ஒரு கதை சொல்லட்டா.
கட் அவுட் பிலிம்ஸ் என்ற பெயர் பலகை இருந்த அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த போது, "நான் கெட் அவுட் சொல்றதுக்கு முன்னாடியே வெளில போயிடு" என்ற வார்த்தைகள் அசரீரியாக ஒலித்தது கண்டு திடுக்கிட்டான் அருண். அந்த அறையில் நடு நாயகமாக பெரிய டேபிள் போட்டு அமர்ந்திருந்த தயாரிப்பாளர் செல் போனில் யாரிடமோ கத்தி கொண்டிருந்தார்.
கட் அவுட் கெட் அவுட் ரைமிங்கை ரசிக்க முடியாத படிக்கு அந்த தயாரிப்பாளர்
"யாருப்பா நீ ?" என்றார் அதட்டலாக. அவரது கம்பெனி பட போஸ்டர்களில் இருந்த அவரது ட்ரேட் மார்க் சிரித்த முகம் இப்போது சிரிப்பை துறந்திருந்தது.
"கதை சொல்ல வந்திருக்கேன் சார். பாலு அனுப்பிச்சு வச்சாரு"
" ஒரு நாளைக்கு எத்தனை பேரை தான் கதை சொல்ல அனுப்பிச்சு வைப்பான் அவன்"
அந்த தயாரிப்பாளரின் பேச்சுக்கு, ஒரு அசட்டு புன்னகையை மட்டும் வெளியிட்டான்.
எனக்கு அங்க எவ்வளவு மரியாதை இருக்கு தெரியுமா என்ற பாலுவின் காலர் தூக்கல் பேச்சு ஏனோ ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது.
"நீ என்ன பண்றே. போயிட்டு இன்னொரு நாள் வந்து பாரு" வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி சகிதம் வேட்டி விளம்பரத்திற்கு வருபவரை போல் இருந்த அந்த தயாரிப்பாளர் சிகரெட்டை ஆஸ்ட்ரேயில் அழுத்தி அணைத்தார்.
இன்னொரு நாள் என்பது எந்த தேதியில் என்பது புரியாமல் அவரை பார்த்தான்.
அவன் மன ஓட்டத்தை அறிந்து கொண்ட அவர் "அடுத்த வாரம் வாப்பா" என்றார்.
"சார். இன்னிக்கு வரதுக்கே ஆபீஸ் க்கு அரை நாள் லீவ் போட்டுட்டு வந்திருக்கேன் " தயக்கமாய் சொன்னான்.
"யோவ். இங்க அவனவன் 24 மணி நேரம் உருண்டு புரண்டும் வாய்ப்பு கிடைக்க மாட்டேங்குதேன்னு அலைஞ்சிட்டிருக்கான். நீ என்னடான்னா பார்ட் டைம் ஜாப் கணக்கா கதை சொல்ல வந்திருக்கேன்னு சொல்றே"
"சார். அது வீட்டுக்காக .இது என் ஆசைக்காக" வால்யூமை குறைத்த படி சொன்னான்.
"எத்தனை கதை வச்சிருக்கே"
"ரெண்டு மூணு கதை இருக்கு சார்' தன் பேகை திறந்து பேப்பர்களை வெளியே எடுத்தான்.
"அதெல்லாம் வேண்டாம். ஷார்ட் பிலிம் எதுனா எடுத்திருக்கியா?"
"இல்ல சார்"
முகவாயை தேய்த்து கொண்ட படி யோசிக்க ஆரம்பித்தார்.
இன்னொரு நாள் பார்க்கலாம்னு அனுப்பி வைச்சிடுவாரோ என்ற பதைப்பில்
"கதை மைண்ட்லேயே இருக்கு. சொல்லட்டா சார்" என்றான்.
"முதல்ல நான் சொல்ற ஒன் லைன்க்கு சீன் சொல்லு பார்க்கலாம் "
"சரி சார் " என்ற படி உற்சாகமானான்.
"முதல்ல உட்காரு"
திகில் படம் பார்ப்பது போல் சீட் நுனியில் அமர்ந்தான்.
"அதாவது நம்ம கதையோட ஹீரோ சினிமா நடிகர். ஒரு மாஸ் ஹீரோ அவர் வர்ற முதல் சீன் எப்படி வைக்கலாம்னு சொல்லு பார்ப்போம்"
"சார் ஒரு நிமிஷம்" என்ற படி அவன் யோசித்தான். அந்த தயாரிப்பாளர் அவனை கவனித்த படியே அடுத்த சிகரெட்டை எடுத்து உதட்டில் வைத்தார். அருண் தொண்டையை செருமி கொண்டு சொல்ல ஆரம்பித்தான்.
"ஓப்பன் பண்ணா ஒரு தியேட்டர் சார். அதுல நம்ம ஹீரோவோட படம் ரிலீஸ் ஆகியிருக்கு. எங்க பார்த்தாலும் போஸ்டர்கள் கட் அவுட் னு ஒரே கொண்டாட்டமா இருக்கு. கூட்டம் அலை மோதுது. அப்ப ஒரு கார் வருது காரை விட்டு இறங்கறார் ஹீரோ. அவரை பார்த்தவுடன் கூட்டம் தியேட்டரை விட்டுட்டு அவரை மொய்ச்சுக்குது. அவர் போஸ்டருக்கு, கட்வுட்டுக்கு போட வச்சிருந்த மாலைகளை எல்லாம் அவருக்கு போட கூட்டம் அலை மோதுது. கட் அவுட் மேல ஊத்தறதுக்கு வச்சிருந்த பால் குடங்களை இப்ப அவர் முன்னாடி கொண்டு வராங்க. கக்கத்துல வச்சிருந்த குழந்தை அழுவறதை கூட கவனிக்காம ஒரு பொண்ணு கூட்டத்திலே சிக்கினாலும் பரவாயில்லன்னு ஹீரோவை நெருங்கி போயிட்டிருக்கு.
கூட்டத்தை அமைதிபடுத்திய ஹீரோ "எதுக்கு இதெல்லாம் பண்றீங்க" னு கேட்கிறார்.
"எங்க உற்சாகமே நீ தான் தலைவா" என்கிறான் ஒரு ரசிகன்.
"இதில் எல்லாம் எனக்கு உடன்பாடும் இல்ல. உற்சாகமும் இல்ல. நீங்க இதெல்லாம் பண்றதால பப்ளிக் எல்லாம் என்னை தான் திட்டறாங்க" னு ஹீரோ சொல்றார்.
"இந்த பப்ளிக்குக்கு யார் கொண்டாட்டமா இருந்தாலும் பிடிக்காது தலைவா" ஒருத்தன் சொல்லி கொண்டே ஹீரோவுடன் செலஃபி எடுக்கிறான்.
"நோ நோ நம்மை விமர்சனம் பண்றவங்க சொல்றதிலயும் ஒரு நியாயமிருக்கே. எதுக்கு வேஸ்டா பாலை கட்அவுட்டுக்கு ஊத்தணும். அது மண்ணுல விழுந்து யாருக்குமே பயனில்லாம தானே போகுது" னு ஹீரோ சொல்றாரு.
"இது எங்க ஆசை சந்தோஷம். இதை கண்ட்ரோல் பண்ணாதீங்க தலைவா ப்ளீஸ்"
ஒரு இளைஞன் சொல்கிறான்.
ஒரு இளைஞன் சொல்கிறான்.
"எத்தனையோ அனாதை இல்லங்கள் இருக்கு. மாலைக்கு போஸ்டருக்கு பண்ற செலவை அங்க செலவு பண்ணலாம். இந்த பாலை கஷ்டப்படற குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.இத பண்ணீங்கன்னா என்னை பிடிக்காதவங்களுக்கு கூட என்னை புடிச்சு போயிடும். அவ்வளவு ஏன் நான் ஒரு வார்த்தை சொன்னா அதை மீறாதவங்க என் ரசிகர்கள்னு பேர் கூட உங்களுக்கு கிடைக்கும். செஞ்சுதான் பாருங்களேன்" ஹீரோ சொல்றாரு.
ரசிகர்கள் ஒருவருக்கொருவர் முகத்தை பார்த்து கொள்கின்றனர். அவர்களுக்குள் பேசி கொள்கிறார்கள். ஒருவன் முன்னே வந்து சொல்கிறான்.
"தலைவா. பாலுக்காக தான் ஒரு குழந்தை அழுகுது அப்படிங்கிற வார்த்தை இனி நியூசா தமிழ்நாட்டிலே வராது. அத நாங்க பார்த்துக்கிறோம் போதுமா "
"குட் இப்ப தான் எனக்கு சந்தோசமே ஆரம்பிக்குது" என்று புன்னகைக்கும் ஹீரோ அவனை நெருங்கி விட்டிருந்த பெண்ணின் கைகளில் அழுது கொண்டிருந்த குழந்தையை வாங்கி கொள்கிறான். அழுது கொண்டிருந்த குழந்தையின் முகத்தில் புன்னகை தவழ்கிறது. இங்க டைட்டிலை ஆரம்பிக்கிறோம். சார்."
என்று சொல்லி முடித்த அருணை பார்த்த தயாரிப்பாளர் சொன்னார்.
"சரி .சினிமா நடிகன் நல்லவனா இருந்தா இந்த சீன் ஓகே. இதுவே கெட்டவனா இருந்தா?"
"கெட்டவனா இருந்தா...." என்று யோசிக்க ஆரம்பித்த அருண் விரல்களை சொடக்கு போட்ட படி சொன்னான்
"சிம்பிள் சார். குழந்தையை வாங்கி கொண்ட ஹீரோ அது சிரிப்பதை பார்த்து ரசிக்கிறப்ப டைரக்டர் கட் னு சொல்றாரு. இது வரைக்கும் நடநதது ஷூட்டிங் னு ஆடியன்ஸுக்கு லாங் ஷாட்ல காட்டறோம். கேரவன் நோக்கி நடக்கிறார் ஹீரோ. ஷூட்டிங் பார்க்க கூடியிருக்கிற ரசிகர்கள் தலைவானு கத்தறாங்க.
"ரசிகர்கள் உங்களை பார்க்கிறதுக்கு வெயிட் பண்ணிட்டிருக்காங்க. ஷூட்டிங் முடிய லேட்டாகும் போல தெரியுது. நாளைக்கு வர சொல்லிடவா " உதவியாளர் ஹீரோ கிட்டே கேட்கிறார். ஹீரோ அவங்க பாட்டுக்கு காத்துகிட்டு இருக்கட்டும். அப்படி இருந்தா தான் நமக்கு மாஸ்" னு சொல்லிகிட்டே குளிரூட்டப்பட்ட கேரவனுக்குள் நுழைகிறார் ஹீரோ.
வெயில்ல நின்ன படி வாழ்க கோஷம் போட்டுகிட்டு இருக்கிற ரசிகர்களை காட்டறோம். அங்க டைட்டில் போட்டு படத்தை ஆரம்பிக்கலாம் சார்." என்று சொல்லி முடித்த அருண் தயாரிப்பாளரை பார்த்தான்.
தயாரிப்பாளர் சொன்னார்.
தயாரிப்பாளர் சொன்னார்.
"உனக்கு ஒரு டீ சொல்லட்டா"
ஆர்.வி.சரவணன்
தகவல் பலகை பிப்ரவரி மாத இணைய இதழில் இந்த சிறுகதை வெளியாகியிருக்கிறது.
வெளியிட்ட தகவல் பலகை ஆசிரியர் குழுவிற்கு நன்றி. உங்கள் சிறுகதை ஒன்று வேண்டும் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி அனுப்பி வைத்த நண்பர் அரசனுக்கு நன்றியும் அன்பும்.
சார் முதல்ல மனமார்ந்த வாழ்த்துகள்!!! கதை இணைய இதழ் தகவல் பலகையில் வெளியானதற்கு...
பதிலளிநீக்குரொம்ப நல்லாருக்கு சார் கதை! ஒரு கதை சொல்லட்டானு தலைப்பு வெச்சு கதை சொன்னது நல்லாருக்கு சார்...
கீதா