வியாழன், அக்டோபர் 29, 2015

அகம் புறம் - குறும்பட அனுபவங்கள் 3







அகம் புறம் - குறும்பட அனுபவங்கள் 3




அகம் புறம் குறும்படம் வெளியாகி விட்டது. நண்பர்களின் விமர்சனங்களை படித்த போது, அவர்கள் கேட்டிருக்கும் சில கேள்விகளுக்கு விளக்கங்கள் அளிக்கலாம் என நினைக்கிறேன்.  அதற்கு முன் இந்த படத்தை பார்க்காதவர்கள் பார்த்து விட்டு வந்து படிக்குமாறு வேண்டுகிறேன்.

https://www.youtube.com/watch?v=4OFO4SwfNn0

பார்த்து விட்டீர்களா , சரி விசயத்துக்கு வருவோம்.

அகம் புறம் கதையின் ஒன் லைன் கிடைத்தது எப்படி தெரியுமா ?

ஒரு நாள் நான் சென்னையில் எனது வீட்டை திறந்த போது உள்ளே ரேடியோ ஓடி கொண்டிருந்தது. நான் ரேடியோவை நிறுத்தாமல் சென்ற படியால் 
தொடர்ந்து  மூன்று நாட்கள் வரை ஓடி கொண்டிருந்தது. சத்தம் குறைந்து இருந்த படியால் வெளியில் யாருக்கும் கேட்கவில்லை அப்படி கேட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கையில் உருவானதே இக் கதை.

முதலில் அகம் புறம் கதையை எப்படி எழுதியிருந்தேன் என்பதை பார்க்கலாம்? 

டிவி சேனலில் வேலை பார்க்கும் தீபக்குக்கு (கோவை ஆவி ) அவரது சேனலில் வித்தியாசமாக ஏதாவது செய்து கொண்டு வாருங்கள் என்ற அசைன்மென்ட் கொடுக்கபடுகிறது. அவர் ஊருக்கு போயிருக்கும் சூழலில் தன் வீட்டுக்குள் கேட்கும் குரல்கள் சத்தங்களை கொண்டு சுற்றியிருப்பவர்கள் என்ன முடிவுக்கு வருகிறார்கள் என்பதை அறிய அவரே யாரும் அறியா வண்ணம் வீட்டுக்குள்  வந்து விட்டு ஒரு சிறுவனை வைத்து பூட்டி விட்டு, உள்ளே இருந்த படி வித வித சத்தங்களையும் எழுப்பி விடுகிறார். ஒவ்வொருவரும் ஆளுக்கொரு முடிவுக்கு வருகிறார்கள் கடைசியில் அவர்கள் போலிசை அழைக்க அவர் வந்து கதவை திறந்து பார்க்கும் போது  தீபக் இருக்கவே அவனை விசாரிக்கிறார்கள்.

அவர்  சொல்வதை நம்ப மறுப்பவர்கள் உள்ளே  இருந்த படி எப்படி உன்னால் எங்களை கவனிக்க முடிந்தது என்று கேட்க அவர் கதவருகில் தான் பொருத்திருக்கும் காமெராவை காண்பிக்கிறார். படம் முடிகிறது. இது தான் நான் முதலில்  முடிவு செய்தது. இருந்தும் இதை வேறு மாதிரி முயற்சிக்கலாமே என்று யோசித்தேன்.

  கோவை ஆவி ஒன்றுமே செய்யவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளே அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது என்பதும் அதை வைத்து மற்றவர்கள் ஆளுக்கொரு முடிவுக்கு வருகிறார்கள் என்று மாற்றி எழுதுகையில் தான் நிறைய கேள்விகள் வரிசை கட்டி நின்றன. ஒவ்வென்றுக்கும் பதிலளித்து திரைக்கதை எழுதி முடித்தேன்.அது தான் இப்போது நீங்கள் பார்த்திருக்கும் இந்த குறும்படம்.


கோவை ஆவி கேரக்டர் 

அடுத்து கோவை ஆவி கேரக்டரில்  ஒரு புதுமுகம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து துளசிதரனின் உறவினர் பிஜு என்றவரை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தேன். பெங்களூரில் வசிக்கும் அவருக்கு  நடிப்பில் ஆர்வமுண்டு. ஆனால் படப்பிடிப்புக்கு 15 நாள் முன்னே  அவரால் கலந்து கொள்ள இயலாத நிலையை தெரிவித்தார். என்ன செய்வது என்று தடுமாறி, பேப்பர் பாய் கேரக்டரில் நடிக்கவிருந்த கோவை ஆவியை இந்த கேரக்டருக்கு மாற்றி விட்டு பேப்பர் பாய் கேரக்டரில் அவரது சகோதரர்
 கார்த்திக்கை நடிக்க வைத்தேன். கோவை ஆவி தான் உள்ளே இருக்கிறார் என்பது சஸ்பென்சாக இருக்கட்டும் என்று தான் நாங்கள் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படங்களை வெளியிடவில்லை.(தொப்பி வைத்து வெளியாகி இருக்கும் படமும் போஸ்டருக்காக எடுத்தது தான்)

 இந்த கேரக்டரில் கோவை ஆவி பிக்ஸ் ஆனவுடன் அதிக கவனம் செலுத்தினார். உதாரணத்திற்க்கு ஷூட்டிங் முதல் நாள் இரவு தூங்காமலே விழித்திருந்து (படம் பார்த்து, புக் படித்து ) பயண களைப்பில் இருப்பவரின் முக பாவத்தை வெளிபடுத்த முயற்சி மேற் கொண்டார். அவருக்கு நன்றி 





அடுத்து துளசிதரனின் மனைவியாக நடித்தது அவரது மனைவி உஷா அவர்களே தான். அவருக்கு மலையாளம் மட்டுமே தெரியும் என்பதால் அவரது கேரக்டரை மௌன விரதம் இருப்பதாக அமைத்தேன். வீட்டு உரிமையாளர் எனும் போது அவரது மனைவி என்று ஒரு கேரக்டர் வேண்டும். என்பதற்காகவே இந்த கேரக்டர் சேர்த்தோம். கணவன் எப்போதுமே சிறு விசயத்தையும் பெரிதாக எடுத்து கொள்பவர் தான் அலுவலகம் கிளம்ப வேண்டும் என்பதால் அவரை தொந்தரவு செய்கிறார். அதை இன்னும் தெளிவாக சொல்லாமல் விட்டு விட்டேன்.



இந்த படத்தில் கதாபாத்திரங்கள் நிறைய இருக்கிறது ஒரு குறும்படத்திற்கு இவ்வளவு கேரக்டர் தேவையில்லை

உண்மை தான் எடுத்து கொண்ட கதை கொஞ்சம் திரில் கலந்தது. துளசிதரன் தான் மெயின் கேரக்டர். கொஞ்சம் கொஞ்சமாக அவர் மீது பயத்தை ஏற்றுவதன் மூலம் சுவாரசியம் கூட்ட வேண்டும். மற்ற கேரக்டர்கள் அவர் மீது பயத்தை ஏற்றுகிறார்கள். அதற்கு தான் பேப்பர் பாய் தனக்கு தோன்றும் யோசனைகளை அடுக்குகிறார். ஒரு வீட்டில் பிரச்னை எனும் போது அந்த தெருவில் இருக்கும் முக்கியஸ்தர் யாராவது வர வேண்டும். அதற்கு  தான் ஆரூர் மூனா. அந்த கேரக்டர். சாதாரணமாக வந்து மிரட்டி செல்வது போல் இல்லாமல் இன்னும் கொஞ்சம் டென்சனை ஏற்ற வேண்டும். சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பதால் நண்பனின் தங்கை இங்கிருக்கிறதா என்று தேடி கொண்டு வந்து கலாட்டா செய்கிறார். இல்லை எனும் போது அவர் கிளம்புகிறார். அடுத்து பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் போலீசை வரவழைத்து கதவை திறந்து பார்க்கும் போது விசயம் தெரிய வருகிறது , இதில் நான் எந்த கேரக்டரையும் திணிக்கவில்லை.அரசன் கேரக்டர் இவரிடம் ஏதேனும் விஷயம் இருக்கிறதோ என்ற எண்ணத்தை ஆடியன்ஸ் மனதில் தோற்றுவிப்பதற்காக அமைக்கப்பட்டது. அதை சாதாரணமாக காண்பிக்காமல் எது நடந்தாலும் டென்சன் ஆகாமல் இருப்பவராக காட்டி கடைசியில் அவரே டென்சன் ஆகி விடுகிறார் என்று முடித்திருந்தேன். இங்கே  டென்சன் ஆன  துளசிதரன் கடைசியில் இதற்காகவா டென்சன் ஆனோம் என்று நினைக்கும் படியாக கதை முடிகிறது.

அரசன் 
அவரது குரலுக்காகவே இந்த கேரக்டரில் அவரை செலக்ட் செய்திருந்தேன்.
படபிடிப்பின் பெரும்பாலான நேரங்கள் அவர் இருக்கையிலேயே அமர்ந்திருக்க வேண்டி வந்தது. ஏனெனில் எல்லா காட்சிகளுமே அவர் பின்னே இருக்க வேண்டும் என்பதால். அவரும் சலிப்பு காட்டாமல் தொடர்ந்து ஒத்துழைத்தார்.

மாஸ்க் 

மாஸ்க் பற்றி சொல்ல வேண்டும் என்றல் கம்பில் மாட்ட பட்டிருக்கும் மாஸ்க்  உள்ளிருக்கும் நாய் செய்யும் அலப்பரையால் பாலகணேஷ் பார்க்கும் அந்த நேரத்தில் வெளி வருகிறது. பின் கீழே விழுந்து விடுகிறது.

 நாய் சத்தம் எழுப்பியிருக்க வேண்டுமே  என்று ஒரு கேள்வி வந்தது. அந்த சத்தம் கேட்டிருந்தால் அது தான் உள்ளே இருக்கிறது என்று தெரிந்து விடும் என்பதால்  தான் பெண் குரல் ஒன்று  அதை அழைப்பதாக சொல்லியிருந்தோம்.

துளசிதரன் பாலக்காட்டில் இருந்து மனைவியுடன் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார். படத்தின் ஆரம்பத்தில் இருந்து படம் முடியும் வரை  எனக்கு பக்க பலமாக  இருந்தார் என்றால் அது மிகையல்ல 

சகோதரி கீதா ரங்கன் கதை எழுத ஆரம்பித்ததில் இருந்து படம் முடிந்து தயாராகும் வரை முழு ஈடுபாட்டுடன் பணியாற்றினார். படபிடிப்பு அட்டவணை, டப்பிங், ரிகர்சல் எடிட்டருக்காக அலைந்தது, சப் டைட்டில் எழுதியது என்று ஏகப்பட்ட வேலைகளை சளைக்காமல் மேற் கொண்டார். 
நன்றி சகோதரி 


பாலகணேஷ் சாரை அப்படியே காண்பிப்பதை விட மீசையுடன் காண்பிக்கலாம் என்று தான் மீசை வாங்கி வந்து ஓட்ட வைத்து நடிக்க வைத்தோம். சார், அவ்வபோது அதை மேனரிசமாக நீவி கொண்டதில் கொஞ்சம் கலாட்டா வாகி விட்டது. படபிடிப்பு நடந்த இரு நாட்களும் அவர் கூடவே இருந்தார். கூடவே போஸ்டர்கள் சிலவற்றையும் தனி ஆர்வமெடுத்து செய்து கொடுத்தார். நன்றி சார். 

ஆரூர் மூனா அவரை பார்க்கையில் எல்லாம் எனக்கு இவர் நடிக்கலாமே ஏன் முயற்சி செய்ய வில்லை என்று தோன்றும். நடிக்கிறீர்களா என்று கேட்ட போது எனக்கு அதெல்லாம் வராது சார் என்று தயங்கினார். நீங்க வாங்க நான் பார்த்துக்கிறேன் என்று சொன்னேன். கதை படித்ததும் நடிக்க ஒப்பு கொண்டார். அதன் படியே வந்து நன்றாக நடித்து கொடுத்தார். அவர் என் மீது நம்பிக்கை வைத்து நடிக்க ஒப்பு கொண்டதற்கு நன்றி.

கார்த்திக் சரவணனுக்கு நடிப்பதில் ஆர்வமிருந்தது. ராஜேஷ் கேரக்டருக்கு யாரை தேர்ந்தெடுக்கலாம் என்று யோசிக்கையில் தான் இவர் சரியாக இருக்கும் என்று தோன்றவே அவரை நடிக்க வைத்தேன். 



சிறுவர்களை நடிக்க வைப்பதில் கஷ்டப்பட வேண்டி வருமோ என்று நினைத்திருந்தேன் ஆனால் அவர்கள் பயங்கர ஷார்ப்.  ரக்சித்  அழைத்த  போது வந்து நடித்து விட்டு பின் விளையாட சென்று விட்டார். அபிஷேக் (கிப்ட் கொண்டு வருபவன்) முதல் நாள் ஷூட்டிங் முடிந்த போது அவ்வளவு தானா என் டயலாக்ஸ் என்று கேட்டான். நாளையும் இருக்கிறது என்ற போது அடுத்த நாள் நான் அவன் வீட்டுக்கு படபிடிப்புக்கு வரும் போதே அதே உடையுடன் தயாராக காத்திருந்தான்.

அடுத்து என் தம்பிக்கும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆரூர் மூனா வுக்கு உதவியாளர் கேரக்டர் இருந்ததால் அதில் அவரை நடிக்க வைத்தேன்.பந்து விளையாடும் சிறுமி அவரது மகள் ஜெயப்ரியா தான்.





என் மகன் ஹர்ஷவர்தன் அவ்வபோது பல்ராம் நாயுடு குரலில் மிமிக்ரி செய்வதை பார்த்த போது அதை பயன்படுத்தி கொள்ளலாமே என்று தோன்றவே அவனை நடிக்க வைத்தேன். இந்த படத்தின் போஸ்டர்கள் பெரும்பாலனவை என் ஐடியா படி அவன் உருவாக்கியது தான்.





இந்த படத்தின் படபிடிப்பு நடந்தது மொத்தம் ஒன்றரை நாட்கள் தான் இன்னும் ஒரு நாள் படப்பிடிப்பு என்று இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக புட்டேஜ் மற்றும் நடிப்பை கொண்டு வந்திருக்க முடியும் 

அடுத்து ஒரு படத்திற்கு மிக முக்கியம் இசை மற்றும் எடிட்டிங். இன்னும் கொஞ்சம் எனது பட்ஜெட் அனுமதித்திருந்தால்  நேரம் அனுமதித்திருந்தால் டெக்னிகல்  வகையில் இன்னும் கொஞ்சம் மேம்பட்டிருக்கும் இப் படம்.




நாம் என்ன எழுதுகிறோமோ அதை அழகான விசுவலாக்குவது என்பது மிக பெரிய சவால். அதை கற்று  கொள்வதில் தான் இப்போது முட்டி மோதி கொண்டிருக்கிறேன்.

ஒரு சிம்பிளான கதைக்கு முயற்சிப்பதை விட சிக்கலான கதையை செய்து பார்க்கலாமே என்ற ஆர்வம்  தான் என்னை இந்த படத்தை எடுக்க வைத்தது.


ஒரு படைப்பை பற்றி, தள்ளி நின்று நமட்டு சிரிப்புடன் விவாதிப்பதற்கு பதில் நம்மிடமே வந்து ஏன்யா இப்படி பண்ணி வச்சிருக்கே என்று கேட்பது அழகானது.  படைப்பாளிக்கும் அது பயன் தரும்.  நண்பர்கள் அனைவருமே படம் பற்றிய கருத்துக்களை  பகிர்ந்து கொண்டதில் 
எனக்கு மிக்க மகிழ்ச்சி.

குறும்படம் பண்ண வேண்டும் என்ற எனது ஆசை நதியில் இறங்கி நீச்சல் கற்று கொள்வது போல். கரையில் நின்ற படி யார் கற்று தருவார்கள் என்று காத்திருப்பதற்கு பதில் நாமே கற்று கொள்வோம் என்று தான் குதித்து விட்டேன். அப்படி குதித்தவுடன் பயத்தில்  தத்தக்கா என்று கை கால்களை அசைப்போம் அல்லவா .அது தான் எனது சில நொடி சிநேகம். நதியின் போக்கு அறிந்து அதன் வேகத்தை உணர்ந்து கொண்டு நீந்த ஆரம்பித்திருப்பது தான்  இந்த அகம் புறம். இனி நான் நன்றாக நீச்சல் கற்று கொள்ளலாம். இல்லை நதியின் வேகத்தில் அடித்து கூட செல்லப்படலாம். இல்லை நீச்சலே வேண்டாம் என்று கூட கரையேறி விடலாம். இதில் எது நடக்கும் என்பது காலத்தின் கையில் இருக்கிறது. 

எதுவாயிருப்பினும் முயற்சிகளை தொடர வேண்டும் குறைகளை எல்லாம் நிறைகளாக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.

 எனக்கு ஊக்கமளிக்கும் வலையுலக  மற்றும் முக நூல் நண்பர்களுக்கு 
 நன்றியும் அன்பும் என்றென்றும். 

ஆர்.வி. சரவணன்

ஞாயிறு, அக்டோபர் 25, 2015

அகம் புறம் குறும்பட அனுபவங்கள் -2







அகம் புறம் குறும்பட அனுபவங்கள் -2

நண்பர் செங்கோவியிடம்  ஸ்க்ரிப்டை அனுப்பிய போது, படித்து விட்டு நாளை சொல்கிறேன் சார் என்று சொல்லியிருந்தார்.  ஆனால் அன்று இரவே படித்து விட்டு  பதில் அனுப்பினார். நல்லா எழுதிருக்கீங்க சார். க்ளைமாக்ஸ் மட்டும்  கொஞ்சம் இயல்பா இருந்தா நல்லாருக்கும் என்று கூறி அவரது யோசனையும் தெரிவித்திருந்தார். அவர் சொன்னதையும்  கருத்தில் எடுத்து கொண்டு படபிடிப்பிற்க்கு தயாரானேன்.

இதில் வரும் கதாபாத்திரங்கள் மொத்தம் 15 பேர். (ஒரே டிரஸ் தான் ) இரண்டே நாட்கள் தான் படப்பிடிப்பு என்பதால் ஒவ்வொருவருக்கும் எப்போது படப்பிடிப்பு என்பதை குறிப்பிட்டு ஒரு அட்டவணை  தயாரித்தோம் அதன் படி அந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று முடிவு  செய்திருந்தோம். 
(ஆனால் அது முடியவில்லை என்பது வேறு விசயம் ) எல்லோரையும் சரி வர நடிக்க வைத்து விட முடியுமா, பெரிய ரிஸ்க் எடுக்குறோமோ  எதுனா சொதப்பிடுமோ என்றெல்லாம் கேள்விகள் துளைக்க ஆரம்பித்தன .ஏனெனில் யாராவது ஒருவர் படப்பிடிப்புக்கு வரவில்லை என்றாலும் கதை கந்தல் ஆகி விடுமே  ஆனால் அனைவருமே கலந்து கொண்டு சிறப்பாக சிறப்பாக ஒத்துழைத்தார்கள்.  ஒவ்வொருவரின்  காஸ்டியூம்  என்ன என்பதை அனைவருக்கும் தெரிவித்திருந்தோம்..அதன்படியே வந்திருந்தார்கள் .

ஒளிப்பதிவாளர் அஸ்வின்  சில இடங்களில் லைட்டிங் பத்தாது் எனவே லைட் ஆர்டர் பண்ணிடுங்க என்று சொல்லியிருந்தார்.  முந்தைய படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜோன்ஸ்  கொடுத்த முகவரி கோடம்பாக்கத்தில் இருந்தது. ஆவியும் கீதாவும் அங்கே சென்று லைட் வாடகைக்கு ஆர்டர்  செய்து விட்டு வந்தார்கள். அதை நான் படபிடிப்புக்கு முதல் நாளிரவு சென்று வாங்கி கொண்டு வந்தேன் (என்னா வெயிட்) 

படப்பிடிப்பு அன்று காலை சிவக்குமார் மற்றும் செல்வின் சீனு இவர்களுக்கு போன் செய்து வர சொல்லலாம் என்று நினைத்திருந்தேன்.நான் போன் செய்யும் முன்பே  சிவக்குமார்  போன் அடித்து விட்டார். "என்ன சார் இன்னிக்கு ஷூட்டிங்காமே வாழ்த்துக்கள்" என்று சொன்ன போது "ஆமாம் நானே உங்களுக்கு போன் செய்ய இருந்தேன்.கண்டிப்பாக வாருங்கள்" என்றேன் செல்வினுக்கும் போன் செய்து தெரிவித்தேன். இருவருமே  வந்திருந்தார்கள். 

படப்பிடிப்பு ஆரம்பமானது. முக்கிய பிரச்னை என்னவென்றால் படப்பிடிப்பு நடந்த அந்த வீடு இரண்டு தளங்கள் கொண்ட வீடு. குறுகலான படிக்கட்டுகள். ஒருவர் தான் செல்ல முடியும் இதில் காமெராவை வைத்து கொண்டு படப்பிடிப்பு நடத்துவது மிக பெரிய சவாலாகவே  இருந்தது.கீழ் படிக்கட்டுக்கு சென்று அங்கிருந்த கோணத்தில் எடுக்க வேண்டும் பின் மேல் படிக்கட்டுக்கு வந்து அங்கிருந்து கோணம் பார்க்க வேண்டும். நடு நடு நடுவே அங்கே வீட்டில் வசிப்போர் வருவார்கள் அவர்கள் நகர்ந்து செல்லும் வரை பொறுமை காக்க வேண்டும். அவர்களுக்கு  சிரமம் ஏற்படாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். எப்படியும் அன்று 25 பேர் அந்த வீட்டில் இருந்தோம் என்றால் வீடு எப்படி இருந்திருக்கும் என்று பார்த்து கொள்ளுங்கள்.இப்படியாக முதல் நாள் படப்பிடிப்பை முடித்தோம் இரண்டாவது நாள் படப்பிடிப்பு தொடர்ந்தது. ஒளிப்பதிவாளர் அஸ்வின் என்னுடன் நன்றாக ஒத்துழைத்தார்.  (அவரது கேமரா CANON 70 D) படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்த பின் அடுத்து எடிட்டிங் வேலைகள் ஆரம்பமானது 

எடிட்டருக்காக  தான் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியதாகி விட்டது. (ஒரு மாத காலம் ) நான் ஒரு பக்கமும்  கீதாமேம்  மற்றும் ஆவி மற்றொரு பக்கமுமாக எடிட்டரை தேடினோம் .அப்போது தான் குறும்படங்களில் பணியாற்றி கொண்டிருக்கும்  வினோத் என்ற எடிட்டர் அறிமுகமானார். எடிட்டிங் தொடங்கியது. 


அடுத்து டப்பிங்  தொடங்கியது . ஞாயிறு ஒரே நாள்  தான் . எல்லோருக்கும் அட்டவணை போட்டு கொடுத்து அதன் படி  அவரவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வரும் படி சொல்லியிருந்தோம். அனைவரும் அட்டவணையின் படி அனைவரும் வந்திருந்து ஒத்துழைத்தனர். துளசிதரனின் டப்பிங் காக பாலக்காடு சென்றோம். விடுமுறையில் இருந்தவர் இதற்காகவே அவர் பாலக்காடு வந்து டப்பிங் முடித்து கொடுத்தார் 



அடுத்து காதல் போயின் காதல் படத்தில் பணி புரிந்த இசையமைப்பாளர் திரு. ரவி அவர்களே இந்த படத்திலும் இசைக்கு ஒப்பந்தம் செய்திருந்தோம்.  இருவருமே அலுவலகங்களில் பணி புரிவதால் மாலை வேலைகள்  மற்றும் ஞாயிறு தான் உட்கார்ந்து இசை கோர்ப்பு வேலைகளை கவனிக்க முடிந்தது..ஒரு வழியாக அதுவும் முடிந்து எடிட்டரிடம் பைனல் கட்டுக்கு வந்து விட்டது. 

இதற்கிடையில் இந்த படத்திற்கு டீசர் ஒன்றை நாமே கொஞ்சம் முயற்சி செய்து பார்ப்போமே என்ற ஆர்வத்தில் என் மகன் ஹர்ஷவர்தனிடம்  நான் ஐடியா சொல்ல அவனும் ஆர்வமுடன் அமர்ந்து டீசர் ரெடி செய்து கொடுத்தான். அதற்கான இசைக்கு இணையத்தில் தேடிய போது கிடைத்த ட்யூன் ஒன்று நன்றாக இருக்கவே அதையே பொருத்தி பார்த்தோம். நண்பர்களிடம் காண்பித்த போது அனைவரும் இதையே டீசரா போட்டுடுங்க சார் ரொம்ப நல்லாருக்கு என்றனர். சரி என்று அதையே வெளியிட்டு விட்டோம். 

agam puram teaser link

இந்த படத்தின் கதாபாதிரங்களுக்கு பொருத்தமான நபர்களை தேடி அலையும் வாய்ப்பே இல்லை. இதில்  நடித்த அனைவருமே நம்  இணைய நண்பர்கள் என்பது படத்திற்கு கூடுதல் பிளஸ்.    ஒரு கேர்ரக்டர்க்கு மட்டும் மட்டும் துளசிதரனின் உறவினர் பையனை ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் கடைசி நிமிடத்தில் விருப்பமிருந்தும் அவரால் வர இயலாது போகவே வேறு ஆள் தேட வேண்டி  வந்தது. கோவை ஆவி தன் சகோதரரை பற்றி சொல்லவே  அவரை ரிகர்சலுக்கு அழைத்தோம். அவர் பெயர் கார்த்திக். கேரக்டருக்கு செட் ஆவாரா என்ற தயக்கம் எனக்கு எனக்கு இருந்தது. ஆனால் அவரோ என்னை என்னனு நினைச்சீங்க என்பது   போல் ரியாக்சன் காட்டினார். கூடவே " சார் நான்  இன்னொரு டயலாக் சேர்த்து பேசவா"  என்று அனுமதி கேட்டு ஆர்வமுடன் நடித்து கொடுத்தார்.





இன்னும் நண்பர்களை பற்றி சொல்ல வேண்டியிருக்கு. அதுக்குள்ள படம் ரீலீஸ் தேதி  வந்துருச்சே.(அக்டோபர் 26 ) பரவாயில்ல நாளை   அகம்  புறம் படம் வெளி வருது. படத்தை பார்த்துடுங்க .மிச்சத்தை பற்றி நாளை பேசுவோம் 

ஆர்.வி.சரவணன் 


வியாழன், அக்டோபர் 22, 2015

அகம் புறம் – குறும்பட அனுபவங்கள்




அகம் புறம் – குறும்பட அனுபவங்கள்

குறும்படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தவுடன் நான் எடுத்து கொண்ட சப்ஜெக்ட் வேறு. இருந்தும் முன் அனுபவம் இல்லையாதலால்  முதலில் ஒரு ஐந்து நிமிடம் ஓட கூடிய அளவில் ஒரு படம் பண்ணி பார்த்துடுங்க என்ற நண்பர்களின் அறிவுரை சரி என்று படவே, அவசரத்தில் நான் எடுத்த குறும் படம் தான் சில நொடி சினேகம். வெளிப்புற படப்பிடிப்பில்   கிடைத்த அனுபவங்கள்,  அடுத்த படம் எடுக்கும் போது  வெளில கேமராவை வச்சி ஒரு ஷாட் கூட எடுக்காத அளவுக்கு ஒரு கதை பண்ணனும் என்ற முடிவுடன் பேனாவை (சரி கீ  போர்டை) எடுக்க வைத்தது. அப்போது கிடைத்த ஒன் லைன் தான் இதோ இப்போது அகம் புறம் என்ற குறும் படமாகி இருக்கிறது.

இந்த படத்தின் கதை முடிவாகி திரைக்கதையை  எழுதி முடித்து படித்த போது எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. கதையை தோசையை திருப்பி போடுவது போல் போட்டு வேறு ஓர் முறையில் முயற்சி செய்து பார்த்தேன். (இந்த தொடர் முடியும் போது இதை பற்றி விரிவாக குறிப்பிடுகிறேன் ) இந்த முயற்சி  நன்றாக இருந்தாலும் நிறைய இடங்களில் கேள்விகளை  எழுப்பின. நண்பர் கிரியிடம் அனுப்பி படிக்க சொன்னேன். அவருடன்,அரசன், கோவை ஆவி சகோதரி கீதா,மற்றும்  துளசிதரன் போன்றோரும்  இதே கேள்விகளை என்னிடம் கேட்டிருந்தனர். அந்த கேள்விகளுக்கு பதிலளித்து திரைக்கதை மற்றும் வசனத்தை நிறைவு செய்த பின், இப் படத்தில் நடிக்க ஒப்பு கொண்டிருந்த நண்பர்கள் பாலகணேஷ் சார், ஆரூர் மூனா, கார்த்திக் சரவணன் போன்றோருக்கு அனுப்பி படிக்க சொன்னேன். அவர்களும் படித்து விட்டு ஓகே சொல்லவே அடுத்து படப்பிடிப்புக்கான இடம் தேட ஆரம்பித்தோம். 

கீதா மேம் அவரது வீட்டுக்கு பக்கத்தில் இருந்த ஒரு வீட்டை காண்பித்தார். அங்கு சென்று பார்த்த போது அந்த வீடு கதைக்கு செட் ஆகவில்லை. வேறு வீடு தேடி கொண்டிருக்கையில் தான் எனது அலுவலக நண்பர் தேவராஜ் அவர்களின் வீடு இந்த ஸ்கிரிப்ட் டுக்கு பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. நண்பரிடம் கேட்ட போது உடனே ஓகே சொல்லி விட்டார். (என் எழுத்துக்களை அவ்வபோது படித்து அது சரி இது சரியில்லை என்று உடனே சொல்லி விடுபவர். எனது முன்னேற்றத்தில் அவர் காட்டும் ஈடுபாடு எனக்கு ஒரு ஊன்று கோல் எனலாம்.) அவர் ஓகே சொல்லி விட்டார் என்றாலும் அவரது வீட்டில் உள்ளவர்கள் இதை எப்படி எடுத்து கொள்வார்கள் என்பது தெரியாததால் அவரது அம்மா, மனைவி, மற்றும் தம்பிகளையும் ஒரு வார்த்தை கேட்டு விடுவது நல்லது என்று அவரது வீட்டுக்கு சென்று விசயத்தை சொன்னேன். அவர் அம்மா சொன்ன பதில் எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது.

"இது உன் வீடுப்பா. எங்க ஷூட்டிங் எடுக்கணுமோ எடு. ஷூட்டிங் முடியும் வரை நாங்க வேணும்னா வெளில உட்கார்ந்துக்குறோம்" என்றார். அவர் தம்பிகளும் ஆர்வமாய் தலையசைத்தார்கள். நண்பரின் மனைவியிடம் "வீட்டுக்குள்ள எல்லாம் ஷூட்டிங் எடுக்க வேண்டியிருக்கு. உங்களுக்கு ஒன்றும் தொந்தரவில்லையே" என்ற போது  அதற்கு அவர் சொன்ன பதில் இன்னும் எனக்கு ஊக்கத்தை தந்தது.

"அண்ணே. நீங்க நல்லா வரணும் அது தான் எங்களுக்கு முக்கியம். நல்ல படியா படத்தை எடுங்க " என் தயக்கமெல்லாம் மறைந்து போய் படப்பிடிப்புக்கு தயாரானேன்.  அரசன் கோவை ஆவி மற்றும் கீதா ஒளிபதிவாளர் அஸ்வின் எல்லோரும் இடம் பார்க்க வந்திருந்தனர். "இடம் ஓகே தான். இருந்தும் கேமரா வைக்க இடம் பத்துமா தெரியலையே" என்றனர். அஸ்வின் ஓகே சார் பண்ணிடலாம் என்று சொன்னவுடன் ஷூட்டிங்கிற்கு தேதி குறிக்கப்பட்டது. இருந்தும் என் அலுவலக வேலைகள் என்னை நெருக்க ஆரம்பித்தது. எனவே படப்பிடிப்பை தள்ளி வைக்கும் நிலைக்கு ஆளானேன். நண்பர்கள் உற்சாகமாக காத்திருந்த வேலையில் தள்ளி வைத்து விட்டோமே என்ற கவலை என்னை சூழ்ந்தது. 

துளசிதரன் "ஷூட்டிங் தள்ளி போறது நல்லதுக்குன்னு எடுத்துக்குங்க.பீல் பண்ணாதீங்க" என்றார். அவர் சொன்னது சரி தான். ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டதால் அதிக வருத்தம் அடைந்தாலும் அதில் ஓர் நன்மை இருந்தது .திரைக்கதை இன்னும் கொஞ்சம் மெருகேறியது. வசனங்கள் இன்னும் தன்னை கூர் படுத்தி கொண்டன. எல்லோரும் படம் எடுக்கறேன்னு விளம்பரம் பண்ணீங்களே என்னாச்சு என்று கேட்க ஆரம்பித்தனர். 



கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனவுடன் ஆகஸ்ட் மாதம் 15, 16 
சனி ஞாயிறு அன்று ஷூட்டிங் என்று முடிவு செய்தோம். அதை நோக்கி எங்களது வேலைகளை தொடங்கினோம். படப்பிடிப்புக்கு இன்னும் சில நாட்கள் இருக்கையில் எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அதாவது இந்த படத்தின் திரைக்கதை வசனத்தை  இதில் பங்கேற்றிருக்கும் நண்பர்கள் தவிர வெளியில் யாருக்கேனும் கொடுத்து படிக்க வைத்து அவர்களின் கருத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது. 



இப்படி ஒரு எண்ணம் தோன்றியவுடன் என் நினைவுக்கு வந்தவர் நண்பர் செங்கோவி. அவரை சாட்டிங்கில் தொடர்பு கொண்டு கொஞ்சம் தயக்கத்துடனே கேட்ட போது அவர், "அனுப்புங்க சார் படிச்சிட்டு சொல்றேன்" என்றார் அவர் படித்து விட்டு சொன்னது என்ன ? இன்னும் இதில் நடிக்கும் நண்பர்களுடன் ஆன கிடைத்த அனுபவங்கள் என்று உங்களுக்கு சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது. அவற்றை நாளை பகிர்ந்து கொள்கிறேன். 

ஆர்.வி.சரவணன் 


செவ்வாய், அக்டோபர் 20, 2015

ஸ்வீட் காரம் காபி




ஸ்வீட் காரம் காபி

டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு  காட்சியில்  மட்டும் இதை அதிகமாக  காண முடிந்தது.நான் ரசித்த அந்த காட்சியை பற்றி இங்கே குறிப்பிடுகிறேன்.

நயன்தாராவை கொல்ல திட்டமிட்டு ஆள் அனுப்பி வைக்கும் அரவிந்த்சாமி, (இது 
ஒரு பக்கம்), அதே நேரத்தில் தன் மனைவியை கொல்லவும்  திட்டமிட்டு கிளம்பி வீட்டுக்கு வருகிறார். (இது இன்னொரு பக்கம்.) ஜெயம் ரவி, தான் பெருமூச்சு  விட்டால் கூட  வில்லனுக்கு  எப்படி தெரிந்து விடுகிறது என்பதை உணர்வதும் அப்போது தான். (இது முன்றாவது பக்கம் )  நயன்தாரா எப்படியும் இன்று ரவி காதலை சொல்லி விடுவார்  என்று  ஆசையுடன் அவரை பார்க்க வருகிறார் . (இது நான்காவது பக்கம் ) இப்படி நான்கு வித டென்ஷன்களையும்  (மலை உச்சிக்கு நம்மை கொண்டு சென்று நிறுத்தி விடுவது போல்)  நம்மீது நன்றாக ஏற்றி விடும் இயக்குனர் (நம்மை திடீரென்று கீழே தள்ளி விடாமல்) அந்தக் காட்சியை சப்பென்று முடித்து விடாமல் டென்சன்களை ஒவ்வௌன்றையும் அழகாக  இறக்குகிறார். எப்படி ?

நயன்தாராவை கொல்ல வேண்டாம் என்ற முடிவுக்கு  அரவிந்த்சாமி வருவது, அடுத்து தன் மனைவியை கொல்ல வேண்டாம் என்ற முடிவையும் எடுப்பது.  இந்த இரண்டு முடிவையும் அவர் எடுக்க காரணமே ரவி நயன்தாராவை திட்டுவது போல் நாடகமாடுவதால் தான்.  ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் நயன்தாரா  அழுகிறாரே என்ற டென்சனை எப்படி நீக்குகிறார்?  ரவி எதுவும் பேசாமல் சூழ்நிலையை பற்றி சொல்லி i love you என்று  போர்டில் எழுதி காண்பிக்க, நிலைமை புரிந்த  நயன்தாரா, டாக்டர் வரும் வரை கட்டி பிடிச்சிக்கலாமா  என்றெழுதி விட்டு ஆசையாய் ரவியை பார்க்கிறார். விசிலடிக்க தெரியாதவரை கூட விசிலடிக்க கற்று கொண்டாவது  விசிலடிக்கலாமா என்று ஆர்வத்தை தருகிறது இந்த காட்சி .டென்ஷனுடன் ஆரம்பிக்கும் இந்த காட்சி ரொமாண்டிக்காக முடியும் போது  பாடல் ஒன்று குறுக்கிடுகிறது என்றாலும் அதை ரசித்த படியே மன்னிக்கிறோம்.


ரவி தான் தன் எதிரி என்று தெரிய வந்தவுடன்  தொடர்ந்து ரவியின் 
நடவடிக்கைகளை அரவிந்த்சாமி வாட்ச் செய்கிறார். அது போலவே தான் நமக்கும் 
அவர் திரையில் வர ஆரம்பித்த நிமிடத்திலிருந்து  கடைசி காட்சி வரை அவரையே கவனிச்சிட்டிருக்க தோணுது. வெல்கம் பேக் அரவிந்த்சாமி.

வசனங்களின் மூலம்  பல இடங்களில் கை தட்டல்களை வாரி கொள்கிறார்கள் சுபா.டைரக்டர் மோகன் ராஜாவுக்கு  ஒரு வார்த்தை .இந்த படத்தை வேற மொழில ரீமேக் பண்ண நிறைய பேர் இருக்காங்க. ஆகவே தொடர்ந்து இது போல் படங்கள் தமிழில் கொடுங்க. ஏன்னா  தனி ஒருவன் உங்களுக்கு கொடுத்திருப்பது மிக பெரிய அங்கீகாரம்.



யக்குனர் பற்றி சொல்றப்ப தான் நான் இப்ப படிச்சுகிட்டிருக்கிற புத்தகம் ஞாபகத்துக்கு வருது.  இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் திரும்பி பார்க்கிறேன் புத்தகம் தான் அது .லைப்ரரியிலிருந்து எடுத்து வந்து படித்து கொண்டிருக்கிறேன். அவர் சினிமாவில் நுழைய பட்ட சிரமங்களை கொண்டே சிகரமாகியிருப்பதை எல்லாம் நேரில் பார்த்த மாதிரி ஒரு பீலிங். படிக்கிறதுக்கு 
செம இண்டரெஸ்டிங்காக இருக்கு. கல்கியில் தொடராக வந்த போது சில அத்தியாயங்கள் படித்திருந்தாலும், இப்ப புத்தகமா படிக்கிறப்ப எந்த பக்கமும் திரும்பாம படிக்க வச்சிருக்கு 
இந்த திரும்பி பார்க்கிறேன். கூடவே ஸ்ரீதர் சார் படங்கள் எல்லாத்தையும் ஒரு ரவுண்டு  பார்த்துடணும்னும்  தோணுது. அவரது படங்களில் இன்றைக்கும் எனது மிகப் பெரிய விருப்பம் காதலிக்க நேரமில்லை.



னோரமா அவர்களை பற்றி நினைத்தால் என் நினைவுக்கு வருவது மூன்று படங்களும் அதில் அவர் நடித்த கதாபாத்திரங்களும் தான் . ஒன்று தில்லானா மோகனம்பாள் நாயனத்தில நீங்க வாசிச்சா தான் அந்த சத்தம் வருதா என்ற அப்பாவி ஜில் ஜில் ரமாமணி, சம்சாரம் அது மின்சாரம்  கம்முனு கிட என்ற அதட்டல் கண்ணம்மா, சின்ன கவுண்டரில்  நீ போயிட்டு வாப்பா அம்மா நான் இருக்கேன்ல என்று பஞ்சாயத்தில் இறுக்கமாய் அமர்ந்திருந்த கிராமத்து அம்மா .எந்த கதாபாத்திரமானாலும் எப்படி இவர் தன்னை பொருத்தி  கொள்கிறார் என்ற ஆச்சரியம் தொடர்ந்து கொண்டிருக்கும் போதே அவர் மறைந்து விட்டார். அவரை திரையுலகமும்  சினிமா ரசிகர்களும் மட்டும் மிஸ் பண்ணல. இன்னும் அவர் நடிக்க வேண்டிய கேரக்டர்கள் (அப்படி எதுனா மிச்சமிருக்கா என்ன ) கூட  மிஸ் பண்ணிருச்சுனு தான் சொல்ல தோணுது 





மேடவாக்கத்தில் நாங்கள் குடியிருந்தது 1989 வருடத்தில். தினமும் காலை அலுவலக நேரத்தில் பேருந்துக்கு காத்திருத்தலும், நிறுத்தத்தில் நிற்காமல் தள்ளி சென்று நிற்கும் பேருந்தை  ஒடி சென்று பிடித்து ஏறுவதும், பேருந்து  சில நேரம் ப்ரேக் டௌன் ஆகி நிற்கையில் அடுத்த பேருந்துக்கு காத்திருந்த வேலைகள்,  வேலை தேடி அலைந்த நேரங்கள்,  அங்குள்ள குமரன் தியேட்டரில் (அப்போது  அது டூரிங் டாக்கிஸ் .இப்போது அது பெரிய தியேட்டர் ஆகி விட்டது) ஒவ்வொரு ஞாயிறு மாலையும் குடும்பத்துடன் எந்தப்படமாக இருந்தாலும் சென்று பார்த்து வருவது  இவையெல்லாம் சென்ற வாரம் அங்கே சென்றிருந்த போது ஞாபகத்துக்கு வந்தது. வேலைக்கு சென்று வருவதில் இருந்த சிரமங்கள் மற்றும் சிட்டி வாழ்க்கையில் ஐக்கியமாகும் ஆர்வம் இதெல்லாம் 1993 ல் சிட்டிக்கு எங்களை இடம் பெயர வைத்து விட்டது. இப்போது  மேடவாக்கத்தை பார்க்கையில் "என்னடா சிட்டிக்கு போறேன்னுட்டு போனியே.இப்ப நான் எப்படி சிட்டி மாதிரி இருக்கேனா"  என்று என்னை பார்த்து அது நக்கலடிப்பதாய்  ஒரு பிரமை. எழுந்தது. கொஞ்சம் கஷடப்பட்டாலும்  அங்கேயே இருந்திருக்கலாம். காணி நிலம் வாங்கியிருந்தால் இன்று ஒரு லட்சாதிபதியாகவும்  ஆகியிருக்கலாமோ  என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை. 




ந்த  வருடம் பதிவர் திருவிழா புதுகோட்டையில் நடைபெற்றது. என் மகனையும் அழைத்து கொண்டு சென்றிருந்தேன். நண்பர் பதிவர் கரந்தை ஜெயக்குமார் எப்போது வருகிறீர்கள்  என்று கேட்டு,  தஞ்சாவூரில் இருந்து நாங்கள் வேன் எடுத்து கொண்டு செல்கிறோம் வாருங்கள் என்று அழைத்திருந்தார். அவர் மற்றும் அவரது ஆசிரிய நண்பர்கள் மற்றும் அவர் குடும்பத்துடன் கிளம்பினோம்.வீட்டிலிருந்து தயாரித்து கொண்டு வந்த காலை டிபனை கொடுத்து
 உபசரித்தார்கள். பதிவர் திருவிழவில் ஜாக்கி சேகர், மதுமதி, கலாகுமரன், அரசன்,சீனு, கோவை ஆவி, பாலகணேஷ் சார், முரளிதரன் சார், துளசிதரன், சகோதரி கீதா, மணவை ஜேம்ஸ், சசிகலா,எழில், டி டி சார் , முத்துநிலவன் சார், ஜம்புலிங்கம் சார் , கரந்தை சரவணன் சார் ,தமிழ் இளங்கோ என்று அனைவரையும் சந்தித்தது பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. விழாவில் எழுத்தாளர் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். கேள்விகளுக்கு பதிலளித்தார். அவரை சந்திப்பதும் அவரது பேச்சை கேட்பதும்  இதுவே முதல் முறை.




மாலை கிளம்புகையில் நான் பஸ்ல போய் கொள்கிறேன் என்று ஜெயக்குமார் சாரிடம் சொன்ன போது வேன்லயே போயிடலாம் இருங்க என்று சொன்னார். அது போலவே அழைத்து சென்று தஞ்சாவூர் பேருந்து நிலையம் வரை கொண்டு வந்து விட்டு வழி  அனுப்பி வைத்தார்.  சார் இப்ப ப்ளாக் ல நீங்க எழுதறதில்லையே என்று அக்கறையுடன் விசாரிப்பார் .பதிவர் திருவிழாவில் அவர் எழுதிய வித்தகர்கள்  புத்தகம் வெளியீடு நடைபெற்றது. அவரது புத்தகங்களின்   வெளியீடு தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.





ங்க கும்பகோணத்துல பரணிகா தியேட்டர் ரொம்ப பேமஸ்.பல பெரிய படங்கள் அங்க ரிலீஸ் ஆகியிருக்கு. ஆகிட்டிருக்கு. எனது கல்லூரி நாட்களில் நிறைய படங்கள் அங்க பார்த்திருக்கேன். காலேஜ் டேஸ்ல என் பெரும்பாலான நேரங்கள் அந்த தியேட்டர் ல தான் இருந்திருக்கேன். எங்க வீடு இருந்த இடத்திலிருந்து ரொம்ப பக்கம் தான் இந்த தியேட்டர். அவ்வளவு ஏன் காலேஜ் போறதுக்கு கூட அதை தாண்டி தான் போகணும் . என் திரை கனவுகளை வளர்ந்தது கூட இங்கே தான்.சென்ற வாரம் அந்த தியேட்டர்ல படம் பார்க்க போயிருந்தப்ப, அங்க இதுக்கு முன்னாடி  உபயோகிச்ச ப்ரொஜெக்டரை ஷோ கேஸ்ல  வச்சிருந்ததை  பார்த்தேன்.அங்கிருந்த ஊழியர் கிட்டே  அனுமதி வாங்கிட்டு போட்டோ எடுத்தேன். தியேட்டர் அரம்பித்த நாள் முதலாய் 1996 வரை இது தான் இருந்தது என்றும் சொன்னார்கள். ஏதோ ஒரு  தியேட்டர் பத்தி சொல்றான்னு சுவாரசியம் காட்டாமே இருந்துடாதீங்க. சினிமா ரசிகர்கள் உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச தியேட்டர் தான் இது. ஆமா பாஸ் .பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துல தல  தளபதி படங்கள் ஒரே தியேட்டர்ல ரீலீஸ் ஆகியிருக்கு னு ஆர்யாவும் சந்தானமும் படம் பார்க்க வருவாங்களே. சந்தானம் கூட  அடி வாங்குவாரே அந்த  தியேட்டர் இது தான்.




அகம் புறம் குறும் படம் இசை கோர்ப்பு வேலைகள் முடிந்து  பைனல் கட்டுக்கு எடிட்டரிடம் வந்து விட்டது.ஒரு கதையின் கதாபாத்திரங்கள் எழுத்திலிருந்து உயர் பெற்று திரையில் நடமாடுமவதை பார்க்கும் புது அனுபவம் சுவாரஸ்யமா தான் இருக்கு. இந்த படம் உங்களை சுவாரஸ்யமாக்குமா என்பதை தெரிஞ்சிக்க 26 வரை நான் வெயிட் பண்ணியே ஆகணும் . அந்த டென்சனை குறைக்கவாவது இல்லாத  நகம் கடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கலாமா னு தோணுது.

நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம் 

ஆர்.வி.சரவணன் 


சனி, அக்டோபர் 10, 2015

நான் என்ன சொல்றேன்னா....





நான் என்ன சொல்றேன்னா....

முகநூலில் எழுதியவற்றை  தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். 

பொன்னியின் செல்வன் படித்த போது நான் இருவருக்கு ரசிகனானேன். ஒருவர் அதை எழுதிய திரு. கல்கி அவர்கள். மற்றவர் ராஜராஜசோழன்.மாமன்னனின் கலை பொக்கிஷமான தஞ்சை பெரிய கோவிலை எப்போது கடந்தாலும் நின்று பிரமிப்புடன் பார்த்து விட்டே நகர்வேன். இன்றும் அதே பிரமிப்புடன் பார்த்த படி அந்த கலைப்படைப்பை ஆர்வமுடன் க்ளிக்கியது இந்த படம்.

---------------------

ஒரு ஹிட் பாடலை கேட்கும் போது அதை விசுவலாக பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுவதுண்டு. இருபது வருடங்களுக்கு பிறகு எனக்கு பிடித்த ஒரு ஹிட் பாடலின் விசுவலை (இந்தப் படம் இது வரை பார்த்ததில்லை) சமீபத்தில் டிவியில் கண்டேன்.டூயட் பாடலுக்கு நிகரான விசுவல் இல்லையென்றாலும் பிடித்த பாடல் என்பதால் ரசிக்க முடிந்தது. கூடவே கல்லூரி காலங்களையும் நினைத்து பார்க்க வைத்தது.
மோகன் ரூபினி நடித்து ஜேசுதாஸ்,சித்ரா குரல்களில் இளையராஜா இசையில் உருவான அந்த பாடல்
எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும்....

படத்தின் பெயர்
நினைக்க தெரிந்த மனமே
படம் வெளியான ஆண்டு 1987
கல்லூரி காலம் நினைவுக்கு வந்துடுச்சுனு நான் சொன்னது,அந்த கால கட்டத்தில் வந்த படம் என்பதால்.

----------------

ரயிலை விட்டு இறங்கி, பிளாட்பாரத்தில் ஸ்கூல் யூனிபார்மில் சென்று கொண்டிருந்த தன் குழந்தைகளிடம் "ரெண்டு பக்கமும் ரோடை பார்த்துட்டு கிராஸ் பண்ணுங்க என்ன " என்று ஒரு பெண் குரல் கொடுத்து கொண்டிருந்தார். நான் குரல் வந்த திக்கை நோக்கி திரும்பினேன். அந்த தாய் நின்று தன் குழந்தைகளை கவலையுடன் பார்த்து கொண்டிருந்த இடம் ரயிலின் புட் போர்டு அருகே. நீ முதல்ல உள்ளே போம்மா என்று அந்த குழந்தைகளுக்கு பாவம் சொல்ல தெரியவில்லை. ஆனால்குழந்தைகள் சார்பில் சொல்லி விடலாமா என்று தோன்றியது. 

-------


மதிய வெயிலில்  புழுங்கி கிடந்த பூமியை சமாதானம் செய்யும் பொருட்டு வானத்தில் கலைந்து நின்ற மேகங்கள் கொஞ்சமே கொஞ்சம் தூறலை அனுப்பி வைத்திருக்க, "மழை என்றால் இப்படி தான் இருக்கும்னு ஷோ காட்டறியா நீ" என்று பூமி சலித்து கொண்டதில் ரோஷம் கொண்ட மேகங்கள் ஒன்றாய் சேர்ந்து பெருமழையாய் பின்னியெடுத்து கொண்டிருக்கிறது.அது சரி. பூமியின் மைண்ட் வாய்ஸ் இப்போது என்னவாக இருக்கும்.
"அந்த ரோஷம் இருக்கட்டும்"

-----------------

காக்கா முட்டை திரைப்படத்தின் இடைவேளையின் போது ஸ்நாக்ஸ் வாங்கி கொண்டே 
"முரண்பாட்டுக்கு ஒரு உதாரணம் டக்குனு சொல்லு"
என்றான் நண்பன்.
"ஷாப்பிங் மாலின் குளிரூட்டபட்ட திரையரங்கில் பாப்கார்ன் வாங்கி கொறித்த படி பீட்ஸாவுக்கு ஏங்கும் சிறுவர்களின் ஏழ்மையை பார்த்து ரசித்து கொண்டிருக்கிறோமே. 
this is முரண்பாடு" என்றேன் நான்.

---------------

ஊருக்கு கூரியரில் புதன் கிழமை அனுப்பியிருந்த பார்சல் வெள்ளி வரை கிடைக்காததால் கொஞ்சம் கடுப்புடனே வெள்ளி காலையில் கூரியர் ஆபீஸ் சென்று விசாரித்தேன். அந்த மானேஜர் ஹெட் ஆபீஸ் போன் செய்து விசாரித்து விட்டு "இன்று தான் டெலிவரி க்கு எடுத்துட்டு போயிருக்காங்க கிடைச்சிடும் என்ற படி என் கடுப்பை பற்றி அலட்டி கொள்ளாமலே தன் வேலைகளை தொடர்ந்தார். ஆனால் அன்றும் கிடைக்கவில்லை. மறுநாள் சனிகிழமை காலை எழுந்தவுடனே இன்னிக்கு முதல் வேலையா கூரியர் ஆபீஸ் போய் சண்டை போடணும் என்ற கோபத்துடனே கிளம்பினேன். ஆனால் கூரியர் வந்து சேர்ந்து விட்டதாக அம்மா போனில் சொன்னவுடன் அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட்ட என்னிடம், மனசாட்சி ஒரு கேள்வி கேட்டது. கிடைக்கலைனவுடனே சண்டை போட கிளம்பினியே. இப்ப தான் கிடைச்சிடுச்சே இதை போய் சொல்ல மாட்டியா நீ என்றது . கிடைச்ச பின்னாடி எதுக்கு போகணும் என்று பதில் கேள்வி கேட்டவன் பின் அதிலுள்ள நியாயத்தை உணர்ந்த படி சரி இன்னிக்கு அந்த வழியா போகும் போது சொல்லிடுவோம் என்ற முடிவுக்கு வந்தேன்.
ஆனால் நான் கூரியர் ஆபீஸ் செல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் என் எதிரே அந்த மானேஜர் வந்து கொண்டிருந்தார். நான் திருப்தியுடன் சார் பார்ஸல் கிடைச்சிடுச்சு என்றேன். அவர் "அப்படியா ஓகே" என்று போகிற போக்கில் தலையாட்டிய படி என் திருப்திக்கு அலட்டி கொள்ளாமல் டெலிவரி தருவதற்காக சென்று கொண்டிருந்தார்.
அந்த பார்சலில் நான் அனுப்பியிருந்தது என்ன தெரியுமா? திருப்பதி லட்டு.

------------------

"சார். ஒரு ரூபாய் சில்லறை இல்ல பட்டர் பிஸ்கட் எடுத்துக்குங்க" டீ கடைக்காரர்
"காலங்கார்த்தாலே எப்படிங்க பிஸ்கட் சாப்பிட முடியும்" நான்.
"அப்ப அடுத்த முறை டீ சாப்பிட வரப்ப வாங்கிக்குங்க"
"எனக்கு ஞாபகம் இருக்கும். உங்களுக்கு இருக்காதே"
"அதுக்கு தான் சொன்னேன்.பட்டர் பிஸ்கட் எடுத்துக்குங்கனு"
 மீ ஙே

-------
மின்சாரம் இல்லாத இரவில் அமைதியின் குதூகலம் கொஞ்சம் எல்லை மீறியிருக்க, அவ் அமைதிக்கு இடையூறு ஏதும் விளைவிக்காமல் காதலின் தீபம் ஒன்று..... என எங்கிருந்தோ இளையராஜாவின் இசை தவழ்ந்து வந்து கொண்டிருக்கிறது.
என்று எழுதி முடிக்கையில் மின்சாரம் வந்து விட்டது.
இதையே மெட்ராஷ் பாஷைல சொல்ல முயற்சிக்கிறேன்.
"கரண்டே இல்லாம ஊரே சைலண்டா இருந்துச்சுப்பா. அத்த கலைக்காம நம்ம இசை ராசா பாட்டு இன்னாமா தாலாட்டுச்சு தெரிமா. காதலின் தீபம் ஒன்று.....னு நானும் குஷாலா சேர்ந்து பாட சொல்ல,
அட ச்சே கரண்டு வந்துடுச்சுப்பா."

-------
"என்ன சார் முன்னாடிலாம் கையில ஏதுனா புத்தகம் வச்சு படிச்சிட்டே இருப்பீங்க. இப்ப செல் போனும் கையுமாவே இருக்கீங்க"
ரயிலில் என்னுடன் பயணிக்கும் ஒருவர் கேட்டார்
நான் புன்னகையை மட்டுமே பதிலாக்கினேன்.
அவர்விடாமல்
"செல்போன்லயே படிச்சிடறீங்க போல" என்றார்
"காலம் மாறுதுல்ல" என்றேன் பெருமையாய் 
"காலம் அது பாட்டுக்கு மாறிட்டு போகுது. நீங்க மாறிடாதீங்க"
மீ ஙே.

--------

யாரையும், எந்த ஒன்றையும் குறைத்து மதிப்பிட்டு விடாதே.
வேண்டாம் என்று விட்டெறியும் விதை கூட இங்கே விருட்சமாகலாம்.
யார் கண்டது விட்டெறிந்த நாமே அதன் நிழலில் இளைப்பாறும் நாளும் வரலாம்.
இதற்கு சின்ன உதாரணம் சொல்லணும்னா, எப்போதோ எழுதி கசக்கி எறியாமல் வைத்த வார்த்தைகள் தான் இதோ இப்ப ஒரு ஸ்டேட்டஸ் போட உதவி பண்ணிருக்கு. எனவே.........
மீண்டும் முதல் வரியை படிச்சிடுங்க.





எனது அகம் புறம் குறும்படத்தின் படத்தொகுப்பு பணிகள் டப்பிங் முடிந்து இசை கோர்க்கும் பணிகள் ஆரம்பமாகியிருக்கிறது. படம் பற்றிய அனுபவங்களை விரைவில் பகிர்ந்து கொள்கிறேன் . இதன் டீசர் அடுத்த வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளோம் 

ஆர்.வி.சரவணன்