வியாழன், ஜனவரி 01, 2015

ஆலயங்கள் தரிசனம்


 திருகண்ண மங்கை 

 ஆலயங்கள் தரிசனம்

கும்பகோணத்தை  சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த கோவில்கள் பற்றி குறிப்புகள் தொகுத்து எழுதலாமே  புதிதாக செல்ல விரும்புபவர்களுக்கு பயனுள்ளதாக அமையுமே என்று சொல்லியிருந்தார்.நேரம் கிடைக்கும் போது செல்கிறேன் என்று சொல்லியிருந்தேன். அதற்கான வேளை  வரவே தினம் ஒரு கோவில் என சில கோவில்கள் எனது டூ வீலரிலேயே  சென்று வந்தேன். நான் சென்று வந்த ஆலயங்கள் பற்றிய சிறு குறிப்புகளை இப் பதிவில் தந்திருக்கிறேன்.
(தகவல்கள் அனைத்தும் கோவில் அர்ச்சகர், தகவல் பலகை மற்றும் இணையத்தில் இருந்தும் எடுத்து கொடுத்திருக்கிறேன்)



கும்பகோணம் டு திருவாரூர் சாலையில் நான் டூ வீலரில் வந்து கொண்டிருந்த போது திருக்கண்ணமங்கை என்ற ஊர் வந்தது. இங்கே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ பகதவக்சல பெருமாள் ஆலயம் இருப்பதை பார்த்ததும் ஆர்வமாய் ஆலயத்தினுள் சென்றேன்.முகப்பில் மிக பெரிய குளத்துடன் கூடிய கோவில் கோபுரமும்,மூலவரின் தோற்றமும், ஆலயத்தில் இருந்த அமைதியும் என்னை மிகவும் கவர்ந்தது.




ஸ்ரீ வாஞ்சியம்

டுத்து நான் சென்றிருந்த ஸ்தலம் ஸ்ரீ வாஞ்சியம். திருவாரூரில் இருந்து கும்பகோணம் வரும் வழியில் திருகண்ணமங்கைக்கு அடுத்து மணக்கால் என்ற ஊர் வருகிறது. அங்கிருந்து 6 கிலோ மீட்டரில் இந்த புண்ணியஸ்தலம் உள்ளது என்ற நெடுஞ்சாலை அறிவிப்பு பலகையை பார்த்தவுடன் டூ வீலரை இந்த ஊரை நோக்கி திருப்பி விட்டேன்.மிக பெரிய சிவன் கோவில் இது. இறைவனின் பெயர் ஸ்ரீ வாஞ்சிநாதன் தாயார் பெயர் மங்களாம்பிகை. உலகிலேயே எமதர்ம ராஜனுக்கு சன்னதி உள்ள ஒரே கோவில் இது தான். கூடவே சித்திரகுப்தனும் இருக்கிறார்.எமதர்ம ராஜன் உயிர்களை எடுக்கும் பதவியை இறைவன் தனக்கு அளித்திருப்பதை நினைத்து வருந்தி இங்கே வந்து கடும் தவம் புரிய, மகிழ்ந்த இறைவன் மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் காட்சி தந்து, இத் தலத்தின் ஷேத்திர பாலகன் நீ. ஏதோ ஒரு விதத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இத் தலத்திற்கு வருவார்கள்.உன்னை தரிசித்த பின்பே என்னை தரிசிக்க வருவார்கள் என்று அருளினார். எமன் மகிழ்ந்து இறைவனுக்கு வாகனமாய் மாறினார். எம தீர்த்தம் இங்கே உள்ளது.
ஸ்ரீயை வாஞ்சித்து (ஸ்ரீ என்ற மகாலட்சுமியை அடைய விரும்பி ) திருமால் தவம் இருந்ததால் ஸ்ரீ வாஞ்சியம் என்ற பெயர் கொண்டிருக்கிறது  இத் தலம். 
அன்று காலை வரை இக் கோவில் வர போகிறேன் என்பது எனக்கு தெரியாது. கோவில் விட்டு வெளி வரும் போது,என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியது இறைவன் தான் என்பதை என்னால் உணர முடிந்தது
ஓம் நமச்சிவாய






திருபாம்புரம் 

டுத்த நாள் நான் சென்றிருந்த ஆலயம் திருப்பாம்புரம். திருவாரூர் டு மயிலாடுதுறை சாலையில் பேரளம் என்ற ஊர் வருகிறது. அங்கிருந்து 
6 கிலோ மீட்டரில் உள்ளது. (மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழி ) திருப்பாம்புரம். இறைவனின் பெயர் சேஷபுரிஸ்வரர் பாம்புரநாதர். அம்பாள் வண்டுசேர்குழலி பிரமராம்பிகை.இங்கே ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் நிறுத்தி அருள் பெற்ற தலம் இது. ராகு கேதுக்கென்று தனி சன்னதி உள்ள பரிகார ஸ்தலம் இது.

கைலாயத்தில் தன் தந்தை சிவபெருமானை விநாயகர் வணங்கிய போது அவர் கழுத்தில் இருந்த பாம்பு தன்னையும் அவர் வழிபட்டதாக நினைத்து கர்வம் கொண்டது. கோபம் கொண்ட சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தியை இழக்குமாறு சாபமிட்டார். அஷ்ட நாகங்களும் ராகுவும் கேதுவும் நாகம்
செய்த தவறுக்கு மன்னிக்கும் படி வேண்ட மகாசிவராத்திரி
அன்று ஆதிசேஷன் தலைமையில் திருப்பாம்புரம் ஸ்தலத்துக்கு வந்து வேண்டி சாப விமோசனம் பெறுமாறு இறைவன் அருளினார். 


இங்கே உள்ள தீர்த்தத்தின் பெயர் ஆதிசேஷ தீர்த்தம். 2004 ஆம் வருடம் நான் இந்த கோவில் பற்றி கேள்விப்பட்டு வந்திருந்து வழிபட்டேன். அதற்கு பிறகு இதோ இப்போது 2014 ஆம் வருடம் இங்கே வரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.பசுமை நிறைந்த வயல்களின் நடுவே கோவில் 
கொண்டு வீற்றிருக்கும் இறைவனை வழிபட்டதில்  ஒரு ஆத்ம திருப்தி இருந்தது.


திருமீயச்சூர்

 நான் பேரளத்தில் இருந்து திருபாம்புரம் கோவிலுக்கு செல்லும் போது இரண்டு கிலோ மீட்டரில் திருமீயச்சூர் என்ற ஊர் வந்தது. திருப்பணி ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் கோவிலின்  கோபுரத்தை பார்த்தவுடன் உடனே கோவிலுக்குள் சென்றேன். இந்த ஆலயம் அருள்மிகு லலிதாம்பாள் சமேத அருள்மிகு மேகநாதசுவாமி திருகோயில்.



திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவார பாடல் பெற்ற தலம் இது.சூரியனுக்கு சாப விமோசனம் கிடைத்த தலம். சூரியனுக்கு எமன் சனி ஆகியோர் பிறந்த ஸ்தலம். உலகெங்கும் அனைத்து ஆலயங்களிலும் ஓயாமல் ஒலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் உருவான ஸ்தலம். ஸ்ரீ லலிதாம்பிகை ஸ்ரீ சக்ர பீடத்தில் இரு கரங்களுடன் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.



 கோவிலின் திருப்பணிகள் முடிந்து கோவில் கும்பாபிஷேகம்  8-2- 2015 ஞாயிறு அன்று நடைபெறுகிறது. (பேரளத்தில் இருந்து திருப்பாம்புரம் செல்லும் வழியில் உள்ளது இக் கோவில்.)திருப்பாம்புரம் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தவனை இந்த கோவிலில் கொண்டு நிறுத்தியது நான் தேர்ந்தெடுத்த சாலை தான் என்றாலும், இந்த கோவிலுக்கு என்னை வர வைத்திருப்பது அருள்மிகு மேகநாத சுவாமி லலிதாம்பிகை இருவரின் கருணை என்பதாகவே என்னால் உணர முடிந்தது.


திருகண்ணபுரம் செல்லும் பாதையில் 


டுத்து நான் சென்ற புண்ணிய ஸ்தலம் திருகண்ணபுரம்.ஒரு இடத்திற்கு 
நாம் எப்போது செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்வது நாம் அல்ல கடவுள் தான் என்பது இந்த கோவில் சென்ற போது தான் என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. அதை பற்றி இப் பதிவின் முடிவில் சொல்கிறேன்.


மயிலாடுதுறை டு  திருவாரூர் சாலையில் திருவாரூருக்கு
முன் 10 கிலோ மீட்டரில் ஆண்டி பந்தல் என்ற ஊர் வருகிறது .(மயிலாடுதுறையில் இருந்து 30 கிலோ மீட்டர்)அங்கிருந்து
உள்ளே ஏழு கிலோ மீட்டரில் இருக்கிறது இந்த புண்ணிய ஸ்தலம்.

மூலவர் நீலமேக பெருமாள். தாயார் கண்ணபுர நாயகி உற்சவர் சௌரிராஜ பெருமாள். மூலவர் பூதேவி ஸ்ரீ தேவி சகிதம் நின்ற கோலத்தில் இருக்கிறார். மூலவர் கையில் முழுவதும் திரும்பிய பிரயோக சக்கரத்துடன் காட்சி தருகிறார். விபீஷணனை தம்பியாக ஏற்று கொண்ட ராமபிரான் அவருக்கு இத் தலத்தில் பெருமாளாக நடந்து காட்சி தந்திருக்கிறார். (விபிஷணன் என்ற பெயருடன் ஒரு சன்னதி பார்த்தேன்) சௌரிராஜ பெருமாள் என்ற பெயர் எப்படி வந்தது என்பதை பார்ப்போம்.


 திருகண்ணபுரம் 

முன்னொரு சமயம் அர்ச்சகர் ஒருவர் சுவாமிக்கு சாற்றிய மாலையை தன் காதலிக்கு சூட்டி விட்டார்.மன்னர் கோவிலுக்கு வரவே அவருக்கு மரியாதை செய்ய வேறு மாலை இல்லாததால் காதலிக்கு சூட்டிய மாலையை மன்னருக்கு போட்டு விட்டார். அதில் பெண்ணின் கூந்தல் முடி இருப்பதை பார்த்தவுடன் மன்னர் கேட்க பெருமாளின் தலையில் இருந்த முடி தான் அது என்று சொல்லி விட்டார்.சந்தேகம் கொண்ட மன்னன் மறுநாள் தான் வரும் போது பெருமாளின் தலை முடியை காட்ட வேண்டும் இல்லையேல் தண்டனை கிடைக்கும் என்று மன்னர் சொல்லி சென்று விட கலங்கிய அர்ச்சகர் இறைவனிடம் தன்னை காக்குமாறு வேண்டினார்.மறு நாள் மன்னர் வரும் போது அர்ச்சகர் சுவாமி யின் தலையை மன்னருக்கு காட்ட திருமுடியுடன் காட்சி தந்த பெருமாள், சவுரிராஜ பெருமாள் என்ற பெயர் பெற்றார். இக் கோவில் குறித்து திருமங்கை ஆழ்வார் பாசுரம் பாடியுள்ளார். இக் கோவிலில் இரவு பூஜையில் பொங்கல் படைக்கும் வழக்கம் உள்ளது.
மற்ற தலங்களில் அபய கட்சியோடு இருக்கும் பெருமாள் இத் தலத்தில் தானம் வாங்கி கொள்வது போன்ற காட்சியுடன் இருக்கிறார்.தீர்த்தம் நித்ய புஷ்கரிணி.மிக பெரிய பிரகாரத்தை சுற்றி வலம் வந்த போது அமைதியின் கை பற்றி கொண்டு செல்வது போன்றதொரு எண்ணமே  தோன்றியது எனக்கு. கோவிலுக்கு எதிரே உள்ள ஆஞ்சநேயர் சன்னதியை ஒட்டி படிக்கட்டுகளுடன் கூடிய குளத்தை பார்க்கையில் இயற்கை அழகை அள்ளி பருகியது போன்ற உணர்விலிருந்தேன்.

ஆரம்பத்தில் நான் சொன்ன விசயத்துக்கு வருவோம். ஒரு வாரமாக நான் கோவில்களை சுற்றி வருகையில் தெரிந்தவர் ஒருவர் இத் தலம் பற்றி சொல்லியிருந்தார். நானும் அதற்கென்ன போகலாம் என்று நினைத்திருந்தேன். சென்ற வாரம் நான் இந்த வழியே தான் திருப்பாம்புரம் கோவிலுக்கு சென்றிருந்தேன்.அப்போது இந்த புண்ணிய தலம் இங்கு தான் இருக்கிறது என்று நான் அறியவில்லை. இன்று காலை இந்த கோவிலுக்கு செல்ல முடிவு செய்து விசாரித்த போது தான் இது எனக்கு தெரிந்தது. 

என் டூ வீலரில் சென்று கொண்டிருக்கும் போது இந்த கோவில் இங்கு தான் இருக்குனு தெரியாமல் போயிடுச்சு பார் நமக்கு என்று நினைத்து எனக்குள்ளே சிரித்து கொண்டேன்.சவுரிராஜ பெருமாள் மற்றும் திருகண்ண புற நாயகி முன் நிற்கும் போதும் இது நினைவுக்கு வந்து விட இறைவனின் திரு முகத்தில் 
 சிறு புன்னகை இருந்ததாய் எனக்கு ஒரு மன பிரமை தோன்றியது.
அந்த புன்னகையில் இருந்த செய்தி இது தானோ.


உனக்கு (பக்தர்களுக்கு) தேவையானதை எப்போது தருவது என்பது எனக்கு தெரியும்.ஓம் நமோ நாராயணாய

அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்  

ஆர்.வி.சரவணன்

FINAL TOUCH 
அன்றாட வேலை பரபரப்புகளில் இருந்து சிறிதளவேனும் விடுபட்டு ஆலயங்களை ஆர்வமுடன் சுற்றி வருகையில் ஒவ்வொரு ஆலயத்திலும் குடி கொண்டிருந்த  அமைதியும், மனதுக்குள் தோன்றிய ஒரு நிறைவும் 
அன்றாட பரபரப்பினூடே விலகாமல் என்னுடன் இருக்கிறது.

7 கருத்துகள்:

  1. புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே, தங்களுக்கும் இல்லத்தில் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  2. நல்ல பகிர்வு அண்ணா...
    ஆலய தரிசனம் அருமை...

    பதிலளிநீக்கு
  3. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    உங்கள் ஊருக்கு வரும் போது மீண்டும் ஒருமுறை செல்வோம்...

    பதிலளிநீக்கு
  4. நல்ல விஷயம் தஞ்சை பகுதியில் உள்ள கோவில்களைப் பற்றி அறிய அரிய வாய்ப்பு. தொடரட்டும்.
    "கண்ணபுரம் செல்வேன் என் கவலை எல்லாம் மறப்பேன்" என்று சீர்காழி கோவிந்தராஜனின் பாடலில் கண்ணபுரம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். மற்ற தலங்களை அறிந்ததில்லை அறியத் தந்தமைக்கு நன்றி
    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. திருப்பாம்புரம், திருமீயச்சூர் சென்று வந்திருக்கிறேன்! திருமீயச்சூர் அருகிலேயே சரஸ்வதி கோயில் உள்ள பூந்தோட்டம் உள்ளது. ஆதிவிநாயகர் கோவிலும் உள்ளது அருமையான கோயில்கள் வாய்ப்பு கிடைக்கும் போது சென்று பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  6. புத்தாண்டு அன்று ஆலயதரிசனம் தொகுப்பு ரொம்ப நல்லாருக்கு சார்! மனதிற்கு இதமும் கூட..

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    அன்புடனும், நட்புடனும்

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான ஆலய தரிசனம்........ நன்றி

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்