புதன், டிசம்பர் 26, 2018

காவ்யாவின் பதட்டம்


காவ்யாவின் பதட்டம் 
காவ்யா பதட்டத்தில் இருந்தாள். அமைதி ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த இரவில் ஐந்தடுக்கு அபார்ட்மெண்டின் ஒரு பிளாட்டின் கதவை திறந்து கொண்டு மெதுவாக வெளி வந்தவள் முகத்தை சால் கொண்டு மறைத்து கருப்பு கண்ணாடி அணிந்திருந்தாள். எந்த வீட்டிலிருந்தோ கடிகாரம் 9 முறை அடித்து ஓய்ந்தது. இருந்தும் அடிக்கடி கையில் கட்டியிருந்த வாட்சை பார்த்து கொண்டாள். காரிடாரில் யாரும் இல்லாததே பெரும் ஆறுதலாக இருந்தது. வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் அடிக்கடி திரும்பி பார்த்து கொண்டாள்.
உள்ளே அவன் ஹாலில் கழுத்தறுபட்டு துடித்து கொண்டிருந்தான். பெருகிய ரத்தம் அவன் உடலெங்கும் பரவ, வாயில் ஒட்டப்படிருந்த பிளாஸ்திரியையும் மீறி மரண அவஸ்தையில் முனகி கொண்டிருந்தான். அவனது அந்த அவஸ்தையை காவ்யாவிற்கு இந்த பதட்டத்திலும் ரசிக்கவே தோன்றியது. என்ன ஆட்டம் ஆடினான். எல்லாத்துக்கும் சேர்த்து இன்னிக்கு கத்தி வச்சாச்சு.
திடீரென்று செல் போன் ஒலிக்க ஆரம்பித்தது. மெலோடியான ட்யூன் தான் என்றாலும் இந்த நேரத்தில் அது அலறல் போலவே இருந்தது. பரபரப்பாகி செல் போனை கட் செய்தவள், வீட்டினுள்ளே ஒரு முறை பார்த்து கொண்டு கதவை படீரென்று சாத்தினாள். தானியங்கி பூட்டு என்பதால் தானாகவே பூட்டி கொண்டது. எந்த வீட்டிலிருந்தும் யாரும் எந்த நேரமும் வெளி வரலாம். யாரேனும் தன்னை பார்ப்பதற்குள் வெளியேற வேண்டும். லிப்ட் வரை வந்து விட்டவள் கடைசி நொடியில் அதை தவிர்த்து படிக்கட்டுக்கு தாவினாள். இரண்டிரண்டு படிகளால் நான்கு மாடிகளையும் தாண்டினாள். கீழே இறங்கி லிப்டிலிருந்து வெளிப்பட்ட காவ்யாவை கண்டதும் யாரிடமோ சீரியசாக பேசி கொண்டிருந்த செக்யூரிட்டி. இவளை பார்த்த மாத்திரத்தில் "மேடம்" என்ற படி ஓடி வந்தான்.
காவ்யா கண்டு கொள்ளாதது போல் கேட்டை திறந்து ரோட்டுக்கு தாவினாள். இவள் ரோட்டுக்கு வருவதற்காக சற்று தள்ளி காத்திருந்த அந்த சிகப்பு நிற பைக் அவள் அருகே வந்து நின்றது. ஏறி அமர்ந்த பின் பைக் அதி வேகமாக கிளம்பியது. அப்போது தான் அவள் முகத்தில் மலர்ச்சி வந்தது. அப்பாடா என்ற படி பெருமூச்சு விட்டாள். "சீக்கிரம் போ" என்று அவசரப்படுத்தினாள்.
"என்ன வேலை முடிஞ்சுதா ? ஹெல்மேட்டுக்குள்ளிருந்த படி வார்த்தைகள் வர, "ம் ஓகே" என்றாள்.
"ஒண்ணும் பிரச்னை வராதுல்ல "
"வராதுனு நினைச்சா வராது." என்றவளுக்கு சிக்னலில் இருந்த ஜன்னல் விளம்பரம் பார்த்ததும் திக்கென்றது. "ஓ மைகாட். ஜன்னல் கதவை சார்த்தாம வந்துட்டேன்."
"என்னிக்கு வேலைய சரியா செஞ்சிருக்க நீ"
"உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சதுக்கப்பறம் தான் இப்படி"
"பழிய என்மேலே போடு"
" ஜன்னல் மூலமா சத்தம் வெளில வந்து
காட்டி கொடுத்திடுமோ" என்றாள்.
"வெளில வர வரைக்கும் தான் பயப்படணும். தடயம் ஏதும் இல்லாம வந்தாச்சில்ல விடு"
" கொலை பழி யார்மேல வரும்னு யோசனை பண்ணிட்டிருக்கேன்."
" என்னது கொலை பழியா" அதிர்ச்சியில் பிரேக் போட்டான். அவன் பின்னே வந்த வண்டிகள் கிறீச்சிட்டு நின்றன.
அங்கே காவ்யா பூட்டி விட்டு வந்த வீட்டில் அந்த அவன் வாயில் ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்திரி எடுக்கப்பட்டிருக்க, மரண அவஸ்தையில் முனகிய படியே வார்த்தைகளை இழுத்து இழுத்து டிவி சீரியலில் பேசி கொண்டிருந்தான்.
பின் குறிப்பு.
இப்ப இந்த கதை படித்த பின் உங்களுக்கு தோன்றும் கேள்விகளுக்கான பதில்கள்.
கேள்வி: அது யாரோட வீடு?
பதில்: காவ்யவோட வீடு தான்.
கே: அவள் ஏன் யாரும் பார்த்திற கூடாதுனு பதட்டத்தில் இருந்தாள்?.
ப:அவளுக்கு எதிர் வீட்டில் தான் காவ்யா அம்மாவின் சினேகிதி இருக்கிறார். நைட் ஊர் சுற்ற போவது தெரிந்தால் கத்துவார். இல்லேன்னா ஊரிலுள்ள காவ்யா அம்மாவிற்கு போன் போட்டு சொல்வார் என்பதால்.
கே: செக்யூரிட்டி ஏன் இவளை பார்த்தவுடன்
ஓடி வந்தார்?
ப: அவளுக்கென்று வந்த கொரியர், போஸ்ட், இதில் ஏதாவதொன்றை கொடுப்பதற்காக ஓடி வந்திருக்கலாம்.
கே: அவள் ஏன் லிப்ட்ல ஏறாமல் படிக்கட்டில் இறங்கினாள்?
ப: நடுவழில லிப்ட் எதுனா தகறாரு ஆகி நின்று விட்டால் வெளியில் அர்ஜெண்டா
போற வேலை என்னாவறது. மேலும் அந்த லிப்ட் சமீபத்தில் தான் சர்வீஸ் செய்யப்பட்டிருக்கிறது.
கே: சரி அவள் ஏன் டிவிய கூட ஆஃப் பண்ணாம அவ்வளவு வேகமா வெளில கிளம்பறா. அப்படி எங்க தான் போறா.?
ப: சார் டீன் ஏஜ் பொண்ணு காதலனோட வெளில கிளம்பறா. சினிமா ஹோட்டல் ETC...ETC... இப்படி எது வேண்ணா இருக்கும். நமக்கெதற்கு அது.
ஆர்.வி.சரவணன்.

வெள்ளி, டிசம்பர் 07, 2018

செல்லம்






செல்லம் 

"குட்மார்னிங் டாடி"
"அண்ணா. இங்க பாருங்க உங்க பொண்ணை"
இருவரது குரலுக்கும் நிமிராமலே அலுவலக வேலையில் மூழ்கியிருந்த சுந்தரமூர்த்தி கடுகடுத்தார்.
"காலங்கார்த்தாலே என்ன இது. பொண்ணை பார். என்னை பார்னு. "
"பார்த்தா தானே தெரியும்" கமலா.
"உங்க விளையாட்டை பார்க்கிறதுக்கு டயமில்ல"
" அப்படியா. அத்தை என்னை திருஷ்டி பூசணிக்காய் மாதிரி போட்டு உடைங்க பார்க்கலாம்" என்றாள் மதுமிதா.
"என்னது?" அதிர்ச்சியாய் திரும்பினார்.
60 வயதான சுந்தரமூர்த்தியின் தங்கை கமலா 20 வயதான அவரது பெண் மதுமிதாவை தன் இரு கைகளாலும் ஏந்திய படி நின்றிருந்தார்.
அந்த காட்சியை பார்த்த மாத்திரத்தில் அலறியடித்து எழுந்து வந்தார் சுந்தரமூர்த்தி.
"முதல்ல அவளை இறக்கு. வயசான உன் உடம்புக்கு எதுனா வந்துடப் போகுது . தடிக்கழுதை மாதிரி இருக்கா. சின்ன குழந்தை மாதிரி தூக்கிட்டு சுமக்கிறே நீ "
"எனக்கென்ன அண்ணா. நான் திடகாத்திரமா தான் இருக்கேன்." மருமகளை இன்னமும் நன்றாக அணைத்து கொண்ட படி சொன்னார் கமலா.
"கழுதையோட பொண்ணு கழுதை மாதிரி தானே இருக்கும்னு சொல்லுங்க அத்தை"
கோப முகம் காட்டி அத்தையின் கைகளிலிருந்து இறங்கினாள் மதுமிதா.
" அப்பாவை அப்படி சொல்ல கூடாது."
" என்னை மட்டும் அவர் சொல்லலாமா?"
"கல்யாணம் பண்ணா அடுத்த வருஷம் குழந்தைய இந்த மாதிரி தூக்கிட்டு திரிய போற பொண்ணு நீ. குழந்தை மாதிரி பிகேவ் பண்ணிட்டு இருக்கே" மகளை கண்டித்தார்.
"நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் போ."
பார்த்தியா. இதெல்லாம் உன் செல்லம்."
" இருந்திட்டு போறா விடு. அவ இப்பவும் எனக்கு குழந்தை மாதிரி தான்"
மருமகளின் தலையை தடவி கொடுத்தார் கமலா.
"அப்படி சொல்லு கமலா" மதுமிதாவும் அத்தையின் கன்னத்தை தட்டினாள்.
"க்கும் " சலித்து கொண்ட படி மீண்டும் தன் இருக்கைக்கு திரும்பினார் சுந்தரமூர்த்தி.
"அத்தை டாடிய வெறுப்பேத்தவாவது இனிமே தினமும் என்னை பெட்ரூமிலிருந்து நீங்க தான் தூக்கிட்டு வரணும். இல்லேன்னா நான் பெட்டை விட்டு எழுந்திரிக்க கூட மாட்டேன்"
"சரிடா செல்லம்."
" கமலா. நீ அதிகமா செல்லம் கொடுக்கறே. இதெல்லாம் செய்யாதே. படுக்கைய விட்டு எழுந்திரிக்க மாட்டேனு அடம்பிடிச்சா அப்படியே விட்டுடு. அவளே எழுந்து வருவா"
"சரிண்ணே"
மதுமிதா முறைக்கவும் "சும்மா உங்கப்பாவை சமாதானப்படுத்த அப்படி சொன்னேன்" காதோரம் கமலா கிசுகிசுத்தார்.
" இவர் தங்கச்சியே இவர் பேச்சை கேட்க மாட்டேங்குது. இதுல பொண்ணு தன் சொல் பேச்சு கேடகறதில்லேனு சுந்தர மூர்த்திக்கு புலம்பல் வேற" பழிப்பு காட்டி அப்பாவின் பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே பறந்தாள் மதுமிதா.
அண்ணன் தங்கை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
அடுத்த நாளிலிருந்து, காலையில் கமலா எழுப்புவதும் மதுமிதா எழ மறுப்பதும் அவர் தூக்கி கொண்டு வந்து ஹாலில் நிறுத்துவதும் சுந்தரமூர்த்தி தலையிலடித்து கொள்வதும் என்று இந்த காட்சி அந்த வீட்டில் தொடர ஆரம்பித்தது.
"கண்டிச்சு வளர்க்க சொன்னா நீ கேட்க மாட்டியா " ஒரு நாள் சிடுசிடுத்தார் அவர்.
அண்ணனுக்காகவே கண்டிப்பு காட்ட வேண்டி இருந்தது கமலாவுக்கு.
"எழுந்தரிச்சு வந்தா வா. வராட்டி போ" என்று ஒரு நாள் கம்மென்று சமையலறையில் இருந்து விட்டார் கமலா.
ஆனாலும் மதுமிதா எழுந்திரிக்கவில்லை.
ஒன்பது மணி வரை படுக்கையில் இருந்த படி அடம் பிடித்தாள். கமலாவின் கண்டிப்பு மதுமிதாவின் பிடிவாதத்தின் முன்னே செல்லுபடியாகவில்லை. பிறகென்ன. இடைவேளைக்கு பின் நிகழ்ச்சி தொடர்வதை போல இது தொடர்ந்தது.
இதோ இன்று மதுமிதாவை பெண் பார்க்க வந்திருந்தார்கள். "பொண்ணை அழைச்சிட்டு வர சொல்றாங்க" என்ற படி ஒரு உறவினர் பெண் சொல்லிவிட்டு செல்ல, சுந்தரமூர்த்தியும் மதுமிதாவின் அறைக்கு வந்து "ம் சீக்கிரம்" என்ற படி அலங்கரித்து சேரில் சோகமாய் அமர்ந்திருந்த மகளை பார்த்து சொன்னார். மதுமிதா கலங்கிய கண்களுடன் அப்பாவை பார்த்து திரும்பினாள். மகளை பார்க்க தைரியமின்றி கண்களை துடைத்தபடி அங்கிருந்து நகர்ந்தார் அவர். மதுமிதாவின் அருகே வந்த கமலாவிடம்,
"எனக்கு கல்யாணம் பண்ணிக்கவே பிடிக்கல அத்தை" வெறுப்பை கக்கினாள்.
"உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்டா. எங்களுக்கப்புறம் நீ தனியா ஆகிட கூடாதுன்னு தானே அப்பாவும் நானும் உன்னை ஒருத்தன் கையில பிடிச்சு கொடுத்திடணும்னு தவிக்கிறோம். எங்க பேச்சை கேளுடா செல்லம்"
பீறிட்டு வந்த அழுகையை கமலா மறைத்து கொண்ட படி மதுமிதாவை சேரிலிருந்து தூக்கி கொண்டு ஹாலுக்கு வர ஆரம்பித்தார்.
ஆம். சமீபத்தில் மதுமிதா ஆக்ஸிடெண்டில் இரு கால்களை இழந்திருந்ததால், இரு கைகளாலும் அவளை ஏந்தி கொண்ட படி வழக்கமாய் அவளை தினமும் இறக்கி விடும் ஹாலுக்கு வந்து பெண் பார்க்க வந்தவர்களின் முன்னே நின்றார் கமலா.

ஆர்.வி.சரவணன்.

நம் நண்பர் பாலகணேஷ் அவர்கள் பல வருடங்களுக்கு முன் குமுதத்தில் வெளியான இந்த ஓவியத்தை கொண்டு சிறுகதை எழுதுமாறு சொல்லியிருந்தார். நண்பர்கள் பலரும் எழுதியிருந்தனர். அந்த ஓவியத்திற்கான எனது சிறுகதை இது.

சனி, நவம்பர் 17, 2018

ஸ்வீட் காரம் காபி





ஸ்வீட் காரம் காபி 
(17/11/18)

இந்த தலைப்பில் தான் முன்னாடி  தளத்தில் எழுதிட்டிருந்தேன். நடுவிலே நிறுத்திட்டேன். இப்ப திரும்பவும் இந்த தலைப்பில் ஆரம்பிச்சிருக்கேன். ஆனா  இதுல வரது எல்லாமே முகநூலில் சமீபத்தில் நான் எழுதியவை தான் என்பதையும் இங்கே தெளிவு படுத்தி விடுகிறேன்.

96 எல்லோரும் கொண்டாடிட்டிருக்கிற படத்தை பார்க்க டிவி முன்னாடி உட்கார்ந்தாச்சு. படம் நல்லாருக்குமா நல்லால்லையா என்ற குழப்பத்தில் அமர்வதை விட நல்லாருக்குனு தெரிஞ்சு படம் பார்க்க உட்கார்றது ரிசர்வ் பண்ணிட்டு டென்ஷன் இல்லாம ட்ரெயினை பிடிக்கிற மாதிரி. எந்த காட்சி நம்மை படத்துக்குள்ள இழுத்து போட போகுது பார்க்கலாம்னு தில்லா பார்க்கிறப்ப, ராம் தன் ஊரை பத்தி சொல்லிட்டு வர, எங்க ஊரான கும்பகோணம் சாலை, டவுன் ஹைஸ்கூல், வாட்ஸ் அப் சாட், கிளாஸ்ரூம், இளையராஜா சாங், பங்ஷன்ல ஜானு இன்ட்ரோ, னு......ஜானு எங்க இருக்க ராம்னு கேட்கற வரைக்கும் வந்தாச்சு. ஆஹா படத்தை இது வரைக்கும் பார்த்ததுல எந்த சீன்ல உள்ளே இழுக்கப்பட்டேன்னு தெரியலயே.

திரும்பவும் படத்தை ஆரம்பத்திலருந்து 
பார்க்கணும்.

(மீண்டும் படத்தை பார்த்த பின்னாடி 96 பத்தி இன்னும் எழுதுவேன்னு நினைக்கிறேன்)

------


நண்பர் ஒருத்தர் கேட்டார்.
"சினிமால கதை பஞ்சாயத்தா ஓடிட்டிருக்கே. அடுத்து நீ எழுதிட்டிருக்கிற கதை என்னன்னு சொன்னே."
"அரியாசனம். அரசியல் கதை தான்"
"நீயும் அரசியலா. இதென்ன அரசியல் கதை சீசனா"
"அப்படியில்ல. நான் ரெண்டு வருசம் முன்னாடியே எழுத ஆரம்பிச்சிட்டேன். என் கதை எப்படிப்பட்டதுன்னா....."
"போதும் ஒன்லைன் கூட நீ சொல்ல தேவையில்ல. சொல்லவும் சொல்லாதே."
மீ ஙே.
அப்படி என்ன தான் அந்த கதை என்பவர்களுக்காக எனது அரியாசனம் கதையிலிருந்து ஒரு துளி.

 சார். சி எம்மா பதவி ஏற்க போறீங்க.மக்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க ?" மீடியாவின் கேள்வி கணைகள் இப்படியாக ஆரம்பிக்கிறது.
சில நொடிகள் யோசனைக்கு பிறகு பதில் தருகிறான் அருள்.
"சிறப்பான ஆட்சியே என் லட்சியம்."
" சார். இது எல்லாரும் வழக்கமா சொல்றது தானே. புதுசா எதுனா சொல்லலாமே."
அடித்த நொடியே பதில் வருகிறது.
"புதுசானா எப்படி? நல்ல ஆட்சிலாம் என்கிட்ட எதிர்பார்க்காதீங்கனு சொல்ல சொல்றீங்களா" டென்ஷன் இல்லாமல் கூலாகவே பதில் சொல்கிறான்.
"அப்படி இல்ல. என்னென்ன திட்டம் வச்சிருக்கீங்கனு சொல்லலாமே."
"ஒரே ஒரு திட்டம் தான். இந்த நாட்ல யாராலயும் யாருக்கும் கெடுதல் நடக்க கூடாது.நடக்கவும் விட கூடாது.
"அது முடியும்னு நினைக்கறீங்களா"
" முடியாதுனு மீடியா, முடிவே பண்ணிட்டீங்களா. அப்ப முடியாது தான்"
"என்ன சார். எங்க மேலயே பழி போடறீங்க."
அருள் சிரித்த படி கேசுவலாக பதில் தருகிறான்.
"நீங்களும் ஜனநாயகத்தோட ஒரு தூண் தானே."
(ஒரு விளம்பரம்)
------
தீபாவளி என்றால் புத்தாடை, இனிப்பு, பட்டாசு இதனுடன் என்னென்ன படம் ரிலீஸ் ஆகிறது என்ற ஆர்வமும் கூடவே வரும் அல்லவா. இப்போதெல்லாம் ஒன்றிரண்டு படங்கள் தான் ரிலீஸ் ஆகிறது. இது சினிமா ரசிகர்களின் யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது தான்.
முன்பெல்லாம் தீபாவளிக்கு நிறைய படங்கள் ரிலீஸ் ஆகும். உதாரணமாக 32 வருடத்திற்கு முந்தைய 1984 தீபாவளி வருடத்தை எடுத்து கொள்வோமே.
கும்பகோணத்தில் தேவி (இப்போது பரணிகா), செல்வம்,விஜயா, காசி, டைமண்ட், மீனாட்சி, விஜயலஷ்மி, கற்பகம், என்று எட்டு தியேட்டர்கள் இருந்தது. அனைத்திலுமே புது படங்கள் தான். தேவியில் உன்னை நான் சந்தித்தேன், விஜயாவில் எனக்குள் ஒருவன், மீனாட்சியில் நல்லவனுக்கு நல்லவன், விஜயலட்சுமியில் வைதேகி காத்திருந்தாள். கற்பகத்தில் கொம்பேறி மூக்கன், ரிலீஸ் செய்யப்பட்டிருந்தன. மற்ற இரு தியேட்டர்களிலும் ரிலீசான படம் ஞாபகமில்லை.
இதே போல் 1985 வருடம் எடுத்து கொண்டால் படிக்காதவன், சின்ன வீடு, சிந்து பைரவி, ஜப்பானில் கல்யாணராமன்.
1986 தீபாவளி எடுத்து கொண்டால், மாவீரன், புன்னகை மன்னன், லட்சுமி வந்தாச்சு (சிவாஜி), தழுவாத கைகள் (விஜயகாந்த்), விடிஞ்சா கல்யாணம் (சத்யராஜ்), தர்ம தேவதை விஜயகாந்த்) பாலைவன ரோஜாக்கள், அறுவடை நாள்.
எங்கள் வீட்டில் தீபாவளியின் போது மட்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். வீட்டிற்கு தெரியாமல் ஒன்று, தெரிந்து ஒன்று, குடும்பத்தினருடன் ஒன்று என்று செல்வதுண்டு.
இப்படி ஒவ்வொரு வருடமும் தீபாவளியன்று வெளியாகும் புது படங்களின் வரவை பற்றி நினைக்க ஆரம்பித்தால் தனி கட்டுரையே எழுதலாம்.
(ம். அது ஒரு சினிமா காலம்)

------

தஞ்சாவூர் செல்லும் போதெல்லாம், கண்டிப்பாக (பழைய பஸ்ஸ்டாண்ட் அருகேயுள்ள) அன்பு பால் நிலையம் சென்று லஸ்ஸி சாப்பிடுவோம். சமீபத்தில் சென்றிருந்த போது லஸ்ஸி ரெடியான கிளாஸை எல்லோரும் எடுத்து கொள்ளும் முன்பு "நான் ஒரு போட்டோ எடுத்துக்கட்டுமா" னு கேட்டேன்.தாராளமா என்றார்கள். கிளாஸில் ஸ்பூனால் பாலாடையை கடைக்காரர் எடுத்து போடும் போது இன்னும் கொஞ்சம் போட்டால் தான் என்ன என்றே கேட்க தோணும்.

(அதுக்கும் காசு கேட்டா என்ன பண்றதுங்கிறதினாலே கேட்கறதில்ல)
------
ரெண்டுனு ஒரு படம். அதுல மாதவன் வந்த ஆட்டோவை, அவரும் வடிவேலுமா சேர்ந்து எப்பலாம் காசில்லயோ அப்பலாம் ஒவ்வொரு பார்ட்டா கழட்டி வித்துடுவாங்க. நிற்க. ஏதாவதொரு முக்கிய தேவைக்காக நாம கஷ்டப்பட்டு கொஞ்சூண்டு சேர்த்து வச்சிருக்கிற சேமிப்பை கூட தினப்படி பணம் தேவைப்படும் போதெல்லாம் கொஞ்ச கொஞ்சமா எடுத்து செலவு பண்றதெல்லாம் கூட இந்த ரகம் தான்.

(மறுபடி சேமிப்பு உருவாகும் போது செலவும் இலவச இணைப்பா கூடவே வரும்) 

-----

"அவன் வரட்டும் இன்னிக்கு. அவனை உண்டு இல்லைனு பண்றேன் பார்" என்ற கொக்கரிப்புடன் காத்திருக்கும் கோப அம்பு, அந்த அவன் வரும் வரை காத்திருக்காமல் தென்படுவோரை எல்லாம் பதம் பார்த்து விடுகிறது.
(அனுபவச் சிந்தனை தான்)

மீண்டும் சந்திப்போம் 

ஆர் .வி.சரவணன் 

செவ்வாய், செப்டம்பர் 25, 2018

பூவப் போல பெண் ஒருத்தி














பூவப் போல பெண் ஒருத்தி


அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான் என்றாலும் இருவரிடமும்  உற்சாகம் சுத்தமாக மிஸ்ஸிங். 


‘‘எப்ப வருவே?’’ 


‘‘வேலை இருக்குனு சொன்னா புரிஞ்சிக்க மாட்டியா?’’ 


‘‘என்னைச் சுத்திச் சுத்தி வந்தப்ப  அந்த வேலையெல்லாம் என்னப்பா பண்ணே?’’ 


‘‘மூட்டை கட்டி வச்சிருந்தேன். இப்பதான் பிரிச்சு வேலை பார்த்துட்டு இருக்கேன்!’’ 


‘‘உன்  லவ்வுக்கு ஓகே சொல்லாம அலைய விட்டிருக்கணும். அப்படிச் செய்யாதது என் தப்பு...’’


‘‘உனக்கு இப்ப என்ன வேணும்?’’


‘‘என்னை பெண்  பார்க்க வர்றாங்க. முடியாதுனு சொல்லி உன்னைக் கைகாட்டப் போறேன். அதனால வீட்டுக்கு வா!’’ 


‘‘வீட்ல சம்மதிக்கலைனா..?’’


‘‘வீட்டை  விட்டு வந்துடறேன். ஓட வேணாம். நிதானமா நடந்து போய் கல்யாணம் பண்ணிப்போம்!’’

‘‘என் வீட்ல கெடுபிடி ஜாஸ்தி...’’

‘‘அதைத்  தெரிஞ்சுகிட்டுதானே என்னை உராசிகிட்டு சுத்தினே..?’’


 ‘‘நான் என்ன பண்ணணும்?’’


‘‘இந்தக் கேள்விக்கு ஏற்கனவே பதில்  சொல்லிட்டேன்...’’


‘‘சரி... வந்து தொலைக்கிறேன்...’’ 

‘‘குட்...’’ நரேனின் பதிலுக்குக் காத்திராமல் செல்போனை கட் செய்தாள் இஷா.


நரேன் சிகரெட் புகையை வெளியேற்றுவது போல் பெரு  மூச்சை வெளியேற்றினான். இவளைத் தன் வாழ்க்கையிலிருந்து எலிமினேட் செய்ய வேண்டும். எப்படி? கலா மாதிரி இல்லாமல் நிறைய  வாயாடுகிறாள். இவளைச் சுற்றிச் சுற்றி வந்ததற்காக அடியாள் வைத்து தன்னையே அடித்துக் கொல்ல வேண்டும் போலிருந்தது. நரேனுக்கு மகாபலிபுரம் செல்லும் சாலையில் வரிசையாக நின்றிருக்கும் கட்டடங்களில் ஒன்றில் இருக்கும் பெரிய நிறுவனத்தில் வேலை.  ஒரு வருடத்துக்கு முன்பு வரை சராசரி பணியாளாக இருந்தான். திடீர் அதிர்ஷ்டம், இப்போது உயர் பொறுப்பில் இருக்கிறான். பணமிருப்பவனை நோக்கி பணம் வருவதுபோல் அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளில் ஒருவர் அவனை தன் வீட்டுக்கு அழைத்து, தன்  பெண்ணை அறிமுகப்படுத்தி, அவனை மாப்பிள்ளையாக்கிக் கொள்வதாகச் சொல்ல... அவனும் வானத்தில் பறக்கிறான். இந்த  உற்சாகத்துக்குக் குறுக்கே இப்போது இஷா.  




திடீரென்று வேகமாக வந்த லாரி நரேனின் பைக்கை உரச... தடுமாறி சுயநினைவுக்கு வந்தான்.  பேலன்ஸ் செய்ய ஓரத்திற்கு எடுத்தவன், அங்கிருந்த ஆட்டின் மீது மோதினான். அது தூக்கி எறியப்பட்டு ‘மே...’ எனக் கதறியது. 

‘‘என் மேல உள்ள கோபத்தை பைக்குல காட்டாத...’’ சீறிய இஷா இறங்கி, துடித்துக் கொண்டிருந்த ஆட்டின் அருகில் ஓடினாள்.


‘எப்படியும் பிரியாணி ஆகப் போற ஆடு... வா...’’


‘‘ஓருயிர் துடிச்சுட்டு இருக்கிறப்ப உன்னால எப்படி இப்படிப் பேச முடியுது..?’’ 


 ‘ஆட்டுக்கு சொந்தக்காரன் வந்து காசு கேட்பான்... அதான்...’’மனமில்லாமல் இஷா வந்து பைக்கில் ஏறினாள். 

‘‘நீ வண்டி ஓட்டறதைப்  பார்த்தா என்னைக் கொல்ல ப்ளான் செய்திருக்கிற மாதிரி தெரியுது...’’



 ‘‘அவன் வரமாட்டான். வேற வேலை இருந்தா பார்...’’ செல்போனில்  தன் முகத்தை அப்படியும் இப்படியும் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டே இஷாவின் தோழி ரம்யா சொன்னாள்


.‘‘வருவான்டி.  வரலேன்னா அவன் வீட்டுக்கு போயிடுவேன்!’’

‘‘அவனை விட்டுடறது பெட்டர்னு தோண்றது. ஏன்னா ஷாப்பிங் மால்ல அவன்கூட நான்  பார்த்த பொண்ணு செமையா இருந்தா. பணக்காரக் களை. அவளை விட்டுட்டு உன்னைக் கல்யாணம் பண்ணிக்க அவன் என்ன முட்டாளா?’’

“நான்தான் முட்டாள். நீ இல்லனா எனக்கு வாழ்க்கையே இல்லனு சுத்திச் சுத்தி வந்தவனை நம்பினேன் பாரு... விட மாட்டேன். நரேன்  கூடத்தான் என் கல்யாணம்!’’ உறுதியாகச் சொன்னாள்.

“இவ்வளவு தீவிரமா இருக்கியே... ரெண்டு பேரும் எல்லை மீறிட்டீங்களா..?’’ 

‘‘நோ!’’
‘‘உன்னை நம்பறேன். ஆனா, அந்த  எண்ணத்தோடுதான் உன் பின்னால சுத்தியிருக்கான். நீ உஷாரா இருந்ததால இப்ப விலகறான். அவனைத் தூக்கிப் போட்டுட்டு அப்பா  அம்மா பார்க்கிற பையனைக் கட்டிக்க...’’
‘‘எப்படி முடியும்? மனசுல அவன் கூட வாழ்ந்துட்டு இருக்கேன்!’’ 

‘‘அப்படின்னா முதல்ல உன்  அப்பா அம்மா கிட்ட பர்மிஷன் வாங்கு...’’


வாங்க முயற்சி செய்தாள். அவள் வீட்டில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார்கள். அவளும் அதே  உயரம் குதித்தாள். குடும்பத்தினருடன் ஏற்பட்ட தர்க்கம் முடிவுக்கு வர சில நாட்கள் பிடித்தது. முடிவில் இஷாவுக்கு வெற்றி கிடைத்தது. மகிழ்ச்சியுடன் நரேனுக்கு போன் செய்தாள். ஸ்விட்ச் ஆஃப். அவன் அலுவலகத்துக்கு போன் செய்தாள். வெளியூர் போயிருப்பதாகச்  சொன்னார்கள். நம்மிடம் சொல்லாமலா..? ரம்யா சொன்னது நினைவுக்கு வந்தது. நிஜமாக இருக்குமோ..? தடுமாறினாள்.


பைக் அந்த மலையின் அடிவாரத்திலிருந்து மேல்நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது. இஷா தன் புருவத்தைச் சுருக்கினாள். 


‘‘சென்னைல  இல்லாத இடமா... பேச இங்க அழைச்சுட்டு வரே..?’’

 ‘‘மனசு விட்டுப் பேச இதுதான் தோதான இடம்...’’ வாய் விட்டுச் சொன்ன நரேன்,  ‘‘சொல் பேச்சு கேட்கலைன்னா உன்னை முடிக்கவும் இதுதான் சரியான இடம்...’’ என்றான் உள்ளுக்குள்.


அன்று காலை நரேன் அலுவலகம்  வந்தபோது, ரிசப்ஷனில் காத்திருந்த இஷாவைத்தான் முதலில் பார்த்தான். பதற்றத்துடன் அருகில் வந்தவன், ‘‘இங்க ஏன் வந்தே..?’’  என்றான். “செல்போனை ஏன் ஆஃப் பண்ணே?”

‘‘ஒர்க் ஆகலே!’’
 “பொய்! இதைப் பத்தி அப்புறம் பேசலாம். அப்பா அம்மா ஓகே  சொல்லிட்டாங்க. வா வீட்டுக்கு போகலாம்...’’
“பைத்தியமா நீ...” சீற நினைத்தவன் சுற்றும் முற்றும் பார்த்து அமைதியானான். ‘‘ஈவினிங்  பார்க்கிறேன்...’’

“முதல்ல செல்போனை ஆன் பண்ணு. இல்லைனா திரும்ப வருவேன்...’’ பதிலுக்குக் காத்திராமல் தன் ஹை ஹீல்ஸ் சப்தித்தபடி நடந்து  மறைந்தாள்.


நரேனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மென்மையாக இருந்தவளா இப்படிப் பேசுகிறாள்? தன் கேபின் வந்தடைந்தான். மாமனாராக  வரப்போகும் நல்லசிவம் இன்டர்காமில் அழைத்தார். ‘‘வாங்க... எம்டியை மீட் பண்ணலாம்...’’ சென்றான். எம்டி அறைக்குள் நுழைந்ததும்  அவருக்கு வணக்கம் சொன்னான். 


‘‘வாழ்த்துக்கள் நரேன். நல்லசிவம் சொன்னார். குட் செலக்‌ஷன்னு அவர்கிட்டே சொன்னேன்...’’


‘‘தேங்க்ஸ் சார்...’’ நெளிந்தான். ‘‘ஹனிமூன் எங்க..?’’‘‘லண்டன் சார். பொண்ணு விரும்பறா...’’ நல்லசிவம் புன்னகைத்தார்.‘‘நைஸ்...’’ எம்டி  புன்னகைத்தார்.

‘லண்டனா...’ வியந்தபடி அவர் அறையை விட்டு வெளியே வந்தபோது இஷாவிடம் இருந்து மெசேஜ் வந்தது. ‘3 மணிக்குப் பார்க்கலாமா..?’  பற்களைக் கடித்தான். பதில் அனுப்பாவிட்டால் நேரில் வருவாள். நல்லசிவம் அவளைப் பார்த்துவிட்டால் பிரச்னை. முடிவு கட்ட  வேண்டும்... 



அந்த அருவியின் அருகே பைக் நின்றது. இஷா இறங்கினாள். இருவரும் பாறைகளுக்கிடையே கால் வைத்து ஏறி சம தரைக்கு  வந்தார்கள். சூரியன் மேற்கே இருக்க... நீல வானத்தில் திட்டுத் திட்டாக பஞ்சு மேகங்கள் நகர்ந்தபடி இருந்தன. அங்கே சிறிய குளம்  ஒன்றிருந்தது. யாரோ புண்ணியவான் குளம் ஆழம் ஜாக்கிரதை என்று சாக்பீஸால் பாறையில் எழுதி வைத்திருந்தார். மேலிருந்து  பாறைகளுக்கிடையே வெளிப்பட்டு குளத்தில் விழுந்து கொண்டிருந்த தண்ணீர் குளத்திலிருந்து வெளிப்பட்டு அருவியாகக்  கீழே இறங்கி  கொண்டிருந்தது. 

‘‘இப்படி ஓரிடம் இருக்கறது உனக்கு எப்படித் தெரியும்..?’’

ரஞ்சனியுடன் வந்து ஜாலியாக இருந்தபோது... என்றா சொல்ல முடியும்? 
 ‘‘ஃபிரெண்ட் சொன்னான்...’’ முணுமுணுத்தான் நரேன். 

இஷா அந்தக் குளத்தை ஒட்டினாற் போலிருந்த பாறையில் அமர்ந்தாள்.  அருகிலிருந்த மரத்தின் இலைகள் அவள் மேல் உதிர்ந்தன. நரேன் அருகே அமர்ந்தான்.‘நம்மை விட்டு விலகச் சொல்லணும். மறுத்தா  குளத்துல தள்ளிட வேண்டியதுதான்...’ நரேனுக்குள் எண்ணங்கள் படையெடுத்தன.‘எப்படியாவது நரேனை கன்வின்ஸ் பண்ணி உடனே  கல்யாணம் பண்ணியாகணும்...’ இஷா முடிவுடன் அவனை ஏறிட்டாள். 


‘‘எங்க வீட்ல முடியாதுனு சொல்லிட்டாங்க இஷா...’’ நரேனே  பேச்சை ஆரம்பித்தான்.

‘‘அப்படித்தான் சொல்வாங்க... பின்னே பணக்காரப் பொண்ணு உனக்குக் கிடைச்சிருக்காளே!’’ நேரடியாக விஷயத்துக்கு வந்தாள். நரேன் அதிர்ந்தான். 

‘‘உளறாத...’’ 
 ‘‘உன்னை லவ் பண்றேன்னு நீ உளறினதை விடவா? இனி மறைச்சுப் பேசவேண்டாம். எனக்கு எல்லாம்  தெரியும்...’’ 
‘‘பிறகு என்ன... விலகிக்கோ...’’ நரேன் எழுந்து பின்னால் தூசியைத் தட்டினான்.
‘‘ஒருவேளை அவளை விட என்கிட்ட அதிகப்  பணமிருந்தா என்னைக் கட்டிப்ப இல்ல...’’திரும்பிப் பார்க்காமலே கையை மட்டும் ‘முடியாது’ என ஆட்டினான். அவன் தொடர்ந்து சென்று  கொண்டிருப்பதை இமைக்காமல் பார்த்தாள். 

‘‘மிஸ்டர் நல்லசிவம்கிட்ட நம்ம விஷயத்தைச் சொல்லப் போறேன்...’’சட்டெனத் திரும்பி  அவள் அருகில் வந்து அமர்ந்தான். 


‘‘இங்க பார். லவ் பண்றேன்னு உன்கூட சுத்தினேன். அவ்வளவுதான். வேற எந்தத் தப்பும்  நடக்கலையே..?’’


‘‘அதனால..?’’


‘‘வேற எவனையாவது கல்யாணம் பண்ணிக்கோ!’’


‘‘முடியாது...’’


‘‘ஓகே. நான்தான் வேணும்னா உன்னை கீப்பா வைச்சுக்கறேன்...’’ஒரு நொடி கூட இஷா தாமதிக்கவில்லை. அறைந்தாள்.நரேன் கோபத்தில் சுற்று முற்றும் திரும்பிப் பார்த்தான். குளம் ஆழம் ஜாக்கிரதை  என்ற எழுத்துக்கள் எதிரே பாறையில் எழுதப்பட்டிருந்தன. இப்படியே இவளைத் தள்ளிவிட்டால் என்ன... தள்ளி விட்டான் .இஷா இதை எதிர்பார்க்காமல்  தடுமாறினாலும் பாறைக்கு அருகிலிருந்த அந்த மரத்தை தன் ஒரு கையால் அணைத்து இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். இன்னொரு  கையை பாறையில் ஊன்றி எழ முயற்சித்தாள். நரேன் அவளது முதுகில் கைகளை வைத்துத்தள்ளினான். இஷா தன்னிரு கைகளாலும்  அந்த  மரத்தைக் கட்டி அணைத்தது போல் விடாமல் பற்றியிருந்ததால் அவனால் முடியவில்லை. மரத்தைப் பிடித்திருந்த அவளது  கையைச் சிரமப்பட்டு விடுவிக்க முயற்சித்தான். ஆனால், நரேன் கால் வைத்திருந்த பாறை வழுக்க ஆரம்பிக்கவே... அப்படியே சறுக்கி  தண்ணீரில் விழுந்தான். பிடித்துக் கொள்ள ஒன்றும் கிடைக்காமல் தடுமாறினான். அவன் முழுக்க தண்ணீரில் மூழ்கி மறைந்த பின்னும்  குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் இஷா.   



ஆர்.வி.சரவணன் 


(எனது இந்த சிறுகதை குங்குமம் 31-08-2018 வார இதழில் வெளியானது. வெளியிட்ட குங்குமம் வார இதழுக்கும் குங்குமம் ஆசிரியர் அவர்களுக்கும் அன்பு மிக்க நன்றி.)

வெள்ளி, செப்டம்பர் 14, 2018

பிள்ளையார்





பிள்ளையார் 

மாறாத புன்னகையுடன் வீற்றிருந்தார் பிள்ளையார். கடை தெரு முழுவதும் விதவிதமான வடிவங்களில், உயரங்களில்.வண்ணங்களில்.

இதில் நம் வீட்டுக்கு வர போகிறவர் யார் ? என்ற கேள்வியுடன் நானும் என் மகனும் ஒரு கடையின் அருகில் செல்கிறோம்.முதல் பார்வையில் தென்பட்ட களி மண் பிள்ளையார் மனசுக்கு நெருக்கமாகிறார். வேறொன்றை பார்க்கலாமே என்ற மனித மன ஆவல் என் முன்னே வெள்ளம் போல் கரை புரண்டோடுகிறது. அதன் பின்னே நானும் செல்ல ஆயத்தமாகிறேன். மற்ற பிள்ளையர்களை பார்த்த பின்னே, முதலில் பார்த்த பிள்ளையாரே  நல்லாருக்கே என்கிறது மனம். மகனும் அதையே வழி மொழிகிறான். சரி என்று பின் வாங்கி, கொஞ்சம் முன் சென்று முதலில் பார்த்த முழு முதற் கடவுளை கடைக்காரர் சொல்லிய விலைக்கு வாங்கி கொள்கிறேன்.



பிள்ளையார் என் கைகளில் வந்தமர்ந்து கொள்கிறார். அவர் புன்னகையில் ஏதோ அர்த்தமிருப்பதாய் ஒரு பிரமை. மனைப்பலகையில் அவரை அமர வைத்து மகனிடம் கொடுத்த படி, பூ பழம், தோரணம்.... என்று வாங்கி கொண்டிருக்கிறேன். “சீக்கிரம் வா. ஒரு பிள்ளையார் வாங்கி வர சொன்னா எவ்வளவு நேரமாச்சு பாருனு வீட்ல உன் அம்மாவும், மனைவியும் திட்டிட்டிருக்காங்க.  அது எனக்கு இங்கே வரை கேட்குது” என்கிறார் பிள்ளையார். “இதோ” என்ற படி அவர் பேசுவதை ஆச்சரியமாக பார்த்த படியே வந்து டூ வீலரை ஸ்டார்ட் செய்கிறேன். மகனும் அதே ஆச்சரியத்துடன் எனக்கு பின்னே பிள்ளையாரை தனக்கு முன்னே அமர வைத்து கொள்கிறான்.  கூடவே “அப்பா மேடு பள்ளம் இருக்கும்.மெதுவா போங்க” என்கிறான். தலையாட்டுகிறேன். “மேட்டுக்கு போனாலும் சரி. பள்ளத்துக்கு போனாலும் சரி கஷ்டம் தான். சீரான சாலையில் பயணிக்கிறது நல்லாருக்கும். இது வாழ்க்கைக்கும் கூட பொருந்தும்” என்கிறார் பிள்ளையார். இருவருமே அவர் சொல்வதை லைக் செய்த படி பயணிக்கின்றோம்.  



ஏதோ ஒரு திருப்பத்தில் உயரம் தாண்டுகிறது வண்டி. “அப்பா பார்த்துப்பா” பையன் பல்லை கடித்த படி கத்துகிறான். கொஞ்சம் பயத்துடன் வண்டியை நிறுத்தி திரும்பி பிள்ளையாரை பார்க்கிறேன். பையனும் அவரை பார்க்கிறான். வேடிக்கை பார்த்த படி இருந்த பிள்ளையார் “ரெண்டு பேரும் என்னை பார்த்துகிட்டிருந்தா வண்டியை யாரு ஓட்டுறது” என்கிறார். மீண்டும் பயணிக்கிறது வண்டி.

இப்போது மழை தூற ஆரம்பிக்கிறது. ஓரமாக வண்டியை நிறுத்தி, பிள்ளையார் மேல் மழை படாத வண்ணம் காத்து கொள்கிறோம். பிள்ளையாருக்கு வாங்கியிருந்த வண்ண காகித குடையையும் பத்திரப்படுத்துகிறோம். சாலையின் பாதி வரை இடத்தை ஆக்ரமித்து கடை போட்டிருந்த வியாபாரிகள் அவசர அவரசரமாக தார் பாய் கொண்டு தங்கள் பொருள்களை காத்து கொள்ள முற்படுகிறார்கள். அதை கவனித்த படி “மழை பெய்தாலும் பிரச்னை. பெய்யாட்டியும் பிரச்னை இல்லியா” என்கிறார் பிள்ளையார். மீண்டும் ஒரு தலையாட்டல் எங்களிடமிருந்து.
மழை நின்று விடுகிறது. அடுத்த மழை வருவதற்குள் வீடு செல்ல வேண்டும் என்ற உத்வேகத்துடன் வீடு வந்து சேர்கிறோம். அம்மா மனைவி, மகள் பிள்ளையாரை வரவேற்கிறார்கள். "அம்மா இந்த பிள்ளையார் பேசறாரும்மா"  என்கிறான் மகன். அம்மாவும் மனைவியும் ஆச்சரியமாய் என்னை பார்க்க நான் தலையசைக்கிறேன்.மகள் சொல்கிறாள். "எங்க பேச சொல்லு  பிள்ளையாரை? என்கிறாள். "நேற்று உன் பள்ளியில் கொடுத்த ஹோம் ஒர்க்கை என் விழாவை காரணம் காட்டி எழுதாமல் சென்று விடாதே. கண்டிப்பாக தண்டனை கொடுக்க போகிறார்கள். ஆகவே எழுதி விடு" என்கிறார் பிள்ளையார். “வீட்டில் எல்லாரும் ஆச்சரியமாகிறார்கள். அவரை பூஜை அறையில் வைத்து அலங்கரிக்கிறோம்.  மழை தூறலால் அவருக்கு வாங்கி காகித குடை நனைந்திருக்கவே,  காற்றில் அதை உலர வைக்க ஆயத்தமாகிறேன். 

"ஆமா குடை எனக்கு வாங்கினியா. மழைக்கு வாங்கினியா” என்கிறார் பிள்ளையார். 
 “உங்களுக்கு தான்”. “அதான் மழைக்கு உபயோகப்படல "  கலகலவென சிரிக்கிறார் பிள்ளையார். பூஜையை முன்னிட்டு ஆளுக்கொரு வேலையாய்  இருந்த நாங்கள் அனைவரும் அவரை திரும்பி பார்க்கிறோம். சிரித்தது இவர் தானா என்பது போல், அதே மாறாத புன்னகையுடன் வீற்றிருக்கிறார் பிள்ளையார்.

விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.

ஆர்.வி.சரவணன்.

செவ்வாய், செப்டம்பர் 11, 2018

முகநூல் குறிப்புகள் -4







முகநூல் குறிப்புகள் -4

பழைய படங்கள் பார்ப்பதென்றால் அவ்வளவு பிரியம் எனக்கு. நேற்றிரவு சேனல்களை திருப்பி கொண்டே வருகையில் தூர்தர்ஷனில் கே. பாலச்சந்தரின் அழகன் படம், அப்போது தான் சென்சார் போர்டு சர்ட்டிபிகேட்டுடன் ஆரம்பித்திருந்தது.
நிறைய முறை இந்த படம் பார்த்திருந்தாலும் பிடித்த படமாதலால், தூக்கம் வரும் வரை பார்க்கலாம் என்று பார்க்க ஆரம்பித்தோம். சங்கீத ஸ்வரங்கள் பாடல் காட்சி போல், படம் முடியும் வரை தூக்கம் வரவில்லை.படத்தில் எனக்கு பிடித்த காட்சிகள் மம்முட்டி நடத்தும் ஹோட்டலின் மெனு லிஸ்ட் போல் நிறைய இருக்கிறது. இருந்தும் சாம்பிளுக்கு ஒன்று.
கோபத்தில் பானுப்பிரியா டான்ஸ் ஆடி கொண்டே மம்முட்டியிடம் பேசுவார். அவரது குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மம்முட்டி கோபத்தில் கூட எவ்வளவு அழகு பாரேன் என்பது போல் அனைத்தையும் பொறுமையாக சிரித்த படி கேட்டு, "உன்னை மாதிரி டான்ஸ் ஆடிக்கிட்டே எல்லாம் எனக்கு சொல்ல தெரியாது" என்று ஆரம்பித்து தன் பங்குக்கு பொரிந்து தள்ள ஆரம்பிப்பார். இருவர் கோபத்திலும் இருக்கும் நியாயம் அந்த காட்சியில் அழகாக வெளிப்பட்டிருக்கும்.
இந்தப்படம் பற்றி ஒரு பதிவெழுதும் ஆசையிருக்கிறது. ஒவ்வொரு முறை அழகன் படம் பார்க்கும் போதும் இந்த ஆசை வரும்.

------

ஒரு நண்பருடைய கம்பெனி பாஸ் திருமண ரிசப்ஷனுக்கு அலுவலக நண்பர்களுடன் சென்றிருந்தேன். அங்கே நண்பர் தன்னோடு பணி புரிபவர்களை அறிமுகப்படுத்துகையில் ஒரு பெண், " நீங்க தான் சரவணனா ?" என்றார். "எஸ்" என்றேன் தயக்கமாக. "உங்க கதை படிச்சேன் நல்லாருந்துச்சு"என்றார். நன்றி சொல்ல முற்படும் அந்த சில நொடிகளுக்குள்ளாக, ரெண்டு கதையில் எந்த கதையை இவர் படித்தார்? அது எப்படி அவருக்கு அறிமுகம் ? என்று நான் யோசிக்க ஆரம்பித்து விட்டேன். இதை கவனித்த நண்பர் பிரபாத் அருகில் வந்து பதில் கொடுத்தார். "உங்க திருமண ஒத்திகை கதைய கொடுத்து எப்படி இருக்குனு படிச்சு சொல்ல சொல்லிருந்தேன். படிச்சவங்க, உங்களை நேர்ல பார்த்தவுடன் சொல்லிட்டாங்க"
மகிழ்ச்சி.

------

முறை மாமன் படத்துல ஜெயராமும் கவுண்டமணியும் வீட்டில் கோபித்துக் கொண்டு தனியாக சமைக்க ஆரம்பிப்பார்கள். சமைத்து முடித்ததை அவர்கள் வந்து சாப்பிடுவதற்குள் டேஸ்ட் பார்க்கும் மனோரமா, சாப்பாடு நன்றாக இருப்பதை பார்த்து விட்டு இவனுங்களை இப்படியே விட்டா தலைகால் புரியாம ஆடுவாங்க என்று சாப்பாட்டில் உப்பையும் மிளகாய் பொடியையையும் அதிகமாக போட்டு விடுவார். நிற்க.
அலுவலகத்தில் நாம என்ன தான் மாய்ஞ்சு மாய்ஞ்சு வேலை பார்த்து டயத்துக்கு முடிச்சு கொடுக்கும் போது முதலாளியோ, மேளாளரோ எங்கே சரியா இருக்குனு சொன்னா இவங்க ஏறிப்பாங்களோனு புதிதாக ஒரு தப்பை கண்டு பிடிச்சு திட்ட ஆரம்பிப்பாங்க பாருங்க. ஒழுங்கா பார்த்த வேலைல எப்படிடா தப்பு வந்திருக்கும்னு கவுண்டமணி ஜெயராம் போல முழிச்சுகிட்டு நிக்கிறது தான் அப்ப நம்ம நிலைமையா இருக்கும்.

------

கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு பேருந்தில் வந்து கொண்டிருக்கையில் சாலையோர உணவகம் ஒன்றில் இரவு ஒரு மணி வாக்கில் பேருந்து நிறுத்தப்பட்டது. 
"வண்டி பத்து நிமிஷம் நிக்கும். டீ காபி சாப்பிடறவங்க சாப்பிடலாம்" உணவக ஊழியரின் அழைப்பிற்கு மதிப்பளித்து, ஏதேனும் சாப்பிட வேண்டியோ, இயற்கை உபாதையோ, இல்லை உட்கார்ந்து கொண்டே வருவதால் ரிலாக்ஸ் வேண்டியோ பயணிகள் ஒவ்வொருவராக இறங்க ஆரம்பித்தனர். மூன்றாவது காரணத்திற்காக நானும் இறங்கினேன்.காபி,டீ,பிஸ்கட் கூல்ட்ரிங்ஸ் ஸ்டால்களுக்குடையே போட்டி போட்டபடி இருந்த இளநீர் குவியல் என் கவனத்தை ஈர்த்தது. சாப்பிடும் ஆசையிருந்தும் (விலை காரணமாக) வாங்க ஆசையில்லை.இருந்தும் ஒருவர் கூல்ட்ரிங்ஸ் கடையில் இருப்பவரை அணுகி, "இளநீர் வேணுங்க. அங்க கடையில ஆள் இல்லியே " என்றார். அதற்கு கூல்ட்ரிங்ஸ் கடையில் இருந்தவர் சொன்னார்.
"நடு ராத்திரில யாரு சார் உட்கார்ந்து வெட்டிகிட்டிருக்கிறது?. இதோ இவ்வளவு ஐட்டம் இருக்குதே. இத வாங்கிக்குங்க" இளநீர் கேட்டவர் நடுவில கொஞ்சம் பக்கத்தை காணோம் விஜய் சேதுபதி போல் நீ சொன்னா நான் கேட்கணுமா என்பது போல் கடையிலிருந்து விலகி சென்று விட்டார்.

------

ஒண்ணாம் தேதி வந்தவுடன் கவுண்டமணியாகி, "அது என்ன விலை, இது என்ன விலை, நான் இப்ப எதையாவது வாங்கியாகணுமே" என்று பரபரக்கும் மனசை, இருபதாம் தேதி "ஜிம்பலக்கடி பம்பா. இப்ப வாங்குடா பார்ப்போம்" என்று கவுண்டமணி வாய்சிலேயே, திருப்பியடித்து அடக்கி வைக்குமாம் வாழ்க்கை.

------

நம் முயற்சிகளில் ஆயிரம் கஷ்டங்களை கடந்திருப்போம். உலகத்திற்கு அது ஒரு பொருட்டே அல்ல.முயற்சிகள் வெற்றியை தொடும் அந்த தருணத்திலிருந்து தான் உலகம் நம்மை ஆச்சரியமாய் கவனிக்க தொடங்குகிறது. அந்த ஆயிரம் கஷ்டங்களும் முக்கியத்துவம் பெறுவது கூட அந்த தருணத்திலிருந்து தான்.

ஆர்.வி.சரவணன்