செவ்வாய், அக்டோபர் 20, 2015

ஸ்வீட் காரம் காபி




ஸ்வீட் காரம் காபி

டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு  காட்சியில்  மட்டும் இதை அதிகமாக  காண முடிந்தது.நான் ரசித்த அந்த காட்சியை பற்றி இங்கே குறிப்பிடுகிறேன்.

நயன்தாராவை கொல்ல திட்டமிட்டு ஆள் அனுப்பி வைக்கும் அரவிந்த்சாமி, (இது 
ஒரு பக்கம்), அதே நேரத்தில் தன் மனைவியை கொல்லவும்  திட்டமிட்டு கிளம்பி வீட்டுக்கு வருகிறார். (இது இன்னொரு பக்கம்.) ஜெயம் ரவி, தான் பெருமூச்சு  விட்டால் கூட  வில்லனுக்கு  எப்படி தெரிந்து விடுகிறது என்பதை உணர்வதும் அப்போது தான். (இது முன்றாவது பக்கம் )  நயன்தாரா எப்படியும் இன்று ரவி காதலை சொல்லி விடுவார்  என்று  ஆசையுடன் அவரை பார்க்க வருகிறார் . (இது நான்காவது பக்கம் ) இப்படி நான்கு வித டென்ஷன்களையும்  (மலை உச்சிக்கு நம்மை கொண்டு சென்று நிறுத்தி விடுவது போல்)  நம்மீது நன்றாக ஏற்றி விடும் இயக்குனர் (நம்மை திடீரென்று கீழே தள்ளி விடாமல்) அந்தக் காட்சியை சப்பென்று முடித்து விடாமல் டென்சன்களை ஒவ்வௌன்றையும் அழகாக  இறக்குகிறார். எப்படி ?

நயன்தாராவை கொல்ல வேண்டாம் என்ற முடிவுக்கு  அரவிந்த்சாமி வருவது, அடுத்து தன் மனைவியை கொல்ல வேண்டாம் என்ற முடிவையும் எடுப்பது.  இந்த இரண்டு முடிவையும் அவர் எடுக்க காரணமே ரவி நயன்தாராவை திட்டுவது போல் நாடகமாடுவதால் தான்.  ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் நயன்தாரா  அழுகிறாரே என்ற டென்சனை எப்படி நீக்குகிறார்?  ரவி எதுவும் பேசாமல் சூழ்நிலையை பற்றி சொல்லி i love you என்று  போர்டில் எழுதி காண்பிக்க, நிலைமை புரிந்த  நயன்தாரா, டாக்டர் வரும் வரை கட்டி பிடிச்சிக்கலாமா  என்றெழுதி விட்டு ஆசையாய் ரவியை பார்க்கிறார். விசிலடிக்க தெரியாதவரை கூட விசிலடிக்க கற்று கொண்டாவது  விசிலடிக்கலாமா என்று ஆர்வத்தை தருகிறது இந்த காட்சி .டென்ஷனுடன் ஆரம்பிக்கும் இந்த காட்சி ரொமாண்டிக்காக முடியும் போது  பாடல் ஒன்று குறுக்கிடுகிறது என்றாலும் அதை ரசித்த படியே மன்னிக்கிறோம்.


ரவி தான் தன் எதிரி என்று தெரிய வந்தவுடன்  தொடர்ந்து ரவியின் 
நடவடிக்கைகளை அரவிந்த்சாமி வாட்ச் செய்கிறார். அது போலவே தான் நமக்கும் 
அவர் திரையில் வர ஆரம்பித்த நிமிடத்திலிருந்து  கடைசி காட்சி வரை அவரையே கவனிச்சிட்டிருக்க தோணுது. வெல்கம் பேக் அரவிந்த்சாமி.

வசனங்களின் மூலம்  பல இடங்களில் கை தட்டல்களை வாரி கொள்கிறார்கள் சுபா.டைரக்டர் மோகன் ராஜாவுக்கு  ஒரு வார்த்தை .இந்த படத்தை வேற மொழில ரீமேக் பண்ண நிறைய பேர் இருக்காங்க. ஆகவே தொடர்ந்து இது போல் படங்கள் தமிழில் கொடுங்க. ஏன்னா  தனி ஒருவன் உங்களுக்கு கொடுத்திருப்பது மிக பெரிய அங்கீகாரம்.



யக்குனர் பற்றி சொல்றப்ப தான் நான் இப்ப படிச்சுகிட்டிருக்கிற புத்தகம் ஞாபகத்துக்கு வருது.  இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் திரும்பி பார்க்கிறேன் புத்தகம் தான் அது .லைப்ரரியிலிருந்து எடுத்து வந்து படித்து கொண்டிருக்கிறேன். அவர் சினிமாவில் நுழைய பட்ட சிரமங்களை கொண்டே சிகரமாகியிருப்பதை எல்லாம் நேரில் பார்த்த மாதிரி ஒரு பீலிங். படிக்கிறதுக்கு 
செம இண்டரெஸ்டிங்காக இருக்கு. கல்கியில் தொடராக வந்த போது சில அத்தியாயங்கள் படித்திருந்தாலும், இப்ப புத்தகமா படிக்கிறப்ப எந்த பக்கமும் திரும்பாம படிக்க வச்சிருக்கு 
இந்த திரும்பி பார்க்கிறேன். கூடவே ஸ்ரீதர் சார் படங்கள் எல்லாத்தையும் ஒரு ரவுண்டு  பார்த்துடணும்னும்  தோணுது. அவரது படங்களில் இன்றைக்கும் எனது மிகப் பெரிய விருப்பம் காதலிக்க நேரமில்லை.



னோரமா அவர்களை பற்றி நினைத்தால் என் நினைவுக்கு வருவது மூன்று படங்களும் அதில் அவர் நடித்த கதாபாத்திரங்களும் தான் . ஒன்று தில்லானா மோகனம்பாள் நாயனத்தில நீங்க வாசிச்சா தான் அந்த சத்தம் வருதா என்ற அப்பாவி ஜில் ஜில் ரமாமணி, சம்சாரம் அது மின்சாரம்  கம்முனு கிட என்ற அதட்டல் கண்ணம்மா, சின்ன கவுண்டரில்  நீ போயிட்டு வாப்பா அம்மா நான் இருக்கேன்ல என்று பஞ்சாயத்தில் இறுக்கமாய் அமர்ந்திருந்த கிராமத்து அம்மா .எந்த கதாபாத்திரமானாலும் எப்படி இவர் தன்னை பொருத்தி  கொள்கிறார் என்ற ஆச்சரியம் தொடர்ந்து கொண்டிருக்கும் போதே அவர் மறைந்து விட்டார். அவரை திரையுலகமும்  சினிமா ரசிகர்களும் மட்டும் மிஸ் பண்ணல. இன்னும் அவர் நடிக்க வேண்டிய கேரக்டர்கள் (அப்படி எதுனா மிச்சமிருக்கா என்ன ) கூட  மிஸ் பண்ணிருச்சுனு தான் சொல்ல தோணுது 





மேடவாக்கத்தில் நாங்கள் குடியிருந்தது 1989 வருடத்தில். தினமும் காலை அலுவலக நேரத்தில் பேருந்துக்கு காத்திருத்தலும், நிறுத்தத்தில் நிற்காமல் தள்ளி சென்று நிற்கும் பேருந்தை  ஒடி சென்று பிடித்து ஏறுவதும், பேருந்து  சில நேரம் ப்ரேக் டௌன் ஆகி நிற்கையில் அடுத்த பேருந்துக்கு காத்திருந்த வேலைகள்,  வேலை தேடி அலைந்த நேரங்கள்,  அங்குள்ள குமரன் தியேட்டரில் (அப்போது  அது டூரிங் டாக்கிஸ் .இப்போது அது பெரிய தியேட்டர் ஆகி விட்டது) ஒவ்வொரு ஞாயிறு மாலையும் குடும்பத்துடன் எந்தப்படமாக இருந்தாலும் சென்று பார்த்து வருவது  இவையெல்லாம் சென்ற வாரம் அங்கே சென்றிருந்த போது ஞாபகத்துக்கு வந்தது. வேலைக்கு சென்று வருவதில் இருந்த சிரமங்கள் மற்றும் சிட்டி வாழ்க்கையில் ஐக்கியமாகும் ஆர்வம் இதெல்லாம் 1993 ல் சிட்டிக்கு எங்களை இடம் பெயர வைத்து விட்டது. இப்போது  மேடவாக்கத்தை பார்க்கையில் "என்னடா சிட்டிக்கு போறேன்னுட்டு போனியே.இப்ப நான் எப்படி சிட்டி மாதிரி இருக்கேனா"  என்று என்னை பார்த்து அது நக்கலடிப்பதாய்  ஒரு பிரமை. எழுந்தது. கொஞ்சம் கஷடப்பட்டாலும்  அங்கேயே இருந்திருக்கலாம். காணி நிலம் வாங்கியிருந்தால் இன்று ஒரு லட்சாதிபதியாகவும்  ஆகியிருக்கலாமோ  என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை. 




ந்த  வருடம் பதிவர் திருவிழா புதுகோட்டையில் நடைபெற்றது. என் மகனையும் அழைத்து கொண்டு சென்றிருந்தேன். நண்பர் பதிவர் கரந்தை ஜெயக்குமார் எப்போது வருகிறீர்கள்  என்று கேட்டு,  தஞ்சாவூரில் இருந்து நாங்கள் வேன் எடுத்து கொண்டு செல்கிறோம் வாருங்கள் என்று அழைத்திருந்தார். அவர் மற்றும் அவரது ஆசிரிய நண்பர்கள் மற்றும் அவர் குடும்பத்துடன் கிளம்பினோம்.வீட்டிலிருந்து தயாரித்து கொண்டு வந்த காலை டிபனை கொடுத்து
 உபசரித்தார்கள். பதிவர் திருவிழவில் ஜாக்கி சேகர், மதுமதி, கலாகுமரன், அரசன்,சீனு, கோவை ஆவி, பாலகணேஷ் சார், முரளிதரன் சார், துளசிதரன், சகோதரி கீதா, மணவை ஜேம்ஸ், சசிகலா,எழில், டி டி சார் , முத்துநிலவன் சார், ஜம்புலிங்கம் சார் , கரந்தை சரவணன் சார் ,தமிழ் இளங்கோ என்று அனைவரையும் சந்தித்தது பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. விழாவில் எழுத்தாளர் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். கேள்விகளுக்கு பதிலளித்தார். அவரை சந்திப்பதும் அவரது பேச்சை கேட்பதும்  இதுவே முதல் முறை.




மாலை கிளம்புகையில் நான் பஸ்ல போய் கொள்கிறேன் என்று ஜெயக்குமார் சாரிடம் சொன்ன போது வேன்லயே போயிடலாம் இருங்க என்று சொன்னார். அது போலவே அழைத்து சென்று தஞ்சாவூர் பேருந்து நிலையம் வரை கொண்டு வந்து விட்டு வழி  அனுப்பி வைத்தார்.  சார் இப்ப ப்ளாக் ல நீங்க எழுதறதில்லையே என்று அக்கறையுடன் விசாரிப்பார் .பதிவர் திருவிழாவில் அவர் எழுதிய வித்தகர்கள்  புத்தகம் வெளியீடு நடைபெற்றது. அவரது புத்தகங்களின்   வெளியீடு தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.





ங்க கும்பகோணத்துல பரணிகா தியேட்டர் ரொம்ப பேமஸ்.பல பெரிய படங்கள் அங்க ரிலீஸ் ஆகியிருக்கு. ஆகிட்டிருக்கு. எனது கல்லூரி நாட்களில் நிறைய படங்கள் அங்க பார்த்திருக்கேன். காலேஜ் டேஸ்ல என் பெரும்பாலான நேரங்கள் அந்த தியேட்டர் ல தான் இருந்திருக்கேன். எங்க வீடு இருந்த இடத்திலிருந்து ரொம்ப பக்கம் தான் இந்த தியேட்டர். அவ்வளவு ஏன் காலேஜ் போறதுக்கு கூட அதை தாண்டி தான் போகணும் . என் திரை கனவுகளை வளர்ந்தது கூட இங்கே தான்.சென்ற வாரம் அந்த தியேட்டர்ல படம் பார்க்க போயிருந்தப்ப, அங்க இதுக்கு முன்னாடி  உபயோகிச்ச ப்ரொஜெக்டரை ஷோ கேஸ்ல  வச்சிருந்ததை  பார்த்தேன்.அங்கிருந்த ஊழியர் கிட்டே  அனுமதி வாங்கிட்டு போட்டோ எடுத்தேன். தியேட்டர் அரம்பித்த நாள் முதலாய் 1996 வரை இது தான் இருந்தது என்றும் சொன்னார்கள். ஏதோ ஒரு  தியேட்டர் பத்தி சொல்றான்னு சுவாரசியம் காட்டாமே இருந்துடாதீங்க. சினிமா ரசிகர்கள் உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச தியேட்டர் தான் இது. ஆமா பாஸ் .பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துல தல  தளபதி படங்கள் ஒரே தியேட்டர்ல ரீலீஸ் ஆகியிருக்கு னு ஆர்யாவும் சந்தானமும் படம் பார்க்க வருவாங்களே. சந்தானம் கூட  அடி வாங்குவாரே அந்த  தியேட்டர் இது தான்.




அகம் புறம் குறும் படம் இசை கோர்ப்பு வேலைகள் முடிந்து  பைனல் கட்டுக்கு எடிட்டரிடம் வந்து விட்டது.ஒரு கதையின் கதாபாத்திரங்கள் எழுத்திலிருந்து உயர் பெற்று திரையில் நடமாடுமவதை பார்க்கும் புது அனுபவம் சுவாரஸ்யமா தான் இருக்கு. இந்த படம் உங்களை சுவாரஸ்யமாக்குமா என்பதை தெரிஞ்சிக்க 26 வரை நான் வெயிட் பண்ணியே ஆகணும் . அந்த டென்சனை குறைக்கவாவது இல்லாத  நகம் கடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கலாமா னு தோணுது.

நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம் 

ஆர்.வி.சரவணன் 


8 கருத்துகள்:

  1. SKC - நன்று....

    குறும்படம் வெற்றியடைய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. சுவாரஸ்யமாகவும் அருமையாகவும் இருந்தன...

    பதிலளிநீக்கு
  3. நீண்ட நாட்களுக்குப் பிறகு பகிர்வு...
    தனி ஒருவன் இன்னும் பார்க்கலை...
    பதிவர் விழா, பழைய நினைவு, அகம் புறம் என எல்லாமாய் அருமை.
    அகம் புறம் காண ஆவலாய்...

    பதிலளிநீக்கு
  4. உங்களுடன் புதுக்கோட்டை சென்று திரும்பியது மறக்கமுடியாத அனுபவமே. தங்களைப் போலவே பரணிகா தியேட்டரில் (அப்போது வேறு பெயரில் தியேடடர் இருந்தது) அதிகமான படங்களைப் பார்த்துள்ளேன். அந்நாள்களை நினைவுகூர்ந்தது உங்கள் பதிவு.

    பதிலளிநீக்கு
  5. பதிவர் திருவிழா அன்று தங்களைச் சந்தித்ததும்
    தங்களுடன் பயனித்ததும் மறக்க இயலா மகிழ்வான தருணங்கள் நண்பரே
    தங்களின் அகம் புறம் காண
    ஆவலுடன் காத்திருக்கிறேன்
    ஒளிமயமான திரை வாழ்வு தங்களுக்காகக் காத்திருக்கிறது
    வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்