வெள்ளி, ஜூன் 01, 2012

வெள்ளி விழா ஆண்டில் பாக்யா




வெள்ளி விழா ஆண்டில் பாக்யா

நடிகர் இயக்குனர் கே .பாக்யராஜ் அவர்களின் பாக்யா வார இதழ் வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது பாக்யா வார இதழுக்கு ஒரு வாசகனாய் வாழ்த்துக்கள் சொல்வதுடன் ஒரு வாசகனின் பார்வையில் பாக்யா வை பற்றி பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் இருபத்தி ஐந்தாம் ஆண்டு என்பதால் பாக்யா வை பற்றி இருபத்தி ஐந்து குறிப்புகள் தந்திருக்கிறேன் (இவை யாவும் எனது நினைவலைகளில் இருந்து முடிந்த வரை யோசித்து திரட்டியது )

1 பாக்யா வை பாக்யராஜ் ஆரம்பித்த வருடம் 1988

2 அப்போது அவர் மிகுந்த பிஸியாக இருந்தார் அப்பொழுது இது நம்ம ஆளு படத்தில் முமுரமாக இருந்தார்

3 அந்த படத்தின் ஆரம்பத்தில் பாக்யராஜ் பச்சை மலை சாமி ஒண்ணு .... பாடல் காட்சியில் நாட்டை பார்த்து தான் ரூட்டை மாத்தினேன் என்று பாடும் போது பாக்யா விளம்பரம் வரும்

4 பத்திரிகை ஆரம்பித்ததற்கு அவர் அப்போது கொடுத்த விளக்கம் வருடத்திற்கு ஒரு முறை உங்களை சந்தித்த நான் இனி வாரம் ஒரு முறை உங்கள் வீடு தேடி வந்து சந்திக்கும் விருப்பத்துடன் பாக்யாவை ஆரம்பிக்கிறேன் என்று சொல்லியிருந்தார்

5 மெய் பொருள் காண்பது அறிவு என்பது பாக்யாவின் காப்சிங் வரிகள்

6 முதல் இதழில் முதல் பக்கத்தில் தலையங்கத்திற்கான சிம்பல் ஆக ஒரு தலையாட்டி பொம்மை. அதன் தலையில் பாக்யராஜ் முகம் பதிந்திருக்கும். அந்த படத்தின் கீழே இந்த பொம்மை எந்த பக்கம் சாய்த்தாலும் அது மீண்டும் தன் இயல்புக்கு வந்து விடும் அது போல் எந்த பக்கம் சாய்க்க நினைத்தாலும் சாயாமல் கொண்ட கொள்கையில் பாக்யா உறுதியாக இருக்கும் என்று விளக்கம் அளித்திருந்தார்

7 வெளியான முதல் இதழில் இது நம்ம ஆளு இம் மாத வெளியீடு என்று விளம்பரம் வந்திருந்தது ஆனால் அந்த மாதம் முடியும் தருவாயிலும் படம் வெளியாகவில்லை.அந்த மாதம் முடிவில் வந்த இதழில் கண்டிப்பாக இம் மாத வெளியீடு என்று சொல்லியிருந்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது ( படமும் மாத இறுதியில் வெளியானது )

8 ஆரம்பித்த புதிதில் கலைஞர் கருணாநிதி அவர்களை பாக்யராஜ் நேரிடையாக சென்று பேட்டி எடுத்து வெளியிட்டிருந்தார்

9 அடுத்து காங்கிரஸ் தலைவர் மூப்பனார் அவர்களை சென்று சந்தித்து பேட்டி எடுத்து வெளியிட்டிருந்தார்

10 ஒரு வாசகர் ஜெயலலிதா அவர்களை பேட்டி எடுப்பீர்களா என்று கேள்வி கேட்டதற்கு ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் பேட்டி எடுக்க முயற்சித்தேன். ஆனால் எனக்கு அவர்கள் அப்பாயின்மென்ட் கிடைக்கவில்லை நான் கேட்க நினைத்த கேள்விகளை வேண்டுமானால் தருகிறேன் ஜெயலலிதா உங்கள் ஊருக்கு வரும் போது கேட்கின்றீர்களா என்று பதில் கொடுத்திருந்தார்

11 வைரமுத்துவின் இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள் கவிதை தொடர் பாக்யாவில் வெளி வந்தது தான்

12 முதல் இதழில் ஆசை எனும் வேதம் பாலகுமாரனின் தொடர்கதை ஆரம்பமாயிற்று

13 ஆரரோ ஆரிரரோ திரைக்கதை தொடர் பாக்யாவில் வெளியானது

14 அவசர போலிஸ் நூறு திரைக்கதை தொடர் வெளியானது

15 பவுனு பவுனு தான் திரைக்கதை தொடர் வெளியானது

16 இரண்டாவது தாலி என்ற பெயரில் அவர் எழுதிய தொடர் தான் பின் பிரபு சீதா நடிக்க பொண்ணு பார்க்க போறேன் என்ற பெயரில் வெளியானது

17 பாக்யராஜ் அவர்களின் கேள்வி பதில் பகுதி நான் விரும்பி படிக்கும் ஒரு பகுதி. பாக்யா விற்கு மகுடம் என்றால் அது அவரது கேள்வி பதில்கள் தான் என்பேன். அப்போதிலிருந்து இதோ இப்போதைய வாரம் வரை சுவாரஸ்யத்துடன் எழுதி வருகிறார்

18 இப்போது வரும் பகுதிகளில் எதிரொலி என்னை கவர்ந்த ஒன்று

19 நான் கல்லுரி படித்து கொண்டிருந்த கால கட்டத்தில் பாக்யா வெளி வர தொடங்க, எங்கள் வீட்டில் கதை புத்தகம் படிக்க அனுமதியில்லை. மேலும் பாக்யா புத்தகம் வீட்டில் வாங்கவில்லை என்பதால் எனது பாக்கெட் மணியில் வாங்க ஆரம்பித்தேன். வாங்கி வெளியிலேயே படித்து விட்டு எனது நண்பர்களுக்கு கொடுத்து விடுவேன் வீட்டுக்கு எடுத்து செல்ல முடியாது என்பதால்

20 சென்னைக்கு வேலை தேடி வந்த போது ஒரு நாள் அப்பாவுடன் வெளியில் வந்தேன் (அவர் பயங்கர ஸ்ட்ரிக்ட் அடிச்சார் என்றால் கண் மண் தெரியாமல் அடிப்பார் ) அப்படியும் அவர் கண்ணில் சிக்காமல் அவர் என் பக்கத்தில் இல்லாத கொஞ்ச நேர இடைவெளியில் பக்கத்திலிருக்கும் கடைக்கு அவசரமாய் சென்று கடையில் அந்த வார பாக்யா வாங்கி எனது சட்டைக்குள் செருகி வைத்து கொண்டேன். வீட்டுக்கு வந்து தான் எடுத்தேன் அது வரை அவர் கண்ணில் தென்படாமல் சட்டைக்குள் வைத்திருந்த அந்த த்ரில்லிங் இன்னிக்கு நினைச்சாலும் சிலிர்ப்பா இருக்கு

21 பாக்யவிற்கும் எனது படைப்புகளை அவ்வப்போது அனுப்பியதுண்டு இருந்தும் இந்த இத்தனை வருடங்களில் எந்த ஒரு படைப்பும் வெளியாகவில்லை

22 வேலைக்கு சேர்ந்த பிறகு அலுவலகம் செல்லும் போது பாக்யா வாங்கி விட்டால் ( மற்ற புத்தகங்களும் தான் ) வேலைகளுக்கு நடுவில் எப்படியோ கொஞ்சம் கொஞ்சமாக படித்து விடுவேன்

23 திரைமறைவு ரகசியங்கள் என்ற பகுதி அன்றைய சினிமாவை பற்றிய நிகழ்வுகளை, சுவை பட அறிந்து கொள்ள வைக்கிறது

24 நானும் அரசியலும் என்ற தலைப்பில் பாக்யராஜ் இப்போது எழுதி வரும் அனுபவ தொடர் நம்மை அந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு கொண்டு செல்கிறது

25 பாக்யா வுடனான எனது ஒரு சந்தோஷம் நான் சாதி பற்றி எழுதி அனுப்பிய ஒரு அனுபவ கடிதத்தை பாராட்டி அப்போது பாக்யா விலிருந்து கடிதம் வந்திருந்தது. இன்றும் அதை பத்திரமாய் பாதுகாத்து வைத்திருக்கிறேன்
( ஏற்கனவே இத் தளத்தில் ஒரு பாராட்டு கடிதம் என்ற தலைப்பில் இது குறித்த பதிவை தந்திருக்கிறேன் )

கால் நூற்றாண்டை கடக்கும் பாக்யா அரை நூற்றாண்டை சாதனையுடன் தொட வாழ்த்துக்கள்
பாக்யா அண்ட் பாக்யராஜ் சார்

ஆர்.வி .சரவணன்



6 கருத்துகள்:

  1. அருமையான பதிவு.
    வாழ்த்துகள் சரவணன்.

    பதிலளிநீக்கு
  2. ஒரு பத்திரிகையோடு உள்ள நீண்ட கால தொடர்பு எத்தனை இனிமையானது பாருங்கள்...

    பதிலளிநீக்கு
  3. எங்கள் வீட்டில் பாக்யா எல்லாம் வாங்க மாட்டார்கள். சில நேரங்களில் என் அண்ணன் வெளியூரில் இருந்து வரும்போது கொண்டு வருவார். மிகவும் சுவாரசியமான இதழ். அதிலும் அவரது கேள்வி பதில் பகுதி, சின்ன சின்ன கதைகள் நிறைந்து, அதற்காகவே படிப்பேன். நானும் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. பாக்யாவை வைத்து 25 குறிப்புக்கள் தந்தீர்கள், சுவையாக.

    பதிலளிநீக்கு
  5. மினி பாக்யா பற்றி எதுவும் சொல்லுங்களேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்