திங்கள், மார்ச் 17, 2014

வெள்ளை நிறத்தொரு சேவல் கண்டேன்







வெள்ளை நிறத்தொரு சேவல் கண்டேன்


எனது  பள்ளி பருவ காலங்களில்  (4 ஆம் வகுப்பு முதல் 10 ஆம்  வகுப்பு 
வரை) கிராமத்தில் தான் இருந்தேன். கும்பகோணத்தில் இருந்து 
சுவாமிமலை செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமத்தில் தான் என் சிறு
வயது கழிந்தது. நாங்கள் இருந்த வீடு அந்த தெருவிலேயே  பெரிய வீடு 
பெரிய வாசல், வராண்டா, பெரிய ஹால், கொல்லை வாசல் ,சந்து  மாடி 
என்று இருக்கும். அங்கே தாத்தா, பாட்டி,அம்மா அப்பா, மாமாக்கள்,சித்தி 
என்று கூட்டு குடும்பமாக எல்லோரும் இருந்தோம்.  

எங்கள் வீட்டில் அப்போது கோழிகள் வளர்த்து வந்தார்கள் கோழி அடை காப்பது, குஞ்சு பொறிப்பது இதெல்லாம் பார்க்க  சிறுவர்களான 
எங்களுக்கு  அதிசயமாக இருக்கும் .நாங்கள் எங்கள் வீட்டில்
அவ்வளவாக அசைவம் விரும்பி  சாப்பிடுவது கிடையாது. (விருந்தினர்கள் வரும் போதும்  அல்லது மாட்டு பொங்கல் அன்றும்  வீட்டில் அசைவம் 
உண்டு)  முட்டை மட்டும் தான் சாப்பிடுவதுண்டு  இப்படி இருக்கையில் சிறுவர்களான எங்களுக்கு பொழுது போக்கு இந்த கோழிகள் தான். 
(அப்போது டிவி செல்போன் கிடையாது ரேடியோ மட்டும் தானே ) 
அவை ஓடுவதும் அவைகளை பிடிக்க நாங்கள் துரத்துவதும் என்று 
பாதி பொழுது அவைகளுடனே  கழியும்.



கோழி அடை காத்து பொறிக்கப்பட்ட குஞ்சுகளை  பருந்து தூக்கி செல்ல வரும். அதனிடமிருந்து காப்பாற்ற தாய் கோழி மட்டுமில்லாது நாங்களும் சேர்ந்து போராட வேண்டி இருக்கும். கோழி யிடமிருந்து அப்போது  மட்டும் வித்தியாசமான ஒரு குரல் வரும் . தாய் கோழியின் குரல் கேட்டவுடன் அருகில் உள்ள குஞ்சுகள் ஓடி வந்து தாயின் இறக்கைகளுக்குள் ஒளிந்து கொள்ளும். தள்ளி நின்று மேய்ந்து கொண்டிருக்கும் குஞ்சுகள் பக்கத்தில் இருந்த செடிகளுக்குள் மறைந்து கொள்ளும். கோழியின் அந்த கண்களில் தெரியும் உக்கிரமான பார்வை தன் அழகு எனும் ஆயுதத்தால் கீழே பறந்து வரும் பருந்தை  தாக்கி விட முனையும் வேகம் பார்க்க வேண்டுமே. அதன் குரல் கேட்டு  நாங்கள் விஷயம் புரிந்து என்ன வேலை பார்த்து கொண்டிருந்தாலும் அப்படியே விட்டு விட்டு ஓடுவோம் தாய் கோழிக்கு ஆதரவாக நின்று நாங்களும் விரட்டுவோம்.

உண்மையில் சொல்ல போனால் நான் பதறி அடித்து ஓடுவேன். தாய் கோழியுடன் இணைந்து காப்பற்ற போராடி குஞ்சுகளை காப்பாற்றிய பின் தான் நிம்மதி வரும்  எனக்கு. அப்படியும் பருந்தோ கழுகோ நொடியில் ஒரு குஞ்சை எடுத்து கொண்டு பறந்து விடும். தாய் கோழியுடன் இணைந்து நானும் பரிதாபமாய் பார்த்து கொண்டு நிற்பேன். மற்ற குஞ்சுகளை யாவது காப்பாற்ற வேண்டும் என்று மனது அந்த வேளையில் உறுதி எடுத்து கொள்ளும் (கோழிக்கும் அதே மன ஓட்டம் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்). 
இப்படி பருந்துக்கு கொஞ்சம்,சீக்குக்கு (நோய்) கொஞ்சம் நாய்க்கு கொஞ்சம் என்று போனதில் மிஞ்சிய குஞ்சுகள் வளர்ந்து பெரிய சேவல் அல்லது பெட்டை கோழிகளாகும். 


இப்படி வளர்ந்த குஞ்சுகளில் ஒரு சேவல் மட்டும் எங்களின்  கவனத்தை 
ஈர்த்தது. நல்ல உயரம் அது. பளீரென்று தும்பை பூ போன்ற வெள்ளை நிறம்.  அது தன் தலையை சிலுப்பி கொண்டு திரிவது பார்க்க நன்றாக
இருக்கும். தினமும் காலை தூங்கி எழுந்தவுடன் அதை கவனித்து கொண்டே இருப்போம்.அரை மணி நேரம் வெளியில் சுற்றி விட்டு வீட்டுக்கு வந்து  வீட்டை ஒரு முறை வலம் வரும் யார் வந்திருக்கிறார்கள் வீட்டில் இருப்பர்வர்கள் என்ன செய்கிறார்கள் என்பது போல் பார்த்து விட்டு செல்லும். நாங்கள் சாப்பிட்டு கொண்டிருந்தால் பக்கத்திலேயே சுற்றி வரும். அதுவும் அது சின்ன குஞ்சாக இருக்கும் போது எங்கள் மடியில் ஏறி நின்று கொண்டிருப்பதே ஒரு அழகு தான். வீட்டில் உள்ள அனைவருக்கும் அது செல்லமாகி விட்டது. அதுவும் அது வளர்ந்து பெரிய கோழியான பின் 
அதன் கம்பீரம் பார்க்கையில் அசத்தலாக இருக்கும். அதை பிடித்து 
வைத்து கொண்டு அதன் இறக்கைகளை  எங்கள் வீட்டில் நீவி 
கொடுப்பார்கள்.  

 தாய் கோழி குஞ்சுகளை காப்பற்ற பருந்துடன் போராடுவதை 
பார்க்கையில் சேவல் உதவிக்கு வருவதில்லையே ஏன் என்று
 நான் நினைப்பதுண்டு.இயற்கையில் உள்ள பாகுபாடு அப்போது 
எனக்கு குழப்பத்தையும்  கொடுத்ததுண்டு. நான் சேவலை அவ்வளவாக கவனித்ததில்லை.இருந்தும் எனக்கு இந்த சேவல் மீது  மட்டும் பாசம் ஏற்பட்டது.  ஒரு சண்டை சேவல் எப்படி இருக்குமோ அது போல் இருக்கும் இந்த சேவல்.அதன் மேல் தனி கவனம் எடுத்து நாங்கள்  வளர்த்தது கண்டு தெருவில் உள்ளவர்களே கூட ஆச்சரியபட்டார்கள். 

ஒரு நாள் மாலை எப்போதும் போல் அது  வீட்டில் வந்து அடைய 
வேண்டும். வரவில்லை ஏன் வரவில்லை என்று ஒருவருக்கொருவர் 
வினாஎழுப்பி கொண்டோம். தேட ஆரம்பித்தோம். பக்கத்தில் இருப்பவர்கள்  
அரை மணி முன்னாடி பார்த்தேனே நான் காலையிலே பார்த்தேனே என்று சொல்ல சொல்ல எங்களுக்கு மனது அலை பாய  ஆரம்பித்தது. எப்படியும் 
ஒரு நான்கு மணி அளவில் அது வீட்டுக்கு வந்து சென்றதாய் நினைவு. அங்கிருக்கும் தெருக்கள் அத்தனையும் சுற்றி வந்தோம்.
எங்கும் கிடைக்கவில்லை.அப்போது தான்  யார் வீட்டிலே இதற்கு 
மொளகாய் அரைத்து கொண்டிருக்கிறார்களோ என்று தெருவில் 
உள்ளவர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். எங்கள் பாட்டி அத்தை இதை மறுத்தார்கள் "இல்லே நாங்க அதை எப்படி பாசமாக வளர்க்கிறோம் என்று ஊருக்கே தெரியும். கண்டிப்பாக அப்படி செய்ய மாட்டார்கள்" என்று சமாதானம் சொல்லி கொண்டார்கள்.  எங்களுக்கு எப்படியும் அது வந்து சேர்ந்து விடும் அப்படி யாராவது பிடித்திருந்தாலும் எங்களின் கஷ்டத்தை பார்த்து விட்டு விடுவார்கள் என்று தான் நினைத்தோம்.
 ஆனால் மறு நாள் காலையிலும் சேவல் வரவில்லை என்றவுடன் தெருவில் இருப்பவர்களே கோபப்பட்டு கத்த ஆரம்பித்து விட்டனர். "எவடி அவ பிள்ளை மாதிரி வளர்க்கிற கோழியை பிடிச்சு சாப்பிடற அளவுக்கு வக்கத்து இருக்கிரவ" என்று. கூடவே எங்கள் பாட்டி அத்தை அம்மா என்று எல்லோரும் கண் கலங்கி திட்டி தீர்த்தார்கள். நான் பிரிவின் வலி எப்படி இருக்கும் என்பதை உணர்ந்த நேரம் அது.

 எங்கள் வீட்டின் கொல்லைபுறத்தில் தென்னை மரங்கள் சூழ்ந்து ஒரு காடு போல் இருக்கும். அந்த தெரு முழுக்க எல்லாருக்கும் சேர்த்து அங்கே ஒரு குப்பை மேடு உண்டு.  அங்கே இரண்டு நாட்களுக்கு பிறகு நாங்கள் வளர்த்த கோழியின் இறக்கைகள் இறைந்து கிடப்பதை  பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனோம். இதோ இந்த நாள் வரை அந்த சேவல்  எங்கள் ஞாபாகத்தில் சுற்றி சுற்றி வருகிறது.

FINAL PUNCH 

எங்கள் வீட்டில் எப்போதாவது தான் அசைவம் சாப்பிடுவோம் என்று சொன்னேன் அல்லவா. நானும் சிறு வயதில் நிறைய இல்லை என்றாலும்   மீன், முட்டை, ஆட்டுகறி என்று அவ்வபோது கொஞ்சம் சாப்பிட்டிருக்கிறேன் ஆனாலும்  பாருங்கள் 15  வயதுக்கு பின்  நான் அசைவம் சாப்பிடுவதை சுத்தமாக நிறுத்தி விட்டேன். எப்போதாவது என்னை வற்புறுத்தி 
மனைவி சாப்பிட சொல்கையில் முட்டை  சாப்பிடுவதுண்டு.சாப்பிட்ட 
பின் நாள் முழுக்க நான் அவஸ்தையில் இருப்பதை பார்த்து விட்டு 
என்னை இப்போது அவர்கள் வற்புறுத்துவதில்லை. அதன் வாசம் அவனுக்கு 
பிடிக்கல தொடர்ந்து வீட்டில் சாப்பிட வைத்து பழக்கபடுத்தலே என்று
அம்மாவும் உறவினர்களும் காரணம் சொல்கிறார்கள்.

எனக்கென்னவோ அந்த சேவலின் மேல் கொண்ட பாசம்  தான் 
எனக்கு அசைவம் பிடிக்காமல் போக காரணம் என்று நினைக்கிறேன் 

ஆர்.வி.சரவணன் 


18 கருத்துகள்:

  1. பளீரென்று தும்பை பூ போன்ற வெள்ளை நிறம் - உங்களின் மனதும்...

    பதிலளிநீக்கு
  2. அந்த சேவலின் மேல் கொண்ட பாசம் தான்
    எனக்கு அசைவம் பிடிக்காமல் போக காரணம் என்று நினைக்கிறேன்
    >>
    அப்படியும் இருக்கலாம் சகோ!

    பதிலளிநீக்கு
  3. ஒன்றின் மீது வைக்கும் அன்பு நம்மை மாற்றிவிடுவதற்கு நல்ல உதாரணம் உங்கள் அனுபவம்! சிறப்பான பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. நாய், பூனை மீது அதீத பாசம் வைத்திருப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். சேவல்மீது நீங்கள் கொண்ட பாசமும் அதை இன்னும் மறக்காமல் இருப்பதும் நீங்கள் வெள்ளை உள்ளம் கொண்ட நல்ல மனிதர் என்பதைக் காட்டுகிறது...

    பதிலளிநீக்கு
  5. சிறுவயதில் கோழிக் குஞ்சை கழுகு கொத்திச் சென்றதை பார்த்த நினைவுகள் மனதில் வலம் வருகின்றன நண்பரே.

    பதிலளிநீக்கு
  6. எனது வீட்டில் இன்றைக்கும் கோழிகள் உண்டு. அம்மாவின் போழுதுபோக்கு இதுகளை பராமரிப்பது தான். பகிர்விற்கு வாழ்த்துக்கள் சரவணன்.

    பதிலளிநீக்கு
  7. எனக்கென்னவோ அந்த சேவலின் மேல் கொண்ட பாசம் தான்
    எனக்கு அசைவம் பிடிக்காமல் போக காரணம் என்று நினைக்கிறேன் //

    இருக்கலாம்! வாயில்லா ஜீவன்களின் மீது வைக்கும் பாசம் நம்மை பல வகையில் வாழ்வியல் தத்துவங்களைக் கற்பிக்கும்!

    அழகான, அருமையான ஒரு பகிர்வு!

    பதிலளிநீக்கு
  8. சில வீடுகளில் கணவன் அசைவம் சாப்பிடாவிட்டால், மனைவியும் அசைவம் சாப்பிடுவதை விட்டுவிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்......!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் சில வீடுகளில் கணவன் அசைவம் சாப்பிடுபவராக இருந்து மனைவி சாப்பிடாமல் கணவருக்கு சமைத்து தருபவர்களும் இருக்கிறார்கள் சார்

      எங்கள் வீட்டில் இப்போதும் அசைவம் கிடையாது எனக்கு பிடிக்காது என்பதால் மனைவியும் அசைவ சமையல் செய்வதில்லை எப்போதேனும் விருந்தினர் வந்தால் மட்டும் அசைவம் சமைப்பார்கள். சாப்பிடுவார்கள்.

      நீக்கு
  9. நினைவலைகள் சிறப்பாக உள்ளது ... நினைவுகள் அதுவும் பால்ய கால நினைவுகள் என்றாலே கூடுதல் அழகு தானே சார் ...

    பதிலளிநீக்கு
  10. எனக்கும் இது போன்ற அனுபவங்கள் உண்டு அண்ணா...

    ஒரு சேவல், ஒரு ஆடு, மூன்று புங்கை மரங்கள்..

    கிராமத்து நினைவுகளை எழுப்பி விட்டது...

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் தங்களை தொடர்பதிவெழுத அழைத்திருக்கிறேன். நேரம் இருப்பின் வருகை தரவும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்