இதற்கு தானே ஆசைபட்டாய் சரவணா
நீ எதற்கு ஆசைபட்டாய். அப்படி என்ன தான் நடந்துடுச்சுன்னு பெரிசா அலட்டிக்கிறே என்று உங்களுக்கு தோணுது. சொல்றேன். என் வாழ்க்கையை நானே அவ்வபோது வேடிக்கை பார்ப்பவன் போல் நினைத்து பார்ப்பதுண்டு அதில் இறைவன் ஒவ்வொருவர் வாழ்க்கையின் சில தருணங்களை எப்படி திரைக்கதை போல் அமைக்கிறான் என்று ஆச்சரியபடுவதுண்டு.
எனக்கு நடிகர்களில் இருவர் மிக பிடித்தமானவர்கள். ஒருவர் நடிகர் இயக்குனர் கே.பாக்யராஜ். இன்னொருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
(இருவர் சம்பந்தப்பட்ட எந்த செய்தியானாலும் நான் புத்தகமோ பேப்பரோ வாங்கி படித்து விடுவது வழக்கம் ஒரு சீன் வரும் படங்கள் கூட பார்த்து விடுவதுண்டு) இப்படி நான் விரும்பும் இருவரில் ஒருவரான பாக்யராஜ்
பற்றி இங்கே சொல்கிறேன்
சென்ற வாரம் ஞாயிறு காலை சன் டிவி யில் பாக்யராஜ் பங்கு பெறும் பட்டிமன்ற நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. அதில் அவர் பேசுவதை பார்க்கும் போது மீண்டும் எப்போது பார்க்க போகிறோம் என்ற ஏக்கம் மனதிற்குள் தோன்றியது
( சென்ற வருடம் முதல் முறையாக நான் அவரை சென்று பார்த்து பேசி விட்டு வந்திருந்த அனுபவம் இங்கே இது நம்ம பாக்யராஜ் ) ஏனெனில் எனது இளமை எழுதும் கவிதை நீ.... நூலை அவரிடம் கொடுத்து ஆசி வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் காத்திருந்தேன்.அடுத்த நாள் பழைய பாடல்கள் பார்த்து கொண்டிருந்த போது அதில் வந்த பாக்யராஜ் பாடல் என் ஆர்வத்தை
இன்னும் உந்தி தள்ளியது. புதன் கிழமை எனது முக நூல் நண்பரும்
பாக்யா வார இதழ் நிருபருமான திரு எஸ்.எஸ்.பூங்கதிர் அவர்களிடம் சாட்டிங்கில் உரையாடிய போது இதை பற்றி தெரிவித்தேன் சார்
ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் முடியட்டும் செல்லலாம் என்று சொன்னார்.ஆர்வத்துடன் காத்திருந்தேன்
வெள்ளி கிழமை மதியம் எனக்கு பாக்யா அலுவலகத்திலிருந்து, உடனே தொடர்பு கொள்ளவும் என்று மின்னஞ்சல் வந்திருந்தது. . நான் பதட்டமாய் உடனே தொடர்பு கொண்டேன். அவர்கள் உங்கள் செல் நம்பர் கொடுங்க என்றார்கள் நான் கொடுத்து விட்டு எதற்கு சார் என்று ஆர்வத்துடன்
கேட்டேன். சார் பேசணும்னு சொன்னாங்க என்றார்கள். அவ்வளவு தான் பதட்டமாகி விட்டது எனக்கு. செல் போனை கையில் வைத்திருந்த படியே. உற்சாகமாய் காத்திருந்தேன்.ஒரு மணி நேரம் சென்றிருக்கும் போன் ஒலித்தது. இந்திய திரையுலகின் திரைக்கதை அரசனின் குரல் என் செல் வழியே. சரவணனா என்று. ஆமாம் சார் என்றேன் சந்தோசமாய்.
இப்போது ஒரு சின்ன பிளாஷ் பேக்
அதாவது நான் முதல் முறை அவரை பார்க்க சென்றிருந்த போது நான்
எழுதிய சில சிறுகதைகள், பாக்யா வெள்ளி விழா கொண்டாடுவதை வாழ்த்தி நான் எழுதிய பதிவு மேலும் நான் கல்லூரியில் படிக்கும் போது ஜாதி பற்றிய என் முடிவை கண்ணோட்டத்தை தெரிவித்து நான் பாக்யவிற்கு அனுப்பிய கடிதத்திற்கு வந்திருந்த பாராட்டு கடிதம் பாக்யாவின் பாராட்டு கடிதம்
இவை யாவற்றையும் ஒரு பைலில் போட்டு கொடுத்து உங்களுக்கு நேரமிருக்கும் போது முடிந்தால் படிங்க சார் என்று அன்பு வேண்டுகோள் வைத்து விட்டு வந்திருந்தேன்.
அந்த பைலை அவர் அன்று பார்த்திருக்கிறார் படித்திருக்கிறார் உடனே என்னை தொடர்பு கொண்டு என் செல் நம்பர் வாங்க சொல்லியிருக்கிறார் இதையெல்லாம் அவரே என்னிடம் தெரிவித்து பெற்றோர் என்ற சிறுகதையை பற்றியும் சொன்னார். நீங்களே போன் செய்து என்னிடம் பேசுவதென்றால் எவ்வளவு பெரிய விஷயம். இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றி விட்டீர்கள் சார் என்றேன் சிரித்தார். எனது படிப்பு வேலை பற்றி விசாரித்தார். நான் அடுத்த வேண்டுகோள் வைத்தேன் தங்களை பார்க்க வர வேண்டும் என்று. அவர் வாங்களேன் என்று சொல்லி அடுத்த நாள் மதியம் அப்பாயின்ட்மென்ட் கொடுத்தார். முதலில் என் கையை கிள்ளி பார்த்து கொண்டேன் கனவு கண்டு விட்டோமோ என்று நிஜம் தான் என்று புரிந்தது. சிறகுகள் முளைத்ததாய் ஒரு உணர்வு. இரவும் தூக்கமில்லை ஒரு சாமானியனை ஒரு சாதனையாளர் போன் செய்து பாராட்டுவது சாதாரண செயல் இல்லையே
அடுத்த நாள் அவரை பார்க்க ஆர்வத்துடன் சென்றேன். பெயர் சொன்னவுடன் உள்ளே அழைக்கப்பட்டேன். எனை பார்த்ததும் எழுந்தவர், வாங்க பாரதி சரவணன் என்றே அழைத்தார். (கல்லூரி நாட்களில் நான் எனது பெயரை
பாரதி சரவணன் என்று வைத்து கொண்டேன் அதே பெயரில் தான் பாக்யாவுக்கு கடிதமும் எழுதினேன்.ஆகவே அந்த பெயரிலேயே அழைத்தார்) என்னை அமர சொன்னார். நான் அமர்ந்திருந்தேன் என்றாலும் உள்ளுக்குள் மிதந்து கொண்டிருந்தேன் என்பதை சொல்ல வேண்டுமா என்ன.அவரது புதிய படம் பற்றி கேட்டறிந்தேன்.என் குடும்பம் பற்றி அக்கறையோடு விசாரித்தார். நான் எனது நாவலை அவரிடம் அளித்த போது நான் அவரிடம் சொன்னதை இங்கே தெரிவிக்கிறேன்
தங்களை துரோனாசாரியாராக ஏற்று ஒரு ஏகலைவன் போல் நானிருந்து தங்களின் திரைப்படங்கள் பார்த்து கற்று கொண்டதை வைத்து நான்
எழுதிய (திரைக்கதை) நாவல் இது என்று சொல்லி ஆசி பெற்றேன்
எனது நாவல் புத்தகமொன்றில் ஆட்டோ கிராப் கேட்டேன். நண்பருக்கு வாழ்த்துக்கள் என்று எழுதி கையொப்பமிட்டது ஒரு இன்ப அதிர்ச்சி.
போட்டோ எடுத்து கொண்ட போது என் தோளில் கை போட்டு புத்தகத்தை கைகளில் பிடித்த படி போஸ் கொடுத்தார்.இது இன்னும் ஆச்சரியம்.
அவரது நேரம் நம்மால் வீணாக கூடாது என்று நினைத்து மனது நிறைய உற்சாகத்தை சுமந்த படி விடை பெற்றேன்.இதோ இந்த பதிவை நான் எழுதும் இந்த நிமிடம் வரை அப்போதைய உற்சாகம் நீடித்து கொண்டிருக்கிறது
வினோவுக்கு போன் செய்து சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டு நன்றி தெரிவித்தேன். எதற்கு என்றார் நீங்கள் என்னை இணையத்துக்குள் இழுக்கவில்லை என்றால் இந்த சந்தோஷம் நடந்திருக்காதே என்றேன் சிரித்தவர் இதில் உங்கள் முயற்சியும் இருக்கிறது சரவணன் என்றார்
கிரி மற்றும் அரசனிடமும் பகிர்ந்து கொண்டேன்.
அடுத்து நண்பர் எஸ்.எஸ். பூங்கதிருக்கு போன் செய்து, பார்த்து விட்டு
வந்ததை சொன்ன போது என் குரலிலிருந்த உற்சாகம் அவர் உணர்ந்திருந்தார். தங்களால் தான் இந்த பாக்கியம் கிடைத்தது. அவரை எப்போது பார்க்க போகிறோம் என்று கனவுலகில் இருந்தவன் கனவை நனவாக்கி பாதை போட்டு கொடுத்தது நீங்கள் தானே. பாக்யராஜ் பற்றி எப்போதெல்லாம் நினைக்கிறேனோ, அப்போதெல்லாம் நீங்களும் தொடர்ந்து என்
ஞாபகத்துக்கு வந்து கொண்டே இருப்பீர்கள் என்று சொல்லி நன்றி தெரிவித்தேன்
பாக்யாவில் நம் எழுத்தெல்லாம் வருமா இருபது வருடங்களுக்கு மேல் ஏக்கத்தில் இருந்தவனுக்கு அவரே போன் செய்து பாராட்டு தெரிவித்தது மட்டுமில்லாமல் இதோ இந்த வார பாக்யாவில் எனது சிறுகதையான பெற்றோர் கதையையும் பிரசுரித்திருக்கிறார் (மே 09 -2014) அதற்காக
தான் குறிப்பிட்டேன் இதற்கு தானே ஆசைபட்டாய் சரவணா என்று.
எனக்கு கிடைத்த பெருமையை பற்றி இங்கே சொல்வதை விட, ஒரு வாசகனை ரசிகனை போன் செய்து பாராட்டும் அளவிற்கு எவ்வளவு நல்ல உயர்ந்த மனிதர் அவர் என்பதை அனுபவ ரீதியாய் நான் உணர்ந்ததை
இங்கே சொல்லவே இந்த பதிவு.
உங்களிடம் அந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம்.ஏனெனில்,உங்கள் ஒவ்வொருவரின் ஊக்கம் தானே என்னை தொடர்ந்து எழுத வைத்து இதோ இந்த சந்தோச நிகழ்வுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது
FINAL PUNCH
ஆண்டவன் திரைகதை பற்றி ஏதோ சொன்னாயே என்று தானே கேட்கிறீர்கள் நான் இரு வருடங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் அவர்கள் என்னை போனில் தொடர்பு கொண்டு பேசுவதாக ஒரு கற்பனை பதிவு (ஜூலை 2011) எழுதினேன் ஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன் அதில் அவர் இணையத்தில் உன் பதிவுகள் படித்தேன் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது ஆகவே போன் செய்தேன் என்பதாக எழுதியிருந்தேன் இது அதீத கற்பனை தான் பேராசை தான். இருந்தும் ரஜினி ரசிகர்கள் (எனது நண்பர்களும் கூட) என்னை
பாராட்டி, சீக்கிரமே உங்கள் ஆசை நிறைவேறட்டும் என்று வாழ்த்தினார்கள்.
பாருங்களேன் ஆண்டவன் நான் மதிக்கும் திரு.பாக்யராஜ் மூலம் அந்த கனவை நிறைவேற்றியிருக்கிறான் எனும் போது தான் அவனின்
திரைக்கதை பற்றி நினைத்து வியக்கின்றேன்.
ஆர்.வி.சரவணன்
எங்களுக்குள்ளும் அதிக மகிழ்ச்சி
பதிலளிநீக்குஅடுத்து அடுத்து ஆசைகள் எல்லாம்
நிறைவேறவும் அதையும் இதுபோல்
சிறப்பான பதிவாகத் தரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி சகோதரா விரைவில் சூப்பர் ஸ்ரார் ரஜனிகாந்த் அவர்களையும் நீங்கள் சந்திக்கும் தருணம் மலர வேண்டும் என்றும் தங்களின் எழுத்துப் படைப்பு மென்மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்றும் மனதார வாழ்த்துகின்றேன் .மிக்க நன்றி பகிர்வுக்கு .
பதிலளிநீக்குவாழ்த்துகள் சரவணர் சார்.. பாக்யராஜ் அவரே அழைத்தது அருமை மற்றும் அவரின் எளிய குணம்..
பதிலளிநீக்குசில கனவுகள் பல நனவுகளாக மாறும் நாளும் வரும்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சரவணன் சார். பாக்கியராஜ் சாருடனான சந்திப்பு இன்னும் பல ஏற்றங்களை உருவாக்கும்.
பதிலளிநீக்குகுறும்படத்தில் நடித்தமைக்கும் வாழ்த்துக்கள்
சினிமாவை நோக்கிய உங்கள் பயணத்தில் இந்த சந்திப்பு ஒரு மைல் கல்லாய் அமையட்டும் ...வாழ்த்துகள்!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குரஜினியும் விரைவில் அழைப்பார்
தாங்கள் நடித்த, குறும் படத்தின் புகைப் படங்களைப் பார்த்தேன் நண்பரே
அருமை வாழ்த்துக்கள்
தங்களின் முயற்சி வெல்லட்டும்
வாழ்த்துக்கள் சார்! பாக்கியராஜ் சாருடனானா உங்கள் சந்திப்பை மிகச்சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள்! உங்களின் அடுத்த கனவும் விரைவில் பலிக்கட்டும்! குறும்படம் வெற்றிபெறவும் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் சரவணா! சார் கண்டிப்பாக உங்கள் இயக்குனர் கனவு விரைவில் நனவாக எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! இறைவன் அருள் புரிவாராக!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சரவணன் ..உங்களின் அடுத்த ஆசையும் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமனம் நிறைந்த வாழ்த்துகள் சரவணன். அடுத்த ஆசையும் விரைவில் நிறைவேறட்டும்....
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சரவணன் சார்!
பதிலளிநீக்குதங்களின் வெற்றிப் பயணம் திரு. பாக்யராஜ் அவர்களைச் சந்தித்ததன்மூலம் அடுத்த கட்டத்திற்குச் செல்வது உறுதியாகிறது.
தொடரட்டும் பயணம்...
கனவுகள் நனவாகும் தருணங்கள் ஒவ்வொன்றாய் நடைபெற்று வருகிறது .. இன்னும் மனதில் தேங்கி கிடக்கும் ஆசைகள் நனவாகட்டும் .... வாழ்க்கை ரொம்ப சின்னது சார் சீக்கிரம் எல்லாம் இனிமையாய் வெற்றி அடையும்
பதிலளிநீக்கு