புதன், ஜூலை 11, 2018

பாண்டியன்

பாண்டியன் 

தஞ்சாவூர் டு திருச்சிசெல்லும் பேருந்தில் பாண்டியனுக்கு 
கிடைத்திருந்த ஜன்னலோர சீட்டை அபகரிக்க வந்தவராகவே தோன்றினார் அந்த பெரியவர். அவரிடமிருந்து வெளிப்பட்ட புகையிலை மணம், பாண்டியனை முகம் சுளிக்க வைத்தது. பேருந்து கிளம்பிய  சில நிமிடங்களில்  

"தம்பிஜன்னல் பக்கம் நான் உட்கார்ந்துக்கவா"
என்று கேட்டார்.

"எனக்கு முன்னாடி வந்திருந்தா நீங்களே உட்கார்ந்திருக்கலாமே" என்றான்.

ஏதோ ஜோக்கை கேட்டவர் போல் சிரித்து

"நான் புகையிலை போடுவேன். அப்பப்ப எச்சில் துப்ப வேண்டி இருக்கும்" என்று, அவனை தாண்டி எச்சில் துப்பி விட்டு, "உங்களை நகர்த்திட்டு துப்பினா நீங்க சங்கோஜப்படுவீங்க இல்லியா. அதனாலே கேட்டேன்" என்றார்.
அவரது பேச்சில் எரிச்சலாகி,
"இல்லீங்க. எனக்கு ஜன்னல் சீட் தான் வேணும்"  திரும்பி கொண்டவனை அவரது அடுத்த வார்த்தை அவரை நோக்கி திரும்ப வைத்தது.

"ஜன்னலோர சீட்டை விட  மாட்டேன்னு அடம்  பிடிக்கிறீங்களே. வாமிட் எதுனா எடுப்பீங்களோகாவி பற்களால் மீண்டும் சிரிப்பை கொட்டினார்.

அவன் அமைதியாக சொன்னான்.

"இல்லீங்க.  இயற்கையை அசுத்தப்படுத்தாமல் ரசிச்சிட்டு வருவேன்."


ஆர்.வி.சரவணன்

 (ஆகஸ்ட் 2017 குமுதம் வார  இதழில் வெளி வந்த சிறுகதை.)

வெள்ளி, ஜூன் 22, 2018

குங்குமச்சிமிழ்

குங்குமச்சிமிழ் 


ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, அதாவது படம் ரீலீசான போது பார்த்த படம். இது . இப் படத்தின் பாடல்கள் கேட்கிறப்பெல்லாம்  திரும்பவும் இந்த படம் பார்க்கணும் என்று நினைத்து கொள்வேன். அந்த வேளை சமீபத்தில் வந்தது. டிவியில் இந்தப் படம் போட்டதும் பார்க்க ஆரம்பித்து முடித்து விட்டேன். அந்தப் படம் என்னனு கேட்கறீங்களா ? மோகன், இளவரசி ரேவதி நடித்த ஆர்.சுந்தர்ராஜனின் குங்குமச்சிமிழ்.

வறுமையில் வேலை தேடி கஷ்டப்படும் காதலர்கள் மோகன் இளவரசி. ஆறு மாதம் கழித்து சத்திக்கலாம் என்ற ஒப்பந்தம் செய்து கொண்டு வேதனையுடன் பிரிகிறார்கள். பிரிந்த அடுத்த நாளே இருவர் வாழ்க்கையிலும் வறுமை விடைபெற்று செல்வத்தில் திளைக்கும் வாழ்க்கை கிடைத்து விடுகிறது . இருவருமே எப்போது இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பிருக்க, மோகனுக்கு வேலை கிடைத்ததே, ரேவதியின் கல்யாணம் நின்று போனதால் தான் என்பது தெரிய வருகிறது. பிராயச்சித்தமாக அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மோகன் சம்மதிக்க, இது தெரியாமல் இளவரசி அந்த திருமணத்திற்கு அட்சதைபோட வருகிறார். இதில் யார் தியாகியாகிறார் என்பதே கதை.

காதலர்கள் வேலை தேடி கொண்டே ஒன்றாக தங்கியிருக்கும் வரம்பு மீறாத காட்சிகள், அவர்கள் தங்கியிருக்கும் இடங்கள்,( கூட்ஸ் வண்டி, கடற்கரையின் பாழடைத்த இடம்) பாரப்பவர்களை எல்லாம் "என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறியா" என்று கேட்கும் டெல்லி கணேஷ் கேரக்டர். எந்த பொருளானாலும் போட்டுடைக்கும் ரேவதி,
இளையராஜாவின் ஆறு பாடல்கள் (ஒரு பாட்டு ரிப்பீட்) என்று ரசிக்க ஏராளமான விசயங்கள் இதில் இருக்கிறது.
வேலை இல்லா திண்டாட்டத்தை பற்றி ஒரு காட்சி வருகிறது. வேலை தேடி கொண்டிருக்கும் மோகன், நடுரோட்டில் ஒருவர் ஆக்சிடெண்ட்டில் இறந்து கிடப்பதை பார்ப்பார். அடுத்த நிமிடம் இறந்தவர் பார்த்த வேலையை வாங்கி விட அந்த அலுவலகம் நோக்கி அவசரமாக விரைவார். அவருக்கு முன்பே அந்த வேலை வேறொருவர் வாங்கியருப்பது தெரிய வருகையில் மோகன் வேதனையை இப்படி வெளிப்படுத்துவார். "வேலையில்லா திண்டாட்டம் என்னை விட பாஸ்டா இருக்குது".
இடைவேளைக்கு முன் இளவரசி பின் ரேவதி என்று கதை அமைத்திருந்தாலும். இடைவேளைக்கு பின் இளவரசி கேரக்டரின் நிலை பற்றி இன்னும் காண்பித்திருக்கலாம். சில கேரக்டர்களின் சஸ்பென்ஸ் முன் கூட்டியே நாம் அறிந்து கொள்வதை தடுக்கும் விதமாகவும் திரைக்கதை அமைந்திருக்கலாம்.


நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது. அடிக்கடி நான் முணுமுணுக்கும் பாடல் இது. நண்பர்களுடன் இந்தப்படம் செகண்ட் ஷோ கும்பகோணம் செல்வம் தியேட்டரில் பார்த்துவிட்டு, அடுத்த நாள் இப் படத்தை பற்றி தெரு முனையில் இருந்த ஒரு வீட்டு திண்ணையில் அமர்ந்து படம் பற்றி விவாதித்தது இன்றுவரை நினைவில் இருக்கிறது.
அது ஒரு பொற்காலம்.

ஆர்.வி.சரவணன் 


செவ்வாய், மார்ச் 06, 2018

பயம்

பயம்
அந்த நான்காவது குறுக்கு தெருவில் ரகு நுழைகையில் அங்கே படுத்திருந்த நாய்கள் புதியவன் ஒருவன் வருவதை கவனித்து எழ ஆரம்பித்தன. மற்ற நாய்கள் நீ போய் பாரு என்று சொல்லியிருக்க வேண்டும். அந்த வெள்ளை நாய் மட்டும் குரைத்த படி அவனை நோக்கி ஓடி வர ஆரம்பித்தது. இது கொஞ்சம் ரகுவுக்கு பயத்தை கொடுத்தது. தயக்கத்துடன் நின்று விட்டான்.


சாப்பாட்டுக்கு பிந்தைய மதிய வேளை அது என்பதால் தெருவில் ஒருவருமில்லை. ஏதோ ஒரு வீட்டிலிருந்து பிரியாணி வாசம் வந்து கொண்டிருந்தது. எதிர்வீட்டு பால்கனியில் இவன் கஷ்டத்தை சட்டை செய்யாமல் பனியனுடன் செல் பேசி கொண்டிருந்தான் ஒருவன். வேறு யாரும் வருகிறார்களா என்று நோட்டமிட்ட படியே பின்னோக்கி நகர ஆரம்பித்தான் ரகு.


அந்த நாய் அவனை நோக்கி வள் வள்.... என்ற படி முன்னேறி வந்து கொண்டிருக்க, அதன் பற்கள் மற்றும் வேகத்தை பார்க்கையில் பயம் அதிகரிக்க ஆரம்பித்தது. மற்ற நாய்களும் இப்போது அவனை நோக்கி மெதுவாக வர ஆரம்பித்திருந்தன. "இது ஏதடா முன்னேயும் போக முடியாம பின்னேயும் போக முடியாம....... " என்ற ரகுவின் முணுமுணுப்பு அந்த தெருவில் ஒருவர் நுழைவதை பார்த்தவுடன் பாதியியிலேயே நின்றது. வேட்டியின் நுனியை இரு கைகளாலும் பிடித்தபடி வந்து கொண்டிருந்த அவரை பார்த்த மாத்திரத்தில் அப்பாடா என்ற நிம்மதி பெருமூச்சுடன் "சார்" என்றழைத்த படி அவரோடு சேர்ந்து கொண்டான்.

நிற்காமல் நடந்து கொண்டே "என்னப்பா?" என்றவரிடம், " நாய் குலைக்குது. எப்படி போறதுனு தெரியல" என்றான்.

"அட அது ஒண்ணும் பண்ணாதுப்பா. நீ வா" என்ற பதிலை அவனுக்கும், "ம்" என்ற அதட்டலை நாய்க்கும் கொடுத்த படி நிற்காமலே நடந்து கொண்டிருந்தார். அவரது வேக நடைக்கு அவன் நிறையவே சிரமப்பட வேண்டியிருந்தது.


தெரிந்த ஆள் வந்திருப்பதை பார்த்தவுடன் மற்ற நாய்கள் குரைப்பதை நிறுத்தி கொண்டு நிசப்தமாகி பழைய படி சென்று அமர்ந்து கொண்டு விட்டன. ஆனால் அந்த வெள்ளை நாய் மட்டும் சத்தம் எழுப்பவில்லையே தவிர அவனை தொடர்ந்து கொண்டிருந்தது. இது ரகுவுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது அவரிடமிருந்து இன்னொரு அதட்டலை எதிர் பார்த்தான். அவரோ அவன் அவஸ்தையை உணராமலே "நீ வாப்பா " என்ற படி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்.
நாய் எப்போது அவனை கவ்வலாம் என்ற முனைப்பிலேயே தொடர்ந்து கொண்டிருந்தது.பார்த்தான். ஏழெட்டு வீடுகள் தாண்டும் வரை திரும்பி பார்க்காமலே நடந்து கொண்டிருந்தான். தெரு முனை வரை வந்த பின் தைரியம் வர பெற்றவன் திரும்பி நின்று அதட்டினான்.
"த சும்மாருக்க மாட்டே . பின்னாடியே வந்துட்டு"
ஆனால் நாய் அங்கே இல்லை.
அது எப்போதோ சென்று தன் சகாக்களுடன் அமர்ந்து கொண்டு அவன் அதட்டலை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது.

ஆர்.வி.சரவணன்.

வியாழன், பிப்ரவரி 08, 2018

ஒரு கதை சொல்லட்டா.


ஒரு கதை சொல்லட்டா.கட் அவுட் பிலிம்ஸ் என்ற பெயர் பலகை இருந்த அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த போது, "நான் கெட் அவுட் சொல்றதுக்கு முன்னாடியே வெளில போயிடு" என்ற வார்த்தைகள் அசரீரியாக ஒலித்தது கண்டு திடுக்கிட்டான் அருண். அந்த அறையில் நடு நாயகமாக பெரிய டேபிள் போட்டு அமர்ந்திருந்த தயாரிப்பாளர் செல் போனில் யாரிடமோ கத்தி கொண்டிருந்தார்.
கட் அவுட் கெட் அவுட் ரைமிங்கை ரசிக்க முடியாத படிக்கு அந்த தயாரிப்பாளர்
"யாருப்பா நீ ?" என்றார் அதட்டலாக. அவரது கம்பெனி பட போஸ்டர்களில் இருந்த அவரது ட்ரேட் மார்க் சிரித்த முகம் இப்போது சிரிப்பை துறந்திருந்தது.

"கதை சொல்ல வந்திருக்கேன் சார். பாலு அனுப்பிச்சு வச்சாரு"

" ஒரு நாளைக்கு எத்தனை பேரை தான் கதை சொல்ல அனுப்பிச்சு வைப்பான் அவன்"
அந்த தயாரிப்பாளரின் பேச்சுக்கு, ஒரு அசட்டு புன்னகையை மட்டும் வெளியிட்டான்.
எனக்கு அங்க எவ்வளவு மரியாதை இருக்கு தெரியுமா என்ற பாலுவின் காலர் தூக்கல் பேச்சு ஏனோ ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது.

"நீ என்ன பண்றே. போயிட்டு இன்னொரு நாள் வந்து பாரு" வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி சகிதம் வேட்டி விளம்பரத்திற்கு வருபவரை  போல் இருந்த அந்த தயாரிப்பாளர் சிகரெட்டை ஆஸ்ட்ரேயில் அழுத்தி அணைத்தார்.

இன்னொரு நாள் என்பது எந்த தேதியில் என்பது  புரியாமல் அவரை பார்த்தான்.
அவன் மன ஓட்டத்தை அறிந்து கொண்ட அவர் "அடுத்த வாரம் வாப்பா"  என்றார்.
"சார். இன்னிக்கு வரதுக்கே ஆபீஸ் க்கு அரை நாள் லீவ் போட்டுட்டு வந்திருக்கேன் " தயக்கமாய் சொன்னான்.

"யோவ். இங்க அவனவன் 24 மணி நேரம்  உருண்டு புரண்டும்  வாய்ப்பு கிடைக்க மாட்டேங்குதேன்னு அலைஞ்சிட்டிருக்கான். நீ என்னடான்னா பார்ட் டைம் ஜாப் கணக்கா கதை சொல்ல வந்திருக்கேன்னு சொல்றே"

"சார். அது வீட்டுக்காக .இது என் ஆசைக்காக" வால்யூமை குறைத்த படி சொன்னான்.
"எத்தனை கதை வச்சிருக்கே"

"ரெண்டு மூணு  கதை இருக்கு சார்' தன் பேகை திறந்து பேப்பர்களை வெளியே எடுத்தான்.
"அதெல்லாம் வேண்டாம். ஷார்ட் பிலிம் எதுனா எடுத்திருக்கியா?"

"இல்ல சார்"
முகவாயை தேய்த்து கொண்ட படி யோசிக்க ஆரம்பித்தார்.
இன்னொரு நாள் பார்க்கலாம்னு அனுப்பி வைச்சிடுவாரோ என்ற பதைப்பில்
"கதை மைண்ட்லேயே இருக்கு. சொல்லட்டா சார்" என்றான்.

"முதல்ல நான் சொல்ற ஒன் லைன்க்கு சீன் சொல்லு பார்க்கலாம் "

"சரி சார் " என்ற படி உற்சாகமானான்.

"முதல்ல உட்காரு"
திகில் படம் பார்ப்பது போல் சீட் நுனியில் அமர்ந்தான்.

"அதாவது  நம்ம கதையோட ஹீரோ சினிமா நடிகர். ஒரு மாஸ் ஹீரோ அவர் வர்ற முதல் சீன் எப்படி வைக்கலாம்னு சொல்லு பார்ப்போம்"

"சார் ஒரு நிமிஷம்" என்ற படி அவன் யோசித்தான். அந்த தயாரிப்பாளர் அவனை கவனித்த படியே அடுத்த சிகரெட்டை எடுத்து உதட்டில் வைத்தார். அருண் தொண்டையை செருமி கொண்டு சொல்ல ஆரம்பித்தான்.

"ஓப்பன் பண்ணா ஒரு தியேட்டர் சார். அதுல  நம்ம ஹீரோவோட படம் ரிலீஸ் ஆகியிருக்கு. எங்க பார்த்தாலும் போஸ்டர்கள் கட் அவுட் னு ஒரே கொண்டாட்டமா இருக்கு. கூட்டம் அலை மோதுது.  அப்ப ஒரு கார் வருது காரை விட்டு இறங்கறார் ஹீரோ. அவரை பார்த்தவுடன் கூட்டம் தியேட்டரை விட்டுட்டு அவரை மொய்ச்சுக்குது. அவர் போஸ்டருக்கு, கட்வுட்டுக்கு  போட வச்சிருந்த மாலைகளை எல்லாம் அவருக்கு போட கூட்டம் அலை மோதுது. கட் அவுட் மேல ஊத்தறதுக்கு வச்சிருந்த பால் குடங்களை இப்ப அவர் முன்னாடி கொண்டு வராங்க. கக்கத்துல வச்சிருந்த குழந்தை அழுவறதை கூட கவனிக்காம ஒரு பொண்ணு  கூட்டத்திலே சிக்கினாலும் பரவாயில்லன்னு ஹீரோவை நெருங்கி போயிட்டிருக்கு.
கூட்டத்தை அமைதிபடுத்திய ஹீரோ  "எதுக்கு இதெல்லாம் பண்றீங்க" னு  கேட்கிறார்.

"எங்க உற்சாகமே நீ தான் தலைவா" என்கிறான் ஒரு ரசிகன்.

"இதில் எல்லாம் எனக்கு உடன்பாடும் இல்ல. உற்சாகமும் இல்ல. நீங்க இதெல்லாம் பண்றதால பப்ளிக்  எல்லாம் என்னை தான் திட்டறாங்க" னு ஹீரோ சொல்றார்.

"இந்த பப்ளிக்குக்கு யார் கொண்டாட்டமா இருந்தாலும் பிடிக்காது தலைவா" ஒருத்தன் சொல்லி கொண்டே ஹீரோவுடன் செலஃபி எடுக்கிறான்.

"நோ நோ நம்மை விமர்சனம் பண்றவங்க சொல்றதிலயும் ஒரு நியாயமிருக்கே. எதுக்கு வேஸ்டா பாலை கட்அவுட்டுக்கு ஊத்தணும். அது மண்ணுல விழுந்து யாருக்குமே  பயனில்லாம தானே போகுது" னு ஹீரோ சொல்றாரு.

"இது எங்க ஆசை சந்தோஷம். இதை கண்ட்ரோல் பண்ணாதீங்க தலைவா ப்ளீஸ்"
ஒரு இளைஞன் சொல்கிறான்.

"எத்தனையோ அனாதை இல்லங்கள் இருக்கு. மாலைக்கு போஸ்டருக்கு பண்ற செலவை அங்க செலவு பண்ணலாம். இந்த பாலை கஷ்டப்படற குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.இத பண்ணீங்கன்னா என்னை பிடிக்காதவங்களுக்கு கூட என்னை புடிச்சு போயிடும். அவ்வளவு ஏன் நான் ஒரு வார்த்தை சொன்னா அதை மீறாதவங்க என் ரசிகர்கள்னு பேர் கூட உங்களுக்கு கிடைக்கும். செஞ்சுதான் பாருங்களேன்" ஹீரோ சொல்றாரு.

ரசிகர்கள் ஒருவருக்கொருவர் முகத்தை பார்த்து கொள்கின்றனர். அவர்களுக்குள் பேசி கொள்கிறார்கள். ஒருவன் முன்னே வந்து சொல்கிறான்.

"தலைவா. பாலுக்காக தான் ஒரு குழந்தை அழுகுது அப்படிங்கிற வார்த்தை இனி நியூசா தமிழ்நாட்டிலே வராது. அத நாங்க பார்த்துக்கிறோம் போதுமா "

"குட் இப்ப தான் எனக்கு சந்தோசமே ஆரம்பிக்குது" என்று புன்னகைக்கும் ஹீரோ அவனை நெருங்கி விட்டிருந்த பெண்ணின் கைகளில் அழுது கொண்டிருந்த குழந்தையை வாங்கி கொள்கிறான். அழுது கொண்டிருந்த குழந்தையின் முகத்தில் புன்னகை தவழ்கிறது. இங்க டைட்டிலை ஆரம்பிக்கிறோம். சார்." 
என்று சொல்லி முடித்த அருணை பார்த்த தயாரிப்பாளர் சொன்னார்.

"சரி .சினிமா நடிகன் நல்லவனா இருந்தா இந்த சீன் ஓகே. இதுவே கெட்டவனா இருந்தா?"
"கெட்டவனா இருந்தா...."  என்று யோசிக்க ஆரம்பித்த அருண்  விரல்களை சொடக்கு போட்ட படி சொன்னான்

"சிம்பிள் சார். குழந்தையை வாங்கி கொண்ட  ஹீரோ அது சிரிப்பதை பார்த்து ரசிக்கிறப்ப  டைரக்டர் கட் னு சொல்றாரு. இது வரைக்கும் நடநதது ஷூட்டிங் னு ஆடியன்ஸுக்கு லாங் ஷாட்ல காட்டறோம்.  கேரவன் நோக்கி நடக்கிறார் ஹீரோ. ஷூட்டிங் பார்க்க கூடியிருக்கிற ரசிகர்கள் தலைவானு கத்தறாங்க.

"ரசிகர்கள் உங்களை பார்க்கிறதுக்கு வெயிட் பண்ணிட்டிருக்காங்க. ஷூட்டிங் முடிய லேட்டாகும் போல தெரியுது. நாளைக்கு வர சொல்லிடவா " உதவியாளர் ஹீரோ கிட்டே கேட்கிறார். ஹீரோ அவங்க பாட்டுக்கு  காத்துகிட்டு இருக்கட்டும். அப்படி இருந்தா  தான் நமக்கு மாஸ்" னு சொல்லிகிட்டே குளிரூட்டப்பட்ட கேரவனுக்குள் நுழைகிறார் ஹீரோ.  

வெயில்ல நின்ன படி வாழ்க கோஷம் போட்டுகிட்டு இருக்கிற ரசிகர்களை காட்டறோம்.  அங்க டைட்டில் போட்டு படத்தை ஆரம்பிக்கலாம் சார்." என்று சொல்லி முடித்த அருண் தயாரிப்பாளரை பார்த்தான்.

தயாரிப்பாளர் சொன்னார்.

"உனக்கு ஒரு டீ சொல்லட்டா"

ஆர்.வி.சரவணன்

தகவல் பலகை பிப்ரவரி மாத இணைய இதழில் இந்த சிறுகதை வெளியாகியிருக்கிறது.
வெளியிட்ட தகவல் பலகை ஆசிரியர் குழுவிற்கு நன்றி. உங்கள் சிறுகதை ஒன்று வேண்டும் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி அனுப்பி வைத்த  நண்பர் அரசனுக்கு நன்றியும் அன்பும்.