செவ்வாய், அக்டோபர் 23, 2012

எங்க வீட்டு கொலு


எங்க வீட்டு கொலு 

எங்கள் வீட்டில் கொலு வைத்திருக்கிறோம் காண  வாருங்கள் 

நண்பர்களே 



கொலுவின்  முன்பு தினம் ஒரு  கோலம் 

  


 கலசம், விநாயகர் மற்றும் குபேரன் 

------


 உலகளந்த பெருமாள், அர்த்தனாரீஸ்வர்,விஷ்ணு துர்க்கை , 
கிருஷ்ணர், சிவன்  மற்றும் தசாவதாரம்  





   கருமாரியம்மன்  ,சரஸ்வதி,நடராஜர் ,
பாண்டுரங்கன்  ருக்மாயி ,
அன்னபூரணி 




உழவர் வாழ்க்கை ,பசு, மான்கள் மண்பாண்டங்கள் 





சாய்பாபா, மீரா ,பொய்கால் குதிரை , கரகாட்டம்  
மற்றும், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை 






முளைப் பாரி 





 மளிகை கடை 






 எங்கள் மகன் ஹர்ஷவர்தன் அமைத்த 
 பூங்கா,





பூங்காவின் உள்ளே 





கொலு லாங் ஷாட் 


 நம் அனைவருக்கும் முப்பெருந்தேவியரின் அருள் கிடைக்கட்டும்  


ஆர் .வி.சரவணன் 

வியாழன், அக்டோபர் 18, 2012

இங்கிலீஷ் விங்கிலீஷ் - ஒரு பார்வை


இங்கிலீஷ் விங்கிலீஷ் - ஒரு பார்வை 





இந்த படம் நான் சென்றதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. ஒன்று இயக்குனரின் முதல் படம் .மிக  நன்றாக இருக்கிறது என்று வந்த விமர்சனங்கள். இரண்டு இங்க்லீஷ் (இது மேலே அவ்வளவு ஈடுபாடா னு கேட்காதீங்க இங்கிலீஷ் க்கும் எனக்கும் ரொம்ப நாளாவே வாய்க்கால் தகறாரு இருக்கு அது தனி பதிவுலே பார்த்துக்குவோம் ) மூன்றாவது இந்த பதிவின் கடைசியில் சொல்றேன்

ஒரு இல்லத்தரசி ஆங்கிலம் தெரியாத காரணத்தால் தன் கணவனிடமும் தான் பெற்ற குழந்தைகளிடமும் அவமானப்பட நேர்கிறது. தன் அக்கா மகள் திருமனத்திற்காக அமெரிக்கா செல்லும் அவர்  அதை போராடி கற்று கொண்டு  எப்படி ஜெயிக்கின்றார் என்பது கதை


கணவன் மற்றும் குழந்தைகளால்  மட்டம் தட்டப்படும் ஒரு பெண்  எப்படி தன்னை உயர்த்தி கொண்டு   என்பதை மிக நேர்த்தியாக வெளிபடுத்திய  விதத்திலும் யதார்த்தமாய் சொன்ன விதத்திலும் சபாஷ் பெறுகிறார் அறிமுக இயக்குனர் கௌரி ஷிண்டே 







அந்த இல்லத்தரசியாக ஸ்ரீதேவி. வயதாகி விட்டதை முகம் உணத்தினாலும் அதெல்லாம் உறுத்தாத வண்ணம் நம்மை அந்த இல்லத்தரசி கேரக்டரில் பன் முகம் காட்டி நம்மை ஈர்ப்பதுடன் வெல்டன் ஸ்ரீதேவி என்றும் சொல்ல வைக்கிறார் 


உதாரணமாக, அவரது பெண் இந்தியாவிலிருந்து போன் செய்து புக் எங்கே வச்சே என்று கடுப்படிக்கும் போது ஆதங்கத்தில், இந்த குழந்தைகளுக்கு அம்மாவை எதிர்த்து பேச யார் உரிமை கொடுத்தது என்று பொருமுவார் அப்போது  சர்வர் என்ன சாப்பிடறீங்க என்று கேட்க உடனே ஆங்கிலத்தில் பேசி ஆர்டர் செய்வதும் , லட்டு தட்டு கீழே விழுந்து சிதற எல்லோரும் சமாதானபடுத்த தன் கனவுகள் சிதைந்தது போன்று நொறுங்கி போன முகத்துடன்  மௌனமாக சமையலறை சென்று ஒரு வேற்று பார்வையுடன் மீண்டும் லட்டு தயார் செய்வார்   பாருங்கள் சூப்பர் இடம் அது .அடுத்து என் பெண்டாட்டி லட்டு செய்யவே பிறந்தவள் என்று சொல்லி விட்டு உன்னை பற்றி புகழ்ந்து சொல்கிறேன் என்று சொல்லும் போது ஸ்ரீதேவி பார்க்கும் பார்வை  
என்று அவரது நடிப்புக்கு தீனி போடும் காட்சிகள் இது போல் நிறைய இருக்கின்றன


அவர்  விமானத்தில் இமிக்ரேசனில் ஆங்கிலம் தெரியாமல் திண்டாடுவது விழிப்பது இதையெல்லாம்  பார்க்கும் போது விமானத்தில் நான் இது போல் திணறியது என் ஞாபகத்துக்கு வந்தது 


அவரது கணவராக  அதில் ஹுஸைன். அவரை முதல் காட்சியில் பார்க்கும் போது என்ன ஸ்ரீதேவிக்கு பொய் இவரை ஜோடியா செலக்ட் பண்ணிருக்காங்க என்று நான் நினைத்தேன். ஆனால் காட்சிகள் செல்ல செல்ல அவரது இயல்பான நடிப்பை பார்க்கையில் குட் செலக்சன் என்று சொல்ல தோன்றுகிறது 


ஸ்ரீதேவி ஆங்கிலம் பயிலும் வகுப்பில் வகுப்பு தோழராக வரும் மேதி கண்களாலேயே ஊடுருவுகிறார். அவரது செல் போனின் மூலம் ஸ்ரீதேவி வகுப்பில் நடைபெறும் பாடத்தை கவனிப்பதாக வரும் சீன டச்சிங் மேலும் ஸ்ரீதேவியின் சக தோழர்கள் வகுப்பறை காட்சிகளை கலகலபாக்குகிறார்கள் 


ஸ்ரீ தேவியின் அக்கா பெண்ணாக பிரியா ஆனந்த் ஸ்ரீதேவியின் உணர்வுகளை புரிந்து கொண்டு உதவி செய்யும் அந்த பெண்  மீது நமக்கு ப்ரியம் தோன்றுவது இயல்பு தான் என்றாலும்  அவரது அழகும் நடிப்பும் இன்னும் அதற்கு துணை புரிகின்றன 


ஆங்கிலம் கற்று கொடுக்கும் மாஸ்டர் டேவிட், அவர்  கட கட வென்று பேசி கிளாஸ் எடுக்கும் அந்த சுறுசுறுப்பை பார்த்தால் , இப்படிப்பட்ட  ஒரு மாஸ்டரிடம் ஆங்கிலத்தை நாளே வாரம் என்ன நாளே நாளில் கூட கற்று கொள்ளலாம் போலிருக்கிறது 


கல்யாணத்தில், என் மனைவிக்கு ஆங்கிலம் பேச வராது  என்று கணவர் சொல்ல  ஸ்ரீ தேவி அவர் கை பிடித்து நான் பேசறேன் என்று சொல்லி எழுந்து தனக்கும் இங்க்லீஷ் தெரியும் என்ற இறுமாப்பில் எல்லாம் பேசாமல் உணர்வுபூர்வமாக மெதுவாக உச்சரித்து அவர் பேசும் ஆங்கிலம் கை தட்டல் பெறும் காட்சி 


நறுக்கு தெறித்தார் போன்ற வசனங்கள் கட்சிகளுக்கு இன்னும் வலிமை  சேர்க்கின்றன 
தன் மனைவி தனியாளாய் நின்று ஆங்கிலம் கற்று கொண்டு விட்டாள்  என்று தெரிந்து கொண்ட அவரது கணவரின் ரியாக்சன் எப்படி இருக்குமோ  என்ன கேட்பாரோ என்று நாம்  ஆர்வமாய் கவனிக்கையில்  ஒற்றை வரியில் இன்னும் என்னை நீ விரும்பறியா என்று அவர் கேட்பது ஒரு சாம்பிள் 



சில நிமிடங்களே வந்தாலும் அஜித் ஆச்சரியம், வரும் போதே கை  தட்டலால் தியேட்டரை 
அதிர வைக்கிறார் . ஒரு சக பயணியாக  எந்த ஒருபந்தாவுமில்லாமல் சிம்பிளான உடையில் அறிமுகமாகி ஸ்ரீதேவிக்கு ஊக்கம் தந்து  என்னை பாருங்க என்னை கூட  தான்  சொன்னாங்க  நான் இப்ப நல்லா பேசறேனா என்று கேட்கும் போது அட ஆமால்ல என்று நாம் சொல்லும் அளவுக்கு படு யதார்த்தம்.



ஒளிப்பதிவு லக்ஷ்மன் ஷிண்டே அமெரிக்கா எப்ப போவோம் என்ற ஏக்கத்தை ஆர்வத்தை நமக்குள் விதைக்கும் கேமரா கோணங்கள் 

பாடல்களில் செய்யாத ஸ்கோரை   பின்னணி இசையில் அமித்ரி தேவ் செய்திருக்கிறார் 






 ஸ்ரீதேவி பிரியா ஆனந்த் தவிர மற்ற நடிகர் நடிகைகள் தமிழுக்கு புதுசு என்பதால்  மட்டும் டப்பிங் படம் என்ற உணர்வை தருகிறது. ஆனாலும்  அவர்கள் அனைவரின் யதார்த்தமான நடிப்பும் இயக்குனரின் நேர்த்தியான உருவாக்கமும்  மற்றும் ஸ்ரீதேவி யும் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை தருகிறார்கள்.


 இங்க்லீஷ் WIN கிலீஷ் 




சரி நான்  இந்த படம் பார்க்க சென்றதற்கான மூன்றாவது காரணம் என்ன என்பதை சொல்லி விடுகிறேன் அது ஸ்ரீதேவி 


ஆர் .வி.சரவணன் 



செவ்வாய், அக்டோபர் 16, 2012

ஸ்வீட் காரம் காபி (16-10-2012)




ஸ்வீட் காரம் காபி 
________________________________
(16-10-2012)




சாட்டை படம் பார்த்தேன்.  நாம் செய்திதாளில் கேள்விப்படும்  அநியாயங்களை ஒருங்கே கொண்ட  ஒரு அரசு பள்ளியை, அங்கு புதிதாக வந்து சேரும் ஒரு நேர்மையான ஆசிரியர் தனது புத்திசாலி தனமான நடவடிக்கைகளால்  சிறந்த பள்ளியாக மாற்றுகிறார்  என்பதை சொல்கிறது கதை.

நேர்மையான இயற்பியல் ஆசிரியராக   இந்த படத்தில் சமுத்திரகனி   
அவரது  கதாபாத்திரமும் அவரது நடிப்பும்   கை குலுக்கி  பாராட்ட தோன்றுகிறது.  ஜூனியர் பாலையா நேர்மையான தலைமை ஆசிரியராக நல்ல குணசித்திர வேடத்திலும் ,தம்பி ராமையா அநியாயங்கள்செய்யும் உதவி தலைமை   ஆசிரியராக வருகிறார்கள்.  தம்பி ராமையா சூப்பர் யா என்று சொல்லுமளவுக்கு வில்லன் நடிப்பில் பாஸ் ஆகிறார் என்றாலும் ஓவர் ஆக்டிங் காரணமாக  கொஞ்சம் பெயிலும் ஆகிறார் .(அதற்காக விளையாட்டு போட்டியை தடுப்பது, கத்தி வைத்து கொண்டு விழாவுக்கு வருவது இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.)  

பள்ளி என்றால் மாணவர்கள் சேட்டைகள், காதல் இல்லாமலா  மாணவன் மாணவி காதலும் இப் படத்தில் உண்டு . என்று அதுவும் பருவ வயதில் வரும் ஒரு நிகழ்வு தான்  அதை கடந்து தங்களுக்கென்று இருக்கும் பொறுப்பை உணர்ந்து படிக்க வேண்டும் என்பதை அவர்களே உணரும் வண்ணம் தந்திருப்பது நன்றாக இருக்கிறது.  மாணவர்கள் க எழுத்து சேர்த்து பேசும் விதம் நாம் படித்த  காலத்தை முன்னிறுத்துகிறது.  


 படம் ஆரம்பித்து எல்லா கேரக்டர்கள் அறிமுகமான பிறகு அடுத்து என்ன என்ற ஒரு வெற்றிடம் தோன்றுவது போல் இருக்கிறது . சமுத்திரகனி மீது புகார்  வந்த பின் படம் வேகமெடுக்கிறது . திரைகதையில் இன்னும் கொஞ்சமே கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் (அதாவது ஒரே வருடத்திலேயே எல்லாவற்றையும் திருத்தி விடுவதாக காட்டுவது ) படம்  இன்னும் சிறப்பு பெற்றிருக்கும்.

 முதல் படத்தில் இப்படி ஒரு சப்ஜெக்ட்  எடுத்து கொண்ட இயக்குனர் அன்பழகன் பாராட்டப்பட  வேண்டியவர். மாணவர்கள் மாணவிகள்  ஆசிரியர்கள் பெற்றோர்கள்   என்று அனைவருக்குமான   message படத்தில் உண்டு ( பெஸ்ட் ஒன் என்று சொல்கிறோமோ  இல்லையோ   குட் ஒன்  என்று உறுதியாய்   சொல்லலாம் )

------




பாலம் கட்றது உறவுக்கு உதவும்  சுவர் எழுப்புவது பிரிவுக்கு தான்
வழி வகுக்கும் முடிந்தவரை நீங்க  எதிலும் பாலம் கட்ரவனா  இருங்க
அப்படின்னு ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் பாக்யாவில் கே.பாக்யராஜ் சொல்லியிருக்கார் . இது அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களின் பார்வைக்கு இதற்கான விளக்கம் கீழே தந்திருக்கிறேன் (அப்படி சுவர் எழுப்பியிருந்தா கூட அதற்கு மேலே ஒரு பாலம் கட்டிட்டா சுவர் பயனற்றதாகிடும்) 

------


கிரேசி மோகன்   தன் ஹாஸ்யமான வசனங்களால்  நம்மை சிரிக்க 
வைப்பவர் அவர் வசனங்கள், நாடகங்கள் எனக்கு   பிடித்த ஒன்று .
சமீபத்தில் யு டியுபில்  நான்  உலா வந்து   கொண்டிருந்த போது 
கிரேசியை கேளுங்கள் என்ற தலைப்பில்   ஒரு ப்ரோக்ராம் 
இருந்தது .வாசகர்களின் கேள்விகளுக்கு மோகன் தனக்கே உரிய 
நகைச்சுவையுடன் பதிலளித்திருக்கிறார் ஒரு சாம்பிள் இதோ 

இறைவன் நல்லவங்களை தான் அதிகம் சோதிக்கிறான் ஏன் இப்படி ?

கஜானாவை தான் சோதனை போடுவாங்க.  குப்பை தொட்டியை யார் சோதனை போட போறாங்க


கிரேசியை கேளுங்கள் நிகழ்ச்சியை பார்க்க லிங்க்  இங்கே 

------

ஞாயிறு அன்று கும்பகோணத்தில்  எலெக்ட்ரிகல்ஸ் கடைக்கு பல்ப் 
வாங்க  சென்றிருந்தோம் (அந்த பல்பு இல்லே )  அப்போது மின்சாரம் 
இல்லை எனவே பல்ப் செக் செய்து தர வேண்டும் என்பதால் கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டனர். பரவாயில்லை செக் பண்ணாம 
கொடுங்க என்று கேட்டேன். முடியாதுஎன்று மறுத்து  விட்டார்கள். சரி 
என்று மற்ற வேலைகளை முடித்து கொண்டு பின்பு சென்று பல்ப் வாங்கி  வந்தோம் இதில் என்ன கொடுமை னா  எலெக்ட்ரிகல்ஸ் கடையில் சரியான கூட்டம் இருந்தது (என்னமோ மின்சாரத்தையே விக்கிற மாதிரி)

------

செய்திகள் சில வரிகளில்

கேரளாவை விட தமிழகத்தில் மலையாளிகள் பாதுகாப்பாக உள்ளனர் கேரள முதல்வர்-செய்தி  
(வந்தாரை வாழ வைப்பவர்கள்   நாங்க ) 


காவிரியில் தண்ணீர் விட மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா எதிர்ப்பு - செய்தி 

இரு நாடுகளுக்கு (மாநிலத்துக்கு) இடையே உள்ள உறவை பலபடுத்தும் விதமாய் தான்  ஒரு வெளியுறவு துறை அமைச்சரின் பேச்சும் செயல்பாடும்  இருக்க வேண்டும்


------



போட்டோ கார்னர் 




                         நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க  நடந்தாய் வாழி காவேரி 


ஆர்ப்பரித்து வரும் காவிரியை என் செல் போனில் கிளிக்கினேன் 



ஆர்.வி.சரவணன் 


வெள்ளி, அக்டோபர் 12, 2012

செல்லமாய்....



செல்லமாய்....


என்னவள் 
வருகையில் 
கலைந்த 
என் 
கேசத்தை 
அவசரமாய் 
சரி 
செய்து கொள்கிறேன் 
அவள் 
செல்லமாய் 
கலைக்க 
வேண்டும் 
என்பதற்காகவே 



ஆர்.வி.சரவணன் 

ஞாயிறு, அக்டோபர் 07, 2012

ஸ்வீட் காரம் காபி ( 08-10-2012)


ஸ்வீட் காரம் காபி
_________________________
08-10-2012


தாண்டவம் படம் பார்த்தேன். படத்தில் விக்ரம் கொலைகள் செய்வதில் கொஞ்சமேனும் நகம் கடிக்க வைக்கும் அளவுக்கு கூட  பரபரப்பு இல்லாதது, மேலும் விசாரணை செய்யும் நாசரும் ஒவ்வொரு கொலைக்கும் சந்தானத்தை அழைத்து கொண்டு வந்து  விசாரிப்பதோடு கடமை முடிந்து விட்டது போல் இருப்பதாக தோன்றுவது,   அடுத்த காட்சிகள் இப்படி தான் நகரும் என்று நம்மை அனுமானிக்க வைப்பது இதெல்லாம் படத்திற்கு மைனஸ்.  விக்ரம், அனுஷ்கா மற்றும் உயிரின் உயிரே பாடலும் அது படமான விதமும் ஒளிப்பதிவும் படத்திற்கு பிளஸ்  (படம் முடிந்து வெளி வரும் போது ஒரு படம் பார்த்த எபெக்ட்டே இல்லை )

------


ஹைக்கூ வின் மூன்று  குணாதிசயங்கள்  நேரடி அனுபவம்,உவமை உருவகம் கூடாது ,மூன்றாவது வரியில் ஒரு திருப்பம் ,கணையாழி யின் கடைசி பக்கங்களில் ஹைக்கூ கவிதை எழுதுவது பற்றி   திரு.சுஜாதா அவர்கள் 

------




காவிரி நீர் பிரச்னைலே வழக்கம் போல் கர்நாடகா பந்த் ஆர்ப்பாட்டம் என்று முரண்டு 
பிடிப்பது பார்க்கிறப்ப ஒரு சின்ன விஷயம் எனக்கு ஞாபாகம் வருது இரு நாட்கள் முன்பு 
நான் ஹோட்டலில் சாப்பிட அமர்ந்தேன் இலையும் போட்டாச்சு கூட்டு பொரியல்,சாம்பார், சாதம்,என்று அனைத்தும் வந்து விட்டது ஆனால் தண்ணீர் கொண்டு வந்து வைப்பவர் வராததால் எதையும் சர்வர்களால் பரிமாற முடியவில்லை அப்போது என் எதிர் இருக்கையில் அமர்ந்து சாப்பிட தொடங்கியவர் இதை கவனித்து அவருக்கு வைத்திருந்த தண்ணீரை என் பக்கம் நகர்த்தி நான் இன்னும் குடிக்கலை நீங்க இலையில் துடைச்சிக்குங்க என்றார் எப்படியும் ஒரு நிமிடத்திலாவது அந்த தண்ணீர் வந்திருக்கும் ஆனால் அது வரை என்னை காத்திருக்க வேண்டாம் என்று அந்த ஒரு டம்ளர் தண்ணீர் தந்த அந்த நல்ல மனிதரின் மனசு ஆர்ப்பாட்டம்  பண்றவங்களுக்கு எப்ப வரும்.(இந்திய நாடு நம் வீடு இந்தியன் என்பது நம் பேரு....இருப்பதை பகிந்து உண்போம்....)

------










பாடல் சிறப்பாக உள்ளது உண்மையில் தொடர்ந்து முயன்றிருந்தால் உச்சம் தொட்டிருப்பீர்கள் வாழ்த்துக்களுடன்

என்று தீதும் நன்றும் பிறர் தர வாரா  ரமணி சார் எனது சினிமா பாடல் பற்றிய பதிவிற்கு கருத்துரை இட்டிருந்தார். அதை பார்த்த பின் அன்று முழுவதும் (மோதிர கையால் குட்டு வாங்கின மாதிரி) ஒரு வித சந்தோச உணர்விலேயே இருந்தேன். அலுவலகத்தில் எல்லோரும், என்ன சந்தோசமா இருக்கீங்க எதாவது குட் நியூஸ் என்று கேட்குமளவுக்கு இருந்தேன் என்றால் பார்த்துக்குங்க.நல்லதா ஒரு நாலு வார்த்தை கேட்கிறப்ப கிடைக்கும் எனெர்ஜி என்னை மிகவும் வியக்க வைத்தது. (அந்த நாள் எனக்கு இனிமையாய் ஆனதற்கு முழு பொறுப்பும் திரு. ரமணி சார் அவர்களை சாரும். ) படம் நன்றி வீடு திரும்பல் மோகன் சார் 

------

நான் சென்னையில் தங்கி இருக்கும் வீட்டில் எலி தொல்லை ஜாஸ்தி. நான் இருக்கும் வரை வராது. நான் அலுவலகம் கிளம்பி சென்றவுடன் அது என் ரூமை அபகரித்து கொண்டு விடும் ஒரு பொருளை கூட விட்டு வைக்காது.  ஒரு நாள் நான் அலுவலகம் கிளம்ப தாமதமாகி விட்டது. கிச்சன்  பக்கம்  சென்ற போது அங்கே அந்த எலி வந்திருந்தது என்னை பார்த்தது 
எனது அடுத்த நடவடிக்கை என்ன என்று பார்த்து அதை வைத்து அங்கிருந்து வெளியேற 
அது  தயாராய் இருந்தது.அப்போது  அது என்னை பார்த்த பார்வை  நானே டயத்துக்கு   வந்திட்டேன் நீ ஏண்டா டயத்துக்கு ஆபீஸ் போகமே இங்கே  சுத்திகிட்டுருக்கே னு கேட்டது போல் இருந்துச்சு (எலி மை  பாச்சிலர் பிரெண்ட் )


-------


பதினான்கு மணி நேரம் மின் வெட்டால் வீட்டில் போட்ட இன்வேர்ட்டர் கூட  மின்சாரம்   கிடைக்காமே திணர்ற நிலைமை வந்தாச்சு   (போற போக்கை பார்த்தா இன்வேர்டர்ட்டர்க்கும்  இன்வெண்டர் வைக்க வேண்டி  வருமோ)


------


போட்டோ கார்னர் 


இது கும்பகோணம் அருகில் உள்ள ஐராவதேஸ்வர் கோவிலில் நான்  எடுத்தது 
இது எண்ணுறு  ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்டது 



------


சுந்தர பாண்டியன் படத்தில் தன் இயல்பான நடிப்பால் முத்திரை பதித்த லட்சுமி மேனன் இந்த வார ஸ்வீட் காரம் காபி யில் இடம் பெற்றிருக்கிறார் 




ஆர்.வி.சரவணன் 


வியாழன், அக்டோபர் 04, 2012

ஒரு ஊர்லே ஒரு தேவதை....





ஒரு ஊர்லே ஒரு தேவதை....

ஒரு ஊர்லே ஒரு தேவதை இருந்துச்சாம். மனிதர்கள் நடமாட்டம் இருக்கிற காட்டு பகுதியில் வசிச்ச அது ஒரு நல்ல தேவதை   அங்கே போற வர்ற மனிதர்கள் பேசுறதை உன்னிப்பா கவனிக்கும். அப்படி தான் ஒரு நாள் ஒரு செல்வந்தரும் அவர் கிட்டே வேலை பார்க்கிற  ஒரு வேலையாளும் அந்த பக்கம் வந்தாங்க வேலையாள் பெரிய மூட்டை சுமக்க முடியாம திணறி தூக்கிட்டு வந்தான் கூட வந்த அந்த செல்வந்தர் சீக்கிரம் நட என்று விரட்டி கொண்டே இருந்தார் (வண்டியிலே வச்சு எடுத்துட்டு போனா காசு நிறைய கொடுக்கணுமே னு அவர் தன்னோட வேலையாள் வச்சே இந்த சுமைய தூக்க வச்சிட்டார்)  வேலையாள் முதலாளி கிட்டே "இந்த சம்பளத்திலே என்னாலே குடும்பம் நடத்த முடியலே  இந்த மாசத்திலேருந்து சம்பளம் கொஞ்சம் கூட ஏத்தி கொடுங்க" னு  கேட்டான். அதுக்கு அவர் "நீ பார்க்கிற வேலைக்கு இந்த  சம்பளமே ஜாஸ்தி பணத்துக்கு எல்லாம் ஆசைபடாதே" என்று அதட்டினார். இதை பார்த்த தேவதை அந்த செல்வந்தருக்கு சரியான பாடம் புகட்டனும் னு முடிவு பண்ணிச்சு. 

அடுத்த நாள் அந்த செல்வந்தர் அந்த வழியா தனியா வர்றப்ப அவர் கிட்டே ஒரு சின்ன பையை கொடுத்தது.  பிரிச்சு பார்த்தா அதிலே பொற்காசுகள் நிறைய இருந்துச்சு அவர் சந்தோசமா இதெல்லாம் எனக்கானு கேட்க அதுக்கு தேவதை உனக்கில்லே ,உன் வேலையாள் கஷ்டபடறதாலே  இதை தந்திருக்கேன் கொண்டு போய் உன் வேலையாள் கிட்டே  கொடுத்துடு னு சொல்லுச்சு. இவர் சரி என்று வாங்கிகிட்டவர் தன் வேலையாள் கிட்டே அதை கொடுக்காமே தானே வச்சுகிட்டார். இருந்தும் அவருக்கு  வேலையாளை பார்க்கிறப்ப உறுத்தலா இருந்ததால்  அதிலிருந்து நாலு காசுகள் மட்டும் எடுத்து அவன் கிட்டே கொடுத்து, கஷ்டம்னு சொன்னியே அதனாலே தரேன் வச்சிக்க இன்னும்  நீ நேர்மையா  என் கிட்டே ஒழுங்கா வேலை பார்க்கணும்  னு சொன்னார். காசு வாங்கிய வேலையாளுக்கு சந்தோஷம் தாங்க முடியாமே. முதலாளி என் உழைப்புக்கு நீங்க கொடுத்த கௌரவம் இது நீங்க காலாலே இட்ட வேலையை தலையாலே செய்வேன் என்று சொன்னான். முதலாளிக்கு,  பொற்காசுகள் எல்லாத்தையும் நாமலே எடுத்துகிட்டோம் வேலையாளையும் திருப்திபடுத்தி காலம் முழுக்க நமக்கு விசுவாசமா இருக்க வச்சிட்டோம்னு ரொம்ப சந்தோசமாகிட்டார் 

 அடுத்த நாள் அவர் அந்த பையை ஆசையா திறந்து பார்க்கிறப்ப அதிலே காசுக்கு பதிலா வெறும் கூலாங் கற்கள் தான் இருந்துச்சு அவருக்கு  கோபம் வந்துடுச்சு பையை எடுத்துட்டு நேரா தேவதைய பார்க்க போனாரு அதுகிட்டே நீ கற்களை கொடுத்து ஏன் ஏமாத்தினே னு கேட்டாரு அதுக்கு தேவதை வேலையாள் அல்லவா இதை வந்து கேட்கணும் நீ எதுக்கு வந்தே னு கேட்டுச்சு. அவர் தடுமாறி ஆசைப்பட்டு தானே காசுகளை எடுத்துகிட்டதா சொன்னார் வேலையாளுக்கு சேர வேண்டியதை நீ வச்சிகிட்டதினலே அது கல்லா மாறிடுச்சு னு தேவதை சொல்லுச்சு. அவர் உடனே இதை திரும்ப காசா மாத்தறதுக்கு நான் என்ன பண்ணனும்னு கேட்டாரு . வேலையாள் கிட்டே கொடுத்துடு காசா மாறிடும் னு சொல்லவே சரி கண்டிப்பா கொடுத்துடுறேன் எனக்கும்  கொஞ்சம் காசு கொடேன் னு கேட்டாரு அதுக்கு தேவதை சிரிச்சுகிட்டே வேலையாள் 
கிட்டே கொடுத்து காசா மாறினவுடன்   ரெண்டு பேரும் பாதி பாதி யா எடுத்துக்குங்க னு சொல்லுச்சு அவர் சந்தோசமா வேலையாள் கிட்டே போய் மற்ற எதையும் சொல்லாமே தேவதை நமக்கு  காசு கொடுத்து எடுத்துக்க சொன்னிச்சுன்னு அவன் கையில் கொடுத்தாரு அவன் கைக்கு போனவுடனே அது பொற் காசுகளா மாறிடுச்சு.

 அவன் அதை அவர் கிட்டே திரும்ப கொடுத்து, " தகுதிக்கு மேலே ஆசைபடறதும் அடுத்தவங்க சம்பந்தமே இல்லாமே இலவசமா கொடுக்கறதையும்  வாங்கறது தப்பு  தேவதை கிட்டேயே திருப்பி கொடுதுடுங்க " னு சொன்னான் அவர்,  "முட்டாள் போல் பேசாதே  இதை நீ வாங்கிக்க   நீயும்  ஒரு முதலாளி ஆகிடுவேன்னு சொன்னாரு அவன் நீங்க கொடுக்கிற சம்பளத்திலே நானும் என் குடும்பமும் சந்தோசமா இருக்கோம் இதுக்கு மேல் என்ன சந்தோசம் இருக்குது மேலும்  நீங்க இந்த காசுகளை நீங்களே வச்சிருக்கலாம் ஆனால்  எனக்கும் பாதி கொடுக்கணும்னு நினைச்ச உங்க நல்ல மனசுக்காக  இந்த காசுகள் எல்லாத்தையும் நீங்களே எடுத்துக்குங்க என்றான் செல்வந்தருக்கு சம்மட்டியால் அடிச்சது போல் இருந்தது 

திரும்பவும் தேவதைகிட்டே  போய் அந்த பையை  திருப்பி கொடுத்தார் அவன் சொன்னதை சொன்னார்.தேவதை சிரிச்சுகிட்டே சொன்னுச்சு உன் வேலையாள் எப்படிப்பட்டவன் னு உனக்கு தெரியபடுத்த  தான் நான் இப்படி செஞ்சேன் . நீ போய் ஒரு முதலாளி எப்படி உண்மையா இருக்கணுமோ  அப்படி   நீ அவனுக்கு நடந்து காட்டு னு சொன்னது . 


பதிவுலக நண்பர் நிஜாம் பக்கம் பல் சுவை பக்கம் நிசாமுதீன் என்னை தேவதை பற்றிய தொடர் பதிவு எழுதுமாறு அழைத்திருந்தார் http://nizampakkam.blogspot.in/2012/08/angel4th-year.html அவருக்கு என் நன்றி. நிசாமுதீன் சார் எழுத கொஞ்சம் தாமதமாகி விட்டது மன்னிக்கவும் இதோ எழுதி விட்டேன்.

ஆர்.வி.சரவணன் 

திங்கள், அக்டோபர் 01, 2012

அஹிம்சையின் நாயகன்


அஹிம்சையின் நாயகன் 


 




"அந்நிய நாட்டிடம் இருந்து  
எம்மையும்  நாட்டையும்  
அஹிம்சையின் மூலம் 
போர் தொடுத்து 
எமை மீட்டு 
சுதந்திர காற்றை 
சுவாசிக்க வைத்தீர்கள். 
இதோ 
மீண்டும்   
நம் நாட்டுக்குள் 
உள்ளவர்களாலேயே  
நாங்களும்  நாடும் 
தவிப்புக்குள்ளாகி
இருக்கும் நிலை  
எம்மையும் நாட்டையும் 
காப்பாற்ற 
மீண்டும்
அவதரிப்பீர்களா "   



என் மகன் ஹர்ஷவர்தனிடம்  வரைந்து கொடு என்று சொன்னவுடன் பத்து  நிமிடங்களில்  வரைந்து   கொடுத்த ஓவியம்  



இன்று காந்தியடிகள் 144 வது பிறந்த தினம். நான் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது 
வருடம் 1989 நடத்திய கையெழுத்து பத்திரிகையில் காந்தி படத்தை போட்டு மேற் சொன்னவாறு  குறிப்பிட்டிருந்தேன். இந்த வரிகள் இக் காலத்திற்கும் பொருந்துகிறதே 
 என்பதை நினைக்கும் போது ஹே ராம் என்றே சொல்ல தோன்றுகிறது  


ஆர்.வி.சரவணன்