
வெற்றி ரீங்காரமிடும் ஈ
ஒரு ஈ யை வைத்து கொண்டு அப்படி என்ன தான் செய்து விட முடியம் என்ற நினைப்புடன் தான் (சரி சிறு அலட்சியத்துடன்) இந்த நான் ஈ படம் பார்க்க அமர்ந்தேன். அமர்ந்த சில நிமிடங்களிலேயே இயக்குனர் ராஜ மௌலி நம்மை படத்துக்குள் ஈர்க்க வைத்து விடுகிறார் என்றால், ஈ வந்தவுடன் அது நம்மை அதன் கூடவே படத்தின் இறுதி வரை கட்டி இழுத்து செல்வது போல் அழைத்து சென்று விடுகிறது. அந்த அளவுக்கு இந்த படம் நம்மை மொய்க்க வைத்து விடுகிறது.
ஹீரோயின் சமந்தா மேல் ஆசை கொண்ட வில்லன் சுதீப் (ரொம்ப நல்லா நடிச்சிருக்கிறார் ) அவரது காதலனை கொன்று விட ஹீரோ வின் ஆவி ஒரு ஈயின் முட்டைக்குள் சென்று ஈயாய் வெளி வந்து வில்லனை பழி வாங்கும் கதை தான் இது. கேட்பதற்கு என்னமோ சாதாரணமாய் தான் இருக்கிறது நானும் இப் படத்தை பற்றி அப்படி தான் நினைத்தேன் ஆனால் இயக்குனர் கொடுத்திருக்கும் விசுவல் ட்ரீட் நம்மை ஆச்சரியத்திற்கு கொண்டு செல்கிறது.
* ஈ முட்டையிலிருந்து வெளி வருவது வெளிவந்து பறக்க முயற்சிக்கும் காட்சி
* வில்லனின் காரை விபத்துக்குள்ளாக்கி விட்டு கார் கண்ணாடியில் I WILL KILL YOU என்று எழுதுவது
* ஹீரோயின் கண்ணீர் துளிகளில், காதலன் தான் ஈயாய் வந்திருக்கிறேன் என்று சுட்டி காட்டும்
விதம் ,கூடவே வில்லன் தான் தன்னை கொன்றான் என்பதை வில்லனின் போட்டோ மேல் அமர்ந்து வெளிபடுத்துவதுடன் அவனை கொல்வேன் என்று கோடிட்டு காட்டும் விதம்
* வில்லனுடன் ஒவ்வொரு முறையும் மோத போகும் முன், தன் இரு கைகளை சேர்த்து சண்டைக்கு தயார் என்பது போல் செய்யும் ஆக்சன்
* ஹீரோயின் ஈக்கு என்று வீடு அமைத்து கொடுத்திருப்பது (ஒரு கவிதை)
* ஹீரோயின் மருந்து அடித்ததனால் ஈ மயங்கி போய் இலையில் கிடக்க, அதை பார்க்கும் நமக்கு எந்திரி அஞ்சலி எந்திரி அஞ்சலி என்று கத்த வேண்டும் போல் தோன்றுவது
* நானியை மறந்து விடு என்று வில்லன் அட்வைஸ் செய்ய ஹீரோயின் முயற்சி செய்றேன் என்று கூற அதை கேட்டு ஈ அடையும் சோகம்
* எங்கிருந்தாலும் வந்து என் காலில் விழு என்று வில்லன் சொல்ல கதாநாயகிக்காக உடனே வந்து காலில் விழுந்து பரிதாபமாய் பார்க்கும் தோற்றம்
* வில்லன் ஈயை தன் காலால் நசுக்க முற்படும் போது அது உடனே ஊசி யை நிமிர்த்தி வைத்து அவன் காலை குத்த வைத்து தப்பிப்பது
* கிளைமாக்ஸ்சில் ஈயின் இறகை காலை வெட்டும் போது சமந்தாவுடன் சேர்ந்து நமக்கும் வேணாம் விட்டுடு என்று கெஞ்ச தோன்றுவது
என்று ரசிக்க வைக்கும் காட்சிகள் நிறைய
கதாநாயகியை காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற சூழலில் வெடி மருந்தில் புரண்டு விட்டு அந்த பீரங்கிக்குள் அது மரணத்தை நோக்கி பயணிக்கும் போது மனதை கனக்க வைக்கிறது.
கதாநாயகி ஈயை திருட்டு பையா வெளில வாடா என்று கொஞ்ச, திருட வந்த சந்தானம் தன்னை தான் சொல்கிறார் என்று கருதி வெளிவருவது திருந்துவது சூப்பர் காட்சி என்றாலும் கடைசியில் வரும் சந்தானத்தின் காட்சிகளை படத்தின் இடையிடையே சேர்த்திருக்கலாம்
இந்த படத்தை காதுலே பூ சுற்றும் அளவுக்கு எல்லாம் எடுக்காமல் ஈயை நாம் சுற்றும் அளவுக்கு, கிராபிக்ஸ் அனிமேஷன் துணையுடன் காதல் காமெடி செண்டிமெண்ட் என்று
பக்காவாக திரைக்கதை அமைத்து வெரி இன்டரெஸ்டிங் ஆக தந்திருக்கும் இயக்குனர் ராஜ மௌலியை மனசு விட்டு பாராட்ட தோன்றுகிறது. ( இனி ஈயை காணும் போது நமக்கு அருவருப்பு தோன்றாமல் ஆர்வமாய் கவனிக்க தோன்றும்)
(ஈ ஜின்தாக்த ஜின்தாக்த என்று ஆடுவது சூப்பர் என்று எழுத சொன்னதுடன், கூடவே அமர்ந்து நான் எழுதுவதை பார்த்து இதை பற்றி எழுதுங்க அதை பற்றி எழுதுங்க என்று டிப்ஸ் கொடுத்தான் என் பையன் ஹர்ஷவர்தன்)
ஈ, "நான்" ஈ என்று கர்வமாய் ரீங்காரமிடுகிறது
ஆர்.வி.சரவணன்