கிறதையும் சேர்த்துக்குங்க)

 9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?

யாதும் ஊரே யாவரும் கேளிர் அன்பே எங்கள் உலக தத்துவம் ......

உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவ சிலைகளின் அரங்கம் ......

உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் ......

(சிச்சுவேசன் சாங் மாதிரி இருக்குனு பார்க்கிறீங்களா. அது என்னவோ தெரியல பாட்டை முணுமுணுக்கணும் னு நான் நினைக்கையில் முந்தி கொண்டு வருவது இந்த பாடல்கள் தான்) 

10. கனவுப் பயணம் ஏதாவது ?

குடும்பத்துடன் காலத்தால் அழியாத வரலாற்று இடங்கள் சிலவற்றையேனும் சென்று பார்த்து ரசித்து வர வேண்டும்.
(கனவுகள் அவ்வளவாக நிறைவேறுவதில்லை என்றாலும் கனவுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது )

ஆர்.வி.சரவணன் 

ஞாயிறு, பிப்ரவரி 28, 2016

பண்டிகை கால பயணம் ஒன்று




பண்டிகை கால பயணம் ஒன்று

இந்த தீபாவளி பொங்கல் னு  பண்டிகை நாள் வந்துட்டாலோ இல்லன்னா சேர்ந்தார் போல் ரெண்டு மூணு நாள் லீவு  வந்துட்டாலோ டிக்கெட் புக் பண்ண முடியாம ஊருக்கு போறவங்க லோ லோ னு தான் அலைய வேண்டியிருக்கும்.  (எதுக்கு ரெண்டு லோ ? ஒண்ணு ஊருக்கு போறதுக்கு இன்னொண்ணு திரும்பி வரதுக்கு). அப்படி திண்டாட்டமாகி எப்படிடா ஊர் போய் சேர்வோம்னு முதுகுல மாட்டின லக்கேஜோட டென்சனையும் இலவச இணைப்பா 
சுமந்துகிட்டு கிளம்பின ஒரு பயணியோட அனுபவம் தான் இது. அது யாரதுனு நீங்க யோசிக்க ஆரம்பிக்கிறதுக்குள்ளே அந்த பயணியே  நான் தான் னு
 (அந்த குழந்தையே நீங்க தான் மொமென்ட்ல ) சொல்லிகிட்டு பயணத்தை ஆரம்பிக்கிறேன்.

சென்ற மாதம் பொங்கலுக்கு கும்பகோணம் போக பேருந்து ரயில் இது எதுலயும் இடமில்லைனு தெரிஞ்சவுடனே  (வடிவேலு போல்) ஆரம்பத்திலேயே ஆரம்பிச்சுட்டாய்ங்களா என்று முனகிய படி தான் கிளம்பினேன். பஸ் ரயில் (பிளைட் இன்னும் விடலே) இது ரெண்டுல எதுல போகலாம்னு மனசு டாஸ் போட்டு பார்த்துச்சு . ரயிலில் அன் ரிசர்வ் ல நின்னுகிட்டு தான் போகணும். அதுக்கு பதிலா பஸ் போனா உட்கார சீட்டாவது கிடைக்கும் அதனாலே பஸ்ல போயிடலாமே னு  முடிவெடுத்தேன். 

வெள்ளி அன்று பொங்கல். வியாழன் மாலை அலுவலகத்தில் எக்கச்சக்க ஆணிகள் . ஆணிய புடுங்கிட்டு  கிளம்பறப்ப மணி 8.00. பாரிஸில் இருந்து கோயம்பேடு போன பேருந்தில் நான் தொத்தி கொண்டு ஏறி சீட் தேடிய போது மக்கள் நாங்க கோயம்பேடு வரை ரிசர்வ் செய்திருக்கோமாக்கும் என்பது போல் உட்கார்ந்திருந்தாங்க. நின்ற படியே கோயம்பேடு வந்ததில் வலி தெரியல. ஆனால்  ஊருக்கு போற பஸ்ல உட்கார வழி (இடம்) கிடைச்சா சரினு  நினைச்சிட்டு கோயம்பேட்டில் சென்று இறங்கிய போது மணி 9.00.


எங்கு திரும்பினாலும் மக்கள் மூட்டை மூட்டையாக லக்கேஜுடன் சென்று கொண்டிருந்தார்கள். பொங்கல் பொங்கி முடிக்கிறதுக்குள்ளே வீடு போய் சேர்ந்தாகணும்னு அவங்க கிட்டே இருந்த  பரபரப்பு ஜுரம் என்னையும் தொத்திகிச்சு.  உள்ளே நுழையரப்ப  ரிசர்வேசன் கவுன்ட்டர் காலியா இருந்துச்சு. வேகமாய் போய் கேட்ட போது ,  "கும்பகோணத்துக்கு இப்ப ரிசர்வேசன் பஸ் எதுவும் இல்ல. எல்லாம் புல்.  நாளைக்கு  காலையில தான் இருக்கு" னு சொன்னவர் என் அதிர்ச்சிய பார்த்துட்டு, "அன் ரிசர்வ்டு பஸ்கள்  நிறைய விட்டிருக்காங்க. 8 ம் நம்பர் பிளாட்பாரம் போங்க" என்றார்

சினிமால  காமிக்கிற மாதிரி இங்க கட் பண்ணா அந்த 8 ம் நம்பர் பிளாட்பார்ம்ல இருக்கணும்னு தான் ஆசைப்பட்டேன். நிஜத்தில் அது முடியாதே. அதை தேடி புறப்பட்டவன்  வழியெங்கும் மக்கள் கடலில் நீந்தி போக வேண்டியிருந்துச்சு. 

 8 ம் நம்பர் பிளாட்பாரம் எங்க இருக்கு என்று யாரிடமும் கேட்பதற்கு அவசியமே இல்லாம ஆங்காங்கே  போர்டுகள் வைத்திருந்தார்கள்.
பரவாயில்லியேனு நினைச்சிட்டே அங்க போய் சேர்ந்தேன்.

மேஜை போட்டு அமர்ந்திருந்த போக்குவரத்து அதிகாரிகளிடம்  கேட்டப்ப 
"பஸ் நிறைய இருக்கு சார். டிராபிக் ல ப்ளாக் ஆகி நிக்குது வரும்"  என்றார்கள்
அடுத்து நான் கேட்ட கேள்வி அவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கும், "பஸ் இடது பக்கமா வருமா, இல்ல வலது பக்கமா வருமா" அப்படி நான் கேட்டவுடன்  எப்படி வந்தா என்னய்யா. பஸ் வந்தா போதாதா அப்படிங்கிற முகபாவத்துடன் என்னை பார்த்து  "வலது பக்கம்" என்றார்கள்.  நடக்க ஆரம்பிச்சேன். 

கூட்டம் அதிகமா இருந்தா,  பஸ்  பேருந்து நிலையத்தில் உள்ளே 
நுழையுறப்பவே  பயணிகள் அங்க நின்னு தடாலடியாக  ஏறி சீட் போட்டு விடுவார்கள்.  நானும் அப்படி  ஏறி விடலாம்னு நடக்க ஆரம்பிச்சேன். 

இருபது பஸ் வரைக்கும்  தாண்டி போயிருப்பேன். கும்பகோணம் செல்லும் பஸ் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் தென்படல. ஆனால் பக்கத்து பிளாட்பாரத்தில் மட்டும் திருச்சி செல்லும் பஸ்களாக நிறைய வந்துட்டிருந்துச்சு. எதிர் இலையில் பரிமாறப்படும் பாயாசம் நம்ம இலைக்கு எப்ப வரும்னு காத்திருக்கிற மாதிரி பார்க்க ஆரம்பிச்சேன். அப்ப தான்  ஒரு பஸ்  நான் போயிட்டிருந்த பிளாட்பாரம்ல வந்துட்டிருந்துச்சு.

சர்க்கரையை மொய்த்து கொண்ட எறும்புகள் போல் சில பேர் அந்த பஸ்ஸை தொடர்ந்து வந்துட்டிருந்தாங்க. கண்டக்டர்  "இது ரிசர்வேசன் பஸ்சுங்க"என்றார்.  "எல்லா பஸ்சும் ரிசர்வேசன்னே வந்தா நாங்க எப்படி ஊருக்கு போறது" என்று கேட்டு கொண்டே மெதுவாக ஊர்ந்த படி வந்து கொண்டிருந்த பஸ்சை  ஓட்டமும் நடையுமாக தொடர்ந்துட்டிருந்தாங்க. 
நானும் அந்த ஜோதியில் அவர்களுடன் ஐக்கியமாகி கொண்டேன். நாங்கள் ஒரு கட்டத்துல சலிப்பாகி  சார் எந்த ஊர் போகுதுன்னு சொன்னீங்கன்னா  நாங்க வேற பஸ்சை பார்க்க போயிடுவோமில்ல னு கேட்டப்ப தான் அவர் "இது கரூர் போகுது தம்பி" என்றார்.  அடுத்த செகண்ட் அத்தனை பேரும் அடுத்த வண்டி தேடி ஓட ஆரம்பிச்சோம். 
கொஞ்சம் தள்ளி கும்பகோணம் பெயர் பலகையோட  ஒரு பஸ் நிக்கிறது என் கண்ணுக்கு தெரிய வந்துச்சு. ஒரு நிமிஷம் ஓட்ட பந்தய வீரனாய் மாறி, மூச்சிரைக்க பஸ்சின் பக்கம் போனப்ப தான் அதுவும் ரிசர்வேசன் பஸ்னு தெரிஞ்சுச்சு.


போக்குவரத்து அதிகாரிகள் நின்னுட்டிருந்த பழைய இடத்துக்கு நான் வந்து நின்னப்ப தான் வாழ்க்கை ஒரு வட்டம்டா என்பது புரிஞ்சுது. அப்ப தான் அந்த இடத்துல தஞ்சாவூர் போர்டுடன் பஸ்  ஒண்ணு நின்னுகிட்டு இருக்கிறதை பார்த்தேன்.  ஆகா இது கும்பகோணம் வழி தானேனு பஸ்சுக்குள் தாவி ஏறினேன்.  கடலை விற்பவர் உட்கார்ந்திருக்கிற ஒவ்வௌருத்தரையும் 
கேட் டுட்டே எனக்கு முன்னாடி  போய்கிட்டு இருந்தார். நான் அவர் பின்னாடியே காலியாக இருக்குற சீட் பக்கத்துல உட்கார்ந்திருக்கிறவங்க கிட்டே சீட் கேட்டுகிட்டே நானும் போயிட்டிருந்தேன்.  பஸ்ல கடைசி சீட்டுக்கு முன்னதாக ஒரு சீட் காலியாக இருந்துச்சு. அப்பாடா என்று அருகில் சென்று என் பேகை வச்சிட்டு பாக்குறேன்.  அந்த சீட் பஸ்ஸோட பின் சக்கரத்திற்கு மேலே உள்ள சீட். ஒரு மேடை மேல உட்கார்ந்திருக்கிற மாதிரியே 
இருக்கும். அதில ஒரு பிரச்னை என்னன்னா கால்களை கீழே நீட்டி உட்கார முடியாது.  ஏழு மணி நேரம் உட்கார்றது கஷ்டம் தான்.  இருந்தும் பசிக்கு புளி சாதம் கிடைக்கும் போது அத விட்டுட்டு பிரியாணிக்கு ஆசைபட கூடாது னு பட்டுன்னு உட்கார்ந்துட்டேன். இன்னும் சில பேர் ஏறி சீட் தேட ஆரம்பிச்சாங்க. இல்லேன்னவுடன் அவங்க அலட்டிக்கல. தரையில் உட்கார்ந்துகிட்டாங்க.

 கண்டக்டர் வண்டியில் ஏறி "பஸ்  கும்பகோணம் அதை விட்டால் தஞ்சாவூர் இங்க தான் நிக்கும். வேற எங்கேயும் நிக்காது. எல்லாரும் 225 ரூபாய் எடுத்து வச்சிக்குங்க"  என்றார் கறாராக. சிக்னல்ல கூட நிக்காதா சார், பயண வழி உணவகத்தில் கூட நிற்காதா சார் னு என் மைண்ட் வாய்ஸ் கேட்டுச்சு. (அது அவருக்கு கேட்காதுன்னு தெரிஞ்சும்) பஸ் கிளம்ப ஆரம்பிச்சப்ப தான் .  பஸ்ஸை பிடிக்கிற டென்சனில்  சாப்பிடாம ஏறினது மட்டுமில்லாம ஒரு  தண்ணீர் பாட்டில் கூட வாங்கிக்காம ஏறினது ஞாபகம் வந்துச்சு.  சரி அட்ஜஸ்ட் பண்ணிப்போம்னு நினைக்கிறப்ப வண்டி டிராபிக்கில் நகர ஆரம்பிச்சு வேகம் பிடிச்சது. அது வரை இருந்த புழுக்கத்தை காற்று உள்ள புகுந்து விரட்ட ஆரம்பிச்சுச்சு.

 டிக்கெட் போட்டு கொண்டே வந்த கண்டக்டரிடம் ஒரு பயணி அப்போது மல்லு கட்ட ஆரம்பித்தார். "என் பையனுக்கு அரை டிக்கெட் தான்" னு  இவர் சொல்ல, அவர் "அதெல்லாம் கிடையாது முழு டிக்கெட் தான். நான் தான் வண்டி எடுக்கும் போது சொன்னேன்ல. இப்ப வம்பு பண்ணா என்ன அர்த்தம்"னு குரல் எழுப்பினார். "அதெப்படி சின்ன பசங்களுக்கும் அதே டிக்கெட் வாங்கறீங்க" " என்னை எதுக்கு கேக்கறீங்க. பஸ் நின்னப்ப அதிகாரிகளை பார்த்து கேட்க வேண்டியது தானே " னு சொல்லிட்டு முழு டிக்கெட் கொடுத்த படி நகர்ந்தார். எல்லாரும் இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க 
அந்த பயணியும் அவர் குடும்பமும்  கடைசி இருக்கையில் தான் அமர்ந்திருந்தார்கள். 

பஸ் கூடுவாஞ்சேரி  தாண்டற வரைக்கும் செம டிராபிக். பஸ், கார், லாரினு ஒண்ணுக்கொண்ணு  முந்தி போறதுக்கு ட்ரை பண்ணிட்டு இருந்துச்சு. கார்களை பார்க்கிறப்ப, நம்ம கிட்டே கார் இருந்தா கார்லேயே போயிருக்கலாமே னு என்னை உரசி பார்த்த அந்த ஆசை 
தெருவோரம் ஸ்டாப்பிங்ல பஸ்சுக்கு வெயிட் பண்ணிட்டு  இருக்கிற மக்களை பார்த்தவுடன் தள்ளி போயிடுச்சு. 

அப்படியே தூங்கிப் போனவன்  நடுவில் கண் முழித்த போது வண்டி உளுந்தூர்பேட்டை டோல்கேட் வந்திருந்துச்சு.அதிகாலை 2.00 மணி. 
அடுத்த முறை கண் முளிச்சப்ப காலை 5 மணி. வண்டி அப்ப நெய்வேலி தான் தாண்டியிருந்தது. டிரைவரும் வேகமாக தான் ஓட்டிட்டிருந்தாரு.
 "இவ்வளவு நேரம் ஆகிடுச்சு. வண்டி ஏன் இப்ப தான் இங்க வந்திருக்கு" னு பக்கத்தில் இருந்தவர் கிட்டே கேட்ட போது , "வழி தெரியாம வேற இடம் போனதினால கொஞ்சம் லேட் ஆகிடுச்சு" என்றார். "ஏம்பா பக்கத்துல இருக்கிறவங்க கொஞ்சம் வழி காட்ட கூடாதா" என்றேன். "அதெப்படி அவங்களும் தூங்கிட்டு இருந்திருப்பாங்களே" அப்படின்னு இன்னொருத்தர் கவுண்டர் கொடுத்தார்.

பஸ் கும்பகோணம் பேருந்து நிலையம் வந்தப்ப மணி 7.00  எவ்வளவு வேகமாக பஸ்ல எறினமோ அதை விட இரு மடங்கு வேகத்தில எல்லாரும் இறங்கி சிதற ஆரம்பித்தோம். வீட்டுக்கு செல்ல தனியார் பேருந்தில் ஏறிய போது கூட்டம் திமிறி கொண்டிருந்தது. காலேஜ்ல படிக்கிற (இல்ல வேலையில் இருக்கிற) இளைஞர்கள் "வடசேரி போறதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்"  னு கண்டக்டரிடம் கேட்டாங்க. அவர் 9.00 மணி ஆகிடும் னு சொன்னார் 

"டேய்  நாம பொங்கல் வைக்கிரதுக்கு போலடா.  பொங்கல் சாப்பிட தான் போய்கிட்டு இருக்கோம்." னு ஒரு இளைஞர் சொல்ல இன்னொரு இளைஞர்
 "வீட்ல அம்மா வேற போன் மேல போன் பண்றாங்க" என்று சொல்லி கொண்டிருந்தார்.

பேருந்து வேகமெடுத்து பஸ் ஸ்டாண்ட் காம்பௌண்டை தாண்டிய போது சென்னை பஸ்கள் நிக்கிற இடத்துலேருந்து "சென்னை சென்னை" னு குரல்  கொடுத்துட்டிருந்தார் கண்டக்டர். 

"இருங்கய்யா பொங்கல் கொண்டாடிட்டு வந்துடறோம்" அந்த இளைஞர்களுடன்  சேர்ந்து கொண்டு உற்சாகமாய் நானும் குரல் கொடுத்தேன்.


ஆர்.வி.சரவணன் 



படம் இணையத்திலிருந்து