திங்கள், மே 18, 2015

நீ யோசிக்க நான் யாசிக்க....




நீ யோசிக்க நான் யாசிக்க....

ஓவியர் மணியன் செல்வம் அவர்களின்  இந்த ஓவியத்திற்கு கவிதை எழுதுமாறு 
ஜனவரி மாத ஜன்னல் இதழில் கவிதை போட்டி அறிவித்திருந்தார்கள். நானும் 
எழுதி அனுப்பியிருந்தேன். தேர்வாகவில்லை. அதனாலென்ன என்று இதோ
 தளத்தில்  வெளியிட்டிருக்கிறேன். படித்து விட்டு சொல்லுங்கள் .


வண்ணத்து பூச்சியின் படபடப்பை தீட்டிக் கொண்ட 
இமைகள் 

மலரிதழ்களை  பொருத்தி கொண்ட 
அதரங்கள்

ஆடைச் சோலையில் நடை பயிலும் விரல்களுடன் 
ஒரு கரம்  


நந்தவனத்தையே தாங்கி நிற்கும் தூணாக 
மறு கரம் 

அள்ளி முடிந்தாலும் காற்றோடு உலவ அடம்பிடித்து 
கொண்டிருக்கும்  கேசம் 


அணிகலனுக்கு அபயம் அளித்திருக்கும் 

மேனி 



இப்படியாக 

என் எண்ணங்களை 
வரிகளுக்கு  யாசிக்க வைத்த 
நீ 
அப்படி 
என்னத்தை  யடி
யோசிக்கிறாய் ?

ஆர்.வி.சரவணன் 

ஞாயிறு, மே 10, 2015

'எக்ஸ்யூஸ்மீ... உங்க செல்போனை கொஞ்சம் தர்றீங்களா?'



'எக்ஸ்யூஸ்மீ... உங்க செல்போனை கொஞ்சம் தர்றீங்களா?'

யிலில்  வாராவாரம் முன்பதிவுபெட்டியில் ஊருக்குபோற எனக்கு, அங்கே கிடைக்கிற அனுபவங்கள் ஒவ்வான்றும் ஒரு ரகம். வாங்க ஒரு ட்ரிப் அடிச்சிட்டு வரலாம்.
டிரயின்ல பயணிக்க தான் காசு கொடுத்து டிக்கெட்  வாங்கணும். ஆனால் அனுபவங்கள்   இலவசம்தானே.....

நாமதான் லோயர் சீட் புக் பண்ணிருக்கோமேனு அசால்ட் ஆறுமுகம் கணக்கா நான் தெம்பாதான் போவேன். ஆனால் அங்க வம்பு நின்னுகிட்டு, என்னை டென்ஷனாக்கி வேடிக்கை பார்க்கும்.  

ஒரு முறை இப்படிதான் நான் கொஞ்சம் ரிலாக்ஸ் மூடுல போய் உட்கார்ந்தேன். பக்கத்து சீட்ல இருந்தவர் அவராவே வலிய (வழிய) வந்து பேசினார். இன்னைக்கு ரொம்ப வேர்க்குது இல்ல என்று ஆரம்பித்தவருக்கு நான் பதில் கொடுத்ததில் தொடங்கிய எங்களின்  பேச்சு முடிவுக்கு வந்தது, உங்க லோயர் பெர்த்த தந்துட்டு அப்பர் பெர்த் மாத்திக்கிறீங்களா" என்ற அவரது  வார்த்தையில். பழகாத வரை முடியாதுனு சொல்லலாம். பழகிய பின் எப்படி மறுப்பது? இருந்தும், 'அப்பர் பர்த் ஏறி படுக்கிறது கஷ்டம் சார்!' என்று ஜகா வாங்கினேன்.

ஆனாலும் மனிதர் அசரவில்லை. கடையில பர்சேஸ் செய்யும்போது, " சார் அந்த பேக்கேஜ் இல்லன்ன இந்த பேக்கேஜ் எடுத்துக்குங்களேன்" என்று சொல்கிறமாதிரி, அது போல் அவர் "அப்படின்னா நீங்க சைடு லோயர் எடுத்துக்குங்களேன். நாங்க பாமிலியா வந்ந்திருக்கோம் அதனாலேதான்"என்றார். நானும்  சரி என்று அங்கே போய் செட்டில் ஆனேன். அதுக்கப்புறம்தான் பிரச்னையே. ரெண்டு சீட்டையும் சாய்த்து நான் படுக்க தயாராக அதுவோ ரெண்டும் சேராமல் சண்டையிட்டு கொண்டது போல் ஒரு சீட்  மற்றதை விட கொஞ்சம் உயரமாவே இருந்தது. சரினு அட்ஜஸ்ட்  பண்ணி  படுத்துட்டேன். ஆனால் முதுகு வலி வந்ததுதான் மிச்சம்.

இந்த அனுபவத்தை தூக்கி சாப்பிடற அனுபவம் ஒண்ணு இருக்கு. பிரெண்ட்ஸ்ங்க குரூப்பா ரயில் ஏறி னாங்க. ஏதோ கல்யாணத்துக்கு போறாங்க போலிருக்கு. ஒரே கும்மாளம். ஓபனிங்  நல்லாதான் இருந்துச்சு. போகப்போகதான் சலிப்பாகிடுச்சு. 'சார் படுக்கணும்... காலையிலே சீக்கிரம் இறங்கணும்!' என்றவுடன், 'இதோ சார்...!' என்று சுறுசுறுப்பானார்கள்.   சரி படுக்கதான்  ட்ரை பண்றாங்கனு நான் நினைச்சேன்.

ஆனால்  சாப்பாடு கடையே அப்பதான் ஓபன் பண்ணாங்க.  காபி ஷாப் ல காபி யை சிப் பண்ணி சாப்பிடற மாதிரியே சாப்பிட்டவங்க ஒரு வழியா என்னோட இடத்தை குடுத்துட்டு, அவங்கவங்க பெர்த்தில் போய் செட்டில் ஆனாங்க. அப்பாடா னு படுத்தால், அடுத்த பிரச்னை கூட வந்து படுத்துக்கிறேன்னு சொன்ன மாதிரி ஆகிடுச்சு என் நிலைமை.  

மேல அப்பர் பர்த் போய் செட்டில் ஆன ரெண்டு பேர், அங்கேயே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிச்சாங்க. அதனாலே லைட்டும் எரிஞ்சிட்டிருந்தது. அதையும் மீறி தூங்கலாம்னு நினைச்சாலும் குருமா வாசனை, 'தூங்கிடுவியா நீ..?' னு எகத்தாளம் பண்ண ஆரம்பிச்சுடுச்சு. சரி   அவங்க உரிமையை நாம பறிக்கக் கூடாதுனு நான் ஒண்ணும் சொல்லலை. அதிகாலை மூணு மணிக்கு நான் எழுந்து, இறங்க போறப்ப பார்த்தால், எல்லாரும் நல்லா தூங்கிட்டிருந்தாங்க. பாவம் பேசி ரொம்ப டயர்ட் ஆகிட்டாங்க னு எரிச்சலோட (வயிற்றெரிச்சல் இல்லீங்க கண் எரிச்சல்) இறங்கினேன்.   

இது இப்படின்னா தோசையை திருப்பி போட்ட மாதிரி ஒரு நிகழ்ச்சி  இன்னொரு நாள் நடந்துச்சு.  டிரெயின் கிளம்பறதுக்கு முன்னாடியே வந்த ஒரு ஆள், ஒன்பதரை மணிக்கே படுக்கையை ரெடி பண்ணி படுத்துட்டார். கூடவே லைட்டையும் ஆப் பண்ணிட்டார். 'சார் டி டி ஆர் வரல' என்று 'தம்பி டீ இன்னும் வரல...!' என்ற ரேஞ்சுக்கு  சொன்னேன். அவர் 'அதனாலென்ன அவர் வரப்ப லைட் போட்டுக்கிடலாம்' னு கூலா சொல்லிட்டு திரும்பி படுத்துட்டார். இருட்டுலயே நான் உட்கார வேண்டியதாகிடுச்சு.

இதை விட இன்னொரு சூப்பர் அட்ராசிட்டி  ஒருமுறை நடந்துச்சு. நான்   ரயிலில் ஏறி என் சீட்டுக்கு வர்றப்ப, ஒருத்தர் மப்புல உட்கார்ந்திருந்தார். நான், 'என்னோட சீட் இது'  என்றவுடன், மேலும் கீழும் பார்த்தவர்  மாறி உட்கார்ந்து கொண்டார். நான் உட்கார்ந்த பின் அவர், 'விட்டு கொடுப்பவர்கள் கேட்டு போவதில்லை இப்ப பாருங்க நான் உங்களுக்கு சீட்டை விட்டு கொடுத்திருக்கேன் கெட்டா போயிட்டேன்!' என்றார். 'என் சீட்டை எனக்கு கொடுக்கிறதுக்கு எப்படி விட்டு கொடுத்ததாக ஆகும்? உங்கள் பேச்சில் பிழை உள்ளது!' என்று என் மைண்ட் வாய்ஸ் கும்கி கணக்கா சொல்லுச்சு.  

அடுத்து  அவர் சிகரெட்டுக்கு தீப்பெட்டி கேட்கிற மாதிரி, 'உங்க செல் போன் கொடுக்கறீங்களா எங்க வீட்டுக்கு அர்ஜென்ட்டா ஒரு கால் பன்னணும்' என்றார். நான் என்ன சொல்வது என்று கொஞ்சம் திணறி, 'செல்லில் பாலன்ஸ் இல்ல' என்று பொய் சொன்னேன். அவர் என்னை ஒரு லுக் விட்டார். பின்ன எதுக்கு இந்த செல் போனை வச்சிருக்கே என்பது போல். நான் அப்ப போன் வேற பண்ணணும், இவரிடமோ  பாலன்ஸ் இல்லை என்று சொல்லி விட்டோம் என்ன செய்வது என்று நான் குழம்ப, அவரோ வாயில் ஏதோ பாட்டை முணுமுணுக்க ஆரம்பித்து விட்டார்.    

இன்னிக்கு நைட் இவர் கூடதான் கும்மி அடிக்கணும் போலிருக்குன்னு நான் நினைக்கையில், டி டி ஆர் வந்தார். என்னிடம் செக் செய்து விட்டு அவரிடம் டிக்கெட் கேட்க,  அவரும் கேசுவலாக எடுத்து கொடுத்தார். அதை வாங்கி பார்த்த  டி டி ஆர், 'ஹலோ நீங்க வச்சிருக்கிறது அன் ரிசர்வ்டு டிக்கெட். அங்க போகாம இங்கே வந்து உட்கார்ந்திருக்கீங்க?' என்றார்.  

அவர் 'அங்க சீட்டுக்கு அடிச்சிக்கிறாங்க. இங்க காலியாத்தானே இருக்குனு வந்து உட்கார்ந்துட்டேன்!' என்று சொல்ல, 'முதல்ல நீ இறங்கு!' என்று அவரை டி .டி. ஆர் அங்கிருந்து வெளியேற்றினார்.








என் ரியாக்சன் எப்படி இருந்திருக்கும்னு நான் வார்த்தையில 
வேற சொல்லணுமா 
என்ன ...?

ரயில் பயணங்களில் எனக்கு ஏற்படும் அனுபவங்களை கொண்டு  நகைச்சுவையுடன்   நான் எழுதி அனுப்பிய இந்த கட்டுரை விகடன் இணைய தளத்தில் சென்ற வாரம் வெளியானது.  http://www.vikatan.com/news/article.php?aid=45986
நன்றி விகடன் .காம்
ஆர்.வி.சரவணன் 



வியாழன், மே 07, 2015

உத்தம வில்லன்




உத்தம வில்லன் 

திரைப்படத்திற்குள் ஒரு திரைப்படமாக  வரும் உத்தமன் கதையில்,
கமல் அரண்மனைக்குள் நுழையும் வரையிலான காட்சிகள், 
மகளும் மகனும் பேசிக்கொண்டிருக்க வெளியில் வந்து ஜன்னலில் பார்த்து கமல் பெறுமிதப்படும் காட்சி, 
காதலியின் கடிதத்தை எம் எஸ் பாஸ்கரை விட்டே கமல் படிக்க விடும் தியேட்டர் காட்சி, 
அழகான ஆறுதலாய்  ஆண்ட்ரியா, 
கோப முகம் காட்டி வார்த்தை கத்தி வீசும் கே.பாலச்சந்தர், 
கோபத்துடன் எழுந்து வெளியேறும் போது கமல் உதவ முற்படுகையில் வேண்டாம் என்று உக்ரம் காட்டி தானே சிரமத்துடன் கம்பீரம் காட்டி நடந்து செல்லும் விஸ்வநாத், 
சினிமா நடிகன் மனோ ரஞ்சனுக்கு இருக்கும் நோய் வீட்டுக்கு தெரிய வருகையில் அது வரை வீட்டில் எதிர்த்தவர்கள் காட்டும் உணர்வுகளின் வெளிப்பாடுகள் 
என்ற சுவாரஸ்யமான காட்சிகளின் சிகரமாக,
கமலும் அவர் மகனும் பந்து விளையாடி கொண்டே உரையாடி நெகிழ்ந்து கட்டி கொள்ளும் காட்சியை ஒரு அற்புதம் எனலாம்.என்ன,அந்த உத்தம காட்சியை ரசிக்க விடாமல் என் கண்களை வில்லனாய் மாறி கண்ணீர் திரையிட்டு விட்டது.
ஒரு மிக பெரிய இயக்குனர் இயக்க பெரிய நடிகர் நடிக்க உருவாகும் படத்தின் கதை இன்னும் வலுவானதாக இருந்திருக்க வேண்டுமே என்ற கேள்வி எழுந்தாலும் இரு கதைகளையும் ஆங்காங்கே இணைத்த படி நகரும் திரைக்கதை ரசிக்க வைத்திருக்கிறது.(உதாரணமாக ஹீரோ மனோரஞ்சன் சாவை எதிர்பார்த்தவராகவும்  அவர் நடிக்கும் கதையில் வரும் உத்தமன் சாகாவரம் பெற்றவனாகவும் காட்டப்பட்டிருப்பது)  
கமலை பாராட்ட வார்த்தைகளை நமக்கு விட்டு வைக்காமல் படத்தில் வரும் மார்கதர்சி (பாலச்சந்தர்)யே மனோரஞ்சனை நிறைய முறை பாராட்டி விடுகிறார். இருக்கட்டும் 

வாழ்த்துக்கள் கமல் சார். 

நண்பர் கோவை ஆவியும் நானும் இப் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றால் படம் வெளியாகவில்லை என்ற தகவல் பலகை தான் எங்களை வரவேற்றது. பின் நாங்கள் குறும்பட படப்பிடிப்புக்காக அன்று பாலக்காடு செல்ல வேண்டி இருந்தது. அங்கே பாலக்காடு அரோமா தியேட்டரில் தான் இப் படம் பார்த்தோம். அது ஒரு இனிய அனுபவமாக இருந்தது.

ஆர்.வி.சரவணன்