வியாழன், நவம்பர் 28, 2013

புண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை-1







புண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை-1



நான் டூர் சென்று வந்த பின் இதை பற்றி எழுத கொஞ்சம் தயக்கம் இருந்தது. காரணம் 
குறைந்த நாட்களில் ( 4 நாட்களில் ) பல தலங்களுக்கு சென்று வந்ததால் நிதானிக்க நேரம் இருந்தாலும் சென்ற இடங்கள் பற்றி அதிகமாக  தகவல்கள் பெற முடியவில்லை. ஆகவே பயணம் பற்றிய பதிவை விட்டு விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். இணைய நண்பர்கள் நிசாமுதீன் மற்றும் துளசிதரன் எப்போது எழுத போறீங்க என்று ஆர்வமுடன் கேட்டு கொண்டிருக்க என் கூட டூர் வந்திருந்த நண்பர்களும் என்னப்பா இன்னும் எழுதலையா என்று கேட்டார்கள். (அவர்களுக்கு தங்கள் பயணம் எழுத்தில் எப்படி வருகிறது என்று பார்க்கும் ஆர்வம் இருக்கிறது) ஆகவே இதோ பயணம் பற்றிய தொடர் தொடங்குகிறது. ஒரே பதிவாக 
தந்தால் அதில் ஏதும் சுவாரசியம் இருக்காது என்பதால் நான்கு பதிவுகளாக தொடர்ந்து 
தரலாம் என  இருக்கிறேன். வாருங்கள் அதில் கொஞ்சம் பயணித்து வருவோம் 

நாங்கள் சென்ற ஸ்தலங்கள் 

பண்டரிபுரம்,
சனிசிக்னாபுர்,
ஷிர்டி,
நாசிக்,
கிருகம்பெஷ்வர் கோவில்,
மற்றும் மும்பை 

நான் மற்றும் எனது அலுவலக நண்பர்கள் வைத்யா ,முரளி , ஸ்ரீனிவாசன் சேர்த்து மொத்தம் நான்குபேர். இதில் நான் வைத்யா முரளி மூவருக்கும் இந்தி (நகி மாலும்) தெரியாது.இந்தி 
நன்கு பேச தெரிந்ததுடன் மட்டுமில்லாமல் வட இந்திய இடங்கள் பலவற்றை அறிந்தவர் ஸ்ரீனிவாசன் மட்டுமே. அவரே இந்த பயணத்துக்கு தலைமை ஏற்று வழி நடத்தி சென்றார்.



வைத்யா,முரளி, ஸ்ரீனிவாசன் 

நாங்கள் செப்டம்பர் 27 இரவு மும்பை மெயிலில் சென்ட்ரலில் இருந்து கிளம்பினோம். எங்களுக்கான சீட்களை ரயில்வே தனி தனியாக பிரித்துபோட்டிருந்தார்கள். அங்கிருந்தவர்களை மாற்றி விட்டு நாங்கள் அமர்ந்து கொண்டோம்.அமர்ந்த கொஞ்ச நேரத்திலேயே பார்த்தால் அன் ரிசர்வ்டு கம்பார்ட்மென்ட் போல் ஆகி விட்டது பாத்ரூம் செல்லும் வழியெங்கும் பயணிகள் வெள்ளம்.கொஞ்ச நேரம் பேசி விட்டு படுத்து கொண்டு விட்டோம். மலைகள் என்றல் எனக்கு எப்போதுமே ரொம்ப பிடிக்கும். ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது மலைகள் வரிசையாய் வர நான் க்ளிக் செய்த மலைகளில் ஒன்று 
இடம் அனேகமாக அதொனி ஸ்டேசன் அருகில் என்று நினைக்கிறேன்  



 அதோனி அருகே 

காலையில் மந்திராலயம் ரோடு ஸ்டேசனில் கொஞ்ச நேரம் வண்டி நின்றது இறங்கி நடை பயில்வதும் போட்டோ எடுத்து கொள்வதுமாக நேரம் கடந்தது 




மந்த்ராலயம் ரோடு ஸ்டேசன் 

முரளி வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த இட்லி மற்றும் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு தூங்கி வேடிக்கை பார்த்து வண்டியை  சோலாபூர் கொண்டு வந்து நாங்கள் சேர்ந்த போது(?) மணி ஆறரை.அலுவலகம் முடிந்து எப்படா கிளம்புவோம் என்றதொரு  மன நிலையில் அவசரமாக ஆனால் மிகுந்த ஆர்வத்துடன் வெளியில் வந்தோம்



ஏற்கனவே ஸ்ரீனிவாசன் உறவினர் ஏற்பாடு செய்து தயாராக இருந்த டாட்டா இண்டிகா காரில் ஏறி கிளம்பினோம். முதலில் நல்ல ஹோட்டலா பார்த்து அழைச்சிட்டு போங்க பசி எங்களை விரட்டுது என்று சொன்னோம் டிரைவருடன் வந்திருந்தவர் கார் ஓனர், சூப்பர் சாப்பாடு உங்களுக்கு கிடைக்க போகுது என்று அழைத்து போனார். 

நுழைந்த ஹோட்டலில் வட இந்திய உணவு வகைகளாக இருக்க நான் பயந்து போய் விழித்தேன்.(கண்ணா தமிழ் சாப்பாடு கொஞ்ச நாளைக்கு மறந்துடு என்றார் நண்பர் ) முதலில் வந்தது ரொட்டி போல் இருந்த ச்வீட் சப்பாத்தி அதை எல்லோரும் பகிர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க சப்பாத்தி சைடீஸ் சாதம் தயிர் என்று ஒவ்வொன்றாக  வர எல்லாமே சாப்பிட ருசியாக இருந்தது ஒரு வேளை பசி ருசி அறியல போலிருக்கு னு  நீங்க நினைச்சிருப்பீங்க ஆனால் இப்ப நினைச்சாலும் அந்த சாப்பாடு டேஸ்டா  தான் இருந்தது. மேலும் அந்த பயணத்தில் நாங்கள் சாப்பிட்ட இடங்களை விட இந்த சாப்பாடு தான் பெஸ்ட். (இதை நண்பர்கள் அனைவருமே சொன்னார்கள் ) வேர்கடலை மற்றும் மிளகாய் சேர்த்த பொடி என்று ஒன்று வைத்தார்கள். அதை சப்பாத்தியுடன் சேர்த்து கொண்டு ஒரு கை பார்த்தோம். ஒரு தட்டு முழுக்க தக்காளி வெள்ளரிக்காய் ஸ்லைஸ் கொண்டு வந்து வைத்தார்கள். சாப்பிட்டு முடித்த பின் மசாலா மோர் கொண்டு வந்து கொடுத்தார்கள் அது செரிமானத்திற்கு ஏற்றது என்று சொன்னதால் அதையும் ஒரு பிடி பிடித்தோம். கூடவே ஒரு தண்ணீர் பாட்டில் முழுக்க அதை கேட்டு வாங்கி கொண்டோம். (வழியில் சாப்பிட) 

எனக்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு என்னை ஏதேனும் அசத்தி விட்டால் உடனே சம்பந்தப்பட்டவரை சென்று பாராட்டி விட வேண்டும். முதலாளியிடம் சென்று சாப்பாட்டின் நிறைவை பற்றி நான் தமிழில் சொல்ல நண்பர் இந்தியில் மொழி பெயர்த்தார்.  கூடவே 
என்னை எழுத்தாளர் என்று அவர்களிடம் கொஞ்சம் எடுத்து விட்டார். அவர்களிடம் இருந்து விசிடிங் கார்டு பெற்று கொண்டோம் (ஹோட்டல் பெயர் என்ன என்று கேட்கிறீர்களா இந்த தொடரின் முடிவில் தருகிறேன் முகவரியுடன்) 

 அங்கிருந்து கிளம்பி, சோலாபூர் பெட் சீட்டுக்கு சிறந்த இடம் என்றதால் எல்லோரும் சென்று ஒரு பெரிய கடையில் பர்சேஸ் செய்தார்கள். வாங்க வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்த வனை அங்கிருந்த வகை வகையான பெட் சீட்கள்  என்னையும் வாங்க வைத்து விட்டது. வண்டிக்கு சாப்பாடு கொடுத்து விட்டு (அதாங்க டீசல்)  நாங்கள்  கிளம்பியது எட்டு மணிக்கு  
மகராஷ்டிரா மாநிலத்தில் சோலாப்பூரிலிருந்து 80 கிலோ மீட்டரில் இருக்கும் பண்டரிபுரம் 
வந்து சேர்ந்த போது மணி பத்து. கோதாவரி ஆற்று பாலத்தை (DOWN
BRIDGE) கடந்து கோவில் வந்து சேர்ந்தோம்.இரவில் சென்றதால் அந்த இயற்கை 
எழிலை ரசிக்க முடியவில்லை போட்டோ கூட எடுக்க முடியவில்லை.





பதினொரு மணி வரை கோவில் திறந்திருக்கும் என்று சொல்லியிருந்தாலும் எங்கள் நடை வேகமானது. கோவிலின் உள்ளே நுழையும் போது செல் மற்றும் கேமரா கொண்டு போக கூடாது என்று சொல்லி விட்டார்கள்.ஆகவே போட்டோ எடுக்க முடியவில்லை.அந்த இரவு வேளையிலும் கூட்டம் இருந்தது. இருந்தும் நெரிசல் ஏதும் இல்லாமல் சென்று தரிசித்து 
விட்டு நிதானமாக அந்த கோவிலை சுற்றி வந்தோம்.(பாண்டுரங்கன் பகவானையே காக்க வைத்த சிறப்புடையவர். அவருக்கான கோவில் இது )




பண்டரிபுரம் கோவில் முகப்பு. இது நான் எடுத்ததல்ல 
இணையத்திலிருந்து  எடுத்தது 


காரில் ஏறும் முன் டீ சாப்பிடலாம் 
என்று மற்றவர்கள் செல்ல நானும் முரளியும்  பால் சாப்பிடலாம் என்று எதிரில் இருந்த கடைகளுக்கு சென்றோம். பத்து கடைகளுக்கும் மேல் அங்கே இருந்தது. அனைத்திலும் பெரிய எண்ணைசட்டி வைத்து பால் காய்ச்சி கொண்டிருந்தார்கள். கடை மூட போகும் நேரம் வேறு. எந்த கடையில் நன்றாக இருக்கும் என்று நாங்கள் யோசித்தவாறே செல்ல, டீ கடை காரரே நாலாவது கடைக்கு போங்க நல்லாருக்கும் என்று சொன்னதாக வைத்யா வந்து சொன்னார்.நிஜமாகவே நன்றக இருந்தது. பதினொரு மணிக்கு வண்டி ஏறியது தான் எனக்கு தெரியும். நானே வழியில் ரசிக்க வேண்டும் என்று நினைத்தாலும் முடியாமல் நன்றாக தூங்கி விட்டோம் டிரைவரை தவிர. அதிகாலை கண் விழிக்கும் போது நான்கு மணி. சனிசிக்னாபூர் வந்து விட்டது. அந்த அதிகாலையில் ஒரு ஆச்சரியத்தை கண்டோம் 

அது அடுத்த பதிவில் 



ஆர்.வி.சரவணன் 

ஞாயிறு, நவம்பர் 17, 2013

பல நேரங்களில் சில மனிதர்கள் -2







பல நேரங்களில் சில மனிதர்கள் -2


வாழ்க்கையில் நான் சந்தித்த மனிதர்களை பற்றி 
இங்கே கொஞ்சம் சிந்திக்கிறேன்.


கோ எஜுகேசன் பள்ளியில் ஆறாவது படித்து கொண்டிருந்த நேரம் அது.மாதம் ஒரு மாணவர் கிளாஸ் லீடர் ஆக நியமிக்க படுவார்.என் வகுப்பில் நானும் ஒரு மாதம் லீடரானேன். கிளாஸ் லீடர் ஆனவுடன் எல்லோரும் எனை பயத்துடன் பார்த்தது எனக்கு  ஆச்சரியமாக கூட இருந்தது. 


அப்போதெல்லாம் புது வருடம் வரும் போது மாணவ மாணவிகள் 
தங்களுக்கு கிடைக்கும் காலெண்டரை வகுப்புக்கு கொண்டு வருவார்கள். வகுப்பில் எங்கும் அதை மாட்டி வைப்போம். அவை அந்த வருடம் பள்ளி முடிந்து டீ பார்ட்டி நடக்கும் வரை இருக்கும் ( மாணவ மாணவிகள் பள்ளியின் கடைசி நாள் அன்று தங்கள் பாக்கெட் மணியில் வகுப்பு அசிரியர்களுக்கும், தலைமையாசிரியருக்கும் நன்றி கூறும்விழா அது.ஸ்வீட் காரம் காபி புது டிரஸ் என்று ஒரே தடபுடலாக இருக்கும். (அந்த நாளுக்காக அந்த ஆண்டு ஆரம்பிக்கும் போதே காத்திருக்க தொடங்கி விடுவோம் )

நான் லீடராக பங்கேற்ற மாதத்தில் தான்  மாணவர்கள் காலெண்டர் 
கொண்டு வந்து வகுப்பறையில் மாட்டி வைத்தார்கள். ஒரு மாணவன் கொண்டு வந்த காலெண்டர் எல்லோரையும் கவர்ந்தது. சுவரில் மாட்டலாம் என்று நாங்கள் முயற்சித்த போது வகுப்பாசிரியர் பார்த்து 
விட்டு, "இது நல்லாருக்கு நான் என் வீட்டுக்கு  கொண்டு போறேன்" 
என்று கூறி தன் மேஜை டிராயரில் வைத்து கொண்டு விட்டார். 
வகுப்பறையில் இருந்த மாணவ மாணவியர்கள் அனைவரும் உற்சாகம் வடிந்து போனவர்களாக ஆனோம். 

காலெண்டர் கொண்டு வந்தவன் "நான் இதை என் வீட்ல கூட மாட்டாமல் இங்க கொண்டு வந்தேன்.இப்படி வீட்டுக்கு எடுத்துட்டு போறேன்னு சொல்லிட்டாரே" என்றான் வருத்தமாய்.எனக்கும் இது விசயத்தில் கோபம் வந்தது மாணவ மாணவிகள் எவ்வளவு ஆர்வமுடன் இருந்தார்கள் என்பது அவருக்கும் தெரியும். இருந்தும் தன் வீட்டுக்கு என்று அவர் உரிமை கொண்டாடியது எனக்கு பிடிக்கவில்லை.இதை எப்படி  ஆசிரியரிடம் சொல்வது என்று நான் யோசிக்கையில் ஒரு மாணவன் சொன்னான் 

"டேய் உன் கிட்டே தான் இப்ப விஷயமே இருக்கு. நீ தான் எங்க லீடர் நீ 
பர்மிசன் கொடு.  நாங்க எடுத்து மாட்டிடறோம். ஆசிரியர் வந்தால் பசங்க எல்லாரும் ஆசைப்பட்டார்கள் அதான் மாட்ட சொல்லிட்டேன்னு சொல்லிடு. அவரும் மாட்டினதை எப்படி கழட்ட சொல்றது னு விட்டுடுவார்" என்று சொல்ல மற்றவர்களும் என்னை கெஞ்சவே நானும் ஓகே சொல்லி விட்டேன். 

ஆசிரியர்  பார்த்து விட்டு என்னை கேட்டார்.  நான் "பசங்க ஆசைபட்டாங்க அதான்" என்றேன். மாணவ மாணவிகளும்  தலையசைத்தார்கள். ஆசிரியர் அவர்களை அதற்காக திட்டவில்லை மாறாக "எப்படி என் டிராயரில் வைத்ததை நீ எடுத்து மாட்ட சொல்லலாம்"  என்று என்னை கோபமாய் கேட்டார். நான் திணறினேன்.  அடுத்து அவர் எடுத்த ஆக்சன் என்ன தெரியுமா. (என் பதவி முடிய பத்து நாட்களே 
இருந்த நிலையிலும்) என்னை உடனடியாக லீடர் பதவியிலிருந்து தூக்கி விட்டார். வேறொரு மாணவரை லீடராக்கினார். எல்லோரும் என்னை பரிதபமாய் பார்த்தார்கள்.

 அவர் சென்ற பிறகு எல்லோரும் என்னை சூழ்ந்து கொண்டு  "எங்க 
ஆசைக்கு உன்னை பலிகடா ஆக்கிட்டோம் சாரிடா" என்று ஆறுதல் சொன்னார்கள்."பரவாயில்லை விடுங்க. இதில் என் தப்பும் இருக்கிறது உங்களின் கோரிக்கையை அவர் கவனத்துக்கு கொண்டு சென்று அவரது 
அனுமதியுடன் தான் நான் அதை மாட்டியிருக்க வேண்டும் நானும் 
இப்படி செய்திருப்பது கூடாது.இந்த தண்டனை எனக்கு தேவை தான் 
இருந்தும் உங்கள் ஆசையை நிறைவேற்றிட்டேன் அது போதும் " என்றேன் 

FINAL PUNCH

இப்போது இந்த சம்பவத்தை நினைத்து பார்க்கையில், ஆசிரியர் என்பவர் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட கூடாது என்று கற்பிப்பவர் மாணவர்களின் விருப்பத்திற்கு மாறாக தன் வீட்டுக்கு அவர்கள் பொருளை எடுத்து செல்ல ஆசைப்பட்டது தப்பாயிற்றே. என்று தோன்றுகிறது. 

மேலும்லீடர் என்பவர் ஆசிரியருக்கும் மாணவனுக்கும் பாலமாய் 
இருப்பவர். ஆசிரியர் தேவைகளை மட்டும் நிறைவேற்றுபவர் எப்படி மாணவர்களின் தலைவனாய் இருக்க முடியும். அந்த வகையில் 
அப்போது லீடர் பதவியில் இருந்து தூக்கப்பட்டது எனக்கு தலை 
குனிவாகவே இருந்தாலும், இப்போது   (அவரது கை பாவையாக
இல்லாமல்இருந்ததை) பெருமையாகவே நினைக்கிறேன் 


ஆர்.வி.சரவணன்


வெள்ளி, நவம்பர் 15, 2013

பாண்டிய நாடு





பாண்டிய நாடு 


ஒரு படத்தை நல்லாருக்கும் என்று எதிர்பார்த்து செல்வதை விட எதிர்பாராமல் போய்  அது நன்றாக இருந்து விட்டால் கிடைக்கும் திருப்தியே தனி தான். படம் பற்றி  நல்ல ரிசல்ட் வரவே உடனே படையெடுத்தேன் பாண்டிய நாட்டுக்கு(தியேட்டருக்கு). படத்தை பற்றி ஒரு சில வரிகளில் சொல்லி விடலாம்.அது இப் பதிவின் முடிவில் பார்ப்போம்

ஒரு நகரை  ஆட்டி படைக்கும் தாதா, ஹீரோவின் அண்ணனை கொன்று 
விட ஹீரோவும் (அவர் அப்பாவும் ) சமயம் பார்த்து பழிக்கு  பழி வாங்கும் 
கதை தான். ஆனால் நமை ஈர்த்து சீட்டில் இழுத்து பிடித்து உட்கார வைத்திருப்பதில் தெரிகிறது இயக்குனரின் சாமர்த்தியம் .ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த இடத்திலும் இயக்குனர் மசாலாத்தனமான 
காட்சிகள் எதிலும் சிக்காமல் எந்த காம்ப்ரமைஸும்  செய்து கொள்ளாமல் படத்தின் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை நூல் பிடித்தார் போன்று படத்தை தந்திருக்கிறார்.

உதாரணத்திற்கு கட்டிங் போடலாமா என்று விஷால் கேட்டு சூரி சரி என்று சொல்ல அடுத்த காட்சி  சரக்கு அடிப்பதை தான் காட்ட போகிறார்கள் என்று நமக்கு தோன்றும் யோசனையை தூக்கி அடிக்கும் விதம்  இயக்குனர் தரும் காட்சி ஒரு சாம்பிள் .

வில்லனின் குரூப் இரண்டு அணியாக அடித்து கொண்டு நிற்க. இவர் தான் வில்லன்  என்று நம் நினைப்பை தகர்த்து வேறொருவர் வில்லனாவது 
மட்டுமல்லாமல் அவர் தலைமையேற்றவுடன் மாறும் அவரது கெட்டப் 
அட என்று ஆச்சரியப்படும் இடம்.

விஷால் இயக்குனரின் நடிகனாக இதில் களமிறங்கி இருக்கிறார் . திக்கி பேசுவது,  (இடைவேளைக்கு பின் அவ்வளவாக இல்லையே ) சண்டையை கண்டு பயந்து பின் வாங்குவது, தான் காதலிக்கும்  பெண்ணை சந்தோசமாய் சுற்றி வருவது,சண்டை கட்சிகளில் கூட வழக்கமான முக பாவங்கள் வாய்ஸ் தவிர்த்து  என்று இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார் அதிலும் கிளைமாக்ஸ் சில் வில்லனின் ஆட்கள் அவரை நெருங்கும் போது குரோதம் வெளிப்பட ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள் வெரி குட் விசால் என்று சொல்ல வைக்கிறார் 

லட்சுமி மேனன் இதில்  டீச்சராக வருகிறார். விஷாலை தன் 
குறுகுறுவென்ற பார்வையால் அளவிடுகிறார்.  அவரது அம்மா 
விஷாலை அண்ணன் என்று சொல்ல விஷால் மிரள அதை குறும்பு பார்வையால் ரசிக்கும் இடம் அவரை போலவே அழகு 

சூரி அனாவசிய வசனங்கள் ஏதுமில்லாது அவசிய வசனங்களால் நம்மை புன்னகைக்க வைத்திருக்கிறார் 

வில்லன்  ஷரத் லோஹிதஸ்வா படம் பார்க்கும் போது எதிரில் வந்தால் 
அவர் சட்டையை பிடித்து விடலாமா எனும் அளவுக்கு அவர் பாத்திரமும் 
அவர் நடிப்பும் இருக்கிறது. என்னா  ஒரு வில்லத்தனம்





பாரதி ராஜா இதில் விஷாலின் அப்பாவாக நடுத்தர வர்க்கத்தின்  குடும்ப தலைவராக கதா பாத்திரம். அதை அவரது அந்த ட்ரேட் மார்க் குரலாலும் தன் இயல்பான நடிப்பாலும் சிறப்பாக்கியிருக்கிறார். உனக்கு குழந்தை பிறக்க போறதை நினைச்சு சந்தோசபடறதா இல்லே அடி வாங்கிட்டு வந்திருக்கிற உன்னை நினைச்சு வருத்தப்படறதா என்ற அங்கலாய்ப்பிலும் பிரேத பரிசோதனை வேண்டும் என்று  மருத்துவமனையில் அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் காட்சியிலும்,விஷால் கையை பிடித்து கொண்டு நெகிழ்ந்து , நான்  இப்ப சந்தோசமா இருக்கேன் என்று வார்த்தைகளாலும் நடிப்பாலும் அதை வெளிபடுத்துவதிலும் சபாஷ் சொல்ல வைக்கிறார் 

விக்ராந்த் விஷாலின் நண்பனாக வருகிறார் ஒரு பைட் ஒரு பாட்டு  கூட அவருக்கு உண்டு என்ற அளவில் அவருக்கு கிடைத்திருப்பது நல்ல ரோல் 

 
இமான் இசையில் டையரெ , ஒத்தகடை மச்சான், பை பை பாடல்களை 
ரசிக்க முடிகிறது. அந்த டப்பாங்குத்து பாடல் கதையின் சீரான போக்கிற்கு 
நடுவே  திணிக்கப்பட்ட ஒன்று .( பாடலும் டான்சும் தாளம் போட 
வைக்கிறது) பாடல் முடிந்ததும் கதையை எங்கே விட்டோம் என்று 
நம்மை யோசிக்க வைத்து விடுகிறது  

பொண்ணை பிக்கப் பண்றதுக்கு முன்னாடியே ட்ராப்  பண்ற பாக்கியம் யாருக்கு கிடைக்கும் என்பது போன்ற வசனங்கள் பல இடங்களில் 

இயல்பாக பொருந்துகிறது.

 நெருக்கமான வீடுகளுக்கு இடையே சந்தில் புகுந்து புறப்பட்டிருக்கும் கேமரா,கிளைமாக்ஸ் காட்சி மற்றும் அந்த பஸ் ஸ்டான்ட் சண்டை காட்சியில் மதி மயக்குகிறது ஒளிப்பதிவு. 

வில்லன் குரூப் பிடம் சூரி வந்து செல் போனை சுண்டல் கொடுப்பது 
போல் கொடுத்து செல்லும் இடம் கண்டிப்பாக லாஜிக் இடிக்க வைக்கும் 
ஒன்று வில்லன் குரூப் அதை நம்பி பயன்படுத்துவது கமிசனர் மற்றும் அமைச்சரையே கையில் வைத்திருப்பவர்கள் விஷால் குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பது என்னை நீங்களும் பின் தொடர்ந்து வராதீங்க என்று சொல்லும் லட்சமி மேனன் செல் போன் கடையில் வந்து இழைவது 
( அந்த காட்சியை விஷால் வீட்டில் நடப்பதாக வைத்திருக்கலாம்) 
என்றெல்லாம் குற்றம் கண்டுபிடிக்க நம்மை யோசிக்க  விடாமல் 
இயல்பான திரைக்கதை மற்றும், கதாபாத்திரங்கள்,வசனங்கள் என்று நேர்த்தியாக சொன்னதன் மூலம் இயக்குனர் சுசீந்திரன் 
உருவாக்கியிருக்கும் இது 

செழிப்பான பாண்டிய நாடு

FINAL PUNCH

வில்லனின் அடியாள் பரணி, விஷாலை காலால் மிதித்து துவம்சம் 
செய்யும் போது விஷால் பக்கத்தில் கிடக்கும் பாட்டிலை கேமரா காட்டும்.
 எப்படியும் அதை எடுத்து தான் விஷால் அடிக்க போகிறார் என்று நமக்கு தெரிந்து விடுகிறது. இருந்தும் அதற்கு முன்பே நாமே எடுத்து அடித்து விடலாமா என்ற பரபரப்பை படம் பார்க்கும் நமக்குள் ஏற்படுத்திய விதத்தில் இந்த படம் வெற்றி பெறுகிறது

ஆர்.வி.சரவணன் 

சனி, நவம்பர் 02, 2013

கனவு மெய்ப்பட வேண்டும்







கனவு மெய்ப்பட வேண்டும்

எனது கல்லூரி காலங்களில் கதை கவிதைகள் நிறைய எழுதுவேன். படிப்பை விட சினிமா கதை புத்தகங்கள் தான் வெகு இஷ்டம். படிப்பில் கவனம் வெகு குறைவு ஏனெனில் நாம தான் சினிமாவில் சேர்ந்து டைரக்டர் ஆகபோறோமே அப்புறம் எதுக்கு படிப்புன்னு தான். அந்த
அளவுக்கு ஓவர் கான்பிடன்ஸ் இருந்துச்சு. (இப்ப நினைச்சா ஆச்சரியமா இருக்கு )

அந்த காலகட்டத்தில் எனது நண்பர்கள்  தெருவில் வருடா வருடம் நாடகம் போடுவார்கள்.அந்த வருடம் என்னிடம் வந்து "நீ நாடகத்தை திருத்தி எழுதி தா" என்று சொல்லி ஒரு ஸ்க்ரிப்டை கொடுத்தார்கள். நானும் உற்சாகமாய் வாங்கி படித்தேன். 13 காட்சிகளில் நாடகம் கொஞ்சம் சாதரணமாக தான் இருந்தது . நான் "என்னப்பா இப்படிஎழுதியிருக்கீங்க" என்றேன் அவர்கள் "அதுக்கு தான் உன்கிட்டே கொடுத்திருக்கோம்"என்றனர். நான்  வேறு ஒரு கதை எழுதி தருகிறேன் என்றேன் "நாடகம் பெயர் போட்டு போஸ்டர் எல்லாம் ஒட்டியாச்சு மாற்ற முடியாது "என்றனர்.

சரி என்று அவர்கள் விளம்பரம் செய்த பெரிய வீடு என்ற அந்த தலைப்பிலேயே நாடகத்தை நான் உருவாக்கினேன். எந்த நேரத்தில் தெரியுமா. விடிகாலை நான்கு மணிக்கு. படிப்பதற்காக எழுந்த நேரத்தில், 40 காட்சிகளில் நாடகத்தை மூன்று நாட்களில் எழுதி முடித்து கொடுத்தேன். 

"ஏற்கெனவே போஸ்டரில் கதை வசனம் என்று வேறு ஒருவனின் பெயர் போட்டாயிற்று. அதனால் இயக்கம் என்ற இடத்தில் உன் பெயரை போடுகிறோம் அட்ஜஸ்ட் பண்ணிக்க" என்றனர். சரி என்று சொல்லி விட்டேன். போஸ்டர்களில் என் பெயர் பார்த்து எனக்கு தலை கால் புரியவில்லை. ஒத்திகை ஆரம்பமானது. கதைப்படி கிராமம் தான் கதை நிகழுமிடம் ஹீரோ வேட்டி சட்டையில் தான் வர வேண்டும் என்றேன் ஹீரோ முடியாது பேன்ட் ஷர்ட் தான் போட்டு கொண்டு வருவேன் என்று அடம் பிடித்தான். இப்படி சொல்லி கொண்டே போகலாம் அப்போது நடந்த கலாட்டாக்களை.




ஒரு வழியாக நாடகம் அரங்கேறியது. கதாநாயகி , அவரது தோழி யாக நண்பர்களே 
பெண் வேடமிட்டு நடித்தனர். நானும் ஒரு காட்சியில் கதாநாயகியை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையாக வந்தேன் (நடிக்கும் ஆசை யாரை விட்டுச்சு ) மேலே உள்ள படம் தான் நான் வரும் காட்சி. நாடகத்திற்கு கை தட்டல் நிறைய கிடைத்தது .ஒரு ஜனரஞ்சகமான சிம்பிள் நாடகம் தான் இருந்தும் ஆடியன்ஸ் காட்டிய ரெஸ்பான்ஸ் பார்த்து எனக்கே 
ஆச்சரியம்  

நாடகம் முடிந்தவுடன், எல்லோருக்கும் விழா குழுவினர் நன்றி சொன்னார்கள் என் பெயரை சொல்லாமல் விட்டார்கள். அவர்களாகவே, "சாரி லிஸ்டில் பெயர் இல்லாததால் சொல்ல மறந்துட்டோம்" என்றார்கள். நான் கொஞ்சம் அப்செட் ஆகினாலும் அதை வெளியில் காட்டாமல், மேடையை விட்டு இறங்கினேன். அப்போது அந்த நாடகத்திற்கு இசையமைத்த இசை அமைப்பாளர் என்னை பார்த்தவுடன் (அவர் நாடகங்கள் பலவற்றுக்கு இசையமைத்தவர்) என்னிடம் வந்து  "சாதாரணமாக ஒரு நாடகம் 20 25 காட்சி அமைப்புகளோடு தான் இருக்கும். ஆனால் நீங்கள் புது ஆள் 40 காட்சிகளில் கதையை சீன் பை சீன் ஆக சுவாரசியம் குறையாமல் எழுதியுள்ளீர்கள் நாடகம் நல்லா இருந்துச்சு.உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது"என்றார். இந்த ஒரு பாராட்டு போதுமே என்ற சந்தோசத்தோடு வீடு வந்தேன்.

வீட்டில் ஏக ரகளை. படிப்பை விட்டுட்டு நாடகம் எப்படி போடலாம் என்று சண்டையிட்டார்கள். நான் எதிர்த்து பேச போக , வீட்டை விட்டு வெளியில் போ, நீ உருப்படாமல் தான் போக போறே என்ற வார்த்தைகளால் என் மனசு ரொம்பவே கஷ்டமாகிபோனது.(இப்போது நினைத்து பார்க்கும் போது அவர்கள் சொல்வதில் இருந்த நியாயம் புரிகிறது) 

வீட்டில் நான்  சினிமா டிராமா என்று அலைந்து உருப்படாமல் தான் போக போறேன் என்று தீர்மானத்திற்கு வந்து விடவே, நான் அந்த பாதையிலிருந்து விலகி அவர்கள் ஆசைப்பட்டது போல் வேலையில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி வந்து விட்டேன். என் குடும்பத்தில் அனைவருக்கும் இதில் சந்தோஷம்.

ஆனால் எனக்கு என் திறமைகளை கண்டு வெளி உலகம் பாராட்டி உற்சாகப்படுத்தியது போல் வீட்டில் யாரும் என்னை அப்படி ஊக்கப்படுத்தவில்லையே என்ற ஆதங்கம்  இன்று வரை இருந்து கொண்டு தான் இருக்கிறது

FINAL PUNCH 

இந்த பதிவு நான் கல்லூரி காலங்களில்.... என்ற தலைப்பில்,
இணையம் வந்த புதிதில் எழுதியது. இயக்குனர் ஆக வேண்டும் என்ற என் கனவு  
நிறைவேறாத ஒன்றாகி விட்டதே என்ற ஏக்கத்துடன் 2010 ம் வருடம் எழுதிய பதிவு 
இது.ஆனால் இப்ப எடுத்து படிக்கிறப்ப கனவு நிஜமாகி விட கூடிய வாய்ப்பு இருப்பது 
போல் ஒரு நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது.இதற்கு இணைய மேடையும், 
நண்பர்களின் ஊக்கமும் கூட ஒரு காரணம். அனைவருக்கும் நன்றி.

தித்திக்கும் இந்த தீபாவளி நன்னாள் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் என்றென்றும் சந்தோஷம் நிறைந்திருக்க 
செய்யட்டும் 

படம் : எங்கள் வீட்டு வாசலில் வரைந்த கோலம் எனது கிளிக்கில்  


ஆர்.வி.சரவணன் 

ஞாயிறு, அக்டோபர் 27, 2013

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கழுகு (ஒரு) பார்வை





சூப்பர் ஸ்டார் ரஜினியின் கழுகு (ஒரு) பார்வை 


டிவியில் ஒரு நாள் இரவு கழுகு படம் ( எந்த விளம்பரமுமின்றி ). இந்த படம் இது வரை பார்த்ததில்லை. பார்க்காம இருந்த படங்களை டைம் கிடைக்கும் போது பார்ப்பதுண்டு.அதனால் படம் பார்க்க அமர்ந்து விட்டேன். பார்த்தவுடன் எழுதிடணும் னு தோணுச்சு எழுதிட்டேன். ஆனால் பாருங்க பழைய படத்தை பத்தி இப்ப பதிவு தேவையா என்று எழுதியதை அப்படியே ஓரமா வச்சிட்டேன். இப்ப எடுத்து பார்க்கிறப்ப நல்லாருக்கிற மாதிரி தோணுச்சு உங்களுக்கு எப்படி தோணுது சொல்லுங்களேன் 

 நரபலி கொடுக்கும் சாமியார் ஒருவரை அவரது கும்பலை சூப்பர் ஸ்டார் ரஜினி பொறி வைத்து  பிடித்து போலீசில் ஒப்படைக்கிறார்  என்பதே கதை. தலைவர் ரஜினி இதில் ஜாலி, காதல் ,ஹீரோயிசம், என்று அனைத்திலும் பின்னி எடுக்கிறார் என்பதை சொல்வது சூரியனுக்கு டார்ச் லைட் அடிக்கிற மாதிரி தான் (இத எங்கியோ படிச்சேன்) 

ரஜினிக்கு ஜோடி ரதி. இருவரின் ஆரம்பகட்ட காதல் மோதல் காட்சிகள் நல்ல கலகலப்பு.வி.கே.ராமசாமியிடம்  ரஜினி  முதல் நாள் ஒரு லவ் லெட்டர் கொடுத்து அவரது
பெண்ணிடம் கொடுக்க சொல்வதும் , மறுநாள் வேறொரு பெண்ணுக்கு அது என்று திரும்ப வாங்கி கொள்வதும் கலாட்டா.




இந்த படத்தில் கவனிக்க வேண்டிய ஒரு டயலாக் என்ன தெரியுமா 
போனில் ராமசாமி" உன் பேர் என்ன" என்று கேட்கும் போது ரஜினி  "கமல்ஹாசன்" என்று சொல்ல பக்கத்தில் இருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் "என்ன அவர் பேர் சொல்றே" என்று சீரியசாக  "கமல் என் பிரெண்ட் தான் நான் சொல்லிக்கிறேன் விடு" என்று ரஜினி கூலாக  சொல்ல, "இவர் பெரிய ரஜினிகாந்த்" என்று ஒய்.ஜி.மகேந்திரன் பதில் கொடுப்பார் 

மூட நம்பிக்கை யுடன்  சாமியார் தான் தெய்வம் என்று  இருக்கும் தேங்காய் சீனிவாசன் ரஜினிக்கு அண்ணனாக வருகிறார். வனிதா சுட்டி பெண்ணாய் வந்து ரஜினி ரதிக்கு உதவி செய்கிறார். அவர் நரபலி கொடுக்கப்பட்ட மறுநாள் போலிஸ் வந்து விசாரிக்கும் போது அப்படி ஒரு பெண்ணே ஊரில் கிடையாது எனும் போது கதையில் திகில் ஆரம்பிக்கிறது 

சங்கிலி முருகன் தான் சாமியார். நரபலி கொடுக்கும் காட்சியில் முகமூடி அணிந்து 
வரும் அவர் கண்கள் கொஞ்சம் திகிலை கிள்ளப்புகிறது. வனிதா நரபலி
கொடுக்கப்படும்காட்சி திடுக்கிட வைத்தாலும் அப்போது  சங்கிலி முருகன் மேல் நமக்கு வரும் பயத்தை கடைசி வரை இன்னும் அதிகபடுத்தி தக்க வைத்திருக்கலாம் 

சங்கிலி முருகனுக்கு உதவியாளராக சுருளிராஜன் வருவது சீரியஸ் குறைக்க உதவும் ரிலாக்ஸ் என்றாலும்,  டெரர் சங்கிலி முருகனுக்கு ஏற்றவாறு வில்லத்தனம் கொண்ட இன்னொரு கேரக்டரையும்  போட்டிருக்கலாம்.  ஏனெனில் சாமியார் அநியாயங்களை கண்டுபிடித்து எழுத வந்திருக்கும் பத்திரிகையாளர் சோ வை அவர்  மிரட்டி பணிய வைப்பது காமெடிக்கு ஓகே ஆனால் த்ரில்லர் கதையின் டெம்போ வை கொஞ்சம் குறைய வைக்கிறது. ரதியையும்  குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு விட்டு வந்து ரஜினி வில்லனை தேடுவது போலில்லாமல் ரதியும், ரஜினியின் அண்ணன் மகளும்  சங்கிலி முருகனிடம் சிக்கி கொண்டு விட அவர்கள் இருக்கிறார்களா பலியாகி விட்டார்களா என்று தெரியாமல் ரஜினி ஆக்ரோசமாய்  தேடுவது போல் அமைத்திருந்தால் இன்னும் நகம் கடிக்கும் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் 

நரபலியை பார்த்ததினால் ரஜினி அன் கோவை அவர்கள் துரத்த அவர்கள் பஸ்சுடன்  தப்பிக்கும் விதம் ரசிக்க வைக்கிறது. படத்தின் கடைசியில் பஸ்ஸை அவர்கள் தீப்பந்தத்துடன் துரத்த ரஜினி அவர்களுக்குள் பஸ் சை செலுத்தி மீண்டு வரும் காட்சி நன்றாக இருக்கிறது.

இளையராஜாவின் இசையில் பாடல்கள் ஒரு பூவனத்திலே,பொன்னோவியம்,
 தேன் என்றாலும் தேனில் ஊறிய பலா போன்றது காதல் என்னும் கோயில் பாடல். ஒரு அருமையான  காதல் மேலோடி என்றே சொல்லலாம்  இந்த பாடல் ஏற்கனவே நான் கேட்டிருந்தாலும் இந்த படத்தோடு பார்க்கையில் எனக்கு இப்போது இந்த பாடல் favourite   
சாங் ஆகி விட்டது அடிக்கடி ஹம்மிங் செய்து கொண்டிருக்கிறேன்.

இந்த படத்தில் வரும் பஸ் வடிவமைப்பு ரொம்ப நன்றாக இருக்கிறது உள்ளேயே பாத்ரூம் கிச்சன் படுக்கை  அறை  பைக்  வைக்க  இடம்  என்று சூப்பர்  ஆக  இருக்கிறது இது  இப்போது
அதிசயமல்ல  தான் ஆனால்  1981 ஆம் வருடம் அது புதுமை தானே. எது எப்படி இருப்பினும் தலைவர் ரஜினி படமாதலால் அவரது ஆடல் பாடல் ஸ்டைல் மற்றும் சண்டைகளுடன் 
நம்மை ஈர்த்து விடுகிறது 


FINAL PUNCH 

மூட நம்பிக்கையை  தகர்க்கும்  வண்ணம்  ஒரு படம்  அப்போது மட்டுமல்ல இப்போதும் கூட தேவை தான் என்பதை இந்த படம் உணர்த்தினாலும்  இது அந்த காலத்திலேயே வந்திருப்பது தான் மிகுந்த ஆச்சரியமான ஒன்று .


ஆர்.வி.சரவணன் 

வியாழன், அக்டோபர் 24, 2013

முக நூல் கிறுக்கல்கள்






உழைப்பும்  உனை கண்டு  மரியாதை செய்யும்  


முக நூல் கிறுக்கல்கள் 


இன்று ஷேர் ஆட்டோவில் டிரைவர் சீட்டில் அவருடன் அருகில் அமர்ந்து செல்லும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு ஜலதோஷம் என்பதால் தும்மல் வர மூன்று முறை தும்மி விட்டேன். டிரைவருக்கு இதனால் ஏதும் தொந்தரவாக இருக்க போகிறது என்று சாரி கேட்க நினைத்தேன். ஆனால் பாருங்கள் 
அவர் வாயிலிருந்து வெளிப்பட்ட புகையிலை வாசம் என் முகத்தில் வந்தறைந்ததோடு மட்டுமில்லாமல் சாரி கேட்கும் என் எண்ணத்தையும் விரட்டியடித்து விட்டது 

******

மும்பையில் நானும் நண்பரும் ஆட்டோவில் சென்ற போது ஆட்டோகாரர் இந்தியில் நாங்கள் செல்லும் இடம் பற்றி கேட்டார். எங்களுக்கு பதில் சொல்ல தெரியவில்லை அவர் மேலும் மேலும் கேட்கவே, நான் "இந்தி நகி மாலும்" என்றேன். ஆட்டோ காரர் என்னை திரும்பி பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார். அந்த சிரிப்பில் இந்தி தெரியாது என்பதை மட்டும் ஹிந்தி ல கத்துகிட்ட நீ, ஏன் இந்தியை கத்துக்க முயற்சி செய்யலை என்று அர்த்தம் இருப்பதாக தோன்றியது எனக்கு 


******

இன்னிக்கு காலையில ரோட்டில் நான் நடந்து வரும் போது எதற்கோ திரும்பியதால் எதிரில் வந்த பைக் என் மீது மோதுவது போல் வந்து நின்றது. நான் திரும்பி பார்த்தவாறு வந்தது தவறு என்பதால் சாரி பாஸ் என்றேன். அவரும் ஓகே என்று சிரித்த படியே சென்று விட்டார். யோசிச்சா தான் புரியுது. ஹாரன் கொடுக்காமல் வந்தது அவர் தப்பு .அதனால் அவர் தான் 
சாரி கேட்கணும் என்பது. இதுல பைனல் டச் என்னன்னா பைக்கின் முன் 
வீல் என் கால் நகத்தில் ஏறியதால் நகம் பாதி பிய்ந்து வலிக்க ஆரம்பிச்சுடுச்சு. (திரும்பி பார்த்தது குத்தமாய்யா)


******

நெடுஞ்சாலையில் இரவில் மழை நேரத்தில் பேருந்து டயர் பஞ்சர் ஆகி நின்று விட, வேகமாய் பறந்து செல்லும் வாகனங்களின் ஓட்டுனர்களில் எவரேனும் ஒருவர் நின்று விசாரித்து சென்றாராயின்,(முகம் காட்டா விட்டாலும்) மனித நேயத்தை காட்டி விட்டு செல்லும் நீயும் என் தோழனே

******

இரவு வீட்டுக்கு சென்று நான் டிவி யை ஆன் செய்த நேரம்,முக்கிய 
தமிழ் சானல்கள் அனைத்திலும் விளம்பரம் தான் ஓடிகொண்டிருந்தது.
விளம்பரத்தை நம்மால் ஆப் செய்ய முடியாது என்பதால்  டிவி யை ஆப் செய்து விட்டேன்

******

பொங்கலுக்காக ஊருக்கு கிளம்பி வருகையில் வழியனுப்ப வந்த நண்பர் டிரைவர் க்கு பின் சீட் உட்காராதீங்க தூக்கம் வருவதற்கு பதில் டிரைவர் டென்சன் நமக்கு வரும் என்றார்.இருந்தும் நான் ஏறிய பேருந்தில் டிரைவர்க்கு பின் சீட் தான் கிடைத்தது. டிரைவர் ஒரு முறை குளிருகிறது என்று மெதுவாக பேருந்தை ஓட்டிகொண்டே ஸ்வெட்டர் எடுத்து அணிந்து கொண்டார். நான் பயத்தை அணிந்து கொண்டேன்.

******

ஒருவருக்கு நாம் போன் செய்யும் போது அவர் அட்டென்ட் செய்யவில்லை என்றால் அவர் பிஸியாக இருக்கிறார் என்று அர்த்தம்.ஆனால் நம் பேர் பார்த்து கூட அவர் நம்மை அழைக்கவில்லை என்றால் நம்மை தவிர்க்கிறார் என்று தானே அர்த்தம்

******

சகிப்பு தன்மை என்பது....

ஹோட்டலில் அடுத்து சாப்பிட போகும் நபரை 
பக்கத்திலேயே நிற்க வைத்து கொண்டு 
அவசரமாய் அள்ளி உண்பது



******

நான் ஒவ்வொரு வாரமும் வெள்ளி இரவு கும்பகோணம் செல்ல ரயில் 
ஏறும் போது, ஊருக்கு செல்லும் ஆர்வத்தில் சந்தோசமாய் "சீக்கிரம் வா" என்று ரயிலை நான் வேகமாய் இழுத்து செல்கிறேன். 

ஞாயிறு இரவு ஊரிலிருந்து கிளம்பும் போது ரயில், என்னை கட்டி இழுக்காத குறையாய் இழுத்து வருகிறது. "வேலைக்கு போகணும் வா" என்று





FINAL PUNCH

உன் பயம் உள்ளே உறங்கட்டும் 
உன் தைரியம் வெளியே நடமாடட்டும்



ஆர்.வி.சரவணன் 

ஞாயிறு, அக்டோபர் 13, 2013

நான் ஆசிரியராகிறேன்



நான் ஆசிரியராகிறேன்

 இவனுக்கு ஸ்கூல் ல வாத்தியாரா வேலை கிடைச்சிடுச்சு போலருக்கு 
 அப்படின்னு  தானே உங்க மனசுல நினைச்சிருப்பீங்க. அதெல்லாம் 
இல்லீங்க. நான் ஒரு பத்திரிகைக்கு ஒரு வாரத்திற்கு மட்டும் ஆசிரியரா பொறுப்பேற்கிறேன்.  எந்த பத்திரிகை னு உங்க முகத்துல இப்ப
கேள்வி குறி தென்படுது. இதோ பதில் சொல்லிடறேன் 

வலைச்சரம் என்ற ஆன் லைன் மேகசின்ல தான் இந்த பொறுப்பு எனக்கு கிடைச்சிருக்கு.வாரம் ஒரு வலைப் பதிவர் ஆசிரியராக பொறுப்பேற்று 
சிறப்பு சேர்க்கும் இத் தளத்தில், இந்த வாரம் (14-10-2013 to 20-10-2013) 
என்னை ஆசிரியராய் அமர்த்திய திரு. சீனா அய்யா அவர்களுக்கு 
என் இதயம் நிறைந்த நன்றி. மற்றும் நண்பர் தமிழ் வாசி பிரகாஷ் அவர்களுக்கும் என் நன்றி 

இந்த ஆசிரியர் பொறுப்பு எனக்கு கண்டிப்பாக பெருமை சேர்க்க கூடிய 
ஒன்றாகும்.அதே போல் இந்த பதவிக்கு நான் என்ன பெருமை
சேர்க்கிறேன்னுதெரிஞ்சிக்க நீங்க ஆசைபடுவீங்க. உங்களை 
போலவே நானும் தெரிஞ்சிக்க ஆசைபடறேன். (எப்படி பெருமை 
சேர்க்க போறோம்னு ஒரு நகம் கடிக்கும் டென்சன் தொடர்ந்திட்டே இருக்கு) வாங்களேன் ஒரு  விசிட் இத் தளத்திற்கு  வலைச்சரம்


FINAL PUNCH

எழுத்தாளர் திரு.சுஜாதா வின் எழுத்துக்களுக்கு ரசிகன் நான். 
அவரது எழுத்துக்களும் தந்த ஊக்கத்தினால்,எழுத முயற்சித்து 
கொண்டிருக்கிறேன் ஒரு மாணவனாய்

ஆர்.வி.சரவணன் 

வெள்ளி, செப்டம்பர் 27, 2013

புண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை




புண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை 

எனக்கு சுற்றுலா செல்வதென்றால் கொள்ளை பிரியம். எந்த ஊர் சென்றாலும் அந்த ஊரின் சிறப்புகள் வரலாறு போன்றவற்றை 
ஆர்வமுடன் தெரிந்து வைத்து கொள்வேன். அது சின்ன ஊராக 
இருந்தாலும் சரி. அப்படிப்பட்ட எனக்கு புண்ணிய ஸ்தலங்களை 
நோக்கி ஒரு பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்க பெற்றால்  
எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் இதோ அதை பற்றிய தொடர் 
பதிவு தான் இது

என் அலுவலகத்தில் நான் என் நண்பரிடம் ஷிர்டி செல்ல வேண்டும் 
என்று ஆர்வமாய் சொல்லி கொண்டிருந்தேன். ஒரு நாள் திடீரென்று
முடிவெடுத்தோம் செல்லலாம் என்று. அதன் படி அலுவலக நண்பர்கள் மூவருடன் சேர்ந்து நானும்  இன்று இரவு ரயிலில் ஆன்மீக சுற்றுலா கிளம்புகிறோம் 

 நாங்கள் செல்லும் ஸ்தலங்கள்

ஷிர்டி சாய்பாபா கோவில் ,பண்டரிபுரம்,சனிசிக்னாபூர், நாசிக் கோயில்கள், (இவற்றுடன் அஜந்தா எல்லோரா ) சென்று விட்டு பின் மும்பை 
வந்து அங்கிருந்து சென்னை வருகிறோம்.

பரபரப்பான வாழ்க்கை சூழலில் சலித்து நிற்கும் போது இது போன்ற பயணங்கள் வாழ்க்கை மேல் ஒரு பிடிப்பினை ஏற்படுத்தும் என்பது 
என் எண்ணம் 


ஒரு நல்ல ஆன்மீக பயண கட்டுரை எழுதும் வாய்ப்பு இதன் மூலம் 
அமையும் என நினைக்கிறேன். ஆண்டவன் அருளுடன் உங்களின் 
அன்பும் ஆதரவும் சேர்ந்தால் இப் பதிவை வெற்றிகரமாய் தொடர வாய்ப்பிருக்கிறது

ஆர்.வி.சரவணன் 

புதன், செப்டம்பர் 25, 2013

குடிக்காதது குத்தமாய்யா








குடிக்காதது குத்தமாய்யா 


சரக்கை பற்றிய  ஜாலியான ஒரு அனுபவ பதிவு இது. அதாவது சரக்கு 
அடிச்ச நண்பர்கள் இடையிலே சரக்கு அடிக்காம மாட்டிய  என்னோட 
போதை சீ கதை வாங்க பாட்டில் ஓபன் பண்ணுவோம் 



சின்ன வயசுலே தண்ணி அடிச்சிட்டு பேசறவங்களை பார்த்தாலே  எனக்கு பயம். ரோட்டிலே ஒருத்தர் குடிச்சிட்டு  நடந்து வந்தா கூட பம்மி ஒதுங்கிடுவேன். போதை ஏற ஏற சீ வயசு ஏற ஏற  பயம் போயிடுச்சு. 
கல்லூரி வாழ்க்கையில்  நண்பர்கள் எப்படியாவது எனக்கு புனல் வச்சாவது வாயில சரக்கை ஊத்திடணும்  னு முடிவு பண்ணி அலைஞ்சாங்க. நான் சிக்கலை இப்படியே போயிகிட்டிருக்குமா வாழ்க்கை.

வேலைக்கு வந்த பின்னாடி இது விஷயமா நான் பட்ட பாடு இருக்கே 
அது சொல்லி மாளாது (இருந்தாலும் சொல்றேன்) ஒரு நாள் படத்துக்கு போலாம் னு கிளம்பறப்ப என் அலுவலக நண்பன் நானும்  வரேண்டா 
என்று சொன்னான். சரி என்று வர சொல்லி விட்டு  மவுண்ட் ரோடு 
வந்தேன். நான் பஸ்ஸை விட்டு இறங்கறப்ப  ஒரு நண்பர்கள் படையோட 
என் நண்பன் வெயிட்டா  வரவேற்பு கொடுத்தான்." மச்சி சும்மா படத்துக்கு 
போனா ஒன்னும் எபக்ட் இல்லே. கொஞ்சம் ஸ்மால் விட்டுட்டு 
போலாம் "  னு அவன் சொன்னவுடன் ஆஹா ஆரம்பத்திலேயே வா  என்று 
உள்ளுக்குள்  கலங்கியவன் மறுக்க முடியாமல்  அவர்கள் சரக்குடன் 
வாட்டர் கலக்குவதை பார்த்து கொண்டிருந்தேன். ஸ்மால்  என்பது லார்ஜ்  ஆகி போனது

அவர்கள் செய்த அலப்பறையை அடக்கி வெளியில் கொண்டு வந்தேன்.தெருவையே அளந்து கொண்டு அவர்கள் சென்று கொண்டிருக்க அந்த பக்கம் வந்த ஒரு பெண்ணின் தோள் மேல் கை போட்டு விட்டான் நண்பன் அந்த பெண்ணும் கூட வந்த பையனும்  சண்டைக்கு வர நான் மன்னிப்பு கேட்டு  அவர்களை தியேட்டருக்கு அழைத்து கொண்டு வந்தேன்.

டிக்கெட் வாங்கி சீட்டில் அவர்களை அமர வைப்பதற்குள் எனக்கு கண்ணுல தண்ணி வராத குறை. தூங்கி போனவர்களை படம் முடிஞ்சவுடன் எழுப்பிய போது "என்னது படம் முடிஞ்சிடுச்சா விளம்பரம் தானே ஓடுதுன்னு தூங்கினோம். எழுப்ப வேண்டியது தானேடா"  என்று நண்பன் முறைக்க நான் பதிலுக்கு முறைத்தவுடன் அனைவரும் பெட்டி பாம்பாய் அடங்கினர்

இத்தோடு நான் ஒதுங்கியிருக்க வேண்டும் முடிந்ததா இல்லியே 

அடுத்ததாக ஒரு  நண்பருக்கு கல்யாணம் என்று பார்ட்டி ஏற்பாடானது
என்னை என் நண்பன் அழைக்க  நான் மறுக்க, விடாமல் என்னை அழைத்து சென்றான். அங்கு பெரிய ஹோட்டலில் பார்ட்டி நடந்தது. எல்லோரும் சரக்கு சாப்பிட நான் கூல் ட்ரிங்க்ஸ் சாப்பிட்டேன் அப்போது அறிமுகமான நண்பர்கள் என்னை ஒரு உலக அதிசயம் போல் பார்த்தனர் நேர் காணலும்  நடத்தினர்

"நீங்க ஏன் சாப்பிடறதில்ல"

"பிடிக்கலை"

"சரி ஒரு வாட்டி டேஸ்ட் பார்க்கலாம் ல "

"வேணாம் ப்ளீஸ்"

 இப்படி போய்கிட்டிருந்த உரையாடல் போதை ஏற ஏற பாதை மாறியது
எப்படி

"என்ன  மச்சி உன் ப்ரெண்ட் தனியா நமக்கு தெரியாம சாப்ட்டுட்டு இங்க நல்லவன்  மாதிரி ஆக்டு  குடுக்குறாரோ"

"சீ ச் சீ அவன் சுத்தமானவன்"

"தம்மடிப்பாரோ"

"நோ"

"சைட்"

"தண்ணி அடிக்கிற நேரத்துல கூட சைட் அடிக்கிறது  கட் ஆகிட கூடாது னு தான் அவன் தண்ணி அடிக்கிறது இல்லேன்னு நினைக்கிறேன்"

"அட இங்க பார்ரா என்ன   தலைவா அப்படியா"

நான் நண்பனை முறைக்க அவன்  ஜாலிக்கு  மச்சி என்றவன் திடீரென்று பேச்சை  மாற்றி

"நம்ம ப்ரெண்ட் பாரதிராஜா  குரல்ல முதல் மரியாதை டையலாக் பேசுவான் தெரியுமா. பாக்யராஜ் டி.ராஜேந்தர்  மாதிரி  டான்ஸ் பண்ணுவான். மச்சி என் பிரெண்ட்ஸ் க்காக சொல்லேன் " என்று போட்டு கொடுக்க நான் மறுக்க,

அவர்கள் "பாஸ் நாங்க என்ன நீங்க பண்றதை ரசிக்கிற அளவுக்கு ரசனை இல்லாதவங்களா"என்று டபாய்க்க ஆரம்பித்தனர்.

 நான் வேறு வழியில்லாமல்  டான்ஸ் ஆடி காட்டினேன் பேசி
காண்பித்தேன்.ஓகே ஓகே படத்தில் சந்தனம் மிமிக்ரி செய்வது போல் 
ஆகி விட்டது என் நிலைமை.  திரும்ப திரும்ப பண்ண சொல்லி அவர்கள் போதைக்கு அன்று என்னை ஊறுகாய் ஆக்கி விட்டனர்

அடுத்து வந்த நாட்களில்  பார்ட்டி ஏற்பாடாகி என்னை கூப்பிட, நான் 
மறுத்தேன் மேலும், இப்ப எதுக்காக பார்ட்டி என்று கேட்டேன்.மச்சி நம்ம பிரெண்டு பொண்ணு பார்க்க போறான் அதுக்காக கொடுக்கிறான் என்றனர்

இதுக்கெலாம் ஒரு பார்ட்டி யாடா என்று நான் பல்லை கடிக்க, அவர்கள் 
"நீ வரலைனா பார்ட்டி கான்ஸல்" என்று அடம் பிடித்தனர்

"பாசக்கார  பயலுங்களா இருக்காங்கலே. நம்மை  கூப்பிடாம ஒரு 
பார்ட்டி  கூட இவங்க நடத்தறதில்ல  பாரு" என்று நான் நெகிழ்ந்தேன். 
ஏன் நெகிழ்ந்தோம் என்றாகி விட்டது.

 அன்றைய போதையில் ":மச்சான் உன்னை எதுக்கு அழைச்சிட்டு வரோம் தெரியுமா. நாங்க மட்டையானா எங்களை வீட்டில் கொண்டு போய் சேர்க்க ஆள் வேணும்ல அதுக்கு தான்"  என்றான்.

" டேய் பார்ட்டி க்கு ஹோட்டல் புக் பண்ணிட்டு செக்யூரிட்டி க்கு  என்னை புக் பண்றீங்களா" என்றதற்கு 

"நான் சொல்லல மச்சான் கற்பூரம் மாதிரி. படக்குன்னு பிடிச்சுக்குவான்"
என்றான் 

அந்த பார்ட்டியில், அன்று தான் அறிமுகமாகி இருந்த ஒரு நண்பர் கை குலுக்கி வெரி டீசண்டா பேசினார். இந்த காலத்தில இப்படி ஒருத்தரா ஆச்சரியமா இருக்கு ஐ லைக் யுவர் காரெக்டர்  என்றெல்லாம் சொன்னவர் 
போதை அதிகமானவுடன் " கடைக்கு போய் எனக்கு சிகரெட் வாங்கி வாங்க" என்றார் எனது நண்பன் பயந்து போய் தடை செய்வது போல் கை உயர்த்த அவர், "நம்ம பயடா இவன் மாட்டேன்னா சொல்லிடுவான்" என்று 
அவர்   வடிவேலு பாணியில் சொன்னார்

"டேய் என் ப்ரெண்ட் நட்புக்காக உயிரே கொடுப்பான் ஒரு சிகரெட் வாங்கி
கொடுக்க மாட்டானா. மச்சான் நீ போய் வாங்கிட்டு வாடா"என்று சொல்ல எனது நிலவரம் கலவரமானது 

 நண்பர்களை சொல்லி குற்றமில்லை.  நாம் கலந்து கொள்வது தவறு என்று முடிவு செய்து அன்றிலிருந்து அவர்களுடன் செல்வதை தவிர்த்தேன்

அப்படியே காலங்கள் உருண்டோட அந்த நண்பர்கள் பிரிந்து வேறு நண்பர்கள் வேறு அலுவலகம் என்று மாறினாலும் பார்ட்டி என்று எனக்கு அழைப்பு வருவதும், நான் மறுப்பதும், அவர்கள் ஏன் என்று அதிசயபடுவதும் 
 கிண்டலடிப்பதும் தொடர்ந்த வண்ணமாய் இருக்கிறது. இதில் அவர்கள் சொல்லும் மெசேஜ்  என்ன தெரியுமா. 

" உன்னுடைய காலேஜ் பிரெண்ட்ஸ் சரியில்ல ஒரு தண்ணி அடிக்க கூட 
கத்து குடுக்கலை பாரு" என்று படிப்பு முடிந்து வேலைக்கு வந்த போது  அறிமுகமான நண்பர்கள் சொன்னார்கள்

 "இப்பயும் நீ குடிக்கலைனா வருங்காலத்தில் உனக்கு வர போற பிரெண்ட்ஸ் எங்களை திட்டுவாங்கடா என்று இப்போதைய நண்பர்கள் சொல்கிறார்கள்.
(குடிக்காதது ஒரு குத்தமாய்யா)


FINAL PUNCH 

இந்த கட்டுரை டைம் பாஸ் 20-07-2013 இதழில் 
வெளியானது. நன்றி டைம் பாஸ் 






ஆர்.வி.சரவணன்

ஞாயிறு, செப்டம்பர் 22, 2013

மூடர் கூடம்




மூடர் கூடம்

 இந்த படத்தின்  வித்தியாசமான டீசர் தான் என்னை படம் பார்க்க 
தூண்டியது. வேலையில்லாமல் ஏன் தங்களுக்கென்று குடும்பமே 
இல்லாமல் சமுதாயத்தால் புறக்கணிக்கப்படும் நால்வர்,  வெளியூர் 
கிளம்பி செல்ல இருக்கும்  குடும்பத்தினரின் வீட்டில் கொள்ளையடிக்க 
திட்டம் போடுகிறார்கள் அவர்கள் வெளியூர் கிளம்பும் முன்பே இவர்கள் சென்று விடுவதால் நடைபெறும் களேபரங்கள் தான் படம். ஒரு பங்களாவுக்குள் தான் முழு கதையே  நடக்கிறது (சில காட்சிகள் தவிர்த்து)  

நால்வரில் சென்றாயன் பின்னி எடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் அவர் கேரக்டரை  பார்க்கும் போது சாதாரணமாக தான் அந்த கேரக்டரை கடக்க நினைப்போம். ஆனால் அவருக்கு  தான் செம கேரக்டரே. ஓவியாவை பார்த்தவுடன் அவர் கண்கள் ஆச்சரியத்தில் விரிவதும், கோபத்தில் செல் போன்களை உடைத்து போடுவதும், ஓவியாவின் காதலனின் சட்டை ரெண்டாயிரம் என்றவுடன் பொறாமையில் கிழிப்பதும், பின் நெகிழ்ந்து 
போய் தன் சட்டையை கழட்டி கொடுத்து அனுப்புவதும் என்று அவர் 
செய்யும் அனைத்தும் தியேட்டரில் சிரிப்பலை ஏற்படுத்துகிறது 

அடுத்து இயக்குனர் நவீன் நண்பர்களுக்கு ஐடியா கொடுப்பது 
முதல் அவர்களின் முட்டாள் தனத்தை கண்டு கோபப்பட்டு கத்தாமல்  
டியுஷன் எடுப்பது போல் ட்ரை பண்ணுங்க என்று அழகாக தன் 
கோபத்தை வெளிபடுத்துவது என்று ஆச்சரியபடுத்துகிறார்.அவர் 
தன்னை முன்னிலைபடுத்தி கொள்ளாமல் மற்ற மூவருக்கும் 
சரியான பங்களிப்பு காட்சிகளில் தந்திருக்கிறார்

முட்டாள் என்ற வார்த்தையே கெட்ட வார்த்தை என்று போட்டு புரட்டி எடுப்பவர் முட்டாள் என்று சிறுவனை திட்டும் தந்தையிடம் கோபப்பட்டு 
அச் சிறுவனை ஆதரவுடன் அணுகுவதும், தன் மாமன் வீட்டில் ஒரு காபி தந்து தன்னை அனுப்பி விட்டார்களே என்று நொந்து கொள்பவர் சிறுவன் தன்னை தாக்கிய கடுப்பில் அவனை நினைச்ச நேரத்தில் அடிப்பதும் ஓவியாவை அவர் காதலுடன் சேர்த்து வைப்பதும் என்று மற்ற இருவரும் 
சுவாரஸ்ய படுத்துகிறார்கள் 

ஓவியவிற்கு  பயப்படுவதும் அடிக்கடி சீ என்று சலித்து கொள்வதும் தான் வேலையே. இருந்தும் அவர் சென்ட்ரயனை கட்டி அணைத்து கொள்ளும் இடம் ஒரு நெகிழ்ச்சி


 இதே போல் சாப்பிடும் பொருட்களின் பட்டியலை செல் போனில் 
வாசிக்கும் சிறுமி, பயம் காட்டி  பின் பதுங்கும் ஆட்டோ காரர், ஜாப் 
எதிக்ஸ் பேசும் அந்த திருடன், வித்தியாச அணுகுமுறையுடன் உள்ள 
வட இந்திய தாதா, தன்னை நம்பி பொறுப்பு ஒப்படைக்கப்படும் போது 
அவன் அதை சந்தோசமாக சிரமேற் கொண்டு தன பெற்றோரையே  
மிரட்டும் சிறுவன்  ஏற்ற இறக்குமுடன் ஆங்கிலம் பேசும் சிறுமி தன் பார்வையால் நவீனை  அம்பேல் ஆக்குவது  என்று  ஒவ்வொரு கேரக்டரையும் ரசிக்க முடிகிறது. இயக்குனர் முழுக்க முழுக்க நகைச்சுவை  துணை கொண்டு உருவாக்கிய திரைக்கதை யில் வசனங்கள் படத்துக்கு மிக பெரிய பலம். தமிழ் தெரியாத இங்க்லீஷ் காரன் கிட்டே இங்க்லீஷ் மட்டும் பேசும் நீ, இங்க்லீஷ் தெரியாத தமிழன் கிட்டே இங்க்லீஷ் பேச கூடாது னு ஏன்டா தெரியல டயலாக் ஒரு சாம்பிள் (சில இடங்களில் மட்டும் ஓவர் டோஸ்) 


தாதா வரும் காட்சிகள் அந்த பாத்திர  படைப்பு எல்லாம் நன்றாக இருந்தாலும் அவ்வளவு பில்டப்  கொடுக்கப்பட்டவர் இப்படி  வந்து மாட்டி கொண்டு செத்து போவாரா என்று தோன்றுகிறது 

பங்களாவுக்குள் நடக்கும் கதை களம் அதை நாம் அங்கிருந்த படியே பார்ப்பது போன்ற உணர்வை தந்திருக்கிறது ஒளிப்பதிவு 


பணம் வந்தவுடன் அதை அவர்கள் உதவி  செய்ய போகிறார்கள் என்பது 
நமக்கு முன்பே தெரிந்து போகும் வகையில்  காட்சி அமைத்திருப்பது கொஞ்சம் மைனஸ். அவர்களின் உதவும் மனப்பான்மையை நாம் கை தட்டி வரவேற்கும் வண்ணம்  அமைந்திருக்க வேண்டும் அந்த காட்சி. (பண தேவை எதிர்பார்த்து  வரும்  பெண்மணியை முன்பே கதைக்குள் கொண்டு வந்து விடாமல் அவர்கள் பணம் வாங்கும் நேரத்தில் அந்த பெண்மணி வந்து 
கதறி அழ அதை பார்த்து அவர்கள் இரக்கம் கொண்டு உதவுவதாக இருந்திருக்கலாம்). முன் கதைகள் அவசியம் தான் இருந்தும் எல்லா கேரக்டர்களுக்குமா.(அந்த கார்ட்டூன் முன் கதை நல்லாருக்கு)
 கிளைமாக்ஸ் காட்சி கொஞ்சம் நாடக தனமாய் 
அமைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம் 

படத்தின் இடைவேளையின் போது நமக்கு அருகாமையில்
அமர்ந்திருப்பவர்களின் முகங்களில் தென்படும் சிரிப்பு   
இயக்குனர் நவீனுக்கு கிடைத்திருக்கும் வெற்றி 

(புத்திசாலி தனமான)  மூடர் கூடம் 

FINAL PUNCH

இந்த படத்தின் பதிவு எழுதி முடித்து வெளியிடும் நேரத்தில் ஒரு 
கொரிய மொழி படத்தை இது நினைவு படுத்துவதாக முக நூலில் 
செய்தி வந்திருக்கிறது

ஆர்.வி.சரவணன்