வெள்ளி, நவம்பர் 25, 2016

வா, காதல் செய்வோம்-3


வா, காதல் செய்வோம்-3


ந்தினியின் முகத்திலிருந்த கோபமும் வார்த்தைகளில் தெரிந்த கடுமையும் அவளுக்கு முன்னே அமர்ந்திருந்த அவர்களை பாதிக்கவேயில்லை. நந்தினியின் அலுவலக அறை  அது. ஒரு பிளாஸ்டிக் கவரொன்று பேன் காற்றால் அலைக்கழிக்கப்பட்டு அறையெங்கும் சுற்றி கொண்டிருந்தது. அதையே கவனித்து கொண்டிருந்த நந்தினியை பார்த்து, கோட்சூட் போட்டு பணக்கார தோரணையிலிருந்த அந்த மனிதர் சொன்னார்.

"இங்க பாரும்மா.  நடந்த சம்பவத்தை பார்த்தவங்க எல்லாரையும் சரி கட்டியாச்சு. நீ மட்டும் தான் பாக்கி. உனக்கு பணம்  எதுனா வேணும்னா சொல்லு தரேன்.  பிரச்னை பண்ணாதே "

"சார். பணத்துக்காகலாம் பிரச்னை பண்ற ஆள் இல்ல நான். ஒரு அப்பாவி பொண்ணு படிக்க வேண்டிய வயசுல நட்ட நடுரோட்ல கத்தி குத்து வாங்கி படுக்கைல கிடக்கா. அதுக்கு காரணம் உங்க பையனோட திமிர். கேட்டா காதல்னு சப்பைக்கட்டு வேற. அதான் பிரச்னை பண்ணிட்டிருக்கேன்" 

"பிரச்னை பண்றியே. இந்த பொண்ணுக்கு வேண்டிய மருத்துவ செலவுலாம்  நீயே பண்றியா" பக்கத்தில் அமரந்திருந்த  அந்த வெள்ளை வேட்டி சட்டை மனிதர் சொன்னார். அவர் வார்த்தைகளில் தெரிந்த நக்கல் அவளை துணுக்குற வைத்தது. நந்தினி அந்த நபரை ஏறிட்டு பார்த்தாள்.

"முடியாதுல்ல. பணத்துக்கு கஷ்டப்படற குடும்பம் தானே உங்க குடும்பம். அப்புறம் ஏம்மா இவ்வளவு ஜம்பம்"

நந்தினியை தொடர்ந்து காயப்படுத்தும் விதமாகவே அவர் சொல்லி கொண்டிருக்க, அவள் நிதானமாக சொன்னாள்.

"பணக்காரங்களுக்கு  பணக்காரன் சப்போர்ட் பண்றப்ப, ஏழைக்கு ஏழை தானே சார் உதவியா இருக்க முடியும்"

"நீ அப்படியே கோர்ட்ல வந்து சாட்சி சொன்னாலும் அதை எங்களால உடைச்சிட முடியும். தெரியுமில்ல"

அந்த கோட் சூட் மனிதரின் வார்த்தைகள் தன்னை எதுவும் செய்து விடவில்லை என்பதை காட்டி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள் நந்தினி.

"நீங்க பண்றதை பண்ணுங்க சார். அதுக்காக கொலை பண்ண வந்தது உங்க பையன் இல்லேனு பொய்யெல்லாம் நான் சொல்ல முடியாது" 

"இங்க பாரும்மா . பகையை தேடிக்காதே. பின்னாடி எதுனா ஆச்சுன்னா போலீஸ் எங்களால ஒண்ணும் பண்ண முடியாது"  இன்ஸ்பெக்டர் தன் பங்குக்கு வாய் திறந்தார்.

"மிரட்டறீங்களா சார்"

"இல்ல. யதார்த்தத்தை சொன்னேன்"

"அந்த பையனை சட்டத்துல சிக்க வைக்க கூடாதுனு நீங்கலாம் உறுதியா இருக்கிறப்ப நான் என  கொள்கைல  உறுதியா இருக்க கூடாதா சார்"

"நல்லா இரு. யாரு வேணாம்னா. இதனால  என் பையன் தலை மறைவா இருக்கான்"
அந்த கோட்  பிபி எகிறியவராய் கத்த ஆரம்பித்தார்.

இந்த சத்தம் கேட்டு ஒருவர்  அந்த அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார். நந்தினி சாரி சார் என்றவுடன் அவர் தலையாட்டிய படி வெளியே சென்றார். பிளாஸ்டிக் கவர் இன்னும் அங்கேயே சுற்றி கொண்டே இருந்தது.


"ஒரு பொண்ணை சாகடிக்க பார்த்தவன்  வெளிலயா சுத்த முடியும்" நந்தினி சிரித்தாள்

"அவ பொழைச்சிடுவா. அப்படி ஒன்னும் அதிகமா காயமில்ல"

"மீடியா அவங்க ரெண்டு பேர் போட்டோவையும் சேர்த்து போட்டு வெளிச்சப்படுத்தினதாலே அவ வாழ்க்கை கஷ்டமாகிடுச்சே"

"அவங்க பாமிலியே கவலைப்படலே. உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை அந்த கோட் சூட் மனிதர் 
அங்கலாய்க்க ஆரம்பித்தார்.

"எஸ். அதுல ஒரு சுயநலம் இருக்கு. நாளைக்கு என்னோட தங்கச்சிக்கும் இது மாதிரி பிரச்னை வந்துட கூடாதுல்ல"

"முடிவா என்ன சொல்றம்மா " அந்த வெள்ளை வேட்டி மனிதர் எழுந்து கொண்டார்.

"அவர் பையனை சட்டத்தின் முன்னாடி நிறுத்துங்க. தண்டனை வாங்கி கொடுங்க" நந்தினியும் மரியாதைக்கு எழுந்து நின்ற படி சொன்னாள்.

"திமிரை பார்த்தியா. நம்ம ஏரியா போண்ணாச்சேனு பார்த்தா ரொம்ப பேசறே நீ"

"பாதிக்கப்பட்ட பொண்ணு கூட நம்ம ஏரியா தான் சார். நியாயப்படி பார்த்தா,  நீங்க தான் அந்த பொண்ணு சார்பா பேசணும்"

அந்த நேரம் அந்த பிளாஸ்டிக் கவர் அந்த வெள்ளை வேட்டி மனிதரின் காலடியில் வந்து நிற்க, கீழே குனிந்து அதை  எடுத்தவர் கசக்கி குப்பை தொட்டியில் விட்டெறிந்து விட்டு,
"நான் உங்க அண்ணன் கிட்டே பேசிக்கிறேன்" ஆவேசமாய் சொன்னார்.

------


"ம்ம ஏரியால அவர் பெரிய ஆளு.  அவரு கிட்டயே போய் சரிக்கு சமமா பேசியிருக்கியே. நீ பொண்ணா இல்லே ரவுடியா" அண்ணன் ரகு வீட்டில் நுழைந்ததும் செருப்பை கூட கழட்டாமல் ஆவேசமாய் கத்தினான்.
நந்தினி எதிர்பார்த்த ஒன்று தான் இது  என்பதால் கொஞ்சம் நிதானமாகவே பதில் சொன்னாள்.

" பெண்விடுதலை பத்தி நான் காலேஜ் மேடைல பேசறப்ப வலிக்கிற அளவுக்கு 
கை தட்டி பாராட்டின அண்ணனா இப்படி பேசறே"

"மேடைக்குனா கை தட்டலாம். வாழ்க்கைனு  வந்துட்டா அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கணும். இல்லேன்னா உலகம் நம்மளை தட்டி விட்டுட்டு போயிடும்"  சேரில் அமர்ந்து ஷூவை கழற்றி கொண்டே சொன்னான்.

"உனக்கு கல்யாணத்துக்கு மாப்பிளை தேடிட்டிருக்கோம். இந்த நேரத்துல இதெல்லாம் எதுக்கும்மா " அம்மா சலிப்பாய்  சொன்னாள்.

"வர்ற மாப்பிள்ளை எல்லாம் நாம போடப் போற  நகை எவ்வளவுனு கேட்ட பின்னாடி ஓட்டப்பந்தயத்துல ஓடற மாதிரி ஓடறான். இதுல பொண்ணு இப்படி தினம் ஒரு சண்டையை வீட்டுக்கு கொண்டு வரவனு தெரிஞ்சா லாங் ஜம்ப் எடுத்துல்ல ஓடுவான்." அண்ணி விமலா சமையலறையிலிருந்த படியே கிண்டலடித்தாள்.  அவள் கோபத்துக்கு ஆதரவாய்  ஒரு பாத்திரம் நங் என்று முழங்கியது.

நந்தினி அண்ணியை திரும்பி  தீர்க்கமாக பார்த்தாள்.

"எதுனா சொன்னா முறைக்க ஆரம்பிச்சிடு. உனக்கு அப்புறம் தம்பி தங்கை இருக்காங்க. அவங்களையும் நாங்க கரையேத்தணும்.ஞாபகத்துல வச்சிக்க"

தம்பி தங்கைகள் இருவரும் படிப்பதை நிறுத்தி விட்டு இவர்களையே பார்த்தார்கள்.

நந்தினியின் அம்மாவுக்கு மருமகளின் பேச்சு உள்ளுக்குள் எரிச்சல் மூட்டினாலும் வெளியில் அமைதி காக்க வேண்டியதாய் இருந்தது. இல்லா விட்டால் பெரிய சண்டையாக அது மாறி விடும் . உள்ளே கட்டிலில் இருமல் சத்தம் தொடர்ந்து வரவே,
"அப்பாவுக்கு மாத்திரை வாங்கணும்பா  சீட்டை உன் பாக்கெட்ல வச்சிருக்கேன்" என்ற படி உள்ளே சென்றாள்.

"சீட்டை மட்டும் வச்சா போதுமா. அதை வாங்க காசு வேண்டாமா "அண்ணி 


அம்மா திரும்பி அண்ணியை சாதாரணமாக தான் பார்த்தாள்.

"ஆளாளுக்கு முறைக்கறீங்களே தவிர அவரோட பண கஷ்டத்தை புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே" விமலா வெடித்தாள்.

"ஏய் சும்மாருடி. நீ வேற. அம்மா நான் வாங்கிட்டு வரேன்மா " என்றவன் நந்தினி பக்கம் திரும்பி "இங்க பார். நான் அவங்க கிட்டே தங்கச்சியை எப்படியும் சம்மதிக்க வச்சிடறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். அதனாலே அந்த விசயத்துல இனிமே நீ தலையிடாதே"

"எப்படிண்ணா. அந்த பொண்ணு நம்ம தெரு பொண்ணு . நம்ம வீட்டுக்கே எத்தனையோ முறை வந்திருக்கு அதுக்கு ஒரு பிரச்னைனு வரப்ப நாம ஹெல்ப் பண்ணலேன்னா எப்படி?"

"அது அப்படி தான். பிரச்னை நமக்கு வராம போயிடிச்சேன்னு முதல்ல சந்தோசப்பட்டுக்குவோம் " என்ற படி பாத்ரூம் செல்ல துண்டை எடுத்தான்.

உள்ளிருந்து இருமல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கவே, நந்தினி அப்பாவை பார்க்க அறைக்குள் சென்றாள். படுக்கையில் படுத்திருந்த  அவளது அப்பா மகளை நிமிர்ந்து  பார்த்தார்.

"உன்னை நான் ஆம்பளையா பெத்திருக்கணும்மா" என்றார் மெல்லிய குரலில் 

"ஏம்பா ஆம்பளையா பிறந்தா தான் துணிச்சல் இருக்குமா. பெண்ணுக்கு இருக்காதா "

"வேண்டாம்மா பிடிவாதம் பிடிக்காதே" அம்மா அவள் கழுத்தில் இருந்த செயினை சரி செய்த படி சொல்லவும்,

"தைரியசாலியா என்னை வளர்த்துட்டு நீங்க எல்லாம் கோழைகளா ஆகிட்டீங்க. இதுக்காக எல்லாம் என் கேரக்டரை மாத்திக்க முடியாதும்மா  பார்க்கலாம். இந்த வாழ்க்கை நம்மள எது வரைக்கும் அழைச்சிட்டு போக போகுது ? என்ன பண்ண போகுதுனு " நந்தினி பெருமூச்செறிந்தாள். 


------

"நாம எது வரைக்கும் போகணும்கிறதை நாம தான்யா  முடிவு பண்ணணும். வாழ்க்கை போற போக்குல போறதுக்கு நாம என்ன ஆட்டு மந்தை கூட்டமா" மனோ சொல்ல வெங்கட் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தான்.

"சோ. எந்த வேலையா இருந்தாலும் ஒரு டார்கெட் பிக்ஸ் பண்ணிக்குங்க. அதை  நோக்கி போக ஆரம்பிங்க." என்று அவன் பாடம் எடுத்து கொண்டிருக்கும் போதே டேபிளில் இருந்த லேண்ட் லைன் போன் ஒலித்தது. ஏதோ பேச முயன்ற வெங்கட்டை நோக்கி கையமர்த்தி விட்டு போனை காதுக்கு கொடுத்தான்.

அமேரிக்காவிலிருந்து பாட்டி  பேசினார்.

"என்னடா மனோ. எப்டி இருக்கே"

"நல்லாருக்கேன் பத்மினி பாட்டி  நீங்க" 

"ம்ம் இருக்கேன். ஆமா நேத்து நைட் நான் உனக்கு போன் பண்ணேன். போன் போகவே இல்லியே. 
போனை ஆப் பண்ணி வைக்க கூடாதுனு சொல்லிருக்கேன்ல"

"என் செல் போன் கீழே விழுந்துடுச்சு பாட்டி . போன் சரியில்ல" 

"ஏன்டா அப்ப புதுசு வாங்க வேண்டியது தானே"

"வாங்கறேன்" கையிலிருந்த அந்த செல் போனில் வாட்ஸ் அப் பார்த்து கொண்டே 
 வெங்கட்டை பார்த்து கண்ணடித்து சிரித்த படி சொன்னான்.

"என்னமோ புது போன் வாங்க காசில்லாத மாதிரி பேசறே"

"அத விடுங்க  உங்களை பார்த்து ஒரு வருஷம் ஆக போகுது. ஒரு பேரன் நம்மளை நம்பி இருக்கானேனு கொஞ்சம் கூட  அக்கறையே இல்ல பாட்டி  உங்களுக்கு"

"வரேண்டா. நாளைக்கு இந்த நேரம் உன் முன்னாடி இருப்பேன்.போதுமா "

மனோ " காமெடி பண்ணாதீங்க பாட்டி" என்றான் அதிர்ச்சியாய்.

"நான் சீரியஸா தான் பேசறேன்.  உன்னை பத்தி வர நியூஸ் எதுவுமே நல்லதா இல்ல. அதான் உடனே அக்கறையா கிளம்பி வந்துகிட்டிருக்கேன்."

"யாராவது எதுனா சொன்னா அப்படியே நம்புவீங்களா பாட்டி " அவன் குரலில் இருந்த கடுப்பை பாட்டி கண்டு கொள்ளாமலே, 

"  நம்பாம தான் நேர்லய வந்து பார்த்துடலாம்னு  வந்துட்டிருக்கேன். நாளைக்கு பார்க்கலாம்"

போனை துண்டித்தாள் அந்த பத்மினி பாட்டி.

மனோ கோபத்தில் தன் கையில் வைத்திருந்த அந்த உயர் ரக புது செல்போனை உண்மையாகவே தரையில் போட்டு உடைத்தான்.

"சார் புது போன் சார்" வெங்கட் பதறினான். 

"தெரியும்யா. அந்த கிழவி வந்து நிஜமாவே செல் போன் கீழே விழுந்துச்சான்னு  செக் பண்ணி பார்க்கும்" என்றான் மனோ டென்ஷனாய் 

தொடரும்

ஆர்.வி.சரவணன் 

ஓவியம் நண்பர் தேவராஜ்


வியாழன், நவம்பர் 17, 2016

வா, காதல் செய்வோம்-2






வா, காதல் செய்வோம்-2

காட்சி-3 


ஆபிஸ் ரூம்

மனோ செல் போனில் பேசிக் கொண்டிருக்க, அவன் அமர்ந்திருந்த நாற்காலி அவன் அசைவுக்கு ஏற்ப ஆடி கொண்டிருந்தது. கதவை படீரென்று திறந்த படி  ஓடி வந்தான் அவன். அனுமதி இல்லாமல் வந்தது யாரென்று கோபத்துடன் நிமிர்ந்த மனோ நண்பன் பாபுவை பார்த்தவுடன் அமைதியானான். மறுபடியும் நாற்காலி ஆட ஆரம்பித்தது.  எப்போது இவன் பேசி முடிப்பான் என்று மனோவையும், அவ்வப்போது கதவையும் ஒரு சேர பதட்டத்துடன் பார்த்து கொண்டிருந்தான்  பாபு. இருபது வினாடிகள் கழிந்திருக்கும். 

மனோ செல் போனை காதிலிருந்து எடுத்தவுடனே 
"டேய் என்னை காப்பாத்துடா" என்றான். 

அப்போது கதவு மெதுவாக திறக்க   உள்ளே வந்தவன் சட்டையில் மேனேஜர் வெங்கட் என்ற எழுத்துக்கள் இருந்தன.

"என்ன சார் நீங்க பாட்டுக்கு இங்க வந்துட்டீங்க. அங்க வெளில ரகளை நடக்குது" 

மனோ கேள்விக்குறியாய் அவனை பார்த்தான். 

"சார். நம்ம ஆபிஸ்ல  வேலை பார்க்கிற பொண்ணுகிட்டே இவர் கொஞ்சம் ஏடா கூடமா பழகிட்டார். பிரச்னையாகிடிச்சு.  அவங்க பேமிலி வெளில கலாட்டா பண்ணிட்டிருக்காங்க" 

இவர்கள் இருவரின் பதட்டத்தை கவனித்த மனோ, சொன்னான். "இவனோட  வீட்டுக்கு போய் கலாட்டா பண்ண  வேண்டியது தானே. நம்ம ஆபிஸுக்கு ஏன் வராங்க "

"ஆபீஸ் ல பிரச்னை பண்ணா தானே பணம் தேத்த முடியும்" வெங்கட்.

"இந்த ஐடியா யாரு கொடுத்தா நீயா  "

"இல்ல சார்" அதிர்ச்சியாய் மறுத்தான்.

"இந்த மேட்டர் உனக்கு எப்ப தெரியும்

"ரெண்டு மூணு மாசமா தெரியும்"

"என் கிட்டே ஏன் சொல்லல"

"உங்க பிரண்டாச்சேனு....

இழுத்தது போதும். கூப்பிடு அவங்களை" 

"டேய் பிளீஸ் என்னை எப்படியாவது காப்பாத்திடுடா " நண்பன் 

"நீ சில்மிஷம் பண்றதுக்கு என் கம்பெனி தான் கிடைச்சுதா" மனோவின் குரல் உயர்ந்தது.

பிரபு தலை குனிய கதவு திறந்தது.
ஒரு வயதான பெண்மணி , அழுத படி ஒரு இளம்பெண், ஒரு கட்டுமஸ்தான ஆள். என்று ஒருவர் பின் ஒருவராக வந்தார்கள்.

"இவ்வளவு தானா இன்னும் இருக்காங்களா ?"

"இன்னும் நாலஞ்சு பேர் வெளில நிக்கிறாங்க" 

பிரபுவை பார்த்த மாத்திரத்தில்  அந்த ஆள் கத்த ஆரம்பித்தான்.

"பண்றதெல்லாம் பண்ணிட்டு இங்க வந்து ஒழிஞ்சுகிட்டியா"

"ஹலோ பார்த்து பேசுங்க"

"உன் மூஞ்சை பேக்காம பேசறேனேனு சந்தோசப்படு"


பிரபு  மனோவை பார்க்கிறான்.
"பொண்ணை வேலைக்கு அனுப்பறோமா. இல்லே உன்கூட சரசம் பணறதுக்கு அனுப்பறமோ" அப்பன் இல்லாத பொண்ணு எவன் கேட்கப் போறான்னு தானே.தட்டி கேட்க நான் இருக்கேண்டா" 

அந்த பெண் அழுது கொண்டே இருக்க  மனோ  கடுப்பாகி, " ப்ளீஸ் டோன்ட் க்ரை " என்றான்.

"வாழ்க்கையே போயிடிச்சே. எப்படி சார் அழுவாம இருக்கும்." அந்த அம்மா புடவை தலைப்பை பிடித்து கொண்டு  விம்ம ஆரம்பித்தார்.

லேப் டாப்பில்  டைப் பண்ணி கொண்டே மேனேஜரை பார்த்து  நீ பேசு என்பது போல்
சொடக்கு போட்டான்.

"இப்ப என்ன பண்ணலாம் சொல்லுங்க" வெங்கட் ஆரம்பித்தான்.

"இந்த பொண்ணை அவன் கல்யாணம் பண்ணிக்கணும்"

"எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு "

"ஆகிடுச்சுல்ல.  பின்ன ஏன் இந்த பொண்ணு பின்னாடி அலைஞ்சே " கட்டு மஸ்து எகிற ஆரம்பித்தான்.

மனோவை பிரபு  பார்க்க, 

"அங்க என்ன பார்வை. இத பாரு. இதுக்கு ஒரு முடிவு  கிடைக்கணும். இல்லேண்ணா  போலீஸ் இருக்கு கோர்ட் இருக்கு."

மனோ தன் மேஜை டிராயரை திறந்து நூறு ரூபாய் கட்டுகளாக ஐந்தை  எடுத்து டேபிளில் வைத்தான்.

கத்தி கொண்டிருந்த கட்டுமஸ்தான ஆள் 

 "ரூபாயை எடுத்து வச்சிட்டா சரியா போச்சா" 

இன்னொரு ஐந்து  கட்டுகளை மனோ எடுத்து வைத்தான். அவன் சுருதி இறங்குகிறது

"இல்லே நீங்க பணக்காரங்க. உங்களுக்கு இதெல்லாம் சாதாரணம். ஆனா எங்களை மாதிரி ஏழைகளுக்கு இதெல்லாம் ரணம் தானே இதெல்லாம் உங்களுக்கு எங்க தெரிய போகுது்" 

இன்னொரு சில 100 ரூபாய் கட்டுகள்.  டேபிளுக்கு வருகிறது 

"ஏன் நீங்க வாய் பேச மாட்டீங்களா" 

அந்த தாய் மனோவை பார்த்து கேட்கிறாள்.

"அதான் அவர் பணம் பேசிட்டிருக்கே"

"இங்க பாருங்க. உங்க  பொண்ணு இங்க வேலை பார்க்குது. இவரும் முதலாளியோட  நண்பர். அதனால  பிரச்னை முடிஞ்சா சரினு ஹெல்ப் பண்றார் . அவரை போய்....." என்று மேனேஜர் பேச ஆரம்பித்தான்.

"ஹூம். இதுக்கு கூட  நீங்க தான் பதில்
சொல்வீங்களா " 

"அவர் இப்படி கூவரதுக்கு   தான் சம்பளமே வாங்குறார். " கட்டுமஸ்து குரலில் கிண்டல்

இதை கேட்ட மனோ கோபத்துடன் நோட்டுக்களை எல்லாம் எடுத்து  உள்ளே வைக்க சொல்லி மேனேஜரிடம் கண் காட்டினான்.  அந்த கட்டுமஸ்து இப்போது கை நீட்டி தடுத்தான்.

"இருங்க. இப்ப என்ன. இந்த துட்டை எடுத்துட்டு உங்க பிரண்டை டிஸ்டர்ப் பண்ணாம இருக்கணும் அவ்வளவு தானே.  நான் பார்த்துக்கிறேன்"  என்ற படி பணத்தை வாரி கொண்டான்.

அந்த அம்மா "ஏண்டா டேய் உன்னை அழைச்சிட்டு வந்தது என் பொண்ணுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்னு" நீ என்னடான்னா அவளை விலை பேசறியே"


"அட. ஏதோ  தெரியாம பண்ணிட்டாரு. அதை போய் பெரிசு படுத்திட்டு. நீ கையெழுத்தை போட்டு கொடு. 

அனு மறுக்க ஆரம்பிக்க

 "இங்க பாரு. நீ உஷாரா இருந்திருக்கணும். இப்ப அழுது ஒரு பிரயோசனமுமில்லே" 

அனு அழுது கொண்டே மேனேஜர் கொடுத்த பேப்பர்களில் அவசரமாக கையெழுத்து போட ஆரம்பித்தாள்.

 "இனிமே இந்த பொண்ணு இருக்கிற பக்கம்  பார்வை வந்துச்சு. நாங்க திரும்பவும் வருவோம் " பாபுவை எச்சரித்த படி கட்டுமஸ்து கிளம்ப,  அம்மா தலையில் அடித்து கொண்டே வெளியேறினார். அந்த பெண் அனு மனோவை திரும்பி பார்த்த படியே செல்ல, மனோ நண்பனை பார்க்கிறான்.

"ஏண்டா. நீ சம்பாதிக்கிற காசுக்கு  இதெல்லாம் தேவை தானா "

"சாரிடா" 

"அதை வச்சிட்டு என்ன பண்றது. பணம் தானே பிரச்னையை தீர்த்துச்சு. 
 So,  பணம் இருந்தா விளையாடு.
இல்லேன்னா பொத்திகிட்டு  இருந்திடு"
மேனேஜரிடம் திரும்பி, 

 "நான் செய்ய வேண்டியதெல்லாம் இவன் பண்ணிட்டிருக்கான்யா. இந்த அமௌன்ட்ட  அவனுக்கு கடன் கொடுத்ததா எழுதி வைங்க."

வெங்கட்  தலையாட்ட பாபுவிடம் சொல்கிறான். 

" இனிமே மேயற வேலை எல்லாம் இங்க வேணாம். அப்புறம் உன்னை புடிச்சு கொடுத்து  நான்  நல்ல பிள்ளையாகிடுவேன்" என்ற படி  சோம்பல் முறிக்கிறான். 

அவன் ஒன்றும் சொல்லாமல் விருட்டென்று கிளம்பி வெளியில் செல்ல, "இனிமே இவன் இங்க வந்தான்னா த்ரூவா வாட்ச் பண்ணு." 

சரி சார்.

"ஆமா. அந்த பொண்ணு எப்படிய்யா?"

"நல்ல பொண்ணு சார். இவரால நம்ம கம்பெனி ஒரு  நல்ல ஸ்டாஃப்பை விடும்படி ஆகிடுச்சு.

"ரொம்ப பீல் பண்ணாதே . காசை விட்டெறிஞ்சா ஆயிரம் வேலையாள்."

"கம்பெனிக்கு சின்சியராவும் இருக்கணும்லே"   மனதுக்குள் சொல்லி கொள்கிறான் வெங்கட். 

அப்போது செல் போனில் வந்த மெசேஜ் படித்த மனோ,  "இன்றைய இரவை கொண்டாட அழைப்பு வந்தாச்சு. வாரே வா" விசிலடித்தான். 


"சார் நான் கூட இதை எப்படி சால்வ் பண்ண போறீங்களோனு பயந்துகிட்டிருந்தேன். ஈசியா  முடிச்சிட்டீங்க." வெங்கட் பாராட்டில் மயங்காமலே வார்த்தைக்கு தயங்காமலே சொன்னான்.

"பணம்யா பணம். அது இருந்தா  எதுவும் பண்ணலாம். எதையும் சரியாக்கலாம்."

"இவரு. இன்னும் சரியான ஆளை சந்திக்கல. சத்திக்கிறப்ப இருக்கு வேடிக்கை"  வெங்கட்  உள்ளுக்குள் முணுமுணுத்தான்.
   

காட்சி-4

"உங்க பணத்தால எதை வேண்ணா வாங்குங்க சார். ஆனா என்னை விலைக்கு  வாங்க முடியாது" தனக்கெதிரே நின்றிருந்தவர்களிடம் தீர்மானமாக சொல்லி கொண்டிருந்தாள் நந்தினி.


(அவளுக்கு எதிரில் இருந்தவர்கள் அப்படி எதை அவளிடம் விலை பேச முனைந்தார்கள்.அடுத்த வெள்ளி தெரிஞ்சிடும்.)

தொடரும்.

நன்றி ஓவியர் ஜெயராஜ்.

ஆர்.வி.சரவணன்.



திங்கள், நவம்பர் 07, 2016

வா, காதல் செய்வோம்-1









காட்சி-1

இரவு நேரம். அமைதியை கலைக்காதவாறு கோவிலின் மணியோசை,  பிரமாண்டமான பங்களாவின் பால்கனியில் அமர்ந்திருந்த 65 வயது மதிக்கத்தக்க அந்த பெண்மணியை கோவில் இருந்த பக்கம் திரும்ப வைத்தது.

"பகவானே என் பேரனை ஒரு கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வைக்கிறதுக்குள்ள உன் பாடு என் பாடு ஆகிடுச்சு. ஏதோ நல்லபடியா கல்யாணத்தை முடிச்சிட்டேன். அவன் வாழ்க்கையும்  நல்ல படியா அமையணும்பா" 
என்றவாறு கன்னத்தில் போட்டு கொண்டார்.

" என் பொண்ணை இந்த மாப்பிள்ளைக்கு சம்மதிக்க வைக்கிறதுக்கே போதும் போதும் னு ஆகிடுச்சு. பெரியவங்களா  பார்த்து பேசி முடிச்சிட்டோம். நீ தான்பா அவங்களை கஷ்டம் ஏதும் இல்லாதவாறு  வாழ வைக்கணும்" பக்கத்தில் நின்றிருந்த பெண் கோபுரத்தை பார்த்து கும்பிட்ட படி முணமுணுத்தார்.

அந்த வயதான பெண்மணி அந்த பெண்ணின் தோளில் கை வைத்து, "முரண்டு  பிடிக்கிறவங்க எல்லாருமே கல்யாணத்துக்கு அப்புறம் சரியாயிடுவாங்க. வாழ்க்கைல நாம பார்க்காததா. இதுக்காக நீங்க ஒண்ணும் பீல் பண்ணாதீங்க" சமாதானம் செய்யும் விதமாக சொன்னார்.

அந்த அம்மா மௌனமாக தலையாட்டினார். கூடவே உள்ளே திரும்பி, சாத்தப்பட்டிருந்த அறைக்கதவை ஒரு முறை பார்த்து கொள்கிறார்.

காட்சி-2

பெட் ரூம் 

அந்த அறை ஒரு பூந்தோட்டத்தில் நுழைந்ததை போன்ற தோற்றத்தில் இருந்தது. அறையின் நடுவே  இருந்த கட்டில் வித விதமான மலர்களை கொண்டு தன்னை அலங்கரித்து மலர் மஞ்சம் என்பது இது தானோ என்ற எண்ணத்தை தர, பழங்கள் மற்றும் பலகாரங்கள் வேடிக்கை பொருள்களாக காட்சியளித்து கொண்டிருந்தது.  கட்டிலின் மையத்தில் பூக்களால் மனோ,  நந்தினி  என்ற பெயர்கள் எழுதப்பட்டு எந்த நேரத்திலும் களைய தயாராய் இருந்தது.

கட்டிலுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு பக்கத்தில் தரையில் மனோ படுத்திருந்தான்.  தூங்கி கொண்டிருந்தவனின் அருகில் இருந்த மது கிண்ணம்  அவன் மதுவுண்ட மயக்கத்தில்
இருப்பதை சொன்னது.

இதற்கு நேர் எதிரே கட்டிலின் அந்த பக்கத்தில் நந்தினி  படுத்திருந்தாள். தன் இடது கையையே தலையணையாக  தலைக்கு கொடுத்த படி இந்த அறையை பார்க்க பிடிக்காதவளாக சுவர் பக்கம் திரும்பி படுத்திருந்தாள்.அவளுக்கு மட்டுமே  கேட்கும் படியான விசும்பலில் இருந்தாள். மனோ செல்போன் எஸ் எம் எஸ் வந்திருப்பதை சத்தமிட்டு சொல்ல அவன் தூக்க கலக்கத்திலேயே செல் போனை எடுத்து பார்க்கிறான்.

"ம். ஹேப்பி பர்ஸ்ட் நைட்டாம். டேய் இது என் பொண்டாட்டிக்கு மட்டும்தான் பர்ஸ்ட் நைட். எனக்கு எத்தனாவது என்கிற கணக்கில்லே" என்கிறான்.

நந்தினி கன்னத்தில் வழிந்த கண்ணீரை தன் வலது கை விரல்களால் துடைத்து கொள்கிறாள்.

அந்த அறையின் சுவரில் இன்றைய தேதியை அறிவித்த படி இருந்த  காலண்டர், காற்றில் பறக்க ஆரம்பிக்கிறது.  மூன்று மாதங்களுக்கு முந்தைய நாள் ஒன்றில்  சென்று நின்று கொள்கிறது.

பிளாஷ் பேக் தொடங்குகிறது.

தொடரும்

ஓவியம் : மாருதி

ஆர்.வி.சரவணன்.

வெள்ளி, அக்டோபர் 14, 2016

கண்ணை தொறக்கணும் சாமி








கண்ணை தொறக்கணும் சாமி

ஆண்டவன் கட்டளை படத்தில் விஜய் சேதுபதி நண்பர்களுடன் வீடு பார்க்க சென்று பேச்சிலருக்கு வீடு கிடையாது என்றவுடன் மனைவி ஊரில் இருப்பதாக  ஒரு பெயரை சொல்லி (பொய் சொல்லி) வாடகைக்கு வந்து விடுவார். அதனால் அவர் படும் இன்னல்களே கதை. நிற்க.

1986 ஆம் வருடம் வெளியான கண்ணை தொறக்கணும் சாமி படத்தில் இது போன்றதொரு காட்சி வருகிறது. சிவகுமாருக்கு வீடு கிடைப்பதற்காக அவரது மனைவி ஊரில் இருக்கிறார் என்ற பொய்யை  நண்பரான சோ சொல்லவே வீடு கிடைத்து விடுகிறது.

வீட்டு ஓனரான மனோரமா உன் பொண்டாட்டி போட்டோ எங்கே என்று கேட்க, சிவகுமார் விழிக்க ஆரம்பிக்கிறார்.  "உன் பொண்டாட்டி போட்டோ காட்டு. இல்லேன்னா வீட்டை காலி பண்ண சொல்லிருவேன்"  என்று கறார் பண்ணவும் வேறு வழியின்றி போட்டோ ஸ்டூடியோ சென்று ஒரு பெண் போட்டோவை கொண்டு வந்து இதுதான் மனைவி என்று சொல்கிறார். அந்தப் பெண் ஜீவிதா. அந்த போட்டோவை சிவகுமார் போட்டோவுடன் சேர்த்து பிரேம் போட்டு மாட்டி வைக்க சொல்கிறார் மனோரமா.

அடுத்த நாள் போட்டோவில் இருந்த ஜீவிதா, பெட்டியுடன் என்னங்க என்ற படி மனைவியாக உள்ளே நுழைகிறார். சிவக்குமாருக்கு திக் என்றாகிறது. அவரை எப்படி சமாளிக்கிறார். ஜீவிதா உண்மையில் யார் ? என்பது நகைச்சுவையாக சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த படத்தில், சிவகுமார் வேலைக்கு  சேரும் கம்பெனியில் டெபாசிட் கட்டும் படி சொல்கிறார்கள்.  டெபாசிட்  கட்டும் சிவகுமார் இது எனக்கு எப்ப திரும்ப கிடைக்கும் என்று கேட்க அதற்கு மேனேஜர் சொல்லும் பதில்.

"ஐந்து வருசம் கழிச்சு கிடைக்கும். ஆனா இந்த ஐந்து வருசத்துல நீயா வேலையை விட்டு போனாலும் சரி. நாங்களா அனுப்பினாலும் சரி பணம் கிடைக்காது."

கதை தாசரி நாராயண ராவ். படம் ரிலீசான சமயத்தில் பார்த்திருந்தாலும் நேற்று மீண்டும் இந்த படத்தை பார்த்தேன். காரணம் இந்தப்படத்தின் திரைக்கதை வசனம். கே. பாக்யராஜ்.


ஆர்.வி.சரவணன்.

வியாழன், அக்டோபர் 13, 2016

திரைக்கதை வடிவில் ஜீவநதி சிறுகதை






திரைக்கதை வடிவில் ஜீவநதி சிறுகதை 

நம் வலைத்தள முகநூல் நண்பர் சே.குமார், அவரது மனசு தளத்தில் சென்ற தீபாவளியின் போது  ஜீவநதி என்ற தலைப்பில் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட சிறுகதை ஒன்றை எழுதியிருந்தார்.  கூடவே என்னிடம் இந்த கதையை திரைக்கதை அமைத்து தாருங்களேன் என்றும் சொல்லியிருந்தார். நானும் சரி என்று ஒப்புக்கொண்டு திரைக்கதை வசனம்  (ஷாட் பிரிக்காமல்)  எழுதி கொடுத்ததுடன்  உங்கள் தளத்திலேயே வெளியிடுங்கள் என்றும் சொல்லியிருந்தேன். குமார், தன் மனசு வலைத்தளத்தில் இரு பதிவுகளாக இதை வெளியிட்டிருக்கிறார். நண்பர்கள் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்  எங்கள் இருவரின் விருப்பமும் அதுவே.


மனசு குமார் எழுதிய சிறுகதை ஜீவநதி   யை முதலில் படித்து விடுங்கள் 

அடுத்து திரைக்கதையாக எழுதப்பட்டிருப்பதை படியுங்கள்.

 திரைக்கதை வடிவில் ஜீவநதி

திரைக்கதை வடிவில் ஜீவநதி -2

திரைக்கதை வடிவில் ஜீவநதி -3

நன்றி பரிவை சே.குமார் 


ஆர்.வி.சரவணன் 

வெள்ளி, அக்டோபர் 07, 2016

சுயநலம் - குமுதம் ஒரு பக்கக் கதை





சுயநலம் 
(குமுதம் ஒரு பக்கக் கதை )



ராமேஸ்வரம் ரயிலில் ஏறி  தன் சீட்டுக்கு வந்த சேகர் சந்தோசமாய் விசிலடித்தான்.காரணம் இன்று அவனுக்கு லோயர் பர்த் கிடைத்திருந்தது.
எப்போதாவது தான் லோயர் பர்த் கிடைப்பதுண்டு. இன்று கிடைத்திருந்தது.
இருந்தும் சந்தோஷம் உடனே வடிந்தது

சென்ற முறை ஒரு வயதானவர்  அப்பர் பர்த்தில் தன்னால் ஏற முடியாது என்று இவனை ஏற்றி விட்டு விட்டார்.  அது போல் இன்றும் யாரேனும் சீட் கேட்டு வந்தால் ... அவனுக்கு ஒரு யோசனை உதித்தது.

ரயில் கிளம்பிய உடனே படுத்து கொண்டு விட்டான்டி டி ஆரும் வந்து டிக்கெட் செக் செய்து விடவே அவனுக்கு இன்னும் வசதியாக போய் விட்டது.ரயில் தாம்பரத்தை அடைந்தது. இங்கு தான் கூட்டம் நிறைய ஏறும். எதுக்கு முழிச்சுகிட்டு இருக்கே தூங்குடா என்று தனக்கு தானே அதட்டி கொண்டு கண்களை மூடி கொண்டு விட்டான்

கூட்டம் திமுதிமுவென்று ஏற ஆரம்பித்ததுசில நிமிடங்கள் கழித்து எல்லா குரல்களும் தேய்ந்து போய் ரயிலின் தடக் தடக் மட்டும் கேட்க ஆரம்பித்திருந்தது. கூடவே காற்றுடன் சேர்ந்து மழையும் ஆரம்பித்திருந்தது. எழுந்து ஜன்னல் கண்ணாடியை கீழே இழுக்க ஆரம்பித்தவன் அதிர்ந்தான். அந்த கண்ணாடி கதவையும்  ஷட்டரையும் கீழே இறக்கி விட எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை

பிறகென்ன. எல்லோரும் நன்றாக தூங்கி கொண்டிருக்க... மழை சாரல் ஜன்னல் வழியே உள் நுழைந்து அவன் உடல் முழுதும் நனைக்க, சேகர் மட்டும் குளிரில் வெடவெடத்த படி தூங்காமல் விழித்திருந்தான்.

குமுதம் 13-07-2016 வார இதழில் வெளி வந்த எனது ஒரு பக்க சிறுகதை 
சுயநலம். நன்றி குமுதம் வார இதழ் 


ஆர்.வி.சரவணன்

புதன், செப்டம்பர் 07, 2016

ஸ்வீட் காரம் காபி






ஸ்வீட் காரம் காபி



நண்பர்கள் பலரும் பிளாகில் தொடர்ந்து எழுதி கொண்டிருக்க, வாரம்  ஒன்றாவது எழுத வேண்டும் என்று  நினைத்து  எழுதாமலே இருக்கும் என் நிலை வீட்டு பாடம் எழுதி வராத மாணவன் நிலை போல் தான் இருக்கிறது. மன்னிக்கவும் நண்பர்களே 

சமீபத்தில் வந்த படங்கள் பலவற்றை பார்த்து விட்டாலும்  சில படங்களை பற்றி கண்டிப்பாக  எழுதணும்னு தோணும். அவற்றை பற்றி  சில வரிகளாவது முகநூலில் எழுதி விடுவேன்.  ஜோக்கர் படம் பற்றி எழுதியது இங்கே. 





மன்னர் மன்னனாக குரு சோமசுந்தரமும் மல்லியாக ரம்யா பாண்டியனும். படம் முடியும் வரை திரையிலும் படம் முடிந்த பின் நம் மனதிலும் நிறைகிறார்கள்.

ஒரு காட்சியில் நாயகி மல்லி நாயகனின் வீட்டினுள்ளே நாற்காலியில் அமர்ந்திருக்கிறாள். திருமணத்திற்கு ஒப்புக் கொள்வாளா இவள் ? என்ற தவிப்பில் நாயகன் மன்னர் மன்னன் வீட்டின் வாசற்படியோரம் அவள் பதிலுக்கு காத்து கொண்டிருக்கிறான். ஒரு வழியாக அவனுக்கு அவளிடமிருந்து ஒப்புதல் கிடைத்து விடுகிறது. கூடவே , "பக்கத்துல வந்து உட்காரு" என்றழைக்கிறாள். அவனும் இந்த வார்த்தைக்காக காத்திருந்தது போல் உள்ளே ஆர்வமாய் ஓடி வருகிறான். பக்கத்தில் தான் அமர போகிறான் என நாம் நினைத்து கொண்டிருக்கையில் நாயகன் சந்தோசத்துடன் வந்தமர்ந்து கொள்வதோ அவளது காலடியில்.எந்த ஒரு கமர்சியலுக்கும் ஆட்படாமல் சமூக அவலங்களை உரக்க, மனதில் உரைக்க சொல்லப்பட்டிருக்கிறது.ஜோ(க்க)ர்.

சில படங்கள் பற்றி எழுதலாம் என்று நினைத்தாலும், பல பேர் எழுதுறதை  படிச்சிட்டு  நாம புதுசா என்னத்தை எழுதிட போறோம்னு ஒரு தயக்கம்  வந்துரும். அப்படியும்  மீறிஎழுதினாலும் அவை டிராப்ட்டில் செட்டில் ஆகியிருக்கும். அதிலிருந்து இரு படங்கள் பற்றி இங்கே.




கபாலிக்கு தனக்கு ஒரு மகள் இருக்கிறாள் என்று தெரிய வருகிறது. அந்த நேரம் எதிரிகள் சுற்றி தாக்க முயற்சிக்கிறார்கள். இருந்தும் அந்த ஆபத்தெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பது போல் மகளை முதல் முறை பார்த்த ஆச்சரியத்தில் நெகிழ்ச்சியில் நின்றிருப்பார் சூப்பர் ஸ்டார் ரஜினி. ஒரு மாஸ் ஹீரோ படத்தில் சண்டை என்று வந்தால் அவர் தான் செய்ய வேண்டும். வேறு  யார்  செய்தாலும் ரசிகர்களுக்கு பிடிக்காது போய் விடும். ஆனால் இங்கே மகள் எதிரிகளுடன் அப்பாவுக்கும் சேர்த்து சண்டையிட்டு கொண்டிருக்க, அப்பாவோ மகளை பார்த்த நெகிழ்ச்சியில் தன்னை காத்து கொள்ள கூட தோணாது உறைந்து போனவராக நின்றிருப்பார். அவர் சுற்றி சூழந்து சண்டையிடவில்லை தான். இருந்தும் அக் காட்சி பெண்ணை பெற்றவர்களிடம் ஒரு நெகிழ்ச்சியை கொண்டு வந்து விடுகிறது. எனக்கும் அப்படியே.


ரஜினி மறு நாள் தன் மனைவியை சந்திக்க போகிறோம் என்று உறுதியான பின் தூக்கமில்லாமல் பால்கனியில் நின்றிருக்க, "என்னப்பா தூங்கலே" என்று மகள் கேட்கிறார். "இல்லம்மா இங்க தான் எங்கியோ உங்கம்மா என் மனைவி இருக்கா. நாளைக்கு என்னை  பார்க்கிறப்ப என்ன நினைப்பா ? என்ன பேசுவா ? இதெல்லாம் யோசிச்சா என் ஹார்ட் பீட் எனக்கே கேட்குது என்று சொல்லும் போதாகட்டும். தன்  மனைவியை ( ராதிகா ஆப்தே) பார்த்தவுடன் கட்டி அணைத்து கொண்டு அவரை போல் கதறி அழத்தோன்றும் எண்ணங்களை கட்டுப்படுத்தி ஒரு சந்தோச நிலைக்கு வருவதாகட்டும் ஏகப்பட்ட துப்பாக்கி சத்தங்களுக்கு இடையே இக் காட்சி தரும் நெகிழ்ச்சி தனி ரகம் தான்.

ரஜினி ரஞ்சித் அடுத்த படமே உறுதியாகிடிச்சு இப்ப போய் இதை சொல்லிகிட்டு இருக்கே என்கிறீர்களா.அதே போல் இன்னொரு இயக்குனரின் அடுத்த படம் என்ன என்று கேட்க தோன்றுகிறது. அது நான் ரசித்த ஒரு நாள் கூத்து படம்.


திருமணத்திற்கு காத்திருக்கும் மூன்று  பெண்களின் கதை. மாப்பிள்ளை ஓகே சொல்வாரா என்று காத்திருந்து சலித்து போய் வேண்டாம் என்று மறுக்கும்  கேரக்டர் ஒன்று, காதலன் மேல் காதல் இருந்தாலும். யதார்த்தத்தை யோசிக்கும் கேரக்டர். இன்னொன்று.தானே முடிவெடுக்க பயந்து பின் தனக்கு பிடித்ததை தேர்ந்தெடுக்க முடிவெடுத்து அது தொல்வியில் முடிய செய்வதறியாது நிற்கும் கேரக்டரொன்று. மூன்று பெண் கதாபாத்திரங்களும் வெவ்வேறு கதைக்களன் என்றாலும் அவற்றை ஒன்றாக கொண்டு வந்து இணைக்கும் திரைக்கதை.
எத்தனை வரன்கள் வந்தாலும் தட்டி கழித்து தன் தகுதிக்கு தகுந்தாற் போல் வரன் தேடும் அப்பா, பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள தடை செய்து குழந்தையை இழுத்து செல்வது போல் இழுத்து செல்லும் அம்மா , பெண்ணை நிச்சயம் செய்து விட்டு அதற்கு பின் கல்யாணம் பண்ணலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க திணரும் ஒரு மாப்பிள்ளை, தங்கையின் கல்யாணம் முடிப்பதற்காக மாப்பிள்ளையின் பதிலுக்கு காத்திருக்கும் அண்ணன். விரும்பியவனை கல்யாணம் செய்தாலும் அவனாலும் அவன் குடும்பத்தாராலும் துரத்தப்பட்டு இந்த பிள்ளை ஒண்ணு தான் மிச்சம் என்று பெருமூச்செறியும் தோழி, திருமணம் நடைபெறும் வரை மாப்பிள்ளை குடும்பத்துக்கு எது நடந்தாலும் அதை தூக்கி பெண்னின் தலையில் போடும் குடும்பம் இப்படி முழுக்க திருமண பிரச்னைகளை  பற்றி தான் பேசுகிறது படம். வசனங்கள் பல இடங்களில் ரசிக்க முடிந்தது. சீரியசான காட்சிகள் கூட முடிவடையும் போது நகைச்சுவையாக  முடிவதை ரசித்தேன். உதாரணமாக தினேஷூம் அவர் காதலியின் அப்பாவும் டைனிங் டேபிளில்  வாக்கு வாதம் செய்து கொண்டிருக்க அந்த டென்ஷனான தருணத்தில், தினேஷ் நண்பன் எனக்கு முட்டை வரல என்று கேட்பதாக முடியும். படம் முடிந்து தியேட்டரிலிந்து வெளிவருகையில்  நல்லதொரு  பீல் குட் மூவி பார்த்த திருப்தி இருக்கு ஆவி என்றேன். அவரும் ஒரு தலையாட்டலில் நான் சொன்னதை லைக் செய்தார். 




சினிமாவில் முன்னுக்கு வந்த பிரபலங்களின் (முன்னுக்கு வர கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நபர்களும் உண்டு) அனுபவங்கள் படிப்பதில் மிகுந்த விருப்பம் எனக்கு.அந்த வகையில் பஞ்சு அருணாச்சலம் அவர்களின் திரை தொண்டர் தொடர்ந்து படிச்சிட்டு வரேன். அவர் கதை வசனம் எழுதிய படங்கள், தயாரித்த படங்கள் பார்த்து அவர் மேல் கொண்டிருந்த நன் மதிப்பு அவரது அனுபவங்கள் படிக்கையில் பன் மடங்கு பெருகிடுச்சு. சிலரை பற்றி சொல்கையில் அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று சொல்வார்கள். அது இவருக்கு மட்டுமல்ல  கவிஞர் நா முத்துக்குமார் அவர்களுக்கும் பொருந்தும். அவரது மரணம் மிக பெரும் அதிர்ச்சியளித்தது. 
எனது இளமை எழுதும் கவிதை நீ....நாவலை வெளியிட்டவர் அவர் தான்.



வினோ அவரை பற்றி சொல்கையில் மிகவும் எளிமையானவர் என்பார். அதை கண் கூடாக கண்டேன். எனது விழாவுக்கு அவர் வருவது முடிவானவுடன் அவரை பார்த்து எனது நாவலை கொடுப்பதற்காக அவருக்கு போன் செய்த போது போனை எடுத்தவர் "அட்ரஸ் நோட் பண்ணிக்குங்க" என்றார். நான் அப்போது வடபழனி பஸ் ஸ்டாப் அருகில் நின்றிருந்தேன். வாகனங்களின் இரைச்சல்களுக்கு இடையே நான் பேனா எடுத்து பேப்பர் வைத்து எழுதுவதற்கு இடம் தேடி எழுதும் வரைக்கும் பொறுமை காத்து முகவரி தந்தார். அதே போல் விழாவன்றும்  முன்னதாகவே வந்து விழா ஆரம்பிக்கும் வரை வந்திருந்த இணைய நண்பர்களுடன் உரையாடி கொண்டிருந்தார். ஒரு சாதனை மனிதன் இந்த எளியவனின் விழாவுக்கு வந்து ஊக்கப்படுத்தியது ரொம்ப பெரிய விஷயம். இனி , ஆனந்த யாழ்...... இசை பாடும் (கேட்கும்) போதெல்லாம் அவர் நினைவுகள் நம் உள்ளுக்குள் வதைபட்டு கொண்டிருக்கும்.



நண்பர் அரசனின் இண்டமுள்ளு சிறுகதை தொகுப்பு படித்த பின் இண்டமுள்ளு செடி எப்படி இருக்கும் என்று பார்க்க ஆர்வம் ஏற்பட்டது. இதோ அது தான் இது என்று படம் வெளியிட்டிருந்தார். அந்த படம் இங்கே 

கூடவே நண்பர் மனசு குமார் இண்டமுள்ளு புத்தகம் பற்றி எழுதிய பதிவும் இங்கே 


பாக்யாவில் எனது தொடர்கதை வந்து கொண்டிருப்பது நண்பர்கள் அறிந்ததே. (18 வாரங்கள் வரை வந்து விட்டது). அந்த உற்சாகத்துடன், குமுதத்தில் சிறுகதைக்கு அவ்வப்போது முயற்சித்து அனுப்பி கொண்டே இருந்ததில் மூன்று சிறுகதைகள்  வெளி வந்துள்ளது. குமுதம் ஆசிரியர் குழுவுக்கும் ஊக்கமும் உற்சாகமும் தந்து வரும் இணைய நண்பர்களுக்கு நன்றி.


ஆர்.வி.சரவணன்