சில நொடி சிநேகம் - பல குறிப்புகள் 2
கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் அருள் மிகு சாரங்கபாணி கோவிலும் ஒன்று . அந்த கோபுரத்தின் எழில் தோற்றம் பிரம்மாண்டம் அந்த வழியே செல்லும் என்னை ஈர்க்கும் .நிறைய முறை என் செல் போனில் படம் பிடித்திருக்கிறேன்.
இந்த கோவிலின் கோபுரத்தில் இருந்து முதல் ஷாட் எடுக்கலாம் என்று முடிவு செய்து ஒளிப்பதிவாளர்களுடன் அங்கே சென்று எடுத்தேன். நான் ஸ்க்ரிப்டில் ஒரு கோவில் கோபுரத்தில் இருந்து படம் ஆரம்பிக்கிறது என்பதாக எழுதியிருந்தேன். அது நான் விரும்பும் கோவில் கோபுரத்தில் இருந்தே ஆரம்பமானதை கடவுள் அருள் என்றே எடுத்து கொண்டேன்.
அரசன், கோவை ஆவி துளசிதர், மூவருக்குமே மேக்கப் வேண்டாம் என்று முடிவு செய்திருந்தோம். கோவை ஆவி தாடியுடன் வந்திருந்தார். நீங்க சொன்னால் எடுத்துடறேன் இல்லேன்னா இப்படியே இருக்கட்டுமா என்று கேட்டார். நான் தாடியை எடுத்துடுங்க என்றேன். (லவ் சப்ஜெக்ட் பண்றப்ப வச்சிக்கலாம்) அது போல் மூவரும் காஸ்ட்யூம் எடுத்து வந்திருந்தார்கள். அவற்றிலிருந்து செலக்ட்செய்தோம்
ஷூட்டிங் தொடங்கிய அரை மணி நேரத்திற்குள் எனக்கு தோன்றியது என்ன தெரியுமா. எழுதியதை அப்படியே படம் பிடிப்பது பெரிய சவால். ஆம் உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். கேமரா நடு ரோட்டில் மையத்தில் வைக்க பட்டிருக்க இரு புறமும் வாகனங்கள் செல்ல வேண்டும் ஒரு குறிப்பிட்ட நொடிகள் வரை இந்த காட்சி எந்த ஒரு கட் டும் இல்லாமல் வர வேண்டும் என்று நான் எழுதியதை எடுக்க சிரமப்பட வேண்டியிருந்தது. நடுவில் கேமரா வைத்த போது தான் பெரிய வேன் ஒன்று தெருவையே அடைத்து கொண்டுவந்தது. வண்டியில் செல்பவர்கள் பார்த்து கொண்டே சென்றார்கள் காட்சியில் வர வேண்டிய வாகனம் சரியான படி வந்து நிற்கவில்லை. மீண்டும் தூரம் சென்று திரும்பி வாருங்கள் என்று சொல்ல வேண்டியதாயிற்று.
ஆரம்ப காட்சி எடுக்கப்பட்ட போது ,இருவரில் ஒருவர் சரியாக வசனம்
சொல்லியிருந்தார். இன்னொருவரிடம் முக பாவம் சரியாக வரவில்லை. இருவரும் சரியாக செய்தால் அந்த காட்சியில் தலை காட்டும் வேறு ஒருவர் சொதப்பி இருப்பார். இப்படியாக நிறைய டேக் போயிற்று. எனக்கு கொஞ்சம் டென்சன் ஆகி விட்டது. காரணம் ஒரே நாள் படப்பிடிப்பு அதற்குள் அனைத்தையும் முடித்தாக வேண்டும். அதனால் வந்த டென்சனில் நான் கொஞ்சம் பரபரப்பானேன். அரசனும் கோவை ஆவியும் சார் பயங்கர கோபம் வந்துடுச்சு உங்களுக்கு என்று அப்புறம் என்னிடம் சொன்னார்கள் நான் கோபப்படவில்லை டென்சன் தான் ஆனேன் என்று கோபத்துக்கும் டென்சனுக்கும் உள்ள வித்தியாசங்களை எடுத்து சொன்னேன். இருந்தும் அது கோபம் என்றே பதிவாயிற்று.
ஆரம்பத்தில் இப்படி இருந்தாலும் போக போக சரியாகி விட்டது. ஏனெனில் துளசிதர் சார் தவிர நாங்கள் எல்லாரும் புதியவர்கள் தானே. அதனால் தொடக்கத்தில் இருந்த சிரமம் குறைந்து பின் வேலை எளிதாக ஆரம்பித்தது. துளசிதரன் அருகில் இருந்தது எங்களுக்கு ஒரு புதிய பலத்தை கொடுத்திருந்தது என்றே சொல்லலாம்.
அந்த இடத்தில காட்சிகள் எடுத்து முடித்த பின் அடுத்து பேருந்து நிலையம் நோக்கி எல்லாரும் கிளம்பினோம் . அங்கே எப்போதுமே கூட்டமாக இருக்கும். எப்படி எடுக்க போகிறோம் என்று எல்லாருக்குமே ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் நாங்கள் பயந்த அளவிற்கு ஒன்றுமில்லை. பொது மக்கள் யாருமே எங்களை தொந்தரவு செய்யவில்லை சிலர் வேடிக்கை பார்த்தார்கள் பலர் விசாரித்து விட்டு அகன்றார்கள். மேலும் படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்து தரும் கே.கே.எஸ் ராஜா அவர்களும் படப்பிடிப்பு முழுவதும் எங்களுடனே இருந்தது எங்களை இன்னும் சுதந்திரமாய் செயல பட வைத்தது.
அதற்குள் மதியம் வந்து விட லஞ்ச் ப்ரேக் விடப்பட்டது. பின் மதியம் தொடங்கி நடந்த படபிடிப்பை பார்க்க தஞ்சாவூரில் உள்ள என் மாமா அத்தை வந்தது ஆச்சரியமாய் இருந்தது. என் வீட்டில் மனைவி அம்மா எனது மகள் தங்கை வந்திருந்தார்கள். என் தங்கை கணவர் காலை முதல் எங்கள் கூடவே இருந்து உதவி செய்து கொண்டிருந்தார். என் தம்பி அலுவலகத்திற்கு லீவ் போட்டு விட்டு வந்து கூடவே இருந்து சாப்பாடு ஷூட்டிங் கிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.( இந்த படத்தின் தயாரிப்பாளர் அல்லவா ) அவரும் படத்தில் நடிக்க ஆர்வபட்டார். நிறைய டேக் வாங்கினார். என்னிடம் சலிப்பையும் வாங்கி கொண்டார் . என் மகன் ஹர்ஷவர்தன் ஒளிப்பதிவாளர் ஜோன்ஸ் உடன் செட்டிலாகி விட்டான் . அவனுக்கு போட்டோகிராபி யில் ஆர்வம் இருக்கிறது.
மதிய லஞ்ச் ப்ரேக் கிற்கு பின் படபிடிப்பு தொடர்ந்து நடந்தது . படப்பிடிப்பில் எல்லோரும் காட்டிய ஈடுபாடு க்கு ஒரு உதாரணம் பார்ப்போம். அரசனுக்கு நான் வசனம் சொல்லி கொடுத்தேன். அரசன் "சார் நீங்க எழுதின ஸ்கிரிப்ட் ல வசனம் இப்படி இருக்கு நீங்க மாற்றி சொல்றீங்க" என்றார். தெரியும் இது நல்லாருக்கு அதனால் இப்படியே சொல்லுங்க" என்றேன். உடனே கீதா ரங்கன் மேடம் "சார் டப்பிங் ல பிரச்னை வருமே " என்றார். " இப்ப சொல்ற வசனத்தை நோட் பண்ணிடுங்க" என்றேன்.கீதா ரங்கன் அவர்கள் இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார் . இந்த படத்தின் சப் டைட்டில் ஆங்கிலத்தில் அவர் தான் மொழி பெயர்த்து எழுதியிருக்கிறார். படத்தின் மீது அவருக்குள்ள ஆர்வம் எங்கள் அனைவருக்கும் உதவியாக இருந்தது.
பின் மீண்டும் பேருந்து நிலையம் சென்றோம். பேருந்து நிலையத்தின் வாசலில் எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்தோம். ஆறு மணிக்கு மேல் இருட்டி விடும் என்பதால் அதற்குள் எடுத்தாக வேண்டிய கட்டாயம். காலையில் எனக்கிருந்த பரபரப்பு இப்போது அனைவரையும் தொற்றியிருந்தது. பின் நல்ல படியாக படப்பிடிப்பை முடித்த போது .
நாங்கள் அனைவரும் மிகவும் களைத்து போயிருந்தோம். இருந்தும்
அந்த களைப்பை மீறி எங்கள் முகங்களில் படப்பிடிப்பை முடித்த உற்சாகம் வெளிப்பட்டிருந்தது.
இந்த படப்பிடிப்பில் எங்களோடு இருந்த்து உதவி செய்த இன்னொருவர் என் தம்பியின் நண்பர் பிரபாகரன். அவர் கும்பகோணத்தில் பான்சி ஸ்டோர் கடை வைத்துள்ளார். படப்பிடிப்பு அன்று அவர் கடை திறக்கவில்லை. எங்களோடு முழுக்க முழுக்க இருந்து உதவி கொண்டிருந்தார். அவரும் இதில் நடித்திருக்கிறார். இவரது மகனும் என் தம்பியின் இன்னொரு நண்பரின் மகனும் கூட நடித்திருக்கிறார்கள்
சென்னை வந்தவுடன் இரண்டு நாட்களுக்கு பின்னே எடிட்டிங் தொடங்கியது. ஜோன்ஸ் நண்பர் கார்த்திக்கின் ஸ்டுடியோ வில் எடிட்டிங் நடந்தது. எல்லோரும் வேலைக்கு போய் விட்டு இரவு வந்து எடிட்டிங்கில் ஈடுபடுவோம். நடு நடுவே கேப் விட்டு எடிட்டிங் பத்து நாட்கள் வரை தொடர்ந்தது.
பின் டப்பிங் தொடங்கியது அதை ஒரே நாளில் முடித்தோம் அதாவது இரவு 8 மணிக்கு தொடங்கி மறு நாள் காலை 5 மணிக்கு முடிந்தது. இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் டப்பிங் ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் எல்லோரும் தூங்க ஆரம்பித்து விட்டார்கள் .ஒவ்வொருவராக எழுப்பி டப்பிங் பேச வைத்தோம். கோவை ஆவி ஷூட்டிங் காக கோயம்புத்தூரிலிருந்து வந்தவர் எடிட்டிங் டப்பிங் முடித்த பின்பே ஊருக்கு சென்றார்.
படத்தின் ரஷ் ரெடி யானது . நான் எப்போதுமே எழுதும் முன் நெருக்கமான ஒன்றிரண்டு அலுவலக நண்பர்களுடன் விவாதிப்பேன். அவர்கள் சொல்லும்ஆலோசனைகளை கவனத்தில் எடுத்து கொள்வேன் அலுவலக நண்பர்கள் மற்றும் பாலகணேஷ் சார்,சீனு, ஸ்கூல் பையன் ஆகியோரை அழைத்து படத்தை பார்க்குமாறு சொன்னேன் . அவர்களும் ஆர்வத்துடன் பார்த்து விட்டு குறைகளை சொன்னார்கள். நான் இதனால் வருத்தபட்டேன் என்று அவர்களுக்கு தோன்றியது .குறைகளை சொல்ல சொல்லி தான் நான் அவர்களை படம் பார்க்க சொன்னேன். அப்படி இருக்கையில் எப்படி அவர்கள் மீது வருத்தம் வரும். எனது படம் சரியாக வர வேண்டும் என்ற அக்கறையில் சொன்னது அது . ஆனால் எனக்கு வருத்தம் இருந்தது என் மேலே தான் . சரியாக கவனமெடுத்து செய்யவில்லை இன்னும் உழைப்பை தந்திருக்க வேண்டும் இப்படி விட்டு விட்டோமே என்று நினைத்து கொண்டேன். ஏனெனில் என் குடும்பத்தில் என் மேல் நம்பிக்கை வைத்து படம் எடுக்க, செலவு செய்ய அனுமதி அளித்திருந்தார்கள். அப்படி இருக்கையில் படம் சரியாக வரவில்லை என்றால் என்னாவது .
யோசித்தேன்.ஜோன்ஸ் இந்த விசயத்தில் முழு ஒத்துழைப்பு தந்தார்.. மீண்டும் ஒவ்வொரு காட்சியாக பார்த்து சரி செய்ய ஆரம்பித்தோம் .வேறு ஷாட் பொருத்தி பார்த்தோம். இப்போது திருப்தி வந்தது. மீண்டும் வலைத்தள நண்பர்களும் அலுவலக நண்பர்களும் பார்த்தார்கள். ஓகே என்றார்கள் . பைனல் ரெடியானது.
எனக்கு ஒரு ஆசை இருந்தது. எனக்கு பிடித்தமான நடிகர் இயக்குனர் எனது குரு திரு கே.பாக்யராஜ் அவர்களை சந்தித்து ஆசி பெற வேண்டும் என்பது. நண்பர்களுக்கும் ஆசைபடவே திரைக்கதை அரசனை சென்று சந்தித்தேன். மற்றவர்கள் அலுவலக வேலையில் இருந்து வர முடியவில்லை. கோவை ஆவி கீதா ரங்கன் மேடம் என் தம்பி தம்பி மனைவி வந்தார்கள். ஆசி பெற்றோம் படம் பார்க்குமாறு வேண்டினேன். மறுப்பு சொல்லவில்லை அவர். படம் பார்த்தார். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் என்று சொன்னார். அவரிடம் ஆசி பெற்று வந்தது ரொம்ப சந்தோசமாக இருந்தது. (நண்பர் எஸ் .எஸ்.பூங்கதிர் அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்)
இந்த இனிய தருணத்தில், என் ஆர்வத்துக்கு தடை சொல்லாமல் ஊக்கம் தரும் என் அம்மா என் மனைவி மற்றும் என் உறவினர்களுக்கு என் இதயம் நிறைந்த அன்பை தெரிவிக்கிறேன்
நான் இணையத்துக்குள் எழுத ஆரம்பித்து வைத்த என் நண்பர் வினோ மேலும் என் எழுத்துக்களை படித்து எனக்கு தொடர்ந்து ஆலோசனை தந்து வரும் நண்பர் கிரி , மற்றும் நிஜாம் பக்கம் நிஜாமுதீன் மனசு குமார், கே.ஆர்.பி செந்தில் மற்றும் வலைத்தள நண்பர்கள்,முக நூல் நண்பர்கள் அனைவரயும் நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன்.
இந்த படம் தொடங்கியதில் இருந்து இதோ இந்த நிமிடம் வரை என்னுடன் இனைந்து பணியாற்றிய அரசன் கோவை ஆவி மற்றும் துளசிதரன் சகோதரி கீதா ரங்கன் இவர்கள் இல்லையேல் குறும்படம் சாத்தியமில்லை
சரி எல்லாம் சொல்லிட்டே படம் எப்ப ரீலீஸ் அதை சொல்லு முதல்ல என்று கேட்கிறீர்களா மதுரையில் நடைபெறும் 3 வது வலைபதிவர் சந்திப்பில் சில நொடி சிநேகம் குறும்படம் வெளியிடப்படவிருக்கிறது. அன்றே இணையத்திலும் வெளியிடபடுகிறது. அதற்கு ஒத்துழைப்பு தந்து வெளியிட விருப்பம் தெரிவித்த நம் நண்பர்கள் திண்டுக்கல் தனபாலன், தமிழ்வாசி பிரகாஷ் மற்றும் விழா குழுவினருக்கு எங்கள் ஜனனி ஆர்ட்ஸ் குழு
சார்பாக நன்றி
இன்னும் ஒரு வாரம் இருக்கிறதா என்று நீங்கள் சலித்து கொள்ள கூடாது என்பதால், இன்னொரு டீசர் உங்கள் பார்வைக்கு வருகிறது ஒரு குறும்படத்துக்கு எத்தனை டீசர் டா வெளியிடுவீங்க என்று பல்லை கடிக்காதீர்கள். இது இந்த படத்தின் எடிட்டர் ஜோன்ஸ் ஆர்வத்துடன் உருவாக்கியது.
சில நொடி சிநேகம் டீசர்
உங்களை போலவே நாங்களும் காத்திருக்கிறோம் எங்கள்
குறும்படத்திற்கான தங்களின் கருத்துக்களுக்கு
FINAL TOUCH
அடுத்து என்ன என்று கேட்கின்றீர்களா ? ( என்னது கேட்கலியா நீங்க கேட்கலைனாலும் நான் சொல்லியாக வேண்டும். ஒரு விளம்பரத்திற்காவது ) வரும் தீபாவளி முதல், பத்து வாரங்கள் வரை வரும் தொடர்கதை ஆரம்பிக்கின்றேன். ) தொடர்கதையின் பெயர்
திருமண ஒத்திகை
எழுத போவது நான் என்றாலும் அது சிறப்படைய போவது
தங்களின் ஆதரவினால் மட்டுமே.
நன்றி
ஆர்.வி.சரவணன்
வாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிவர் சந்திப்பில் படம் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்
நன்றி சார்
நீக்குகோவில் கோபுரத்தின் பிரம்மாண்டம் என்னையும் கவரும். அங்கிருந்து தொடங்க இறைவன் உங்களைப் பணித்தது அவன் அருள்.
பதிலளிநீக்குஆவி வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார்.
அனுபவப்பட்ட துளசிதரன் ஸார் அருகில் இருந்தது பெரிய பலமாயிருந்திருக்கும்தான்.
ஹிஹிஹி... லஞ்ச் எங்கிருந்து, என்ன என்று சொல்லவில்லையே... (நமக்கு அதையும் தெரிந்துகொள்ள ஆர்வம் ஜாஸ்தி!!!)
அந்த இன்னொரு டீசரின் லிங்க் இல்லையே?
டீசர் நாளை வெளியிடுகிறேன் சார். காலை டிபனாக இட்லி பொங்கல் வடையும், மதியம் சாப்பாடும் வாசன் கபே விலிருந்து வரவழைத்தோம்
நீக்குநன்றி தங்கள் கருத்துக்கு
அடுத்த டீசரையும் காண ஆர்வத்துடன் இருக்கிறேன்.
பதிலளிநீக்குபாராட்டுகள் நண்பரே.
வாழ்த்துக்கள் சார்! மதுரையில் சந்திப்போம். குறும்படம் நிச்சயம் சிறப்பாகவே இருக்கும்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அண்ணா...
பதிலளிநீக்குபட்ட கஷ்டம் சிறப்பானதொரு இடத்தைக் கொடுக்கும்... கவலை வேண்டாம்.
என்னையும் உங்கள் அன்பில் வைத்ததற்கு நன்றி....
நல்லா அழகா விவரித்துள்ளீர்கள் சார்! ஓ! அடுத்து ஒரு டீசர்!! காண ஆவல்! அணில் போல்தான் நாங்கள் செய்தது. பெரியதல்ல என்றாலும் எங்களையும் தாங்கள் அன்புடன் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி சார்!
பதிலளிநீக்குதொடருக்கும் வாழ்த்துக்கள் சார்!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்! மதுரைக்கு வரவில்லை! இணையத்தில் பார்க்கிறேன்! புது தொடர்க்தைக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஏன் அந்த பட்டுக்கோட்டை பஸ்ஸுக்கு முன்னால இவ்வளவு "கோபமாக" நிக்கிறீங்க?
பதிலளிநீக்கு2... தங்கள் குறும்படக் குழுவினரோடு படத்தை செப்பனிட்டு சீர் செய்தமைக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதமிழ் வலைப்பதிவர் திருவிழாவில் திரையிடப்பட்டு சிறப்படைய நல்வாழ்த்துக்கள்!!
என்னால் நேரில் வந்து கலந்து கொள்ள இயலாததால் முன்னதாகவே வாழ்த்துக்கள்!!!
3...
பதிலளிநீக்கு//நான் இணையத்துக்குள் எழுத ஆரம்பித்து வைத்த என் நண்பர் வினோ மேலும் என் எழுத்துக்களை படித்து எனக்கு தொடர்ந்து ஆலோசனை தந்து வரும் நண்பர் கிரி , மற்றும் நிஜாம் பக்கம் நிஜாமுதீன் மனசு குமார், கே.ஆர்.பி செந்தில் மற்றும் வலைத்தள நண்பர்கள்,முக நூல் நண்பர்கள் அனைவரயும் நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன்.//
அனைத்து நண்பர்களோடு என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி!
4...
பதிலளிநீக்குவலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ச்சியில் குறும்படம் வெளியிடப் படும் அதே நேரத்தில் இணையத்திலும் வெளியாகவிருக்கும் படத்தைக் காண நானும் ஆவலாய் உள்ளேன்!
2-ஆவது டீசர் எப்பொழுது வெளியாகும் சார்?
5...
பதிலளிநீக்குதொடர்கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், சார்!
6...
பதிலளிநீக்கு//சில நொடி சிநேகம் - பல குறிப்புகள் 2//
அடுத்த குறிப்புகள் எப்பொழுது வரும் சார்???
அன்பின் சரவணன் - குறும்படம் அருமையாக இருந்தது என சக பதிவர்கள் கூறக் கேட்டேன்- - வெளியிடப்பட்ட நேரத்தில் மற்ற பணிகளில் இருந்த படியினால் காண இயலவில்லை,
பதிலளிநீக்குமேன்மேலும் சிறப்புடன் பல்வேறு குறும்படங்கள் வெளியிட நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா