
புது பைக் வேண்டும்
உமா பிறந்த வீட்டுக்கு வருகிறாள் என்றாலே எல்லோருக்கும் உதறல் எடுக்கும் இன்று அவள் வருகிறேன் என்று போன் செய்தவுடன் அப்பா, அம்மா, அக்கா, தங்கை அனைவரும் என்ன புது பிரச்னையுடன் வருகிறாள் என்று தெரியாமல் மனசுக்குள் குமைந்தார்கள் என்ன பிரச்னையுடன் வருகிறாள் என்று தெரியவில்லையே என்று யோசித்து கொண்டிருக்கும் போதே வந்து விட்டாள்
வந்தவுடன் டூ வீலர் வாங்கி தர சொல்லி மாமியார் பிடுங்குவதாக புலம்ப ஆரம்பித்தாள்
அம்மா, "இன்னொரு பொண்ணு கல்யாணத்திற்கு இருக்கு அதுக்கு செலவு பண்ணனும் உன் அக்கா வீட்டுக்காரர்இருக்கார் மூத்த மாப்பிள்ளை.அவருக்கே வாங்கி தராத போது உன் புருசனுக்கு மட்டும் எப்படிம்மா வாங்கி தர முடியும்"
"இதை நான் சொல்லாமே இருப்பேனா சொல்லியாச்சு அதுக்கு எங்க மாமியார் சொல்றாங்க அவங்களுக்கு கேட்க துப்பில்லை அதுக்காக நாங்க கேட்காமே இருக்க முடியுமா னு சொல்றாங்க"
" கல்யாணம் பேசறப்ப இதெல்லாம் பேசவே இல்லையே உமா
பின்ன எப்படி அவங்க கேட்கலாம் " இது அப்பா
" அப்பா நீங்க இங்க உட்கார்ந்து கிட்டு ஆயிரம் பேசலாம் அங்க நான் படற அவஸ்தை எனக்கு தான் தெரியும்"
"இன்னொரு பொண்ணு கல்யாணத்திற்கு நிக்குதம்மா "இது அக்கா
"என்னோட கல்யாண வாழ்க்கையே நின்னு போயிடும் போல இருக்குக்கா"
"மாப்பிள்ளை என்ன சொல்றார்."இது அப்பா
"என் பிரெண்ட் அத்தனை பேருக்கும் வண்டி வாங்கி கொடுத்திருக்காங்க அவங்கவங்க மாமனார் வீட்டில் நான் மட்டும் தான் சைக்கிள் லே போறேன் எனக்கு அசிங்கமா இருக்கு ஒரு பைக் வாங்கி தர கூட உங்க வீட்டுக்கு யோக்கியதை இல்லியா னு கேட்கறார்."
"முடிவா என்ன தான் மா சொல்லியிருக்கே"
"வந்தா வண்டியோட வரேன் இல்லேன்னா என்னை தலைமுளுகிடுங்க னு சொல்லிட்டு வந்திருக்கேன்"
"அவங்க சொல்லலேன்னாலும் நீயே அவங்களுக்கு எடுத்து கொடுப்பே போலிருக்கு " இது தங்கை
"சும்மாருடி அவமானப்பட்டு வந்திருக்கிறது எனக்கு தான் தெரியும் உனக்கென்ன"
வேறு வழி இல்லாமல் உமாவின் அப்பா மாப்பிளையை கடைக்கு வர சொல்லி அவருக்கு பிடித்த பைக்கை பணம் செலுத்தி வாங்கி கொடுத்தார்.
உமாவின் புகுந்த வீட்டில் எல்லோருக்கும் வாயெல்லாம் பல்
"பரவாயில்லை இப்பவாவது வாங்கி கொடுக்குனும்னு மனசு வந்துதே உங்கப்பாவுக்கு "என்றார் மாமியார் பெருமூச்சுடன்
"கூடவே புது வண்டி வந்திருக்கு ரெண்டு பெரும் கோயிலுக்கு போயிட்டு வாங்க" என்று சொன்னார் மாமனார்.
உமாவின் கணவன் சந்தோசமாய் " வா உமா போயிட்டு வரலாம்" என்றான்.
"உமா நான் வரலைங்க நீங்க போயிட்டு வாங்க"
"ஏன் அப்படி சொல்றே"
"எங்க அப்பா கஷ்டப்பட்டு உழைச்ச காசுலே வந்த இந்த பைக்கை நான் அவரை படாதபாடு படுத்தி வாங்கிட்டு வந்திருக்கேன் நீங்க தானே ஆசைபட்டீங்க நீங்களே போயிட்டு வாங்க நான் ஆசைப்படலே
"உங்களுக்கு மாமனார் வாங்கி
கொடுத்த வண்டிலே போறது தான் கௌரவம்"
ஆனா எனக்கு நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுலே வாங்கின இந்த சைக்கிள் லே போறது தான் கௌரவம் "
என்று சொல்லிவிட்டு தலை நிமிர்ந்து வீட்டினுள் செல்லும் அவளை பார்த்து அவர்கள் தலை குனிந்தனர்.
ஆர்.வி.சரவணன்