திங்கள், ஜூன் 29, 2015

திருச்செந்துரின் கடலோரத்தில்....3





திருச்செந்துரின் கடலோரத்தில்....3

இது வரை இருந்த  அசதி சலிப்பு எல்லாம்  பறக்கடித்திருந்தது என் மேல் வந்து மோதிய  அதிகாலை சில்லென்ற காற்று . என் கூட இதுவரை பயணித்த  அனைவரும் ஆளுக்கொரு  திசையாக சென்று விட நான் எந்த திசை நோக்கி பயணிப்பது என்று யோசித்தேன் . ஏற்கனவே இரு முறை வந்திருந்ததால் கோவிலின் முன் வாசல் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.  பேருந்தில் எனக்கு சீட் தந்தவர்  தெரிவித்த தகவல்கள் அனைத்தும் மிக உபயோகமாக இருந்தது எனக்கு அவர் சொன்னது இது தான்

"நீங்க மட்டும் தான் வந்திருக்கீங்க என்பதால் ரூம் ஏதும் எடுத்துடாதீங்க. இங்கே கோவில் காட்டேஜ் இருக்கு. அங்க போய் டோக்கன் வாங்கிக்குங்க. ஒரு அலமாரி தருவாங்க. அதிலே பேகை வச்சிட்டு போய் மொட்டை அடிங்க மொட்டை அடிச்சிட்டு கடல்ல போய் குளிக்கணும் அதற்கு பின் நிராலி கிணறு இருக்கிறது அங்கும் சென்று குளிக்க வேண்டும்.இதெல்லாம் ஐதீகம். பின் காட்டேஜ் வந்து அங்க இருக்கிற பாத்ரூம்ல குளிச்சிட்டு சாமி கும்பிட போங்க"
அவர் சொன்ன படி அந்த காட்டேஜ் தேடி புறப்பட்டேன். திறந்திருந்த ஒரு கடையில் விசாரித்து கொண்டு அந்த காட்டேஜ் சென்று சேரும் போது காலை  5 மணி .  10 ரூபாய் வாங்கி கொண்டு டோக்கன் (ரசீது என்றும் சொல்லலாம்)கொடுத்தார்கள்.

 உள்ளே சென்று பார்த்தேன் தங்குவதற்கு ரூம்கள் நிறைய இருந்தாலும் அவைகள் அனைத்தும் பக்தர்களால் நிரம்பியிருந்தது. நடுவே ஒரு பெரிய ஹால் இருந்தது. பலர் உறங்கி கொண்டிருந்தார்கள். ஹாலின்  இரு பக்கமும் நிறைய அலமாரிகள் இருந்தன அதில் திறந்திருந்த ஒரு அலமாரி சென்று பார்த்தால் பூட்டு இல்லை. வந்து அலுவலகத்தில் விசாரித்த போது நீங்க தான் பூட்டு வாங்கி பூட்டிக்கணும் என்றார்கள். இது வேறயா  என்ற படி பக்கத்தில் உள்ள கடையில் பொய் வாங்கினேன். விலை 30 ரூபாய். 

ஒரு அலமாரியை தேர்ந்தேடுத்து என் பேகை வைத்த போது தான் தெரிந்தது. நாதாங்கி கழண்டு போய் இருந்ததால்  தாழ்ப்பாள் போட முடியவில்லை 
அடுத்த அலமாரியை அணுகினால்  அதில் உள்ளே போடும் தாழ்ப்பாள்  இல்லை.  பரவாயில்லை என்று பேகை வைத்து  பூட்டிய போது கதவு இடுக்கு வழியே ஒரு கை உள்ளே செல்லும் அளவு இடைவெளி இருந்தது.  சரி என்று அடுத்த அலமாரியை தேடி பிடித்து ஆடி கொண்டிருந்த தாழ்ப்பாள் பற்றி கவலை கொள்ளாமல் உள்ளே பேகை வைத்து விட்டு மொட்டை அடிக்க கிளம்பினேன். சென்று ரசீது வாங்கி கொண்டு மொட்டை அடிக்கும் மண்டபத்தில் நுழைந்தேன். 

6 மணிக்கே அவ்வளவு கூட்டம் இருந்தது. ஒருவர் மொட்டை அடித்து கொண்டு கிளம்புகையில் என்னது 50 ரூபாயா அவ்வளவு எல்லாம்  தர முடியாது என்று கத்திய படி  சென்று கொண்டிருந்தார். நான் அமர சில்லென்று தண்ணீர் என் தலையில் தெளிக்கப்பட்டது. சில நிமிடங்களில் மொட்டையுடன் எழுந்தேன் எவ்வளவு என்று கேட்டேன் 50 ரூபாய் என்றவுடன் ஒன்றும் பேசாமல் . கொடுத்து விட்டு வெளி வந்தேன். 

அடுத்து கடலில் குளிக்க வேண்டும். இது வரை நான் கடலில் குளித்தது கிடையாது கடலை ஆசை தீர பார்த்து ரசிக்கவும் கால்கள் நனைக்கவும் மட்டுமே செய்திருக்கிறேன். கடலில் குளிப்பதில் தயக்கமாக இருந்தது. காரணம்  கையில் இருந்த பணம் வாட்ச் சட்டை எதெல்லாம் எங்கு வைத்து விட்டு குளிப்பது என்று தான்.

கடற்கரைக்கு வந்தேன். அங்கிருக்கும் கூட்டம் பார்த்து விட்டு சாமி தரிசனத்துக்கு எவ்வளவு வரிசை இருக்குதோ தெரியலியே சீக்கிரம் குளித்து விட்டு கிளம்ப வேண்டும் என்ற பதட்டத்துடன்  பணம் வாட்ச் முதலானவற்றை சட்டையில் சுற்றி கரையில் வைத்து விட்டு  குளிக்க வேண்டியது தான்  என்ற படி  வந்தவன் கண்ணில் அந்த அம்மா தென்பட்டார். அவர் கணவர் குளித்து கொண்டிருக்க  அவர் துணிகளை கைகளில் வைத்த படி அமர்ந்திருப்பதை பார்த்தவுடன்  அவரிடம் கொஞ்சம் தயக்கமாய் இதை பார்த்து கொள்ள முடியுமா என்று கேட்டேன்  அவர் அதனாலென்ன வச்சிட்டு போங்க என்றார். அவர் எதிரில் என் துணிகளை சுருட்டி வைத்து விட்டு கடலில் இறங்கினேன். 

கடல் அலை என்னை நலம் விசாரிக்க வருவதை போல் அசுர வேகத்துடன் வந்து மோதியது. நிலை குலைந்து போனேன்.   அந்த அலை மீண்டும் கடலுக்குள் செல்லும் போது என் நிலை பார்த்து சிரிப்பது போல் ஒரு பிரமை. இந்த வேகத்துக்கே  இப்படியா அடுத்து எப்படி வரேன் பார் என்று மீண்டும் வந்தது. பெரிய அலை.இப்போது பதட்டம் மறைந்து போய்  உற்சாகம் வந்திருந்தது எனக்கு. அடுத்த அலையை எதிர் கொண்டு மூழ்கி எழுந்தேன்.  இப்படி ஒவ்வொரு அலையாக வர  நான் அதை எதிர் கொண்டு  அதனுடன் விளையாட ஆரம்பித்திருந்தேன். சீக்கிரம் கரையேறலாம் என்று நினைத்தவனுக்கு வெளியில் வர மனமில்லை. இத்தனை காலம் கடலில் குளிக்காமல் இருந்து விட்டோமே என்ற எண்ணத்துடன் இன்னும் கொஞ்ச நேரம் குளிக்கலாம் என்ற படி ஒரு முறை நான் திரும்பிய போது அந்த அம்மா எழுந்து விட்டிருந்தார். நான் பார்க்கவும், அவர் நான் கிளமபறேன் என்ற படி என்னிடம் சொல்லி விட்டே அகன்றார். 

அவருக்கு நன்றி சொல்லிய படி கரைக்கு வந்து  துணிகளை எடுத்து 
கொண்டு நிராலி கிணறு இருக்கும் பக்கம் சென்றேன். அங்கும்  குளிக்க
வரிசையில் காத்திருக்க வேண்டி வந்தது. நானும் காத்திருந்து அந்த 
பெரிய கிணற்றின் படிக்கட்டில் வரிசையில் இறங்கி செல்ல அங்கே ஒருவர்  வாளியை இறைத்து ஒருவருக்கு மூன்று முறை தலையில் 
கொட்டி கொண்டிருந்தார். தண்ணீர் தலையில் கொட்டப்பட அங்கிருந்து  
வெளி வந்து ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன் (பாத்ரூம் எல்லா வசதிகளுடன் இருந்தது.) குளித்து முடித்து டிரஸ் பண்ணி கொண்டு சந்தனத்தை தலையில் தடவி கொண்டவுடன் சில்லென்று குளிரை எடுத்து தலையில் வைத்து கொண்டதை போல் உணர்ந்தேன். கோவில் நோக்கி 
நடக்க ஆரம்பித்தேன்.

அர்ச்சனை தட்டு கோவில் தேவஸ்தான கடையில் வாங்கிய பொழுது அதில் பூ ஏதோ பேருக்கு தான் இருந்தது. ஆகவே தனியாக மாலை வாங்கி கொள்ளலாம் என்ற படி நான் நடக்கையில் எதிர்பட்ட பூ கடையில் மல்லிகை பூவால் ஆன மாலைகள் இருந்தன. அருகில் நெருங்கி எவ்வளவு என்று விசாரித்தேன் .எடுத்து கையில் கொடுத்து விட்டார். நான் தயங்கவே தயங்காதீங்க என்ற படி அவர் விலையை சொல்ல அது பேரம் பேச வேண்டிய  அளவில் இருந்ததால் குறைத்து கேட்டேன். அவர் மறுத்து விட்டார் என்னால் மாலை வேண்டாம் என்று மறுக்க முடியவில்லை. சரி என்று காசு கொடுத்து விட்டு கோவில் அருகில் நெருங்கினேன். 

ஒரு பெரிய பக்தர் குழு ஒன்று நின்றிருந்தது. அவர்களிடம் ஒரு அர்ச்சகர் பேசி கொண்டிருந்தார்.நான் சரி அவருக்கு அருகில் சென்று தகவல் கேட்க முயல, அவர் உடனே சொன்ன பதில் கேட்டீர்களானால் உங்களுக்கு
 அதிர்ச்சியாய் தான் இருக்கும். ஒண்ணும் பேசபடாது போய் கொண்டே இருக்கணும் என்று உத்தரவு போடும் தொனியில் சொல்லி விட்டு மீண்டும் அந்த குடும்பத்திடம் பேச ஆரம்பித்திருந்தார். உள்ளே நுழையும் போதே இப்படி ஒரு கோபத்தை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறதே என்று எனக்கு கோபம் வந்தது. அவர் வேற யாரையாவது பார்த்து சந்தேகம் கேளுங்க னு சொல்லிருக்கலாம் இப்படி முகத்தில் அடித்தது போல் ஏன் சொல்ல வேண்டும்  என்று நொந்த படி  அவர் கோபத்தை நாமும் பட்டு பாவத்தை ஏத்திக்க வேண்டாம் என்ற படி சமாதானபடுத்தி கொண்டு உள்ளே நுழைந்தேன். 

100 ரூபாய் டிக்கெட் வாங்கி கொண்டு ஸ்பெஷல் தரிசன வரிசையில் உள்ளே சென்றேன்.நடுவே ஒருவர் அர்ச்சனையா கொடுங்க என்று தட்டை வாங்க முற்பட நான் வேண்டாம் என்று மறுத்தேன். சுவாமி சன்னிதானம் அருகில் சென்று அர்ச்சனைக்கு கொடுக்கலாம் என்ற படி நகர்ந்தேன்.எனக்கு முன்னே கூட்டம் இல்லை பின்னே சிலர் வந்து கொண்டிருந்தார்கள் . பக்கத்தில் இருந்த இலவச தரிசனத்தில் கூட்டம் திமிறி கொண்டிருந்தது. நான் சுவாமி சன்னதி அருகே சென்றவுடன் அர்ச்சகர் ஒருவரிடம் அர்ச்சனை தட்டை கொடுத்தேன். அவர் வேறு ஒருவருக்கு அர்ச்சனைக்கு பொறுப்பை ஏற்று கொண்டிருந்தார் போலிருக்கிறது.அந்த நபருடன் பேசி கொண்டே என்னிடம் ௨௦ ரூபாய் கொடுங்க என்று வாங்கி கொண்டு தேங்காய் உடைத்து அர்ச்சனை பையில் போட்ட படி மாலையை எதிரே இருந்த தூணில் மாட்டி வைத்து விட்டு என்னிடம் அர்ச்சனை பையை தந்து விட்டார். நான் மாலை என்று கேட்க அது சாமிக்கு போயிடும் என்ற படி நகர்ந்து விட்டார். மாலை என்னை பார்த்து கடையில் மாட்டபட்டிருந்த நான் இப்போது தூணில் மாட்டபட்டிருக்கிறேன் அவ்வளவே வித்தியாசம் இதற்கு நீ கொடுத்த ரூபாய் 80 என்று கேலி செய்வதாக எனக்கு தோன்றியது. மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாக கூட இருந்தது. சரி பெரிய கோவிலில் கூட்டம் நிரம்பிய கோவிலில் நமக்கு மட்டும் அர்ச்சனை சரியான படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு என்று மனதை சமாதானபடுத்தி கொண்டு சுவாமி சன்னிதானம் நோக்கி சென்றேன். 

கடவுளை பார்க்க போகிறோம் என்பதால் உற்சாகம் நானும் வருகிறேன் என்ற படி என்னுடன் வந்து ஒட்டி கொண்டது. எனக்கு முன்னே வரிசையில் யாரும் இல்லாததால் நான் சுவாமி சன்னிதானம் அருகே சென்று அந்த மேடையில் ஏறினேன். நான் சன்னிதானம் பக்கம் பார்ப்பதற்கும் அப்போது திரை இழுக்கபடுவதற்கும் சரியாக இருந்தது. வெயிட் பண்ணுங்க பூஜை நடக்க போகுது என்று சொல்லி விட்டார்கள். முதலில் இது எனக்கு ஏமாற்றத்தை தந்தாலும் பின் தான் இதில் உள்ள அதிர்ஷ்டம் புரிந்தது. அதாவது சுவாமி சந்நிதானத்தில் சில நிமிடம் நிற்பதற்கு இந்த பூஜை உதவியாய்
 இருந்திருக்கிறதே. என்ற ஆச்சரியத்துடன்  நான் காத்திருக்க இலவச தரிசனத்தில் இருந்த  கூட்டமும் வரிசையில் காத்திருந்தது.


அப்போது எனக்கு ஒரு யோசனை தோன்ற காத்திருந்த இந்த வேளையில் ஏன் சும்மா நிற்க வேண்டும் என்று கந்த சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பித்தேன். இறைவன் சன்னதியில் இதை சொல்ல சந்தர்ப்பம் கிடைத்ததே என்ற சந்தோசத்துடன் நான் முணுமுணுத்த படி நிறக பாதியிலேயே  திரை திறந்தது. திருச்செந்தூர் முருகன் சிரித்த முகத்துடன் அருள் பாலித்து கொண்டிருந்தார். முருகா முருகா என்ற கோஷங்கள் எங்கும் ஒலிக்க அவரை பார்க்க எவ்வளவு கஷ்டத்துடன் வந்தோம் என்பதெல்லாம் ஒரு நொடியில் மரகடிது விட்டார்.  திவ்ய தரிசனம் என்று சொல்வார்களே அது தான் எனக்கு கிடைத்தது . இப்படியான தரிசனத்தின் போது நான் நின்ற வரிசையில் கூட்டம் வர ஆரம்பித்தது. அருகில் வரும் போதே எவ்வளவு நேரம் நிப்பீங்க நாங்க கும்பிட வேண்டாமா என்ற படி வரவே  நான்முருகனை  வணங்கி வெளி வந்தேன். 

அவரை பார்த்த அந்த நொடியில் இருந்து கொடி மூலைக்கு வரும் வரை அவரை பார்த்த அந்த பரவசம் தொடர்ந்து கொண்டே இருந்தது. திருசெந்துரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடி தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் என்ற பாடல் எனக்கு பிடித்த பாடல் அந்த பாடல் ஏதோ சினிமாவுக்காக எழுதிய பாடல் போல் தோன்றவில்லை உணமையான பக்தி உணர்வுடன் எழுதிய பாடல் தான் என்ற உணர்வு மேலோங்க நான் பிரகாரம் சுற்றி வருகையில் . பேருந்தில் என்னுடன் வந்தவர் என் எதிரே சிரித்த படி தரிசனம் முடிஞ்சதா என்ற படி எனை கடந்தார் 

வெளி வந்து கடலோரம் சென்று நின்று அங்கிருந்த கோவில் கோபுரத்தை ரசித்த படி  என் செல் போனில்  கிளிக்கினேன்  எப்படி எடுத்திருக்கிறேன் என்று பார்ப்பதற்கு முயன்றால் வெயிலில் என்னால் பார்க்க முடியவில்லை அந்த  படத்தை தான் இங்கே தந்திருக்கிறேன். 



எதாவது சாப்பிடலாம் என்ற படி தேவஸ்தான பிரசாத கடைக்கு சென்றேன்.  சக்கரை பொங்கல் புளியோதரை இருந்தது . சக்கரை பொங்கல் வாங்கினேன் வாங்கியவனுக்கு புளியோதரை கொடுத்து விட்டாரோ என்ற சந்தேகம் வந்தது.இது சக்கரை பொங்கல் தானே என்று அவரிடம் கேட்டேன். என் கேள்விக்கு அவர் சொன்ன பதில் தான் இந்த அனுபவ கட்டுரைக்கு சிகரம் எனலாம். சென்ற பதிவில் முருகன் எனக்கு உணர்த்திய ஒன்றை சொல்கிறேன்  என்று குறிப்பிடிருந்தேனே .அது தான் அந்த கடைக்கார முதியவர் சொன்ன  பதிலில் இருக்கிறது 

கேட்டதை தருவான்  கந்தன்.அவன் கிட்டே என்ன கேட்டீங்களோ அது கிடைக்கும்.  நீங்க என்ன கேட்டீங்க சக்கரை பொங்கல் தானே.அது தான் கொடுத்திருக்கேன் முதல்ல பிரிச்சி பாருங்க 

எப்படி இருந்திருக்கும் எனக்கு.பொட்டலத்தை ஆர்வமாய் பிரித்தேன் சக்கரை பொங்கல் தான் இருந்தது. சாப்பிட ஆரம்பிக்க அதிலிருந்த இனிப்பு நாவிற்கு தான் சுவை தந்தது.  அவர் சொன்ன சொல் மனது முழுக்க இனித்தது என்றே சொல்லலாம்.

ரூம் சென்று அலமாரியில்  எனது பேகை எடுத்து கொண்டு பேருந்து நிலையம் நோக்கி சென்றேன்.எதிரில் வந்த பேருந்து மதுரை போர்டுடன் வரவே  தாவி ஏறினேன் எனக்கு பேருந்தில் இடம் பிடித்து தந்த மனிதரும் எனக்கு முன்னே அந்த பேருந்தில் ஏறி விட்டிருந்தார்.எனை பார்த்து சிரித்த படி சேர்ந்தே வந்தோம், சேர்ந்தே கிளம்பறோமே  என்று ஆச்சரியப்பட்டார் . நானும் அதே ஆச்சரியத்துடன் அவரிடம்  தலையாட்டினேன். 

பேருந்தில் டிரைவர் இருக்கைக்கு எதிரே படத்தில் காட்சி தந்து கொண்டிருந்த திருச்செந்தூர் முருகன் என்னப்பா எனது கருணை போதுமா என்ற படி என்னை நோக்கி புன்னகைத்து கொண்டிருந்தார்.

முருகா என் அப்பனே சரணம். 

ஆர்.வி.சரவணன் 

9 கருத்துகள்:

  1. அருமை அண்ணா...
    எனக்கும் அழகான தரிசன அனுபவம் அமைந்தது அண்ணா...

    பதிலளிநீக்கு
  2. திருச்செந்தூர் அனுபவம் அருமை. சக்கரைப்பொங்கல் தத்துவம் மிக அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நாங்களும் கூடவே வந்தோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரை வைத்தவன் முருகன் நன்றி ஶ்ரீராம் சார்

      நீக்கு
  4. உங்கள் தயவால் எங்களுக்கும் முருகன் தரிசனம்....

    நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  5. கூடவே அந்த மனிதரும்... வியப்பு...!

    சுவாரஸ்யமான பயணம்...

    பதிலளிநீக்கு
  6. அருமையான கட்டுரை! பிரபல கோயில்களில் அர்ச்சகர்கள் இவ்வாறு நடந்து கொள்வது எனக்கும் கஷ்டமே! பிரசாதம் கொடுத்தவர் சொன்ன தத்துவம் சர்க்கரை பொங்கலாய் இனித்தது! நன்றி!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்