வியாழன், நவம்பர் 23, 2017

அறம்





அறம் 


எல்லாரும் கலந்துகிட்ட ஒரு மீட்டிங், ஸ்டார்ட் ஆகி நடந்துட்டிருக்கிறப்ப லேட்டா வேர்க்க விறுவிறுக்க வந்து அட்டெண்டன்ஸ் கொடுத்தா எப்படி இருக்கும். அப்படி தான் தோணுது இந்த பதிவு எழுதற நேரத்துல எனக்கு. அதாவது அறம் படம் நான் பார்த்தது சென்ற ஞாயிறு  தான். 


ஒரு கலெக்டரை விசாரணை செய்வதாக ஆரம்பிக்கிறது படம். இதில் ஆடியன்சை ஈர்க்கிற பாயிண்ட் எங்க இருந்து ஆரம்பிக்க போகுது என்ற நினைப்போடு பார்க்க ஆரம்பிக்கையில் நடுவழியில் வண்டி நின்று போய் பெட்ரோலும் இல்லாமல் குடிக்க தண்ணீரும் இல்லாமல் " பையன் போனை எடுத்தான்னா குடிக்க தண்ணி பாட்டில் வாங்கிட்டு வர சொல்லு தாகமாருக்கு" என்று புருசனிடம் சொல்லி கொண்டிருக்கும் அந்த பெண்ணின் வார்த்தைக்கு அடுத்த காட்சி அந்த பையனின் அறிமுகம் . எங்கே ? அவன் தண்ணீரில் நீச்சலடிப்பவனாக . அட என்று நிமிர்ந்து உட்காருகையில், "வாங்க நம்ம தண்ணீர் பிரச்னையை அடுத்தவங்களுக்கு தொந்தரவு இல்லாமல் பேசி தீர்வு காணுவோம்" என்பதாக கலெக்டர் மதிவதனியின் என்ட்ரி இன்னும் சுவாரஸ்யமாக்குகிறது. அதன் பின் ஆழ் துளை கிணறுக்குள் கயிறு இறக்குவது போல் நம் மன ஆழம் தேடி காட்சிகள் ஒவ்வொன்றாக இறங்குகின்றன. ஆழ்துளைக்குள் சிக்கி கொண்ட அந்த சிறுமியின் முகம் மானிட்டரில் முதல் முறை தெரியும் போது தொற்றி கொள்ளும் பரபரப்பு படத்தின் கடைசி வரை நீள்கிறது.

"உன் அத்தை பேசறேம்மா. முறுக்கு வாங்கிட்டு வந்திருக்கான் உன் அப்பா. நீ வெளில வந்தோன சாப்பிடலாம் என்ன" அழுத படி சிறுமிக்கு தைரியம் சொல்லும் அந்த பெண்மணியின் வார்த்தைகளுக்கு கண்கள் கலங்கி விடுகிறது.

செய்தி சேனல் விவாத காட்சி ஆங்காங்கே குறுக்கிடுகிறது. வார்த்தைகளை மியூட் செய்த படி அவற்றை காண்பித்திருக்கலாம். பாதிக்கப்பட்ட மக்கள் பேசும் யதார்த்தத்தை மீறியா பேசிட போறாங்க. (உதாரணத்திற்கு பழனி பட்டாளத்தின் வார்த்தை பிரயோகம் ஒவ்வொன்றும் ராக்கெட போல் கிளம்பி வருவதை குறிப்பிடலாம்).

படம் முடிந்து வீட்டிற்கு வந்து சில மணி நேரங்கள் ஆகியும் கூட ராமச்சந்திரனின் பதறலும், சுனு லட்சுமியின் அழுகையும், பய முகம் காட்டும் அந்த சிறுமியும், மக்களிடம் அதிகாரம் காட்டாத அதிகாரி மதிவதனியும் இன்னும் நிழலாடி கொண்டே இருக்கிறார்கள். சில படங்கள் பார்த்து விட்டு வருகையில் மட்டும் ஒரு நிறைவு கிடைக்கும். அறமும் அத்தகைய நிறைவை கொடுத்திருக்கிறது.

வாழ்த்துக்கள்
நயன்தாரா மற்றும்  கோபி நயினார் குழுவினருக்கு 

ஆர் .வி.சரவணன் 

சனி, நவம்பர் 11, 2017

திருமண ஒத்திகை நூல் வெளியீட்டு விழா



திருமண ஒத்திகை நூல் வெளியீட்டு விழா


தண்ணீரை அண்ட விடாத பால் சூடா எடுத்துண்டு, அதுல முதல் முதலா இறக்கின டிகாக்‌ஷனை வள்ளல் கணக்காவும் வாரி வழங்காம கஞ்சத்தனமாவும் குறைச்சிடாம சரியான விகிதத்துல கலந்துகிட்டு, காபியின் கசப்பை மீறி செயல்பட முடியாத வண்ணம் சர்க்கரையோட கூட்டணி அமைச்சு, கொஞ்சமே கொஞ்சம் ஆத்தி அதில உதயமாகிற நுரை கீரீடத்தை காபிக்கு அணிவிச்சு, ஒரு மழை நாளில் துணையோடு சேர்ந்தமர்ந்து கொஞ்சலான வார்த்தைகளின் இடையிடையே அந்த காபியை பருகும் போது ஒரு உற்சாகம் வரும் பாருங்க. அதை அசோகன் வாய்ஸ்ல இப்படி தான் சொல்ல தோணும்.

"ஆஹா. இந்த காபிக்கு நான் அடிமை"


எதுக்கு இதை இப்ப சொல்றேன்?. கேள்வி வருதுல்ல. அதற்கான பதில். திருமண ஒத்திகை நாவலில் நாயகன் நாயகிக்கு இடையில் காபி ஒரு காதல் தூதுவன். 
ஆகவே காபியின்  ரசனை வர்ணனை இங்கு .

சரி விசயத்துக்கு வருகிறேன். திருமண ஒத்திகை நூல் வெளியீட்டு விழா இன்று மாலை டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறுகிறது. இந்த இனிய நிகழ்வில் உங்களின் வருகையும் வாழ்த்துக்களும் விழாவிற்கு மேலும் இனிமை சேர்க்கட்டும்.





ஆர்.வி.சரவணன்