வெள்ளி, ஆகஸ்ட் 10, 2012

இருபது VS அறுபது


நமது பதிவுலக நண்பர் கரை சேரா அலை அரசன் அவர்கள் நமது குடந்தையூர் தளத்தில் ஒரு சிறுகதை எழுத விருப்பம் என்றார் நானும் சந்தோசமாய் ஒப்பு கொண்டேன் இதோ அவர் எழுதிய சிறுகதை இங்கே தலைமுறை இடைவெளியை பற்றி சொல்கிறது இந்த சிறுகதை

இருபது VS அறுபது

கருத்தம்மாவின் மகன் மருமகள் இருவரும், கிராமத்தில் வாழும் அவளை தாங்கள் வசிக்கும் நகரத்திற்கு
அழைக்கும் போதெல்லாம் "போங்க உங்க பொண்ணு மட்டும் வர மாட்டா நான் மட்டும் வரணுமா இருபது வயசு காரிக்கு அவ்வளவு ராங்கி இருந்தால் அறுபது வயசுக்கு எனக்கு எம்புட்டு ராங்கி இருக்கணும்
பார்த்திடலாம் அறுபது ஜெயிக்குதா இருபது ஜெயிக்குதானு" என்று சொன்னவள் தான் இந்த கருத்தம்மா ஆனால் இப்போதோ
ரயிலில் நகரத்திற்கு தன் மகன் வீட்டிற்க்கு
அவசரமாய்
வந்து
கொண்டிருக்கிறாள்.

ரயிலின் வேகம் இவ்வளவு தானா இதற்கு மேல் போகாதா என்று ஒரு வித படபடப்பு அவளுக்கு இருந்து கொண்டே இருந்தது. பின்னுக்கு செல்லும் மரங்களை பார்த்தவளுக்கு, தனது வாழ்க்கையை கொஞ்சம் பின்னோக்கி நினைக்க வைத்தது. அவள் கணவன், மகன் சிறு வயதாய் இருக்கும் போதே மறைந்து விட காணிக்கு வழியில்லாமல் இருந்தாலும் பிள்ளை யை கஷ்டப்பட்டு படிக்க வைத்தாள். பிள்ளை இப்போது பெரிய உத்யோகத்தில் தனக்கு பிடித்த பெண்ணோடு திருமணம் முடித்து சொந்த வீடு கட்டி சொகுசாய் நகரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான் அங்கே வந்து இருக்க சொல்லி மகனும் மருமகளும் எவ்வளவு வற்புறுத்தினாலும் அவளுக்கு தான் இது வரை வாழ்ந்த வீட்டை விட்டு ஊரை விட்டு வர மனம் ஒப்பவில்லை . எனினும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் வந்து பார்த்து விட்டு ஒரு வேளை உணவாவது உண்டு விட்டு செல்வார்கள். இந்த நிலையில் தான் பேத்தி பிறந்தாள் பேத்தி நந்தினி மேல் பிரியம் அதிகம் இருந்தது அவளுக்கு ஏனெனில் கணவன் ஜாடையுடன் அவள் பிறந்திருந்தது அவளுக்கு தன் கணவனே பிறந்து வந்தது போல் இருந்தது. எனவே மகனை விட பேத்தியின் மீது தான் இப்போது அதிக பாசம் வைத்தாள். அப்படி பாசம் வைத்திருந்தும் அந்த பேத்தி அவ்வளவாக ஒட்டவில்லை. காரணம் நகரத்தின் வாழ்க்கை முறையில் வளர்ந்தவளுக்கு கிராமத்தின் வாழ்க்கை முறை பிடிக்காமல் போனது. பேத்தி வராதது ஒரு குறையாகவே இருந்தது கருதம்மாவிற்க்கு

"வர்றப்ப எல்லாம் இப்படி புருஷன் பொஞ்சாதி ரெண்டு பேரும் அந்த பொண்ணை விட்டுட்டு வந்தா அது தான் எப்படி இங்கே வந்து ஒட்டும்"

"அது வரமாட்டேங்குதும்மா கேட்டா ஏ சி இருக்கா அது இருக்கானு கேட்குது சரி போடறேன் வா னா நீ ஒரு ரூம்க்கு மட்டும் தான் போடுவே ரூமுக்குள்ளே உட்கார்ரதுக்கு நான் ஏன் வரணும் னு சொல்லுது " மகன்

"நீங்க அங்கே வந்து இருங்க அத்தை எதுக்கு இங்கே இருந்து அவஸ்தைபடனும்" இது மருமகள்

"அந்த பரபரப்பான வாழ்க்கை எனக்கு வேண்டாம் ம்மா இந்த இடத்தை விட்டுட்டு என்னாலே வர முடியாது "

"அவளும் வர மாட்டா நீயும் வர மாட்டே உங்க ரெண்டு பேர் கிட்டேயும் மாட்டி நாங்க தான் அவஸ்தைப்பட வேண்டியதா இருக்கு "

இதற்கு பதிலேதும் இருக்காது கருத்தம்மாவிடம் மாறாக மௌனம் தான் இருக்கும்

எப்போதேனும் பேத்தி போன் செய்வாள் அவள் பேசும் நுனி நாக்கு ஆங்கிலத்தில் நடு நடுவே எட்டி பார்க்கும் தமிழ் அவளுக்கு ஒன்றும் புரிவதில்லை ஆங் என்ற இவள் குரல் கேட்டு அங்கே கல கல என்று சிரிப்பாள் பேத்தி தன் கணவனின் அதே சிரிப்பை கண்டு உள்ளுக்குள் அகமகிள்வாள் கருத்தம்மா

மகன் வரும் போது எடுத்து வரும் பேத்தியின் ஆல்பங்களில் தான் பேத்தியின் வளர்ச்சியை கண்டு வந்தாள் கருத்தம்மா

தன் கணவனை உரித்தவாறு வந்திருக்கும் பேத்தி போட்டோவை தெருவில் அனைவரிடத்தும் பெருமையுடன் காட்டுவாள்

ஊரார்," போட்டோ காட்டறியே தவிர பேத்தியை கண்ணுலே காட்ட மாட்டேன்குறே ரொம்ப தான் பொத்தி பொத்தி வளக்குறே கருத்தம்மா நீ " என்பார்கள்
அவர்கள் சொல்லும் போதெல்லாம் மனசுக்குள் ஏமாற்றம் தோன்றும் பேத்தி வரமாட்டேன் என்கிறாள் என்பதை எப்படி அவர்களிடம் சொல்வது

இந்த நிலையில் தான் அந்த அறுபதை
இருபது தான் வென்றது ஒரு வாரமாய் ஜுரம் வந்து படுக்கையில் விழுந்தவள் எழுந்திருக்கவில்லை என்று போன் வரவே மனம் பதைபதைத்து குல தெய்வத்திற்கு சென்று வேண்டி கொண்டு விட்டு பிரசாதமும், கிராமத்து பலகாரங்களும் எடுத்து கொண்டு வந்து கொண்டிருக்கிறாள் வீடு வந்து ஆட்டோவில் இறங்கியவள்


வீட்டுக்குள் தன் மகன் பெயரை சொல்லி கொண்டே நுழைந்தாள்
அவளை பார்த்த மகன் ஆச்சரியத்துடன் மகன் "என்னமா வரேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் வந்து நிற்கிறே" என்றான்
மருமகள் "வாங்க அத்தை" என்று கொண்டு வந்திருந்த பைகளை வாங்கி கொண்டாள்

"சும்மார்ரா உனக்கு என்ன தெரியும் என் பதட்டம்" என்றவாறு அறைக்குள் நுழைய பேத்தி அங்கே சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த படி ஆங்கில பத்திரிகையில் தன் முகத்தை திணித்து கொண்டிருந்தவள் நிமிர்ந்தாள் பாட்டியை பார்த்தவுடன் எழுந்திருக்கவில்லை

"ஹாய் பிளாக் மதர் ஹவ் ஆர் யு" என்றாள்

"என்னடி உடம்பு சரியில்லை னு சொன்னாங்க என்றாள் அதிர்ச்சியாய்

"அப்படி சொன்னா தான் நீ வருவேன்னு நான் தான் எனக்கு ஜுரம் னு போன் அடிச்சு சொன்னேன்"
என்றாள் கண் சிமிட்டி

"அடி பாவி மகளே வயசான காலத்திலே ஏன் இப்படி விளையாடறே"

"டேக் இட் ஈஸி பாட்டி டாடி மம்மி ரெண்டு பேரும் நீ இங்கே வரலைன்னு ஒரே cry பண்றாங்க அதான் இப்படி பண்ணேன் "

தன் மகன் மருமகளை பார்த்தாள் கோபமாய் அவள் கண்களின் கோபம் தாங்காத இருவரும்
நந்தினி யை இப்படி செய்யலாமா சாரி கேள் பாட்டி கிட்டே " என்றனர்

"நோ நான் ஜீன்ஸ் தான் கேட்பேன் "

"அம்மா உனக்கு உன் பேத்தி அங்கே வரணும்னு ஆசை எனக்கு நீ இங்கே நீ வரணும் னு ஆசை என் ஆசை நிறைவேறிடுச்சு "

"அப்ப பேத்தியை அங்கே வர சொல்லணும்னா நான் சாக கிடக்கணுமா" என்றாள் கண்களில் நீர் திரையிட

" சீரியல் சீன் போடாதீங்க பாட்டி ரொம்ப போர்" என்றாள் பேத்தி நந்தினி

பேத்தியின் நடவடிக்கைகளை பார்க்க பார்க்க கருத்தம்மாவிற்கு ஒரே வியப்பாகவும் சில சமயம் வெறுப்பாகவும் இருந்தது அவள் அணியும் உடைகள் எதயும் சாதாரணமாக எடுத்து கொள்ளும் கேரக்டர் நின்று கொண்டே சாப்பிடுவது. அள்ளி பின்ன வேண்டிய கூந்தல் கத்தரித்த படி இருந்தது என் நேரமும் காதில் மிசினுடன் தலையாட்டி கொண்டே இருப்பது கையில் செல் போன் வைத்து கொண்டு நொண்டி கொண்டே இருப்பது என்று அவள் அவளுக்கு அதிசயமாகவே தெரிந்தாள்.

மகன் மருமகள் இருவரும் வெளியில் வேலை இருக்கிறது என்று கிளம்ப பாட்டியும் பேத்தியும் மட்டுமே. பாட்டிகிட்டே எதுனா பேசிகிட்டு இரு அவங்களுக்கு என்ன தேவையோ அதை பாரு என்று கண்டிசன் போட்டு விட்டு தான் சென்றார்கள்
"நீ என்ன படிக்கிறே" என்றாள் கருத்தம்மா
"சொன்னா உனக்கு புரியுமா பிளாக் மதெர்" என்று சிரித்த நந்தினி b.tech electronic எங்கே சொல்லு என்றாள்

"எனக்கு அதெல்லாம் சொல்ல தெரியலை நான் கொண்டு வந்த பலகாரம் சாப்பிட்டியா"

"நோ எனக்கு பிடிக்கலை பிஸ்சா, capacino ,பர்கர் ,இதெல்லாம் கொண்டு வந்தியா சொல்லு சாப்பிடறேன்"

"வாயிலே நுழையாத பேரை சொல்றியே "

"நோ நோ இதெல்லாம் சாப்பிடற புட் தான் "

"சரி நீ நல்லா கதை சொல்வேன்னு டாடி சொல்வாங்க கதை சொல்லு "என்றாள்

கருத்தம்மா உடனே பேத்தி ஆசையாய் கேட்கிறாள் என்று ஆர்வமாய் ஒரு ஊர்லே ஒரு ராஜா வாம் என்று ஆரம்பிக்க, அந்த நேரம் பார்த்து அவள் தோழியிடமிருந்து போன் வர அவள் வாக்மேன் மாட்டி கொண்டு பேச ஆரம்பித்தாள்.பாட்டி அருகில் இருப்பது மறந்து போனவளாய் கம்ப்யூட்டரில் அமர்ந்து அதில் இன்டர்நெட் பார்த்தவாரே தொடர்ந்து பேச ஆரம்பித்தாள்.

கருத்தம்மா தான் பேசுவது அவளுக்கு கேட்காது என்று தெரியாமலே கதை சொல்லி வந்தாள் அங்கு வந்த வேலைக்காரி "அது பாட்டுக்கு வாக்மேன் லே பேசிகிட்டு இருக்கு நீங்க யாருக்கு கதை சொல்லிட்டிருக்கீங்க அம்மா" என்றாள்
அப்போது தான் தெரிந்தது கருத்தம்மாவுக்கு

அவள் கொஞ்சம் கோபம் கொஞ்சம் வருத்தமாய் அங்கிருந்து எழுந்து சென்று சென்று வாசல் பக்கம் இருந்த சேரில் அமர்ந்து விட்டாள் பேத்தியிடம் கண்ட இந்த செய்கை அவளை பெரிதாய் வாட்டியது .மனசு க்குள் அங்கலாய்த்து கொண்டாள்
மடியில் படுக்க வைத்து எத்தனை நீதி கதைகளை சொல்லி இருப்பார்கள் நம் முன்னோர்கள், அந்த கதைகளை நம்ப முடியாதது போல் இருந்தாலும் எத்தனையோ தோல்விகளை தாங்க கூடிய , சிந்தித்து செயலாற்ற கூடிய மனதை நம்மிடம் உருவாக்கி இருப்பார்கள் ... இன்றைய குழந்தைகளிடம் பேசுவது கூட குறைந்து விட்டது .. அவர்களிடம் எது பேசினாலும் அந்நிய மொழியில் தான் பதில் வருகின்றது எதை கேட்டாலும் எல்லாம் தெரியும் என்கிற ரீதியில் நடந்து கொள்கிறார்கள் ... பாவம் அவர்களை குறை சொல்லவும் முடியாது ... நமது தற்போதைய வாழ்க்கை நம்மை இப்படி ஆக்கி விட்டது... எந்த நிலையில் நாம் இப்போது இருக்கின்றோம் என்பதை ஒருமுறை பின்னோக்கி பார்த்தால் எப்படி பட்ட இடைவெளி நடுவில் உருவாகியிருக்கிறது இல்லை இல்லை உருவாக்கபட்டிருக்கிறது என்பது தெரியும்

"ஆதீத வளர்ச்சி ஆபத்தானது
மிதமான வளர்ச்சி நிம்மதியானது ....." இதை இந்த தலைமுறைக்கு யார் எடுத்து சொல்வது
உட்கார்ந்த நிலையில் திரும்பி தன் பேத்தியை பார்த்தாள்
அவள் இங்கே இவள் இருப்பதையே லட்சியம் செய்யாமல் அங்கேசொல்டா, யா யா என்று சொல்லி கொண்டே கம்ப்யூட்டரை பார்த்து கொண்டிருந்தாள்.

அரசன் . சே

இது அரசன் . சே அவர்களது முதல் சிறுகதை ஆகும்
அவருக்கு வாழ்த்தும் ஊக்கமும் தாருங்கள்

ஆர்.வி.சரவணன்

6 கருத்துகள்:

  1. தங்களின் அங்கீகாரத்துக்கு என் உள்ளம் நிறைந்த நன்றிகள் சார் ...

    பதிலளிநீக்கு
  2. ஆதீத வளர்ச்சி ஆபத்தானது
    மிதமான வளர்ச்சி நிம்மதியானது .

    சிறப்பான சிறுகதைக்குப் பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
  3. " ஆதீத வளர்ச்சி ஆபத்தானது
    மிதமான வளர்ச்சி நிம்மதியானது ..... " உண்மை தான்...

    அரசன் . சே அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    தொடருங்கள்... நன்றி…

    பதிலளிநீக்கு
  4. "ஆதீத வளர்ச்சி ஆபத்தானது
    மிதமான வளர்ச்சி நிம்மதியானது .//

    கருத்துள்ள கதை
    அருமையாகச் சொல்லிப்போகிறார்
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  5. நல்ல கருத்துடன் கூடிய சிறுகதை பாராட்டுகள் ..அண்ணா..

    பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துகள் சார்..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்