ஞாயிறு, ஜூலை 26, 2015

என் அன்பு தாத்தா




என் அன்பு தாத்தா

என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் 
என்று நீண்ட நாளாக நினைத்திருந்தேன். அதற்கான வாய்ப்பு
எழுதுகிறேன் ஒரு கடிதம் என்ற முக நூல் கடித போட்டி முலம் உருவானது.(குழுவினருக்கு என் நன்றி) அதில் வெற்றி பெறவில்லை என்றாலும் அவரது நினைவலைகளை நான் பகிர்ந்து கொண்டதில் ஒரு மகிழ்ச்சி கலந் திருப்தி கிடைத்தது எனக்கு. அந்த மடல் இங்கே தங்கள் பார்வைக்கு.

என் அன்பு தாத்தாவுக்கு
உங்கள் பேரன் சரவணன் எழுதும் மடல்.

எப்படி இருக்கிறீர்கள் தாத்தா. வேட்டியை இடது கையால் பிடித்து கொண்டு வலது கையில் குடை பிடித்த படி தெருவில் நீங்கள் நடந்து வரும் தோற்றம் என் கண்ணுக்குள்ளேயே இன்று வரை நிற்கிறது. நான் பிறந்து ஒரு வருடத்திலேயே உங்களிடமும் பாட்டியிடமும் வந்து விட்டதாய் அம்மா சொல்வார்கள். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து உங்களை சூரியனாக்கி பூமி போல் சுற்றி வந்திருக்கிறேன்.தங்களின் சாய்வு நாற்காலியில் படுத்த படி நீங்கள் சொல்லும் கதைகளை  கேட்ட படி விண்மீன்களை எண்ணியிருக்கிறேன். தோளில் சுமந்து வளர்த்தார்கள் என்ற வரிகளை படித்ததுண்டு. கேட்டதுண்டு. நேரில் அனுபவித்தது உங்களிடம் தானே

ஆம் என் அப்போதைய வயது நினைவில் இல்லை. எந்த கோவிலில் என்ற நினைவு கூட இல்லை. ஆனால் உங்களது தோளின் இரு புறமும் கால்களை போட்ட படி அமர்ந்து சுவாமி சன்னிதானம் செல்ல வரிசையில் காத்திருந்தது நினைவுக்கு வருகிறது. கூட்டத்தின் இடிபாடுகளில் நான் சிக்கி விடாமல் பாதுகாத்து என் உடல் சுமையை நீங்கள் சுமந்த படி வரிசையில் நெடுந்தூரம் நடந்து வந்தது மட்டும் இன்றளவும் என் நினைவில் இருக்கிறது

தினமும் இரவு வீட்டில் உள்ளோர் என்னை அதட்டி தூங்க வைத்தாலும் தூங்காமல் உங்களுக்காக விழித்திருப்பேன் நான். வயிற்றில் அறுவை சிகிச்சை ஆனதால் நீங்கள் தினமும் பால் சோறு தான் உண்ண வேண்டும் என்பதால் உங்கள் இரவு சாப்பாட்டில் கட்டாயம் பால் சோறு உண்டு. சாப்பிட்டு முடிக்க போகும் வேளையில் எனக்காக சில கவளம் வைத்து விட்டு எனை அழைத்த படி எழுந்திருப்பீர்கள். நானும் கட்டவிழ்த்த கன்று தாயை தேடி செல்வதை போல் உங்கள் சாப்பாட்டு தட்டை நோக்கி ஓடி வருவேன். அந்த கவளத்தை சாப்பிட்டு எழுவதற்குள் இதெல்லாம் பழக்கபடுத்த கூடாது என்று எல்லோரும் உங்களிடம் முறையிடுவார்கள். சின்ன பிள்ளை தானே என்ற ஒரு வார்த்தையில் அந்த முறையீட்டை புறம் தள்ளி தினமும் பால் சோறு எனக்காக வைத்து விட்டே எழுவீர்கள். அந்த பால் சாதத்தில், எனக்கான முழு அன்பை நீங்கள் வீட்டார் அறியாமல் ஒளித்து வைத்திருந்ததை பின்னாளில் தான் அறிந்து கொண்டேன்.

கடவுள் உங்களையும் என்னையும் படைத்தவராக இருந்தாலும் அவரை அறிமுகம் செய்தது நீங்கள் தானே. தினமும் காலை பூஜையில் தங்களின் பக்தி சுலோகங்களை கேட்டு தானே என் பொழுது விடிந்திருக்கிறது 
தகாத வார்த்தைகளை ஒரு முறை நான் பேசி விட்ட போது  உடனே 
சாமி படத்தின் அருகில் நின்று சொன்னது தப்பு என்று தோப்புகரணம் போட சொன்னீர்கள். நினைவிருக்கிறதா ?

முதன் முதலில் எட்டாவது படிக்கும் போது சிறுகதை என்று இரு பக்கம் வரும் அளவு நான் எழுதியதை படித்து தங்களின் அலுவலகத்தில் பெருமையுடன் என் பேரன் எழுதியது என்று பெருமைபட்டு கொண்டீர்கள். இதை குமுதத்துக்கு அனுப்புகிறேன் என்று நீங்கள் சொல்லி விட்டு உங்கள் வேலைகளில் மறந்து விட, நான் கோபம் கொண்டு நீங்கள் ஒண்ணும் அனுப்பவே வேண்டாம் என்று கதை பேப்பரை கிழித்து விட்டேன். நீங்கள் பதறாமல் என்னை அடிக்காமல் மீண்டும் எழுது இன்னும் நன்றாக மெருகேறி வரும் என்று தோள் தட்டி சமாதானம் செய்ததில், இன்னொரு காப்பி வைத்துள்ளேனே என்று சிரித்த படி உங்களிடம் கொடுத்தேன். ராஸ்கல் என்று கோபம் கொள்ளாமல் என் குறும்பை ரசித்தவர் அல்லவா நீங்கள். அப்போது மன்னிப்பு கேட்க தெரியவில்லை. இப்போது கேட்டு விடுகிறேன். எப்ப பண்ண சிறு தவறுக்கு எப்போது கேட்கிறான் பாரேன் என்று நீங்கள் இதை படிக்கும் போது பக்கத்தில் உள்ளவர்களிடம் சொல்லி சிரிப்பீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது.

நீங்கள் நோய் வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் போது நான் இறப்பதற்குள் என் பேரன்களை பார்த்து விட வேண்டும் அழைத்து வா என்று வற்புறுத்த என்னையும் தம்பியையும் சித்தி அழைத்து சென்றார்கள். இறப்பின் வலி தெரியாதவன் நான். இழப்பின் அருமையும் அறியாதவன் நான். மருத்துவமனை கட்டிலில் இருந்த நீங்கள் என்னை வாஞ்சையுடன் கன்னம் தட்டிய போது எப்போது எழுந்து நடமாடுவீர்கள் என்று ஆசையாய் கேட்டேன். சீக்கிரமே என்று மாமா சொன்னார்கள். தெருவில் ராஜா போல் நடந்து வருவீர்கள் என்று காத்திருந்த எனக்கு நீங்கள் ஆம்புலன்ஸில் வந்து இறங்கிய போது தான் உரைத்தது. உங்களை இழந்ததன் வலி என்னை பின் வந்த நாட்களில் உருக்குலைத்தது.

காலம் முழுதும் பூஜை கோவில் என்றிருந்த உங்களை, இறைவன் 
தன் பக்கத்தில் அழைத்து அமர வைத்து கொண்டிருக்கிறான். உங்களிடம் நிறைய பேச வேண்டும். என் தோல்விகளை வெற்றிகளை என் கஷ்டங்களை சந்தோசங்களை பேசிய படி முடிவே இல்லாத ஒரு சாலையில் உங்கள் கை பிடித்த படி நடக்க வேண்டும். அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் நீங்கள் தாத்தாவாகவும் நான் பேரனாகவும் மீண்டும் பிறந்து பேசாத பேச்செல்லாம் பேசி விட ஆசை.காட்டாத அன்பெல்லாம் காட்டி விட ஆசை 
வாழ்ந்து பார்க்கலாம் வருகிறீர்களா ?

என் அன்பு முத்துகிருஷ்ணன் தாத்தா.
அன்புடன் உங்கள் பேரன்


ஆர்.வி.சரவணன் 

13 கருத்துகள்:

  1. தாத்தாவுக்கு பேரனின் பாசம் பொங்கும் கடிதம் . நெகிழ வைத்தது.

    பதிலளிநீக்கு
  2. நெகிழ வைத்த கடிதம்! பொதுவாகவே தாத்தாக்களிடம் பேரன்களுக்கும் பேரன்களிடம் தாத்தாக்களுக்கும் ஓர் பிணைப்பு இருக்கும். அந்த பிணைப்பை உங்கள் எழுத்துக்களில் காட்டிய விதம் சிறப்பு! நன்றீ!

    பதிலளிநீக்கு
  3. சார் மனதை அப்படியே நொறுக்கிவிட்டது கண்களில் நீர் என்னை அறியாமல் வந்ததைத் தடுக்க முடியவில்லை...நானும் எனது தாத்தா பாட்டியிடம் தான் சிறு வயதில் வளர்ந்தேன் அந்த நினைவுகளை நான் இதே போன்று பாதி எழுதி வைத்துள்ளேன் பதிவாகப் போட.....தாத்தா மட்டுமல்லாமல் அதில் எனது அத்தைகளும் வருவார்கள். தாத்தா பாட்டிம் 2 அத்தைகள் இவர்கள் தான் என்னை வளர்த்தவர்கள்...

    அருமையான படைப்பு சார்...!!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. பிரமாதம். கொடுத்து வைத்தவர் நீங்கள். தாத்தா இருந்தும் அவர் அன்பை அனுபவிக்காதவர்கள் நாங்கள்.

    பதிலளிநீக்கு
  5. மனதை கலங்க வைத்தது... தாத்தாவின் அன்பை அறிய நான் கொடுத்து வைத்திருக்கவில்லை...

    பதிலளிநீக்கு
  6. உங்களது தாத்தாவிற்கு எழுதிய கடிதத்தில் காணப்படுகின்ற அன்பினை தாத்தாவைப் பெற்றிருந்த அனைவரும் உணர்ந்திருப்பர். நான் அதிகம் உணர்ந்தேன், ரசித்தேன். ஏனெனில் நான் தாத்தாவின் கண்டிப்பில் வளர்ந்தவன். பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. யாருக்குக் கிடைக்கும் இதுபோன்ற அன்பு
    கொடுத்து வைத்தவர் தாங்கள்
    வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  8. உங்கள் அன்பிற்குரிய தாத்தாவின் நற்பண்புகளை உங்கள் கடிதம் மூலம் அறிய மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  9. அருமையான கடிதம். அப்போது அவரிடம் சொல்ல முடியாததை இப்போது சொல்லியது நெகிழ்ச்சி.....

    பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
  10. //சுலோகங்களை கெட்டு தானே//

    //இப்போது கெட்டு விடுகிறேன்.//

    பிழையைத் திருத்துங்கள்!

    பதிலளிநீக்கு
  11. நெகிழ வைக்கும் கட்டுரை அண்ணா...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்