புதன், ஏப்ரல் 05, 2017

மயங்குகிறாள் ஒரு மாது




மயங்குகிறாள் ஒரு மாது

ஒரு புறம் வேடன் ஒரு புறம் நாகம் இரண்டுக்கும் நடுவே அழகிய கலை மான்..... என் விருப்ப பாடல்களில் வாணிஜெயராம் பாடிய இந்தப் பாடலும் உண்டு.

இந்த பாடலின் காட்சியை டிவியில் பார்த்த போது இந்த படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. காரணம், இந்த பாடலின் இடையே மேற் சொன்ன வரிகளை சுஜாதா தன் மருண்ட விழிகளை வலப்பக்கமும் இடப்பக்கமுமாக மாற்றியபடி பாடி கொண்டிருப்பார். கூடவே அவரது கணவரான முத்துராமன் அவரை பின் தொடர்ந்த படி குழப்பமாய் கவனித்து கொண்டிருக்க, விஜயகுமாரும் தேங்காய் சீனிவாசனும் சுஜாதாவை அச்சுறுத்தும் வேடன், நாகமாக காட்டப்படுவார்கள்.

இந்தப்படத்தில் வரும் இன்னொரு பாடலான சம்சாரம் என்பது வீணை.... பாடல் காட்சியை கவனித்த போது, முத்துராமன் மனைவி சுஜாதா பற்றி புகழ்ந்து பாடிக் கொண்டிருப்பார். அதை ரசித்து மகிழ வேண்டிய சுஜாதாவோ அங்கே நின்றிருக்கும் விஜயகுமாரையும் தேங்காய் சீனிவாசனையும் பார்த்து மிரண்டு போய் நின்றிருப்பார். தேங்காய் சீனிவாசனின் பார்வையிலிருக்கும் மிரட்டலும், விஜயகுமாரின் பார்வையிலிருக்கும் குற்ற உணர்ச்சியும் ஒரு புதிருக்கு விடை தேட சொல்லும் ஆர்வத்தை நமக்கு தந்து விடுகிறது.


அப்படி என்ன தான் கதை இது என்பதை தெரிந்து கொள்ள ஆவல் கொண்டவன், இந்தப் படத்தின் பெயரை பார்த்து கதை இப்படியானதாக தானிருக்கும் என்று ஓரளவு அனுமானத்திற்கு வத்திருந்தேன். இந்தப்படத்தின் கதை வசனகர்த்தா மறைந்த திரு. பஞ்சு அருணாசலம் அவர்கள் என்றவுடன் இப் படத்தை பார்த்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு வந்ததுடன் நேற்று இந்தப் படத்தை பார்த்தும் விட்டேன்.ஓரளவு நான் அனுமானித்த ஒன்லைன் தான் என்றாலும் அதை சில பல திருப்பங்கள் மூலமும், ஒவ்வொரு கேரக்டரின் செயல்பாடுகள் மூலமும் ரசிக்கும் விதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

சுஜாதா தான் கதையின் மையமே. மிரட்சியும், தவிப்பும், அன்புமாக படம் முழுக்க கல்பனா கதாபாத்திரமாகி இருக்கிறார். க்ளைமாக்ஸில் வெளிப்படும் முத்துராமனின் குணாதிசயம் வாட் எ கேரக்டர் என்று சொல்ல வைத்து விடுகிறது. வில்லனாக இருந்தாலும் சொல்பேச்சு தவறாத நாணயஸ்தனாக தேங்காய் சீனிவாசன் அட சொல்ல வைக்கிறார். விஜயகுமாரின் கேரக்டரை எங்க கட் பண்ண வேண்டுமோ அங்கே கட் செய்து எந்த இடத்தில் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமோ சேர்த்து விறுவிறுப்பை தந்திருக்கிறார்கள். முத்துராமனுக்கு அக்காவாக டாக்டராக வரும் எம்.என் ராஜம், தோழியாக வரும் ஜெயலட்சுமி, அன்பான அப்பாவாக கண்டிப்பை குரலில் காட்டாமல் வார்த்தைகளில் காட்டும் அசோகன், என்று சக கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கும் விதம் படத்திற்கு பெரிய பிளஸ்.

வசனத்திற்கு உதாரணமாக ஓரு காட்சியை சொல்கிறேன். சுஜாதாவின் பழைய காதலன் விஜயகுமார் அவருக்கு தன்னால் தொந்தரவு இருக்க கூடாது என்று வேலையை விட்டு செல்ல முயற்சிக்க, கணவன் முத்துராமன் தடுத்து வேலையில் தொடர்ந்து இருக்க வைத்து விடுவார். கணவனின் இந்த முடிவை எதிர்பாராத சுஜாதா தத்தளிக்க, என்னாச்சு என்று முத்துராமன் கேட்பார். அதற்கு சுஜாதா சொல்வார். "தூசி எவ்வளவு துடைச்சாலும் போக மாட்டேங்குதுங்க"
படத்தின் ஆரம்ப காட்சிகளை விட, சுஜாதா பிரச்னையில் சிக்கி கொண்ட பின் தான் சுவாரஸ்யம் வந்து அவரோடு நம்மையும் சேர்த்து மிரள வைக்கிறது.

சில படங்களின் பாடல்கள் கேட்கும் போதோ காட்சிகள் பார்க்கும் போதோ படம் பார்க்கும் ஆர்வம் வரும். அந்த ஆர்வத்துக்கு தீனி போட முடியாத படி சில படங்கள் ஏமாற்றத்தை தந்து விடுவதுண்டு. ஆனால் இந்த படம் நாம் எதிர்பார்த்ததை விட ஆச்சரியமளிக்கும் ஒன்றாகவே அமைந்திருக்கிறது.
 படம் : மயங்குகிறாள் ஒரு மாது.
படத்தில் வரும் இன்னொரு இனிமையான பாடல்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்....
இசை விஜய பாஸ்கர்
இயக்கம் எஸ்.பி.முத்துராமன்.
படம் வெளியான ஆண்டு 1975


ஆர்.வி.சரவணன் 


4 கருத்துகள்:

  1. சுஜாதா இயற்கையான நடிப்பாலும், மென்மையான முகபாவங்களாலும் என்னை ஈர்த்த அழகான நடிகை. தமிழிலும் தெலுங்கிலும் அவரது ஏராளமான படங்களைப் பார்த்திருக்கிறேன். கே பாலச்சந்தரின் கண்டுபிடிப்பாயிற்றே!

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  2. இந்தப் படத்தை நான் தஞ்சை வீட்டு வசதி வாரியாக குடியிருப்பில் 16 ம் எம் படமாகப் பார்த்திருக்கிறேன். மாதம் ஓரிரு படங்கள் போடுவார்கள். இதில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல்கள் எல்லாமே எனக்கும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல படம் சார். பார்த்ததுண்டு டிவியில் முன்பு. உங்கள் ரசனையும், விமர்சனமும் நல்லாருக்கு சார்..

    பதிலளிநீக்கு
  4. கல்லூரிக்காலத்தில் (பி.யூ.சி.) படித்தபோது பார்த்த படம். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்