திங்கள், ஜூன் 22, 2015

திருச்செந்தூரின் கடலோரத்தில்....






இது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தால் மட்டுமே இது சாத்தியம் என்பது  நீங்களும் நானும் அறிந்த 
ஒன்று தானே. நன்றி நண்பர்களே 



திருச்செந்தூரின் கடலோரத்தில்....

ஆன்மீக தலம்  சென்று வந்த இந்த எளியவனின் அனுபவ பதிவு இது. எப்போதுமே ஒரு செயலுக்கு நாம் திட்டமிடும் போது எதிர் வரும் குறுக்கீடுகள் ஏராளம். படபடப்பு அதிகமாகி ஏன் தான் இந்த செயலுக்கு திட்டமிட்டோம் என்று கூட தோன்றி விடும் இல்லையா. எனக்கு கூட அப்படி தான்.இருந்தாலும்  எந்த குறுக்கீடுகள் வந்தாலும் அதையெல்லாம் கடந்து நாம் நினைத்ததை முடிப்பதில் தானே த்ரில் இருக்கிறது.அப்படியான ஒரு அனுபவம் தான்  நான் மேற் கொண்ட இந்த ஆன்மீக பயணம் .

நான் திருச்செந்தூர் சென்று மொட்டை போடுவதாக ஒரு வேண்டுதல் இருந்தது. (நான்கு வருடங்களுக்கு முன் வேண்டியது இது) இதோ இப்ப போகலாம் அப்புறம் போகலாம் என்று கொஞ்சம் சோம்பலாலும் கொஞ்சம் வேலை பளுவாலும் போய்  கொண்டே இருந்தது . அது  உறுத்தலாகவே இருக்கவே  அதை இப்போது நிறைவேற்றி விட வேண்டும்  என்ற நோக்கில் சென்று வர திடீரென்று முடிவு செய்தேன்.
 பாலக்காட்டில் நடைபெற்ற துளசிதரன் அவர்களின் குறும்பட படபிடிப்புக்கு  வேறு 
செல்ல வேண்டி இருந்ததால் திருச்செந்தூர் சென்று விட்டு  அப்படியே பாலக்காடு செல்லலாம்  என்று திட்டமிட்டேன் . நான் திட்டமிட்டது மே 1 விடுமுறையன்று.  (அன்று   வெள்ளிகிழமை. 
மறு நாள் சனி ஞாயிறு விடுமுறை தினங்கள் ) டிக்கெட் புக் செய்யலாம் என்று முயன்றால் பேருந்து ரயில் எல்லாம் வெயிட்டிங் லிஸ்ட்டில் காட்டியது.  கிடைக்காது என்று தெரிந்தும் தட்கல் டிக்கெட்க்கு முயற்சித்தேன். என் சார்பாக என் நண்பர்கள் இருவர் கூட முயற்சித்தார்கள். முடியவில்லை. சரி என்று தனியார் பேருந்தின் பக்கம் வந்தேன். (ஆன் லைன்ல தான் ). பொதுவாக தனியார் பேருந்தில் நான் செல்வதில்லை காரணம் அதிக விலை என் பட்ஜெடுக்கு  கட்டுபடியாகாது என்பதால்.  இருந்தும் கோவிலுக்கு போயே  ஆக  வேண்டும் என்பதால்  பதிவு செய்ய முயற்சித்தேன். கடைசி சீட் தான் இருந்தது. சரி என்று டிக்கெட் எல்லாம் போட்டு விட்டேன். இருந்தும் கடைசி நிமிடத்தில் நெட் ஸ்பீட்  பிரச்னையால் டிக்கெட் புக் பண்ண முடியவில்லை.மறுபடி முயற்சிக்கும் போது அந்த சீட்டும் புல் ஆகி விட்டது. 

தொடர்ந்து மூன்று நாட்கள் லீவ் என்பதால் தான் இந்த நிலை.  போயும் போயும் கோவிலுக்கு போக எந்த நாள் பார்த்திருக்கே  பாரு என்று தானே சொல்கிறீர்கள் என் குடும்பத்தில் கூட அதையே தான் சொன்னார்கள். அப்புறமா போ இப்ப பாலக்காடு போற வேலையை மட்டும் பார் என்றார்கள். என்னால் பின் வாங்க முடியவில்லை.என்ன செய்யலாம் என்று டென்சனில் அலை பாய்ந்த போது  எதிரில் இருந்த படத்தில் முருகன் புன்னகையுடன் என்னை பார்த்தவாறே இருந்தார்.முருகா ஏன்ப்பா  இப்படி சோதிக்கிறே.கொஞ்சம் கருணை காட்ட கூடாதா என்று புலம்பும் நிலைக்கு வந்து விட்டேன். 

இருந்தும் முயற்சியை விடாமல்  வெள்ளி காலை எப்படியேனும் தரிசனம் செய்து விட வேண்டும் என்ற முடிவுடன், வியாழன் மாலை 3.45 மணி பல்லவன் ரயிலில் அன் ரிசர்வ் கம்பார்ட்மெண்டில் செல்லலாம் என்று  அலுவலகத்தில் இருந்து கிளம்ப எத்தனிக்கையில் 
(3.15 மணி ) தான் என் டேபிளுக்கு நிர்வாகத்திடமிருந்து ஒரு மெசேஜ் வந்தது. இன்னும் ஒரு வாரத்திற்கு யாருக்கும் லீவ் அனுமதியில்லை என. எனக்கு எப்படியிருந்திருக்கும்  பார்த்து கொள்ளுங்கள். முன்னமே  ஏற்பாடு செய்த பயணம் இது என்றெல்லாம் சொல்லி அனுமதி வாங்கி கொண்டு கிளம்பி ரயில் நிலையம் வந்த போது மணி 3.35  

ரயிலில் வந்து ஏறிய போது படிக்கட்டில் அமர்ந்திருந்தவர்களை பார்த்தவுடனே தெரிந்து விட்டது உள்ளே எவ்வளவு கூட்டம் இருக்கிறது என்பது. இருந்தும் விடாமுயற்சியால் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல் அவர்களின் ஊடே புகுந்து புறப்பட்டு ரயிலுக்குள் வந்தேன். 

நான் என் பேகை அணைத்த படி ஒரு காலை உள்ளே வைத்து விட்டு அடுத்த கால் வைப்பதற்கு இடம் தேடி கொண்டிருக்க,  நான் நின்றிருந்த இடத்தில் ஜன்னலோர சீட்டில் அமர்ந்திருந்த 50 வயது பெண் "என்ன இங்க வந்து நின்னுட்டீங்க" என்றார் சலிப்புடன். "ஏன் என்னாச்சு" என்றேன் "ஏற்கனவே கூட்டமா இருக்கு இதுல நீங்களும் வந்து நின்னா என்ன பண்றது" என்றார் 

நான்,  "உட்கார்ந்திருக்கிற உங்களை ஒண்ணும் நான் எழுப்பலியே. இந்த கூட்டத்துக்கே இப்படி சலிச்சுக்கறீங்க வர போற ஸ்டேஷன்ல இன்னும் எத்தனி பேர் ஏற போறாங்க தெரியுமா என்றேன் அவர் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை.  (பின் அவரது நிலை என்ன ஆனது என்பதையும் சொல்கிறேன்) 


அடுத்து நான் கையில் வைத்திருந்த பேகை எங்கு வைப்பது என்று சுற்றிலும் பார்த்து கொண்டிருக்க ஒருவர் என் கஷ்டத்தை பார்த்து "அப்படியே மத்தவங்க வச்சிருக்கிற லக்கேஜ் பேக் மேலேயே வச்சிடுங்க"  என்றார். மற்றொருவர் "எப்படி வைக்க சொல்றீங்க யார் மேலயாவது விழுந்தா என்ன பண்றது" என்றார் தன்  சீட்டில் சௌகரியமாக அமர்ந்து கொண்டே."அதுக்காக அவரை அபப்டியே நிக்க சொல்றீங்களா  நிக்கறதுக்கே எவ்வளவு கஷ்டபடறார் பாருங்க "என்றார்  முதலாமவர். "கூட்டமா இருக்குனு தெரியறப்ப ஏன் ஏறணும்"  என்றார் முதலாமவர்.நீங்க உட்கார்ந்துடீங்க இல்ல அப்படி தான் பேச தோணும் என்று இவர்  பதிலடி கொடுக்க போக நான் உடனே "விட்டுடுங்க சார் எனக்காக எதுக்கு சண்டை விடுங்க எனக்கு இந்த கஷ்டங்கள் பழகிடுச்சு " என்றேன். மேலே உட்கார்ந்திருந்த  ஒருவர் "கொண்டாங்க நான் வச்சிக்கிறேன்"என்று வாங்கி  மடியில் வைத்து  கொண்டார். 

ரயில் கிளம்ப ஆரம்பித்து வேகமெடுக்க நானும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி சவுகரியமாக நின்று கொள்ளும் நிலைக்கு வந்து விட்டேன்.மனித மனம் எப்போதுமே ஒன்று கிடைத்தவுடன் அடுத்ததற்கு ஆசைபடும் இல்லியா. நானும் அதற்கு விதிவிலக்கா என்ன. 6 மணி நேர பயணம் என்பதால் கொஞ்சமே கொஞ்சம் உட்கார இடம் கிடைத்தால் உட்கார்ந்து கொள்ளலாமே என்று மனது ஆசைப்பட தொடங்கியது.

எல்லா சீட்டிலும் ஐந்து பேர் இருக்க நான் நின்றிருந்த இடத்துக்கு பக்கத்து சீட்டில்  நான்கு பேர் மட்டுமே அமர்ந்திருந்தார்கள். இத்தனி பேர் நிக்கிறாங்களே எப்படி உட்காராம விட்டாங்க என்று யோசித்தவாறு நாம தான் சரியாய் எண்ணவில்லையோ என்று மறு முறை எண்ணினேன். நான்கு பேர் தான் . பாமிலி யாக வந்திருந்தார்கள் போலிருக்கிறது. தாரளமாக உட்கார்ந்து பேசி சிரித்து கொண்டிருந்தார்கள் .கண்டிப்பாக இன்னும் ஒருவர் உட்காரலாம். எப்படி உட்காராமல் விட்டார்கள் என்ற கேள்வியுடன் பக்கத்தில் நின்றிருந்த பையனை கேட்டேன். அவர் தெரியலையே என்றார். ஒருவேளை ஏற்கனவே இடம் கேட்டு அவர்கள் மறுத்திருப்பர்களோ இருக்கட்டுமே கேட்டு தான் பார்ப்போமே என்று  ஒருவரிடம் தயக்கமாக கேட்டேன். சார் ஓரத்திலே கொஞ்சம் இடம் இருக்கு உட்கார்ந்துக்குவா என்றேன். அவர் தலையசைததோடு மட்டுமில்லாமல் இன்னும் கொஞ்சம் தள்ளி வேறு உட்கார்ந்து கொண்டார்.  சாப்பிடும் போது இன்னும் கொஞ்சம் சாதம் என்ற படி நெருங்குபவரை  போதும் போதும் என்போமே அது போல் சொல்லியவாறு அமர்ந்தேன். வாயுள்ள பிள்ளை தான் பிழைச்சிக்கும்  என்ற பழமொழி எனக்குள் டிஜிட்டலில் ஒளிர்ந்தது. 

வண்டி விழுப்புரம் வந்த போது என்னை ஒரு பெண்  ஏன் இதுல வந்து ஏறுனீங்க என்று கேட்டார்கள் அல்லவா. அவர்  விழுப்புரத்தில் தான் இறங்கினார்கள். 3 மணி நேரத்தில் இறங்குபவர்கள் 6 மணி நேரம் செல்பவர்களை ஏன் ஏறுகிறீர்கள் என்று கேட்பது வேடிக்கை தான். இப்படி பட்டவருக்கு தான் வண்டி விழுப்புரம்  இறங்குவதற்குள் ஒரு சோதனை வந்தது அவரருகில் நிண்டிருந்த பெண் உடம்பு முடியாமல் போய் வாமிட் எடுக்க ஆரம்பிக்க, அவரோ தர்ம சங்கடத்துடன் சீட்டில் இருந்து எழுந்து நின்று கொள்ளும் நிலைக்கு வந்து விட்டார். (ஆனால் எழுந்திருக்கவில்லை)  ஒவ்வொரு ஸ்டேஷன்  வர வர உட்கார்ந்திருப்பவர்கள் எழுந்து இறங்குவதும் இது வரை நின்றவர்கள் அமர்வதும் தொடர்ந்தது. இது எனக்கு எப்படி தோன்றியது தெரியுமா. வாழ்க்கையில் எல்லோருக்கும் வாய்ப்பு  என்பது  சுழற்சி முறையில் கிடைத்து கொண்டே இருக்கும் நாம் தான்  அதை சரியாக பயன்படுத்தி  கொள்ள வேண்டும் .இப்படி 
 இந்த பயணம் முழுக்கவே எனக்கு தொடர்ந்து சில ஆச்சரியங்கள் கிடைத்தது. ஆகா ரயில் திருச்சியை தொட்டு விட்டதே. மீதியை ரயிலில் இருந்து இறங்கியவுடன் சொல்கிறேன் வியாழன் வரை பொறுத்திருங்கள்.

தொடரும் 

ஆர்.வி.சரவணன்  

15 கருத்துகள்:

  1. // வாய்ப்பு என்பது சுழற்சி முறையில் கிடைக்கும்... // அப்படிச் சொல்லுங்க...

    350 வது பதிவிற்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. 350 நல்ல எண்ணிக்கைதான். 3 ஆண்டுகளில் 1000 பதிவு இட்டு காணாமல் போவதை விட நிதானமாக எழுதி நீண்ட காலம எழுதுவதே சிறந்தது.
    வாழ்த்துக்கள். பயண அனுபவங்களை சுவாரசியமாக சொல்லி இருக்கிறீர்கள் . தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  3. சரவணப்பொய்கையில் நீராடும் சரவணன்
    இன்று
    திருச்செந்தூரின் கடலூரில்
    முருகன் திருச் சந்நிதானத்தில்
    முருகா, கந்தா,குகா, குமரா, குருபரா, வேலவா, ஷண்முகா,சுவாமிநாதா, வெற்றி வேலா,
    கந்த வேலா, ஞான வேலா, பழனி வேலா,
    கார்த்திகேயா, ஆறுபடை வீட்டோனே,
    ஞான பண்டிதா, என
    உரக்கக் குரல் எழுப்புகையில், யானும் அவர்
    உடன் இருப்பேன். அவர் உள்ளத்தில்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthathacomments.blogspot.com
    www.vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

      நீக்கு
  4. மென்மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. 350ஆவது பதிவிற்கு வாழ்த்துகள் சகோ.
    //வாழ்க்கையில் எல்லோருக்கும் வாய்ப்பு என்பது சுழற்சி முறையில் கிடைத்து கொண்டே இருக்கும் நாம் தான் அதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் // ரயில் பயணம் சொன்ன பாடம் நன்று.
    தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  6. அனுபவங்கள்! அதுவும் பயண அனுபவங்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை - சில சமயம் அதைப் படிப்பவர்களுக்கு மட்டும்!

    350 வது பதிவுக்கு வாழ்த்துகள்.

    முருகன் எனக்கும் இஷ்ட தெய்வம்! என்னுடைய சில வேண்டுதல்கள் 20 வருடங்களுக்கும் மேலாக நிற்கின்றன. இறைவன் பொறுப்பாராக!

    பதிலளிநீக்கு
  7. ஒவ்வொரு பயணமும் நமக்குத் தரும் அனுபவங்கள் ஏராளம்..... தொடர்கிறேன்.

    350-வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. 350 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்! சுவாரஸ்யமாக செல்கிறது பயண அனுபவம்! பயணிக்கின்றேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  9. 350 வது பதிவிற்கு வாழ்த்துகள் சார்!

    இது எனக்கு எப்படி தோன்றியது தெரியுமா. வாழ்க்கையில் எல்லோருக்கும் வாய்ப்பு என்பது சுழற்சி முறையில் கிடைத்து கொண்டே இருக்கும் நாம் தான் அதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் .// ஆம் பயணங்கள் இப்படி பல படிப்பினைகளைத் தரும்....அருமையான பயணக் குறிப்பு...தொடர்கின்றோம்...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்