ஞாயிறு, ஆகஸ்ட் 09, 2015

மக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம்




மக்கள் ஜனாதிபதி  அய்யா அப்துல் கலாம் 

எந்த ஒரு நிகழ்வுக்கும், ஒரு  நண்பர்கள் குழுவாக இருந்தாலும் சரி குடும்ப அங்கத்தினர்களாக  இருந்தாலும் சரி  ஒவ்வௌருவரும்  கண்டிப்பாக 
மாற்று கருத்துக்களை கொண்டிருப்பார்கள். அது குறித்து விவாதங்கள் கூட 
நடைபெறுவதுண்டு. ஆனால் ஏவுகணை நாயகன் மக்களின் ஜனாதிபதி 
அய்யா திரு .A.P.J.அப்துல் கலாம் அவர்களது மறைவு எல்லோரிடத்தும்  ஏற்படுத்தி சென்றிருப்பது ஒன்றே ஒன்று தான். அது வேதனை.

என் அலுவலகத்தில் உள்ள  நண்பர்கள் அனைவருமே  எந்த ஒரு நிகழ்வுக்கும் ஆளுக்கொரு கருத்தை கொண்டிருந்து,  தன் கருத்து  தான் சிறந்தது என்பதாக  விவாதத்திற்கு தயாராவார்கள். திரு .அப்துல் கலாம் மறைவு செய்தி கேட்ட நொடியில் இருந்து  நண்பர்கள் அனைவரிடமும் இருந்த ஒரே மன நிலை வேதனை தான். எப்படிப்பட்ட மனிதர் இவர். இப்படி ஒரு மனிதர் இனி கிடைப்பாரா என்ற ஆதங்கம் தான் அனைவரிடத்திலும் நிறைந்திருந்தது. எந்த விஷயமானாலும் எதிர் கருத்தோடு மல்லு கட்டும்  நண்பர் கூட  
 "இப்படிப்பட்ட நல்ல மனுஷன் அதுக்குள்ளே போகணுமா. கடவுள் நல்லவங்களை நம்மோடு இருக்க விடறதில்லை. வேற என்னத்தை சொல்றது" என்றார் கவலை தோய்ந்த முகத்துடன். 


எங்களின் (அலுவலக நண்பர்களின்) இத்தகைய மன நிலை அந்த இறப்பின் நொடி தெரிந்து சில மணி நேரத்தில் அடுத்த நிகழ்வை நோக்கி பயணிக்கவில்லை. மாறாக அன்றாட அலுவல்களுக்கு இடையே நாங்கள் ஒவ்வொருவரும் பத்திரிகைகள் , வாட்ஸ் அப், முக நூல் இவற்றில் அவர் பற்றி தொடர்ந்து வந்து கொண்டிருந்த  தகவல்கள் படங்கள் போன்றவற்றை மற்றவருடன் தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருந்தோம். ஒவ்வொரு முறை அவரை பற்றி பேசி முடிக்கும் போதும்  அருமையான மனிதர் இவர்  என்ற வரிகளும் சேர்ந்து கொண்டது.

அவரது இறுதி பயணம் ஷில்லாங்கில் இருந்து கிளம்பி டில்லி வந்து அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின் மதுரை வந்து மண்டபம் சென்று ராமேஸ்வரத்தில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது  வரை அனைத்தையும் தொடர்ந்து ஊடகங்களில் கவனித்து கொண்டிருந்தோம்.  நாம ராமேஸ்வரம் கிளம்பி சென்று  அஞ்சலி செலுத்தி இருக்கலாம் என்று கூட ஒரு நண்பர் ஆதங்கப்பட்டார். விரைவில் அங்கு சென்று அஞ்சலி செலுத்தி வர திட்டமிடல் ஆரம்பித்து விட்டது.





அலுவலகத்தில் இப்படி என்றால் வெளியில் நான் கண்ட மக்களின் மன நிலைக்கு ஒரு சின்ன உதாரணம் இங்கே தருகிறேன் (முகநூலில் சொல்லியிருந்தது) 

இரவு வீட்டுக்கு செல்ல சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த போது ஏவுகணை நாயகன் 
திரு. அப்துல்கலாம் அவர்களின் படம் மாலை அணிவித்து மலரஞ்சலி செய்து வைக்கப்பட்டிருத்தது. கூடவே மெழுகுவரத்திகளும் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன.
பயணிகள் பலரும் அந்த பயண அவசரத்திலும் நின்று வணங்கிய படி சென்று கொண்டிருந்தார்கள். சிலர் மலர்களை தூவினார்கள். சிலர் செல் போன் கொண்டு க்ளிக்கினார்கள். எத்தனை பேரின் நெஞ்சங்களில் அவர் நிறைந்திருக்கிறார் பாருங்கள் என்று பெருமையாய் சிலர் சொல்லி கொண்டிருக்க, நகர மனமில்லாமல் அங்கேயே சிலர் நின்றிருந்தார்கள்.அவர்களில் நானும் ஒருவனாய் நின்று கொண்டிருந்தேன்.


 எனது  வீட்டில் கூட அவரது வாழ்க்கை, அவர் செய்த சாதனைகள்,   பற்றி தொடர்ந்து ஒரு மணி நேரம் வரை  பேசி கொண்டிருந்தோம். எங்கள் மகன் ஹர்ஷவர்தன் அவனது  பள்ளியில்  3 வது படிக்கும் போது சுதந்திர தினவிழாவில் அவர் போல் வேடமிட்டு அவரது பொன்மொழிகளை பேச வைத்து மகிழ்ந்த்து  ஒரு மன நிறைவை எங்களுக்கு தந்திருக்கிறது. 



நீங்கள் சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்.
* கடின உழைப்பு, நேர்மைக்கு மாற்று எதுவும் இல்லை; நிச்சயமாக எதுவும் இல்லை.
* கரைகளைக் கடக்கும் துணிவிருந்தால்தான் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும்.
* அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள். அதுதான் உண்மையான தலைமைப் பண்பு.
* ஒரு தேசம் ஊழலில்லாமலும், அறிவாளிகளின் தேசமாகவும் இருக்க மூன்று பேரால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தந்தை, தாய், ஆசிரியர்தான் அந்த மூன்று பேர்.
* எல்லாப் பறவைகளும் மழைக் காலங்களில் கூடுகளில் அடையும். ஆனால் கழுகு, மழையைத் தவிர்க்க மேகத்துக்கு மேலாகப் பறக்கும்.
* அறிவுதான் உங்களை சிறந்தவர்களாகவும், பலமுள்ளவர்களாகவும் மாற்றுகிறது.
* தேசம் என்பது எந்தவொரு தனிமனிதனுக்கும், நிறுவனத்துக்கும், கட்சிக்கும் அப்பாற்பட்டது.
* உங்களுக்கு சிறகுகள் உள்ளன. தவழ்ந்து செல்லாதீர்கள். அதைக் கொண்டு, மேலே மேலே 
  பறந்து செல்லுங்கள்.
* தோல்விகளை எதிர்கொள்ள  கற்றுக் கொள்ளுங்கள். அதுதான் வெற்றிக்கான மிக 
  முக்கியமான திறமை.
* உங்களிடம் கேளுங்கள். நீங்கள் எதற்காக நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள்? 
* மிக உயர்ந்த லட்சியம், மனிதர்களுக்கான எல்லை என்ற சுவர்களைத் தகர்க்கிறது.
* கடவுள் நம்முடன் இருந்தால், நமக்கு எதிராக யார் இருக்க முடியும்?
* நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு.
* வானத்தைப் பாருங்கள். நாம் தனித்து இல்லை. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது. கனவு காண்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது.
* கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள். கனவுதான் சிந்தனையாகவும், சிந்தனைதான் செயலாகவும் மாறுகிறது.
* வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு வழி. அடுத்தவர்களின் வெற்றியை உங்களுடைய வெற்றியைப் போலக் கொண்டாட கற்றுக் கொள்ளுங்கள்.
* அறிவியலுக்கு பயம் தெரியாது. வித்தியாசமாக சிந்திக்க உங்களுக்கு துணிவிருந்தால், அறியப்படாத விஷயங்களுக்கு சவால் விடும் ஆற்றலும் உங்களுக்கு இருக்கிறது.
* முடியாத விஷயங்கள் குறித்து கனவு காண்பவர்களே  அவற்றை வெற்றி கொள்ள முடியும்.




இந்திய மக்களின் இதய சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கும், அவரின் பொன்மொழிகள் சிலவற்றை படிக்கையில் உவகை மேலிடுகிறது. அவரது மறைவு நம்மிடையே ஏற்படுத்தியிருக்கும் அதிர்வலைகள் அடங்க வெகு நாட்களாகும் .இனி இப்படி ஒருவர் நமக்கு  கிடைக்க போவதில்லை  என்ற ஏக்கமும் நம்மிடையே தொடர்ந்து கொண்டிருக்கும்.  கூடவே அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம்  என்ற மன நிறைவையும் கொண்டிருக்கிறோம்.

ஆனால் இது மட்டும் போதாது. அவர் கொண்டிருந்த நற்பண்புகளில் ஒன்றையேனும் கடைபிடிக்க நாம்  முயற்சிக்க வேண்டும் . இதெல்லாம்  முடியுமா நடக்கிற காரியமா என்பதற்கு அவர் வாழ்க்கையே அதற்கான பதிலை தந்திருக்கிறது.



ஆம். சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் தன்  அயராத உழைப்பின் 
மூலம் சிகரங்களை தொட்டு இந்தியாவின் முதல் குடி மகனாக உயர்ந்திருக்கிறார் என்பதே  முயற்சித்தால் முடியாதது 
ஒன்றும் இல்லை என்பதை நமக்கு சொல்கிறதே 




அவர் நற்பண்புகளில் ஏதேனும் 
ஒன்றை  தொடர முயற்சிப்போம்.
இதுவே நாம் அவருக்கு  செலுத்தும் உண்மையான அஞ்சலி.
அவர் நம்மிடம் எதிர்பார்ப்பதும்  
அதை  தான். அது ஒன்றே அவர் 
கண்ட கனவை நனவாக்கும்


ஆர்.வி.சரவணன் 

10 கருத்துகள்:

  1. உண்மைதான் நண்பரே
    அவரது நற் பண்புகளில் ஏதேனும் ஒன்றைத்
    தொடர முயற்சிப்போம்

    பதிலளிநீக்கு
  2. விவேகானந்தரைப் படித்திருக்கிறோம். காந்தியைப் படித்திருக்கிறோம். காமராஜரைப் பார்த்திருக்கிறோம். இவர்கள் அனைவரையும் ஒருசேர நாம் வாழும் காலத்தில் இவரிடம் பார்த்துவிட்டோம். உண்மையில் நாம் கொடுத்து வைத்தவர்களே. நல்ல அஞ்சலி. நன்றி.
    நச்சென்று நான்கு செய்திகள். பதிவுகள். நன்றி.
    தமிழ் விக்கிபீடியாவில் எழுதுவது தொடர்பான எனது பதிவை
    http://drbjambulingam.blogspot.com/2015/08/blog-post_8.html என்ற இணைப்பில் காண அழைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. உற்சாகமூட்டக்கூடிய அவரது பொன்மொழிகளோடு ஐயா அப்துல் கலாம் அவர்களுக்கான அஞ்சலி!
    .

    பதிலளிநீக்கு
  4. அப்துல் கலாம் ஐயா பற்றி அருமையாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்.
    அருமை அண்ணா.

    பதிலளிநீக்கு
  5. மகத்தான மனிதர். இனி அவர் போல் ஒருவர் என்று வருவார் நம் நாட்டில்?

    பதிலளிநீக்கு
  6. அருமை. அவரது நற்பண்புகளில் ஒன்றையாவது கடைபிடித்து அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.

    பதிலளிநீக்கு
  7. நல்லதொரு ஆசானை ஆழி சூழ் உலகம் இழந்துவிட்டது!

    பதிலளிநீக்கு
  8. அருமையான ஒரு பதிவு குடந்தையார் சார். அவரது கனவை நனவாக்க நம்மால் சிறிதேனும் இயன்ற அளவு முயன்றால் அதுவே நாம் அவருக்குச் செய்யும் மரியாதை. இது போல் ஒரு மாமனிதரை நாம் நம் நாட்டில் பெறுவோமா என்பது ஐயமே...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்