செவ்வாய், ஜூலை 03, 2012

ரயில் பயணங்களில்....






ரயில் பயணங்களில்....

வாங்களேன் அன் அன் ரிசர்வ் கம்பார்ட்மென்ட் டில் ஜாலியா ஒரு ட்ரிப் போகலாம் .கொஞ்சம் கூட்ட நெரிசல் இருக்கும் தான் இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு என் கூடவே வாங்க (நான் ஒரு வருடமாக அடிக்கடி ரயிலில் சென்று வந்து கொண்டிருக்கிறேன் அந்த அனுபவ தொகுப்பு இங்கே பதிவாய் தந்திருக்கிறேன்)


இரவு ஒன்பது மணிக்கு புறப்பட வேண்டிய ரயிலுக்கு சீட் பிடிக்க வேண்டுமானால் நாம் ஆறு மணிக்கு சென்று வரிசையில் நின்றால் தான் கண்டிப்பாக சீட் கன்பார்ம். ஏழுமணிக்கு சென்று வரிசையில் சேர்ந்தால் சீட் கிடைக்கும் வாய்ப்பு உங்களுக்கு அருகில் இருக்கிறது என்று அர்த்தம். எட்டு மணிக்கு சென்றால் சீட் கிடைக்கும் ஆனா கிடைக்காது அதாவது பிப்டி பிப்டி சான்ஸ் உண்டு இதெல்லாம் ரயில் வரும் போது ரயில்வே போலீஸ் வந்து நின்றால் மட்டுமே நடக்க கூடியது. அவர்கள் வரவில்லை என்றால் நிலைமை தலை கீழாக மாறி விடும். அதாவது ஆறு மணிக்கு வந்து நின்றவர் சீட் கிடைக்காமல் அல்லாடி நிற்பதும் ரயில் வரும் நேரத்திற்கு கேசுவலாக வந்தவர் ஜன்னலோர சீட் டில் ஹாயாக அமர்ந்திருப்பதும் கண்டிப்பாக நடைபெறும் ஒரு நிகழ்வு அதாவது உடல் பலம் வாய் பலம் உள்ளவர்களுக்கே அப்போது முன்னுரிமை உண்டு
(நான் வரிசையில் சென்று நிற்கும் போது ரயில் வருகிறது என்று பார்க்கின்றேனோ இல்லையோ போலிஸ் வருகிறாரா என்பதை தான் மிகுந்த ஆர்வமாய் கவனிப்பேன் )

அடுத்து எல்லோரும் வண்டிக்குள் ஏறியவுடன் அந்த இடமே கொஞ்ச நேரம் சிறு போர்க்களம் போல் தோன்றும். ஆள் வருது, அந்த சீட்டை பிடி, எந்திரிப்பா கஷ்டப்பட்டு ஏறி இடம் பிடிக்கிறோம் வந்து உட்கார்ந்திட்டாரு தள்ளி உட்காரு வீட்லே உட்கார்ந்திருப்பது போல் உட்கார்ந்திருக்கிறே என்று குரல்கள் கட்டாயம் கேட்கும். ஏறும் பயணிகள் முதலில் தேடுவது ஜன்னலோர சீட் அது இல்லையென்றால் ஏதேனும் ஒரு சீட். அதுவும் இல்லையென்றால் உட்கார்ந்திருப்பவர்களிடம் கெஞ்சுவதும் முடிந்தால் கொஞ்சம் அதட்டலாகவும் சீட் பிடிக்க போராட்டம் நடைபெறும் . அடுத்து மேலே பொருள்கள் வைப்பதற்காக இருக்கும் இடத்தில முதலில் ஏறியவர் சவுகரியமாக படுத்து பள்ளி கொண்டு விடுவார். அடுத்து வரும் ஸ்டேஷன் களில் ஏறுபவர்கள் அவரை எழுப்பி ஓரமாக, இல்லை என்றால் சுவற்றோடு சுவராக உட்கார வைத்து விட்டு அமர்ந்து கொள்வார்கள். அதோடு மட்டுமில்லாமல் மேலே இருப்பவர்கள் கால்களை கிழே தொங்க விட்டு கொள்ளும் போது சீட்டில் அமர்ந்திருப்பவர்களின் முகத்தில் கால்கள் மோதுவது போல் அவ்வபோது வந்து செல்லும் இதை கீழே அமர்ந்திருப்பவர்கள் முகம் சுளித்தாலும் சகித்து கொள்ள வேண்டும்.கேட்டால் எவ்வளவு நேரம் தான் நாங்க காலை மடக்கி உட்கார முடியும் சொல்லுங்க என்பார்கள் பரிதாபமாய் .சில நேரம் மேலே தண்ணீர் பாட்டில் திறக்கும் போது அது சிதறி கீழே இருப்பவர்கள் மீது அபிசேகம் நடைபெறும் வாய்ப்பும் உண்டு நான்கு பேர் அமரும் சீட்டில் ஆறு பேராவது உட்காரும் நிலை உருவாகும் ( நான் இரு பருமனான மனிதர்கள் மத்தியில் ஒரு எலி போல் மாட்டி அவச்டைபட்டிருக்கிறேன் )


சீட்கள் நிறைந்தவுடன் அடுத்து நடை பாதையை ஆக்ரமிக்கும் பயணிகள் பலர் உட்கார்ந்து கொள்ள சிலர் நின்று கொண்டு வருவார்கள். சீட்டில் அமர்ந்திருப்பவர் எந்த ஸ்டேசனில் இறங்குவார் என்று தெரியாது திடீரென்று அவர் எழுந்திருக்க அப்போது தான் ஏறி உள்ளே வந்த நபர் டக்கென்று உட்கார்ந்து கொள்வார் நெடு நேரமாய் அங்கே நிற்பவருக்கு காதில் புகை வந்து விடும்
(எனக்கும் வந்திருக்கிறது )

நடைபாதையில் முழுக்க ஆட்கள் நிறைந்திருப்பதால் சீட்டில் உட்கார்ந்திருப்பவருக்கு எப்படி பாத்ரூம் செல்வது என்ற டென்சன் உண்டாகும். ஏழு கடல் ஏழு மலை தாண்டி சென்று வருவதற்குள் தாவு தீர்ந்து விடும். இதில் உச் இது வேறயா என்ற குரல்கள் கேட்கும் அதாவது ஒரு காலை வைத்து விட்டு அடுத்த கால் எங்கு வைப்பது என்பதை நடையில் உட்கர்ந்திருப்பவரை கேட்டு தான் அவர் சொல்லும் இடத்தில தான் வைக்க முடியும். இதையெல்லாம் தாண்டி வெற்றிகரமாய் பாத்ரூம் சென்றால் பாத்ரூம் பக்கத்திலும் சிலர் அமர்ந்திருப்பார்கள். அதை பார்க்கும் போது பாத்ரூம் போகும் எண்ணமே தோணாது நமக்கே அப்படி என்றால் லேடீஸ் நிலைமை எப்படி இருக்கும் (நானெல்லாம் எவ்வளவு தண்ணி தாகம் எடுத்தாலும் சரி முடிந்த வரை தண்ணீர் குடிக்காமல் செல்வேன் அப்போது தான் பாத்ரூம் போகும் தொல்லை இருக்காது)

இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் ரயில் கிளம்பும் போது சீட்டிற்காக உன் உயிரை எடுத்துடுவேன் என்று சண்டையிட்டு கொள்பவர்கள் தாங்கள் இறங்க போகும் ஸ்டேஷன் வரும் போது உயிர் கொடுக்கும் தோழனாய் மாறி இருப்பார்கள் சண்டையிட்ட பெண்கள் நேரம் செல்ல செல்ல ஒருவர் குழந்தையை மற்றவர் தூக்கி மடியில் வைத்து கொஞ்சும் அளவுக்கு ராசியாகி விடுவார்கள்
ரயிலின் ஓரத்தில் எதிரும் புதிருமாக சீட் இருக்கும் பாருங்கள் அந்த சீட்டில் அமர்ந்து விட்டால் நெருக்கடியிலிருந்து கொஞ்சமே கொஞ்சம் தப்பித்து மூச்சு விட்டு கொள்ளலாம். யாரும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்களேன் உட்கார்ந்துக்கிறேன் என்று கேட்க மாட்டார்கள் ஆனா பாருங்க என்னையும் ஒருத்தர் கேட்டார் "ஏங்க ஓரமா கதை புஸ்தகம் வச்சிருக்கீங்களே அதை எடுத்தீங்கன்னா நான் உட்காருவேன்லே" நான், " இந்த தொண்ணுறு பக்க புஸ்தக இடைவெளியில் எப்படி உட்காருவீர்கள்" என்று கேட்டதற்கு "மனமிருந்தால் மார்க்கமுண்டு" என்றார் பாருங்கள். நான் கடுப்பாகி விட்டேன் "மனம் இருக்கு மார்க்கம் தான் இல்லே" என்றேன்

இப்படியெல்லாம் அவஸ்தைகள் கொண்ட இந்த கம்பார்ட் மென்ட் டை விட்டு நான் அதிகாலை இறங்கும் போது பார்த்தால், ஒவ்வொருவரும் இன்னொருவர் மேல் சாய்ந்து விழுந்தும் குழந்தைகள் நடைபாதையில், மடியில் துவண்டு போய் தூங்கியும் நிற்பவர்கள் அப்படியே கம்பியில் சாய்ந்தும் நல்ல உறக்கத்தில் இருப்பார்கள். வாடி வதங்கிய காய்கறிகளை கீரைகளை பார்க்கையில் தோன்றும் பரிதாபம் தான் அவர்களை பார்க்கையில் என் மனதிற்குள் தோன்றும்.

இந்த எண்ணத்துடன் கீழே இறங்கி ஏ சி கோச், ரிசர்வேசன் கோச்சுகளை கடக்கையில் அங்கே உறங்கி கொண்டிருப்பவர்களை பார்க்கும் போது மனிதனின் வாழ்க்கை தான் ஏன் இப்படி பாகுபாட்டுடன் ஏற்ற தாழ்வுகளுடன் இருக்கிறது என்ற பதில் கிடைக்காத வினா ஒன்று எனக்குள் தோன்றும்

அடுத்து ரிசர்வேசன் கோச் லே ஒரு முறை போகலாம்
இப்ப உங்க ரயில் அனுபங்களை கருத்துரையில் சொல்லுங்கள்

ஆர்.வி.சரவணன்


8 கருத்துகள்:

  1. அனுபவங்களின் தொகுப்பு.

    எனது அனுபவத்தை 'ரயில் பயணங்களில்' என்ற லேபிளில் படிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. சரவணன் ரொம்ப நன்றாக உள்ளது. எனக்கும் முன்பதிவு செய்யாத பெட்டியில் பயணம் செய்த அனுபவம் நிறைய இருக்கிறது. நீங்க கூறிய அனைத்தையும் பார்த்து இருக்கிறேன்.. அதிலும் அவசரமாக ஒண்ணுக்கு வந்தும்.. எழுந்தால் இடம் போய் விடுமே என்று யோசனையாக இருந்த நேரங்கள் உண்டு :-)

    மேலே உட்கார்ந்து கொண்டு காலை நம் முகத்தின் மீது படும் போல வைப்பவர்களைக் கண்டால் ஆத்திரமாக வரும்.. அதோடு மேலே இருந்து அவர்கள் காலில் இருந்து மண் வேறு விழும்.. அது இன்னும் ஆத்திரத்தை கிளம்பும். ஒருமுறைப் படாதபட்டு விட்டேன் இதில் சென்று அதில் வெறுத்துப் போய் இனி இதில் போகவே கூடாது என்று முடிவு செய்து விட்டேன். அப்படியே போக வேண்டி வந்தால் பேருந்தில் போய்க் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். அதன் பிறகு நான் சென்றதில்லை.. பின் இங்க வந்து விட்டேன். நீங்க சொன்ன பல சம்பவங்களைப் படித்து சிரிப்பாகி விட்டது குறிப்பாக வரிசையில் நிற்கும் போது நடக்கும் அடிதடிகள் :-)

    பதிலளிநீக்கு
  3. உங்களின் ரயில் பயண அனுபவம் சிறந்த தொரு தொகுப்பு ..
    ரயில் பயணிகளின் வாழ்வியலை மிக நேர்த்தியாய் பதிவு செய்திருக்கின்றிர் ...
    அப்படி அடிச்சி புடிச்சி ஏறினதும் சன்னலோர இருக்கை கிடைத்ததும் வரும் சந்தோஷம் இருக்கே ஐயோ அப்பிடி ஒரு சுகம் சார் ..
    அனைத்து நிகழ்வுகளையும் பட்டியலிட்டது அருமைங்க சார் ..

    பதிலளிநீக்கு
  4. பயணங்கள் எப்போதுமே சுவாரஸ்யம் நிறைந்தவை.நல்ல படைப்பு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. மனிதனின் வாழ்க்கை தான் ஏன் இப்படி பாகுபாட்டுடன் ஏற்ற தாழ்வுகளுடன் இருக்கிறது என்ற பதில் கிடைக்காத வினா ஒன்று எனக்குள் தோன்றும்//

    இதற்க்கு பதில் உலகத்திலேயே இல்லை என்பதே நெஞ்சை சுடும் உண்மை....!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்