சனி, நவம்பர் 27, 2010

இசைகுயில்களின் இசை மழையில்

இசைகுயில்களின் இசை மழையில்

என்னை தொடர் பதிவு எழுத அழைத்திருந்த பாலா அவர்களுக்கு நன்றி

பாடல்களை பற்றி எழுது என்றவுடன் நான் பாட்டுக்கு பாடல்களை கணக்கெடுத்து இது நல்லாருக்கும் இல்லே இல்லே இது தான் நல்லாருக்கும் என்று ஏதோ என்னால் முடிந்த எனக்கு பிடித்த இசை குயில்களின் பாடல்களில் பத்து எடுத்து தொகுத்து தந்திருக்கிறேன் .நடுநடுவே என்னை விட்டுட்டியே இந்த பாட்டை மறந்துட்டியே என்று மனசு வேறு படுத்தி எடுத்து விட்டது ஒரு வழியாக நான் தேர்ந்தெடுத்த பத்து இசை குயில்களும் அவர்களது இனிய குரலில் பாடிய கீதங்களும் இதோ உங்கள் பார்வைக்கு




P. சுசீலா
பாடல் மாலை பொழுதின் மயக்கத்திலே
படம் பாக்யலட்சுமி

சுசீலா அவர்களின் இந்த பாடல் என் மனதை விட்டு நீங்கா இடம் பிடித்த பாடல் ஏன் தோழி என்று அவர் பாடும் போது பதில் சொல்லியாக வேண்டும் என்பது போல் மனம் பரபரக்கும் பாடலில் தொடர்ந்து இழையோடும் ஏக்கம் எப்பொழுது கேட்டாலும் எனை ஈர்க்கும்


S.ஜானகி
பாடல் கண்ணன் வந்து பாடுகின்றான்....
படம் ரெட்டைவால் குருவி

ஜானகியின் குரல் இனிமை பற்றி ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. எத்தனையோ பாடல்களில் அவர் குரல் நமை ஈர்த்தாலும் இந்த பாடலில் ஒரு இனிமை உண்டு. இந்த இனிமை தொடர்ந்து கேட்க வேண்டும் போல் எனை தூண்டும்

எல் .ஆர். ஈஸ்வரி
பாடல் பட்டத்து ராணி பாடும் .........
படம் சிவந்த மண்

கணீரென்ற இவரது குரலில் வந்த பல பாடல்களில் எனை கவர்ந்தது இப் பாடல்


வாணி ஜெயராம்
பாடல் மேகமே மேகமே ....
படம் பாலைவனச்சோலை


இவரது குரலில் இருக்கும் கம்பீரம் என்னை கவர்ந்த ஒன்று இது எல்லா பாடலிலும் சோகம் இழையோடும் இந்த பாடலிலும் அந்த கம்பீரம் வீற்றிருக்கும் . நான் எப்பொழுது கேட்க நேர்ந்தாலும் எனை வியப்பில் ஆழ்த்தும் இது

ஜென்சி
பாடல் இதயம் போகுதே ....
படம் புதிய வார்ப்புகள்

இவர் பாடியது சில பாடல்கள் தான் என்றாலும் ஒவ்வொரு பாடலும் இவரது குரலால் எனை கவர்ந்திருக்கிறது இந்த பாடல் எனை மிகவும் கவர்ந்திருக்கிறது

எஸ்.பி .ஷைலஜா
பாடல் ஆசையை காத்துலே தூது விட்டு ....
படம் ஜானி

இவரது பாடல்களில் நான் விரும்பி ரசிக்கும் பாடல் இது
இந்த பாடலில் எனை கவர்ந்தது.இசையும் இசையோடு சேர்ந்து வரும் இவரது குரல் இனிமையும்

சித்ரா
பாடல் நானொரு சிந்து ....
படம் சிந்து பைரவி


சின்ன குயில் சித்ரா என்ற பெயர் பெற்ற இவரது பாடல்களில் நானொரு சிந்து பாடலில் அவர் பாடியிருக்கும் விதம் ஒரு தனி அழகு தான்

ஸ்வர்ணலதா
பாடல் மாலையில் யாரோ மனதோடு பேச
படம் சத்ரியன்

இவரது
குரல் இனிமை யில் வந்த பாடல்கள் அனைத்தும் ஒரு இனிமை தான் அதிலும் இந்த பாடல் தருவது தனி இனிமை தான். இப்பாடல் எப்பொழுது கேட்டாலும் மனதோடு பேசுவது போல் தான்
தோன்றும் எனக்கு
(இவரது மறைவு இசைத்துறைக்கு ஒரு இழப்பு தான்)

லதா மங்கேஷ்கர்
பாடல் ஆராரோ ஆராரோ....
படம் ஆனந்த்


இசை குயில் பாடிய வளையோசை கல கல .... பாடல் எனக்கு விருப்பமான ஒன்று. சோலோ சாங் எனும் போது ஆராரோ ஆராரோ பாடல் கேட்கும் போதெல்லாம் எனை தாலாட்டும் இன்றும்

நித்யஸ்ரீ
பாடல் கண்ணோடு காண்பதெல்லாம்....
படம் ஜீன்ஸ்

நித்யஸ்ரீ பாடும் இப்பாடல் எனக்கு எனக்கு மிகுந்த விருப்பமான ஒன்று


ஆர்.வி.சரவணன்



செவ்வாய், நவம்பர் 23, 2010

இதெப்படி இருக்கு

இதெப்படி இருக்கு



எல்லாரும் பங்கு கேட்கிறாங்க அதுக்காக தான் இந்த ஏற்பாடு எப்பூடி


என்னது லிப்ட் வேணுமான்னு கேட்கறீங்களா யப்பா ஆளை விடுங்க



கால் மேல கால் போடலாம் சரி இது என்ன கார் மேல கார் போட்டிருக்கு


ஒரு வேலை செடி வளர்ந்துடுச்சோ

என் நண்பர் மின்னஞ்சலில் அனுப்பிய படங்கள் இவை

ஆர்.வி.சரவணன்

சனி, நவம்பர் 20, 2010

ஒரு பாராட்டு கடிதம்


ஒரு பாராட்டு கடிதம்


இன்று கார்த்திகை திருநாள் .

நான் திருவண்ணாமலை சென்ற போது எடுத்த படம் இது

இந்த மலையானது 2668 மீட்டர் உயரம் கொண்டது 14 கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டது. மலையை சுற்றிலும் எட்டு சிவலிங்கங்கள் உள்ளன .

**************


நான் படித்த கல்லூரியில் மாணவர் தலைவர் தேர்தல் வந்தது . தேர்தலுக்கு நின்ற இருவருமே என் வகுப்பில் என்னுடன் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் தான் . அதில் ஒருவர் கல்லூரியில் நன்கு பிரபலமானவர். நண்பர்கள் நிறைய உண்டு அவருக்கு. இருந்தும் அவருக்கு வாக்கு செலுத்த நான் விரும்பவில்லை.

காரணம் கட்சி சார்புடன் அவர் நின்றது எனக்கு பிடிக்கவில்லை. (மாணவ சமுதாயத்தில் அரசியல் நுழைவதை நான் விரும்புவதில்லை ).

ஆகையால் மற்றவருக்கு வாக்கு செலுத்தலாம் என்று முடிவு செய்திருந்தேன். யாருக்கு வாக்கு செலுத்த முடிவு செய்திருந்தேனோ அவர் என்னிடமும் மற்ற நண்பர்களிடமும் வாக்கு சேகரித்த போது போது எனக்கு ஓட்டு போடுங்கள் அவருக்கு போட வேண்டாம் ஏனெனில் அவர் நமது சாதியை சேர்ந்தவரில்லை என்று கூறி வாக்கு கேட்டதும் கடுப்பாகி விட்டேன் .

சாதியை முன்னிறுத்தியதால் நான் அவருக்கு போடாமல் கட்சி சார்புடன் நின்ற நண்பருக்கே போட்டேன்அவரே வெற்றியும் பெற்றார். அவர் வெற்றி பெற்றதில் நான் அடைந்த மகிழ்ச்சியை விட எனது கொள்கையின் படி நான் நடந்து கொண்டது எனக்கு மன நிறைவு கிடைத்தது (ஆண் சாதி பெண் சாதி தவிர வேறேது சாதி )

இந்த நிகழ்வை தெரிவித்து கடிதம் எழுதிநடிகர் இயக்குனர் பாக்யராஜ் அவர்களின் பாக்யா வார இதழுக்கு அனுப்பினேன்.(அந்த சமயத்தில் தான் இது நம்ம ஆளு படம் வெளிவந்து ஓடி கொண்டிருந்தது ) என் கடிதத்தை பார்த்து எனக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தார்கள் பாக்யாவில் இருந்து .

இதை படித்து விட்டு ரொம்ப சந்தோசப்பட்டேன் .எனது முக்கிய கடிதங்களில் ஒன்றாக பாதுகாத்து வைத்திருக்கிறேன்

இதோ அந்த கடிதம் உங்கள் பார்வைக்கு




பாரதி சரவணன் னு பேர் போட்டிருக்கே அப்படின்னு குழப்பமாகாதீங்க
புனை பெயர் எல்லாரும் வச்சிருக்காங்களே நாமும் வச்சிக்கலாம் னு நினைச்சு நான் வைத்து கொண்ட பேர் அது ஹி....ஹி

ஆர்.வி.சரவணன்

செவ்வாய், நவம்பர் 16, 2010

சந்தனக்காற்றே செந்தமிழ் ஊற்றே ....


சந்தனக்காற்றே செந்தமிழ் ஊற்றே ....

மனம் கவர்ந்த பாடல்கள் 7


பாடலாசிரியர் வாலி அவர்களுக்கு என்பதாவது பிறந்த நாள் திரை இசையை மிகரசிக்கும் நான் அவரது பாடல் வரிகளை

ரசித்திருக்கிறேன்.அவரது எழுத்துக்களை கண்டு வியந்திருக்கிறேன்

வாலிக்கு இதோ சில வரிகளில் என் பிறந்த நாள் வாழ்த்து

உம் எழுத்தால் எமை வசீகரிப்பதில் நீ வசீகர வாலி

உம் இளமை வரிகளால் எமை ஈர்ப்பதில் நீ வாலிப வாலி

உன் எழுத்துக்கள் என்றும் பதினாறாய்

இன்றும் அவை வற்றாத வார்த்தை ஊற்றாய்

உமை வாழ்த்த வயதில்லை வாலி

எனினும்

தமிழ் தாயின் ஆசியுடன்

வாலி

நீவிர் நீடுழி வாழி

வாலி அவர்களின் வாலிப வரிகளில் நம் இசை அரசர் இளையராஜா இசைவார்ப்பில் பாலசுப்ரமணியம் ,ஜானகி யின் வசீகர குரல்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,ஸ்ரீ தேவியின் அசத்தலான நடிப்பில் உருவான ஓர் அற்புதம்


சந்தனக்காற்றே செந்தமிழ் ஊற்றே .... இந்த பாடலை நான் எப்பொழுது கேட்கநேர்ந்தாலும் தென்றல் எனை தழுவியது போல் ஒரு இன்பம் தருகிறது இந்த பாடல்


இதோ உங்களுக்கு அந்த அற்புதம்



******************************************************************

வலைத்தள நண்பர்களுக்கும்

அவர்கள் தம் குடும்பத்தினர்களுக்கும்

என் இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்

*********************************************************************

ஆர்.வி.சரவணன்

சனி, நவம்பர் 13, 2010

எது புண்ணியம்

எது புண்ணியம்




கோவிலுக்கு கிளம்பி கொண்டிருந்த தன் முதலாளியிடம் வந்து நின்றான் வேலையாள் முத்து.

அவன் தலை சொரிந்த படி நிற்பதை பார்த்த அவன் முதலாளி "என்னப்பா" என்றார்.


"முதலாளி ஒரு உதவி வேணும்"

"என்னனு சீக்கிரம் சொல்லு"


"பொண்ணுக்கு கல்யாணம் பேசியிருக்கேன் செலவுக்கு கொஞ்சம் பணம் கடனா வேணும்"


"உன் மூத்தபொண்ணு கல்யாணத்திற்கு வாங்கின கடனே நீ இன்னும் அடைச்சபாடில்லே அதுக்குள்ளே மறுபடியும் கடனா "முதலாளியின் மனைவி கேட்டார் இளக்காரமாய்


"என்னம்மா பண்றது, வளைகாப்பு , பிரசவம் னு செலவு செய்யவே சம்பளம் சரியா போயிடுது"


"உனக்கு இன்னும் எத்தனை பொண்ணு இருக்கு" இது முதலாளி

"இன்னும் ஒரு பொண்ணு இருக்குங்க" என்றான் சங்கோஜத்துடன்

"அந்த பொண்ணு கல்யாணத்திற்கும் எங்க கிட்டே தான் காசு கேட்டு வருவியா "முதலாளி மனைவி


"உங்களை விட்டா எனக்கு யாருங்க இருக்கா"


"சரியா போச்சு போ, ஏன்யா அளவா பெத்து குடும்பம் நடத்தறதை விட்டுட்டுஇப்படி இங்கே வந்து நிக்க உனக்கு கஷ்டமா இல்லையா"


இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தலை குனிந்தான் முத்து


"இதோ பார் ஏதோ என்னாலே முடிஞ்சது ஒரு பத்தாயிரம் தான் தர முடியும் கேசியர் கிட்டே சொல்றேன் வாங்கிட்டு கிளம்பு"

"முதலாளி விலைவாசி இருக்கிற இருப்பிலே இது எப்படி போதும் கொஞ்சம் பார்த்து செய்யுங்க"

என்று கெஞ்சும் அவனை சட்டை செய்யாமல் அவர்கள் இருவரும் சென்று
டிரைவரிடம்

" சீக்கிரம் போப்பா டயமாயிடுச்சு"

என்று அவசரமாய் சொல்லியபடியே காரில் ஏறிக் கொண்டனர்.

அவர்கள் இருவரின் ஒரே மகளின் திருமணம் முப்பது வயதுக்கு மேல் ஆகியும் தடைப்பட்டு வருகிறதே என்பதற்காக ஜோசியர் சொன்ன படி கோயிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் செய்து வைப்பதற்காகவே அவசரமாய் சென்று கொண்டிருந்தனர்

காரின் உள்ளே ஸ்டிக்கரில் இருந்த முருகன் அவர்களை பார்த்து சிரித்து கொண்டிருந்தார்.

ஆர்.வி.சரவணன்

வியாழன், நவம்பர் 11, 2010

காதல் கவிதைக்கு ....

காதல் கவிதைக்கு ....



அன்பே
உனை பார்க்கும் வரை
நான் கவிதைக்கு
முயற்சிக்கவில்லை
உண்மை தான்
ஆனால்
பார்த்த பின்னோ
உனை பற்றி
கற்றை கற்றையாய்
கவிதை எழுதினேன்
படித்த
நீ
அனைத்தும் பொய் என்று
ஒற்றை வரியில்
பதிலுரைக்கின்றாய்
அன்பே
தன்னடக்கம் தேவை தான்
அதற்காக இப்படியா ....

ஆர்.வி.சரவணன்

வியாழன், நவம்பர் 04, 2010

ஹாப்பி தீபாவளி போர்ஸ்

ஹாப்பி தீபாவளி போர்ஸ்

அனைத்து வலைபதிவு நண்பர்களுக்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

வணக்கம் நண்பர்களே இந்த இடுகை எனது எழுபத்தைந்தாவது இடுகையாக மலர்கிறது . இந்த எழுபதைந்தை நான் எட்டியதற்கு இறைவனின் அருளுடன் கூட ,உங்கள் அனைவரின் ஊக்கம் மற்றும் கருத்துரைகள் மூலமே இது சாத்தியமாயிற்று உங்கள் அனைவருக்கும் நன்றி



இந்த தீபாவளி ஸ்பெஷல் இடுகையை கொஞ்சம் வித்தியாசமாக நம்ம கவுண்டமணி அவர்கள் தொகுத்து வழங்குவது போல் எழுதியுள்ளேன்



ஸ்டார்ட் மியூசிக் ............

மகா ஜனங்களே

ல்லாருக்கும் வணக்கம்பா எப்படியிருக்கீங்க

நம்ம சரவணன் தீபாவளி ஸ்பெஷல் இடுகையை
நீங்கள் தொகுத்து வழங்கணும்னு கேட்டுக்கிட்டார் இது ஆவறதில்லை னு
நான் சொன்னேன். ஆனா பாருங்க மேட்டுக்குடி படத்திலே கார்த்திக்
நான் உங்க தம்பி மாதிரி னு சொல்வாரே அதே போல்
ஒரே அழுகாச்சி வேற வழி இதோ வந்துட்டேன்

இந்த தீபாவளி ஸ்பெஷல் இடுகையிலே எல்லாத்தையும்
கலந்து கட்டி கதம்பமா சரவணன் எழுதியிருக்காரு.

இந்த இடுகையை இணைந்து வழங்குவதற்கு விளம்பரதாரர் யாரும் வராததால் நாம நேரடியா நிகழ்ச்சிக்கு போயிடலாம்
முதலில் சரவணனோட பையன் ஹர்ஷவர்தன் ஓவியம் மூலமா தீபாவளி வாழ்த்து சொல்றாரு உங்களுக்கு பாருங்க


அடுத்து சரவணன் ஒரு ஜோக் சொல்றாரு கேளுங்க

மாப்பிள்ளை என்னம்மா பாடிக்கிட்டு இருக்காரு

அது ஒன்னும் இல்லப்பா தலை தீபாவளிக்கு நீங்க சீர் வரிசை செஞ்சது போல் மற்ற தீபாவளிக்கு எல்லாம் நீங்க சரியா செய்யலையாம்
அதனாலே தல போல வருமா என்று பாடுறாரு


ஜோக் சிரிப்பு வந்துச்சா வரலீனா அதுக்கு நான் பொறுப்பில்லை

அப்புறம் அவனவன் கொசு கடியிலே தூக்கம் வராமே அல்லாடறான் இவர் என்னடான்னா கவிதை எழுதறாரு கவிதையை படிங்க

கவிதை நல்லாருந்தா சொல்லுங்க கல் வெட்டில் செதுக்கி வச்சிட்டு பக்கத்திலேயே அவரை உட்கார வச்சிடுவோம் என்ன

அன்பே
நிசப்தமான இரவில்
சப்திக்கும் உன் காற்சதங்கைகளின் ஒலி
என் உறக்கதிற்க்கான தாலாட்டா
எனை கிறங்க வைப்பதற்கான அழைப்பா
என்று சிந்திப்பதிலேயே
என் இரவு பொழுது கரைகிறது

அடுத்து ஒரு எகத்தாளம் பிடிச்சவனை
பத்தி ஒரு சம்பவம் சொல்றாரு கேளுங்க

ஒருத்தன் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் லேருந்து கிளம்ப இருந்த அரக்கோணம் வண்டியிலே வந்து உட்கார்ந்தான் .
நல்ல மதியான நேரம் புல்லா சாப்பிட்டுட்டு வந்தவனுக்கு வண்டி கிளம்புனவுடனே தூக்கம் வந்துச்சு வந்துச்சா அவன் பெரம்பூர் லே இறங்கனும் அதனாலே ஒரு ஐடியா பண்ணான் என்ன

அவனுக்கு பக்கத்திலே உட்கார்ந்தவன் கிட்டே பெரம்பூர் வந்தா கொஞ்சம் சொல்லுங்க நான் ஊருக்கு புதுசுன்னு சொன்னான் அதுக்கு அவனும் அதனாலென்ன சொல்றேன் னு சொன்னான்

இவன் அப்பாடா னு நிம்மதியா தூங்க ஆரம்பிச்சுட்டான் திடீர்னு வண்டி நிக்கிற சத்தம் கேட்டு கண் முழிச்சான். வண்டி நின்ன ஸ்டேஷன் வில்லிவாக்கம் அடடா ரெண்டு ஸ்டேஷன் தாண்டி வந்துட்டோமே னு பக்கத்திலே இருந்தவன் கிட்டே கேட்டான்
என்ன சார் பெரம்பூர் வந்துடுச்சான்னு
அவன் பெரம்பூர் தாண்டி வந்துட்டோமே என்று சொன்னான்
ஏன் என் கிட்டே சொல்லலைன்னு இவன் கேட்க போக
அவன் சொல்லனும்னு நினைச்சேன் ஆனா நீங்க தூங்கிகிட்டு இருந்தீங்களே
தூங்கினா என்ன எழுப்பி சொல்ல வேண்டியது தானே னு இவன் சொல்ல தூங்குறவங்களை எழுப்பறது பாவம் சார் என்று நிதானமாக சொன்னவனை
பார்த்த இவனது முகத்தில் ஈயாடவில்லை அப்படின்னு சொல்றது பழசு
அதனாலே எறும்பு ஆடவில்லை கொசு ஆடவில்லை இப்படி எது வேணும்னாலும் போட்டு நீங்க படிச்சுக்கலாம். ஹா ஹா

அடுத்து சரவணனோட மனம் கவர்ந்த பாடல் பத்தி சொல்றாரு கேளுங்க



எங்கே என் ஜீவனே.............

படம் உயர்ந்த உள்ளம்

நாயகன் நாயகி கமல் , அம்பிகா

பாடல் வைரமுத்து

இயக்கம் S.P.முத்துராமன்


இந்த பாடல் ஆரம்பிக்கும் போது ஜேசுதாஸ் ஆ...ஆ....ஆ... என்று ராகம்
இசைக்க கூடவே இளையராஜாவின் இசை சாரல் மெல்லிய பூந் தூறலாக ஆரம்பித்து அவரின் இசை மழை நம்மை நனைக்கும் நம் இதயம் வரை
இந்த இசை மழை, நம்மை, மரங்கள் அடர்ந்த ஒரு பசுமை வெட்டவெளியில் நம் துணையுடன் ஊஞ்சல் ஆட விட்டிருக்கும்.

ஜேசுதாஸ் ஜானகி குரல்கள், தரும் சுகானுபவம் என்னவென்றால் தென்றலை தொட்டு மயில் தோகையால் ஊஞ்சல் ஆடும் நம்மை விசிறி விடுவது போல் தோன்றும்.ஒரு அனுபவம்

ராக தேவன் தரும் இந்த இன்பத்தை வர்ணிக்க வார்த்தைகள் புதிதாய் தேட
வேண்டும்

அடுத்து சிறுகதை இதை படிங்க மனசிலே நிக்கிற கதையா இல்லை
ரெண்டுநிமிஷம் பட்டாம்பூச்சி போல் மின்னுட்டு போற கதையான்னு
முடிவு பண்ணுங்க பார்ப்போம்

தீபாவளிக்கு வந்த வி ஐ பி

இந்த தீபாவளிக்கு நம்ம வீட்டுக்கு ஒரு வி ஐ பி யை அழைச்சிட்டு வரபோறேன் என்று சொன்ன கார்த்திக்கை அவன் மனைவி உமா ,மகன், மகள், ஆகியோர் ஆச்சரியமாய் பார்த்தனர்.

உடனே எழுந்து அருகில் வந்த அவன் பையன் லேட்டஸ்ட் பட்டாசு எதுனா வாங்கிட்டு வர போறீங்க அதானே என்றான்

இல்லடா

பின்னே சினிமா பிரபலம் யாராவது டிவி ஷோ மூலமாவீட்டுக்கு வர்றாங்களா இது அவன் மகள்

அதுவும் இல்லை

பின்னே எதை சொல்றீங்க என்ற அவன் மனைவி உமா , ஏங்க நீங்க பாட்டுக்கு யாரவது கேர்ள் பிரண்டை அழைச்சிட்டு வந்து மானத்தை வாங்காதீங்க என்றாள்.

சீ அப்படில்லாம் இல்லே

பின்னே யார் அந்த வி ஐ பி சொல்லுங்க என்று மூவரும்கோரசாய் கத்தவும்

கார்த்திக் அது suspence என்றான் சிரித்து கொண்டே

தீபாவளி முதல் நாள் கார்த்திக் அழைத்து வந்தான் ஏழெட்டு வயதுள்ள

ஒரு சிறுவன் ஒரு சிறுமியை

மூவரும் குழப்பமாய் கார்த்திக்கை பார்க்க

அவன் சொன்னான் .

இந்த தீபாவளி பிறந்த நாள் வரும்போது எல்லோரும் அனாதை ஆசிரமம் போய் ஒரு வேலை சாப்பாடு போடுவாங்க இந்த நடைமுறையில் எனக்கு உடன்பாடில்லை .அவர்கள் அனாதை என்றே முத்திரை குத்தியது போல் தொன்றுகிறது எனக்கு .

எனவே நான் அனாதை ஆசிரமத்தில் இருந்து ஒரு பையன் பெண்ணை

ஒரு வாரத்திற்கு அனுமதி வாங்கி அழைச்சிட்டு வந்துட்டேன் இந்த தீபாவளிக்கு இவங்க தான் நம்ம சீப் கெஸ்ட்

அவங்களும் நம்ம பிள்ளைகள் தான். நல்லா உபசரிக்கணும் நீங்க ஓகே என்ற கார்த்திக்கை பார்த்த அவன் மனைவி உமா உங்களை நினைத்தால் பெருமையா இருக்குங்க என்றாள். கார்த்திக் அவளது தோளை தட்டி கொடுத்தான்.

கார்த்திக்கின் மகன் மகள் இருவரும் உங்களை போலவே எல்லா அப்பா அம்மாவும் இது போல் செய்ய ஆரம்பித்தால் நம் நாட்டில் அனாதையே இல்லாமல் போய் விடுவார்கள் இல்லையா என்றனர்.

ஆம் என்று தலையாட்டினார்கள் கார்த்திக்கும் உமாவும் .

அவர்களின் மகனும் மகளும் அந்த சிறுவர் சிறுமியின் அருகில் சென்று வெல்கம் என்று சொல்லி கை பிடித்து வரவேற்றனர்.

அப்பாடா என்ன முடிஞ்சுடிச்சா ஏதோ என் ரசிகர் சொன்னாரேன்னு வந்தேன்
உங்க எல்லாரையும் மீட் பண்ணதிலே ரொம்ப சந்தோசம் .

நீங்க படிச்சதெல்லாம்

நல்லா இருந்துதா இல்லையா னு அவர்கிட்டே சொல்லுங்க

எல்லாரும் தீபாவளியை அவரவர் இஷ்டபடி கொண்டாடுங்க நான் வரேன்

எங்கள் வீட்டு function இல் இடப்பட்ட கோலங்களை கிளிக்கியது நான்

ஆர்.வி.சரவணன்

செவ்வாய், நவம்பர் 02, 2010

ரஜினி எனும் காந்தம்



ரஜினி எனும் காந்தம்



எந்திரன் படம் வெளியானவுடன் என்னை சுற்றி நடந்தவைகளை பற்றியும் நான் கவனித்ததை பற்றியும் உங்களோடு கொஞ்சம் பகிர்கிறேன்

என் அலுவலகத்தில் படம் வெளியான அன்று அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு நண்பர் மூலமாக நானும் என் நண்பரும் சனி காலை டிக்கெட் பெற்றோம் அந்த நண்பருக்கு நன்றி சொல்ல போன் செய்தால் அவர் அங்கு இல்லை அவருக்கு படம் வெளியான அன்றே டிக்கெட் கிடைத்ததால் அலுவலகத்தில் லீவ் போட்டு விட்டு சென்று விட்டதாக தகவல் வந்தது


நானும் என் நண்பரும் சனி காலை தியேட்டர் சென்றோம். மவுண்ட் ரோடு சரவணபவனில் சாப்பிட்டு விட்டு செல்லலாம் என்று சென்றால் அந்த காலை ஏழு மணிக்கு அவ்வளவு கூட்டம். குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள் தேவி தியேட்டரில் அந்த காலையிலும் ஏழு மணிக்கு கூட்டம் இருந்தது . குடும்பமாக வந்திருந்தவர்கள் தான் ஜாஸ்தி .நாங்கள் சென்ற தியேட்டர் சத்யம் எஸ்கேப் இன்னொரு அலுவலக நண்பரும் வந்திருந்தார்


ஒரு அலுவலக நண்பர் ஒருவர் ராக்கி தியேட்டரில்
காலை நான்கு மணி ஷோ படம் பார்த்து விட்டு வந்தார் அவரிடம் நான் கேட்டதற்கு அவர் சார் குடும்பம் குடும்பமா வந்திருக்காங்க சார் எப்ப எழுந்திருச்சு எப்ப குளிச்சு ரெடியாகி வந்தாங்க என்றே தெரியவில்லை என்றார்சிரித்து கொண்டே .


இன்னொரு நண்பன் தியட்டருக்கு அவ்வளவாக செல்லாதவன் சனி அன்றே குடும்பத்துடன் பார்த்து விட்டு வந்து விட்டான் என்னடா என்றால் நான் பார்க்காமலிருந்தால் நீங்க எல்லாரும் படத்தை பற்றி சொல்லி என்னை நோகடிசுடுவீங்க என்றான்
இரண்டாவது முறை தன பெண்ணை அழைத்து செல்வதற்காக எந்த தியேட்டர் செல்லலாம் என்று யோசனை கேட்டான் .


எனது நெருங்கிய உறவினர் ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும் பெண்மணி பேரன் இருக்கின்றான் அவர்களிடம் கேட்டேன் படத்திற்கு போவீர்களா என்று போவேன் ஆரம்ப ஆர்ப்பாட்டம் முடிந்து பத்து நாள் ஆகட்டும் அப்புறம் தான் போவோம் என்றார். இதுக்கு முன்னாடி என்ன படம் பார்த்தீர்கள் என்று கேட்டதற்கு சிவாஜி என்றார். இருக்கும் பிரச்னை பார்க்கவே டயம் சரியாக இருக்கு என்று அலுத்து கொள்பவர் அவரா இப்படி சொல்கிறார் என்று எனக்கு ஆச்சரியம்


என் அம்மா படத்துக்கு போகலாம் வாருங்கள் என்று சொன்னால் வேண்டாம் டிவி யில் பார்க்கும் படங்களே போதும் என்பார் ஆனால் ரஜினி படம் வரும்போது வருகிறேன் என்பார் இதற்கு முன்பு சிவாஜி படத்துக்கு வந்திருந்தார் இப்போது எந்திரன் படத்துக்கு வந்திருந்தார் .
என் பையன் டார்ச்சர் தாங்க முடியாமல் அடுத்த சண்டே பத்தாம் தேதி டிக்கெட் புக் பண்ண முயன்றேன் எங்கும் கிடைக்கவில்லை . சரி என்று ராக்கி திரை அரங்கம் சென்றேன்.
காலை ஏழரை மணி ஷோ இருப்பதாக சொன்னார்கள். காலை யிலேயே எப்படி வரது என்று தயங்கினேன். டிக்கெட் புக் பண்றவர் என் பக்கம் மானிட்டரை திருப்பி சார் முக்கால் வாசி முடிஞ்சிடுச்சி புக் பண்ண எல்லாரும் பாமிலி மெம்பெர்ஸ் தான் என்றார் .நான் உடனே டிக்கெட் புக் பண்ணி விட்டேன் வீட்டில் எல்லோரும் காலையிலேயே எப்படி என்று தயங்கினர். நான் அது ஒரு புது அனுபவமா இருக்கும் நாம எப்பயாவது தானே படத்துக்கு போறோம் வாங்க என்று அவர்களை சமாதானபடுத்தி அழைத்து சென்றேன்.
திரை அரங்கில் அந்த காலை வேளையில் எங்கு திரும்பினாலும் குடும்ப சகிதம் தான் வந்திருந்தார்கள் .



என்

பையன் சந்தோசத்திற்கு அளவேயில்லை அந்த காலை வேளையில் குடும்பத்துடன் அமர்ந்து பார்த்தது எல்லோருக்கும் ஒரு புது அனுபவமாக தான் இருந்தது .

எதற்கு சொல்கிறேன் என்றால் வாழ்க்கையில் கஷ்டபடுபவர்கள் முதல் நன்றாக இருப்பவர்கள் வரை சிறியோர் முதல் பெரியோர் வரை என்று பெரும்பான்மையானோர் ரஜினி மேல் ஈர்ப்புடன் இருப்பதை காணும் போது இந்த மக்கள் ஆதரவு கடவுள் அவருக்கு கொடுத்த வரப்ரசாதம் என்றே சொல்லலாம்.


புவனா ஒரு கேள்விகுறி படத்தில் ரஜினி பாடும் ராஜா என்பார் மந்திரி என்பார் .........என்ற பாடலில் சுமித்ரா அவர்கள் ரஜினியை பார்த்து பாடுவதாக ஒரு வரி வரும் .


உலகில் உனக்கு சரித்திரம் உண்டு.... என்று


ஆகா இந்த பாடல் வரிகளை உண்மையாக்கிய மனிதன் அல்லவோ இவர்


ஆர்.வி. சரவணன்
*********************************************************************
அடுத்த இடுகை தீபாவளி ஸ்பெஷல்
என்னடா ஓவர் பில்டப் கொடுக்கிறே அப்படின்னு கோவபடாதீங்க
ஹா ஹா
சும்மா ஒரு விளம்பரம்
******************************************************************