செவ்வாய், ஜூன் 21, 2016

உறியடி






உறியடி 

ரீலீசாகும் வரை ஒரு படத்தை பற்றிய தகவல்கள் ஏதும் அறியாமலிருந்து , படம் வெளியான பின் அந்தப் படம் நல்லாருக்குப்பா என்கிற பாசிட்டிவ் ரிவ்யூக்கள் தொடர்ந்து வருகையில் எப்படியாவது இந்தப் படத்தை பார்த்துடணும் என்ற ஆர்வம் வருமே. அது சமீபத்தில் உறியடி திரைப்படம் மூலமாக நிகழ்ந்தது.

சென்ற வாரம் நான், அரசன், கோவை ஆவி மூவரும் சந்தித்த போது படம் பார்க்கலாமே என்றவுடன் எங்களது முதல் சாய்ஸ் இந்தப்படமாக தான் இருந்த்து. அடுத்த நிமிடமே எஸ்கேப்புக்கு எஸ்கேப் ஆகி விட்டோம்.

ஹீரோயின், காமெடி, கமர்சியல் விசயங்கள், இப்படி ஏதுமில்லாமல் சாதியால் பாதிக்கப்படும் கல்லூரி மாணவர்களை பற்றிய கதைக்களனை மையமாக கொண்டு புதுமுகங்களுடன் (ஓரிருவர் பழைய முகங்கள் ) இயக்குனர் விஜய் குமார் தந்திருக்கும் ஆக்‌ஷன் ஆச்சரியம். நால்வரில் ஒருவராக அவரே நடித்துமிருக்கிறார்.

கல்லூரி என்றால் அங்கே காதலும் உண்டு தானே. ஆரம்பத்தில் சக மாணவியுடன் காதல் என்பது கதைக்கு தேவையில்லாத ஒன்று என்று தோன்றினாலும் கதை நகர அந்த கேரக்டரும் ஒரு காரணம் என்பதால் அது அவசியமாகிறது.
அனாவசியம் என்றால் அது மாணவர்கள் அடிக்கடி குடிப்பதாக காட்டியிருப்பது. கொஞ்சம் அவர்கள் படிப்பதாகவும் காட்டியிருக்கலாம்.


படத்தின் மிக பெரிய பிளஸ் என்றால் அது இடைவேளையின் போது தாபாவில் நடைபெறும் சண்டை காட்சியும் ஹோட்டலில் நடைபெறும் சண்டை காட்சியும் தான். இந்த இரண்டு காட்சிகளும், அந்த காட்சிகளை நோக்கிய படத்தின் கதை நகர்வும் படத்தை அலேக்காக தூக்கி நிறுத்தி விடுகிறது. அந்த இரண்டு காட்சியிலும் நம்மை அரங்கத்திலிருத்து தூக்கி சென்று சம்பவ இடத்திலேயே நாற்காலி போட்டு அமர வைத்தது போல் ஏற்படும் ஓர் பிரமையை, படம் முடிந்து வெளியேறி வந்த பிறகும் தத் தகிட தத் தகிட என்று நமக்குள் தக்க வைத்திருப்பதன் மூலம் இயக்குனர் விஜய்குமார் சினிமாவிற்கான தன் வரவை அழகாக பதிவு செய்திருக்கிறார்.

ஆர்.வி.சரவணன் 

வியாழன், ஜூன் 09, 2016

இண்ட முள்ளு கதைகளின் அரசன்






இண்ட முள்ளு கதைகளின் அரசன்

அரசன்  எனது வலைபதிவின்  கருத்துரையில் தான் முதன் முறையாக  எனக்கு அறிமுகமானார். அவரது கரை சேரா அலை வலைத்தளம் சென்ற போது அவரது எழுத்துக்கள் எனக்கு பரிச்சயமாகின. அவரது ஊர் அரியலூர் என்று தெரிய வந்த பின் பக்கத்து ஊர்காரர்  என்ற உரிமை   அவரை  நட்பாகி கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கொள்ள வைத்தது. உடனே  அவருக்கு மின்னஞ்சல் அனுப்பி செல் நம்பர் வாங்கி பேசினேன். பழக ஆரம்பித்த பின்  தொடர்ந்த எங்கள் பேச்சுக்கள் எங்கு சுற்றினாலும்   அது வந்து நிற்கும் இடம்  புத்தகம் வெளியீடாக தான் இருந்தது. இருவரும் இணைந்தே புத்தகம் வெளியிடலாம் என்றெல்லாம் கூட பேசி வைத்து கொண்டோம். இருந்தும், இளமை எழுதும் கவிதை நீ....மூலமாக (அவரது அனுமதியுடன்)
 நான் முந்தி கொள்ளும்படி ஆகிற்று.  இருந்தும் அவர் இன்னும் புத்தகம் வெளியிடவில்லையே என்ற உறுத்தல் என்னுள் இருந்து கொண்டே தான் இருந்தது. அவரது புத்தக முயற்சியை  பற்றி அவ்வப்போது ஆவலோடு விசாரித்து கொண்டிருந்தேன். என் ஆவல் பூர்த்தியானது. இதோ இண்டமுள்ளு என்ற சிறுகதை தொகுப்பினை  தன் முதல் புத்தகமாக   வெளியிட்டிருக்கிறார் அரசன்.

 நண்பர் கருணாகரசு தன் அணிந்துரையில்,

எல்லா மனிதர்களாலும் தன்  பால்ய கால நினைவுகளை பதியம் போட்டு வைத்திருக்க இயலாது.  தன் மண் மீதும் மனிதர்கள் மீதும் தீராக் காதல் கொண்டவனுக்கே அது வாய்க்கின்றது. அரசனுக்கு அது வாய்த்திருக்கிறது.
அரசனை பற்றி  இப்படி குறிப்பிடுகிறார்.

சரி அரசன் தன்னுரையில் என்ன குறிப்பிடுகிறார் ?

மாநகர நெருக்கடியில் எத்தனை சுக துக்கங்களை அனுபவித்தாலும், அரைஞாண் கயிற்றில் அரைக்கால் சட்டையை இழுத்து மாட்டி கொண்டு நாசியை நெரிக்கும் வீதிப் புழுதியில் விளையாடிய கிராமத்து நினைவுகளில் இருந்து விடுபட முடிவதில்லை. 

 ஆம். தான் நேசிக்கும் மண்ணை, மனிதர்களை, அதன் நிகழ்வுகளை, 
உற்சாகங்களை, துக்கங்களை, கோப தாபங்களை அந்த மண் மணம் மாறாமலே  தன் எழுத்துக்களில் தந்திருக்கிறார்  அரசன்.

புத்தகத்தின் பெயர் இண்டமுள்ளு என்று அரசன் சொல்கையில் அதை பற்றி அவரிடம் கேட்ட போது, தான் படர்ந்திருக்கும் பரப்பை கடக்கும் எவரையும் கொத்தாக பிடித்திழுக்கும் இயல்பினை  கொண்டது என்றார். படித்து முடித்த போது  சில கதாபாத்திரங்களும்  சில நிகழ்வுகளும்  நம்மை இப்படி தான் பிடித்திழுத்து கொண்டது.

9 சிறுகதைகள் கொண்ட இந்த சிறுகதை தொகுப்பில்  என்னை கவர்ந்த சில கதாபாத்திரங்கள் பற்றி இங்கே பார்ப்போம். 

வெள்ளாம சிறுகதையில் வரும் பழனி என்ற பெரியவர் பையன் கடைசி காலத்தில் உட்கார வைத்து தனக்கு கஞ்சி ஊற்றாமல் போனாலும் வயல்வெளிக்கு தன்னுடன்  இருந்து ஒத்தாசை செய்யாவிடினும் அதை பற்றி கவலை கொள்ளாமல் உழைப்பவர்  வெள்ளாமையை வீடு கொண்டு வந்து நல்லபடியாக சேர்ப்பவர் தன் மனைவியிடம்,  "உன் புள்ளைக்கு அனுப்ப வேண்டிய நெல்லை அனுப்பிடு" என்று அவன் மேல் உள்ள பாசத்தை சொல்லாமல் சொல்கிறார். ஆனால் அந்த பையன் தகப்பனின் பாசத்தை புரிந்து கொண்டானா  எனில் இல்லை. அதை சிறுகதையின் இறுதியில் சில வரிகளில்  சொல்லி முடிக்கிறார் ஆசிரியர். அந்த யதார்த்தம் முள் தைத்த உணர்வை தருகிறது.

தாய் மடி என்ற கதையில் வரும் அஞ்சல. தன் மகளின் மேல் கொண்ட பாசத்தை, மகள் இல்லாத வலியை, தன் மகள் வயதிருக்கும் பெண்ணிடம் அன்பு பாராட்டி தன் வலியை போக்கி கொள்கிறார். தாய் தகப்பனை விட்டு புகுந்த வீடு வரும் பெண்களுக்கு இப்படி ஒரு அம்மா பக்கத்து வீட்டில் 
கிடைத்தால் எவ்வளவு நன்றாக  இருக்கும் என்ற ஆவலை இக்  கதாபாத்திரம் தூண்டும்.

நலுவன் சிறுகதையில் வரும் நலுவன் தான் வேலை பார்க்கும் முதலாளியிடம் எவ்வளவோ கடுஞ்சொல்லை வாங்கி கட்டி கொண்டாலும் கோபப்படாதவன் முதலாளியின்  சூதை அறிய நேர்கையில் தன்  மனைவியை காக்கும் பொருட்டு ஆத்திரம் கொள்ளுதல் சபாஷ் சொல்ல தோன்றும்.

கெடாவெட்டி கதையில் வரும் முத்தம்மா. தனக்கு பிடிக்காத கெடாவெட்டை புருஷன் செய்கிறாரே என்று வெறுப்பு கொண்டாலும் அதனால் தன் உடல் நிலை  பாதிக்கப்பட்டாலும் கூட கணவன் மீது நேசம் கொண்டவராகிறார்.கதையின் முடிவில் அந்த நேசத்தை நாம் அறிய தன்திருப்பார் ஆசிரியர்.

அடுத்து இந்த சிறுகதை தொகுப்பில் வரும், மண் மணம் மாறாத வரிகள் சிலவற்றை இங்கே தருகிறேன்.

"ஆழங் கொண்ட மட்டும் தன்னோட வேற எறக்கி உசுரு வாழுவது இந்த அருவம் புல்லு தான். எத்தினி தான் கொத்தி எடுத்தாலும் சின்ன துணுக்கு எங்கயாவது இருந்தா போதும் ரவ தூத்த விழுந்த ஒடனே மொளச்சி வந்து உசுர வாங்கும்."

 கரு கலைந்து போன பெண்ணை பற்றி சொல்லும் போது ஒடஞ்ச பலூனு மாதிரி இருந்துச்சு ஒடம்பு.


"செஞ்ச வேலைக்கு கறாரா கூலி வாங்குறதுல ஒம்போல கில்லாடி யாரு இருக்கா சொல்லு"

"இப்படி பேசி பேசியே எல்லாம் என் துணி மறப்புல சொகங்காணுங்கடி"


"நாத்தாங்காலிலையே  பயிர வச்சிருக்க முடியுமா ? அதப் புடுங்கி இன்னொரு வயலுல நடுறது இல்லையா ? அப்படித்தான் பொம்பளையா பொறந்த நாம வாங்கி வந்த வரம் அப்படி இதுக்கு போயி அழுதுகிட்டு இருக்கே"



"ரெண்டு எல மொளச்சி வந்தா மூணு எல கில்லி வுடுற ஊருல சும்மா இருக்க முடியுமா"


"வாழ்க்கைய அது போக்குல வுட்டம்னா இப்படித்தான்  அது பாட்டுக்கு போயி மீண்டு வர முடியாத சொழலுல  சிக்க வச்சிட்டு போயிடும்"


"புருஷன் சரியில்லைனா வரவன் போறவன புருஷனா ஆக்கிடுவியா ?"


"குந்தி தின்னா குன்றும் தரையாவுமுன்னு சொல்வாங்க"



"ரெண்டு மாகாணி உப்பெல்லாம் எங்கிட்டு பத்தும். உரிச்ச தோலுல உப்பை சதும்பர தடவலையின்னா நாளே நாளுல நஞ்சி வீணா போயிரும்."



இந்த சிறுகதைகளில் என்னை கவர்ந்த இன்னொரு அம்சம் என்னவெனில்,
வெள்ளாம, மாட்டுக்கு செல தள்ளியிருப்பது, கடாவெட்டு,காயடிப்பு, இவைகளை  பற்றிய விளக்கங்கள் சொல்லபட்டிருப்பது.  சில இடங்களில் வரும் ஆபாசமான சொற்களை தவிர்த்திருக்கலாம்.சாந்தி கதையில் ஒரு பெண் தன்  இஷ்டபடி வாழ நேர்கையில் காலம் கஷ்டபடுத்தி பார்க்கும் விதம் என்பதான கதையில் இது கொஞ்சம் அதிகமே.  அதே போல் சிறுகதையின் கட்டமைப்பை அனைத்து சிறுகதைகளிலும் கொண்டு வந்திருக்க வேண்டும். சில இடங்களில் கதை கட்டுக்கு வராமல் அலை பாய்வதை தவிர்க்க ஏதுவாக இருந்திருக்கும்.


இண்டமுள்ளு கதைகள் படித்து முடித்த பின்  நம் பால்ய காலத்து நினைவுகள் சிலவேனும் நம் மனத்திரைகளில் தோன்றி நிற்பதை தவிர்க்க முடியாது. இப்படி ஒரு கதாபாத்திரத்தை பார்த்திருக்கோமே இப்படி சம்பவத்தை கேள்விபட்டிருக்கோமே என்றெல்லாம் நமக்குள் தோன்றுவிப்பதே, இண்டமுள்ளு சிறுகதை தொகுப்பின் ஆசிரியர் அரசனின் வெற்றி. இப் புத்தக முயற்சிக்கு உறுதுணையாயிருந்த அனைவருக்கும் நன்றி. 

அரசனின்  புத்தக முயற்சிகள் தொடர வேண்டும்.அப் புத்தகங்கள்  வெற்றி எனும் கிரீடத்தை அவருக்கு சூட்ட வேண்டும் என்று உற்ற நண்பனாய் வாழ்த்தி  மகிழ்கிறேன்.

ஆர்.வி.சரவணன்