திங்கள், ஆகஸ்ட் 19, 2013

எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது ?




எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது ?


அப்படி என்ன நடந்துச்சு னு தானே கேட்கறீங்க 
வாங்க என் கூட 

சென்ற வாரத்தில் ஒரு நாள் இரவு வீட்டுக்கு செல்லும் வழியில் 
வாழைபழம் விற்பவரிடம் இரண்டு பழம்  கேட்டேன்.அவர் கொடுத்ததில் ஒன்று நன்கு கனிந்திருந்தது. நான் "சார் ஏற்கனவே கனிஞ்சிருக்கு 
வீட்டுக்கு போறதுக்குள்ளே இன்னும் கனிஞ்சிரும் அதனாலே வேற கொடுங்க" என்றேன் மென்மையாக.அவரோ கடுப்பாகி என்னது நான் 
கொடுத்த பழம் கணிஞ்சிருக்கா சான்சே இல்லை என்று அதிமேதாவி 
தனமாக சிடுசிடுத்தவர், பழத்தை வாங்கி பார்த்து விட்டு இது 
எங்கே கனிஞ்சிருக்கு என்று (சந்திரமுகி யில் ஜோதிகா கேட்பாரே எனக்கா எனக்கா என்று அது போல் ) கோபமாய் கேட்டார். நான் அமைதியாகவே, "கொஞ்சம் கொடுங்க இப்படி" என்று அதை வாங்கி அவருக்கு எதிரிலேயே தோலை உரித்தேன். பாதிக்கு மேல் நன்றாக கனிந்திருந்தது. பல்ப் வாங்கியவர் போலானது அவர் முகம். அவர் மனைவி உடனே வேறு பழம் எடுத்து என்னிடம் கொடுத்தார். நான் நீங்க வேற பழம் கொடுக்கணும் னு நான் இதை உரிக்கலை. கனியவே இல்லைன்னு சார் சொன்னாரே அதை ப்ரூப் பண்ண தான் இப்படி செஞ்சேன். இதையே சாப்பிட்டுகிறேன் என்றவாறு இடத்தை விட்டகன்றேன்.ஒரு பழம் கணிஞ்சிருக்கா இல்லியா என்று தெரியாமல் எப்படி தான் வியாபாரம் பண்றாங்களோ. ஒரு வேலை கனிந்ததை விற்பதற்கான வியாபார தந்திரமாக கூட இருக்கலாம். (ஒரு பழத்துக்கு இவ்வளவு பிரச்னையா னு கேட்கறீங்களா வாங்க அடுத்த பிரச்னைக்கு .  

மறு நாள் காலை செல் போன் ரீசார்ஜ் செய்வதற்காக கடைக்கு வந்தேன். 
ஒரு ரூபாய் சில்லறை கேட்டார் கடையின் முதலாளி ( வயதானவர் ). நான் இரண்டு ஐம்பது காசுகள் கொடுத்தேன். அவர் பார்த்து விட்டு ஒரு ரூபாய் இருந்தால் கொடுங்க என்று சொல்லியிருந்தால் ஒன்றும் பிரச்னை இருந்திருக்காது. அதற்கு பதில் " பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டான் 
இதை போய் நான் எப்படி வாங்கறது" என்றார் எடுத்த எடுப்பிலே. 

எனக்கு கோபம் வந்து விட்டது. " பிச்சைக்காரன் வாங்க மாட்டான் என்றால் அவனுக்கு காசோட அருமை தெரியவில்லை என்று அர்த்தம். அவனுக்கு 
நீங்க சப்போர்ட் பண்றீங்க என்றால் அவன் உழைக்காமல் சோம்பேறியாய் இருப்பதற்கு உதவுகிறீர்கள் என்று அர்த்தம்" என்று நான் சொன்னவுடன் அவர், "ஐம்பது காசு எல்லாம் இப்ப யாரும் வாங்கறதில்லே கொடுக்கறதில்லே" என்றார் சிடுசிடுப்புடன். "அது இங்கேயே உட்கார்ந்திருக்கிற உங்களுக்கு எப்படி தெரியும். டெய்லி ஊர் சுத்தி வரவங்களை கேளுங்க அவங்களுக்கு தெரியும். என்றேன். "நான் வாங்கறதில்லே சார் " என்றார் முடிவாய் . "வாங்க விருப்பமில்லை சொல்லுங்க" என்று சொல்லி விட்டு வெளி வந்தேன்.

ரொம்ப நேரத்திற்கு அவர் சொன்ன வார்த்தை என்னை டென்சனாக்கி கொண்டே இருந்தது. பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டான் என்றால் நீ வாங்கியிருக்கே என்று நக்கலடிக்கிராரோ என்றும் தோன்றியது. 

அதோடு முடியவில்லை. அடுத்த அரை மணி நேரத்தில் வேறொரு
 பிரச்னை வந்தது 

காலையில் சாப்பிடவில்லை என்பதால் சரி ஹோட்டல் போகலாம் 
என்று ரயில் நிலையத்தில் இருக்கும் பிரபல உணவகத்தில் சாப்பிட சென்றேன் அங்கே ஸெல்ப் சர்வீஸ். பரோட்டா வாங்கி கொண்டு சாப்பிட
ஆரம்பித்தேன். அவர்கள் கொடுத்த குருமா ஒரு பரோட்டாவுக்கு தான் கரெக்டா இருந்திச்சு. சரி னு அடுத்த பரோட்டா வுக்கு குருமா வாங்க  
நான் சென்ற போது  கூட்டம் அதிகமாக இருந்தாலும் பொறுமையாய்
நின்று (இரண்டு நிமிடம் இருக்கும்) வாங்கி கொண்டு வந்து பார்க்கிறேன். 
நான் சாப்பிட்ட இடத்தில் பரோட்டா பிளேட்டை காணும். அந்த இடத்தில் வேறொருவர் வேறு ஏதோ சாப்பிட்டு கொண்டிருந்தார். 

நான் கடுப்பாகி காசாளரிடம் வந்து சொன்னேன். அவருக்கு சிரிப்பு வந்து விட்டது இருந்தும் அதை வெளி காட்டாமல்  மேலாளரிடம் சொல்ல, 
அவர் டேபிள் கிளீன் செய்யும் பெண்ணிடம் விசாரித்தார். " சாப்பிட வந்தவங்க சாப்பிட்ட தட்டு  ஏன் எடுக்காமே வச்சிருக்கீங்க எடு னு சொன்னாங்க. எடுத்துட்டேன்" என்றார் சர்வ சாதாரணமாக. 

நான் கோபமாகி "என்ன சார் இது. ஆரம்பத்திலேயே குருமா கொஞ்சம் கூட கேட்டால் சாப்பிடுங்க தரோம் னு சொல்றீங்க, சரி னு பாதி சாப்பாட்டுல வந்து கேட்டா இப்படி தட்டையே எடுத்துடறீங்களே " என்றேன். "சாரி சார் 
ஒரு பரோட்டா தானே. நான் தர சொல்றேன். ஆர்க்யுமென்ட் வேண்டாம் ப்ளீஸ்" என்றார்."சண்டை போட்டு கேட்டு வாங்கி சாப்பிடறது  அசிங்கம். 
நீங்க முதல்ல சர்வீசை ஒழுங்கா பண்ணுங்க" என்று கத்தி விட்டு 
வந்து விட்டேன்


முதல் நாளிரவு பத்து மணியிலிருந்து அடுத்த நாள் காலை பத்து மணிக்குள் பிரச்னைகள் இப்படி வரிசை கட்டி வந்தன. இதை படித்த உங்களுக்கு,  இந்த முணு இடத்திலும் நான் ஏதோ விட்டு கொடுத்துட்டு (கத்திட்டு) வந்துட்டதா தோணும். எனக்கென்னமோ என் எதிர்ப்பை பலமா பதிவு பண்ணிட்டு வந்ததா தான் தோணுது 


FINAL PUNCH

மேற் கண்ட நிகழ்வுகளின் follows 

* வீட்டில் சென்று சாப்பிட வேண்டும் என்று நினைத்து வாங்கிய 
பழத்தை தெருவிலேயே சாப்பிட்டவாறு செல்ல வேண்டியதாயிற்று 

*அந்த இரண்டு ஐம்பது காசுகளை அன்றே வேறொரு கடையில் 
கொடுத்த போது வாங்கி கொண்டார்கள் . சமீபத்தில் வேறொரு 
கடையில் இதே போல் ஐம்பது காசுகள் கொடுத்தார்கள். வாங்க மாட்டேங்கறாங்க என்றேன். பரவாயில்ல என் கிட்டே கொண்டு வாங்க நானே வாங்கிக்கிறேன் என்றார் அந்த கடைக்காரர். இது எப்படி இருக்கு 

*அன்னிக்குன்னு பார்த்து பரோட்டா முறுகலா சூப்பரா இருந்துச்சு 


ஆர்.வி சரவணன் 

படம் நன்றி முக நூல் 

திங்கள், ஆகஸ்ட் 12, 2013

மகிழ்வான தருணங்கள்.... ( தொடர் பதிவு)







மகிழ்வான தருணங்கள்.... ( தொடர் பதிவு)

இப்படி ஒரு தலைப்புல தொடர் பதிவு பதிவுலகில் தொடர்ந்திட்டிருக்கு.முதன் முதலில் ப்ளாக் ஆரம்பிச்சு தளத்தில் எழுதிய மகிழ்வான தருணத்தை பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டுமாம். நானும் எழுதணும்னு அழைப்பு விடுத்த பதிவுலக தோழி தென்றல் சசிகலா அவர்களுக்கு நன்றி. 


பதினான்கு வயது முதல் எழுத ஆரம்பித்தேன். வார  இதழ்களில் என் படைப்புகள் வெளியாக வேண்டும் என்று நான் விரும்பி அனுப்பிய எதுவும் அவர்கள் விரும்பாததால் வெளி வரவில்லை.  சீசீ இந்த பழம் புளிக்கும் போலிருக்கிறது என்று நான் முயற்சியை கை விட்டு விட்டேன். ஏக்கமுடன் மற்றவரின் படைப்புகளை மட்டுமே படித்து வந்தவனுக்கு இணையம்
(கை கொடுத்தது) கீ போர்டு கொடுத்தது. இணையம் பால் ஈர்க்கப்பட்டேன். பதிவுகளை  படித்து கருத்துரை  இட ஆரம்பித்தேன்.  அதற்கு பதில் கமெண்ட் வந்ததை பார்த்தவுடன் சுவாரசியம் இன்னும் அதிகமாகவே இணையத்தில் படிப்பதை தொடர்ந்தேன்.(என் கமெண்டுக்கு வந்த பதில்கமெண்ட்டையே  
ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொண்டேன் என்றால் பார்த்து கொள்ளுங்கள்) இப்படியே செல்கையில் மிக முக்கியமான் மூவர்  அப்போது எனக்கு நண்பர்களாக அறிமுகமானார்கள் 

என்வழி வினோ என் வழி

கிரி ப்ளாக் கிரி http://www.giriblog.com/

எப்பூடி  ஜீவதர்ஷன் எப்பூடி

 அவர்களின் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.விரும்பி படித்து பின்னூட்டமிட்டு நட்பை வளர்த்து கொண்டேன். இதில் என்வழி வினோ நீங்களும் படைப்புகள் எழுதலாமே என்று எழுத அழைத்தார். சொன்னவுடன் (இதுக்காக தானே காத்துகிட்டு இருந்தோம்) எழுதினேன் ஒரு கவிதை.அது  
என் வழியில் வெளியாக அதற்கு வந்த கமெண்ட் எனக்கு தொடர்ந்து எழுதும் எண்ணத்தை தூண்டியது. அடுத்து இளையராஜா பாடல்கள் பற்றி எழுதிய பதிவு க்கு வந்த பின்னூட்டம் பார்த்து இன்னும் சந்தோஷம் கரை புரண்டது. அப்போது தான் எனக்கும் ஆர்வம் அதிகமாகி  நாமும் தளம் தொடங்குவோம்
என்று ஆரம்பித்தது தான் குடந்தையூர். என்ற எனது இந்த தளம்.  நண்பர்கள்  மூவருக்கும் தெரிவித்தேன் சந்தோசமாய் வாழ்த்தினர்.

 என் எழுத்துக்கள் படித்து யாரும்  முகம் சுளிக்க கூடாது. களிப்படையும் வண்ணம் இருக்க வேண்டும் என்று கவனமுடன் தொடங்கினேன்.
முதல் பதிவாக கடவுள் பற்றிய கட்டுரை தான் எழுத வேண்டும் என்று தீர்மானித்தேன். நான் திருப்பதி சென்றிருந்த போது எனக்கு கிடைத்த அனுபவத்தை முதல் பதிவாக எழுதினேன்.அவருக்கு முன்னால் எல்லோரும் ஒன்று தான் நான் புரிந்து கொண்டது அன்று தான்  (படித்து பாருங்கள் ஒரு சிலிர்ப்பான அனுபவம் கிடைக்கும் உங்களுக்கு) இதை எழுதி விட்டு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ப்ளாக் ஓபன் செய்து எத்தனை பேர் படித்தார்கள் 
என்று பார்த்தது தனி கதை. இரவில் கண் விழிக்கும் போது இப்போது யாரேனும் படித்து கொண்டிருப்பார்களோ என்றெல்லாம் நினைத்து கொள்வேன். அடுத்தடுத்து பதிவுகள் எழுத ஆரம்பித்தேன்.கூடவே  தினம் 
ஒரு தளமாக சென்று இணைந்து பதிவுகள் படிக்க ஆரம்பித்தேன்.நண்பர் ஜீவதர்ஷன் ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார் எனது ஐம்பதாவது பதிவாக கேள்வி பதில் பாணியில் அமைந்திருந்தது. அந்த பதிவு 
பதிவுலகில் நான் எப்படிபட்டவன் என்பது தலைப்பு 
http://www.kudanthaiyur.blogspot.in/2010/08/blog-post_21.html


* தொடர்ந்து எழுதி நான் நூறை எட்டினேன். அந்த  நூறாவது 
பதிவு  ஆனந்த விகடனின் குட் ப்ளாக் பகுதியில் இடம்
பிடித்தது. http://kudanthaiyur.blogspot.in/2011/02/blog-post_08.html

 * என் விகடனில் இரண்டு பக்கங்கள் என் தள பதிவுகள் வந்தது. 

* இணையம் மூலம் அறிமுகமான நண்பர் திரு எஸ்.எஸ்.பூங்கதிர் பாக்யா 
 வார இதழில் எனது கருத்துக்களை தொடர்ந்து இடம் பெற வைப்பதோடு 
 திரு.கே.பாக்யராஜ் அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆசையையும் அவருடன் நான் நண்பரான ஒரு மாதத்திலேயே நிறைவேற்றி கொடுத்தார். 
இரு அனுபவ கட்டுரை கூட பாக்யாவில் வெளி வந்தது.

 * ஜூலை மாதம்  டைம் பாஸ் வார இதழில் நான் எழுதிய ஒரு 
   கட்டுரை வெளி வந்தது. 

 * என்  தளத்தில்  நான் எழுதிய இளமை எழுதும் கவிதை நீ http://kudanthaiyur.blogspot.in/2011/10/blog-post_23.html தொடர்கதை யை  
(பதிவுலக நண்பர்களின் ஊக்கத்தால்) வெற்றிகரமாய் எழுதி 
முடித்தேன். 






வாழ்க்கையில் நாம் எடுக்கும் சில முடிவுகள் நம் வாழ்க்கைக்கு ஏற்றமும் ஆற்றலும் தரும் என்று சொல்வார்கள். அப்படி ஆர்வத்தில் முடிவெடுத்து
அவரசரத்தில் தொடங்கிய என் தளம் இன்று முன்னூறு இடுகைகளை 
நெருங்கி  கொண்டிருக்கிறது. மூன்று நண்பர்களுடன் இருந்த எனது 
நட்பு வட்டம் (முக நூல் நண்பர்கள் உட்பட) இன்று முன்னூறுக்கும் மேல்.
என் எழுத்து எனக்கு வழங்கிய கொடையாகவே இதை நினைத்து மகிழ்கிறேன் 


எனக்கு பிடித்த துறையில் செயலாற்றும் மகிழ்ச்சி இப்போது எனக்கு கிடைத்திருக்கிறது  ஆத்ம திருப்தியுடன் எழுதி வருகிறேன். என்றேனும் நானும் சிகரம் எட்டுவேன் என்ற நம்பிக்கையை கொடுத்திருப்பது என் 
தளமும் பதிவுலக நண்பர்களும் தான்.யோசித்து பாருங்கள் நான் மட்டும் அன்று  இந்த தளத்தை தொடங்கவில்லை என்றால் இதெல்லாம் நான் அடைத்திருக்க முடியுமா. 

இப்படி மகிழ்வான தருணங்கள் பலவற்றை எனக்களிக்க காரணமான, 
என் தளத்தை தொடங்கிய அந்த வினாடி கண்டிப்பாக ஒரு மகிழ்வான 
தருணம் தான். 

ஆர்.வி.சரவணன் 


செவ்வாய், ஆகஸ்ட் 06, 2013

பதிவர் திருவிழா 2012 & 2013 - ஒரு பார்வை


பதிவர் திருவிழா 2012 &  2013 - ஒரு பார்வை 







இணைய நண்பர்களுக்கு வணக்கம். சென்ற வருடம் வலைபதிவர் திருவிழா 2012 மிக 
சிறப்பாக நடைபெற்றது அந்த இனிய தருணங்களின் நிகழ்வுகள் நம்மை விட்டு அகலாமல் இருக்கிறதென்றால் அதுவே அந்த விழாவுக்கு கிடைத்த மிக பெரிய வெற்றியாகும்.

என்னை பொறுத்தவரை சென்ற வருட பதிவர் திருவிழா எனது நட்பு வட்டம் 

பெரிதாக மிகவும் உதவியது என்று சொல்லலாம். என் இனிய நண்பர் கரை சேரா அலை 
அரசன், அறிமுகத்தில்இந்த பதிவர் திருவிழா மூலமாக எனக்கு கிடைத்த நண்பர்கள் 
பாலகணேஷ்மின்னல் வரிகள் ,ரமணி சார் தீதும் நன்றும் பிறர் தர வாரா,மோகன் குமார் 
வீடு திரும்பல் ,சீனு திடங்கொண்டு போராடு, கேபிள் சங்கர், மயிலன்,சுரேகா, தென்றல் சசிகலா, மதுமதி, ஜெயக்குமார் ,கோகுல் கோகுல் மனதில், திண்டுக்கல் தனபாலன், வேடந்தாங்கல் கருண் .... என்று தொடர்கிறது  நண்பர்கள் வரிசை.  நினைத்து பார்த்தால் பெருமை மேலிடுகிறது. அந்த விழா வை பற்றிய  எனது அனுபவ பதிவு 

 http://kudanthaiyur.blogspot.in/2012/08/blog-post_27.html

அந்த விழாவில் நான் மற்றும் அரசன் (கேமரா வை என் கையில் கொடுத்து விட்டு முடிந்த 
வரை எடுத்து தள்ளுங்கள் சார் என்றார் ) எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை இங்கே உங்கள் பார்வைக்கு தந்திருக்கிறேன்.






சி.பி.செந்திகுமார் பேசி கொண்டிருக்க 
மேடையில் கேபிள் சங்கர், சங்கவி


உரையாற்ற தோதாய் மீசை முறுக்கும் நண்பர் அரசன் 






வரிகளில் சேட்டை நிகழ்த்துபவர் 



நண்பர் பதிவர் ஆரூர் மூனா செந்தில் 



மயிலன் பேசுவதை  ரசிக்கும் 
ஜெயக்குமார் ,சிபி . செந்தில்குமார் கேபிள் சங்கர் 





கேபிள் சங்கருடன் உரையாடி கொண்டிருக்கும் 
மதுமதி,ஜாக்கி சேகர்,சி.பி.செந்தில்குமார் 


லட்சுமி அம்மாவுக்கு நினைவு பரிசு வழங்குகிறார் 
திரு . பட்டுகோட்டை பிரபாகர் 



அரங்கத்தில் ஒரு பகுதி 




சசிகலா அவர்கள் எழுதி வெளியிட்ட தென்றலின் கனவு 
நூல் வெளியீட்டு நிகழ்வில் 
ரமணி சார் , பி.கே.பி சார் ,ராமானுசம் அய்யா ,கவிஞர் திரு.கணக்காயன்  





பி.கே.பி அவர்களின் உரை 



பெரியோர்கள் முன்னிலையில் 




சி.பி.செந்தில்குமார் ,மதுமதி,  மோகன்குமார் 
போட்டோ சிரிப்பு  



சீனா அய்யா, ராமானுசம் அய்யா,கணக்காயன் அவர்களுடன்  அரசன் 



இயக்குனர் கேபிள் சங்கருடன் நானும் சீனுவும் 


பால கணேஷ் சார், கோகுல், அரசனுடன் 
திருவிழா அரங்கத்தின் வாயிலில் 




இந்த படங்களை பார்க்கும் போது அந்த மகிழ்வான தருணங்கள் நம் கண் முன்னே 
சிறகடிக்கின்றன. ஒரு வருடம் ஆனது போல் தெரியவில்லை. இதோ அடுத்த பதிவர் 
திருவிழா வந்து விட்டது 

செப்டம்பர் 1ம் தேதி மாதத்தின் முதல் நாள் முதல் தரமாய் முத்திரை பதிக்க விழா ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. சென்ற ஆண்டு இந்த பதிவர் திருவிழாவை முன்னின்று சிறப்பித்த குழுவே, இந்த ஆண்டும் இன்னும் மென் மேலும் சிறப்புடன் நடத்த முன்னேற்பாடுகள் செய்து வருகிறார்கள். பதிவர் திருவிழா 2013 க்காக நியமிக்கப்பட்ட குழு மற்றும் அதன் விபரங்களை http://www.tamilbloggers.info/2013/07/blog-post_30.html சென்று தெரிந்து கொள்ளலாம் 


இவ்வருடமும் பதிவர்களின் அறிமுகம், கோவை நண்பர் சங்கவி அவர்களின் கவிதை 
நூல் வெளியீடு, சிறப்பு அழைப்பாளர் உரை, இதனோடு பதிவர்களின் பன் முக திறமைகளை வெளிபடுத்தும்  நிகழ்ச்சி புதிதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடனம்,பாடல், நடிப்பு,பல 
குரல் பேசி அசத்துதல், மற்றும் ஒரு குழுவாக சேர்ந்து கொண்டு நாடகம் என்று பதிவர்களின் 
 திறமைகள் உலகறிய செய்யும் நிகழ்ச்சி அரங்கேறுகிறது. பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், திரு.மதுமதி அவர்களின் 9894124021 என்ற அலை பேசி எண்ணிலோ,  kavimadhumathi@gmail.com 
என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொண்டு விபரங்கள் தெரிவிக்கலாம்.நானும் இதில் கலந்து கொண்டுள்ளேன் (அதுக்காக பயபடாதீங்க நீங்க பயபட்டால் நான் எப்படி மேடை ஏறுவது )


இவ் விழாவில் கலந்து கொள்ளும் பதிவர்கள் முன்னதாகவே கீழ் காணும் பதிவர்களை தொடர்பு கொண்டு (உணவு மற்றும் உப்சரிப்புக்காக)  தங்களின் வருகையை  மின்னஞ்சலில் உறுதிபடுத்தி கொள்ளுங்கள் 


ஆரூர் மூனா செந்தில் 
· அஞ்சாசிங்கம் செல்வின்
· சிவக்குமார் – மெட்ராஸ்பவன்
· பிரபாகரன் பிலாஸபி(சென்னை)
· தமிழ்வாசி பிரகாஷ் – மதுரை
· சதீஷ் சங்கவி – கோவை
· வீடு சுரேஷ்குமார் – திருப்பூர்
· கோகுல் மகாலிங்கம் – பாண்டிச்சேரி
· தனபாலன் - திண்டுக்கல்


விழா சிறக்க பொருளாதாரம் முக்கியமல்லவா.எனவே நன்கொடை தர விரும்பும் பதிவர்கள் மதுமதி மற்றும் பட்டிக்காட்டான் ஜெய் அலைபேசி எண்ணிலோ மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்


பதிவர் திருவிழா 2013 நடைபெறும் இடம், சென்னை வடபழனியில் கமலா தியேட்டரை 
ஒட்டி இடது புறத்தில் இருக்கும் CINE MUSICIAN’S UNION”  க்கு சொந்தமான கட்டடம்  
எங்கெங்கோ பூத்த மலர்கள் சேர்ந்து உருவாக்கும்  நந்தவனம் இங்கே தான் 


பதிவர் திருவிழா 2013 நடைபெறும் இடம் 




நம் எழுத்துக்கள் நமக்கு உருவாக்கி தந்த இந்த அறிய நட்பை மகிழ்ந்து
கொண்டாடுவோம் வாருங்கள் தோழர்களே

வருங்காலம் நமதாகட்டும்
வெற்றி நம் வசமாகட்டும்

ஆர்.வி.சரவணன் 

செவ்வாய், ஜூலை 30, 2013

ஸ்வீட் காரம் காபி - ஜூலை 2013​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​





ஸ்வீட் காரம் காபி 
---------------------------------------------
ஜூலை 2013​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ 


நேரம் 

சமீபத்தில் பார்த்த படங்களில் நேரம் படத்திற்கு செலவிட்ட நேரம் (பணம் )
திருப்தியாய் இருந்தது. (நேரம் விமர்சனத்தை நேரத்தோட எழுத மாட்டியா நீ என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.என்ன பண்றது டைம் தான் பிரச்னை) ஒரே நாளில் நடப்பதாக வரும் கதையில், நேரம் சரியில்லாத போது ஏற்படும் பிரச்னைகள் நேரம் சரியானவுடன் எப்படி சரியாகிறது (என்ன இது விசு டயலாக் மாதிரி வருது)  என்பதை ரசிக்கும் படி சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர்.


ஹீரோ நிவின் கேரக்டருகேற்ற  இயல்பை தந்திருக்கிறார் தன் நடிப்பில் 
 என்றாலும் ஹீரோயின் நஸ்ரியா வெரி நைஸ். அவரை கார் டிக்கியில் போட்டு விட்டு நகரும் பல காட்சிகள் நமக்கு ஏமாற்றத்தை தருகிறது.வில்லன் சிம்ஹா, (இந்த கேரக்டரை இன்னும் சீரியஸ் ஆக்கி இருக்கலாம்) நாசர், தம்பி ராமையா, ஜான் விஜய் கேரக்டர்களை ரசிக்க முடிகிறது.எனக்கு பிடித்த காட்சி என்றால் அது ஹோட்டல் காட்சி தான். பணம் கொடுக்க முடியாமல் தவிக்கும் நிவினை அவரது நண்பர் திட்டி விட்டு பணம் கொடுத்து  அழைத்து காட்சி நெகிழ்ச்சி 

ஒளிப்பதிவு கண்ணில் ஒற்றி கொள்ளலாம் போல் இருக்கிறது. முக்கா முழம் போடு பாடல் நம் எதிரில் டேபிள் இல்லாவிட்டாலும் எதிரில் இருப்பவர் முதுகில்  தாளம் போடலாமா என்று  தோன்ற வைக்கிறது 

நேரம் (பட குழுவினருக்கும்)  நல்லாருக்கு 

 
சிங்கம்-2

 சிங்கம் முதல் பாகம் பார்த்து இம்ப்ரெஸ் ஆனவன், இரண்டாம் பாகம் எப்படி இருக்குமோ என்று எதிர்பார்த்தேன்.மேலும் என்  மகன் ஹர்ஷவர்தனுக்கு இப்போது சூர்யா பிடித்த நடிகர். போனாலே ஆச்சு என்று ஒரே வம்பு  ( சின்ன வயசுல நான் பண்ண மாதிரி ) சரி என்று அவனை அழைத்து சென்றேன் 

இரண்டாம் பாகத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. முதல் பாகத்தில் இருந்த காதல் மற்றும் குடும்ப காட்சிகள் இதில் கம்மி. (முதல் பாகத்தில் 
சூர்யா குடும்பத்துடன் அளவளாவும் காட்சிகள் மற்றும் அனுஷ்கா வுடன் காதல் என்றெல்லாம் ரசிக்கும் படி இருக்கும்.) வில்லன் டேனி திரையை ஆக்ரமித்தது போல் ஆக்சன் காட்சிகள் ஆக்ரமிப்பு தான் நிறைய. வேகம் வேகம் என்றுதிரைக்கதையால்  இயக்குனரும்,நடிப்பால் சூர்யாவும் தன் வெயிட் டை காட்டியிருக்கிறார்கள். போலீஸ் அதிகாரிக்குரிய மிடுக்கு அவருக்கு சூப்பரா செட்டாயிருக்கு. ( ஓரிரு சீன்கள் தவிர மற்ற இடங்களில் கத்தி பேசுவதை குறைத்திருக்கலாம்) ஹன்ஷிகா பள்ளி மாணவியாக (நம்பி தான் ஆக  வேண்டும்) சூர்யாவை காதலிக்கிறார்.தன் பதவி உயர்வுகேற்றவாறு விவேக் (முதல் பாகம் போல் இல்லாமல் ) பேசியிருக்கிறார். தன் கவுன்ட்டர் களால் சந்தானமும் ரசிக்க வைக்கிறார். அனுஷ்கா வரும் காட்சிகளை இன்னும் அதிகபடுத்தி இருக்கலாம்.


இப் படத்தில் எனக்கு பிடித்தது  மேலும் வில்லன் டேனியை சூர்யா கைது செய்து சிறையில் அடைக்கும் பர பர காட்சிகள்.பொது சொத்தை சூரையாடுபவர்களை  சூர்யா தண்டிக்கும்  காட்சி.  தப்புல்ல என்று கர்ஜிப்பார் சூர்யா. (தண்டிக்கும்  விதம் ரைட்டுல்ல  நான் சொல்றேன்) 

சிங்கம் வெயிட்  

 
------

ஆபீஸ் சீரியல் 






நான் டி.வி சீரியல்கள் பார்ப்பதில்லை. (நாங்க மட்டும் பார்க்கிறோமா 
என்று முறைக்காதீங்க.) இருந்தும் நான் பார்க்கும் சீரியல் விஜய் டிவி யில் வரும் ஆபீஸ்.  முழுக்க  முழுக்க  (சில நேரங்களில் வீடு பிக்னிக் என்று காட்சிகள் வருகிறது) அலுவலகத்தை ,மையமாக கொண்ட கதை. பார்க்க கொஞ்சம் சுவாரஸ்யமாக தான் இருக்கிறது. கண்களால் பேசும் ஹீரோயின் எப்போதும் லொட லொட என்று பேசும் அவரது தோழி, ஹீரோவின் தோழன்  இவர்களை ரசிக்க முடிந்த அளவுக்கு காமெடி என்ற பெயரில்  
மூவர் அடிக்கும் கொட்டம்  ரசிக்க முடியவில்லை. சில இடங்களில் புன்னகைக்கும் படியும் சில இடங்களில்  கடுப்பை கிளப்புவதாகவும்
 இருக்கிறது.  எப்போதும் எல்லாரும் பேசி கொண்டே இருக்கிறார்கள். வேலைக்கு நடுவில் கொஞ்சம் காதல் கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் வஞ்சம் என்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.இது மாதிரி ஆபீஸ்ல எல்லாம் நமக்கு வேலை கிடைக்கலியே.அந்த மாதிரி ஆபீஸ் ல எல்லாம் உனக்கு வேலை கிடைக்காது. வேணும்னா நீ  முன்னுக்கு வந்து   அந்த மாதிரி கம்பெனி க்கு எம்.டி ஆகிடு  என்று நக்கலடிப்பது வேற யாரு மை மைண்ட் வாய்ஸ் தான்

------

காதல் கடிதம் போட்டி 

இணைய நண்பர் சீனு திடங்கொண்டு போராடு அறிவித்திருந்த 
போட்டியான   காதலன், காதலிக்கு எழுதிய அல்லது எழுத நினைத்த  
காதல் கடிதம். நானும் கலந்து கொண்டுள்ளேன்.இதன் மூலம் கிடைத்த 
பயன் புதிய அறிமுகங்கள் நிறைய கிடைத்திருக்கிறது  நட்பு வட்டம் பெரிதாகவும் உதவியிருக்கிறது.  போட்டியில் கலந்து கொண்டவர்களின் கடிதங்கள் எண்ணற்ற உணர்வுகள் படிக்க  வேண்டுமா  இங்கே சென்று படியுங்கள் http://www.seenuguru.com/2013/07/love-letter-contest.html வாழ்த்துக்கள் சீனு


------

ஒரு வரி தந்த நிறைவு 

கும்பகோணம் ரயில் நிலையத்தில் நான் சென்னை செல்ல ரயிலுக்காக
வெயிட் பண்ணிய போது ஒரு வி.ஐ.பி யை சந்தித்தேன். அருகில் 
பார்த்தவுடன் நான் விஷ் பண்ண அவரும் விஷ் பண்ணியதோடு மட்டும் இருந்திருந்தால் இங்கே குறிப்பிட விஷயம் ஏதுமில்லை . 
ஏதோ நெடு நாள் பழகிய ஒருவரை பார்க்கும் போது கேட்பது போல் "நல்லாருக்கீங்களா" என்றும் கேட்டார்.  எல்லோரையும் அவ்வாறே 
நலம் விசாரித்து  கொண்டிருந்தார். அவர் நடிகர் திரு .டெல்லி கணேஷ். தன் கோச் நிற்கும் இடம் நோக்கி கிளம்பும் போதும் வரேன் என்று எல்லோரிடமும் விடை பெற்றே கிளம்பினார்.(ஒரு வார்த்தை னாலும் அது அவரை மனசுல  உயர்த்திருச்சு)

------




டி .எம்.எஸ் 

சமீபத்தில் மறைந்த பாடகர் டி .எம்.சௌந்தரராஜன் அவர்கள்  பாடிய பாடல்களில் பல எத்தனை முறை கேட்டாலும் அலுக்காதவை. (திரை பாடல்களுக்கு ரசிகனான எனை ஈர்ப்பவை). முக்கியமாக, கண்ணை நம்பாதே, ஏன் என்ற கேள்வி, நான் ஆணையிட்டால்,ஆறு மனமே ஆறு  எங்கே நிம்மதி என்ற கொள்கை பாடல்களும் டூயட் பாடல்களில் ஆடலுடன் பாடலை, ஒருவர் மீது ஒருவர் ,பச்சைக்கிளி,  பாட்டுக்கு பாட்டெடுத்து, அமைதியான  நதியினிலே ஓடம் மற்றும் முருகன் பக்தி பாடல்கள் என் விருப்ப 
 கலெக்சனில் இருக்கிறது. அவர் மறைந்தாலும் அவர் பாடல் 
கேட்கும் போதெல்லாம் அவர் நம்மிடையே இருந்து கொண்டிருப்பது போன்றே உணர்வு. அவரது பாடல்களில் எனக்கு பிடித்த இன்னொரு
பாடல், செந்தமிழ் பாடும் சந்தன காற்று.... (டூயட் பாடல்) அந்த பாடல் வரிகளையே இங்கே அவருக்கு  புகழாரமாக சூட்டுகிறேன்.
(ஆம் அவர் செந்தமிழ் பாடும் சந்தன காற்று)

------



என்றென்றும் வாலி 

வாலி மறைந்ததில் வலி மிகுந்தது  தமிழுக்கு என்ற வரிகளை படித்தேன் 
 பல வருடங்களுக்கு முன் வெளியான ஒரு வார இதழில் (குமுதம் )வாலி பற்றி வந்திருந்த செய்தியை இங்கே குறிப்பிடுகிறேன்.வாலியிடம் ஒரு 
நண்பர் கேட்டாராம் ஏன் நீங்கள் இந்த பெயர் வைத்து கொண்டீர்கள் 
என்று. இராமாயணத்தில் வாலி யாருடன் மோதுகின்றானோ 
அந்த எதிரியின் வலிமை அவனுக்கு வந்து விடும் சக்தி பெற்றவன் 
அவன். அது போல் நான் யாரை சந்திக்கின்றேனோ அவரது அறிவும் எனக்கு வந்து  விட வேண்டும் என்று தான் இந்த பெயர் வைத்து கொண்டேன் 
என்று சொல்லியிருக்கிறார் வாலி. நண்பர் ஜாலியாக, அப்படி ஒன்றும் 
நீங்கள் அறிவாளி ஆனது போல் தெரியவில்லையே என்றாராம். அதற்கு 
வாலி  கொடுத்த பதிலடி.  அப்ப நான் இன்னும் அறிவாளி யாரையும்
சந்திக்கவில்லை போலிருக்கிறது.இப்படி வார்த்தைகளில்விளையாடும் 
வாலி நின் புகழ் நீடுழி வாழி

-----





 வேண்டுகோள் ஒன்று  

எனக்கு  இயக்குனர் ஆக வேண்டும் என்பதில் விருப்பமுண்டு 
குறும்படம்  எடுக்க ஆர்வமாக இருக்கிறேன். அதற்காக சில  கதைகளும் 
ரெடி செய்திருக்கிறேன். இருந்தும்  தொழில் நுட்ப ரீதியில் நான் எந்த   பயிற்சியும் மேற் கொள்ள இயலவில்லை. எந்த ஒரு படபிடிப்பிலும் நான் பார்வையாளனாக கூட இருந்ததில்லை. எனவே என் தளம் தொடர்ந்து படிக்கும் நண்பர்கள் (?) யாரேனும்  குறும்படம்  எடுக்கும் போது எனக்கு தெரிவித்தால் நானும் கலந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன் 
சொல்வீர்களா ?


ரசித்த போட்டோ 





மன உறுதிக்கு இதை விட ஒரு சான்று வேண்டுமா என்ன 




செய்திகள் சில வரிகளில் 

தமிழ்நாட்டில் விவசாய குடும்பத்தில் பிறந்து இன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக உயர்ந்துள்ளார். நீதியரசர் திரு.பி.சதாசிவம் அவர்கள் 

நீதிக்கு தலை வணங்கி வரவேற்கிறோம் 

கஞ்சா கருப்பு தனது சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் கிராமங்களுக்கு இலவசமாக ஆழ்குழாய் கிணறு அமைத்துக்கொடுத்து கொண்டு இருக்கிறார்.இதுவரை 12 ஊர்களில் 50 போர்வெல் போட்டுக் கொடுத்திருக்கிறாராம்.

கஞ்சா கருப்பின் மனசு வெள்ளை


------


FINAL PUNCH




எனது நண்பர் ஒருவர்  நீங்கள் ப்ளாகில் எழுதுவது  சரி அடுத்த கட்டத்துக்கு செல்லுங்கள் பத்திரிகைகளுக்கு எழுத  முயற்சி செய்யுங்கள் என்று அறிவுறுத்தினார்.நானும் விடாது ஒரு மாதமாக முயற்சித்ததில் விளைந்த பயன், நான் எழுதி அனுப்பிய கட்டுரை  குடிக்காதது குத்தமாய்யா விகடன் டைம் பாஸ் இதழில் 12-07-2013  வெளியானது. விளம்பர வால் பேப்பரில் கடைகளில் இந்த தலைப்பை பார்த்து இன்னும் சந்தோசமானேன். உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. (முயற்சி திருவினையாக்கும் என்பதை உணர்த்திய  நிகழ்வு இது)   




ஆர்.வி .சரவணன் 

வெள்ளி, ஜூலை 26, 2013

திஸ் இஸ் T.R. ஸ்டைல்






திஸ் இஸ் T.R.  ஸ்டைல்


என் கல்லூரி நாட்களில்  நான் எழுதிய கதையில்
ஒரு காட்சி.ஹீரோவின்  தங்கை ஒருவரை (செகண்ட் ஹீரோ ) காதலித்து
கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமாகி விடுகிறார்.(20 வருஷத்திற்கு முன்னாடி
எழுதின சீன் அப்படி தான் இருக்கும்). ஊராருக்கு என்ன பதில் சொல்வது என்று கலங்கும் அம்மாவை சமாதானபடுத்த,  கதாநாயகன் பேசுவதாக ஒரு வசனம் வரும். இதில் டி. ராஜேந்தர் நடித்தால் வசனம் எப்படி
இருக்கும் என்று  (ரூம் போடாம ) யோசித்து நான்
எழுதியதை இதோ உங்களுக்காக தருகிறேன். தன் படங்களில் 
செண்டிமெண்ட் சீன்களில் டி .ஆர் கண் கலங்கி தலையை அசைத்த படியே பேசுவார். அந்த கான்செப்டில் படித்து பாருங்கள் 


அம்மா,

ஊரார் சொல்லும் பழி

நமக்கு காட்டாது ஒரு வழி

அவங்க வெட்டுவாங்க நமக்கு அவதூரு ங்கிற குழி

அது நம் போன்றவர்க்கு என்னிக்குமே தீராத வலி

அதுக்காக உங்க மனசிலே ஏன் கிலி

அவங்க பேச்சுக்கு நாம ஏன் ஆகணும் பலி

அவங்க சொல்றதை மனசிலேருந்து அழி

அவங்களுக்கு காலம் தரட்டும் கூலி

நம்ம குடும்பம் சந்தோசமாக வாழ தேடுவோமா ஒரு வழி

அதற்கான மன அமைதியை குடும்பத்திற்கு அளி



 எப்பூடி.... 


ஆர்.வி.சரவணன் 

ஞாயிறு, ஜூலை 07, 2013

"திடங்கொண்டு போராடு-காதல் கடிதம் பரிசு போட்டி" ஆசையில் ஓர் கடிதம்





"திடங்கொண்டு போராடு-காதல் கடிதம் பரிசு போட்டி" 

ஆசையில் ஓர் கடிதம்   


எப்படி  அழைக்கலாம் உன்னை, 

அன்பே என்றோ என்னவளே என்று அழைக்கும்  உரிமை உண்டா என  தெரியாததால் நான் நேசம் கொண்ட பெண்ணுக்கு என்றே ஆரம்பிக்கிறேன்.  

உன் மனது என்னை பற்றி அங்க என்ன சொல்லுது என்பதை இங்கிருந்து 
ஒட்டு கேட்க முடியவில்லை. நான் நினைப்பதை சொல்லி விடுமாறு மனது கரையில் எடுத்து போட்ட மீன் போல் துடிப்பதால் என் உள்ளக் கிடக்கையை வார்த்தைகளில் கொட்டிய காதல் கடிதம் இது  

அலை பேசியோடு அலை பாயாத, இணையத்தோடு இணைப்பில் இல்லாத,  முக நூலின் முகம் பார்த்திராத, காலம் அது. பணக்காரர்கள் குடியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பிலே உனது வாசம். அந்த குடியிருப்பின் நிர்வாக அலுவலகத்தில் எனக்கு வேலை . எந்த வீட்டில் என்ன பிரச்னை என்றாலும் என் தலை உருண்டு கொண்டிருக்க, பாலைவனமாய்  இருந்த என் அலுவலக நேரங்கள் உன் வரவால் தான் சோலைவனமாக மாறியது. 

 நீ அப்படியொன்றும் அழகியல்ல.(சட்டென கோபம் கொள்ளாமல் 
பட்டென அடுத்த வரியை படி)  முதல் முறை பார்க்கும் போது மறு 
முறையும் பார்க்கலாமே என்று தோன்ற வைக்கும் தோற்றம் நீ. 
அதுவே  தொடர்கதையாகும் அதிசயமும் நீ. எண்ணற்ற தேவதைகள்  
அங்கே உலா வந்த போதும் உன்னிடத்தில் மட்டும் ஈர்க்கப்பட்டேன்.  
ஈர்ப்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் புரிந்தது . எதனால் இந்த ஈர்ப்பு என்று 
பட்டிமன்றம் வைத்தால்  முடிவு எட்டபடாமலே  அது முடிவுக்கு 
வரும் என்பதால் விட்டு விடலாம். ஆனால் உன்னை அப்படி விட்டு 
விட முடியாத  சம்திங் ஸ்பெஷல் நீ.  மாநிறம் தான் என்றாலும்  கோபம் வந்தால் மட்டும் முகம் ஏன் சிகப்பு சாயம் பூசி கொள்கிறது (என்னையும் கொல்கிறது ) 

உன்னை சந்தித்த வேளை பற்றி இங்கே கொஞ்சம் சிந்திக்கிறேன் 
நான் வாசல் கேட்டருகில் நின்றிருந்தேன்.( வாட்ச்மேன் வெளியே சென்றிருந்ததால்) நீ கல்லூரிக்கு செல்ல சைக்கிளை  தள்ளிய படி வந்து கொண்டிருந்தாய்.வேதியியல் என்றால் வேப்பங்காயாய் கசக்கும் எனக்கு  கூட ஒரு ரசாயன மாற்றம் அப்போது நிகழ்த்தினாய். முதல்  பார்வையில் தென்பட்ட  இனம் புரியாதொரு சிநேகம் பொங்கலில் தட்டுபட்ட முந்திரி போல தான் இருந்தது. அதை சுவைத்து கொண்டே நான் நிற்கையில் பிரேக் போட்டது போன்று நின்று விட்டாய் நீ. உன் தாவணி அங்கு நின்றிருந்த பைக்கின்  கைப்பிடியில் மாட்டி கொண்டிருந்தது.  நீ சைக்கிளை  நிறுத்த முடியாமலும் தாவணியை விடுவிக்க முடியாமலும் தவிக்க, முட்டு சந்திலும் சரக்கென்று வேகமாய்  பாய்ந்து வரும் ஆட்டோ போல் நான் உன் அருகே வந்தேன்.ஒரு ஆபத் பாந்தவனாக மாறி, தாவணியை எடுத்து விடும் எண்ணத்தில் வந்தவனை பண்பாடு என்பது சிக்னல் போட்டு தடுத்ததால் உன் சைக்கிளை பிடித்து கொண்டேன். நீ தாவணியை விடுவித்து கொண்டாய் 
"வண்டியை குறுக்கில் நிறுத்தியிருக்காங்க பாருங்க"  என்று குரலில் 
சலிப்பை தந்தாய். "நாளை முதல் எந்த வண்டியும் உங்கள் ராஜ பாட்டையில் குறுக்கிடாது" என்று களிப்புடன் பதில் தந்தேன். அதற்காக ஒரு புன்னகையை பரிசளித்தாய். சைக்கிளை என்னிடமிருந்து மீட்டவள்,கூடவே  என் மன வீணையை பார்வையால் மீட்டி விட்டே கிளம்பினாய். மாலையில்  
நீ திரும்ப வரும் நேரத்தை குறித்து கொண்டது மனது. 

எனது தினசரி வேலைகளில் ஒன்றாக, நீ வரும் நேரத்தில் (கல்லூரிக்கு நேரத்திற்கு  செல்லாதவன்) நேரம் தவறாமல் அட்டெண்டன்ஸ் கொடுப்பதும் , பதிலாக  ஒரு புன்னகையை பெற்று கொள்வதுமாக வாழ்க்கை இன்ப மயமானது  

 அடுத்து உன் பெயர் தெரிந்து கொள்ளும் ஆசை துளிர் விட்டது.உன்னிடம் கேட்டால் என் ஆசையின் நிலவரம் தெரியலாம். மற்றவர்களிடம் கேட்டால் அதுவே கலவரமாகலாம். என்ன செய்வது என்பதை  ரூம் போட்டு யோசிக்கும் அளவுக்கு அவசியமில்லாமல்  சென்ட் பாட்டில் நழுவி சந்தனத்தில் விழுந்தது போல் (எத்தனை  நாளைக்கு தான் பழம்  நழுவி பாலில் விழுந்தது என்று சொல்வது) ஒரு நாள்  கொரியரை கையில் வைத்து கொண்டு யாருக்கு வந்திருக்கிறது என்று ஒவ்வொரு வீடாக ஏறி  இறங்கியவன் உன்னை பார்த்ததும் இதை சாக்காக வைத்து உன்னிடம் பேசினேன். என் பெயர் 
அது தான் என்று சிரித்த படி கவரை வாங்கி கொண்டாய்.என்னை சுற்றிலும் வெள்ளை உடை தேவதைகள் கோரஸ் பாட, உன் பெயரை  உதடுகள் தொடர்ந்து உச்சரித்தது. மனது வேகமாய் சொல்லாதே என்று எச்சரித்தது

ஒரு நாள் எனக்கொரு ஆசை எழுந்தது. நீ வரும் வேளையில் நான் 
கேட்டில் இல்லாதிருந்தால் நீ எனை தேடுவாயா என்று டெஸ்ட் வைத்து 
என் ஆசையின் டேஸ்ட் அறிய முயற்சித்தேன்.மாடிக்கு சென்று தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அளவிடுவது போல் போக்கு காட்டி நின்று கொண்டு உன் எண்ணத்தை அளவிட்டேன். நீயோ அலட்டி கொள்ளாமலே கேட்டை கடந்து சென்று விட்டாய்.  வெறுத்து போனதால்  மாலையில் நீ வீடு திரும்பும் நேரத்தில் கேட்டில் நிற்பதை தவிர்த்தேன். நீ வரும் போதே வழக்கமாய் நான் நிற்கும் இடத்தை பார்வையிட்ட படி வந்தாய். சைக்கிளை நிறுத்தும் போது  சுற்றிலும் பார்த்தாய்.வீட்டினுள் நுழையும் முன்னும், என் அலுவலக 
ஜன்னல் பக்கம் உன் பார்வை பந்து சுழன்று வந்தது.  நான் பரவசமாகி 
உடனே வெளி வந்தேன்.  கபில் தேவ் போல் அந்த பார்வை பந்தை 
அழகாக கேட்ச் செய்து கொண்டேன். திடீரென்று நான் வெளிப்பட்டது 
உன்னை  திடுக்கிட வைத்திருக்க வேண்டும். நொடியில் சுதாரித்து ஒரு 
வெட்க  சிரிப்புடன் வீட்டினுள் நுழைந்து விட்டாய். நான் உன்னுடன் டூயட் 
பாட நிலவுக்குள்  நுழைந்து விட்டேன் (டூயட் பாட வெளிநாடு தான் செல்ல வேண்டுமா என்ன)

அடுத்து மழை பெய்யும் ஒரு நாளில் நாம் சாலையில் சந்தித்து கொண்டோம் மழை ஆரம்பித்தது.  நீ உன்  கையிலிருந்த குடையை பிரிக்க முயல அது செய்த ஸ்ட்ரைக் உனை திணற வைத்தது.   நான் உதவிக்கு வந்து குடையின் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற வைத்தேன். நீங்களும் வாங்களேன்  என்று அழைப்பு விடுத்தாய். அது ஒப்புக்கா அல்லது ஒரிஜினலா என்று தெரியாமல் தடுமாறி நாகரிகமாய் மறுத்தேன். இருந்தும் நீ அழைத்ததை எண்ணி அடுத்து வந்த நாட்களில் ஒரு சுற்று சந்தோசத்தில் பெருத்தேன்.

அடுத்து கவிதைகள் என்ற பெயரில் என் பேனா கிறுக்கலை ஆரம்பித்தது   கிறுக்கியவற்றில் நான் கிழித்தது போக எஞ்சிய கவிதைகளில் ஒன்று 



நீ வரும் வழியெங்கும்
ஒரு கற்றை பார்வைகளை
இறைத்து வைத்திருக்கிறேன்
இவை அனைத்தும்
உன்
ஒற்றை
பார்வைக்காக....


திடீரென்று நீ இரண்டு நாட்களாக வெளியே வரவில்லை. நடுவுல 
கொஞ்சம்  என்னாச்சு என்பது தெரியாமல் திண்டாடினேன்.  உன் காலில் 
ஏதோ அடிபட்டதால் நடக்க சிரமமாகி வீட்டில் இருப்பதாக உன் அம்மாவிடம் தகவல் அறிய பெற்றேன். அடுத்து எப்போது பார்க்கலாம் என்று முப்பொழுதும் காத்திருக்கையில் வெளி வந்தாய் விந்தி நடந்தவாறே.  உன் காலையும் முகத்தையும்  ஒரு சேர பார்த்தேன்.நலமா என்பது போல். நீ சிரித்த படி தலையாட்டினாய்  அந்த நேரம் பார்த்து  எங்கிருந்தோ ஒலித்தது நலம் நலமறிய ஆவல்....  என்ற பாடல். (சிச்சுவேசன் சாங்காம் ) இருவரும் சிரித்து  கொண்டோம் 

பேசாமலே இப்படி பார்வை பரிமாற்றங்கள் நடந்த வேளையில் தான்  
ஒரு நாள் உன் வீட்டுக்கு விருந்தினர் வந்தார். உன் வீட்டை கை காட்டியவன் கூடவே அவர் உங்கள் உறவினர் தானா என்பதை கூடவே வந்தும் உறுதிசெய்து கொண்டேன். வந்தவர் "என்னை திருடன் னு நினைச்சியா" 
என்று கோபமாய் எகிற, உன் அப்பா  உதவிக்கு வந்தார். "இந்த  பையன் இருந்தா வீட்டை திறந்து  கூட வச்சிட்டு போகலாம். அந்த அளவுக்கு ரொம்ப நம்பிக்கையான பையன். ஒரு எறும்பு நுழைவது கூட அவன் அனுமதியின்றி நுழைய முடியாது "என்று சொல்லி எனக்கு சூட்டிய மகுடம்,   ஏதோ எழுதி கொண்டிருந்த உன்னை நிறுத்தி கவனிக்க வைத்தது. உன் தந்தை சூட்டிய மகுடம்  கேட்டு மனசு  உற்சாகத்தில் அனத்தியது என்றாலும் அந்த வார்த்தைகள் ஒரு முள் கிரீடம் தான் என்பதை புத்தி எனக்கு உணர்த்தியது 

இந்த குடியிருப்புக்கு சிறந்த பாதுகாவலன் நான் என்று சொல்லும் போதே  உனக்கும் அல்லவா பாதுகாவலன் ஆகின்றேன். வேலியே பயிரை மேயலாமா என்று என் மனது தேய்ந்த ரெகார்ட் போல்  மீண்டும் மீண்டும் உள்ளுக்குள் உறுத்தி  கொண்டிருக்க,வேலையே என் காதலுக்கு எதிரியானதே என்ற என் அங்கலாய்ப்பில் உன்னை பார்க்காமல் இருக்குமாறு புத்தி அடக்க  முற்பட்டது. .மனது முடியாது என்று அடம் பிடித்தது. வேலையா காதலா என்று எனக்குள் நடந்த தேர்தலில் காதல் வெற்றி பெற்றது.  இந்த வேலையிலிருந்து விடுபட்டு 
வேறு வேலையில் சேர்ந்து கொண்டேன்.

விடை பெற்று செல்வதை சொன்ன போது ஏன் என்று மொத்தமாய் குரல் எழுப்பியவர்களை சமாளித்து  நீ என்ன சொல்ல போகிறாய்  என்று அறியும் ஆவலில் காத்திருக்க, வெளியில் செல்ல சைக்கிள் எடுத்து கொண்டு வந்தவள் நான் பேச தயாராய்  நிற்பதை பார்த்தவுடன் (நான் கிளம்புவது தெரிந்து 
விடை கொடுக்க வந்தாயோ) என்னருகிலே சைக்கிளை  நிறுத்தி ஒற்றை காலை ஸ்டைலாக ஊன்றி நின்ற படி சொல்லுங்க என்றாய் அதே புன்னகையுடன். அப்போதே என் காதலை சொல்லி விட வாய் வரை வந்த வார்த்தைகளை சைலென்ட் மோடில் வைத்து  நான் விடை பெற்று கிளம்புவதை மட்டும் சொன்னேன். "பெஸ்ட் ஆப் லக்" என்று ஒரே வார்த்தையில் கிளம்பி விட்டாய். அவ்வளவு தானா. எனக்கிருக்கும் வேதனை உன்னிடம் இல்லையா. இல்லை தேர்ந்த நடிப்பு திறனுடன் அதை மறைத்து கொண்டு செல்கின்றாயா  என்ற குழப்பங்களுடனே அகன்றேன். 

புதிய வேலையில் அமர்ந்து பிறிதொரு நாள் எல்லோரையும் பார்க்க 
வந்ததாய் நான் சாக்கு சொல்லி வந்தது உன்னை பார்க்க தான் . நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி பாராட்டி உன் வீடு நோக்கி வந்த போது  தான் தெரிந்தது.  நான் வேலை மாறியது போல் (உங்கப்பாவுக்கு வேறு மாநிலம் மாற்றல் ஆனதால்) நீ  வீடு மாறி விட்டாய் என்பது.  நான் வேலை தான் மாற்றி கொண்டேன் நீ ஸ்டேட்டையே மாற்றி கொண்டாய். நொந்த மனதுடன், எனக்கான தகவல் எங்கேனும் விட்டு சென்றிருக்கின்றாயா என்று கூகுள் போல் ஆராய்ந்தேன்.நீ அடிக்கடி மொட்டை மாடியில்  அமர்ந்து படிக்கும் இடத்தை சென்று பார்த்த போது  அங்கே சிறுவர்களின் கிறுக்கலில்  முட்டாள் என்ற வரிகள் என்னை பார்த்து இளித்தது. வேலைக்கு துரோகம் செய்ய கூடாது என்று நினைத்து  காதலை கோட்டை விட்டவன்  
முட்டாளா ?  வலியுடன் வெளியேறியவன் உன்னை நீக்கும் வழி தெரியாதவனானேன் 

 இருந்தும் எனக்கு சில விஷயங்கள் தெளிவுபடவில்லை. என்  வேதனை 
நீ அறிந்திருப்பாயா.நீயும் இது போல் வேதனை பட்டாயா. அல்லது என்னை 
ஒரு ரயில் சிநேகிதன் போல் தான் எண்ணி கொண்டாயா. அப்படியெனில் 
உன் பார்வைக்கும் அந்த கள்ளமில்லா சிரிப்புக்கும் அர்த்தம் என்ன இன்று 
வரை எனக்கு புரியவில்லை

இப்போது நீ எங்கே இருந்தாலும் என்னை பற்றிய நினைவுகள் உன் ஞாபக அடுக்குகளில் தூசு படிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். எனது அந்த நாட்களை இனிமையாக்கிய  உன் வாழ்க்கை முழுக்க இனிமை நிறையட்டும். நீ எங்கிருந்தாலும்  நலமுடன் இருப்பாய் ஏனெனில் உன் நினைவுகள்  என்னிடத்தில் நலமுடன் இருக்கிறது.


இப்படிக்கு   
உன் மீது நேசம் கொண்ட   
நெஞ்சம்  

******

நண்பர் திடங்கொண்டு போராடு சீனு காதல் கடிதம் பரிசுப் போட்டி என்ற பெயரில் போட்டி அறிவித்திருக்கிறார். இப்படி போட்டி வரும் என்று கல்லுரி காலத்தில் தெரிந்திருந்தால் அப்போதே காதலித்து பார்த்திருக்கலாம்.
கடிதமும் இருந்திருக்கும். காதல் அனுபவம் இல்லையாதலால் மூளையை கசக்கி (பேப்பரை நிறைய கசக்கி ) திடங்கொண்டு போராடு-காதல் கடிதம் பரிசு போட்டிக்காக கற்பனையில் எழுத வேண்டியதாகி விட்டது. இந்த போட்டியில் பங்கு பெற வைத்த சீனு, மற்றும் போட்டியில் கலந்து கொள்ளும் இணைய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும் 

ஆர்.வி.சரவணன்