ஞாயிறு, ஜூலை 29, 2012

இயற்கையின் மடியில்....

இயற்கையின் மடியில்....


எனது அம்மாவின் அம்மா அதாங்க பாட்டியின் சொந்த ஊருக்கு, (அன்னப்பன் பேட்டை) கடவுள் வழிபாட்டிற்காக சென்றிருந்தோம்.

சிறு வயதில் ஓடி விளையாடிய இடங்களை இப்போது சென்று பார்ப்பது என் மனதுக்குள் எவ்வளவு சந்தோசத்தை அள்ளி வழங்கியது தெரியுமா. அதிலும் மனைவி குழந்தைகளுக்கு நான் விளையாடிய இடங்களை காண்பித்து சிறு குழந்தை போல் குதூகலித்தேன்.

என் அம்மா, மனைவி,மகன், மகள், மற்றும் உறவினர்களுடன் வழிபாடு முடித்து விட்டு அந்த ஆற்றங்கரையோரம் அரச மர நிழலில் அமர்ந்து (இளையராஜா பாடல்களை செல் போனில் ஒலிக்க விட்டு கேட்டு கொண்டே ) சாப்பிட்டது மனதுக்கு இன்னும் இனிமையை தந்தது. அங்கே நான் எடுத்த சில படங்களை தான் இங்கே பகிர்ந்துள்ளேன்

இந்த இடம் தஞ்சாவூர் கும்பகோணம் இடையே தஞ்சாவூரிலிருந்து பதினைந்து
கிலோ மீட்டரில் திட்டை என்ற ஊருக்கு அருகே உள்ளது



ஊருக்குள் நுழையும் போது சாலையோரம் கோவில் ஒன்று


ஊர் செல்லும் வழியில் சாலையில் உள்ள ஆல மரம்
சாலையை தொட முயற்சிக்கும் விழுதுடன்



ஊர் செல்லும் வழியில் சாலையோரம் வரிசையாய் நின்று வரவேற்கிறதோ
என எண்ண வைக்கும் பனை மரங்கள்



தென் மேற்கு பருவ மழை பொய்த்ததால் வறண்டு கிடக்கும் வெட்டாறு


வறண்ட ஆற்றினுள்ளே வளர்ந்து ஆறுதலுடன் அதற்கு துணை நின்று காற்றுடன் விளையாடும் நாணல்


சில இடங்களில் பசுமை துளிர் விட்டு நிற்கும் அற்புதம்


ஆற்றங்கரையோரம் அரச மரம் நிழல் தர கூடவே இலைகளின் இடையில்
நம்மை நலம் விசாரிக்கும் கதிரவனின் கதிர்கள்


இயற்கையின் மடியில் இளைப்பாறிய திருப்தியுடன் டூ வீலரில்
எங்கள் மகன் ஹர்ஷவர்தன், மகள் ஜனனி

இயற்கை
நமக்கு தரும் இனிமைக்கு தான் எல்லையேது
ஆர்.வி.சரவணன்

ஞாயிறு, ஜூலை 22, 2012

வெற்றி ரீங்காரமிடும் ஈ



வெற்றி ரீங்காரமிடும் ஈ

ஒரு ஈ யை வைத்து கொண்டு அப்படி என்ன தான் செய்து விட முடியம் என்ற நினைப்புடன் தான் (சரி சிறு அலட்சியத்துடன்) இந்த நான் ஈ படம் பார்க்க அமர்ந்தேன். அமர்ந்த சில நிமிடங்களிலேயே இயக்குனர் ராஜ மௌலி நம்மை படத்துக்குள் ஈர்க்க வைத்து விடுகிறார் என்றால், ஈ வந்தவுடன் அது நம்மை அதன் கூடவே படத்தின் இறுதி வரை கட்டி இழுத்து செல்வது போல் அழைத்து சென்று விடுகிறது. அந்த அளவுக்கு இந்த படம் நம்மை மொய்க்க வைத்து விடுகிறது.



ஹீரோயின் சமந்தா மேல் ஆசை கொண்ட வில்லன் சுதீப் (ரொம்ப நல்லா நடிச்சிருக்கிறார் ) அவரது காதலனை கொன்று விட ஹீரோ வின் ஆவி ஒரு ஈயின் முட்டைக்குள் சென்று ஈயாய் வெளி வந்து வில்லனை பழி வாங்கும் கதை தான் இது. கேட்பதற்கு என்னமோ சாதாரணமாய் தான் இருக்கிறது நானும் இப் படத்தை பற்றி அப்படி தான் நினைத்தேன் ஆனால் இயக்குனர் கொடுத்திருக்கும் விசுவல் ட்ரீட் நம்மை ஆச்சரியத்திற்கு கொண்டு செல்கிறது.

* ஈ முட்டையிலிருந்து வெளி வருவது வெளிவந்து பறக்க முயற்சிக்கும் காட்சி

* வில்லனின் காரை விபத்துக்குள்ளாக்கி விட்டு கார் கண்ணாடியில் I WILL KILL YOU என்று எழுதுவது

* ஹீரோயின் கண்ணீர் துளிகளில், காதலன் தான் ஈயாய் வந்திருக்கிறேன் என்று சுட்டி காட்டும்
விதம் ,கூடவே வில்லன் தான் தன்னை கொன்றான் என்பதை வில்லனின் போட்டோ மேல் அமர்ந்து வெளிபடுத்துவதுடன் அவனை கொல்வேன் என்று கோடிட்டு காட்டும் விதம்

* வில்லனுடன் ஒவ்வொரு முறையும் மோத போகும் முன், தன் இரு கைகளை சேர்த்து சண்டைக்கு தயார் என்பது போல் செய்யும் ஆக்சன்

* ஹீரோயின் ஈக்கு என்று வீடு அமைத்து கொடுத்திருப்பது (ஒரு கவிதை)

* ஹீரோயின் மருந்து அடித்ததனால் ஈ மயங்கி போய் இலையில் கிடக்க, அதை பார்க்கும் நமக்கு எந்திரி அஞ்சலி எந்திரி அஞ்சலி என்று கத்த வேண்டும் போல் தோன்றுவது

* நானியை மறந்து விடு என்று வில்லன் அட்வைஸ் செய்ய ஹீரோயின் முயற்சி செய்றேன் என்று கூற அதை கேட்டு ஈ அடையும் சோகம்

* எங்கிருந்தாலும் வந்து என் காலில் விழு என்று வில்லன் சொல்ல கதாநாயகிக்காக உடனே வந்து காலில் விழுந்து பரிதாபமாய் பார்க்கும் தோற்றம்

* வில்லன் ஈயை தன் காலால் நசுக்க முற்படும் போது அது உடனே ஊசி யை நிமிர்த்தி வைத்து அவன் காலை குத்த வைத்து தப்பிப்பது

* கிளைமாக்ஸ்சில் ஈயின் இறகை காலை வெட்டும் போது சமந்தாவுடன் சேர்ந்து நமக்கும் வேணாம் விட்டுடு என்று கெஞ்ச தோன்றுவது

என்று ரசிக்க வைக்கும் காட்சிகள் நிறைய

கதாநாயகியை காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற சூழலில் வெடி மருந்தில் புரண்டு விட்டு அந்த பீரங்கிக்குள் அது மரணத்தை நோக்கி பயணிக்கும் போது மனதை கனக்க வைக்கிறது.

கதாநாயகி ஈயை திருட்டு பையா வெளில வாடா என்று கொஞ்ச, திருட வந்த சந்தானம் தன்னை தான் சொல்கிறார் என்று கருதி வெளிவருவது திருந்துவது சூப்பர் காட்சி என்றாலும் கடைசியில் வரும் சந்தானத்தின் காட்சிகளை படத்தின் இடையிடையே சேர்த்திருக்கலாம்

இந்த படத்தை காதுலே பூ சுற்றும் அளவுக்கு எல்லாம் எடுக்காமல் ஈயை நாம் சுற்றும் அளவுக்கு, கிராபிக்ஸ் அனிமேஷன் துணையுடன் காதல் காமெடி செண்டிமெண்ட் என்று
பக்காவாக திரைக்கதை அமைத்து வெரி இன்டரெஸ்டிங் ஆக தந்திருக்கும் இயக்குனர் ராஜ மௌலியை மனசு விட்டு பாராட்ட தோன்றுகிறது. ( இனி ஈயை காணும் போது நமக்கு அருவருப்பு தோன்றாமல் ஆர்வமாய் கவனிக்க தோன்றும்)

(ஈ ஜின்தாக்த ஜின்தாக்த என்று ஆடுவது சூப்பர் என்று எழுத சொன்னதுடன், கூடவே அமர்ந்து நான் எழுதுவதை பார்த்து இதை பற்றி எழுதுங்க அதை பற்றி எழுதுங்க என்று டிப்ஸ் கொடுத்தான் என் பையன் ஹர்ஷவர்தன்)

ஈ, "நான்" ஈ என்று கர்வமாய் ரீங்காரமிடுகிறது

ஆர்.வி.சரவணன்



வியாழன், ஜூலை 19, 2012

முக நூலுக்காக....


முக நூலுக்காக....


நான் முக நுலுக்காக எழுதிய கிறுக்கல்களை இங்கே தந்திருக்கிறேன்


கமல் ஹாலிவுட் செல்கிறார்
(விஸ்வரூபம் எடுப்பதற்கு வாழ்த்துக்கள் )
----
பாக்யராஜ் கேரள அரசின் திரைப்பட விருது குழுவுக்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
(பாலக்காட்டு மாதவனுக்கு கிடைச்ச கௌரவம் இது )
----
இயக்குனர் ஷங்கரின் புதிய மேக பட்ஜெட் படம் ஐ
"ஐ" ( இது எனது மகிழ்ச்சி ஐ )
----
யுவன் சங்கர் ராஜாவின் நூறாவது படம் பிரியாணி
( லெக் பீஸ் நிறைய போடுங்க ச்சே சூப்பர் ஹிட் டியூன் நிறைய போடுங்க )
----
ஞாயிறு மதியமே தொடங்கி விடுகிறது
திங்கள் வருவதற்க்கான பதட்டம்
(ரெஸ்ட் எடுத்து களைத்ததால் வருதோ )
----
யார் ஒருவர் வரிசையில் நிற்பவர்களை பற்றி பொருட்டே இல்லாமல் டிக்கெட் கவுன்ட்டர் சென்று டிக்கெட் வாங்குகிறாரோ அவர் அப்பாடக்கர் என்று கருதபடுகிறார்
----

பார்ட்டியின் போது சரக்கடிக்காத நண்பனும் தேவைபடுகிறான்
(மட்டையாகும் போது வீட்டில் கொண்டு சேர்க்கணுமே)
----
மின் தடையை பொது மக்கள் பொறுத்து கொள்ள வேண்டும் என்று
மின்சார வாரியம் அறிவித்துள்ளது
(மறுபடியும் முதல்லேருந்தா )
----
அவ்ளோ பெரிய பைக் லே சின்ன பையன் போறதை பார்க்கும் போது
யானை மேலே சுண்டெலி போறப்பலேயே தெரியுது எனக்கு
(பொறாமை ஸ்டார்ட் ஆகுதோ )
----
டீ கடைக்கு போறப்ப டீ உடனே வந்துருச்சின்னா கூடவே ஒரு டவுட் டும் வந்துருது
(எப்பவோ யாருக்கோ போட்ட டீ நம்ம கிட்டே வந்துருச்சோன்னு )

ஆர்.வி.சரவணன்


புதன், ஜூலை 11, 2012

தமிழ் சினிமா தவிர்க்க வேண்டிய பத்து


தமிழ் சினிமா தவிர்க்க வேண்டிய பத்து

எனக்கு சினிமா ன்னா ரொம்ப பிடிக்கும். சின்ன பையனா இருக்கிறப்ப சினிமாவுக்கு போறப்ப எப்படி குதுகலமா இருப்பேனோ அப்படியே தான் இப்பவும் படம் போறப்ப பீல் பண்றேன். ஆனா பாருங்க அப்படி சந்தோசமா படத்துக்கு போயிட்டு படம் எதிர்பார்க்கிற அளவுக்கு இல்லேன்னா கடுப்பாயிடுது. அந்த கடுப்பிலே எந்த விசயங்களை படத்தில் தவிர்த்தா படம் ரசிக்கும் படி இருக்கும்னு மனசிலே ட்ரைலர் போட்டு பார்த்தேன். அதை தான் இங்கே தந்திருக்கிறேன். நான் சொன்னதெல்லாம் கரெக்ட் தான்னு நீங்க சொன்னீங்கன்னா என்னோட ரசிப்பு தன்மையை பற்றி நானே சபாஷ் சொல்லிக்கலாம்

ரீல் 1
* படம் ஆரம்பிச்சவுடன் ஹீரோ எண்ட்ரி கொடுப்பார் பாருங்க. ஸ்க்ரீன் லே வந்து ஒரு பைட் போட்டுட்டு அதை தொடர்ந்து ஒரு அறிமுக பாட்டு ஒண்ணு ஆடுவார் இல்லே பாடுவார் . இதெல்லாம் முடிச்சிட்டு தான் கதைக்குள்ளே வருவோம் கதையை ஆரம்பிப்போம் னு அடம் பிடிக்க கூடாது

ரீல் 2
* ஹீரோ பஞ்ச் டைலாக் பேசறேன்னு நம் காதை பஞ்சர் பண்ணாம இருக்கணும்

ரீல் 3
* ஹீரோயின் கேரக்டர் என்பது ஒரு வெகுளி பெண்ணாகவோ அல்லது கவர்ச்சியான கேரக்டராகவோ ஹீரோவுக்கு எவ்வளவு பிரச்னை இருந்தா எனக்கென்ன என் வேலை டூயட் பாடுவது மட்டும் தான் என்பதாகவோ இருப்பது

ரீல் 4
* ஹீரோவின் நண்பனாக காமெடி ஆர்டிஸ்ட் படம் முழுக்க வருவது ஒகே தான். ஆனா அப்படி வர காமெடி நடிகர் சில நேரங்கள்லே ஹீரோ வையே டாமினேட் பண்ணி டைலாக் பேசறது , கிளைமாக்ஸ் லே மட்டும் இல்லாமே போய் பின் வணக்கம் போடும் போது வருவது என்று லாஜிக் கை இடிக்க வைக்கலாமோ

ரீல் 5
* பாடல் காட்சி என்றால் கண்டிப்பாக பாரின் போய் தான் எடுப்போம்னு கண்டிப்பு காட்ட கூடாது. அப்புறம் இருக்கவே இருக்கு கான்டீன் என்று ரசிகர்களை இன்டர்வெல் க்கு முன்னாடியே அங்கே அனுப்ப வேண்டாமே

ரீல் 6
* பாடல் காட்சியில் நடன குழுவினர் கூடவே வந்து ஆடுவது என்பது கண்டிப்பா
சலிப்பை தரும் விஷயம்

ரீல் 7
* பாடலை மாடர்னாக கொடுக்கிறேன்னு தமிழையும் ஆங்கிலத்தையும் மிக்ஸ் பண்ணி கொடுத்து ஹை பிட்ச் லே அலற விடுவது. இன்னும் ஒரு கொடுமை என்னன்னா அருமையான பழைய மெலடி பாட்டை இப்படி கொடுக்கிறது இம்ஹும் முடியல

ரீல் 8
* வில்லன்கள் என்று ஒரு ரவுடி பட்டாளத்தையே அறிமுகபடுத்தி ஸ்க்ரீன் னே பற்றாத அளவுக்கு வர வைப்பது ஒரு பக்கம் என்றால், சுண்டெலி போல் இருக்கும் ஹீரோவுக்கு யானை போல் இருக்கும் வில்லனை காட்டி அவரை தான் ஹீரோ பந்தாடுவதாக நம் காதில் ரீல் சுற்றுவது. வில்லனை எத்தனையோ காட்சிகளில் அடித்து ஒழிக்க ஹீரோவுக்கு சான்ஸ் இருந்தும் அதை செய்யாமல் கிளைமாக்ஸ் வரை ஹீரோவை காத்திருக்க வைப்பது ஏன்

ரீல் 9
* கிளைமாக்ஸ்சில் ஹீரோ பக்கம் பக்கமா உபதேசம் பண்றது . இல்லேன்னா எல்லா பக்கத்துக்கும் வில்லன்களை தூக்கி வீசி எறிவதாக அமைக்க கூடாது. ஏன்னா கண்டிப்பா ஹீரோ தான் வெற்றி பெற போறார்னு தெரியும் அதை சுவாரஸ்யமா நாம் நகம் கடிக்கும் படபடப்புடன் அமைக்கலாமே

ரீல் 10
* படம் வெளியாகும் முன்னாடி படத்தை பற்றி ஓவரா பில்டப் பண்ணி பேட்டி கொடுத்து விட்டு, அதை நம்பி நாம தியேட்டருக்கு படம் பார்க்க போறப்ப நான் சொன்னா படம் பார்க்க வந்துருவியா நீ என்று கேட்பது போல் படம் இருக்க கூடாது

இதெல்லாம் இல்லாமே படம் எடுத்தா வெற்றி பெறுமா னு கேக்கறீங்களா , நல்ல கதை அம்சம் கொண்ட பர பர திரைக்கதையுடன் ஒரு படத்தை தந்தால் வெற்றி பெறும் னு தான் நினைக்கிறேன்

பைனல் பஞ்ச்

அது சரி நீ டைரக்டர் ஆகி படம் எடுத்தா இதெல்லாம் இல்லாமே எடுப்பியானு என் மனசாட்சி என்னை கேட்டுச்சு (பயப்படாதீங்க நான் படம் எல்லாம் எடுத்து கஷ்டபடுத்த வேணாம்னு தான் நினைக்கிறேன் இருந்தாலும் ஒரு பேச்சுக்கு தான் சொல்றேன் ) நான் இதெல்லாம் இல்லாமே படம் எடுக்க ட்ரை பண்ணாலும், தயாரிப்பாளர் சொன்னாங்க, விநியோகஸ்தர் கேட்டாங்க , ரசிகர்கள் ஆசைப்படறாங்க னு காரணம் சொல்லி இந்த விசயங்களை வச்சு படம் எடுக்கிற சூழ்நிலை வந்தா நான் என்ன தான் பண்றதாம் னு திருப்பி கேட்டேன் என் மனசாட்சியை

அப்ப நீ ஒண்ணும் டைரக்டர் ஆக வேண்டாம்னு சொல்லிருச்சு மனசாட்சி

ஆர்.வி.சரவணன்

செவ்வாய், ஜூலை 03, 2012

ரயில் பயணங்களில்....






ரயில் பயணங்களில்....

வாங்களேன் அன் அன் ரிசர்வ் கம்பார்ட்மென்ட் டில் ஜாலியா ஒரு ட்ரிப் போகலாம் .கொஞ்சம் கூட்ட நெரிசல் இருக்கும் தான் இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு என் கூடவே வாங்க (நான் ஒரு வருடமாக அடிக்கடி ரயிலில் சென்று வந்து கொண்டிருக்கிறேன் அந்த அனுபவ தொகுப்பு இங்கே பதிவாய் தந்திருக்கிறேன்)


இரவு ஒன்பது மணிக்கு புறப்பட வேண்டிய ரயிலுக்கு சீட் பிடிக்க வேண்டுமானால் நாம் ஆறு மணிக்கு சென்று வரிசையில் நின்றால் தான் கண்டிப்பாக சீட் கன்பார்ம். ஏழுமணிக்கு சென்று வரிசையில் சேர்ந்தால் சீட் கிடைக்கும் வாய்ப்பு உங்களுக்கு அருகில் இருக்கிறது என்று அர்த்தம். எட்டு மணிக்கு சென்றால் சீட் கிடைக்கும் ஆனா கிடைக்காது அதாவது பிப்டி பிப்டி சான்ஸ் உண்டு இதெல்லாம் ரயில் வரும் போது ரயில்வே போலீஸ் வந்து நின்றால் மட்டுமே நடக்க கூடியது. அவர்கள் வரவில்லை என்றால் நிலைமை தலை கீழாக மாறி விடும். அதாவது ஆறு மணிக்கு வந்து நின்றவர் சீட் கிடைக்காமல் அல்லாடி நிற்பதும் ரயில் வரும் நேரத்திற்கு கேசுவலாக வந்தவர் ஜன்னலோர சீட் டில் ஹாயாக அமர்ந்திருப்பதும் கண்டிப்பாக நடைபெறும் ஒரு நிகழ்வு அதாவது உடல் பலம் வாய் பலம் உள்ளவர்களுக்கே அப்போது முன்னுரிமை உண்டு
(நான் வரிசையில் சென்று நிற்கும் போது ரயில் வருகிறது என்று பார்க்கின்றேனோ இல்லையோ போலிஸ் வருகிறாரா என்பதை தான் மிகுந்த ஆர்வமாய் கவனிப்பேன் )

அடுத்து எல்லோரும் வண்டிக்குள் ஏறியவுடன் அந்த இடமே கொஞ்ச நேரம் சிறு போர்க்களம் போல் தோன்றும். ஆள் வருது, அந்த சீட்டை பிடி, எந்திரிப்பா கஷ்டப்பட்டு ஏறி இடம் பிடிக்கிறோம் வந்து உட்கார்ந்திட்டாரு தள்ளி உட்காரு வீட்லே உட்கார்ந்திருப்பது போல் உட்கார்ந்திருக்கிறே என்று குரல்கள் கட்டாயம் கேட்கும். ஏறும் பயணிகள் முதலில் தேடுவது ஜன்னலோர சீட் அது இல்லையென்றால் ஏதேனும் ஒரு சீட். அதுவும் இல்லையென்றால் உட்கார்ந்திருப்பவர்களிடம் கெஞ்சுவதும் முடிந்தால் கொஞ்சம் அதட்டலாகவும் சீட் பிடிக்க போராட்டம் நடைபெறும் . அடுத்து மேலே பொருள்கள் வைப்பதற்காக இருக்கும் இடத்தில முதலில் ஏறியவர் சவுகரியமாக படுத்து பள்ளி கொண்டு விடுவார். அடுத்து வரும் ஸ்டேஷன் களில் ஏறுபவர்கள் அவரை எழுப்பி ஓரமாக, இல்லை என்றால் சுவற்றோடு சுவராக உட்கார வைத்து விட்டு அமர்ந்து கொள்வார்கள். அதோடு மட்டுமில்லாமல் மேலே இருப்பவர்கள் கால்களை கிழே தொங்க விட்டு கொள்ளும் போது சீட்டில் அமர்ந்திருப்பவர்களின் முகத்தில் கால்கள் மோதுவது போல் அவ்வபோது வந்து செல்லும் இதை கீழே அமர்ந்திருப்பவர்கள் முகம் சுளித்தாலும் சகித்து கொள்ள வேண்டும்.கேட்டால் எவ்வளவு நேரம் தான் நாங்க காலை மடக்கி உட்கார முடியும் சொல்லுங்க என்பார்கள் பரிதாபமாய் .சில நேரம் மேலே தண்ணீர் பாட்டில் திறக்கும் போது அது சிதறி கீழே இருப்பவர்கள் மீது அபிசேகம் நடைபெறும் வாய்ப்பும் உண்டு நான்கு பேர் அமரும் சீட்டில் ஆறு பேராவது உட்காரும் நிலை உருவாகும் ( நான் இரு பருமனான மனிதர்கள் மத்தியில் ஒரு எலி போல் மாட்டி அவச்டைபட்டிருக்கிறேன் )


சீட்கள் நிறைந்தவுடன் அடுத்து நடை பாதையை ஆக்ரமிக்கும் பயணிகள் பலர் உட்கார்ந்து கொள்ள சிலர் நின்று கொண்டு வருவார்கள். சீட்டில் அமர்ந்திருப்பவர் எந்த ஸ்டேசனில் இறங்குவார் என்று தெரியாது திடீரென்று அவர் எழுந்திருக்க அப்போது தான் ஏறி உள்ளே வந்த நபர் டக்கென்று உட்கார்ந்து கொள்வார் நெடு நேரமாய் அங்கே நிற்பவருக்கு காதில் புகை வந்து விடும்
(எனக்கும் வந்திருக்கிறது )

நடைபாதையில் முழுக்க ஆட்கள் நிறைந்திருப்பதால் சீட்டில் உட்கார்ந்திருப்பவருக்கு எப்படி பாத்ரூம் செல்வது என்ற டென்சன் உண்டாகும். ஏழு கடல் ஏழு மலை தாண்டி சென்று வருவதற்குள் தாவு தீர்ந்து விடும். இதில் உச் இது வேறயா என்ற குரல்கள் கேட்கும் அதாவது ஒரு காலை வைத்து விட்டு அடுத்த கால் எங்கு வைப்பது என்பதை நடையில் உட்கர்ந்திருப்பவரை கேட்டு தான் அவர் சொல்லும் இடத்தில தான் வைக்க முடியும். இதையெல்லாம் தாண்டி வெற்றிகரமாய் பாத்ரூம் சென்றால் பாத்ரூம் பக்கத்திலும் சிலர் அமர்ந்திருப்பார்கள். அதை பார்க்கும் போது பாத்ரூம் போகும் எண்ணமே தோணாது நமக்கே அப்படி என்றால் லேடீஸ் நிலைமை எப்படி இருக்கும் (நானெல்லாம் எவ்வளவு தண்ணி தாகம் எடுத்தாலும் சரி முடிந்த வரை தண்ணீர் குடிக்காமல் செல்வேன் அப்போது தான் பாத்ரூம் போகும் தொல்லை இருக்காது)

இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் ரயில் கிளம்பும் போது சீட்டிற்காக உன் உயிரை எடுத்துடுவேன் என்று சண்டையிட்டு கொள்பவர்கள் தாங்கள் இறங்க போகும் ஸ்டேஷன் வரும் போது உயிர் கொடுக்கும் தோழனாய் மாறி இருப்பார்கள் சண்டையிட்ட பெண்கள் நேரம் செல்ல செல்ல ஒருவர் குழந்தையை மற்றவர் தூக்கி மடியில் வைத்து கொஞ்சும் அளவுக்கு ராசியாகி விடுவார்கள்
ரயிலின் ஓரத்தில் எதிரும் புதிருமாக சீட் இருக்கும் பாருங்கள் அந்த சீட்டில் அமர்ந்து விட்டால் நெருக்கடியிலிருந்து கொஞ்சமே கொஞ்சம் தப்பித்து மூச்சு விட்டு கொள்ளலாம். யாரும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்களேன் உட்கார்ந்துக்கிறேன் என்று கேட்க மாட்டார்கள் ஆனா பாருங்க என்னையும் ஒருத்தர் கேட்டார் "ஏங்க ஓரமா கதை புஸ்தகம் வச்சிருக்கீங்களே அதை எடுத்தீங்கன்னா நான் உட்காருவேன்லே" நான், " இந்த தொண்ணுறு பக்க புஸ்தக இடைவெளியில் எப்படி உட்காருவீர்கள்" என்று கேட்டதற்கு "மனமிருந்தால் மார்க்கமுண்டு" என்றார் பாருங்கள். நான் கடுப்பாகி விட்டேன் "மனம் இருக்கு மார்க்கம் தான் இல்லே" என்றேன்

இப்படியெல்லாம் அவஸ்தைகள் கொண்ட இந்த கம்பார்ட் மென்ட் டை விட்டு நான் அதிகாலை இறங்கும் போது பார்த்தால், ஒவ்வொருவரும் இன்னொருவர் மேல் சாய்ந்து விழுந்தும் குழந்தைகள் நடைபாதையில், மடியில் துவண்டு போய் தூங்கியும் நிற்பவர்கள் அப்படியே கம்பியில் சாய்ந்தும் நல்ல உறக்கத்தில் இருப்பார்கள். வாடி வதங்கிய காய்கறிகளை கீரைகளை பார்க்கையில் தோன்றும் பரிதாபம் தான் அவர்களை பார்க்கையில் என் மனதிற்குள் தோன்றும்.

இந்த எண்ணத்துடன் கீழே இறங்கி ஏ சி கோச், ரிசர்வேசன் கோச்சுகளை கடக்கையில் அங்கே உறங்கி கொண்டிருப்பவர்களை பார்க்கும் போது மனிதனின் வாழ்க்கை தான் ஏன் இப்படி பாகுபாட்டுடன் ஏற்ற தாழ்வுகளுடன் இருக்கிறது என்ற பதில் கிடைக்காத வினா ஒன்று எனக்குள் தோன்றும்

அடுத்து ரிசர்வேசன் கோச் லே ஒரு முறை போகலாம்
இப்ப உங்க ரயில் அனுபங்களை கருத்துரையில் சொல்லுங்கள்

ஆர்.வி.சரவணன்