வெள்ளி, செப்டம்பர் 14, 2018

பிள்ளையார்





பிள்ளையார் 

மாறாத புன்னகையுடன் வீற்றிருந்தார் பிள்ளையார். கடை தெரு முழுவதும் விதவிதமான வடிவங்களில், உயரங்களில்.வண்ணங்களில்.

இதில் நம் வீட்டுக்கு வர போகிறவர் யார் ? என்ற கேள்வியுடன் நானும் என் மகனும் ஒரு கடையின் அருகில் செல்கிறோம்.முதல் பார்வையில் தென்பட்ட களி மண் பிள்ளையார் மனசுக்கு நெருக்கமாகிறார். வேறொன்றை பார்க்கலாமே என்ற மனித மன ஆவல் என் முன்னே வெள்ளம் போல் கரை புரண்டோடுகிறது. அதன் பின்னே நானும் செல்ல ஆயத்தமாகிறேன். மற்ற பிள்ளையர்களை பார்த்த பின்னே, முதலில் பார்த்த பிள்ளையாரே  நல்லாருக்கே என்கிறது மனம். மகனும் அதையே வழி மொழிகிறான். சரி என்று பின் வாங்கி, கொஞ்சம் முன் சென்று முதலில் பார்த்த முழு முதற் கடவுளை கடைக்காரர் சொல்லிய விலைக்கு வாங்கி கொள்கிறேன்.



பிள்ளையார் என் கைகளில் வந்தமர்ந்து கொள்கிறார். அவர் புன்னகையில் ஏதோ அர்த்தமிருப்பதாய் ஒரு பிரமை. மனைப்பலகையில் அவரை அமர வைத்து மகனிடம் கொடுத்த படி, பூ பழம், தோரணம்.... என்று வாங்கி கொண்டிருக்கிறேன். “சீக்கிரம் வா. ஒரு பிள்ளையார் வாங்கி வர சொன்னா எவ்வளவு நேரமாச்சு பாருனு வீட்ல உன் அம்மாவும், மனைவியும் திட்டிட்டிருக்காங்க.  அது எனக்கு இங்கே வரை கேட்குது” என்கிறார் பிள்ளையார். “இதோ” என்ற படி அவர் பேசுவதை ஆச்சரியமாக பார்த்த படியே வந்து டூ வீலரை ஸ்டார்ட் செய்கிறேன். மகனும் அதே ஆச்சரியத்துடன் எனக்கு பின்னே பிள்ளையாரை தனக்கு முன்னே அமர வைத்து கொள்கிறான்.  கூடவே “அப்பா மேடு பள்ளம் இருக்கும்.மெதுவா போங்க” என்கிறான். தலையாட்டுகிறேன். “மேட்டுக்கு போனாலும் சரி. பள்ளத்துக்கு போனாலும் சரி கஷ்டம் தான். சீரான சாலையில் பயணிக்கிறது நல்லாருக்கும். இது வாழ்க்கைக்கும் கூட பொருந்தும்” என்கிறார் பிள்ளையார். இருவருமே அவர் சொல்வதை லைக் செய்த படி பயணிக்கின்றோம்.  



ஏதோ ஒரு திருப்பத்தில் உயரம் தாண்டுகிறது வண்டி. “அப்பா பார்த்துப்பா” பையன் பல்லை கடித்த படி கத்துகிறான். கொஞ்சம் பயத்துடன் வண்டியை நிறுத்தி திரும்பி பிள்ளையாரை பார்க்கிறேன். பையனும் அவரை பார்க்கிறான். வேடிக்கை பார்த்த படி இருந்த பிள்ளையார் “ரெண்டு பேரும் என்னை பார்த்துகிட்டிருந்தா வண்டியை யாரு ஓட்டுறது” என்கிறார். மீண்டும் பயணிக்கிறது வண்டி.

இப்போது மழை தூற ஆரம்பிக்கிறது. ஓரமாக வண்டியை நிறுத்தி, பிள்ளையார் மேல் மழை படாத வண்ணம் காத்து கொள்கிறோம். பிள்ளையாருக்கு வாங்கியிருந்த வண்ண காகித குடையையும் பத்திரப்படுத்துகிறோம். சாலையின் பாதி வரை இடத்தை ஆக்ரமித்து கடை போட்டிருந்த வியாபாரிகள் அவசர அவரசரமாக தார் பாய் கொண்டு தங்கள் பொருள்களை காத்து கொள்ள முற்படுகிறார்கள். அதை கவனித்த படி “மழை பெய்தாலும் பிரச்னை. பெய்யாட்டியும் பிரச்னை இல்லியா” என்கிறார் பிள்ளையார். மீண்டும் ஒரு தலையாட்டல் எங்களிடமிருந்து.
மழை நின்று விடுகிறது. அடுத்த மழை வருவதற்குள் வீடு செல்ல வேண்டும் என்ற உத்வேகத்துடன் வீடு வந்து சேர்கிறோம். அம்மா மனைவி, மகள் பிள்ளையாரை வரவேற்கிறார்கள். "அம்மா இந்த பிள்ளையார் பேசறாரும்மா"  என்கிறான் மகன். அம்மாவும் மனைவியும் ஆச்சரியமாய் என்னை பார்க்க நான் தலையசைக்கிறேன்.மகள் சொல்கிறாள். "எங்க பேச சொல்லு  பிள்ளையாரை? என்கிறாள். "நேற்று உன் பள்ளியில் கொடுத்த ஹோம் ஒர்க்கை என் விழாவை காரணம் காட்டி எழுதாமல் சென்று விடாதே. கண்டிப்பாக தண்டனை கொடுக்க போகிறார்கள். ஆகவே எழுதி விடு" என்கிறார் பிள்ளையார். “வீட்டில் எல்லாரும் ஆச்சரியமாகிறார்கள். அவரை பூஜை அறையில் வைத்து அலங்கரிக்கிறோம்.  மழை தூறலால் அவருக்கு வாங்கி காகித குடை நனைந்திருக்கவே,  காற்றில் அதை உலர வைக்க ஆயத்தமாகிறேன். 

"ஆமா குடை எனக்கு வாங்கினியா. மழைக்கு வாங்கினியா” என்கிறார் பிள்ளையார். 
 “உங்களுக்கு தான்”. “அதான் மழைக்கு உபயோகப்படல "  கலகலவென சிரிக்கிறார் பிள்ளையார். பூஜையை முன்னிட்டு ஆளுக்கொரு வேலையாய்  இருந்த நாங்கள் அனைவரும் அவரை திரும்பி பார்க்கிறோம். சிரித்தது இவர் தானா என்பது போல், அதே மாறாத புன்னகையுடன் வீற்றிருக்கிறார் பிள்ளையார்.

விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.

ஆர்.வி.சரவணன்.

4 கருத்துகள்:

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்