புதன், மார்ச் 28, 2012

ஒரு வி.ஐ.பி க்கு எனது ஆட்டோகிராப்


ஒரு வி.ஐ.பி க்கு எனது ஆட்டோகிராப்

நான் கல்லூரி படிக்கும் காலத்தில் ஒரு முன்னணி இயக்குனரின் (அவர் இயக்குனர் மட்டுமே ) ரசிகனாய் இருந்தேன். 

சில வருடங்களுக்கு முன் புத்தக கண்காட்சியில் ஒரு புத்தக ஸ்டாலில் அவரை சந்திக்க நேர்ந்தது. அவரிடம் அந்த புத்தக ஸ்டாலில் புத்தகம் வாங்கி தான், அவரிடம் ஆட்டோகிராப் பெற்று கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். உடனே ஒரு புத்தகம் வாங்கி அவரிடம் கையெழுத்துக்கு நீட்டினேன். அவரும் கையெழுத்திட்டு கொடுத்தார். அவர் கையெழுத்து இடும் போது நான், சார் நான் உங்க படங்களின் ரசிகன் உங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து உங்கள் பக்கத்தில் நிற்பதை ரொம்ப சந்தோசமா பெருமையா உணர்றேன் என்றேன். அதற்கு அவர் எந்த ஒரு ரியாக்சனும் செய்யவில்லை. ரு சின்ன ஸ்மைல் கூட வெளிபடுத்தவில்லை. இயந்திர தனமாய் தொடர்ந்து ஒவ்வொருவரிடமும் கையெழுத்து போடுவதிலேயே கவனமாக இருந்தார். என் மனது ரொம்பவும்  காயப்பட்டது.

அவ்வளவு பெரிய இயக்குனரின் எத்தனையோ ரசிகர்களில் நீயும் ஒருவன் எத்தனை பேரை தான் அவர் பார்த்து சிரிப்பார் இதை எல்லாம் எதிர் பார்ப்பது தவறு என்று தானே சொல்ல வருகிறீர்கள். நம் பாக்கெட்டிலிருந்து கீழே விழுந்த காசுகள் ஒரு ரூபாய் நாணயங்களாக இருக்கலாம் அதற்காக ஒரு நாணயத்தை யேனும் விட்டு விடுகிறோமா என்ன. அது போல் தான் ஒவ்வொரு ரசிகனும் அவருக்கு முக்கியமானவர். அவர் என்னுடன் பேச கூட வேண்டாம். ஒரு சின்ன பார்வையில் நான் சொன்னதை உள் வாங்கி கொண்டு சின்ன ஆச்சரியமேனும் முகத்தில் காட்டியிருக்கலாம். 
செய்யவில்லை  எனும்போது மனது ரொம்ப கஷ்டமாகி விட்டது .

அவரது படம் ஒன்றை கல்லூரி நாட்களில் பார்த்து விட்டு நீண்ட பாராட்டு கடிதம்  எழுதி அனுப்பி வைத்திருந்தேன் என்பது நினைவுக்கு வருகிறது.


பின் குறிப்பு

இப்போதெல்லாம் ஏதேனும் வி ஐ பி யை பார்க்கும் போது அருகில் செல்ல மனம் வருவதில்லை. காரணம் நாம்  ஏற்கனவே அவர் மேல் கொண்டிருக்கும் ஒரு நல்ல இமேஜ் இதனால் ஸ்பாயில் ஆகிடுமோ எனபதால் தவிர்க்கிறேன். அதற்காக எல்லோரும் அப்படி தான் என்று நான் சொல்லவில்லை எனக்கு கிடைத்த அனுபவத்தை தான் குறிப்பிட்டிருக்கிறேன்.

ஆர்.வி.சரவணன்

திங்கள், மார்ச் 26, 2012

வலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா


வலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா

கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமான்.இங்கு புகழ் பெற்ற பாடை கட்டி மகா மாரியம்மன் கோவில் உள்ளது மிகவும் புகழ் வாய்ந்த ஸ்தலம் இது வருடா வருடம் தமிழ் மாதம் பங்குனி இரண்டாவது ஞாயிறு அன்று பாடை காவடி திருவிழா இங்கு புகழ் வாய்ந்த ஒன்றாகும். நேற்று 25-03-2012 கோவிலில் பாடை கட்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது


இந்த கோயிலின் சிறப்பு என்னவெனில் உடல் நலம் சரியில்லாதவர்கள்அம்மனிடம் வேண்டி கொண்டு ,தாங்கள் வேண்டியது நிறைவேறியவுடன் பாடை காவடி எடுத்து ஈமக்ரியை செய்வது போல் உறவினர்கள் கொல்லி சட்டி ஏந்தி கொட்டு மேளம் கொட்டி வர ஆலயத்தை வலம் வந்து அம்மன் சன்னிதானம் முன் தாங்கள் நேர்த்திகடனை நிறைவேற்றுகின்றனர்.

திருவிழாவில் மக்கள் வெள்ளம் போல் திரண்டு வந்திருந்தனர் இரவு முழுக்க சாலையோரம் முழுதும் இரு புறமும் கடை வீதிகள் பார்க்க கண் கொள்ளா காட்சியாக இருந்தது நான் எடுத்த சில படங்களை இங்கே தந்திருக்கிறேன்




கோவில் நுழைவாயில்

பக்தர்கள் வெள்ளம்


நேர்த்தி கடன்





அம்மன் திரு வீதி உலா




மாரியம்மனின் அருள் அனைவருக்கும் கிடைக்க உளமார வேண்டுகிறேன்

ஆர்.வி.சரவணன்

வியாழன், மார்ச் 22, 2012

ஓ வெண்ணிலாவே வா ஓடி வா …..



ஓ வெண்ணிலாவே வா ஓடி வா …..

மனம் கவர்ந்த பாடல்கள்

சை பற்றி எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது.

நல்ல இசை என்பது, கேட்பவரை மனம் லயிக்கச் செய்வதாக இருக்க வேண்டும். அவ்வளவுதான் தெரியும்!

ராகதேவன் நம் இசை சக்கரவர்த்தி இளையராஜா அவர்களின் இசை இனிமையில் நான் ரசிக்கும் மற்றுமொரு பாடல்


ஆனந்தக்கும்மி என்று ஒரு படம் அனேகமாக வருடம் 1983-ல் வெளியானது. அந்தப் படம் பலருக்கு இன்று நினைவில் இல்லாமல் இருக்கலாம்… ஆனால் பாடல்கள்… காலத்துக்கும் மறக்க முடியாதது!

இந்த படத்தில் வரும் ஓ வெண்ணிலாவே வா ஓடி வா …..
என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.

இந்த பாடல் ‘ஆனந்த கும்மியடி கும்மியடி ….’ என்று பெண்கள் கோரஸ் குரலில் ஆரம்பிக்கும் அது முடிந்தவுடன், தன் இசை ராஜாங்கத்தை ஆரம்பித்திருப்பார் இளையராஜா.

அப்படியே ஒரு அமைதியான கிராமத்தில், நிலவின் ஒளியில் மின்னும் பின்னிரவுக்க, நம்மை இழுத்துச் செல்லும் அந்த இசை.

தொடர்ந்து வரும் பல்லவி,

ஓ வெண்ணிலாவே வா ஓடி வா…

அதற்குப் பின் பாடலின் இரண்டாவது சரணத்திற்கு முன்

ஜானகியின் குரலில் வரும் ‘லா லி லா லி லா லி….’ நம்மை சுகமாய் தாலாட்டும்.

இந்த பாடலை எனது 18 வயதில் கேட்டிருக்கிறேன்.
இந்த வயதிலும் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். மனதில் இளமையின் நினைவுகள்…

என் மனதை மயக்கும் பாடல்களில் ஒன்று..கேட்காதவர்கள் கேட்டுத்தான் பாருங்களேன்!

ஊமை நெஞ்சின் ஓசைகள்…, ஒரு கிளி உருகுது…, அண்ணன்மாரே தம்பிமாரே…, திண்டாடுதே ரெண்டு கிளியே (இளையராஜா) என மற்ற பாடல்களும் மகா இனிமையானவை.

இந்த ஆனந்தக்கும்மி படத்தின் தயாரிப்பு: இளையராஜா

பாடல் பாடியவர்கள் S.P. பாலசுப்ரமணியம்,S.ஜானகி

இந்த படத்தின் இயக்குனர்: பாலமுருகன்

இந்த படத்தின் நாயகன் பெயர் பாலச்சந்தர். நாயகி அஸ்வினி (பார்த்திபன் ஜோடியாக பொண்டாட்டி தேவை படத்தில் நடித்திருப்பார்).

பாடலை எழுதியவர்: வைரமுத்து

இந்த பதிவு எனது நண்பர் வினோ அவர்களின் என்வழி வலைத்தளத்தில் 2010 ம் வருடம் நினைவுகளை மீட்டும் இசை தலைப்பில் வெளியானது. உங்களுக்காக இங்கே தந்திருக்கிறேன்

ஆர்.வி.சரவணன்

வியாழன், மார்ச் 15, 2012

கொஞ்சலும் கெஞ்சலுமாய்....


கொஞ்சலும் கெஞ்சலுமாய்....

விழித்த பின்னும்
உறங்குவதாய்
பாசாங்கு
செய்கிறேன்
என்னவள்
கொஞ்சலும்
கெஞ்சலுமாய்
எனை
எழுப்பட்டுமே
என்
பொழுது
இப்படியும்
விடியட்டுமே
என்று

ஆர்.வி.சரவணன்

சனி, மார்ச் 03, 2012

என் காதல் சொல்ல நேரமில்லை....



என் காதல் சொல்ல நேரமில்லை....

நான் இளையராஜா பாடல்களின் தீவிர ரசிகன் எப்போதும் பழைய பாடல்களே எனது விருப்பமாக இருந்தாலும், புதிய பாடல்களும் அவ்வப்போது என்னை மயிலிறகு போல் வருடும் அப்படி என்னை வருடிய பாடல் பற்றிய பகிர்வு தான் இது

என் காதல் சொல்ல தேவையில்லை என்பது பாடலின் வரிகள். ஆனால் பாடல் பற்றி கண்டிப்பாக சொல்ல வேண்டும். நா முத்துகுமாரின் காதல் வரிகளுக்கு யுவனின் இசை கை கோர்க்க லிங்குசாமியின் இயக்கத்தில் இந்த பாடலுக்கான விசுவல் என்னை மிகவும் கவர்ந்தது .




தமன்னா காபி அருந்த கார்த்தி அவரையே அருந்துவது போல் பார்க்க, அவர் பேருந்தில் ஏற இவருக்கு தன் மனதுக்குள்ளே அவர் நுழைவது போல் தோன்ற, அவர் உலர வைத்த துணிகளுக்கு கிளிப் போட கார்த்திக்கு தன் மனதையே வாங்கி தன் மனதோடு சேர்த்து கிளிப் போடுவது போன்று அவருக்கு தோன்றுகிறதோ இல்லையோ நமக்கு தோன்ற வைக்கும் காட்சிகள்


கார்த்தி, தமன்னா குளியலறையில் தாழ்பாள் சரியில்லை என்று சொல்லும் போது அதை சரி செய்து கொடுத்து விட்டு இங்கே இவர் காதலில் நனைவார்.

தமன்னா குளித்து முடித்து வெளிவந்து நடக்கையில் உருவான கால் தடங்கள் பார்த்து தன் மனத்தினில் காதலின் தடங்கள் விழுந்ததை போன்று சந்தோசமாய் அதை பின் தொடர்ந்து செல்வார்.

தமன்னா செய்யும் மோனோ ஆக்டிங் பார்த்து ஆச்சரியமும் அவர் துவண்டு விழுவது கண்டு அதிர்வதும் அவர் எழுந்து சிரித்தவுடன் சிரிப்பதும் என்று கார்த்தி யின் முக பாவங்கள் அருமையாய் வெளிபட்டிருக்கும்.

பக்கத்துக்கு வீட்டில் தம்பதியின் உல்லாசத்தை பார்த்து இருவரும் கண்களால் காதல் பரிமாறி கொள்வதும் சிறுவர்கள் கிரிக்கெட் பந்து கேட்டு வர கார்த்தி தமன்னாவை கேட்குமாறு சொல்ல தமன்னா கொஞ்சம் பிகு செய்து விட்டு பின் கொடுக்குமாறு சைகை செய்ய பின் கார்த்தி தருவதும் என்று ரசிக்க வைக்கும் காட்சிகள்.

அதே போல் கார்த்தி (முதல் சரணத்திற்கு பின் வரும் பல்லவியில் ) உன் விழியாலே என்று பாடி ஆடுவார் பாருங்கள் நாமும் கொஞ்சம் ஆடுவோமா என்று தோன்ற வைக்கும் காட்சி இது

தமன்னாவின் வீட்டு அட்ரெஸ் கிடைத்து விட்டது என்று நண்பன் சொன்னவுடன் அவர் குதுகலிக்க இவர் வேதனையை உள்ளுக்குள் மறைத்து கொண்டே புன்னகைக்க என்று காதலின் பரிமாணங்களை கவிதை போன்று விசுவலில் செய்திருப்பார் இயக்குனர்
லிங்குசாமி

அதாவது லவ் பண்ணுங்க பாஸ் லைப் நல்லா இருக்கும் என்று சொல்வது போல் இருக்கும் இப் பாடல் காட்சியை எப்போது காண நேர்ந்தாலும் நான் பாடலை முழுக்க ரசித்து விட்டு தான் நகர்வேன்

எத்தனை முறை பார்த்தாலும் எனை சலிப்படைய விடுவதில்லை மாறாக எனை களிப்படைய வைக்கிறது என்றே சொல்லலாம்.

ஆமா நான் மட்டுமே சொல்றேனே உங்களுக்கு எப்படி இருக்குது இந்த பாடல்
கொஞ்சம் சொல்லுங்களேன்

ஆர்.வி.சரவணன்