ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2015

ஸ்வீட் காரம் காபி









ஸ்வீட் காரம் காபி

இந்த தலைப்பை பார்த்ததும் என்னடா நீ ஆடிக்கொருதரம் அம்மாவாசைக்கு ஒரு தரம்  இந்த தலைப்புல எழுதறே னு நீங்க சலிச்சுகிட்டே சொல்ற மைண்ட் வாய்ஸ் எனக்கு  கேட்டிருச்சு. 
அகம்புறம் குறும்படத்தின் வேலைகள் எழுதுவதை தள்ளி வச்சிடுச்சு. னு காரணம் சொல்லிகிட்டு இருக்கும் போது , சரி சரி விசயத்துக்கு வாங்க னு மனசு குமாரும் நிஜாமுதீனும் மைன்ட் வாய்ஸில் சொல்வதால் விசயத்துக்கு வரேன்.


சமீபமா படம் ஒண்ணுமே பார்க்கல. கடைசியா பார்த்தது  பாகுபலி. நண்பர் அரசனும் நானும் போயிருந்தோம்.வரலாற்று கதைகள் படிப்பதில் எனக்கு செம இண்டரெஸ்ட்.கூடவே ராஜமௌலி டைரக்சன் என்பதால் எதிர்பார்ப்பு தாறுமாறா இருந்துச்சு. எப்படி கொடுத்தா ரசிப்பாங்க என்பதை நல்லா தெரிஞ்சு வச்சிருக்கார் ராஜமௌலி . நான்  ரொம்ப ரசிச்சது  போர்க்கள காட்சிகள் மற்றும் கவிதையா தந்திருக்கும் லவ் போர்ஷன் தான்.  பாகுபலியின் கேரக்டர் வடிவமைப்பு என்னை மிகவும் கவர்ந்தது.அவன்  மக்கள் மேல் பிரியம் கொண்டவன் என்பதை  பாடலிலோ வசனங்களிலோ காட்டாமல்  காட்சியாய் காட்டியது.   போர்க்களத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் எதிரிகளை சாய்ப்பதை உதரணமாக சொல்லலாம்.  (பாகுபலியின் தோள் மீது சிவலிங்கத்தை ஏற்றியது போல் திரைக்கதையின் தோள் மீது இன்னும் வலு சேர்த்திருக்கலாம்) ரம்யா கிருஷ்ணன் கையில் குழந்தையை ஏந்திய படி இருப்பது  போல் ரசிகர்கள் பாகுபலியை உச்சத்தில் வைத்து கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றார்கள். இதை இரண்டாம் பாகத்துல தக்க வைக்கிறது தான் இயக்குனரின் மிக பெரிய சவால். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற மில்லியன் டாலர் கொஸ்டீனோட ரசிகர்கள் காத்துகிட்டு இருக்கோம். 

 தொடர்கதையில் தொடரும் போடுறது போல் நாவல் படிக்கிறதுல நானும் தொடரும் போட்டுட்டு  விட்டுட்டேன். ஆம் நாவல் படிச்சு ஆறு மாசமாச்சு.நூலகத்தில்  போய் எடுத்துட்டு வந்த புக் படிச்சு முடிக்க தாமதமாகி பெனால்டி கட்டும் படி ஆகிடுச்சுனா பார்த்துக்குங்க.  
இருந்தும் அசராம இதோ நூலகத்தில் சுஜாதாவின் தூண்டில் கதைகள் எடுத்துட்டு வந்திருக்கேன்.இயக்குனர் ஸ்ரீதரின் திரும்பி பார்க்கிறேன் அனுபவ தொகுப்பும் எடுத்துட்டு வந்திருக்கேன்.





அனுபவம்னு சொல்றப்ப தான் சமீபத்தில் நம் நண்பர் துளசிதரன் அவர்களின் புதிய குறும்படமான POET THE GREAT பட ஷூட்டிங் ல நடந்த ஒரு அனுபவம் ஞாபாகம் வருது. குறும்படத்தில் நடிப்பதற்காக (நடிக்க ட்ரை பண்றதுக்காக னும் சொல்லலாம் )சென்றிருந்தேன். (கோவை சென்று  கோவை ஆவியுடன் ஒரு நாள் முழுக்க கோவையில் சுற்றிய போது செம ஜாலியா இருந்துச்சு. அவரது டூ வீலரிலேயே  பாலக்காடு சென்று சேர்ந்தோம்.) 

அந்த பட படப்பிடிப்பின் போது  மேக்கப் மேன் எனக்கு மேக்கப் போட்டு கொண்டிருக்கும் போது அவர் கையில் வைத்திருந்த கம் பாட்டில் கை தவறி என் சட்டையில் கவிழ்ந்து விட்டது. மேக்கப் மேன் சாரி சொன்னதோடு சட்டையை என்னிடமிருந்து வாங்கி  தண்ணீரில் அலச ஆரம்பித்து விட்டார். நான் மறுத்து சட்டையை வாங்கி கொண்டு விட்டேன். அந்த சட்டை  காய்ந்த பிறகும் மொடமொடப்பாகவே இருந்தது. நான் அதற்காக அலட்டி கொள்ளவில்லை. ஆனால் அடுத்த நாள் ஷூட்டிங் வந்த போது அவர் சார் நான் காசு தரேன் வேற ஒரு சட்டை எடுத்துக்குங்க என்று சொன்ன போது நான் அதிர்ச்சியாகி "எதுக்கு இதுக்கு போய் இவ்வளவு பீல் பண்றீங்க. வேலை நேரத்தில் இதெல்லாம் சகஜம் தான் சார். இதே  நானே கை தவறி கூட என் மேலே கொட்டி கொள்ளவும் வாய்ப்பிருக்கிறதே"  என்று சமாதானபடுத்தினேன். ஷூட்டிங் முடிந்து கிளம்பும் போது அவரிடம் சென்று  ஸ்பெசலாக விடைபெற்று கிளம்பினேன் அது அவர் எனக்கு போட்ட மேக்கப்புக்காக மட்டுமல்ல,  தன்னால் அடுத்தவருக்கு எந்த இன்னலும்  வந்து விட கூடாது என்ற நினைக்கும் அவரது அந்த உயர்ந்த எண்ணத்திற்காகவும் தான். 

இதோ அந்த குறும்படத்தின் லிங்க் 







கோவை ஆவி காதல் போயின் காதல் குறும்படம் தொடர்ந்து அவரது இரண்டாம் படமான தலை வாரி பூ சூடி உன்னை வெளியிட்டிருக்கிறார் இதில் அவர் சமுதாயம் சம்பந்தப்பட்ட பிரச்னையை (கொஞ்சம் சிம்பிளாக) கையாண்டிருப்பதுடன்,ஒளிப்பதிவு எடிட்டிங் என்று மற்ற துறைகளையும் எடுத்து செயல்பட்டிருக்கிறார்.  அவரது இந்த தொடர் முயற்சிகளுக்கு எனது வாழ்த்தும் ஆதரவும் என்றும் உண்டு.

குறும்பட சுட்டி



மற்ற நண்பர்களின் முயற்சிகள் பற்றி சொல்றியே உன்னோட முயற்சிகள் சில பாதியிலே நிக்குதே னு தானே சொல்ல வரீங்க. இதோ அதை பற்றிய தகவல்கள் உங்களுக்கு சொல்லியாக வேண்டும்.

 நான் 15 அத்தியாயங்கள் வரை எழுதி வெளியிட்ட தொடர்  திருமண ஒத்திகை. இதன் மீதி அத்தியாயங்கள் 6 ஐ எழுதி முடித்து விட்டேன். மொத்தம் 21 அத்தியாயங்கள்.  மற்ற பகுதிகளை வலைத்தளத்தில் வெளியிடுவதை விட புத்தகமாக உங்கள் கைகளில் தந்து விடலாம் என்று புத்தக வேலைகளில் இறங்கவிருக்கிறேன்.
  

அடுத்து காவல் குதிரைகள் என்ற பெயரில் தொடர் எழுத அறிவிப்பு வெளியிட்டிருந்தேன்.
 இது அறிவிப்பு மட்டும் தானா என்றால் இல்லை . தொடர் எழுத ஆரம்பித்திருக்கிறேன். முதல் அத்தியாத்திலிருந்து  சில வரிகள்.

அந்த மருத்துவமனையின் காஷ் கவுன்ட்டரில் இருந்த பெண்கள் சிரித்த படி அரட்டை அடித்து கொண்டிருந்தார்கள். ஒரு பெண் இன்னொரு பெண்ணை அடிக்க கை ஓங்கினாள் .மற்றவள் 
"கேமரா வாட்ச் பண்ணுது எம்.டி பார்த்தால் சீட்டை கிழிச்சிடுவார்" என்று எச்சரித்தாள்.  
"கேமரா வை வச்சாங்க சரி,  சூப்பர் வைசர் எதுக்கு வச்சிருக்காங்க சொல்லு பார்ப்போம்" என்று ஒரு பெண் புதிர் போட, "தெரியலையே" என்றாள் மற்றவள். அது அதட்டாது திட்டாது இல்லியா அதுக்காக தான்" என்றவுடன் மற்றவள் சிரிக்க  ஆரம்பிக்க இங்கே என்ன சிரிப்பு என்ற படி வந்தார் சூப்பர் வைசர்.

"நடுத்தர வர்க்கம் நோய்க்கும் பணத்துக்கும் நடுவுல நின்னுகிட்டு சிரிப்பாய் சிரிக்கிறதை பற்றி சொல்லி சிரிக்கிறாங்க " என்றார்  பணம் கட்ட நின்றிருந்த அந்த வயதானவர்.  அந்த பெண்கள் முகத்தில் அதிர்ச்சி காட்ட  சூப்பர் வைசர் காது கேட்காதவர் போல் நழுவ ஆரம்பித்தார்.

இந்த கதையும் சினிமா திரைக்கதை போன்று தான் எழுத ஆரம்பித்திருக்கிறேன். முழுக்க எழுதி முடித்து பின் காலமும் நேரமும் (நிதியும்) ஒத்து வந்தால் புத்தகமாக வெளியிட்டு விடலாம் என்றிருக்கிறேன்.பார்க்கலாம்.



 எனது சில நொடி சினேகம் குறும்படத்தை தொடர்ந்து அகம் புறம் குறும்படம். இதன் படப்பிடிப்பு முடிந்து படத்தொகுப்பில் இறங்கியிருக்கிறோம். அது பற்றிய தகவல்கள் அனுபவங்கள் தனி பதிவாக வருகிறது. குறும்படம் விரைவில் 








இப்படி தொடர்ந்து நான் பயணிப்பதில் வலைப்பதிவு மற்றும் முகநூல் நண்பர்களின் 
ஊக்கமும் ஒரு காரணம்.

சென்னை, மதுரையை தொடர்ந்து இந்த வருடம் புதுக்கோட்டையில் பதிவர் திருவிழா.நடைபெறுகிறது.  பதிவர் திருவிழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்.முதல் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட அதே ஆர்வம் குறையாமலே இதோ இந்த வருட பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள தயாராகி கொண்டிருக்கிறேன்.



பதிவர் திருவிழா பற்றிய தகவல்கள் அய்யா திரு. முத்துநிலவன் 
அவர்களின்  வளரும் கவிதை  வலைபதிவில்





ஆர்.வி.சரவணன் 

ஞாயிறு, ஆகஸ்ட் 09, 2015

மக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம்




மக்கள் ஜனாதிபதி  அய்யா அப்துல் கலாம் 

எந்த ஒரு நிகழ்வுக்கும், ஒரு  நண்பர்கள் குழுவாக இருந்தாலும் சரி குடும்ப அங்கத்தினர்களாக  இருந்தாலும் சரி  ஒவ்வௌருவரும்  கண்டிப்பாக 
மாற்று கருத்துக்களை கொண்டிருப்பார்கள். அது குறித்து விவாதங்கள் கூட 
நடைபெறுவதுண்டு. ஆனால் ஏவுகணை நாயகன் மக்களின் ஜனாதிபதி 
அய்யா திரு .A.P.J.அப்துல் கலாம் அவர்களது மறைவு எல்லோரிடத்தும்  ஏற்படுத்தி சென்றிருப்பது ஒன்றே ஒன்று தான். அது வேதனை.

என் அலுவலகத்தில் உள்ள  நண்பர்கள் அனைவருமே  எந்த ஒரு நிகழ்வுக்கும் ஆளுக்கொரு கருத்தை கொண்டிருந்து,  தன் கருத்து  தான் சிறந்தது என்பதாக  விவாதத்திற்கு தயாராவார்கள். திரு .அப்துல் கலாம் மறைவு செய்தி கேட்ட நொடியில் இருந்து  நண்பர்கள் அனைவரிடமும் இருந்த ஒரே மன நிலை வேதனை தான். எப்படிப்பட்ட மனிதர் இவர். இப்படி ஒரு மனிதர் இனி கிடைப்பாரா என்ற ஆதங்கம் தான் அனைவரிடத்திலும் நிறைந்திருந்தது. எந்த விஷயமானாலும் எதிர் கருத்தோடு மல்லு கட்டும்  நண்பர் கூட  
 "இப்படிப்பட்ட நல்ல மனுஷன் அதுக்குள்ளே போகணுமா. கடவுள் நல்லவங்களை நம்மோடு இருக்க விடறதில்லை. வேற என்னத்தை சொல்றது" என்றார் கவலை தோய்ந்த முகத்துடன். 


எங்களின் (அலுவலக நண்பர்களின்) இத்தகைய மன நிலை அந்த இறப்பின் நொடி தெரிந்து சில மணி நேரத்தில் அடுத்த நிகழ்வை நோக்கி பயணிக்கவில்லை. மாறாக அன்றாட அலுவல்களுக்கு இடையே நாங்கள் ஒவ்வொருவரும் பத்திரிகைகள் , வாட்ஸ் அப், முக நூல் இவற்றில் அவர் பற்றி தொடர்ந்து வந்து கொண்டிருந்த  தகவல்கள் படங்கள் போன்றவற்றை மற்றவருடன் தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருந்தோம். ஒவ்வொரு முறை அவரை பற்றி பேசி முடிக்கும் போதும்  அருமையான மனிதர் இவர்  என்ற வரிகளும் சேர்ந்து கொண்டது.

அவரது இறுதி பயணம் ஷில்லாங்கில் இருந்து கிளம்பி டில்லி வந்து அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின் மதுரை வந்து மண்டபம் சென்று ராமேஸ்வரத்தில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது  வரை அனைத்தையும் தொடர்ந்து ஊடகங்களில் கவனித்து கொண்டிருந்தோம்.  நாம ராமேஸ்வரம் கிளம்பி சென்று  அஞ்சலி செலுத்தி இருக்கலாம் என்று கூட ஒரு நண்பர் ஆதங்கப்பட்டார். விரைவில் அங்கு சென்று அஞ்சலி செலுத்தி வர திட்டமிடல் ஆரம்பித்து விட்டது.





அலுவலகத்தில் இப்படி என்றால் வெளியில் நான் கண்ட மக்களின் மன நிலைக்கு ஒரு சின்ன உதாரணம் இங்கே தருகிறேன் (முகநூலில் சொல்லியிருந்தது) 

இரவு வீட்டுக்கு செல்ல சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த போது ஏவுகணை நாயகன் 
திரு. அப்துல்கலாம் அவர்களின் படம் மாலை அணிவித்து மலரஞ்சலி செய்து வைக்கப்பட்டிருத்தது. கூடவே மெழுகுவரத்திகளும் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன.
பயணிகள் பலரும் அந்த பயண அவசரத்திலும் நின்று வணங்கிய படி சென்று கொண்டிருந்தார்கள். சிலர் மலர்களை தூவினார்கள். சிலர் செல் போன் கொண்டு க்ளிக்கினார்கள். எத்தனை பேரின் நெஞ்சங்களில் அவர் நிறைந்திருக்கிறார் பாருங்கள் என்று பெருமையாய் சிலர் சொல்லி கொண்டிருக்க, நகர மனமில்லாமல் அங்கேயே சிலர் நின்றிருந்தார்கள்.அவர்களில் நானும் ஒருவனாய் நின்று கொண்டிருந்தேன்.


 எனது  வீட்டில் கூட அவரது வாழ்க்கை, அவர் செய்த சாதனைகள்,   பற்றி தொடர்ந்து ஒரு மணி நேரம் வரை  பேசி கொண்டிருந்தோம். எங்கள் மகன் ஹர்ஷவர்தன் அவனது  பள்ளியில்  3 வது படிக்கும் போது சுதந்திர தினவிழாவில் அவர் போல் வேடமிட்டு அவரது பொன்மொழிகளை பேச வைத்து மகிழ்ந்த்து  ஒரு மன நிறைவை எங்களுக்கு தந்திருக்கிறது. 



நீங்கள் சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்.
* கடின உழைப்பு, நேர்மைக்கு மாற்று எதுவும் இல்லை; நிச்சயமாக எதுவும் இல்லை.
* கரைகளைக் கடக்கும் துணிவிருந்தால்தான் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும்.
* அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள். அதுதான் உண்மையான தலைமைப் பண்பு.
* ஒரு தேசம் ஊழலில்லாமலும், அறிவாளிகளின் தேசமாகவும் இருக்க மூன்று பேரால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தந்தை, தாய், ஆசிரியர்தான் அந்த மூன்று பேர்.
* எல்லாப் பறவைகளும் மழைக் காலங்களில் கூடுகளில் அடையும். ஆனால் கழுகு, மழையைத் தவிர்க்க மேகத்துக்கு மேலாகப் பறக்கும்.
* அறிவுதான் உங்களை சிறந்தவர்களாகவும், பலமுள்ளவர்களாகவும் மாற்றுகிறது.
* தேசம் என்பது எந்தவொரு தனிமனிதனுக்கும், நிறுவனத்துக்கும், கட்சிக்கும் அப்பாற்பட்டது.
* உங்களுக்கு சிறகுகள் உள்ளன. தவழ்ந்து செல்லாதீர்கள். அதைக் கொண்டு, மேலே மேலே 
  பறந்து செல்லுங்கள்.
* தோல்விகளை எதிர்கொள்ள  கற்றுக் கொள்ளுங்கள். அதுதான் வெற்றிக்கான மிக 
  முக்கியமான திறமை.
* உங்களிடம் கேளுங்கள். நீங்கள் எதற்காக நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள்? 
* மிக உயர்ந்த லட்சியம், மனிதர்களுக்கான எல்லை என்ற சுவர்களைத் தகர்க்கிறது.
* கடவுள் நம்முடன் இருந்தால், நமக்கு எதிராக யார் இருக்க முடியும்?
* நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு.
* வானத்தைப் பாருங்கள். நாம் தனித்து இல்லை. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது. கனவு காண்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது.
* கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள். கனவுதான் சிந்தனையாகவும், சிந்தனைதான் செயலாகவும் மாறுகிறது.
* வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு வழி. அடுத்தவர்களின் வெற்றியை உங்களுடைய வெற்றியைப் போலக் கொண்டாட கற்றுக் கொள்ளுங்கள்.
* அறிவியலுக்கு பயம் தெரியாது. வித்தியாசமாக சிந்திக்க உங்களுக்கு துணிவிருந்தால், அறியப்படாத விஷயங்களுக்கு சவால் விடும் ஆற்றலும் உங்களுக்கு இருக்கிறது.
* முடியாத விஷயங்கள் குறித்து கனவு காண்பவர்களே  அவற்றை வெற்றி கொள்ள முடியும்.




இந்திய மக்களின் இதய சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கும், அவரின் பொன்மொழிகள் சிலவற்றை படிக்கையில் உவகை மேலிடுகிறது. அவரது மறைவு நம்மிடையே ஏற்படுத்தியிருக்கும் அதிர்வலைகள் அடங்க வெகு நாட்களாகும் .இனி இப்படி ஒருவர் நமக்கு  கிடைக்க போவதில்லை  என்ற ஏக்கமும் நம்மிடையே தொடர்ந்து கொண்டிருக்கும்.  கூடவே அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம்  என்ற மன நிறைவையும் கொண்டிருக்கிறோம்.

ஆனால் இது மட்டும் போதாது. அவர் கொண்டிருந்த நற்பண்புகளில் ஒன்றையேனும் கடைபிடிக்க நாம்  முயற்சிக்க வேண்டும் . இதெல்லாம்  முடியுமா நடக்கிற காரியமா என்பதற்கு அவர் வாழ்க்கையே அதற்கான பதிலை தந்திருக்கிறது.



ஆம். சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் தன்  அயராத உழைப்பின் 
மூலம் சிகரங்களை தொட்டு இந்தியாவின் முதல் குடி மகனாக உயர்ந்திருக்கிறார் என்பதே  முயற்சித்தால் முடியாதது 
ஒன்றும் இல்லை என்பதை நமக்கு சொல்கிறதே 




அவர் நற்பண்புகளில் ஏதேனும் 
ஒன்றை  தொடர முயற்சிப்போம்.
இதுவே நாம் அவருக்கு  செலுத்தும் உண்மையான அஞ்சலி.
அவர் நம்மிடம் எதிர்பார்ப்பதும்  
அதை  தான். அது ஒன்றே அவர் 
கண்ட கனவை நனவாக்கும்


ஆர்.வி.சரவணன்