புதன், செப்டம்பர் 07, 2016

ஸ்வீட் காரம் காபி






ஸ்வீட் காரம் காபி



நண்பர்கள் பலரும் பிளாகில் தொடர்ந்து எழுதி கொண்டிருக்க, வாரம்  ஒன்றாவது எழுத வேண்டும் என்று  நினைத்து  எழுதாமலே இருக்கும் என் நிலை வீட்டு பாடம் எழுதி வராத மாணவன் நிலை போல் தான் இருக்கிறது. மன்னிக்கவும் நண்பர்களே 

சமீபத்தில் வந்த படங்கள் பலவற்றை பார்த்து விட்டாலும்  சில படங்களை பற்றி கண்டிப்பாக  எழுதணும்னு தோணும். அவற்றை பற்றி  சில வரிகளாவது முகநூலில் எழுதி விடுவேன்.  ஜோக்கர் படம் பற்றி எழுதியது இங்கே. 





மன்னர் மன்னனாக குரு சோமசுந்தரமும் மல்லியாக ரம்யா பாண்டியனும். படம் முடியும் வரை திரையிலும் படம் முடிந்த பின் நம் மனதிலும் நிறைகிறார்கள்.

ஒரு காட்சியில் நாயகி மல்லி நாயகனின் வீட்டினுள்ளே நாற்காலியில் அமர்ந்திருக்கிறாள். திருமணத்திற்கு ஒப்புக் கொள்வாளா இவள் ? என்ற தவிப்பில் நாயகன் மன்னர் மன்னன் வீட்டின் வாசற்படியோரம் அவள் பதிலுக்கு காத்து கொண்டிருக்கிறான். ஒரு வழியாக அவனுக்கு அவளிடமிருந்து ஒப்புதல் கிடைத்து விடுகிறது. கூடவே , "பக்கத்துல வந்து உட்காரு" என்றழைக்கிறாள். அவனும் இந்த வார்த்தைக்காக காத்திருந்தது போல் உள்ளே ஆர்வமாய் ஓடி வருகிறான். பக்கத்தில் தான் அமர போகிறான் என நாம் நினைத்து கொண்டிருக்கையில் நாயகன் சந்தோசத்துடன் வந்தமர்ந்து கொள்வதோ அவளது காலடியில்.எந்த ஒரு கமர்சியலுக்கும் ஆட்படாமல் சமூக அவலங்களை உரக்க, மனதில் உரைக்க சொல்லப்பட்டிருக்கிறது.ஜோ(க்க)ர்.

சில படங்கள் பற்றி எழுதலாம் என்று நினைத்தாலும், பல பேர் எழுதுறதை  படிச்சிட்டு  நாம புதுசா என்னத்தை எழுதிட போறோம்னு ஒரு தயக்கம்  வந்துரும். அப்படியும்  மீறிஎழுதினாலும் அவை டிராப்ட்டில் செட்டில் ஆகியிருக்கும். அதிலிருந்து இரு படங்கள் பற்றி இங்கே.




கபாலிக்கு தனக்கு ஒரு மகள் இருக்கிறாள் என்று தெரிய வருகிறது. அந்த நேரம் எதிரிகள் சுற்றி தாக்க முயற்சிக்கிறார்கள். இருந்தும் அந்த ஆபத்தெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பது போல் மகளை முதல் முறை பார்த்த ஆச்சரியத்தில் நெகிழ்ச்சியில் நின்றிருப்பார் சூப்பர் ஸ்டார் ரஜினி. ஒரு மாஸ் ஹீரோ படத்தில் சண்டை என்று வந்தால் அவர் தான் செய்ய வேண்டும். வேறு  யார்  செய்தாலும் ரசிகர்களுக்கு பிடிக்காது போய் விடும். ஆனால் இங்கே மகள் எதிரிகளுடன் அப்பாவுக்கும் சேர்த்து சண்டையிட்டு கொண்டிருக்க, அப்பாவோ மகளை பார்த்த நெகிழ்ச்சியில் தன்னை காத்து கொள்ள கூட தோணாது உறைந்து போனவராக நின்றிருப்பார். அவர் சுற்றி சூழந்து சண்டையிடவில்லை தான். இருந்தும் அக் காட்சி பெண்ணை பெற்றவர்களிடம் ஒரு நெகிழ்ச்சியை கொண்டு வந்து விடுகிறது. எனக்கும் அப்படியே.


ரஜினி மறு நாள் தன் மனைவியை சந்திக்க போகிறோம் என்று உறுதியான பின் தூக்கமில்லாமல் பால்கனியில் நின்றிருக்க, "என்னப்பா தூங்கலே" என்று மகள் கேட்கிறார். "இல்லம்மா இங்க தான் எங்கியோ உங்கம்மா என் மனைவி இருக்கா. நாளைக்கு என்னை  பார்க்கிறப்ப என்ன நினைப்பா ? என்ன பேசுவா ? இதெல்லாம் யோசிச்சா என் ஹார்ட் பீட் எனக்கே கேட்குது என்று சொல்லும் போதாகட்டும். தன்  மனைவியை ( ராதிகா ஆப்தே) பார்த்தவுடன் கட்டி அணைத்து கொண்டு அவரை போல் கதறி அழத்தோன்றும் எண்ணங்களை கட்டுப்படுத்தி ஒரு சந்தோச நிலைக்கு வருவதாகட்டும் ஏகப்பட்ட துப்பாக்கி சத்தங்களுக்கு இடையே இக் காட்சி தரும் நெகிழ்ச்சி தனி ரகம் தான்.

ரஜினி ரஞ்சித் அடுத்த படமே உறுதியாகிடிச்சு இப்ப போய் இதை சொல்லிகிட்டு இருக்கே என்கிறீர்களா.அதே போல் இன்னொரு இயக்குனரின் அடுத்த படம் என்ன என்று கேட்க தோன்றுகிறது. அது நான் ரசித்த ஒரு நாள் கூத்து படம்.


திருமணத்திற்கு காத்திருக்கும் மூன்று  பெண்களின் கதை. மாப்பிள்ளை ஓகே சொல்வாரா என்று காத்திருந்து சலித்து போய் வேண்டாம் என்று மறுக்கும்  கேரக்டர் ஒன்று, காதலன் மேல் காதல் இருந்தாலும். யதார்த்தத்தை யோசிக்கும் கேரக்டர். இன்னொன்று.தானே முடிவெடுக்க பயந்து பின் தனக்கு பிடித்ததை தேர்ந்தெடுக்க முடிவெடுத்து அது தொல்வியில் முடிய செய்வதறியாது நிற்கும் கேரக்டரொன்று. மூன்று பெண் கதாபாத்திரங்களும் வெவ்வேறு கதைக்களன் என்றாலும் அவற்றை ஒன்றாக கொண்டு வந்து இணைக்கும் திரைக்கதை.
எத்தனை வரன்கள் வந்தாலும் தட்டி கழித்து தன் தகுதிக்கு தகுந்தாற் போல் வரன் தேடும் அப்பா, பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள தடை செய்து குழந்தையை இழுத்து செல்வது போல் இழுத்து செல்லும் அம்மா , பெண்ணை நிச்சயம் செய்து விட்டு அதற்கு பின் கல்யாணம் பண்ணலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க திணரும் ஒரு மாப்பிள்ளை, தங்கையின் கல்யாணம் முடிப்பதற்காக மாப்பிள்ளையின் பதிலுக்கு காத்திருக்கும் அண்ணன். விரும்பியவனை கல்யாணம் செய்தாலும் அவனாலும் அவன் குடும்பத்தாராலும் துரத்தப்பட்டு இந்த பிள்ளை ஒண்ணு தான் மிச்சம் என்று பெருமூச்செறியும் தோழி, திருமணம் நடைபெறும் வரை மாப்பிள்ளை குடும்பத்துக்கு எது நடந்தாலும் அதை தூக்கி பெண்னின் தலையில் போடும் குடும்பம் இப்படி முழுக்க திருமண பிரச்னைகளை  பற்றி தான் பேசுகிறது படம். வசனங்கள் பல இடங்களில் ரசிக்க முடிந்தது. சீரியசான காட்சிகள் கூட முடிவடையும் போது நகைச்சுவையாக  முடிவதை ரசித்தேன். உதாரணமாக தினேஷூம் அவர் காதலியின் அப்பாவும் டைனிங் டேபிளில்  வாக்கு வாதம் செய்து கொண்டிருக்க அந்த டென்ஷனான தருணத்தில், தினேஷ் நண்பன் எனக்கு முட்டை வரல என்று கேட்பதாக முடியும். படம் முடிந்து தியேட்டரிலிந்து வெளிவருகையில்  நல்லதொரு  பீல் குட் மூவி பார்த்த திருப்தி இருக்கு ஆவி என்றேன். அவரும் ஒரு தலையாட்டலில் நான் சொன்னதை லைக் செய்தார். 




சினிமாவில் முன்னுக்கு வந்த பிரபலங்களின் (முன்னுக்கு வர கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நபர்களும் உண்டு) அனுபவங்கள் படிப்பதில் மிகுந்த விருப்பம் எனக்கு.அந்த வகையில் பஞ்சு அருணாச்சலம் அவர்களின் திரை தொண்டர் தொடர்ந்து படிச்சிட்டு வரேன். அவர் கதை வசனம் எழுதிய படங்கள், தயாரித்த படங்கள் பார்த்து அவர் மேல் கொண்டிருந்த நன் மதிப்பு அவரது அனுபவங்கள் படிக்கையில் பன் மடங்கு பெருகிடுச்சு. சிலரை பற்றி சொல்கையில் அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று சொல்வார்கள். அது இவருக்கு மட்டுமல்ல  கவிஞர் நா முத்துக்குமார் அவர்களுக்கும் பொருந்தும். அவரது மரணம் மிக பெரும் அதிர்ச்சியளித்தது. 
எனது இளமை எழுதும் கவிதை நீ....நாவலை வெளியிட்டவர் அவர் தான்.



வினோ அவரை பற்றி சொல்கையில் மிகவும் எளிமையானவர் என்பார். அதை கண் கூடாக கண்டேன். எனது விழாவுக்கு அவர் வருவது முடிவானவுடன் அவரை பார்த்து எனது நாவலை கொடுப்பதற்காக அவருக்கு போன் செய்த போது போனை எடுத்தவர் "அட்ரஸ் நோட் பண்ணிக்குங்க" என்றார். நான் அப்போது வடபழனி பஸ் ஸ்டாப் அருகில் நின்றிருந்தேன். வாகனங்களின் இரைச்சல்களுக்கு இடையே நான் பேனா எடுத்து பேப்பர் வைத்து எழுதுவதற்கு இடம் தேடி எழுதும் வரைக்கும் பொறுமை காத்து முகவரி தந்தார். அதே போல் விழாவன்றும்  முன்னதாகவே வந்து விழா ஆரம்பிக்கும் வரை வந்திருந்த இணைய நண்பர்களுடன் உரையாடி கொண்டிருந்தார். ஒரு சாதனை மனிதன் இந்த எளியவனின் விழாவுக்கு வந்து ஊக்கப்படுத்தியது ரொம்ப பெரிய விஷயம். இனி , ஆனந்த யாழ்...... இசை பாடும் (கேட்கும்) போதெல்லாம் அவர் நினைவுகள் நம் உள்ளுக்குள் வதைபட்டு கொண்டிருக்கும்.



நண்பர் அரசனின் இண்டமுள்ளு சிறுகதை தொகுப்பு படித்த பின் இண்டமுள்ளு செடி எப்படி இருக்கும் என்று பார்க்க ஆர்வம் ஏற்பட்டது. இதோ அது தான் இது என்று படம் வெளியிட்டிருந்தார். அந்த படம் இங்கே 

கூடவே நண்பர் மனசு குமார் இண்டமுள்ளு புத்தகம் பற்றி எழுதிய பதிவும் இங்கே 


பாக்யாவில் எனது தொடர்கதை வந்து கொண்டிருப்பது நண்பர்கள் அறிந்ததே. (18 வாரங்கள் வரை வந்து விட்டது). அந்த உற்சாகத்துடன், குமுதத்தில் சிறுகதைக்கு அவ்வப்போது முயற்சித்து அனுப்பி கொண்டே இருந்ததில் மூன்று சிறுகதைகள்  வெளி வந்துள்ளது. குமுதம் ஆசிரியர் குழுவுக்கும் ஊக்கமும் உற்சாகமும் தந்து வரும் இணைய நண்பர்களுக்கு நன்றி.


ஆர்.வி.சரவணன்