முகநூல் குறிப்புகள் -4
பழைய படங்கள் பார்ப்பதென்றால் அவ்வளவு பிரியம் எனக்கு. நேற்றிரவு சேனல்களை திருப்பி கொண்டே வருகையில் தூர்தர்ஷனில் கே. பாலச்சந்தரின் அழகன் படம், அப்போது தான் சென்சார் போர்டு சர்ட்டிபிகேட்டுடன் ஆரம்பித்திருந்தது.
நிறைய முறை இந்த படம் பார்த்திருந்தாலும் பிடித்த படமாதலால், தூக்கம் வரும் வரை பார்க்கலாம் என்று பார்க்க ஆரம்பித்தோம். சங்கீத ஸ்வரங்கள் பாடல் காட்சி போல், படம் முடியும் வரை தூக்கம் வரவில்லை.படத்தில் எனக்கு பிடித்த காட்சிகள் மம்முட்டி நடத்தும் ஹோட்டலின் மெனு லிஸ்ட் போல் நிறைய இருக்கிறது. இருந்தும் சாம்பிளுக்கு ஒன்று.
கோபத்தில் பானுப்பிரியா டான்ஸ் ஆடி கொண்டே மம்முட்டியிடம் பேசுவார். அவரது குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மம்முட்டி கோபத்தில் கூட எவ்வளவு அழகு பாரேன் என்பது போல் அனைத்தையும் பொறுமையாக சிரித்த படி கேட்டு, "உன்னை மாதிரி டான்ஸ் ஆடிக்கிட்டே எல்லாம் எனக்கு சொல்ல தெரியாது" என்று ஆரம்பித்து தன் பங்குக்கு பொரிந்து தள்ள ஆரம்பிப்பார். இருவர் கோபத்திலும் இருக்கும் நியாயம் அந்த காட்சியில் அழகாக வெளிப்பட்டிருக்கும்.
இந்தப்படம் பற்றி ஒரு பதிவெழுதும் ஆசையிருக்கிறது. ஒவ்வொரு முறை அழகன் படம் பார்க்கும் போதும் இந்த ஆசை வரும்.
------
ஒரு நண்பருடைய கம்பெனி பாஸ் திருமண ரிசப்ஷனுக்கு அலுவலக நண்பர்களுடன் சென்றிருந்தேன். அங்கே நண்பர் தன்னோடு பணி புரிபவர்களை அறிமுகப்படுத்துகையில் ஒரு பெண், " நீங்க தான் சரவணனா ?" என்றார். "எஸ்" என்றேன் தயக்கமாக. "உங்க கதை படிச்சேன் நல்லாருந்துச்சு"என்றார். நன்றி சொல்ல முற்படும் அந்த சில நொடிகளுக்குள்ளாக, ரெண்டு கதையில் எந்த கதையை இவர் படித்தார்? அது எப்படி அவருக்கு அறிமுகம் ? என்று நான் யோசிக்க ஆரம்பித்து விட்டேன். இதை கவனித்த நண்பர் பிரபாத் அருகில் வந்து பதில் கொடுத்தார். "உங்க திருமண ஒத்திகை கதைய கொடுத்து எப்படி இருக்குனு படிச்சு சொல்ல சொல்லிருந்தேன். படிச்சவங்க, உங்களை நேர்ல பார்த்தவுடன் சொல்லிட்டாங்க"
மகிழ்ச்சி.
------
முறை மாமன் படத்துல ஜெயராமும் கவுண்டமணியும் வீட்டில் கோபித்துக் கொண்டு தனியாக சமைக்க ஆரம்பிப்பார்கள். சமைத்து முடித்ததை அவர்கள் வந்து சாப்பிடுவதற்குள் டேஸ்ட் பார்க்கும் மனோரமா, சாப்பாடு நன்றாக இருப்பதை பார்த்து விட்டு இவனுங்களை இப்படியே விட்டா தலைகால் புரியாம ஆடுவாங்க என்று சாப்பாட்டில் உப்பையும் மிளகாய் பொடியையையும் அதிகமாக போட்டு விடுவார். நிற்க.
அலுவலகத்தில் நாம என்ன தான் மாய்ஞ்சு மாய்ஞ்சு வேலை பார்த்து டயத்துக்கு முடிச்சு கொடுக்கும் போது முதலாளியோ, மேளாளரோ எங்கே சரியா இருக்குனு சொன்னா இவங்க ஏறிப்பாங்களோனு புதிதாக ஒரு தப்பை கண்டு பிடிச்சு திட்ட ஆரம்பிப்பாங்க பாருங்க. ஒழுங்கா பார்த்த வேலைல எப்படிடா தப்பு வந்திருக்கும்னு கவுண்டமணி ஜெயராம் போல முழிச்சுகிட்டு நிக்கிறது தான் அப்ப நம்ம நிலைமையா இருக்கும்.
------
கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு பேருந்தில் வந்து கொண்டிருக்கையில் சாலையோர உணவகம் ஒன்றில் இரவு ஒரு மணி வாக்கில் பேருந்து நிறுத்தப்பட்டது.
"வண்டி பத்து நிமிஷம் நிக்கும். டீ காபி சாப்பிடறவங்க சாப்பிடலாம்" உணவக ஊழியரின் அழைப்பிற்கு மதிப்பளித்து, ஏதேனும் சாப்பிட வேண்டியோ, இயற்கை உபாதையோ, இல்லை உட்கார்ந்து கொண்டே வருவதால் ரிலாக்ஸ் வேண்டியோ பயணிகள் ஒவ்வொருவராக இறங்க ஆரம்பித்தனர். மூன்றாவது காரணத்திற்காக நானும் இறங்கினேன்.காபி,டீ,பிஸ்கட் கூல்ட்ரிங்ஸ் ஸ்டால்களுக்குடையே போட்டி போட்டபடி இருந்த இளநீர் குவியல் என் கவனத்தை ஈர்த்தது. சாப்பிடும் ஆசையிருந்தும் (விலை காரணமாக) வாங்க ஆசையில்லை.இருந்தும் ஒருவர் கூல்ட்ரிங்ஸ் கடையில் இருப்பவரை அணுகி, "இளநீர் வேணுங்க. அங்க கடையில ஆள் இல்லியே " என்றார். அதற்கு கூல்ட்ரிங்ஸ் கடையில் இருந்தவர் சொன்னார்.
"நடு ராத்திரில யாரு சார் உட்கார்ந்து வெட்டிகிட்டிருக்கிறது?. இதோ இவ்வளவு ஐட்டம் இருக்குதே. இத வாங்கிக்குங்க" இளநீர் கேட்டவர் நடுவில கொஞ்சம் பக்கத்தை காணோம் விஜய் சேதுபதி போல் நீ சொன்னா நான் கேட்கணுமா என்பது போல் கடையிலிருந்து விலகி சென்று விட்டார்.
------
ஒண்ணாம் தேதி வந்தவுடன் கவுண்டமணியாகி, "அது என்ன விலை, இது என்ன விலை, நான் இப்ப எதையாவது வாங்கியாகணுமே" என்று பரபரக்கும் மனசை, இருபதாம் தேதி "ஜிம்பலக்கடி பம்பா. இப்ப வாங்குடா பார்ப்போம்" என்று கவுண்டமணி வாய்சிலேயே, திருப்பியடித்து அடக்கி வைக்குமாம் வாழ்க்கை.
------
நம் முயற்சிகளில் ஆயிரம் கஷ்டங்களை கடந்திருப்போம். உலகத்திற்கு அது ஒரு பொருட்டே அல்ல.முயற்சிகள் வெற்றியை தொடும் அந்த தருணத்திலிருந்து தான் உலகம் நம்மை ஆச்சரியமாய் கவனிக்க தொடங்குகிறது. அந்த ஆயிரம் கஷ்டங்களும் முக்கியத்துவம் பெறுவது கூட அந்த தருணத்திலிருந்து தான்.
ஆர்.வி.சரவணன்
சுவையான தொகுப்பு.
பதிலளிநீக்குஅதே அழகன் படத்தில் இன்னொரு காட்சியில் கோபப்பட்ட பானுப்ரியா உண்மை உணர்ந்து குளிர்ந்த மறுகணமே "மழையும் நீயே... வெயிலும் நீயே.." என்கிற பாடல் தொடங்கும். பாடலும் அருமை. இடம்பெறும் இடமும் சாமர்த்தியமும் அருமை.
தொகுப்பினை ரசித்தேன். அழகனை பல முறை பார்த்துள்ளேன், அந்தப் பாடலுக்காக மட்டுமே.
பதிலளிநீக்குநல்லதொரு தொகுப்பு. படித்து ரசித்தேன்.
பதிலளிநீக்கு