பண்டிகை கால பயணம் ஒன்று
இந்த தீபாவளி பொங்கல் னு பண்டிகை நாள் வந்துட்டாலோ இல்லன்னா சேர்ந்தார் போல் ரெண்டு மூணு நாள் லீவு வந்துட்டாலோ டிக்கெட் புக் பண்ண முடியாம ஊருக்கு போறவங்க லோ லோ னு தான் அலைய வேண்டியிருக்கும். (எதுக்கு ரெண்டு லோ ? ஒண்ணு ஊருக்கு போறதுக்கு இன்னொண்ணு திரும்பி வரதுக்கு). அப்படி திண்டாட்டமாகி எப்படிடா ஊர் போய் சேர்வோம்னு முதுகுல மாட்டின லக்கேஜோட டென்சனையும் இலவச இணைப்பா
சுமந்துகிட்டு கிளம்பின ஒரு பயணியோட அனுபவம் தான் இது. அது யாரதுனு நீங்க யோசிக்க ஆரம்பிக்கிறதுக்குள்ளே அந்த பயணியே நான் தான் னு
(அந்த குழந்தையே நீங்க தான் மொமென்ட்ல ) சொல்லிகிட்டு பயணத்தை ஆரம்பிக்கிறேன்.
சென்ற மாதம் பொங்கலுக்கு கும்பகோணம் போக பேருந்து ரயில் இது எதுலயும் இடமில்லைனு தெரிஞ்சவுடனே (வடிவேலு போல்) ஆரம்பத்திலேயே ஆரம்பிச்சுட்டாய்ங்களா என்று முனகிய படி தான் கிளம்பினேன். பஸ் ரயில் (பிளைட் இன்னும் விடலே) இது ரெண்டுல எதுல போகலாம்னு மனசு டாஸ் போட்டு பார்த்துச்சு . ரயிலில் அன் ரிசர்வ் ல நின்னுகிட்டு தான் போகணும். அதுக்கு பதிலா பஸ் போனா உட்கார சீட்டாவது கிடைக்கும் அதனாலே பஸ்ல போயிடலாமே னு முடிவெடுத்தேன்.
வெள்ளி அன்று பொங்கல். வியாழன் மாலை அலுவலகத்தில் எக்கச்சக்க ஆணிகள் . ஆணிய புடுங்கிட்டு கிளம்பறப்ப மணி 8.00. பாரிஸில் இருந்து கோயம்பேடு போன பேருந்தில் நான் தொத்தி கொண்டு ஏறி சீட் தேடிய போது மக்கள் நாங்க கோயம்பேடு வரை ரிசர்வ் செய்திருக்கோமாக்கும் என்பது போல் உட்கார்ந்திருந்தாங்க. நின்ற படியே கோயம்பேடு வந்ததில் வலி தெரியல. ஆனால் ஊருக்கு போற பஸ்ல உட்கார வழி (இடம்) கிடைச்சா சரினு நினைச்சிட்டு கோயம்பேட்
எங்கு திரும்பினாலும் மக்கள் மூட்டை மூட்டையாக லக்கேஜுடன் சென்று கொண்டிருந்தார்கள். பொங்கல் பொங்கி முடிக்கிறதுக்குள்ளே வீடு போய் சேர்ந்தாகணும்னு அவங்க கிட்டே இருந்த பரபரப்பு ஜுரம் என்னையும் தொத்திகிச்சு. உள்ளே நுழையரப்ப ரிசர்வேசன் கவுன்ட்டர் காலியா இருந்துச்சு. வேகமாய் போய் கேட்ட போது , "கும்பகோணத்துக்கு இப்ப ரிசர்வேசன் பஸ் எதுவும் இல்ல. எல்லாம் புல். நாளைக்கு காலையில தான் இருக்கு" னு சொன்னவர் என் அதிர்ச்சிய பார்த்துட்டு, "அன் ரிசர்வ்டு பஸ்கள் நிறைய விட்டிருக்காங்க. 8 ம் நம்பர் பிளாட்பாரம் போங்க" என்றார்
சினிமால காமிக்கிற மாதிரி இங்க கட் பண்ணா அந்த 8 ம் நம்பர் பிளாட்பார்ம்ல இருக்கணும்னு தான் ஆசைப்பட்டேன். நிஜத்தில் அது முடியாதே. அதை தேடி புறப்பட்டவன் வழியெங்கும் மக்கள் கடலில் நீந்தி போக வேண்டியிருந்துச்சு.
8 ம் நம்பர் பிளாட்பாரம் எங்க இருக்கு என்று யாரிடமும் கேட்பதற்கு அவசியமே இல்லாம ஆங்காங்கே போர்டுகள் வைத்திருந்தார்கள்.
பரவாயில்லியேனு நினைச்சிட்டே அங்க போய் சேர்ந்தேன்.
மேஜை போட்டு அமர்ந்திருந்த போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டப்ப
"பஸ் நிறைய இருக்கு சார். டிராபிக் ல ப்ளாக் ஆகி நிக்குது வரும்" என்றார்கள்
அடுத்து நான் கேட்ட கேள்வி அவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கும், "பஸ் இடது பக்கமா வருமா, இல்ல வலது பக்கமா வருமா" அப்படி நான் கேட்டவுடன் எப்படி வந்தா என்னய்யா. பஸ் வந்தா போதாதா அப்படிங்கிற முகபாவத்துடன் என்னை பார்த்து "வலது பக்கம்" என்றார்கள். நடக்க ஆரம்பிச்சேன்.
கூட்டம் அதிகமா இருந்தா, பஸ் பேருந்து நிலையத்தில் உள்ளே
நுழையுறப்பவே பயணிகள் அங்க நின்னு தடாலடியாக ஏறி சீட் போட்டு விடுவார்கள். நானும் அப்படி ஏறி விடலாம்னு நடக்க ஆரம்பிச்சேன்.
இருபது பஸ் வரைக்கும் தாண்டி போயிருப்பேன். கும்பகோணம் செல்லும் பஸ் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் தென்படல. ஆனால் பக்கத்து பிளாட்பாரத்தில் மட்டும் திருச்சி செல்லும் பஸ்களாக நிறைய வந்துட்டிருந்துச்சு. எதிர் இலையில் பரிமாறப்படும் பாயாசம் நம்ம இலைக்கு எப்ப வரும்னு காத்திருக்கிற மாதிரி பார்க்க ஆரம்பிச்சேன். அப்ப தான் ஒரு பஸ் நான் போயிட்டிருந்த பிளாட்பாரம்ல வந்துட்டிருந்துச்சு.
சர்க்கரையை மொய்த்து கொண்ட எறும்புகள் போல் சில பேர் அந்த பஸ்ஸை தொடர்ந்து வந்துட்டிருந்தாங்க. கண்டக்டர்
நானும் அந்த ஜோதியில் அவர்களுடன் ஐக்கியமாகி கொண்டேன். நாங்கள் ஒரு கட்டத்துல சலிப்பாகி சார் எந்த ஊர் போகுதுன்னு சொன்னீங்கன்னா நாங்க வேற பஸ்சை பார்க்க போயிடுவோமில்ல னு கேட்டப்ப தான் அவர் "இது கரூர் போகுது தம்பி" என்றார். அடுத்த செகண்ட் அத்தனை பேரும் அடுத்த வண்டி தேடி ஓட ஆரம்பிச்சோம்.
கொஞ்சம் தள்ளி கும்பகோணம் பெயர் பலகையோட ஒரு பஸ் நிக்கிறது என் கண்ணுக்கு தெரிய வந்துச்சு. ஒரு நிமிஷம் ஓட்ட பந்தய வீரனாய் மாறி, மூச்சிரைக்க பஸ்சின் பக்கம் போனப்ப தான் அதுவும் ரிசர்வேசன் பஸ்னு தெரிஞ்சுச்சு.
போக்குவரத்து அதிகாரிகள் நின்னுட்டிருந்த பழைய இடத்துக்கு நான் வந்து நின்னப்ப தான் வாழ்க்கை ஒரு வட்டம்டா என்பது புரிஞ்சுது. அப்ப தான் அந்த இடத்துல தஞ்சாவூர் போர்டுடன் பஸ் ஒண்ணு நின்னுகிட்டு இருக்கிறதை பார்த்தேன். ஆகா இது கும்பகோணம் வழி தானேனு பஸ்சுக்குள் தாவி ஏறினேன். கடலை விற்பவர் உட்கார்ந்திருக்கிற ஒவ்வௌருத்தரையும்
கேட் டுட்டே எனக்கு முன்னாடி போய்கிட்டு இருந்தார். நான் அவர் பின்னாடியே காலியாக இருக்குற சீட் பக்கத்துல உட்கார்ந்திருக்கிறவங்க கிட்டே சீட் கேட்டுகிட்டே நானும் போயிட்டிருந்தேன். பஸ்ல கடைசி சீட்டுக்கு முன்னதாக ஒரு சீட் காலியாக இருந்துச்சு. அப்பாடா என்று அருகில் சென்று என் பேகை வச்சிட்டு பாக்குறேன். அந்த சீட் பஸ்ஸோட பின் சக்கரத்திற்கு மேலே உள்ள சீட். ஒரு மேடை மேல உட்கார்ந்திருக்கிற மாதிரியே
இருக்கும். அதில ஒரு பிரச்னை என்னன்னா கால்களை கீழே நீட்டி உட்கார முடியாது. ஏழு மணி நேரம் உட்கார்றது கஷ்டம் தான். இருந்தும் பசிக்கு புளி சாதம் கிடைக்கும் போது அத விட்டுட்டு பிரியாணிக்கு ஆசைபட கூடாது னு பட்டுன்னு உட்கார்ந்துட்டேன். இன்னும் சில பேர் ஏறி சீட் தேட ஆரம்பிச்சாங்க. இல்லேன்னவுடன் அவங்க அலட்டிக்கல. தரையில் உட்கார்ந்துகிட்டாங்க.
கண்டக்டர் வண்டியில் ஏறி "பஸ் கும்பகோணம் அதை விட்டால் தஞ்சாவூர் இங்க தான் நிக்கும். வேற எங்கேயும் நிக்காது. எல்லாரும் 225 ரூபாய் எடுத்து வச்சிக்குங்க" என்றார் கறாராக. சிக்னல்ல கூட நிக்காதா சார், பயண வழி உணவகத்தில் கூட நிற்காதா சார் னு என் மைண்ட் வாய்ஸ் கேட்டுச்சு. (அது அவருக்கு கேட்காதுன்னு தெரிஞ்சும்) பஸ் கிளம்ப ஆரம்பிச்சப்ப தான் . பஸ்ஸை பிடிக்கிற டென்சனில் சாப்பிடாம ஏறினது மட்டுமில்லாம ஒரு தண்ணீர் பாட்டில் கூட வாங்கிக்காம ஏறினது ஞாபகம் வந்துச்சு. சரி அட்ஜஸ்ட் பண்ணிப்போம்னு நினைக்கிறப்ப வண்டி டிராபிக்கில் நகர ஆரம்பிச்சு வேகம் பிடிச்சது. அது வரை இருந்த புழுக்கத்தை காற்று உள்ள புகுந்து விரட்ட ஆரம்பிச்சுச்சு.
டிக்கெட் போட்டு கொண்டே வந்த கண்டக்டரிடம் ஒரு பயணி அப்போது மல்லு கட்ட ஆரம்பித்தார். "என் பையனுக்கு அரை டிக்கெட் தான்" னு இவர் சொல்ல, அவர் "அதெல்லாம் கிடையாது முழு டிக்கெட் தான். நான் தான் வண்டி எடுக்கும் போது சொன்னேன்ல. இப்ப வம்பு பண்ணா என்ன அர்த்தம்"னு குரல் எழுப்பினார். "அதெப்படி சின்ன பசங்களுக்கும் அதே டிக்கெட் வாங்கறீங்க" " என்னை எதுக்கு கேக்கறீங்க. பஸ் நின்னப்ப அதிகாரிகளை பார்த்து கேட்க வேண்டியது தானே " னு சொல்லிட்டு முழு டிக்கெட் கொடுத்த படி நகர்ந்தார். எல்லாரும் இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க
அந்த பயணியும் அவர் குடும்பமும் கடைசி இருக்கையில் தான் அமர்ந்திருந்தார்கள்.
பஸ் கூடுவாஞ்சேரி தாண்டற வரைக்கும் செம டிராபிக். பஸ், கார், லாரினு ஒண்ணுக்கொண்ணு முந்தி போறதுக்கு ட்ரை பண்ணிட்டு இருந்துச்சு. கார்களை பார்க்கிறப்ப, நம்ம கிட்டே கார் இருந்தா கார்லேயே போயிருக்கலாமே னு என்னை உரசி பார்த்த அந்த ஆசை
தெருவோரம் ஸ்டாப்பிங்ல பஸ்சுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கிற மக்களை பார்த்தவுடன் தள்ளி போயிடுச்சு.
அப்படியே தூங்கிப் போனவன் நடுவில் கண் முழித்த போது வண்டி உளுந்தூர்பேட்டை டோல்கேட் வந்திருந்துச்சு.அதிகாலை 2.00 மணி.
அடுத்த முறை கண் முளிச்சப்ப காலை 5 மணி. வண்டி அப்ப நெய்வேலி தான் தாண்டியிருந்தது. டிரைவரும் வேகமாக தான் ஓட்டிட்டிருந்தாரு.
"இவ்வளவு நேரம் ஆகிடுச்சு. வண்டி ஏன் இப்ப தான் இங்க வந்திருக்கு" னு பக்கத்தில் இருந்தவர் கிட்டே கேட்ட போது , "வழி தெரியாம வேற இடம் போனதினால கொஞ்சம் லேட் ஆகிடுச்சு" என்றார். "ஏம்பா பக்கத்துல இருக்கிறவங்க கொஞ்சம் வழி காட்ட கூடாதா" என்றேன். "அதெப்படி அவங்களும் தூங்கிட்டு இருந்திருப்பாங்களே" அப்படின்னு இன்னொருத்தர் கவுண்டர் கொடுத்தார்.
பஸ் கும்பகோணம் பேருந்து நிலையம் வந்தப்ப மணி 7.00 எவ்வளவு வேகமாக பஸ்ல எறினமோ அதை விட இரு மடங்கு வேகத்தில எல்லாரும் இறங்கி சிதற ஆரம்பித்தோம். வீட்டுக்கு செல்ல தனியார் பேருந்தில் ஏறிய போது கூட்டம் திமிறி கொண்டிருந்தது. காலேஜ்ல படிக்கிற (இல்ல வேலையில் இருக்கிற) இளைஞர்கள் "வடசேரி போறதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்" னு கண்டக்டரிடம் கேட்டாங்க. அவர் 9.00 மணி ஆகிடும் னு சொன்னார்
"டேய் நாம பொங்கல் வைக்கிரதுக்கு போலடா. பொங்கல் சாப்பிட தான் போய்கிட்டு இருக்கோம்." னு ஒரு இளைஞர் சொல்ல இன்னொரு இளைஞர்
"வீட்ல அம்மா வேற போன் மேல போன் பண்றாங்க" என்று சொல்லி கொண்டிருந்தார்.
பேருந்து வேகமெடுத்து பஸ் ஸ்டாண்ட் காம்பௌண்டை தாண்டிய போது சென்னை பஸ்கள் நிக்கிற இடத்துலேருந்து "சென்னை சென்னை" னு குரல் கொடுத்துட்டிருந்தார் கண்டக்டர்.
"இருங்கய்யா பொங்கல் கொண்டாடிட்டு வந்துடறோம்" அந்த இளைஞர்களுடன் சேர்ந்து கொண்டு உற்சாகமாய் நானும் குரல் கொடுத்தேன்.
ஆர்.வி.சரவணன்
படம் இணையத்திலிருந்து
ரசிச்சு படிச்சேன்... இது போன்ற அனுபவம் எனக்கும் இருக்கு...
பதிலளிநீக்குநாங்களும் பண்டிகை நாட்களில்
பதிலளிநீக்குஇது போல் பட்ட அனுபவங்களை
நினைவுறுத்திப் போனது தங்கள்
அற்புதமான பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
மகாமக எழுத்து, வாசிப்பு, பயணங்களால் வலைப்பூ பதிவுகளைக் காண தாமதம், பொறுத்துக்கொள்க. வித்தியாசமான அனுபவம். நீங்கள் அடிக்கடி வந்து செல்வதால் இவை போன்ற அனுபவங்களை அதிகமே எதிர்கொண்டிருப்பீர்கள். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குபயணங்கள் முடிவதில்லை சரவணன் சார்...
பதிலளிநீக்குரன்னிங் கமெண்ட்ரி மாதிரி இருந்தது சார்!!!