ஞாயிறு, ஜூன் 15, 2014

வெற்றி தொட்டு விடும் தூரம் தான்






வெற்றி தொட்டு விடும் தூரம் தான்


வாழ்க்கையில் கிடைக்கும் சின்ன சின்ன வெற்றிகள், எப்போது நினைத்து பார்த்தாலும் இனிமையான ஒன்று.அதிலும் ரொம்ப கஷ்டப்பட்டு கிடைச்ச வெற்றின்னா அது இன்னும் ஸ்பெஷல் ஆச்சே.வாங்க அப்படி கஷ்டப்பட்டு எனக்கு கிடைத்த சின்ன வெற்றியை பற்றி பார்ப்போம் 

1991 ஆம் வருடம் நான் ஒரு கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி யில் சூப்பர் வைசரா 
நாகப்பட்டினத்தில் வேலை பார்த்துட்டு இருந்தேன். அதாவது  பில்டிங் வேலை நடக்கும் இடங்களில் ஊழியர்கள் சம்பளம். பொருட்கள் பாதுகாப்பு, கணக்கு வழக்கு அது இது எல்லாமே நம்ம தலையில தான்.( உதரனத்திற்க்கு புடிங்கி போட்ட ஆணி காணாமல் போனால் கூட இவன் வித்து சாப்பிட்டு இருப்பானோ னு நினைக்கிற அளவுக்கு ரிஸ்க் உள்ள ஜாப் இது. இதை பற்றி நான் காமெடி யாக இப்படி சொல்வதுண்டு " தினம் தினம் நம்மை நேர்மையானவன் னு சீதை போல நிரூபிக்க வேண்டியிருக்கு) அதுல பாருங்க கம்பெனி முதலாளி தன்னோட உறவினர்களை நம்பினால் வேலை சரியாக நடப்பதில்லை என்று அவர்களுக்கு பதிலாக என்னை நியமித்தார். அதனால் அவரது வீட்டில் என்னை யாரும் மதிப்பதில்லை. மேலும் 
நான் எப்போது தப்பு செய்வேன் என்ற எண்ணத்திலும்  இருந்தார்கள் போலிருக்கிறது. இதை அறியாமல் நான் அந்நியன் அம்பி போல் எல்லோருடனும் நல்ல விதமாக பழகி கொண்டிருந்தேன். 

இப்படி செல்கையில் பில்டிங் வேலை நடைபெறும் இடத்தில் தண்ணீர் இறைக்கும்  மோட்டார் பழுதானதால் (முதலாளியின்  உறவினர் வீடு புதுகோட்டையில் இருந்தது.) என்னை உறவினர் வீட்டில் இருக்கும் மோட்டரை எடுத்து வர சொல்லி முதலாளி அனுப்பினார். அங்கு எனக்கு வரவேற்பே சரியில்லை. மோட்டரை எடுத்து கொடுக்கும் போது கூட பத்திரமாய் கொண்டு போய் சேர் என்ற வெறுப்பான குரலில் தான் கொடுத்தார்கள்.இது எனக்கு வருத்தம் தான் எனினும் ,நாம் வேலைக்காரன்  மரியாதை எல்லாம் எதிர்பார்ப்பது கூடாது என்று சமாதான படுத்தி கொண்டு மோட்டருடன் புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் வந்து விட்டேன். 

சரியான வெயில். தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் நாகப்பட்டினம் செல்லும் பேருந்தில் ஏறி டிரைவர் சீட்டுக்கு எதிரில் இருக்கும் சீட்டுக்கு கீழே மோட்டரை வைத்து விட்டு உட்கார இடம் போட்டு விட்டு கீழே நின்று பேசி கொண்டிருந்த டிரைவரிடம் "தாகமாக இருக்கு சர்பத் சாப்பிட்டு விட்டு வந்து விடுகிறேன்" என்றேன். டிரைவரும் சரிங்க என்றார். நானும் தூரமாக எல்லாம் செல்லாமல் எதிரில் இருந்த கடையில் சர்பத் வாங்கி  தண்ணீர் குடிப்பது போல் அவசரமாக குடித்து விட்டு திரும்புகிறேன். பேருந்தை காணோம்.அந்த இடத்தில் வேறொரு பேருந்து இடத்தை ஆக்ரமித்து கொள்ள வந்து கொண்டிருந்தது. 

வடிவேலு போல் பதட்டமாய் ஓடி வந்தேன். அங்கே நின்றிருந்த மற்ற ஓட்டுனர்களிடம் விசாரித்தேன் அவர்கள் "அதோ போகுது பாருங்க" என்றார்கள். வண்டி ஆறேழு வாகனங்களுக்கு முன்னால் சாலையில் வேகமாய் விரைந்து கொண்டிருந்தது. எப்படி ஓடி பிடிப்பது என்று தெரியாமல் நான் முழிக்க அங்கிருந்தவர்கள்."அடுத்த வண்டி கிளம்புது பாருங்க. அதில ஏறி போய் சேஸ் பண்ணுங்க" என்றார்கள். நான் உடனே பேருந்தில் ஏறி நடத்துனரிடம் 
விஷயத்தை பதட்டதுடன் சொல்ல டிரைவர் கிட்டே போய் சொல்லுங்க என்றார் அவர்.
கூடவே அடுத்த ஸ்டாப்பிங் க்கு டிக்கெட் கிழித்து என்னிடம் திணித்து காசை வாங்கி 
கொண்ட பின்னே டிரைவரிடம் அனுப்பினார். 

நான் டிரைவரை நோக்கி விரைந்தேன் இல்லை இல்லை தாவினேன். ஏற்கனவே நம்மை எப்ப கவிழ்க்கலாம் என்று ரெடியாக இருக்கிறார்கள் இதில் நான் மோட்டரை தொலைத்தால் என்னாகும் என் கதி. வேலை போகும்.  வீட்டில் என்னை  உண்டு இல்லை என்றாக்கி விடுவார்கள். இதெல்லாம் கூட விட்டு விடலாம்.முதலாளி என் மீது வைத்த நம்பிக்கையை விட முடியுமா. விட கூடாது கடைசி வரை போராடி பார்த்து விட வேண்டும் என்ற வேகத்துடன் நான் டிரைவர் அருகே சென்று கலங்கிய கண்களுடன் சொன்ன போது அவர் "டோன்ட் 
வொர்ரி பிடிச்சிடலாம்" என்று நம்பிக்கை தந்தவர் கூடவே, "அந்த பேருந்தில் இருந்து இறங்குபவர் யாரேனும் மொட்டரோடு இறங்கி விட்டால் ஒன்றும் செய்ய முடியாது" என்ற யதார்த்தத்தையும் சொன்னார்.அந்த பேருந்துக்கும் எங்கள் பேருந்துக்கும் இடையில் நான்கு பேருந்துகள் ஒரு லாரி இதெல்லாம் இருந்தன. நான் விட்டால் கதறி அழுது விடுவேன் போல் இருந்தது. கடவுளின் மேல் கோபம் கூட வந்தது. 

இடையில் இருந்த வண்டிகளை ஓவர் டேக் செய்து பேருந்தின் டிரைவர் வேகமெடுத்து விரைவாய் சென்றார். தஞ்சாவூரில் சாந்தபிள்ளை கேட் என்று ஓரிடம் உண்டு. அங்கு சாலை இடது புறம் திரும்பும் அந்த இடத்தில் பேருந்தின் டிரைவர் வண்டியை ஒடித்து வலது புறம் சென்று முன்னே சென்று கொண்டிருந்த பேருந்தின் குறுக்கே வண்டியை நிறுத்தி  அந்த பேருந்தின் டிரைவரிடம் வண்டியை நிறுத்து என்று சைகை காட்டினார். நான் நன்றி கூட சொல்லாமல் வேகமாய் இறங்கி சென்று அந்த பேருந்தில் ஏறினேன். முதலில் மோட்டார் வைத்த இடத்தை தான் பார்த்தேன். இருந்தது. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க டிரைவரை பார்த்தேன். டிரைவருக்கு என்னை பார்த்தவுடன் விஷயம் புரிந்து விட்டது. 

நான் உங்க கிட்டே சொல்லிட்டு தானே போனேன். இப்படி விட்டுட்டு வந்துட்டீங்களே என்று கோபமும் உடைந்து போன குரலிலும் நான் கேட்க  சுத்தமா நீங்க சொன்னதை மறந்துட்டேன் மன்னிச்சுடுங்க என்றார் அவர். என்னை அழைத்து வந்த பேருந்தின் டிரைவரிடம் இங்கிருந்த படி நன்றி சொன்னேன். இருக்கையில் அமர்ந்த பின் ஆசுவாசபடுத்தி கொண்டேன்.எனது சோர்வை கண்டு  டிரைவர் மீண்டும் சாரி என்றார் கெஞ்சும் பாவனையில் இதற்கு அப்புறம் நடந்த காமெடி
யை கேளுங்க 

பேருந்து கொரடாச்சேரி என்ற பேருந்து நிலையத்தில் நின்றது வண்டி 5 நிமிஷம் நிக்கும் டீ சாப்பிடுபவர்கள் சாப்பிடலாம் என்ற குரலுடன் நடத்துனர் இறங்க கூடவே வண்டியில் இருந்தவர்கள் இறங்கினார்கள். இறங்க போன டிரைவர் என்னை பார்த்து விட்டு "டீ சாப்பிடல" என்று கேட்டார். "பட்டது போதும்" என்றேன் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமலே அவர் சிரித்த படி "உங்க முகம் பார்க்காமல் நான் வண்டியை எடுக்க மாட்டேன் பயப்படாம வாங்க" என்றார். சரி என்று இறங்கி டீ சாப்பிட்டேன் என் டென்சனுக்கு அந்த நேரத்தில் டீ இதமாய் இருந்தது. நான் வண்டியை விட டிரைவரின் மேல் ஒரு கண் வைத்த படியே தான் டீ சாப்பிட்டேன் டிரைவர் அதை பார்த்து  "விட்டுட்டு போக மாட்டேன் சார் நம்புங்க" என்றார் கெஞ்சலாய். எனக்கே சிரிப்பு வந்து விட்டது 

நாகபட்டினத்தில் நான் இறங்க வேண்டிய ஸ்டாப்பிங் என் அலுவலகம் தண்டி தான் 
என்றாலும் டிரைவர் எனக்காக வண்டியை நிறுத்தி எனை இறக்கி விட்டு சென்றார் 


FINAL PUNCH 

1991 ஆம் வருடம் எனக்கு சம்பளம் 600 ரூபாய் அப்போதைய மோட்டாரின் விலை 10000 ரூபாய்.மோட்டார் காணாமல் போயிருந்தால் எப்படியும் 2 வருடங்கள் நான் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க வேண்டியிருந்திருக்கும். முதலாளி என்னை நம்பி தொடர்ந்து வேலைக்கு வைத்திருப்பார் என்பது நிச்சயமில்லை. முதலில் எங்கிருந்தாவது பணம் வாங்கி கொண்டு வந்து கட்டு என்று தான் சொல்லியிருப்பார் நான் எங்கே செல்வேன் பணத்துக்கு.இந்த கஷ்டங்கள் எல்லாம் நடைபெறாமல் என் முயற்சி வெற்றியை தொட காரணம் பேருந்தை விரட்டி வந்த அந்த இன்னொரு டிரைவர் தான். அவரை சரியான நேரத்திற்கு கடவுள் தான் அனுப்பியிருக்கிறார் என்று நினைக்கிறேன். இதை இப்படி கூட எடுத்து கொள்ளலாம் என்ன தான் விடாமுயற்சியோடு போராடினாலும் கடவுளின் அருட்பார்வையும் சேரும் போது தான் வெற்றியை நம்மால் தொட முடிகிறது 

ஆர்.வி.சரவணன் 

17 கருத்துகள்:

  1. பதற வைத்த சம்பவத்தையும், அந்த இன்னொரு டிரைவரையும் என்றும் மறக்க முடியாது...

    பதிலளிநீக்கு
  2. உண்மை தான் தனபாலன் சார்

    பதிலளிநீக்கு
  3. // "விட்டுட்டு போக மாட்டேன் சார் நம்புங்க"//

    ஹஹஹா.. அப்போ செம்ம டென்ஷனா இருந்திருக்கும்.. இப்போ நினைச்சா காமெடி இல்லே.. ? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எஸ். இப்ப நினைச்சால் சிரிப்பு வருது நண்பா

      நீக்கு
  4. நானும் உங்கள் பதற்றதுடனே தொடர்ந்தேன்... அவ்வளவு இயல்பாய் எழுதி இருக்கீங்க...வாழ்க்கையில் இப்படியான சம்பவங்கள் என்றுமே மறப்பதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். மறக்க முடியாத சம்பவம் இது நன்றி தங்கள் வருகைக்கு

      நீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. வாழ்வின் மறக்க இயலா சம்பவம்
    ஒரு சில நிமிடங்களில் படித்த எங்களுக்கே, திக் திக் என்றிருந்தது
    அனுபவித்த தங்களுக்கு எப்படிஇருந்திருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரெக்ட் சார் பயங்கர டென்சன் அனுபவம் இது நன்றி தங்கள் வருகைக்கு

      நீக்கு
  7. தங்கள் அனுபவம் ஒரு சினிமாக் காட்சி போல இருந்தது தாங்கள் விவரித்த விதமும் அப்படியே!

    உண்மையும், நேர்மையும், உழைப்பும், இவற்றிற்கெல்லாம் மேலாக இறைவன் மீது அளவற்ற நம்பிக்கையும் இருந்தால் வெற்றி எட்டும் தூரத்தில்தான் நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது சரி தான் சார் நன்றி

      நீக்கு
  8. மறக்க முடியாத சம்பவம் தான்.

    பதிலளிநீக்கு
  9. இதே அனுபவம் எனக்கும் ஏற்பட்டு இருக்கு. ஸ்பின்னிங் மில் உதிரி பாக பெட்டியை கோவையில் இருந்து சேலத்துக்கு எடுத்திட்டு போகனும் ஈரோடு பஸ் நிறுத்தத்தில் டீக் குடிக்க இறங்கினேன் திரும்ப பார்த்தால் பெட்டியோடு பஸ் போயிடுச்சு. இதே சம்பவம் தான் டிட்டோ....அடுத்த பஸ் டிரைவர் எனக்காக விரட்டிப் பிடித்து சேர்த்தார். பார்சல் கிடைத்தது ஆண்டு 1992. ஆனா கடவுள் பேரில் நம்பிக்கை வைக்கவில்லை டிரைவர்கள் மீது முழு நம்பிக்கை வைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அப்போது டிரைவரின் பேரில் தான் நம்பிக்கை வைத்தேன் ஏனெனில் எத்தனை பேர் அடுத்தவரின் கஷ்டத்துக்கு உதவிக்கு வருகிறார்கள் சொல்லுங்கள் என் உதவிக்கு வந்தவர் கடவுளாக தெரிந்தார்

      நீக்கு
  10. "சில நேரங்களில் பல மனிதர்கள்"
    -தலைப்பு, இக்கட்டுரைக்குப் பொருந்துமே?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்