வியாழன், அக்டோபர் 29, 2015

அகம் புறம் - குறும்பட அனுபவங்கள் 3







அகம் புறம் - குறும்பட அனுபவங்கள் 3




அகம் புறம் குறும்படம் வெளியாகி விட்டது. நண்பர்களின் விமர்சனங்களை படித்த போது, அவர்கள் கேட்டிருக்கும் சில கேள்விகளுக்கு விளக்கங்கள் அளிக்கலாம் என நினைக்கிறேன்.  அதற்கு முன் இந்த படத்தை பார்க்காதவர்கள் பார்த்து விட்டு வந்து படிக்குமாறு வேண்டுகிறேன்.

https://www.youtube.com/watch?v=4OFO4SwfNn0

பார்த்து விட்டீர்களா , சரி விசயத்துக்கு வருவோம்.

அகம் புறம் கதையின் ஒன் லைன் கிடைத்தது எப்படி தெரியுமா ?

ஒரு நாள் நான் சென்னையில் எனது வீட்டை திறந்த போது உள்ளே ரேடியோ ஓடி கொண்டிருந்தது. நான் ரேடியோவை நிறுத்தாமல் சென்ற படியால் 
தொடர்ந்து  மூன்று நாட்கள் வரை ஓடி கொண்டிருந்தது. சத்தம் குறைந்து இருந்த படியால் வெளியில் யாருக்கும் கேட்கவில்லை அப்படி கேட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கையில் உருவானதே இக் கதை.

முதலில் அகம் புறம் கதையை எப்படி எழுதியிருந்தேன் என்பதை பார்க்கலாம்? 

டிவி சேனலில் வேலை பார்க்கும் தீபக்குக்கு (கோவை ஆவி ) அவரது சேனலில் வித்தியாசமாக ஏதாவது செய்து கொண்டு வாருங்கள் என்ற அசைன்மென்ட் கொடுக்கபடுகிறது. அவர் ஊருக்கு போயிருக்கும் சூழலில் தன் வீட்டுக்குள் கேட்கும் குரல்கள் சத்தங்களை கொண்டு சுற்றியிருப்பவர்கள் என்ன முடிவுக்கு வருகிறார்கள் என்பதை அறிய அவரே யாரும் அறியா வண்ணம் வீட்டுக்குள்  வந்து விட்டு ஒரு சிறுவனை வைத்து பூட்டி விட்டு, உள்ளே இருந்த படி வித வித சத்தங்களையும் எழுப்பி விடுகிறார். ஒவ்வொருவரும் ஆளுக்கொரு முடிவுக்கு வருகிறார்கள் கடைசியில் அவர்கள் போலிசை அழைக்க அவர் வந்து கதவை திறந்து பார்க்கும் போது  தீபக் இருக்கவே அவனை விசாரிக்கிறார்கள்.

அவர்  சொல்வதை நம்ப மறுப்பவர்கள் உள்ளே  இருந்த படி எப்படி உன்னால் எங்களை கவனிக்க முடிந்தது என்று கேட்க அவர் கதவருகில் தான் பொருத்திருக்கும் காமெராவை காண்பிக்கிறார். படம் முடிகிறது. இது தான் நான் முதலில்  முடிவு செய்தது. இருந்தும் இதை வேறு மாதிரி முயற்சிக்கலாமே என்று யோசித்தேன்.

  கோவை ஆவி ஒன்றுமே செய்யவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளே அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது என்பதும் அதை வைத்து மற்றவர்கள் ஆளுக்கொரு முடிவுக்கு வருகிறார்கள் என்று மாற்றி எழுதுகையில் தான் நிறைய கேள்விகள் வரிசை கட்டி நின்றன. ஒவ்வென்றுக்கும் பதிலளித்து திரைக்கதை எழுதி முடித்தேன்.அது தான் இப்போது நீங்கள் பார்த்திருக்கும் இந்த குறும்படம்.


கோவை ஆவி கேரக்டர் 

அடுத்து கோவை ஆவி கேரக்டரில்  ஒரு புதுமுகம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து துளசிதரனின் உறவினர் பிஜு என்றவரை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தேன். பெங்களூரில் வசிக்கும் அவருக்கு  நடிப்பில் ஆர்வமுண்டு. ஆனால் படப்பிடிப்புக்கு 15 நாள் முன்னே  அவரால் கலந்து கொள்ள இயலாத நிலையை தெரிவித்தார். என்ன செய்வது என்று தடுமாறி, பேப்பர் பாய் கேரக்டரில் நடிக்கவிருந்த கோவை ஆவியை இந்த கேரக்டருக்கு மாற்றி விட்டு பேப்பர் பாய் கேரக்டரில் அவரது சகோதரர்
 கார்த்திக்கை நடிக்க வைத்தேன். கோவை ஆவி தான் உள்ளே இருக்கிறார் என்பது சஸ்பென்சாக இருக்கட்டும் என்று தான் நாங்கள் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படங்களை வெளியிடவில்லை.(தொப்பி வைத்து வெளியாகி இருக்கும் படமும் போஸ்டருக்காக எடுத்தது தான்)

 இந்த கேரக்டரில் கோவை ஆவி பிக்ஸ் ஆனவுடன் அதிக கவனம் செலுத்தினார். உதாரணத்திற்க்கு ஷூட்டிங் முதல் நாள் இரவு தூங்காமலே விழித்திருந்து (படம் பார்த்து, புக் படித்து ) பயண களைப்பில் இருப்பவரின் முக பாவத்தை வெளிபடுத்த முயற்சி மேற் கொண்டார். அவருக்கு நன்றி 





அடுத்து துளசிதரனின் மனைவியாக நடித்தது அவரது மனைவி உஷா அவர்களே தான். அவருக்கு மலையாளம் மட்டுமே தெரியும் என்பதால் அவரது கேரக்டரை மௌன விரதம் இருப்பதாக அமைத்தேன். வீட்டு உரிமையாளர் எனும் போது அவரது மனைவி என்று ஒரு கேரக்டர் வேண்டும். என்பதற்காகவே இந்த கேரக்டர் சேர்த்தோம். கணவன் எப்போதுமே சிறு விசயத்தையும் பெரிதாக எடுத்து கொள்பவர் தான் அலுவலகம் கிளம்ப வேண்டும் என்பதால் அவரை தொந்தரவு செய்கிறார். அதை இன்னும் தெளிவாக சொல்லாமல் விட்டு விட்டேன்.



இந்த படத்தில் கதாபாத்திரங்கள் நிறைய இருக்கிறது ஒரு குறும்படத்திற்கு இவ்வளவு கேரக்டர் தேவையில்லை

உண்மை தான் எடுத்து கொண்ட கதை கொஞ்சம் திரில் கலந்தது. துளசிதரன் தான் மெயின் கேரக்டர். கொஞ்சம் கொஞ்சமாக அவர் மீது பயத்தை ஏற்றுவதன் மூலம் சுவாரசியம் கூட்ட வேண்டும். மற்ற கேரக்டர்கள் அவர் மீது பயத்தை ஏற்றுகிறார்கள். அதற்கு தான் பேப்பர் பாய் தனக்கு தோன்றும் யோசனைகளை அடுக்குகிறார். ஒரு வீட்டில் பிரச்னை எனும் போது அந்த தெருவில் இருக்கும் முக்கியஸ்தர் யாராவது வர வேண்டும். அதற்கு  தான் ஆரூர் மூனா. அந்த கேரக்டர். சாதாரணமாக வந்து மிரட்டி செல்வது போல் இல்லாமல் இன்னும் கொஞ்சம் டென்சனை ஏற்ற வேண்டும். சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பதால் நண்பனின் தங்கை இங்கிருக்கிறதா என்று தேடி கொண்டு வந்து கலாட்டா செய்கிறார். இல்லை எனும் போது அவர் கிளம்புகிறார். அடுத்து பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் போலீசை வரவழைத்து கதவை திறந்து பார்க்கும் போது விசயம் தெரிய வருகிறது , இதில் நான் எந்த கேரக்டரையும் திணிக்கவில்லை.அரசன் கேரக்டர் இவரிடம் ஏதேனும் விஷயம் இருக்கிறதோ என்ற எண்ணத்தை ஆடியன்ஸ் மனதில் தோற்றுவிப்பதற்காக அமைக்கப்பட்டது. அதை சாதாரணமாக காண்பிக்காமல் எது நடந்தாலும் டென்சன் ஆகாமல் இருப்பவராக காட்டி கடைசியில் அவரே டென்சன் ஆகி விடுகிறார் என்று முடித்திருந்தேன். இங்கே  டென்சன் ஆன  துளசிதரன் கடைசியில் இதற்காகவா டென்சன் ஆனோம் என்று நினைக்கும் படியாக கதை முடிகிறது.

அரசன் 
அவரது குரலுக்காகவே இந்த கேரக்டரில் அவரை செலக்ட் செய்திருந்தேன்.
படபிடிப்பின் பெரும்பாலான நேரங்கள் அவர் இருக்கையிலேயே அமர்ந்திருக்க வேண்டி வந்தது. ஏனெனில் எல்லா காட்சிகளுமே அவர் பின்னே இருக்க வேண்டும் என்பதால். அவரும் சலிப்பு காட்டாமல் தொடர்ந்து ஒத்துழைத்தார்.

மாஸ்க் 

மாஸ்க் பற்றி சொல்ல வேண்டும் என்றல் கம்பில் மாட்ட பட்டிருக்கும் மாஸ்க்  உள்ளிருக்கும் நாய் செய்யும் அலப்பரையால் பாலகணேஷ் பார்க்கும் அந்த நேரத்தில் வெளி வருகிறது. பின் கீழே விழுந்து விடுகிறது.

 நாய் சத்தம் எழுப்பியிருக்க வேண்டுமே  என்று ஒரு கேள்வி வந்தது. அந்த சத்தம் கேட்டிருந்தால் அது தான் உள்ளே இருக்கிறது என்று தெரிந்து விடும் என்பதால்  தான் பெண் குரல் ஒன்று  அதை அழைப்பதாக சொல்லியிருந்தோம்.

துளசிதரன் பாலக்காட்டில் இருந்து மனைவியுடன் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார். படத்தின் ஆரம்பத்தில் இருந்து படம் முடியும் வரை  எனக்கு பக்க பலமாக  இருந்தார் என்றால் அது மிகையல்ல 

சகோதரி கீதா ரங்கன் கதை எழுத ஆரம்பித்ததில் இருந்து படம் முடிந்து தயாராகும் வரை முழு ஈடுபாட்டுடன் பணியாற்றினார். படபிடிப்பு அட்டவணை, டப்பிங், ரிகர்சல் எடிட்டருக்காக அலைந்தது, சப் டைட்டில் எழுதியது என்று ஏகப்பட்ட வேலைகளை சளைக்காமல் மேற் கொண்டார். 
நன்றி சகோதரி 


பாலகணேஷ் சாரை அப்படியே காண்பிப்பதை விட மீசையுடன் காண்பிக்கலாம் என்று தான் மீசை வாங்கி வந்து ஓட்ட வைத்து நடிக்க வைத்தோம். சார், அவ்வபோது அதை மேனரிசமாக நீவி கொண்டதில் கொஞ்சம் கலாட்டா வாகி விட்டது. படபிடிப்பு நடந்த இரு நாட்களும் அவர் கூடவே இருந்தார். கூடவே போஸ்டர்கள் சிலவற்றையும் தனி ஆர்வமெடுத்து செய்து கொடுத்தார். நன்றி சார். 

ஆரூர் மூனா அவரை பார்க்கையில் எல்லாம் எனக்கு இவர் நடிக்கலாமே ஏன் முயற்சி செய்ய வில்லை என்று தோன்றும். நடிக்கிறீர்களா என்று கேட்ட போது எனக்கு அதெல்லாம் வராது சார் என்று தயங்கினார். நீங்க வாங்க நான் பார்த்துக்கிறேன் என்று சொன்னேன். கதை படித்ததும் நடிக்க ஒப்பு கொண்டார். அதன் படியே வந்து நன்றாக நடித்து கொடுத்தார். அவர் என் மீது நம்பிக்கை வைத்து நடிக்க ஒப்பு கொண்டதற்கு நன்றி.

கார்த்திக் சரவணனுக்கு நடிப்பதில் ஆர்வமிருந்தது. ராஜேஷ் கேரக்டருக்கு யாரை தேர்ந்தெடுக்கலாம் என்று யோசிக்கையில் தான் இவர் சரியாக இருக்கும் என்று தோன்றவே அவரை நடிக்க வைத்தேன். 



சிறுவர்களை நடிக்க வைப்பதில் கஷ்டப்பட வேண்டி வருமோ என்று நினைத்திருந்தேன் ஆனால் அவர்கள் பயங்கர ஷார்ப்.  ரக்சித்  அழைத்த  போது வந்து நடித்து விட்டு பின் விளையாட சென்று விட்டார். அபிஷேக் (கிப்ட் கொண்டு வருபவன்) முதல் நாள் ஷூட்டிங் முடிந்த போது அவ்வளவு தானா என் டயலாக்ஸ் என்று கேட்டான். நாளையும் இருக்கிறது என்ற போது அடுத்த நாள் நான் அவன் வீட்டுக்கு படபிடிப்புக்கு வரும் போதே அதே உடையுடன் தயாராக காத்திருந்தான்.

அடுத்து என் தம்பிக்கும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆரூர் மூனா வுக்கு உதவியாளர் கேரக்டர் இருந்ததால் அதில் அவரை நடிக்க வைத்தேன்.பந்து விளையாடும் சிறுமி அவரது மகள் ஜெயப்ரியா தான்.





என் மகன் ஹர்ஷவர்தன் அவ்வபோது பல்ராம் நாயுடு குரலில் மிமிக்ரி செய்வதை பார்த்த போது அதை பயன்படுத்தி கொள்ளலாமே என்று தோன்றவே அவனை நடிக்க வைத்தேன். இந்த படத்தின் போஸ்டர்கள் பெரும்பாலனவை என் ஐடியா படி அவன் உருவாக்கியது தான்.





இந்த படத்தின் படபிடிப்பு நடந்தது மொத்தம் ஒன்றரை நாட்கள் தான் இன்னும் ஒரு நாள் படப்பிடிப்பு என்று இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக புட்டேஜ் மற்றும் நடிப்பை கொண்டு வந்திருக்க முடியும் 

அடுத்து ஒரு படத்திற்கு மிக முக்கியம் இசை மற்றும் எடிட்டிங். இன்னும் கொஞ்சம் எனது பட்ஜெட் அனுமதித்திருந்தால்  நேரம் அனுமதித்திருந்தால் டெக்னிகல்  வகையில் இன்னும் கொஞ்சம் மேம்பட்டிருக்கும் இப் படம்.




நாம் என்ன எழுதுகிறோமோ அதை அழகான விசுவலாக்குவது என்பது மிக பெரிய சவால். அதை கற்று  கொள்வதில் தான் இப்போது முட்டி மோதி கொண்டிருக்கிறேன்.

ஒரு சிம்பிளான கதைக்கு முயற்சிப்பதை விட சிக்கலான கதையை செய்து பார்க்கலாமே என்ற ஆர்வம்  தான் என்னை இந்த படத்தை எடுக்க வைத்தது.


ஒரு படைப்பை பற்றி, தள்ளி நின்று நமட்டு சிரிப்புடன் விவாதிப்பதற்கு பதில் நம்மிடமே வந்து ஏன்யா இப்படி பண்ணி வச்சிருக்கே என்று கேட்பது அழகானது.  படைப்பாளிக்கும் அது பயன் தரும்.  நண்பர்கள் அனைவருமே படம் பற்றிய கருத்துக்களை  பகிர்ந்து கொண்டதில் 
எனக்கு மிக்க மகிழ்ச்சி.

குறும்படம் பண்ண வேண்டும் என்ற எனது ஆசை நதியில் இறங்கி நீச்சல் கற்று கொள்வது போல். கரையில் நின்ற படி யார் கற்று தருவார்கள் என்று காத்திருப்பதற்கு பதில் நாமே கற்று கொள்வோம் என்று தான் குதித்து விட்டேன். அப்படி குதித்தவுடன் பயத்தில்  தத்தக்கா என்று கை கால்களை அசைப்போம் அல்லவா .அது தான் எனது சில நொடி சிநேகம். நதியின் போக்கு அறிந்து அதன் வேகத்தை உணர்ந்து கொண்டு நீந்த ஆரம்பித்திருப்பது தான்  இந்த அகம் புறம். இனி நான் நன்றாக நீச்சல் கற்று கொள்ளலாம். இல்லை நதியின் வேகத்தில் அடித்து கூட செல்லப்படலாம். இல்லை நீச்சலே வேண்டாம் என்று கூட கரையேறி விடலாம். இதில் எது நடக்கும் என்பது காலத்தின் கையில் இருக்கிறது. 

எதுவாயிருப்பினும் முயற்சிகளை தொடர வேண்டும் குறைகளை எல்லாம் நிறைகளாக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.

 எனக்கு ஊக்கமளிக்கும் வலையுலக  மற்றும் முக நூல் நண்பர்களுக்கு 
 நன்றியும் அன்பும் என்றென்றும். 

ஆர்.வி. சரவணன்

22 கருத்துகள்:

  1. எந்தளவு கவனம் என்று ஒவ்வொரு வரியிலும் உணர முடிகிறது... பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
  2. குறும்படம் தொடர்பான அனுபவங்கள் தங்களுக்கு தொடர்ந்து பல படங்களை எடுக்க உதவியாக இருக்கும் என நம்புகிறேன். சுயமதிப்பீடு என்ற நிலையில் ஒன்றுவிடாமல் தாங்கள் பகிர்ந்த விதத்தை நோக்கும்போது நிறைகுறைகளில் தாங்கள் கவனமாக இருப்பீர்கள் என அறிந்தேன். ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடமே. தெர்டர்ந்து பணியை மேற்கொள்ளுங்கள். இத்துறையில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. தெளிவான ,விளக்கங்கள் நிரம்பிய பதிவு .

    அருமை சார் !

    இந்த குறும்படங்கள் என்ற நதியை திறமை என்னும் நீச்சலால் வென்று திரைப்படம் என்னும் சமுத்திரத்தை அடைந்து அங்கும் வெற்றி அடைவீர்கள் என நம்புகிறேன் ..வேண்டுகிறேன் ... !!!!!!!!!

    பதிலளிநீக்கு
  4. நாளைய வெற்றி உங்கள் பக்கம் தான் சார்! நம்பிக்கை அதுதானே வாழ்க்கை!

    வாழ்த்துகள் சார்.

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் எங்களுக்கு உங்கள் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்தமைக்கு மிக்க மிக்க நன்றி சார்...

    பதிலளிநீக்கு
  6. இன்னும் சிறப்பாக வெற்றி பெறுவீர்கள் அண்ணா...
    திரைக்கதையும் வசனமும் ரொம் அருமை அண்ணா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. மிக மிக அருமையாக குறும்படம் குறித்த
    அனுபவங்களைப் பதிவு செய்துள்ளீர்கள்
    கரு உருவான விதமும் அது விரிவாகி
    உருவான விதமும் சொல்லிப் போனவிதம் அருமை
    தொடரவும் சிகரம் தொடவும்
    அதில் நிலைக்கவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. உயரத்தை தொட வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. குறும்படங்கள் தொடர்பான உங்கள் அனுபவப் பதிவுகள் மிக நன்று. மேலும் சிறக்க எனது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. ம்ம்ம்ம்ம்ம்ம்....

    நான் பின்னூட்டம் இட்டிருந்தேனே?
    இடவில்லையா?

    (அனுபவங்கள் பேசினால்>>.?)

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்...

    நலம் நலமே ஆகுக.

    தங்களை ஒரு தொடர் பதிவில் இணைத்திருக்கிறேன்...
    முடிந்தால்... முடியும் போது எழுதுங்கள்...

    http://vayalaan.blogspot.com/2015/11/12.html

    பதிலளிநீக்கு
  12. தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருங்கள் நண்பரே! ஒருநாள் நீங்கள்தான் கே பாலச்சந்தர்! - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
  13. தொடரட்டும் வெற்றிகள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்