வெள்ளி, நவம்பர் 25, 2016

வா, காதல் செய்வோம்-3


வா, காதல் செய்வோம்-3


ந்தினியின் முகத்திலிருந்த கோபமும் வார்த்தைகளில் தெரிந்த கடுமையும் அவளுக்கு முன்னே அமர்ந்திருந்த அவர்களை பாதிக்கவேயில்லை. நந்தினியின் அலுவலக அறை  அது. ஒரு பிளாஸ்டிக் கவரொன்று பேன் காற்றால் அலைக்கழிக்கப்பட்டு அறையெங்கும் சுற்றி கொண்டிருந்தது. அதையே கவனித்து கொண்டிருந்த நந்தினியை பார்த்து, கோட்சூட் போட்டு பணக்கார தோரணையிலிருந்த அந்த மனிதர் சொன்னார்.

"இங்க பாரும்மா.  நடந்த சம்பவத்தை பார்த்தவங்க எல்லாரையும் சரி கட்டியாச்சு. நீ மட்டும் தான் பாக்கி. உனக்கு பணம்  எதுனா வேணும்னா சொல்லு தரேன்.  பிரச்னை பண்ணாதே "

"சார். பணத்துக்காகலாம் பிரச்னை பண்ற ஆள் இல்ல நான். ஒரு அப்பாவி பொண்ணு படிக்க வேண்டிய வயசுல நட்ட நடுரோட்ல கத்தி குத்து வாங்கி படுக்கைல கிடக்கா. அதுக்கு காரணம் உங்க பையனோட திமிர். கேட்டா காதல்னு சப்பைக்கட்டு வேற. அதான் பிரச்னை பண்ணிட்டிருக்கேன்" 

"பிரச்னை பண்றியே. இந்த பொண்ணுக்கு வேண்டிய மருத்துவ செலவுலாம்  நீயே பண்றியா" பக்கத்தில் அமரந்திருந்த  அந்த வெள்ளை வேட்டி சட்டை மனிதர் சொன்னார். அவர் வார்த்தைகளில் தெரிந்த நக்கல் அவளை துணுக்குற வைத்தது. நந்தினி அந்த நபரை ஏறிட்டு பார்த்தாள்.

"முடியாதுல்ல. பணத்துக்கு கஷ்டப்படற குடும்பம் தானே உங்க குடும்பம். அப்புறம் ஏம்மா இவ்வளவு ஜம்பம்"

நந்தினியை தொடர்ந்து காயப்படுத்தும் விதமாகவே அவர் சொல்லி கொண்டிருக்க, அவள் நிதானமாக சொன்னாள்.

"பணக்காரங்களுக்கு  பணக்காரன் சப்போர்ட் பண்றப்ப, ஏழைக்கு ஏழை தானே சார் உதவியா இருக்க முடியும்"

"நீ அப்படியே கோர்ட்ல வந்து சாட்சி சொன்னாலும் அதை எங்களால உடைச்சிட முடியும். தெரியுமில்ல"

அந்த கோட் சூட் மனிதரின் வார்த்தைகள் தன்னை எதுவும் செய்து விடவில்லை என்பதை காட்டி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள் நந்தினி.

"நீங்க பண்றதை பண்ணுங்க சார். அதுக்காக கொலை பண்ண வந்தது உங்க பையன் இல்லேனு பொய்யெல்லாம் நான் சொல்ல முடியாது" 

"இங்க பாரும்மா . பகையை தேடிக்காதே. பின்னாடி எதுனா ஆச்சுன்னா போலீஸ் எங்களால ஒண்ணும் பண்ண முடியாது"  இன்ஸ்பெக்டர் தன் பங்குக்கு வாய் திறந்தார்.

"மிரட்டறீங்களா சார்"

"இல்ல. யதார்த்தத்தை சொன்னேன்"

"அந்த பையனை சட்டத்துல சிக்க வைக்க கூடாதுனு நீங்கலாம் உறுதியா இருக்கிறப்ப நான் என  கொள்கைல  உறுதியா இருக்க கூடாதா சார்"

"நல்லா இரு. யாரு வேணாம்னா. இதனால  என் பையன் தலை மறைவா இருக்கான்"
அந்த கோட்  பிபி எகிறியவராய் கத்த ஆரம்பித்தார்.

இந்த சத்தம் கேட்டு ஒருவர்  அந்த அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார். நந்தினி சாரி சார் என்றவுடன் அவர் தலையாட்டிய படி வெளியே சென்றார். பிளாஸ்டிக் கவர் இன்னும் அங்கேயே சுற்றி கொண்டே இருந்தது.


"ஒரு பொண்ணை சாகடிக்க பார்த்தவன்  வெளிலயா சுத்த முடியும்" நந்தினி சிரித்தாள்

"அவ பொழைச்சிடுவா. அப்படி ஒன்னும் அதிகமா காயமில்ல"

"மீடியா அவங்க ரெண்டு பேர் போட்டோவையும் சேர்த்து போட்டு வெளிச்சப்படுத்தினதாலே அவ வாழ்க்கை கஷ்டமாகிடுச்சே"

"அவங்க பாமிலியே கவலைப்படலே. உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை அந்த கோட் சூட் மனிதர் 
அங்கலாய்க்க ஆரம்பித்தார்.

"எஸ். அதுல ஒரு சுயநலம் இருக்கு. நாளைக்கு என்னோட தங்கச்சிக்கும் இது மாதிரி பிரச்னை வந்துட கூடாதுல்ல"

"முடிவா என்ன சொல்றம்மா " அந்த வெள்ளை வேட்டி மனிதர் எழுந்து கொண்டார்.

"அவர் பையனை சட்டத்தின் முன்னாடி நிறுத்துங்க. தண்டனை வாங்கி கொடுங்க" நந்தினியும் மரியாதைக்கு எழுந்து நின்ற படி சொன்னாள்.

"திமிரை பார்த்தியா. நம்ம ஏரியா போண்ணாச்சேனு பார்த்தா ரொம்ப பேசறே நீ"

"பாதிக்கப்பட்ட பொண்ணு கூட நம்ம ஏரியா தான் சார். நியாயப்படி பார்த்தா,  நீங்க தான் அந்த பொண்ணு சார்பா பேசணும்"

அந்த நேரம் அந்த பிளாஸ்டிக் கவர் அந்த வெள்ளை வேட்டி மனிதரின் காலடியில் வந்து நிற்க, கீழே குனிந்து அதை  எடுத்தவர் கசக்கி குப்பை தொட்டியில் விட்டெறிந்து விட்டு,
"நான் உங்க அண்ணன் கிட்டே பேசிக்கிறேன்" ஆவேசமாய் சொன்னார்.

------


"ம்ம ஏரியால அவர் பெரிய ஆளு.  அவரு கிட்டயே போய் சரிக்கு சமமா பேசியிருக்கியே. நீ பொண்ணா இல்லே ரவுடியா" அண்ணன் ரகு வீட்டில் நுழைந்ததும் செருப்பை கூட கழட்டாமல் ஆவேசமாய் கத்தினான்.
நந்தினி எதிர்பார்த்த ஒன்று தான் இது  என்பதால் கொஞ்சம் நிதானமாகவே பதில் சொன்னாள்.

" பெண்விடுதலை பத்தி நான் காலேஜ் மேடைல பேசறப்ப வலிக்கிற அளவுக்கு 
கை தட்டி பாராட்டின அண்ணனா இப்படி பேசறே"

"மேடைக்குனா கை தட்டலாம். வாழ்க்கைனு  வந்துட்டா அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கணும். இல்லேன்னா உலகம் நம்மளை தட்டி விட்டுட்டு போயிடும்"  சேரில் அமர்ந்து ஷூவை கழற்றி கொண்டே சொன்னான்.

"உனக்கு கல்யாணத்துக்கு மாப்பிளை தேடிட்டிருக்கோம். இந்த நேரத்துல இதெல்லாம் எதுக்கும்மா " அம்மா சலிப்பாய்  சொன்னாள்.

"வர்ற மாப்பிள்ளை எல்லாம் நாம போடப் போற  நகை எவ்வளவுனு கேட்ட பின்னாடி ஓட்டப்பந்தயத்துல ஓடற மாதிரி ஓடறான். இதுல பொண்ணு இப்படி தினம் ஒரு சண்டையை வீட்டுக்கு கொண்டு வரவனு தெரிஞ்சா லாங் ஜம்ப் எடுத்துல்ல ஓடுவான்." அண்ணி விமலா சமையலறையிலிருந்த படியே கிண்டலடித்தாள்.  அவள் கோபத்துக்கு ஆதரவாய்  ஒரு பாத்திரம் நங் என்று முழங்கியது.

நந்தினி அண்ணியை திரும்பி  தீர்க்கமாக பார்த்தாள்.

"எதுனா சொன்னா முறைக்க ஆரம்பிச்சிடு. உனக்கு அப்புறம் தம்பி தங்கை இருக்காங்க. அவங்களையும் நாங்க கரையேத்தணும்.ஞாபகத்துல வச்சிக்க"

தம்பி தங்கைகள் இருவரும் படிப்பதை நிறுத்தி விட்டு இவர்களையே பார்த்தார்கள்.

நந்தினியின் அம்மாவுக்கு மருமகளின் பேச்சு உள்ளுக்குள் எரிச்சல் மூட்டினாலும் வெளியில் அமைதி காக்க வேண்டியதாய் இருந்தது. இல்லா விட்டால் பெரிய சண்டையாக அது மாறி விடும் . உள்ளே கட்டிலில் இருமல் சத்தம் தொடர்ந்து வரவே,
"அப்பாவுக்கு மாத்திரை வாங்கணும்பா  சீட்டை உன் பாக்கெட்ல வச்சிருக்கேன்" என்ற படி உள்ளே சென்றாள்.

"சீட்டை மட்டும் வச்சா போதுமா. அதை வாங்க காசு வேண்டாமா "அண்ணி 


அம்மா திரும்பி அண்ணியை சாதாரணமாக தான் பார்த்தாள்.

"ஆளாளுக்கு முறைக்கறீங்களே தவிர அவரோட பண கஷ்டத்தை புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே" விமலா வெடித்தாள்.

"ஏய் சும்மாருடி. நீ வேற. அம்மா நான் வாங்கிட்டு வரேன்மா " என்றவன் நந்தினி பக்கம் திரும்பி "இங்க பார். நான் அவங்க கிட்டே தங்கச்சியை எப்படியும் சம்மதிக்க வச்சிடறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். அதனாலே அந்த விசயத்துல இனிமே நீ தலையிடாதே"

"எப்படிண்ணா. அந்த பொண்ணு நம்ம தெரு பொண்ணு . நம்ம வீட்டுக்கே எத்தனையோ முறை வந்திருக்கு அதுக்கு ஒரு பிரச்னைனு வரப்ப நாம ஹெல்ப் பண்ணலேன்னா எப்படி?"

"அது அப்படி தான். பிரச்னை நமக்கு வராம போயிடிச்சேன்னு முதல்ல சந்தோசப்பட்டுக்குவோம் " என்ற படி பாத்ரூம் செல்ல துண்டை எடுத்தான்.

உள்ளிருந்து இருமல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கவே, நந்தினி அப்பாவை பார்க்க அறைக்குள் சென்றாள். படுக்கையில் படுத்திருந்த  அவளது அப்பா மகளை நிமிர்ந்து  பார்த்தார்.

"உன்னை நான் ஆம்பளையா பெத்திருக்கணும்மா" என்றார் மெல்லிய குரலில் 

"ஏம்பா ஆம்பளையா பிறந்தா தான் துணிச்சல் இருக்குமா. பெண்ணுக்கு இருக்காதா "

"வேண்டாம்மா பிடிவாதம் பிடிக்காதே" அம்மா அவள் கழுத்தில் இருந்த செயினை சரி செய்த படி சொல்லவும்,

"தைரியசாலியா என்னை வளர்த்துட்டு நீங்க எல்லாம் கோழைகளா ஆகிட்டீங்க. இதுக்காக எல்லாம் என் கேரக்டரை மாத்திக்க முடியாதும்மா  பார்க்கலாம். இந்த வாழ்க்கை நம்மள எது வரைக்கும் அழைச்சிட்டு போக போகுது ? என்ன பண்ண போகுதுனு " நந்தினி பெருமூச்செறிந்தாள். 


------

"நாம எது வரைக்கும் போகணும்கிறதை நாம தான்யா  முடிவு பண்ணணும். வாழ்க்கை போற போக்குல போறதுக்கு நாம என்ன ஆட்டு மந்தை கூட்டமா" மனோ சொல்ல வெங்கட் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தான்.

"சோ. எந்த வேலையா இருந்தாலும் ஒரு டார்கெட் பிக்ஸ் பண்ணிக்குங்க. அதை  நோக்கி போக ஆரம்பிங்க." என்று அவன் பாடம் எடுத்து கொண்டிருக்கும் போதே டேபிளில் இருந்த லேண்ட் லைன் போன் ஒலித்தது. ஏதோ பேச முயன்ற வெங்கட்டை நோக்கி கையமர்த்தி விட்டு போனை காதுக்கு கொடுத்தான்.

அமேரிக்காவிலிருந்து பாட்டி  பேசினார்.

"என்னடா மனோ. எப்டி இருக்கே"

"நல்லாருக்கேன் பத்மினி பாட்டி  நீங்க" 

"ம்ம் இருக்கேன். ஆமா நேத்து நைட் நான் உனக்கு போன் பண்ணேன். போன் போகவே இல்லியே. 
போனை ஆப் பண்ணி வைக்க கூடாதுனு சொல்லிருக்கேன்ல"

"என் செல் போன் கீழே விழுந்துடுச்சு பாட்டி . போன் சரியில்ல" 

"ஏன்டா அப்ப புதுசு வாங்க வேண்டியது தானே"

"வாங்கறேன்" கையிலிருந்த அந்த செல் போனில் வாட்ஸ் அப் பார்த்து கொண்டே 
 வெங்கட்டை பார்த்து கண்ணடித்து சிரித்த படி சொன்னான்.

"என்னமோ புது போன் வாங்க காசில்லாத மாதிரி பேசறே"

"அத விடுங்க  உங்களை பார்த்து ஒரு வருஷம் ஆக போகுது. ஒரு பேரன் நம்மளை நம்பி இருக்கானேனு கொஞ்சம் கூட  அக்கறையே இல்ல பாட்டி  உங்களுக்கு"

"வரேண்டா. நாளைக்கு இந்த நேரம் உன் முன்னாடி இருப்பேன்.போதுமா "

மனோ " காமெடி பண்ணாதீங்க பாட்டி" என்றான் அதிர்ச்சியாய்.

"நான் சீரியஸா தான் பேசறேன்.  உன்னை பத்தி வர நியூஸ் எதுவுமே நல்லதா இல்ல. அதான் உடனே அக்கறையா கிளம்பி வந்துகிட்டிருக்கேன்."

"யாராவது எதுனா சொன்னா அப்படியே நம்புவீங்களா பாட்டி " அவன் குரலில் இருந்த கடுப்பை பாட்டி கண்டு கொள்ளாமலே, 

"  நம்பாம தான் நேர்லய வந்து பார்த்துடலாம்னு  வந்துட்டிருக்கேன். நாளைக்கு பார்க்கலாம்"

போனை துண்டித்தாள் அந்த பத்மினி பாட்டி.

மனோ கோபத்தில் தன் கையில் வைத்திருந்த அந்த உயர் ரக புது செல்போனை உண்மையாகவே தரையில் போட்டு உடைத்தான்.

"சார் புது போன் சார்" வெங்கட் பதறினான். 

"தெரியும்யா. அந்த கிழவி வந்து நிஜமாவே செல் போன் கீழே விழுந்துச்சான்னு  செக் பண்ணி பார்க்கும்" என்றான் மனோ டென்ஷனாய் 

தொடரும்

ஆர்.வி.சரவணன் 

ஓவியம் நண்பர் தேவராஜ்


4 கருத்துகள்:

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்