சனி, மார்ச் 25, 2017

கொஞ்சம் சிரிங்க பாஸ்






கொஞ்சம் சிரிங்க பாஸ்


இந்த  நகைச்சுவை பத்தி என்ன நினைக்கறீங்க பாஸ். நாங்க நினைக்கிறது இருக்கட்டும் நீ முதல்ல சொல்லுனு தானே கேட்கறீங்க. சொல்றேன். இந்த நகைச்சுவை படிக்கிறப்ப நல்லாருக்கு. டிவி ல பார்க்கிறப்ப நல்லாருக்கு. அட சுத்தி இருக்கிறவங்க பேசினால் கூட கேட்க நல்லா தான் இருக்கு ( என்ன சூர்யா சிங்கம் டயலாக் மாதிரி இருக்கு) ஆனால் நாமளே ஒரு நகைச்சுவை படைப்பை உருவாக்கணும்னா கஷ்டமால்ல இருக்கு.

 நான் கொஞ்சம் சீரியஸ் டைப்.நான் ஜாலியா சிரிச்சு பேசணும்னு நினைக்கிறப்ப , என்னை டென்சன் ஆக்கணும் னே சொந்த காசுல பிளைட் பிடிச்சு வரவனும் இருக்கான். நான் சீரியசா இருக்கிறப்ப அதை பத்தி அலட்டிக்காம, என்னை சுத்தி வந்து ஜாலியா மொக்கை போடறது மட்டுமில்லாம நான் சீரியசா பேசறதுக்கு எல்லாம் கவுன்ட்டர் குடுக்கிறதுக்காக பஸ்ஸை பிடிச்சு விதௌட் ல வரவனும் இருக்கான்.

என்ன தான் உன் பிரச்சனை னு கேட்கறீங்களா சொல்லிடறேன் 
என் நண்பன் ஒருத்தன்  சினிமால நடிக்கணும் சந்தானம் மேத்ஸ் ( அதாங்க கணக்கா) ஆகணும் னு ஆசைப்படறான். டிவி சானல்ல புதுசா நடிக்க வரவங்களுக்கு கேட் திறந்து விடறாங்களாம். பெரிய டைரெக்டர்  சீப் கெஸ்ட்டா வறாரு.   நான் நடிக்கிறதுக்கு நீ காமெடி ஸ்கிரிப்ட் எழுதி கொடு னு கேட்டு ஒரே டார்ச்சர் பண்றான். அவன் டார்ச்சருக்கு சாம்பிள் வேணுமா. நடு நைட் ஒரு மணிக்கு போன் பண்ணி எழுத ஆரம்பிச்சிட்டியா னு கேட்கிறான் பாஸ்.இவன் தொல்லை தாங்காம, என் கிட்டே சீரியஸ் சப்ஜெக்ட் இருக்கு வேண்ணா எடுத்துட்டு போனு சொன்னேன். யாருக்கு வேணும் உன் சீரியல் என்று சீரியசா சொல்றான். சீரியஸ்னு நான் சொன்னதை சீரியல்னு  புரிஞ்சுகிட்டான் போலிருக்கு பய புள்ள.  

"டேய் காமெடி சப்ஜெக்ட் எழுத நான் ரொம்ப கஷ்டப்பட்டாகணும்னு சொன்னேன் நல்ல பேரு வேணும்னால் கஷ்டப்பட்டு தான் ஆகணும். உப்பு தின்னவன் தண்ணி குடிச்சி தானே ஆகணும்னு" தத்துவம் பேசறான். நான் சும்மா இல்லாம நம்ம சந்தானம் மாதிரி கவுன்ட்டர் கொடுத்துட்டேன். "அப்ப சர்க்கரை சாப்பிட்டவன் சர்பத் குடிக்கலாமானு"  இதெல்லாம் நல்லா பேசு. எழுத  வரலைன்னு பொய் மட்டும் சொல்லு" அப்படிங்கிறான்.

‘‘என்னங்க... ஏசிப் போடுங்க, ஏசிப் போடுங்கன்னு ஒரு வாரமா கரடியாக் கத்திட்டிருக்கேன். கொஞ்சமாச்சும் கவனிக்கிறீங்களா?’’ என்றாள். ‘‘அறிவு கெட்டவளே... மனுஷியாக் கத்த வேண்டியது தானேடி முட்டாளே... லூசு...’’ என்று ஆரம்பித்து நான் திட்டத் திட்ட, அவள் முகம் சிறுத்தது.  ‘‘இப்ப எதுக்காக இப்படிக் கன்னாபின்னான்னு திட்டறீங்களாம்?’’ என்றாள் 
மெதுவாக. ‘‘நீதானே ஏசிப்போடுன்னு சொன்ன... அதான் நல்லா ஏசிப் போட்டேன்’’ என்றேன். சப்தமெழத் தலையில் அடித்துக் கொண்டாள். 

இப்படி வார்த்தைல வாலி பால் ஆடற மின்னல் வரிகள் கணேஷ் சார் மாதிரி எழுத முடியுமா ?

பார்த்தசாரதி கோவில் தரிசன க்யூவில் பக்தர்கள் மல்டிப்ளக்ஸில் படம்பார்க்க வந்தவர்களைப்போல மரியாதையாக நின்றிருக்க, புளியோதரை ஸ்டால் மட்டும் ஆதார் அட்டை சிறப்புமுகாம்போல அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. புரட்டாசி சனிக்கிழமையன்று, பெருமாள் கோவிலில் ஆஜர்போட்டு, புளியோதரையை வயிற்றில்போட்டால், வழியில் எங்கும் நிற்காத வாகனத்திலேறி வைகுண்டம் போய்விடலாம் என்று எப்போதோ படித்த ஞாபகம். 

இப்படி வரிகளில் நிஜத்தை நகைச்சுவைல முக்கி எடுத்து  எழுதற சேட்டைக்காரன் சார் மாதிரி தான் எழுத முடியுமா ?


நீ எழுதலை என்றால் நீ எழுத்தாளன் இல்லை னு மீம்ஸ் போட்டு கலாய்ப்பேன்னு சொல்றான். (என்னமோ நான் எழுத ஆரம்பிச்சப்ப ப்ளெக்ஸ் வச்சி வாழ்த்து தெரிவிச்ச மாதிரி )  சரி என் எழுத்தாலே அவன் அவஸ்தை படனும்னு விதி இருக்கு. யாராலே மாற்ற முடியும்னு  எழுத உட்கார்ந்தேன் யோசிச்சதிலே டீ கடைக்காரர் லாபம் பார்த்தது தான் மிச்சம் (டீயா குடிச்சேன் எழுத மூடு வரணும்ல ) சரின்னு ஒரு ஐடியா பண்ணேன் இணையத்துல நகைச்சுவையா எழுதறவங்களை போய் (அவங்க தளத்துல தாங்க) பார்ப்போம் னு முடிவு பண்ணி உட்கார்ந்தேன் 

அடுத்து நண்பர் கோகுலத்தில் சூரியன் வெங்கட் தளத்துக்கு போனேன்  அவர் ஒரு வார்த்தையில் டரியல் ஆகி போனதை  படிச்சேன் இதெல்லாம் டூ மச்.  

கல்லாதது உலகளவு னு ஒரு தளம் போனேன் நண்பர்
கலியபெருமாள் கொஞ்சம் தமிழும் கொஞ்சம் சிரிப்பும் னு ஒரு பதிவு எழுதியிருக்கார் கேள்வியிலே போதை கலந்து

அடுத்து நான் போனது மனதில் உறுதி வேண்டும் தளம்  நண்பர் மணிமாறன்
எழுதிய இந்தியண்டா படிச்சப்ப எழுந்து அவருக்கு ஒரு வணக்கம் வைக்கணும் னு 
தோணுச்சு

அடுத்து கும்மாச்சி யோட தளம். இங்கே சிரிக்க சிந்திக்க 
பதிவை படிச்சேன்.

அடுத்து துளசி கோபால் அவர்களின் துளசி தளம்.  இங்க கொலு பொம்மைக்கு படி வாங்கின கதையை ஜாலியா சொல்லிருக்கார் 

இதெல்லாம் படிச்சதுக்கப்புறம் கொஞ்சம் தெம்பாகி எழுதறதுக்கு பேனா எடுத்துட்டேன். என்னங்க கிளம்பறீங்க. பாவம் நீங்களே கன்பியுஸ் ஆகிட்டீங்க போலிருக்கு. சரி பரவாயில்ல நான் எழுதின ஜோக் ஒன்னு சொல்றேன் கேட்டுட்டு கிளம்புங்க 

"ஏண்டா உன் காதலியை ட்ராப் பண்ணிட்டு வரேன் னு சைக்கிளை எடுத்துட்டு
போனியே ட்ராப் பண்ணிட்டியா"

"அதை ஏண்டா கேட்கிறே சொந்தமா ஒரு பைக் கூட இல்லே உனக்கெல்லாம் எதற்கு

காதலின்னு என் காதலையே ட்ராப் பண்ணிடாடா"

சிரிப்பு வரலைனாலும் தலைப்புல சொன்னதுக்காகவாவது சிரிச்சிடுங்க.

ஆர்.வி.சரவணன் 

வலைச்சரத்தில் ஒரு வாரம் ஆசிரியராக இருந்த போது  எழுதியது இந்த பதிவு.
நன்றி சீனா அய்யா, தமிழ்வாசி பிரகாஷ் 


சனி, டிசம்பர் 10, 2016

யதார்த்தம் - குமுதம் ஒரு பக்கக் கதை






யதார்த்தம்
(ஒரு பக்கக் கதை)

"படப்பிடிப்பில் விபத்து. பிரபல ஹீரோ சதீஷ் காயம்" என்ற தலைப்பு செய்தியை  கலா படிக்கவும், கட்டிலில் படுத்திருந்த அவள் கணவன் அசோக் செய்தியை அறிந்து கொள்ளும் ஆவலுடன்  அவள் முகத்தைதிரும்பி  பார்த்தான். மேலே படி  என்பது போல்.


"தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவான இளம் புயல் சதீஷ் நடித்து கொண்டிருந்த புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பிரபல ஸ்டுடியோ ஒன்றில் நடந்து கொண்டிருந்தது. காட்சிப் படி ஹீரோ மாடியிலிருந்து கீழே இருக்கும் ஸ்டன்ட் நடிகர் மீது குதிக்க வேண்டும். அப்படி குதித்ததில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரால் எழுந்திருக்க முடியாமல் போகவே பட யூனிட் அவரை அவசரமாக அருகிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள்டாக்டரகள் குழு  அவரை குணப்படுத்தும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறது


அவர் விரைவில் குணமாக வேண்டி முன்னணி நட்சத்திரங்களும் அரசியல் பிரமுகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.அவரது ரசிகர்களும் தங்கள் அபிமான நடிகர்  உடல் நலம் பெற வேண்டி கோவில்களில் பிரார்த்தனைகளும் அன்னதானமும் செய்து வருகிறார்கள். சதீஷ் விழுந்த இடம் கீழே உள்ள படத்தில் அம்பு குறியிட்டு காட்டப்பட்டுள்ளது."


செய்தியை படித்து முடித்த கலா பேப்பரை அருகிலிருந்த டீப்பாயின் மேல் சலிப்புடன் போட்ட படி,  "உங்களை பற்றி ஒரு வார்த்தை கூட எழுதலை பாருங்க  " என்றாள் கலங்கிய கண்களுடன்.

ஹீரோ சதீஷ் தன் மீது விழுந்ததால், இடுப்பு எலும்பு முறிந்து போய்  ரத்த காயங்களுடன் மனைவியின் கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் அரசாங்க மருத்துவமனைகட்டிலில் படுத்திருந்தான் ஸ்டண்ட் கலைஞன் அசோக்.


ஆர்.வி.சரவணன் 

குமுதம் (03-08-2016) வார  இதழில் வெளியான எனது ஒரு பக்க சிறுகதை யதார்த்தம். 
குமுதம் ஆசிரியர் குழுவிற்கு என் நன்றி.



வெள்ளி, டிசம்பர் 02, 2016

வா, காதல் செய்வோம்-4





வா, காதல் செய்வோம்-4

னோவிடம் சொன்னது போலவே மறுநாள் பத்மினி பாட்டி வீட்டிற்கு வந்து விட்டார். அவர் வரப் போகிறார் என்றவுடனே அந்த பங்களா அவசர அவசரமாக தன்னை நேர்த்தியாக வைத்து கொள்ள ரொம்பவே பாடுபட்டது. ஒரு வி.ஐ.பி வருகையை எதிர்பார்த்திருப்பது போன்ற பரபரப்பு அங்கிருந்தது. வாசலில் நின்ற செக்யூரிட்டி நொடிக்கொரு முறை தெரு முனையை பார்த்தவாறிருத்தான். வேலைக்காரர்கள் அனைவரும் இது வரை மனோ அவ்வளவாக தங்களை கண்டு கொள்ளாததால் தங்கள் இஷ்டப்பட்ட படி பணியாற்றி கொண்டிருந்தவர்களுக்கு  பாட்டி வருவது தொந்தரவாகவே இருந்தது. இருப்பினும் ஓரிருவர் விசுவாசமாகவே அவரை எதிர் பார்த்திருந்தார்கள். அவர்களுக்கு பாட்டி வருவது ஏகப்பட்ட மகிழ்ச்சியை அளித்திருந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் கார் காம்பவுண்டிற்குள் நுழைந்து போர்டிகோவில் வந்து நின்றது. செக்யூரிட்டி ஓடி வந்து கதவை திறக்க பாட்டி காரை விட்டு இறங்கினார்.

"ஏன்பா இவ்வளவு வேகமாக ஓடி வரே. விழுந்து கிழுந்து வச்சீன்னா உடல் உபாதையோட பணமுமில்ல செலவாகும். மரியாதையெல்லாம் மனசோடு இருக்கணும். என் கிட்டே அதை காண்பிச்சிட்டே இருக்க கூடாது" என்ற படி  மாட்டியிருந்த கண்ணாடியை எடுத்து துடைத்து மீண்டும் மாட்டி கொண்டே சொன்னார்.
செக்யூரிட்டி தலையாட்ட, வேலையாட்கள் வந்து வாங்கம்மா என்று வணங்கி டிக்கியிலிருக்கும் பொருட்களை எடுக்க முற்பட்டனர்.

சுற்றிலும் ஒரு முறை பார்த்தவர் 

"இந்த செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊத்தறதே கிடையாதா?" என்றார் 

"இல்லம்மா காலையிலே தண்ணீர் விட்டேனே" தோட்டக்காரன் சொன்னான் 

" தண்ணீர் விட்டு ரொம்ப நாளான  மாதிரி இருக்கேடா "

அவரது கேள்விக்கு பதில் சொல்லாது மௌனமாய் நின்றான் அவன்.

"மனோவை விட்டு வெளுக்கிறதுல  நீங்க எல்லாரும்  கதற போறீங்க பாருங்க "
என்ற படி வீட்டுக்குள் நுழைந்தார்.

 "எங்கே மனோ ?"
"தூங்கறார்"

தன் கையில் கட்டியிருந்த கடிகாரத்தை பார்த்தார்.
"மணி ஒன்பதாக போகுது. இன்னுமா தூங்கறான்" விருட்டென்று மாடிப்படி  ஏறி அவர் வேகமாக செல்வதை பார்த்த புது வேலையாள் தன் சகாவிடம் காது கடித்தான்.
"ஏண்டா இதுக்கு வயசு அறுபதா இருபதா  "

உஸ் என்று சகா எச்சரித்த வினாடியும், பத்மினி  பாட்டி மாடியிலிருந்து திரும்பி இவர்களை பார்த்த நொடியும் ஒன்றாகவே இருந்தது. 

"அங்க என்ன வெட்டி பேச்சு " என்றாள் பாட்டி கடுகடுப்பாக.
இதை எதிர்பாராத அந்த வேலையாட்கள் வெலவெலத்து நகர்ந்தார்கள்.

இப்படி எதிர்பாராத அதிர்ச்சி தந்த பாட்டிக்கும் ஒரு அதிர்ச்சி பெட்ரூமில் காத்திருந்தது.
அங்கே கட்டிலில் மனோ படுத்திருந்தான் என்பதை விட  அஷ்ட கோணலில் பரவியிருந்தான் என்று சொல்லலாம். கட்டிலுக்கு பக்கத்தில்  டீப்பாயில் இருந்த மது பாட்டில்கள் டம்ளர் மற்றும் பிளேட்டுகள் அவரது  கோபத்தை  அதிகரித்தன. 
சேரை இழுத்து போட்டு கட்டிலருகே அமர்ந்த பாட்டி அவன் தோளில் அடித்தார். காற்றில் கலந்திருந்த மது வாசம் வேறு அவரை டென்ஷனாக்கியது.

"டேய் மனோ" என்றார் அதிகாரமாக

"பாட்டி கனவுலயுமா இப்படி வந்து அதட்டுவே" என்ற படி திரும்பி படுத்து கொண்டான்.
"டேய் நிஜமா தான்டா அதட்டறேன்" இந்த வார்த்தை கேட்ட மாத்திரத்தில் மனோ விருட்டென்று எழுந்து அமர்ந்தான்.
கண்களை கசக்கியவாறே   "பாட்டி" என்றான். அதிர்ச்சியாய்
பாட்டியின் கண்ணாடியையும் மீறி அவர் கண்களில் இருந்த அனல் அவனை தகிக்க வைத்தது. 

"எப்ப வந்தீங்க"

"வர வேண்டிய நேரத்துல கரெக்டா வந்திருக்கேன்"

"சொல்லிருந்தா நான் ஏர்போர்ட் வந்திருப்பேனே"

"சொல்லாமல் வந்ததால தானே உன்னை பத்தி தெரிஞ்சிக்க முடியுது"

"என்னை பத்தி என்ன தெரிஞ்சுகிட்டீங்க?"

"இரவினல் ஆட்டம் பகலினில் தூக்கம். இது தான் உனது உலகம்"  பாடிய படி எழுந்தார்.
மனோ நாக்கை கடித்து கொண்ட படி டீப்பாயை பார்த்தான். இந்த வேலைக்காரனுங்களுக்கு அறிவே கிடையாது என்று முணுமுணுத்தான்.


"தண்ணி எல்லாம் அடிக்க ஆரம்பிச்சிட்டே போலிருக்கு" என்றார் பிளவர் வாஷில் இருந்த பழைய பூக்களை எடுத்து கொண்டே  

"பாட்டி இதெல்லாம் டீ குடிக்கிற மாதிரி சாதாரணம் ஆகிடுச்சு. இதுக்கெல்லாம் கொஸ்டீன் பண்ணாதீங்க " என்றான் சிடுசிடுப்பாய் 
இதற்கு பாட்டி பதில் சொல்லவில்லை. அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தவர் 
உடனே அங்கிருந்து வெளியேறினார்.

 "நமக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழ விடாம இது ஒரு டார்ச்சர்" என்று கடுகடுத்து கொண்டே பாத்ரூமிற்குள் துழைந்தான்.
அலுவலகத்துக்கு ரெடியாகி கீழே வந்து டைனிங் டேபிளில் அமர்ந்த போது எதிரே பாட்டி புத்தகம் படித்து கொண்டிருந்தார்.
அவன் வந்தமர்ந்ததை கடைக்கண்ணால் கவனித்தவர் பணியாளை அழைத்தார்.
வந்து நின்ற பெண்ணிடம் 

"இனி நம்ம வீட்ல காபி டீக்கு பதிலா விஸ்கி பிராந்தி  தான். பிடிச்சவங்க குடிங்க. பிடிக்காதவங்க குடிக்கிறவங்களை வேடிக்கை பாருங்க."
என்றதும் அந்த பெண் விழித்தாள்.

"பாட்டி குத்தி காட்டறீங்களா?"
"குத்தி காட்டினா உனக்கு உறைக்குமா?"
அவன் வேகமாய் எழுந்து "நான் ஆபீஸ் போறேன்" என்ற படி வெளியேறினான்.


"ஆபீஸ் டைம் 9 மணி. ஆனா நீ பத்து மணிக்கு வேலைக்கு போறே.முதலாளினா என்ன கொம்பா முளைச்சிருக்கு. நீயும் அங்க வேலையாள் மாதிரி தான். அவங்க சம்பளம் வாங்கறாங்க. நீ சொத்தை அனுபவிக்கிறே தட்ஸ்ஆல்" அவன் கோபத்துக்கு அசராமல் சொன்னார்.

அவன் கோபமாக காரின் அருகில் செல்ல டிரைவர் கதவை திறந்தான்.உள்ளே அமர போனவனை போர்டிகோ வரை வந்த பாட்டி கை தட்டி அழைத்தார். திரும்பி பார்த்தான்.

"நைட் ஆபீஸ் முடிஞ்சவுடன் நேரா வீட்டுக்கு வரணும். நாம ரெண்டு பேரும் ஒரு கதாகாலட்சேபத்துக்கு போக வேண்டியிருக்கு" என்றார்.
கதவை அவன் அடித்து சாத்தியதில் அவன் உச்ச கட்ட கோபம் தெரிந்தது. பாட்டி 
"என் கோபம. அப்படியே இருக்கு" என்று புன்னகைத்தவர்  திரும்பி பங்களாவை பார்த்தார்.
இவ்வளவு சொத்தையும்  பத்திரமா பாதுகாத்து அவனுக்கு வர போற பொண்டாட்டி கிட்ட ஒப்படைக்கணும். இங்க உட்கார்ந்து ராஜ்ஜியம் பண்ண போறவ எங்க இருக்காளோ ? என்ன பண்றாளோ ? எப்ப வருவாளோ ? என்று பெறுமூச்செறிந்தார். 


------

ந்தினி அதே நேரத்தில்  தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் கம்பெனி  எம்டி க்கு முன்பாக நின்று கொண்டிருந்தாள். யாரிடமோ போனில் பேசி விட்டு நிமிரந்தவர் அவளிடம் 
"என்னம்மா என்னென்னவோ கேள்விப்படறேனே அதெல்லாம்  நிஜமா? " என்றார்.

என்ன பதில் சொல்வது இதை இவர் எப்படி எடுத்து கொள்வார்னு தெரியாதே என்று அவள் யோசிக்க ஆரம்பிக்க, அவரே தொடர்ந்தார்.
" ஏதோ பிரச்னையாம் . கோர்ட்ல சாட்சி சொல்ல போறியாம். போலீஸ் வந்து உன்னை அப்பப்ப விசாரிச்சிட்டு போகுதாம் "


"எங்க தெரு பொண்ணு சார் அது . கஷ்டப்படற பேமிலி . ஒருத்தன் லவ் பண்ண சொல்லி டார்ச்சர் பண்ணி சம்மதிக்கலனு தெரிஞ்சவுடன் கத்தியால குத்திட்டான். அதை பார்த்த அந்த பெண்ணை காப்பாற்றிய நேரடி சாட்சி நான். அதான்.... என்று அவள் சொல்லி கொண்டிருக்க அவர் கையமர்த்தினார் .


"இது கம்பெனிம்மா. சோசியல் சர்வீஸ் பண்ற இடம் இல்லே :
"சார் சோசியல் சர்வீஸ்ங்கிறது சில பேருக்கு மட்டும்னு கிடையாது.
எல்லோருக்குமானது.ஒரு மனித நேயம் தானே சார்.

"நாளைக்கு நீ வேலை பார்க்கிறவங்களுக்கு அது கொடுக்கல இது கொடுக்கலன்னு கொடி பிடிக்க ஆரம்பிச்சா என்னாறது. இன்னையோட அதெல்லாம் நிறுத்திடு. உங்க அப்பா இந்த கம்பெனில வேலை பார்த்தவர். அவரோட பொண்ணு நீ. ஒரு தகப்பனா  தான் உன் கிட்டே 
பேசிட்டிருக்கேன் "

நந்தினி அவரையே  பார்த்தாள் 

என்னாலே முடிஞ்ச அட்வைஸ் என்னன்னா, அடுத்தவங்க பிரச்னைக்கு போய் நிக்காமே அதை கண்டும் காணாத மாதிரி இருந்துடணும் "
"என்னாலே அது முடியாது சார்" கெஞ்சலாகவே பதில் சொன்னாள் 

"அப்ப இந்த கம்பெனில நீ வேலை பார்க்கவும் முடியாதும்மா"


"ஓகே சார்" என்ற அவளது வார்த்தைக்கு அதிர்ச்சியாய் நிமிர்ந்தார்.

"நல்ல சம்பளத்திலே நல்ல போஸ்டிங்ல இருக்கே. இதெல்லாத்தையும் ஒரு பொண்ணுக்காக இழக்க போறியா?"
"அந்த பொண்ணுக்கு நடந்தது எனக்கு நடந்திருந்தா சம்பளமா நல்ல வேலையா நல்ல வாழ்க்கையா இது எதுவுமே அனுபவிக்க முடியாத படி போயிருக்கும் சார் "
பதிலுக்கு பதில் கொடுத்து கொண்டிருந்தாலும் மென்மையாகவே பேசினாள்.

"சோ. உன்னோட சோசியல் சர்வீஸ்க்காக நல்ல கம்பெனியோட வேலையை இழந்து நிக்க போறே"

"நம்ம கம்பெனி கூட ஒரு நல்ல ஊழியரை இழக்க போகுதே சார்"
"உன் பிடிவாதம் உனக்கு தான் அவஸ்தையாக போகுது"

"அந்த பெண்ணோட அவஸ்தையை விடவா சார்"

"உன் கிட்டே இருக்கிற இந்த உறுதி பாதிக்கப்பட்டவங்க கிட்டேயும் இருக்கானு கொஞ்சம் செக் பண்ணிக்கம்மா " என்றார் அந்த எம்.டி.

------

"உன்னோட உறுதி எங்க கிட்டே இல்லம்மா. எத்தனையோ பேரு வராங்க. கேள்வி மேல கேள்வியா கேட்டு விசாரணை பண்ணிட்டே இருக்காங்க.எதுக்காக பெரிய இடத்துல மோதறீங்கனு கேட்கறாங்க.  யாருமே கவலைப்படாதீங்க நாங்க இருக்கோம்னு சொல்ல மாட்டேங்குறாங்க. அதோட விட்டா பரவாயில்ல.
ஒரு பையன் கத்தி எடுத்து குத்தறான்னா அந்த அளவுக்கு உங்க பொண்ணு என்ன பண்ணுச்சு? பழகிட்டு ஏமாத்திடுச்சானே கேட்கறாங்க " 

மருத்துவமனையில் அந்த பெண் கல்பனா தூங்கி கொண்டிருக்க அவளது தாய்  நந்தினியின் தோளில் சாய்ந்து அழுதாள்.

"பொண்ணு ஒரு முறை வயித்துல குத்து வாங்கிட்டு ரணமாகி கிடக்கா. வரவங்க எங்களை வார்த்தைகளால் குத்தி தினமும் ரணமாக்கிட்டு போறாங்கம்மா " கல்பனாவின் அப்பா துண்டை வாயில் பொத்திய படி அழுதார் 

"அழறதை சத்தம் போடாம அழுங்க மத்தவங்களுக்கு டிஸ்டர்பா இருக்குல்ல"  நர்ஸ் குரல் எங்கிருந்தோ ஒலித்தது. கோபமாய் திரும்பிய நந்தினியை அந்த அம்மா  தடுத்தாள் கண்களால் வேண்டாம் என்பதாக ஜாடை காட்டினார்.

கல்பனா அசைய ஆரம்பிக்கவே நந்தினி அந்த தாயின் கைகளிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு அவள் அருகில் சென்றாள்.

"எப்படிடா இருக்கே"  என்று அவள் கைகளை பிடித்து கொண்டாள்.

"ரொம்ப வலிக்குதுக்கா." அந்த பெண்ணின் வார்த்தைகளில் கூட வலி இருந்தது.
கூடவே "அழகா இருக்கிறது கூட இங்க தப்பா போயிடிச்சுக்கா "என்றாள்.

தொடரும்.

ஆர்.வி.சரவணன் 

ஓவியம் நண்பர் தேவராஜ் 

வெள்ளி, நவம்பர் 25, 2016

வா, காதல் செய்வோம்-3


வா, காதல் செய்வோம்-3


ந்தினியின் முகத்திலிருந்த கோபமும் வார்த்தைகளில் தெரிந்த கடுமையும் அவளுக்கு முன்னே அமர்ந்திருந்த அவர்களை பாதிக்கவேயில்லை. நந்தினியின் அலுவலக அறை  அது. ஒரு பிளாஸ்டிக் கவரொன்று பேன் காற்றால் அலைக்கழிக்கப்பட்டு அறையெங்கும் சுற்றி கொண்டிருந்தது. அதையே கவனித்து கொண்டிருந்த நந்தினியை பார்த்து, கோட்சூட் போட்டு பணக்கார தோரணையிலிருந்த அந்த மனிதர் சொன்னார்.

"இங்க பாரும்மா.  நடந்த சம்பவத்தை பார்த்தவங்க எல்லாரையும் சரி கட்டியாச்சு. நீ மட்டும் தான் பாக்கி. உனக்கு பணம்  எதுனா வேணும்னா சொல்லு தரேன்.  பிரச்னை பண்ணாதே "

"சார். பணத்துக்காகலாம் பிரச்னை பண்ற ஆள் இல்ல நான். ஒரு அப்பாவி பொண்ணு படிக்க வேண்டிய வயசுல நட்ட நடுரோட்ல கத்தி குத்து வாங்கி படுக்கைல கிடக்கா. அதுக்கு காரணம் உங்க பையனோட திமிர். கேட்டா காதல்னு சப்பைக்கட்டு வேற. அதான் பிரச்னை பண்ணிட்டிருக்கேன்" 

"பிரச்னை பண்றியே. இந்த பொண்ணுக்கு வேண்டிய மருத்துவ செலவுலாம்  நீயே பண்றியா" பக்கத்தில் அமரந்திருந்த  அந்த வெள்ளை வேட்டி சட்டை மனிதர் சொன்னார். அவர் வார்த்தைகளில் தெரிந்த நக்கல் அவளை துணுக்குற வைத்தது. நந்தினி அந்த நபரை ஏறிட்டு பார்த்தாள்.

"முடியாதுல்ல. பணத்துக்கு கஷ்டப்படற குடும்பம் தானே உங்க குடும்பம். அப்புறம் ஏம்மா இவ்வளவு ஜம்பம்"

நந்தினியை தொடர்ந்து காயப்படுத்தும் விதமாகவே அவர் சொல்லி கொண்டிருக்க, அவள் நிதானமாக சொன்னாள்.

"பணக்காரங்களுக்கு  பணக்காரன் சப்போர்ட் பண்றப்ப, ஏழைக்கு ஏழை தானே சார் உதவியா இருக்க முடியும்"

"நீ அப்படியே கோர்ட்ல வந்து சாட்சி சொன்னாலும் அதை எங்களால உடைச்சிட முடியும். தெரியுமில்ல"

அந்த கோட் சூட் மனிதரின் வார்த்தைகள் தன்னை எதுவும் செய்து விடவில்லை என்பதை காட்டி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள் நந்தினி.

"நீங்க பண்றதை பண்ணுங்க சார். அதுக்காக கொலை பண்ண வந்தது உங்க பையன் இல்லேனு பொய்யெல்லாம் நான் சொல்ல முடியாது" 

"இங்க பாரும்மா . பகையை தேடிக்காதே. பின்னாடி எதுனா ஆச்சுன்னா போலீஸ் எங்களால ஒண்ணும் பண்ண முடியாது"  இன்ஸ்பெக்டர் தன் பங்குக்கு வாய் திறந்தார்.

"மிரட்டறீங்களா சார்"

"இல்ல. யதார்த்தத்தை சொன்னேன்"

"அந்த பையனை சட்டத்துல சிக்க வைக்க கூடாதுனு நீங்கலாம் உறுதியா இருக்கிறப்ப நான் என  கொள்கைல  உறுதியா இருக்க கூடாதா சார்"

"நல்லா இரு. யாரு வேணாம்னா. இதனால  என் பையன் தலை மறைவா இருக்கான்"
அந்த கோட்  பிபி எகிறியவராய் கத்த ஆரம்பித்தார்.

இந்த சத்தம் கேட்டு ஒருவர்  அந்த அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார். நந்தினி சாரி சார் என்றவுடன் அவர் தலையாட்டிய படி வெளியே சென்றார். பிளாஸ்டிக் கவர் இன்னும் அங்கேயே சுற்றி கொண்டே இருந்தது.


"ஒரு பொண்ணை சாகடிக்க பார்த்தவன்  வெளிலயா சுத்த முடியும்" நந்தினி சிரித்தாள்

"அவ பொழைச்சிடுவா. அப்படி ஒன்னும் அதிகமா காயமில்ல"

"மீடியா அவங்க ரெண்டு பேர் போட்டோவையும் சேர்த்து போட்டு வெளிச்சப்படுத்தினதாலே அவ வாழ்க்கை கஷ்டமாகிடுச்சே"

"அவங்க பாமிலியே கவலைப்படலே. உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை அந்த கோட் சூட் மனிதர் 
அங்கலாய்க்க ஆரம்பித்தார்.

"எஸ். அதுல ஒரு சுயநலம் இருக்கு. நாளைக்கு என்னோட தங்கச்சிக்கும் இது மாதிரி பிரச்னை வந்துட கூடாதுல்ல"

"முடிவா என்ன சொல்றம்மா " அந்த வெள்ளை வேட்டி மனிதர் எழுந்து கொண்டார்.

"அவர் பையனை சட்டத்தின் முன்னாடி நிறுத்துங்க. தண்டனை வாங்கி கொடுங்க" நந்தினியும் மரியாதைக்கு எழுந்து நின்ற படி சொன்னாள்.

"திமிரை பார்த்தியா. நம்ம ஏரியா போண்ணாச்சேனு பார்த்தா ரொம்ப பேசறே நீ"

"பாதிக்கப்பட்ட பொண்ணு கூட நம்ம ஏரியா தான் சார். நியாயப்படி பார்த்தா,  நீங்க தான் அந்த பொண்ணு சார்பா பேசணும்"

அந்த நேரம் அந்த பிளாஸ்டிக் கவர் அந்த வெள்ளை வேட்டி மனிதரின் காலடியில் வந்து நிற்க, கீழே குனிந்து அதை  எடுத்தவர் கசக்கி குப்பை தொட்டியில் விட்டெறிந்து விட்டு,
"நான் உங்க அண்ணன் கிட்டே பேசிக்கிறேன்" ஆவேசமாய் சொன்னார்.

------


"ம்ம ஏரியால அவர் பெரிய ஆளு.  அவரு கிட்டயே போய் சரிக்கு சமமா பேசியிருக்கியே. நீ பொண்ணா இல்லே ரவுடியா" அண்ணன் ரகு வீட்டில் நுழைந்ததும் செருப்பை கூட கழட்டாமல் ஆவேசமாய் கத்தினான்.
நந்தினி எதிர்பார்த்த ஒன்று தான் இது  என்பதால் கொஞ்சம் நிதானமாகவே பதில் சொன்னாள்.

" பெண்விடுதலை பத்தி நான் காலேஜ் மேடைல பேசறப்ப வலிக்கிற அளவுக்கு 
கை தட்டி பாராட்டின அண்ணனா இப்படி பேசறே"

"மேடைக்குனா கை தட்டலாம். வாழ்க்கைனு  வந்துட்டா அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கணும். இல்லேன்னா உலகம் நம்மளை தட்டி விட்டுட்டு போயிடும்"  சேரில் அமர்ந்து ஷூவை கழற்றி கொண்டே சொன்னான்.

"உனக்கு கல்யாணத்துக்கு மாப்பிளை தேடிட்டிருக்கோம். இந்த நேரத்துல இதெல்லாம் எதுக்கும்மா " அம்மா சலிப்பாய்  சொன்னாள்.

"வர்ற மாப்பிள்ளை எல்லாம் நாம போடப் போற  நகை எவ்வளவுனு கேட்ட பின்னாடி ஓட்டப்பந்தயத்துல ஓடற மாதிரி ஓடறான். இதுல பொண்ணு இப்படி தினம் ஒரு சண்டையை வீட்டுக்கு கொண்டு வரவனு தெரிஞ்சா லாங் ஜம்ப் எடுத்துல்ல ஓடுவான்." அண்ணி விமலா சமையலறையிலிருந்த படியே கிண்டலடித்தாள்.  அவள் கோபத்துக்கு ஆதரவாய்  ஒரு பாத்திரம் நங் என்று முழங்கியது.

நந்தினி அண்ணியை திரும்பி  தீர்க்கமாக பார்த்தாள்.

"எதுனா சொன்னா முறைக்க ஆரம்பிச்சிடு. உனக்கு அப்புறம் தம்பி தங்கை இருக்காங்க. அவங்களையும் நாங்க கரையேத்தணும்.ஞாபகத்துல வச்சிக்க"

தம்பி தங்கைகள் இருவரும் படிப்பதை நிறுத்தி விட்டு இவர்களையே பார்த்தார்கள்.

நந்தினியின் அம்மாவுக்கு மருமகளின் பேச்சு உள்ளுக்குள் எரிச்சல் மூட்டினாலும் வெளியில் அமைதி காக்க வேண்டியதாய் இருந்தது. இல்லா விட்டால் பெரிய சண்டையாக அது மாறி விடும் . உள்ளே கட்டிலில் இருமல் சத்தம் தொடர்ந்து வரவே,
"அப்பாவுக்கு மாத்திரை வாங்கணும்பா  சீட்டை உன் பாக்கெட்ல வச்சிருக்கேன்" என்ற படி உள்ளே சென்றாள்.

"சீட்டை மட்டும் வச்சா போதுமா. அதை வாங்க காசு வேண்டாமா "அண்ணி 


அம்மா திரும்பி அண்ணியை சாதாரணமாக தான் பார்த்தாள்.

"ஆளாளுக்கு முறைக்கறீங்களே தவிர அவரோட பண கஷ்டத்தை புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே" விமலா வெடித்தாள்.

"ஏய் சும்மாருடி. நீ வேற. அம்மா நான் வாங்கிட்டு வரேன்மா " என்றவன் நந்தினி பக்கம் திரும்பி "இங்க பார். நான் அவங்க கிட்டே தங்கச்சியை எப்படியும் சம்மதிக்க வச்சிடறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். அதனாலே அந்த விசயத்துல இனிமே நீ தலையிடாதே"

"எப்படிண்ணா. அந்த பொண்ணு நம்ம தெரு பொண்ணு . நம்ம வீட்டுக்கே எத்தனையோ முறை வந்திருக்கு அதுக்கு ஒரு பிரச்னைனு வரப்ப நாம ஹெல்ப் பண்ணலேன்னா எப்படி?"

"அது அப்படி தான். பிரச்னை நமக்கு வராம போயிடிச்சேன்னு முதல்ல சந்தோசப்பட்டுக்குவோம் " என்ற படி பாத்ரூம் செல்ல துண்டை எடுத்தான்.

உள்ளிருந்து இருமல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கவே, நந்தினி அப்பாவை பார்க்க அறைக்குள் சென்றாள். படுக்கையில் படுத்திருந்த  அவளது அப்பா மகளை நிமிர்ந்து  பார்த்தார்.

"உன்னை நான் ஆம்பளையா பெத்திருக்கணும்மா" என்றார் மெல்லிய குரலில் 

"ஏம்பா ஆம்பளையா பிறந்தா தான் துணிச்சல் இருக்குமா. பெண்ணுக்கு இருக்காதா "

"வேண்டாம்மா பிடிவாதம் பிடிக்காதே" அம்மா அவள் கழுத்தில் இருந்த செயினை சரி செய்த படி சொல்லவும்,

"தைரியசாலியா என்னை வளர்த்துட்டு நீங்க எல்லாம் கோழைகளா ஆகிட்டீங்க. இதுக்காக எல்லாம் என் கேரக்டரை மாத்திக்க முடியாதும்மா  பார்க்கலாம். இந்த வாழ்க்கை நம்மள எது வரைக்கும் அழைச்சிட்டு போக போகுது ? என்ன பண்ண போகுதுனு " நந்தினி பெருமூச்செறிந்தாள். 


------

"நாம எது வரைக்கும் போகணும்கிறதை நாம தான்யா  முடிவு பண்ணணும். வாழ்க்கை போற போக்குல போறதுக்கு நாம என்ன ஆட்டு மந்தை கூட்டமா" மனோ சொல்ல வெங்கட் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தான்.

"சோ. எந்த வேலையா இருந்தாலும் ஒரு டார்கெட் பிக்ஸ் பண்ணிக்குங்க. அதை  நோக்கி போக ஆரம்பிங்க." என்று அவன் பாடம் எடுத்து கொண்டிருக்கும் போதே டேபிளில் இருந்த லேண்ட் லைன் போன் ஒலித்தது. ஏதோ பேச முயன்ற வெங்கட்டை நோக்கி கையமர்த்தி விட்டு போனை காதுக்கு கொடுத்தான்.

அமேரிக்காவிலிருந்து பாட்டி  பேசினார்.

"என்னடா மனோ. எப்டி இருக்கே"

"நல்லாருக்கேன் பத்மினி பாட்டி  நீங்க" 

"ம்ம் இருக்கேன். ஆமா நேத்து நைட் நான் உனக்கு போன் பண்ணேன். போன் போகவே இல்லியே. 
போனை ஆப் பண்ணி வைக்க கூடாதுனு சொல்லிருக்கேன்ல"

"என் செல் போன் கீழே விழுந்துடுச்சு பாட்டி . போன் சரியில்ல" 

"ஏன்டா அப்ப புதுசு வாங்க வேண்டியது தானே"

"வாங்கறேன்" கையிலிருந்த அந்த செல் போனில் வாட்ஸ் அப் பார்த்து கொண்டே 
 வெங்கட்டை பார்த்து கண்ணடித்து சிரித்த படி சொன்னான்.

"என்னமோ புது போன் வாங்க காசில்லாத மாதிரி பேசறே"

"அத விடுங்க  உங்களை பார்த்து ஒரு வருஷம் ஆக போகுது. ஒரு பேரன் நம்மளை நம்பி இருக்கானேனு கொஞ்சம் கூட  அக்கறையே இல்ல பாட்டி  உங்களுக்கு"

"வரேண்டா. நாளைக்கு இந்த நேரம் உன் முன்னாடி இருப்பேன்.போதுமா "

மனோ " காமெடி பண்ணாதீங்க பாட்டி" என்றான் அதிர்ச்சியாய்.

"நான் சீரியஸா தான் பேசறேன்.  உன்னை பத்தி வர நியூஸ் எதுவுமே நல்லதா இல்ல. அதான் உடனே அக்கறையா கிளம்பி வந்துகிட்டிருக்கேன்."

"யாராவது எதுனா சொன்னா அப்படியே நம்புவீங்களா பாட்டி " அவன் குரலில் இருந்த கடுப்பை பாட்டி கண்டு கொள்ளாமலே, 

"  நம்பாம தான் நேர்லய வந்து பார்த்துடலாம்னு  வந்துட்டிருக்கேன். நாளைக்கு பார்க்கலாம்"

போனை துண்டித்தாள் அந்த பத்மினி பாட்டி.

மனோ கோபத்தில் தன் கையில் வைத்திருந்த அந்த உயர் ரக புது செல்போனை உண்மையாகவே தரையில் போட்டு உடைத்தான்.

"சார் புது போன் சார்" வெங்கட் பதறினான். 

"தெரியும்யா. அந்த கிழவி வந்து நிஜமாவே செல் போன் கீழே விழுந்துச்சான்னு  செக் பண்ணி பார்க்கும்" என்றான் மனோ டென்ஷனாய் 

தொடரும்

ஆர்.வி.சரவணன் 

ஓவியம் நண்பர் தேவராஜ்